அன்பின் ஆழம் – 17.1

“மைதிலி! நான் வந்துட்டேன்!” கைப்பேசியில், தகவல் சொன்னபடி, ஹரியின் வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைந்தாள் மீரா.

“இவ்வளவு சீக்கிரம் வந்துட்டியா?” குரலில் ஆச்சரியம் ஓங்க வினவி, அரைமணி நேரத்தில் இருப்பதாக சொல்லி, அழைப்பை துண்டித்தாள் மைதிலி.

ஹரியின் பிறந்தநாள் ஏற்பாடுகளை செய்வதற்காக, மீரா, அரைநாள் விடுப்பு எடுத்திருந்தாள். விருந்து சாப்பாடு, வெளியில் வாங்கிக்கொள்ளலாம் என்று ஹரியிடம் சொன்னவள், தானே சமைக்கலாம் என்று இரகசிய தீர்மானம் செய்துகொண்டாள். அதற்கான, சில முன்னேற்பாடுகளை மைதிலியிடம் செய்யும்படியும் கேட்டுக்கொண்டிருந்தாள். தன்னவன் பிறந்தநாள், தோழியை வெகு நாட்களுக்கு பிறகு சந்திப்பது, அஞ்சலி வருகை என மகிழ்ச்சியில் மிதந்தவளுக்கு, இருப்பு கொள்ளவில்லை; அதனால் போன வேகத்திலேயே திரும்பி வந்துவிட்டாள்.

கதவை திறந்ததும், இமை மூடி, ஆழ்ந்த உள்மூச்சு வாங்கி சுவாசித்தாள். தன்னவனின் படைப்பு, பல மடங்காக பெருக்கெடுத்து, வீடெங்கிலும், அதன் வாசத்தை பரப்பியது. அச்சிட்ட பிரதிகள், விநியோகிப்பதற்கு தயாராக இருந்த நிலையில், அதில் சிலவற்றை, ஹரி தானே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டிருந்தது. அந்த பிரதிகளிலிருந்து வந்த, புதிதாக அச்சிடப்பட்ட காகிதத்தின் வாசனை, அவளை பொருத்தவரை, கைக்குழந்தையின் வாசத்தை விட மேலானது.

பிரதிகளை பத்திரமாக, ஹரியின் அறையில் வைத்துவிட்டு, விருந்து சமைக்க ஆயத்தமானாள். இனிப்போடு தொடங்கலாம் என்று, அரைமணி நேரத்தில் மைசூர்பாகு செய்து, தட்டில் பரப்பினாள். அவியலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்க, மைதிலி, அவள் கேட்டப்படி, அரைத்து வைத்த மாவு, மசாலா பொடிகள், சில பாத்திரங்கள், என்று ஒரு ஊருக்கே சமைக்கும் அளவுக்கு பொருட்களோடு வந்தாள்.

“சாப்பாடு ஆர்டர் கொடுக்க வேண்டியதுதானே! உனக்கேன் இந்த வீண்வேலை என்று கேட்க, மீரா சிரித்து மழுப்பினாள்.

“பிறந்த நாள் அதுவுமா, தேவையில்லாம, அவன்கிட்ட திட்டு வாங்க போற பாரு!” மைதிலி எச்சரிக்க, “அட போ மைதிலி! திட்டவாவது அவன் என்கிட்ட வாய்திறந்து பேசுவானே!” அவர்கள் பார்ப்பதும் பேசுவதும், நாளுக்கு நாள் குறைந்துபோவதை எண்ணி அலுத்துகொண்டாள்.

