அன்பின் ஆழம் – 18.1

ஒரு பூகம்பத்தையே உண்டாக்கிவிட்டு எதுவுமே நடக்காதது போல் அமைதியாக இருந்த கைப்பேசியையே கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள் மீரா; இது கனவாக இருக்க கூடாதா என்ற நப்பாசையில். இன்னும் கொஞ்சம் அதிர்வுகளை தரட்டுமா என்று கேலி செய்வது போல், அது ஒலித்தது.

திரையில் ‘அரவிந்த் காலிங்!’  என்று பார்த்தவளுக்கு அங்கமெல்லாம் நடுக்கம். அலுவலக நேரத்தில் எப்போதுமே அழைக்காதவன், இப்போது கூப்பிடுவது எதற்காக… எதை சொல்வது; எதை மறைப்பது, என்று தயங்கியவள்,

“ஹெலோ!” என்றாள்.

“மீரா! ப்ரோமோஷன் டெஸ்டுக்கு தேவையான டிரேயினிங் மெட்டீரியல் எல்லாம் எங்க வச்சிருக்க?” எந்தவொரு பயிற்சிக்கும் தேவையான பொருட்களை நேர்த்தியாக வைத்திருப்பாள் என்று அவளிடம் வினவ,

“அது…. அது…” தடுமாறியவள், “சி.டியில ஸேவ் பண்ணி வச்சிருக்கேன் டா…. எல்லாம் வீட்டுல இருக்கு!” என்றாள்.

“சரி! நாளைக்கு ஹரிகிட்ட கொடுத்து அனுப்பு!” படபடவென்று சொல்லி, அழைப்பை துண்டித்தான். அரவிந்தன் இயல்பாக பேசியதைவைத்து, அஞ்சலிக்கும், அவனுக்கும் இடையில் எந்த வாக்குவாதமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று யூகித்தாள்.

எப்படியோ மாலை வரை ஓட்டியவள், ஹரி வீட்டிற்கு வந்து, அவனுக்காக காத்திருந்தாள்.

“மீரா! மீரா!” என்று ஆர்வமாக உள்ளே நுழைந்தவன், அவள் முகத்திலிருந்த பதற்றத்தை கவனிக்கவில்லை. ஒரு ஃபைலை அவளிடம் நீட்டி, “அஞ்சலி சொன்னா மாதிரி புத்தகத்துல இணைக்க, சில ஃபோர்ம் டிசைன்ஸ் எடுத்துட்டு வந்திருக்கேன்… நீயும் சரிபார்த்து சொல்லு.” என்றான்.

எப்படி பேசத்தொடங்கலாம் என்று சிந்தித்தவள், ஃபைலை பெயருக்காக புரட்டினாள். அவள் விரல்கள் ஒரு பக்கத்தில் வந்து நிற்க,

“இதையே…. இதையே தான் நானும் மனசுல நெனச்சேன்!” உற்சாகமாய் சொல்லி, எப்படி ஸ்ரீராமும் இந்த திட்டத்தை பேருவகையோடு வரவேற்றார் என்றும் விவரித்தான். ஆனால் அது எதுவுமே அவள் காதில் விழவில்லை. அவள் தோள்களை இருபுறமும் பற்றி உலுக்கியவன், “என்னடி ஆச்சு உனக்கு?” என்றான்.

ஒன்றுமில்லை என்று அவள், இடம் வலமாக தலையசைக்க, “ரொம்ப புத்திசாலி பொண்ணு தான் அஞ்சலி!” என்று ஹரி பாராட்ட, மீராவிற்கு கோபம் சுள்ளென்று ஏறியது.

“அந்த அதிபுத்திசாலிதான், நம்ம அரவிந்தன கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு சொல்லிட்டா!” எரிமலையாய் வெடித்து, ஃபைலை அவன் கையிலேயே திணித்தாள்.

“என்ன சொல்ற மீரா?” திகைத்துப் போனான் ஹரி.

