அன்பின் ஆழம் – 16

அட்டவணையிடாத குறையாய் அடுத்தடுத்து இந்த இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்று பரப்பரப்பாக இயங்கிய இயந்திர வாழ்க்கைக்கு ஒரு இடைவேளை போல்  தோன்றும், மீராவிற்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும். அலாரத்தின் அலறல் இல்லாமல், தூக்கம் கலையும் போது எழுவது ஒரு சுகமென்றால், அம்மா செய்யும் உணவை ஆவிபறக்க, தொலைக்காட்சி முன் உட்கார்ந்து சாப்பிடுவதில் அவளுக்கு ஒரு அலாதி சுகம்.

அதுவும் அன்று, அமாவாசை பொருட்டு, நிர்மலா, வடை பாயசத்துடன், தடபுடலாக சமைத்து கொண்டிருந்தாள். வாசனை பிடித்தவள், ஒரு கையில் ஜவ்வரிசி பாயசமும், இன்னொரு கையில் டி.வி ரிமோட்டுமாய், சோஃபாவில் வந்து ஒய்யாரமாய் அமர்ந்தாள்.

தொலைக்காட்சியில், அரட்டை அரங்கம் பார்த்து கொண்டே, பாயசத்தை ருசிக்க, அவள் கைப்பேசி ஒலித்தது. 

“சொல்லுங்க எழுத்தாளரே! என்ன அதிசியம்… ஞாயிற்றுக்கிழமை அதுவுமா உங்களுக்கு என் நியாபகம்!” எதிர்முனையிலிருந்த தன்னவனை வம்பிழுத்தாள்.

“ம்ம்…என்னையும் ஒரு எழுத்தாளனா மதிச்சு, என் கிறுக்கல்கள் எல்லாம் புத்தகமா அச்சிட்ட முதல் பிரதி தயாரா இருக்காம்… இன்னைக்கு மதியம் மூணு மணியளவுல, வாங்கிக்க வர சொல்லியிருக்காங்க.” அவனும் குறும்பாய் விளக்க,

“செம்ம டா!” துள்ளிகுதிக்காத குறையாய் வாழ்த்தி, “சரி வாங்கிட்டு வா! நாளைக்கு சாயங்காலம், ஆஃபிஸ்லேந்து வந்து பாக்குறேன்.” என்றாள்.

“வாங்கிட்டு வா இல்ல… வாங்கிட்டு வரோம்! அவளையும் உடன் வர சொல்லி அழைக்க,

“நானுமா?” காதில் விழுந்தது சரிதானா என்று யோசித்தாள்.

“ம்ம்…” அழுத்திச் சொல்லி, “நீ இல்லாம எப்படி… யூ ஆர் மை பார்ட்னர் இன் கிரைம்!” என்றதும், வெடுக்கென்று சிரித்தவள், சம்மதம் சொன்னாள்.

மீரா, புது அலுவலகத்தில் பொறுப்பேற்று, ஒரு மாதத்திற்கு மேலாகியிருந்தது. மகேஷ் சொன்னது போல், அவனுடன் தினமும் காரில் போய் வந்தாள். அவளது இருசக்கர வாகனத்தை, மகேஷ் வீட்டில் விடவும், அதை சில சமயம் ஹரி, தன் புத்தகம் பதிப்பிக்கும் வேலையாக எடுத்துச் செல்வதும் வழக்கமாக இருந்தது.

அவள் யூகித்தது போல், தினம் சந்திப்பது என்பது கடினமாக இருந்தது. சில நாட்கள், மாலையில் அவன் வரும்வரை காத்திருப்பாள். பல நாட்கள், அவன் அலுவலகத்திலிருந்து நேராக, பதிப்பாளரை சந்திக்க போவதாக சொல்லி, காத்திருக்க வேண்டாம் என்று சொல்லிவிடுவான். இரவில் வண்டியை அவள் வீட்டில் கொண்டுபோய் விடும் போதுகூட, இரண்டே நிமிடங்கள் வாசலோடு பேசிவிட்டு வந்துவிடுவான்.

வரதன், இதையெல்லாம் கவனித்த போதும், எதிலும் தலையிடாமல் இருந்தார். மகள், காதலிப்பவனை பிரிந்து, வேறு இடத்தில், பணிபுரிய ஒப்புக்கொண்டதே அவருக்கு பெரும் வியப்பு. காதல் வாழ்க்கை, அவள் வளர்ச்சிக்கு தடையாக இல்லை என்று உணர்ந்தாரெனினும், ஹரி மீது அவருக்கு நம்பிக்கை வரவில்லை.

இத்தனை திறமையும், ஆற்றலையும் பெற்றவள், ஹரி போன்ற சாதாரணமானவனின் பிடியில் சிக்கிக்கொண்டாளே என்று வருந்தினார். அவள் உழைப்பையும், செல்வத்தையும், உட்கார்ந்து தின்று ஏப்பம் விடுபவனாக தான் ஹரியை எடைபோட்டார்.

“வாங்க! வாங்க! ஹரி!” எப்போதும் போல் சிரித்த முகமாக ஸ்ரீராம் அவர்களை அன்புடன் அழைத்தார்.

