அன்பின் ஆழம் – 17.2

நண்பர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த மீரா, நேரத்தை வீணாக்காமல், சமையலறையை சுத்தம் செய்ய துவங்கினாள். அவளை பின் தொடர்ந்தவன்,

“நீயும் கிளம்பு மீரா! நான் பார்த்துக்கறேன்!” அவளுக்கும் வீட்டிற்கு செல்ல நேரமாகிறது என்று நினைவூட்டினான்.

“எழுத்தாளரே! பயப்படாதீங்க! உங்கள காதலிக்க சொல்லி நச்சரிக்கமாட்டேன்!” கண்சிமிட்டி கொண்டே சொல்லி, பாத்திரங்களை துலக்கினாள்.

“ச்சே! ச்சே! அந்த அர்த்தத்துல சொல்லலடி! நீயும் காலையிலேந்து ஓயாம உழைக்கர… நேரம் வேற ஆகுது… வேளையோட வீட்டுக்கு போக வேண்டாமா!” அக்கறையில் சொன்னதாய் விளக்க,

அதற்கெல்லாம் செவிசாய்க்காதவளாய், “அம்மா கிட்ட வீட்டிற்கு வர நேரமாகும்னு சொல்லிட்டு தான் வந்திருக்கேன்…” என்று, வேலையில் கவனத்தை திருப்பினாள்.

ஹரியும் அவளுக்கு உதவ, அரைமணி நேரத்தில், சமையலறையும் வைரம் போல மின்னியது. ஹாண்ட்பாகும், உடை எடுத்துவந்த பையையும் எடுத்து கொண்டு வந்தவள், புறப்படாமல், ஹால் சுவற்றில், சாய்ந்தபடி, காலை நீட்டிக்கொண்டு இளைப்பாறினாள்.

“என்னடி! கிளம்பாம உட்கார்ந்துட்ட…. மணி ஒன்பதாகுது!” அலாரம் மாதிரி நொடிக்கொரு தரம், நேரம் சொல்லி, அவளை விரட்டினான்.

“பத்து நிமிஷம் ரிலாக்ஸ் பண்ணிட்டு கிளம்பறேன் டா…. ப்ளீஸ்!” கெஞ்சலாக கேட்டு, அவனையும் அமரும்படி கையசைத்தாள்.

“இதுக்குதான் வெளிய சாப்பிடலாம் சொன்னேன்!” சோர்வடைந்தவளின் அருகில் வந்து அமர்ந்தவன் புலம்ப, அவன் தோளோடு தோள் உரச நெருங்கியவள்,

“வெளிய போயிருந்தா, இவ்வளவு ஜாலியா அரட்டை அடித்திருக்க முடியுமா?” என்று தர்க்கம் செய்தாள். அவன் இடது கையை தன்னுள் பின்னி, “சொல்லுடா! இன்னைக்கு உனக்கு அதிக மகிழ்ச்சி தந்த ஒரு விஷயம் என்னன்னு கேட்டா…எதை சொல்லுவ?” விழி உயர்த்தி, அவனை பார்த்து கேட்டாள்.

“ஒண்ணு இல்ல மீரா… நிறைய மகிழ்ச்சியூட்டும் தருணங்கள்!” முகம் புன்னகையில் மலர பேசினான். தன் கையில் விரல்கள் இல்லாதது போல், பின்னிகொண்டிருந்த அவள் வலதுகை விரல்களை பரப்பி,

“நீங்க எல்லாரும் போட்டி போட்டுட்டு என் புத்தகம் வெளியிட பாடுபடுறது… அரவிந்தன் கல்யாணம் செய்துக்க போறது…. அவனுக்கு மனைவியா வர அஞ்சலி, நம்மளோட சகஜமா பேசி பழகறது…” சொல்லிக்கொண்டே அவளின் ஒவ்வொரு விரலாய் மடக்கியவன், மொத்தமாக அவள் கரத்தை இறுக பிடித்தான்.

அவள் முகம்பார்க்க கழுத்தை திருப்பி, “எனக்காக சிரமப்பட்டு, பார்த்து பார்த்து வீட்டிலேயே விருந்து சமைக்க நீ காட்டின அன்பும், அக்கறையும்….” அவன் பேசி முடிப்பதற்குள், வெடுக்கென்று திரும்பி நிமிர்ந்து உட்கார்ந்தவள்,

“பொய்! பொய்! பொய்! அரவிந்தனுக்கு பிடித்த உணவு சமைச்சேன்னு உனக்கு வருத்தம் தானே! அதனால தானே என்ன ஓட்டின?” அரவிந்தன் அவள் சமைப்பதை கண்மூடித்தனமாக புகழுவான் என்று ஹரி அப்போது சொன்னதை குறிப்பிட்டாள்.