“சரி! சரி!” புலம்பாதே என்றவளின் கண்களுக்கு, வில்லைகள் போட தயாராக இருக்கும் மைசூர்பாகு தென்பட்டது. சிறுதுண்டுகளாக்கி, அதில், ஒன்றை விழுங்கியவள்,

“சூப்பர் மீரா! வாயுல போட்ட உடனே கரையுதுடி!”, “பாராட்டி, “ஆனா, ஏற்கனவே இனிப்பு தூக்கலாயிருக்கு, மேல எதுக்கு சக்கரை தூவியிருக்க?” மென்றுகொண்டே மைதிலி வினவ,

“அப்படியிருந்தா தான் அரவிந்தனுக்கு பிடிக்கும்!” எதார்த்தமாக மீரா பதிலளித்தாள்.

“அது சரி! பிறந்த நாள் உன் ஆளுக்கா, இல்ல அரவிந்தனுக்கா?” மைதிலி நக்கல் செய்ய, சாப்பாட்டை பொருத்தவரை, அரவிந்தனுக்குதான் முன்னுரிமை என்று எந்த தயக்கமும் இல்லாமல் விடை சொன்னாள்.

இருவரும், ஆளுக்கொரு வேலையாக செய்ய தொடங்கினர். மீரா, அவ்வப்போது, மைதிலியிடம், இதை இப்படி நறுக்கினால் தான் அரவிந்தனுக்கு பிடிக்கும்; அதில் இஞ்சி சேர்த்தால் கீதாவிற்கு பிடிக்காது என்று நண்பர்களின் விருப்பங்களை பற்றி, ஓயாமல் குறிப்புகள் தந்தாள்.

மூன்று மணி நேரத்தில், பெரும்பாலான வேலைகள் முடிந்திருந்த நிலையில், “மசால்வடை தான் பாக்கி! நான் மாவு தயார் செய்து கொடுத்துட்டு கிளம்பறேன்; நீயும் ட்ரெஸ் மாத்திட்டு வந்து, பொறிச்சு எடுத்தா, கொஞ்ச நேரத்துக்கு மொறு மொறுன்னு சூடா இருக்கும்! சரியா!” யோசனை சொன்னாள் மைதிலி.

சரியென்று தலையசைத்தவள், “சீரகம் சேர்த்துக்கோ; சோம்பு போட்டுடாத; மகேஷுக்கு பிடிக்காது!” மேடையை சுத்தம் செய்தபடி துப்பு கொடுத்தாள் மீரா.

இடுப்பில் கைவைத்துகொண்டு, அவள் பக்கம் திரும்பியவள், “அவர் உன் நண்பன் தான் மா…. அதுக்காக, இத்தன வருஷமா சமைச்சு போடற, என்கிட்டையே, அவருக்கு எது பிடிக்கும், பிடிக்காதுன்னு சொல்றது எல்லாம் ரொம்ப அதிகமா இருக்குடி!” குறும்பாய் நினைவூட்ட,

உதட்டை கடித்து, அசடுவழிந்தவள், “மன்னிச்சிரு மைத்து மா! அது ஏதோ பழக்க தோஷத்துல சொல்லிட்டேன்” அவள் முகவாயை குவித்து, செல்லம் கொஞ்சினாள்.

அவள் முகபாவனையை கண்டு சிரித்தாள் மைதிலி. முகமேந்தும் அவள் கையை, தன் கைகளுக்குள் அடைத்தவள், “நீங்க எல்லாரும் நெருங்கிய நண்பர்கள் தான்… இருந்தாலும், அஞ்சலி அத புரிஞ்சுக்கற வர கொஞ்சம் பார்த்து நடந்துகோடி!” எதார்தத்தை எடுத்துரைக்க,

“நீ எப்போவாவது தப்பா நெனச்சிருக்கியா மைதிலி?” தாழ்ந்த குரலில், கேள்வியை அவளிடமே திருப்பினாள் மீரா.

“ச்சீ… நான் ஏன் டி… அப்படி நினைக்கபோறேன்?” அவள் கன்னத்தில் தட்ட,

“அப்போ! அஞ்சலியும் உன்ன மாதிரி தான் இருப்பா! அரவிந்தன் எல்லாம் சொல்லியிருப்பான்!” உறுதியாக பேச, இதை நம்பிக்கை என்று மெச்சுவதா, இல்லை குருட்டு நம்பிக்கை என்று புரியவைப்பதா என்று சிந்தித்தாள் மைதிலி.