“ஆமாம் டா!” எல்லாம் முடிந்தது என்பதை போல் தலையசைத்தவள், அஞ்சலி, தன்னிடம் பேசிய அனைத்தையும் கொட்டித்தீர்த்தாள்.

நண்பனுக்கு இப்படி ஒரு சோதனையா என்று உறைந்து போய் உட்கார்ந்தான் ஹரி. “அரவிந்தன்கிட்ட சொல்லிடலாமா டா?” தாழ்ந்த குரலில் மீரா கேட்க,

மறுப்பாய் தலையசைத்தவன், “இல்ல மீரா! அவசர படாதே… உன்கிட்ட தனியா பேசணும்னு சொன்னால்ல…. முதல்ல நீ அவகிட்ட பேசி பிரச்சனை என்னன்னு தெரிஞ்சிக்க பாரு!” பொறுமையாக கையாளலாம் என்று யோசனை சொல்ல,

“என்ன விளையாடுறியா? நம்ம அரவிந்தன் எவ்வளவு நல்லவன்… அவனையே வேண்டாம்னு சொல்லுவா… அவகிட்ட போய் நான் பேசணுமா?” மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்தாள்.

“அந்த நல்லவன நீயும் தானே வேண்டாம்னு சொன்ன?” திடமாக கேட்டு அவளை முறைத்தான்.

உண்மை என்ற போதிலும், அதை ஹரி எப்படி தன்னிடம் சொல்லலாம் என்று கேள்வியாய் பார்த்தவளின் கண்ணிலிருந்து வெளியே வந்த கண்ணீர் கூட அவளை போலவே உறைந்து போனது.

“அய்யோ மீரா! ப்ளீஸ்… உன்ன காயப்படுத்த அப்படி சொல்லலடி… உனக்கு மறுக்க ஒரு நியாயமான காரணம் இருந்தா மாதிரி, அவளுக்கும் ஏதாவது இருக்கலாம்ல?” தீரவிசாரிக்காமல் யார் மீதும் பழி சொல்ல கூடாது என்று அவன் விளக்க, அவன் நோக்கத்தை புரிந்துகொண்டாள்.

பக்குவமடைந்தவள், “சரி! நான் என்ன பண்ணனும்?” திட்டத்தையும் அவனையே சொல்லச் சொன்னாள்.

“நாளைக்கு அவள இங்க வர சொல்லி பேசு. காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கோ… நியாயமா இருந்தா விட்டுடு….பேசித்தீர்க்க முடிஞ்சா சமாதானம் செய்….ஆனா எந்த சூழ்நிலையிலும் வற்புறுத்தாதே!” தெளிவாக சொல்லி,

“நான் ஒரு ஆறு மணியளவுல, அரவிந்தன அழைச்சிட்டு வரேன். அதுக்கு அப்புறம், கடவுள் விட்ட வழி!” நண்பன் இதை எப்படி ஏற்பானோ என்ற கவலையில் விளக்கினான் ஹரி.

“அவனுக்கு தெரிய வேண்டாம்னு சொல்லிட்டு, எதுக்கு இங்க அழைச்சிட்டு வர?” குழம்பினாள் மீரா.

“அது அவன் சம்பந்தப்பட்ட விஷயம்; சொல்லிதான் ஆகணும்…அதுக்கு முன்னாடி, நீ அஞ்சலிகிட்ட பேசுறதுல, ஏதாவது அதிசயம் நிகழ்ந்துடாதான்னு ஒரு சின்ன நம்பிக்கை” ஏக்கமாய் ஹரி சொல்ல, அவளும் “உம்” என்று தலையசைத்தாள்.  