“ச்சீ! பைத்தியகாரி! அது அரவிந்தன் வாயடைக்க அப்படி சொன்னேன்டி! என்னதான் இருந்தாலும், அஞ்சலிக்கு நம்ம நட்போட நெருக்கம் பழக்கமாகற வர அவன் பார்த்து பேசணும் இல்லையா…” சொல்லி, அவள் முகத்தை கையில் ஏந்தியவன்,

“அரவிந்தனுக்காக நீ செய்யறத, நான் எப்படி தப்பா நினைப்பேன். அவன் நம்ம நண்பன்!” அழுத்திச் சொல்ல, அவன் தோள் சாய்ந்து சிந்தித்தாள்.

‘மைதிலி, காலையில சொன்னா மாதிரியே, இவனும் சொல்றானே….எப்படி நடந்துக்கணும்னு இவங்க எல்லாம் சொல்றாங்க…புரியலையே’ மனதில் எண்ணி அசைப்போட்டாள்.

வழக்கமாக அவள் நெருங்கி வர, அவன் விலகுவான். ஆனால் இன்று அவனுக்கு அப்படி செய்ய தோணவில்லை. மாறாக, சாய்ந்து கொண்டிருக்கும் தன்னவள் தலை மீது தலை சாய்த்து அவனும் சிந்தித்தான். காரணம், அவன் மனதில் ஓடிய பல குழப்பங்களுக்கு, இன்று தீர்வு கிடைத்துவிட்டது.

விளையாட்டாக பேசினாலும், மாலையில் மீரா அவர்கள் பெற்றோரின் மனநிலையை பற்றி தெளிவுபடுத்திவிட்டாள். என்றாவது ஒரு நாள், அவர்கள் நிச்சயம், மனம் மாறுவார்கள் என்ற நம்பிக்கை அவனுக்கு பிறந்தது. நண்பன் காதலை தட்டிப்பறித்த குற்றயுணர்வு, இனி இருக்காது. அரவிந்தன் கண்களில் பிரதிபலித்த சந்தோஷம், ஹரிக்கு நிம்மதி தந்தது.

எல்லாவற்றிருக்கும் மேலாக, தன் லட்சிய கனவு, இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது. அந்த உற்சாகமே, மீராவிற்கு ஒரு நல்ல துணைவனாக இருக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை கொடுத்தது. இனியும் அவள் எதிர்பார்க்கும் அன்பை தர மறுத்தால், அது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்று சிந்திக்க, கடிகார முள், ஒன்பதரை தொட, ஒலியெழுப்பி அவர்கள் சிந்தையை கலைத்தது.

கண்ணோரம் இருந்த சாரலை துடைத்துகொண்டவன்,  “சரி! நேரமாகுது, கிளம்பு!” என்றான்.

எழுந்தவள், அவன் கைகளை இறுக பிடித்து, “ஹரி! நான் ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லுவேன். மறுப்பு சொல்லாம இருப்பியா?” தாழ்ந்த குரலில் கேட்டாள்.

அவள் பிடியிலிருந்து விலகாதவன் “உம்…சொல்லு!” என்று தலையசைத்தான்.

“நான் இங்க வந்து தினமும் சமைக்கட்டுமா?” என்றாள்.

“என்ன திடீர்னு?” குழப்பமாய் அவளை பார்த்தான்.

“இன்னைக்கு சமைக்கறச்ச ஒரு ஞானோதயம் பிறந்ததுன்னு வெச்சுகோயேன்… நீ தினமும் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுற… வெறும் சினேகிதியா இல்லாம, ஒரு மனைவியா யோசிக்கறப்ப, உன் உடல்நலம் பற்றி கவலையா இருக்கு டா!” மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைக்க,

“உன் அக்கறை எனக்கு புரியுதுடி… உனக்கே ஆபிஸ்ல வேலை அதிகம்… தினமும் சமைக்குறது எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை மீரா!” என்று எடுத்துரைத்தான்.

அவன் வேண்டாம் என்று மறுக்கவில்லை; தயங்குகிறான் என்று உணர்ந்தவள்,

“எழுத்தாளரே! சுலபமா, இல்லையான்னு நான் பார்த்துக்கறேன்… நீங்க சரின்னு சொல்லுங்க…அது போதும்!” உற்சாகமாய் பேசி கன்னம் கிள்ளினாள்.

அவள் விடுவதாக இல்லை என்று புரிந்துகொண்டவன், “ஒரு வாரம் டைம் கொடு! என் முடிவ சொல்றேன்!” கன்னத்தில் குழிவிழ சிரித்து, அவளை வலுக்கட்டாயமாக, புறப்பட சொல்லி, கதவை நோக்கி தள்ளிவிட்டான்.