அலுவலகத்திலிருந்து வந்தவன், “மீரா! மீரா!” என்று கூக்குரலிட்டு கொண்டே வந்தான்.

“வாங்க பர்த்டே பாய்!” பொறித்து வைத்த வடையில் ஒன்றை அவன் வாயிலிட்டபடி, எதுவுமே செய்யாதது போல், இயல்பாக அழைத்தாள்.

அவள் ஊட்டுவதை தடுத்து, “என்ன சொன்ன? என்ன செஞ்சிட்டிருக்க?” கண்களால், அவள் செய்த பதார்தங்களை பார்த்தபடி கேட்டான்.

“எழுத்தாளரே! சொல்லிட்டு செஞ்சிருந்தா ஒத்துட்டு இருப்பீங்களா!” வலுகட்டாயமாக அவன் வாயில் ஒரு துண்டு வடையை திணித்து, “என்ன திட்டறத விட்டுட்டு, ரெடியாயிட்டு வாங்க… நேரமாகுது…. எல்லாரும் வந்துடுவாங்க!” சொல்லி அவனை போவென்று தள்ளிவிட்டாள்.

“அதான! சொன்னத மட்டும் செஞ்சிட்டா, அது எப்படி மீராவாக முடியும்!” முணுமுணுத்து கொண்டே பத்து நிமிடத்தில் உடைமாற்றி கொண்டு வந்தான்.

‘உம்’ என்று முகம் வைத்துகொண்டு அவனுக்கு தேனீர் கொண்டுவர, அதை வாங்கிகொண்டவன், “எதுக்கு இப்படி இழுத்து போட்டுட்டு செய்யணும்?” தாழ்ந்த குரலில் கேட்க,

“செய்ய பிடிச்சிருக்கு…. அவ்வளவுதான்… பாராட்டாம, இப்படி புலம்புறியே… முசுடு எழுத்தாளர்” சிடுசிடுத்தாள்.

அவள் அன்று பால் காய்ச்ச செய்த ஏற்பாடுகள் நினைவுக்கு வர, “சரி… இவ்வளவு ஏற்பாடு செஞ்சிருக்கியே… திடீர்னு உன் மாமியார் வந்துட்டா என்ன செய்வ?” குறும்பாய் பார்த்து அவளை வம்பிழுத்தான். அவன் சீண்டுவதை உணர்ந்தவள்,

“ம்ம்…” ஏளனமாய் பார்த்து, “நானே உங்க பையன அத்திபூத்தா மாதிரி தான் பாக்குறேன்…. இதுல உங்களோட சண்ட போட எனக்கு நேரமில்ல… உங்களுக்கு வேணும்னா எங்க அப்பா ஃப்ரீயா தான் இருக்காரு… அவரோட சண்ட போடுங்கன்னு…. சல்லுன்னு சன்னில கூட்டிட்டு போய் இறக்கி விட்டுடுவேன்.”

“வாய்! வாய்!” அவனும் கலகலவென்று சிரித்து, அவள் தலையில் குட்டினான்.

மீதமுள்ள வேலைகளை பார்க்க, அவள் நகர, அவளை பின் தொடர்ந்தவன்,

“உன்னால மட்டும் எப்படி டி எல்லாத்தையும் ஈசியா எடுத்துக்க முடியுது?” அன்றும் சரி, இன்றும் சரி, அவள் வருந்தவே இல்லையே என்ற வியப்பில் கேட்டான் ஹரி.

அவன் பக்கம் திரும்பியவள், “எழுத்தாளரே! கவல பட்டா மட்டும் எல்லாம் மாறிட போகுதா என்ன…” சொல்லி கண்சிமிட்ட, அவனால் அதை ஏற்றுகொள்ள முடியவில்லை.