“ஆனா எந்த காரணத்துக்காகவும் அரவிந்தன கல்யாணம் செய்துக்கோன்னு, நீ…” அழுத்திச் சொல்லி, “அவள வற்புறுத்தாத… அவன் இன்னைக்கு வருந்த கூடாதூன்னு நெனச்சு, காலத்துக்கும் வருந்துரா மாதிரி செஞ்சிடாத… புரியுதா?” என்று அவன் அறிவுறுத்த, அதற்கும் மேலும் கீழுமாக தலையசைத்தவள்,  

“சரி! நான் அவளுக்கு போன் செய்துட்டு வரேன்” என்று எழுந்தாள். அவள் கரம் பிடித்து இழுக்க, தடுமாறியவள், முட்டியிட்டு, அவன் எதிரில் அமர்ந்தாள். கண்ணோடு கண் பார்க்க, “ஐ ஆம் ஸாரி மீரா! நான் அப்படி பேசியிருக்க கூடாது!” மனம் நொந்து சொல்ல, “யாருக்கு வேணும் உன் ஸாரி… ஐலவ்யூ சொல்லுங்க எழுத்தாளரே!” கேட்டு கண்சிமிட்டினாள்.

“ச்சீ போடி!” அவன் செல்லமாக விரட்ட, அவள் ஒரே நொடியில் நகர்ந்தாள்.

போன் பேசிவிட்டு இரண்டே நிமிடத்தில் திரும்பியவள், “அல்லி ராணி நாளைக்கு நாலரை மணியளவுல இங்க வராளாமா!” சொல்லி உதட்டை சுழித்தாள்.

“பாரு! பாரு! இப்போ தானே சொன்னேன்… யாரையும் தப்பா பேசக்கூடாதூன்னு!” நினைவூட்ட, சிறுபிள்ளை போல் அவளும் செல்லம் கொஞ்சினாள்.

கடிகாரம் முள் நாலரை என்று ஒலியெழுப்பிய அதே சமயத்தில், வாசற்கதவு மணியும் ஒலித்தது. அன்று வலிய கைப்பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவள், இன்று கண்ணெடுத்து கூட பார்க்கவில்லை.

ஹால் சுவற்றில் சாய்ந்து நின்று, மீரா முகம் திருப்பி கொள்ள, அஞ்சலியோ மிக சாதாரணமாக தரையில் அமர்ந்தாள்.

“நீங்க என் மேல கோபமா இருக்கீங்கன்னு எனக்கு தெரியும். நான் அப்படி போன்ல திடமா பேசலேன்னா, என்ன தனியா சந்திக்க சம்மதிச்சிருக்க மாட்டீங்க.” அரவிந்தன் காதுகளுக்கு இது போயிருக்கும் என்று குறிப்பிட்டாள்.

“கல்யாணம் வேண்டாமுன்னா, அவன்கிட்டையே சொல்ல வேண்டியதுதானே…. இல்ல உங்க வீட்டுல சொல்ல வேண்டியதுதானே…. என்கிட்ட சொல்லி என்ன ஆகப்போகுது?” மீரா அலுத்துக்கொள்ள,

“சொன்னேனே…அவங்க எல்லாம் புரிஞ்சுக்கல. அதான் அவர் காதல மறுத்த உங்ககிட்ட சொன்னா புரிஞ்சுப்பீங்கன்னு… அவருக்கும் புரியவப்பீங்கன்னு உதவி கேட்டு வந்திருக்கேன்?” அஞ்சலி விளக்க,

‘இதையெல்லாம் கூட அரவிந்தன், அவளிடம் சொல்லியிருக்கானா’ என்று திடுக்கிட்ட மீரா, அவளை பார்த்தாள்.

“வேற யாரையாவது காதலிக்கிறியா…” மீரா தயங்கினாள்.

அதற்கு விரக்தியில் சிரித்தவள், “ச்சே ச்சே!” மறுப்பாய் தலையசைத்தாள்.

அதை தவிர, தன் நண்பனை பிடிக்காமல் போக வேறு என்ன காரணம் இருக்கும் என்று மனதில் அசைப்போட்டவள், “சரி சொல்லு, ஏன் உனக்கு அரவிந்தன பிடிக்கல?” வினவினாள்.