மனமில்லாதவளாய் கதவருகில் வரை போனவள், அவன் முகம் பார்க்க திரும்பிகொண்டாள். தன்னவனின் முகவாயை ஏந்தி, “இங்க பாரு ஹரி! முழுக்க முழுக்க உன் உடல்நலத்துல இருக்குற அக்கறையில தான் கேக்குறேன்…இதனால, உன்னோட அதிக நேரம் இருக்கலாமுன்னு…. ஏன் காதலிக்கலாமுன்னு கூட நினைக்கல டா!” தெளிவுபடுத்த, அவள் அன்பில் நெகிழ்ந்தான்.

அவள் கைகளை தன்னுள் அடக்கி, “உன்ன பத்தி எனக்கு தெரியாதாடி! எந்த முடிவு சொன்னாலும், அதுலேந்து பின்வாங்க கூடாதூன்னு தான், யோசிக்க அவகாசம் கேட்டேன். அதிகம் குழம்பாம, பத்திரமா வீட்டுக்கு கிளம்பு; போனதும் போன் செய்!” அவனும் அவளை பிரிய மனமில்லாதவனாய் வழியனுப்பிவைத்தான்.

மனதளவில் அவளிடம் தோற்றவன், “ஐலவ்யூ மீரா!” என்று தன்னையும் அறியாமல் உச்சரித்தான். பாவம், சன்னியில் பறக்கும் அவள் செவிகளுக்கு தான் அது எட்டவில்லை.

வாய்திறந்து காதலை சொல்லாத போதும், அவன் அரவணைப்பில், இன்று நெகிழ்ந்து போனாள் என்று அவனும் அறியவில்லை.

மீரா, உயர் அதிகாரியிடம், தன் குழுவுடன் வடிவமைத்த புதிய திட்டத்தை கலந்தாலோசித்து கொண்டிருந்தாள். அப்போது அவள் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. புதிய எண் என்று புறம் தள்ள, இடைவிடாமல், ஐந்து முறைக்கும் மேல், அழைப்பு வர, யாருக்காவது, ஏதாவது அவசரமோ என்ற பதற்றத்தில், அதிகாரியிடம், இரண்டு நிமிஷம் அவகாசம் கேட்டு வெளியே வந்தாள்.

 “ஹலோ! யாரு இது?” பதற்றமாக மீரா வினவ,

“மீரா! நான் அஞ்சலி பேசுறேன்!” என்றதும், மீராவிற்கு ஆச்சரியம்.

“அஞ்சலி! நான் முக்கியமான மீட்டிங்ல இருக்கேன்… அரைமணி நேரத்துல கூப்பிடட்டுமா!” என்றதும்,

“அதவிட முக்கியமான விஷயம் உங்ககிட்ட பேசணும்!” என்று சிடுசிடுத்தாள். அன்று இருந்த மென்மை, அவள் குரலில் இன்று இல்லை என்று பயந்தவள்,

“சொல்லுமா!” என்று பொறுமையாக பேசினாள்.

“எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல….” அவள் சொல்லி முடிக்கும் முன், மீரா, “அஞ்சலி…….!” என்று பதறினாள்.

“எவ்வளவு சொல்லியும், அரவிந்தன் கேட்கல…. என்ன கட்டாய படுத்தி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுருக்காரு… உன்னால முடிஞ்சத செய்யுன்னு, சவால் வேற விட்டாரு… நீங்க தான் இந்த கல்யாணத்த எப்படியாவது நிறுத்தணும். எங்க, எப்போ சந்திக்கலாமுன்னு சொல்லுங்க!” கராராய் பேச,

“ஏன் அஞ்சலி இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ற?” கேட்டவள் தொண்டையை துக்கம் அடைத்தது.

“எல்லாத்தையும் போன்லே சொல்லணுமா! எங்க, எப்போ சந்திக்கலாமுன்னு யோசிச்சு சொல்லுங்க…!” மறுபடியும் வலியுறுத்தி, அவள் பதிலுக்கு காத்திராமல் அழைப்பை துண்டித்தாள்.

அரவிந்தன் குணத்திற்கு துளியும் பொருந்தாதவற்றை கூறும் இவளிடம் பேச என்ன இருக்கு என்று மீரா எரிச்சல் அடைந்தாள். அதே சமயத்தில், மைதிலியும், ஹரியும் சொன்னது நினைவுக்கு வர, தவறு, தன்னிடம் இருக்குமோ என்றும் பயந்தாள்.

அஞ்சலி சொன்னது உண்மையா, பொய்யா?

அரவிந்தன் அப்படி செய்திருப்பானா?

மீரா அஞ்சலியை சந்தித்தாளா?

அனைத்திற்கும் பதில் சொல்லும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….