வாடிய அவன் முகத்தை கையிலேந்தி, கண்கள் சந்திக்க பேசினாள். “உங்க அம்மாவும் சரி, எங்க அப்பாவும் சரி… கொடி பிடிக்கறது ஒரே விஷயத்துக்கு தான்… அவங்கவங்க பிள்ளைகளுக்கு பொருத்தமான வாழ்க்கைத்துணை அமையணும்னு… அந்த நம்பிக்கையை நாம அவங்களுக்கு கொடுத்திட்டா, அடுத்த முகூர்த்தத்திலேயே நமக்கு கல்யாணம்…” விளக்க, அவன் விரக்தியாக சிரித்தான்.

“ஸோ…எழுத்தாளரே! அதுக்குள்ள, நீங்க என்கிட்ட ஐலவ்யூ சொல்லுங்க…கல்யாணத்துக்கு அப்புறம் சொல்லிட்டு, நான் வெட்கபடலன்னு நீங்க ஃபீல் பண்ணா, அதுக்கு நான் பொறுப்பில்ல!” காலம் தாழ்த்தாதே என்று அவள் எச்சரிக்க, அவனும் கவலைகள் மறந்து சிரித்தான்.

அவள் கைகளை இறுக பிடித்து, “மேடம், இத கேட்க தானே பிறந்தநாள் பரிசு அப்படி இப்படின்னு எல்லாம் பில்ட் அப் செஞ்சீங்க?”

“ம்ஹூம்…” மறுப்பாய் தலையசைத்து, “ஹரி! நம்மளோட இந்த காதல் பயணத்த ஒரு கதையாவோ இல்ல டைரியாவோ உன் கைப்பட எழுதி, எனக்கு தருவியா டா!” மென்குரலில் கேட்க, வராது என்று சற்றுமுன் சொன்ன வெட்கம், பரவ, தலை தாழ்த்தி அதை மறைத்தாள்.

அவள் முகம் நிமிர்த்தியவன், கண்கள் வியப்பில் பளபளத்தது. “எப்படி டி… நான் கொடுக்க நெனச்சத நீ கேட்குற?” என்றதும், அந்த வியப்பு, அவள் கண்களுக்கு இடம் மாறியது.

“என்னடா சொல்ற?” கண்கள் அகல கேட்டாள்.

“நிஜமாதான் மீரா! நீ என் கதையோட முதல் பிரதிய பொக்கிஷமா வெச்சு கொண்டாடுறத பார்த்து அப்படி ஒரு யோசனை வந்துது. அன்னைகே எழுதவும் தொடங்கிட்டேன். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம், நான், உனக்கு கொடுக்குற முதல் பரிசா இருக்கணும்னு நெனச்சேன் டி…” என்றதும்,

“சொல்லு! சொல்லு! என்ன தலைப்பு வெச்ச! ஐலவ்யூ மீரா! தானே!” ஆவலாய் அவள் குதிக்க, மென்சிரிப்புடன், இல்லை என்று தலையசைத்தான்.

மேலும் சில தலைப்புகளை அவள் படபடவென்று யூகிக்க, அனைத்திற்கும் உதடுகள் இறுக மூடி, அவள் கற்பனை திறனை இரசித்து சிரித்தவன், இல்லை என்று மட்டும் இடம் வலமாக தலையசைத்தான்.

அதற்குள் வாசற்கதவு மணி ஒலிக்க, “ப்ளீஸ் சொல்லு டா! எனக்கு தலையே வெடிச்சிடும்!” என்று அவன் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

நமுட்டு சிரிப்புடன், அவனும், “இரண்டு வார்த்தை தலைப்பு… ‘முதல் வார்த்தை ‘அ’விலும், இரண்டாம் வார்த்தை ‘ஆ’ விலும் தொடங்கும்…கண்டுபிடி!” துப்பு கொடுத்துவிட்டு கதவை திறக்க நகர்ந்தான்.