“பிடிக்கலன்னு யாரு சொன்னா! பிடிச்சிருக்கு; ரொம்ப பிடிச்சிருக்கு; அதனால தான் அவர் என்ன கல்யாணம் செய்துக்க கூடாதூன்னு நினைக்கறேன்!” முரண்பாடாக பேச,

“அய்யோ அஞ்சலி! நீ எவ்வளவு தெளிவான பொண்ணுன்னு நெனச்சேன்; இப்படி குழப்புறியே!” சொன்னவள், தன்னையும் மீறி, அவள் அருகில் வந்து அமர்ந்தாள். நண்பனை பிடிச்சிருக்கு என்று அவள் சொன்ன ஒரு வார்த்தையில், அவள் மேலிருந்த கோபம் எல்லாம் காற்றில் பறந்தது.

அருகில் வந்தவள், ஓடிவிடுவாளோ என்பது போல், அஞ்சலியும், மீராவின் கைகளை இறுக பிடித்துகொண்டாள்.

“நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது, ஒரு விபத்துல, என் கருப்பையை இழந்துட்டேன். அந்த சமயத்துல, பொண்ணு உயிர்பிழச்சா போதுமுன்னு, என் அம்மா அப்பா அத பெருசா எடுத்துக்கல. ஆனா கல்யாணமுன்னு வரப்போ, அது முக்கியமில்லையா?” கேட்டு, மீராவை பார்த்தாள்.

என்ன சொல்வதென்று தெரியாதவள், “உம்” மட்டும் கொட்டினாள்.

“அதுக்காக நான் கல்யாணமே செய்துக்க மாட்டேன்னு எல்லாம் சொல்லவேயில்ல. என்ன மாதிரி குறையுள்ள ஒருத்தர திருமணம் செய்துகிட்டு, குழந்தைய தத்தெடுத்துக்கலாம், இல்ல, தாய் இல்லாத குழந்தைக்கு அம்மாவா இருக்கலாமுன்னு நெனச்சேன்.” தன் கண்ணோட்டத்தை சொல்ல, அவள் பேச்சில் மீரா நெகிழ்ந்து போனாள்.

“இதையெல்லாம் எங்க அம்மா, அரவிந்தன் அம்மாகிட்ட சொன்னாங்க. அத கேட்டுக்கிட்டியிருந்த உங்க நண்பன் என்னமோ பெரிய கொடைவள்ளல் மாதிரி எனக்கு வாழ்க்கை கொடுக்க வந்துட்டாரு…” என்றவுடன், மீரா முகத்தில் ஒரு புன்னகை, நண்பனின் நற்குணத்தை நினைத்து.

 இப்படிதான் வாழ வேண்டும் என்று தெளிவாக திட்டமிட்ட இவளை எப்படி மடக்கினான் என்பது தான் மீராவின் தற்போதைய சந்தேகம்.

“என்கிட்ட சொன்னா மாதிரியே, அவன் கிட்டையும் சொல்லியிருக்கலாமே!” மீரா கேட்க, அதற்கு லேசாக சிரித்தவள்,

“எங்க… காது கொடுத்து கேட்டாதானே…நீங்க பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்கற அளவுக்கு என் நிலமை மோசாமாயில்லன்னு  கர்வமாய் கூட சொல்லி பார்த்தேன்…ஆனா அவர்… யாரு உன்ன பார்த்து பரிதாப பட்டாங்கன்னு, ஏளனமா சொல்லி,

தேர் இஸ் ய டிஃப்ரென்ஸ் பிட்வீன் சிம்பதி அண்ட எம்பதி’, அப்படின்னு, எனக்கே பாடம் நடத்தினாரு” அஞ்சலி சலித்து கொண்டாள்.

நண்பன் ஆணித்தனமாக சொன்னதை மெச்சி, ‘செம்மடா அரவிந்தா!’ மனதில் பாராட்டி, “சரி! நீ என்ன பதில் சொன்ன?” கதை கேட்பது போல் ஆர்வமாய் கேட்டாள் மீரா.