“முசுடு எழுத்தாளர்!” முணுமுணுத்து கொண்டே, அவனை பின்தொடர்ந்தாள்.

“வா டா புது மாப்பிள்ளை! வா மா அஞ்சலி!” அன்புடன் ஹரி அழைக்க, “பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஹரி!” என்றாள் அஞ்சலி, பணிவாக. ஹரியும் நன்றி தெரிவிக்க, அஞ்சலி முகம் காண ஆவலாய், அவன் பின்னால் இருந்தவள், தள்ளிவிடாத குறையாய் முன்னே வந்தாள்.

மீராவை கண்டதும், “இந்தா டி! நீ கேட்ட அர்ச்சனா ஸ்வீட்” என்று ஒரு டப்பாவை கொடுத்தவன், மறுகையால், அஞ்சலியின் தோளை சுற்றிவளைத்து, பெருமிதத்தோடு அறிமுகம் செய்தான். தன்னவள் என்று உரிமை கொண்டாடும் அரவிந்தன் குரலில் அவள் மனம் குளிர்ந்தது. அஞ்சலி, அவன் நெருக்கத்தில் கொஞ்சம் சிணுங்க, அவளை உள்ளே வரும்படி கைப்பிடித்து அழைத்துச் சென்றாள் மீரா.

அரவிந்தனும், ஹரியும் அளவலாவி கொண்டிருக்க, மீரா, அஞ்சலியை கண்கொட்டாமல் பார்த்து இரசித்தாள். எளிமையான தோற்றம், சிரித்த முகம், இயற்கை அழகு என்று, அரவிந்தனுக்கு ஏற்ற ஜோடியாக திகழ்ந்தாள்.

ஒரு சில நிமிடத்தில், மைதிலியும் மகேஷு ம் வர, அரவிந்தன் அதே உற்சாகத்தோடு, அஞ்சலியை அறிமுகம் செய்தான். கீதாவும், ரமேஷும் கிட்டத்தட்ட, அதே சமயம் வந்தனர்.

“குழந்தை எங்கடி?” தோழியை ஆரத்தழுவி வினவ, “நீங்கதான் முதல்ல அவள பார்க்க வரணும்!” கிண்டலாய் கீதா சொல்ல,

“இல்ல மீரா! இன்னும் வெளிய அழைச்சிட்டு வந்து பழகல… அதான்!” என்று உண்மை காரணம் சொன்னார் ரமேஷ்.

மேலும் சில நிமிடங்கள் அரட்டை நீடிக்க, மீரா உணவு பரிமாற ஆயத்தமானாள்.

“என்னடி! ஆர்டர் செய்யறேன் சொல்லிட்டு, அத்தனையும் சமைச்சிருக்க!” அரவிந்தன் வினவ, மைதிலியின் உதவியோடு செய்ததாக பதிலளித்தாள். தனக்கு பிடித்ததை தான், மீரா பார்த்து பார்த்து செய்திருக்கிறாள் என்று, அரவிந்தன் உடனே கண்டுகொண்டான்.

“மீரா எப்பவும், எனக்கு பிடிச்சா மாதிரிதான் சமைப்பா தெரியுமா, அஞ்சலி!” அரவிந்தன் மீராவை பற்றி புகழாரம் பாடுவதோடு நிறுத்தி கொள்ளாமல், எதை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்றும் அவளுக்கு பரிந்துரை செய்து கொண்டிருந்தான். அவளும் மென்மையான சிரிப்புடன், எல்லாவற்றிருக்கும் செவிசாய்த்தாள்.

‘மற்ற பெண்களின் சமையல் திறனை பற்றி வருங்கால மனைவியிடம் பேசக்கூடாதூன்னு, முதல்ல இவனுக்கு பாடம் எடுக்கணும்’ மைதிலி மனதில் நினைக்க, அதை உணர்ந்தவன் போல்,

“அவன் எப்பவுமே இப்படிதான் மா! மீரா காபியில உப்பே போட்டு கொடுத்தாலும், அத ஆஹா ஓஹோன்னு புகழுவான்!” அவன் பேச்சை பொருட்படுத்தாதே என்றான் ஹரி.

“பொறாமை! பொறாமை! என் நண்பனுக்கு பிடிச்சா மாதிரி செஞ்சிருக்கேன்னு உனக்கு பொறாமை!” மீரா வரிஞ்சு கட்டி சண்டைக்கு வர,

“நீங்க ரொம்ப நல்லா சமைப்பீங்கன்னு அரவிந்தன் என்கிட்ட சொல்லியிருக்காரு!” மெல்லிய குரலில் சமாதானமாய் பேச, அனைவரும் கலகலவென்று சிரித்தனர்.

‘இவளால், மாணவர்களிடம் குரல் உயர்த்தி கூட பேசிட முடியுமா’ என்று தோன்றியது மீராவுக்கு.

“ஹரி! உன்னோட புத்தகம் வெளியீடு, எந்த அளவுல இருக்கு?” பேச்சை திசை திருப்பினார் ரமேஷ்.

அச்சிடப்பட்ட புத்தகங்களின் முதல் தொகுதி தயாராகி இருப்பதை பற்றியும், பத்து நாட்களில், பதிப்பாளர் அலுவலகத்தில் சிறிய அளவில், அறிமுக விழாவும் ஏற்பாடு செய்திருப்பதாக விளக்கினான்.

“நம்மளே நேரடியா விற்கவோ, பரிசா கொடுக்கவோ, இருநூறு பிரதிகள் கொடுத்திருக்காங்க ரமேஷ்! உங்களுக்கு யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!” மீரா கூடுதல் தகவல் சொல்ல, அவர் ஆழ்ந்து யோசித்தார்.

“எனக்கு ஐம்பது பிரதிகள் கொடுக்க முடியுமாடி?” கீதா வினவ, இத்தனை புத்தகங்களை வைத்துகொண்டு இவள் என்ன செய்வாள் என்று அனைவரும், அவளை கேள்வியாய் பார்த்தனர்.

“இன்னும் மூணு வாரத்துல நவராத்திரி வருது… தாம்பூலத்துல ஏதாவது பரிசு பொருள் வெச்சு கொடுப்பேன். அது ஏன் ஹரி எழுதிய புத்தகமா இருக்க கூடாது!” என்றதும், அத்தனை பேரும், அவள் யோசனையை பாராட்டினர்; ஹரியை தவிர.

“என்னால உனக்கு எதுக்கு வீண் செலவு கீதா!” என்று மறுத்தான்.

“இதுல என்னடா வீண் செலவு; எப்படியும் ஏதாவது வாங்கணும்… குழந்தைய வச்சிட்டு என்னால, கடைக்கு எல்லாம் போக முடியாது… சொல்லப்போனா எனக்கு உன்னால ஆதாயம் தான்!” அவனை ஊக்குவிக்கும் விதமாக விளக்க,

“சரின்னு சொல்லுடா ஹரி! இல்லேன்னா நவராத்திரி ஷாப்பிங் மொத்தத்தையும் என் தலையில கட்டிடுவா டா!” ரமேஷ், அவர் கஷ்டத்தை சொல்ல, அனைவரும் உரக்க சிரித்தனர்.

விளையாட்டாக தொடங்கிய பேச்சால், மைதிலியும் ஐம்பது பிரதிகள் வாங்கிகொள்வதாக சொல்ல, அரவிந்தனும், மீராவும் கூட அவரவர்கள் வீட்டு விழாவிற்கு வாங்கி கொள்வதாக சொன்னார்கள். பிரதிகள் அச்சிட்ட வேகத்திலேயே விற்றுவிட்டன என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் திருப்தி அடையாதவனாய், ஹரி யோசிக்க, “உனக்கு இன்னும் என்ன தயக்கம்?” வினவினான் மகேஷ்.