“உம்…” என்று இழுத்தவள், “ஐ வான்ட் டு கிவ் மை எம்பதி டு சம்வொன் ஹூ ரியலி நீட்ஸ் இட்’ன்னு எதிர்த்து பேசினேன்” என்றதும்,

‘அது சரி! ஜாடிக்கு ஏற்ற மூடி தான்’ மீண்டும் நினைத்தவள், அதை காட்டிக்கொள்ளாமல், “சரியா தான் சொல்லிருக்க அஞ்சலி! அப்படியும் அவன் ஏன் ஒத்துக்கல்ல?” மேலும் அறிய கேட்டாள்.

“அப்போதான் உங்களுக்கு பிரபோஸ் பண்ணி, அத நீங்க மறுத்த மொக்க காதல் கதைய சொல்லி, ‘லவ் ஃபயிலியர் டிப்ரெஷன்‘ல இருக்க தனக்கும் ஆறுதல் சொல்லி, அரவணைக்கற ஒரு துணை தேவைன்னு அப்பாவியா முகத்த வெச்சுகிட்டு, என்ன வாழ்க்கை தர சொல்லி கெஞ்சினாரு.” அஞ்சலி விளக்க,

“அடப்பாவி! என்னவெல்லாம் சொல்லியிருக்கான்!” நண்பனின் குறும்புபேச்சில் மயங்கியவள், மறந்து இம்முறை வாய்விட்டே சொல்லிவிட்டாள். ஆனால் அஞ்சலியோ, தனக்கு சாதகமாக பேசினாள் என்று தவறாக புரிந்து கொண்டாள்.

“ம்ம்…ஆமாம் மீரா!” மெல்லிய குரலில் தொடங்கி, “என்னதான் கல்யாணம் செய்துப்பேன்னு வீட்டுலையும் சொல்லி, முடிஞ்சா இந்த கல்யாணத்த நிறுத்தூன்னு சவால் விட்டாரு.” அவன் பிடிவாதத்தை எடுத்துரைத்தவள்,

“அந்த கோபத்துல தான் அன்னைக்கு விழாவுக்கே வந்தேன். அவர் உயிரா   நினைக்கற நண்பர்கள் முன்னாடி கல்யாணம் செய்துக்க இஷ்டமில்லேன்னு சொல்லி அவர அவமான படுத்தலாமுன்னு… ஆனா…” தயங்கியவள், “அப்படி செய்ய முடியல” சொல்லி, தலையை தொங்க போட்டாள்.

அவள் முகத்தை உயர்த்தி மீரா, “ம்ம்… ஏன் செய்ய முடியல?” யோசிக்க சொல்ல,

 “அது நீங்க எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தீங்க… அப்போ பிரச்சனை பண்ண வேண்டாம்னு தான்….” பதிலளித்தாள் அஞ்சலி.

இத்தனை நற்குணங்கள் பொருந்தியவள் தான் அரவிந்தனுக்கு மனைவியாக வர வேண்டும் என்று மீரா சிந்திக்க,

“அவர் உங்க பேச்சுக்கு மறுப்பேச்சே சொல்லமாட்டாருன்னு நான் அன்னைக்கு கவனிச்சேன்… நீங்க தான், நான் அவருக்கு பொருத்தமானவ இல்லன்னு புரியவைக்கணும்” என்றாள் அஞ்சலி.

சுவற்கடிகாரத்தில் நேரம் பார்க்க, அரவிந்தனும் ஹரியும் என்நேரமும் வந்துவிடுவார்கள் என்று யூகித்தாள். கவலைபடாதே என்று ஆறுதலாய் அவள் தோளில் தட்டிகொடுத்து, பொதுவான விஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

தொடர்ந்து படிக்க, Click Here —> அன்பின் ஆழம் 18.2