“உங்க திட்டம் நல்லாதான்டா இருக்கு…. ஆனா இதையே ஒவ்வொரு முறையும் செய்ய முடியாது…. விற்பனை, லாபம் தாண்டி, வாசகர்கள் விரும்பி படிக்கறாங்களான்னு எனக்கு தெரிஞ்சிக்கணும். அவங்க எதிர்பார்ப்பின் அடிப்படையில தான், அடுத்து என்ன கதை வெளியிடலாம், அத எப்போ வெளியிடலாம்னு, மற்ற விஷயங்களை திட்டமிட முடியும்!” தொலைநோக்கு பார்வையோடு பேசினான் ஹரி.

அதற்கு என்ன தீர்வு என்று அனைவரும் சிந்திக்க, அங்கொரு மௌனம் நிலவியது.

“எனக்கு தெரிஞ்ச ஒரு யோசனைய சொல்லட்டுமா?” அஞ்சலி அதே மென்மையான குரலில் கேட்க, அத்தனை கண்களும் , அவளை நோக்கியது.

வகுப்பில் பாடம் எடுப்பது போலவே, இடம், வலமென, கருவிழிகள் நடனமாட அனைவரையும் பார்த்து விளக்கினாள்.

“நான் நிறைய ஆங்கில கதை புத்தகங்கள்ல பார்த்திருக்கேன்….புத்தகத்துல ஒரு ஃபீட்பாக் ஃபார்ம்(Feedback Form) இணைச்சிருப்பாங்க. அது பொதுவா கதையை பற்றியும் இருக்கலாம்….இல்ல நீங்க கேட்க நினைக்கற கேள்விகளை பட்டியல் இடலாம். இன்னும் சொல்ல போனா, மேலும் அதே புத்தகத்தின் பிரதி ஆர்டர் செய்யவோ, இல்ல அடுத்து வெளியிடற புத்தகத்த பற்றி டீஸர் கொடுத்து, வாங்க விருப்பம் உள்ளவர்கள், முன்பதிவு செய்யவோ கூட ஃபார்ம் இணைக்கலாம். எல்லாம் நம்ம தேவைக்கு ஏற்றா மாதிரி வடிவமைச்சிக்கலாம்…என்ன…இந்த பிரிண்டிங், போஸ்டல் சார்ஜ் எல்லாம் நம்ம தனியா செலவு செய்ய வேண்டியிருக்கும்.” நீண்ட விளக்கம் சொல்ல,

உண்மையிலேயே, பாடத்தை கவனிக்கும் மாணவர்கள் போலவே எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்.

“செம்ம ஐடியா!” மீரா கைத்தட்ட, அனைவரும் ஆமோதித்தனர்; ஹரி முகத்திலும் ஒரு மெல்லிய சிரிப்பு கோடு.

“முதலாளியோட வருங்கால மனைவின்னு நிருபிச்சிட்ட அஞ்சலி!” தெளிவாக அவள் சிந்திக்கும் திறனை மகேஷ் பறைசாற்ற, கண்கள் தரை பார்க்க சிரித்தாள். அரவிந்தன் அவள் தோளில் தட்டி பாராட்ட, அவன் ஸ்பரிசத்தில், சிணுங்கினாள். அவள் நாணுவதை கண்டு மீரா இரசித்தாள்.

தன்னவளை தனிமையில் பாராட்ட வேண்டுமென, அரவிந்தன் மனம் கடந்து தவித்தது. “சரின்னு சொல்லுடா ஹரி! இது கண்டிப்பா சாத்தியம்!” வலியுறுத்தினான் அரவிந்தன்.

நண்பர்கள் மட்டுமல்லாது, அவர்களின் கணவன், மனைவி என்று, அவ்வளவு ஏன், புதிதாய் வந்த அஞ்சலி வரை அவன் நலனை கருதி யோசனை சொன்னது, ஹரிக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அளித்தது. அவர்கள் அன்பில் மிதந்தவன், சம்மதம் தெரிவித்தான்.

“உன்னால முடிஞ்சுதுன்னா, இன்னும் ஒரு நூறு பிரதிகள் ஏற்பாடு செய்யுடா!” அரவிந்தன் கேட்க,

“டேய்! உன் நட்புக்கு ஒரு அளவே இல்லையா டா அரவிந்தா! இவ்வளவு பிரதிகள் வாங்கி என்ன செய்ய போற?” என்றான் ஹரி.

“இப்படியெல்லாம் வீண் செலவு செஞ்சா, அப்புறம், அஞ்சலி, உன்ன எங்களோட பழகவே விடமாட்டா பார்த்துக்கோ!” கீதா கேலி செய்து, “என்ன அஞ்சலி! நான் சொல்றது சரி தானே!” கேட்டு கண்சிமிட்டினாள்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல!” அதே இதமான குரலில் அஞ்சலி பேச, அவளை ஓரக்கண்ணால் வருடி, ஹரி பக்கம் திரும்பியவன்,

“நீ கதை எழுதுறத பற்றி, ஆஃபீஸ்லேயும், சொல்லலாமுன்னு நினைக்கறேன் டா! படிக்க விருப்பம் இருக்கறவங்க வாங்குவாங்க…. அதுவும் அங்க வேலை செய்யற பலருக்கு உன்ன நல்லா தெரியும்… ஸோ… வாங்க தயங்கமாட்டாங்கன்னு தோணுது” விளக்கினான்.

“புது ஜோடி மாறி மாறி, அற்புதமான யோசனைகள் சொல்றீங்களே… சூப்பர்!” ரமேஷ் பாராட்ட,

“நான்தான் நவராத்திரி பண்டிகைக்கு புத்தகத்த பரிசு பொருளா கொடுக்கலாமுன்னு முதல்ல சொன்னேன்!” கீதா, கண்கள் சுருக்கி, பொய்கோபம் கொள்ள,

“ஆமாம்! ஆமாம்! என் பொண்டாட்டி தான்பா பிள்ளையார் சுழி போட்டா!” மனைவியை புகழ்ந்து, தோளோடு சேர்த்து, வளைத்து அணைத்தார்.

கணவனின் கைப்பிடியிலிருந்து விலகியவள், “அட! மணி எட்டாயிடுத்தே!” சுவர் கடிகாரத்தை பார்த்து பதறி, “நேரமாச்சு ஹரி! நாங்க கிளம்பறோம்!” என்றாள். நண்பர்கள், அவரவர்கள் சௌகரியத்திற்கு ஏற்ப, குழந்தையை பார்க்க வருவதாக சொல்லி அவர்களை வழியனுப்பினர்.

அரவிந்தனும், அஞ்சலியை வீட்டில் விட்டுவிட்டு வரவேண்டும் என்று சொல்லி, புறப்பட தயாரானான். மகேஷ், மைதிலியிடம் மீராவுக்கு உதவியாக இருக்கச் சொல்லி புறப்பட,

“அதெல்லாம், ஹரி அவளுக்கு எட்டூருக்கு உதவுவான்! வாங்க நம்மளும் புறப்படலாம்!” மீராவை பார்த்து கண்சிமிட்டினாள். மதியம் அவள், ஹரியுடன் அதிக நேரம் செலவிட முடிவதில்லை என்று புலம்பியதை மனதில் வைத்துகொண்டு அப்படி சொன்னாள்.

தொடர்ந்து அன்பின் ஆழம் 17 (இரண்டாம் பகுதி) படிக்க, CLICK HERE 👇🏾👇🏾

அன்பின் ஆழம் – 17.2