“ஹலோ ஸ்ரீராம்!” அவனும் வணக்கம் சொல்லி, “இவங்கதான் மீரா! என் எழுத்து பயணத்தின் முதுகெலும்பு!” என்று தன்னவளை அறிமுகம் செய்ய, அதிலே, அவர்கள் உறவின் ஆழத்தை, உணர்ந்தார் ஸ்ரீராம்.

மேலும் சில நிமிடங்கள், நலன் விசாரிப்பு உரையாடல்களுக்கு பின், ஸ்ரீராம், புத்தகத்தின் அச்சிட்ட பிரதியை எடுத்துவருவதாக சொல்லி, நகர்ந்தார்.

ஸ்ரீராம், அந்தந்த பணிக்கென்று ஊழியர்களை நியமித்திருந்த போதிலும், ஹரிக்கு மட்டும், எதையும், தானே நேரடியாக செய்ய விரும்பினார். அவன் தன்னடக்கமும், எளிமையான குணமும், அவரை பெரிதும் கவர்ந்தது. கதையை சரிபார்க்கும் பொருட்டு, அவனுடன் செலவிட்ட நேரங்களில், எழுத்தின் மீது அவன் கொண்ட ஈடுபாட்டினை அவரால் உணர முடிந்தது. சாதிக்க வேண்டுமென்று, அவன் இரவுபகல் பாராது அயராது உழைத்ததையும் அவர் கவனித்தார்.

அவர் காட்டிய அக்கறையில், ஹரியும் அவரை ஒரு நலம் விரும்பியாகவே நேசித்தான். அதனால், அவர்களிடையே பதிப்பாளர்-எழுத்தாளர் என்ற உறவை தாண்டி, மெல்ல மெல்லமாக ஒரு சிநேகிதமும் மலர்ந்தது.

“தாங்கஸ் மீரா! நீ என் மேல வச்சிருக்க நம்பிக்கை தான், என்ன இங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு” அருகில் அமர்ந்தவளின் விரல்கள் கோர்த்து, உளமாற நன்றி சொன்னான் ஹரி.

“யாருக்கு வேணும் உன் தாங்கஸ்ஸு…” வேகமாக கையை விலக்கி கொண்டவள், “ஐலவ்யூன்னு சொல்லலாம்ல” சுருங்கிய முகத்துடன் முணுமுணுத்தாள்.

அவள் செயலை இரசித்தவன், “அப்படி சொன்னாதான் உனக்கு என் அன்பு புரியுமா?” காதோரம் கேட்க,

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்; எனக்கு எதுவும் புரிய வேண்டாம்!” திடமாய் சொல்லி, முகத்தையும் சேர்த்து திருப்பி கொண்டாள்.

அவள் கையை இழுத்து, இறுக பிடித்து கொண்டவன், “எனக்கு இப்ப… இந்த நிமிஷம்…எப்படி ஃபீல் ஆகுதுன்னு சொல்லட்டுமா” மெல்லப்பேச, அவனை ஆவலாய் பார்த்தாள் மீரா.

“நான்… என்னோட நீ மட்டும்…. நம்ம, என் கதையின் முதல் பிரதியை எடுத்துட்டு வராங்களான்னு, வாசலையே பார்த்துட்டு இருக்கறது….இதெல்லாம், பொறந்த குழந்தையோட முகம் பார்க்க ஏக்கத்தோடு காத்திருக்கற ஒரு பெற்றோர் மனநிலை மாதிரி இருக்கு மீரா!” என்று அவன் உவமைகளை அடுக்க,

“எழுத்தாளரே! நீங்க இந்த கற்பனை வளத்த எல்லாம், கதையில காட்டுங்க… எனக்கு தேவை மூணு வார்த்தை தான்!” சொல்லி, உதட்டை சுழித்தாள்.

அதற்கும் சிரித்தவன், “அந்த மூணு வார்த்தைய, முதல்ல, மிஸ்டர் வரதன், என்கிட்ட சொல்லட்டும், அப்புறம் அத நான் உன்கிட்ட சொல்றேன்!” குறும்பாக பதில் சொல்லி கண்சிமிட்டினான்.

“அது சரி… உங்க ரெண்டு பேருக்கும் என்னைக்கு ஒத்து போறது…” என்று அவள் சலித்துக்கொள்ள, ஸ்ரீராம், புத்தகத்தின் முதல் பிரதியுடன் வந்தார்.

“வாழ்த்துக்கள்! உங்க இலட்சிய பயணம் இனிதே தொடங்கட்டும்; வெற்றியின் எட்டாத உயரத்தை தொடட்டும்!” மனதார வாழ்த்தி, புத்தகத்தை நீட்டினார்.

“உம்…வாங்கிக்க!” என்று ஹரி மீராவிடம் சொல்லி, கண்ஜாடை காட்ட, அவள் நெகிழ்ந்து போனாள்.  அதை பெற்றுகொண்டவள், மெய்மறந்துபோக, ஸ்ரீராம் ஹரியை பார்த்து, பேசினார்.

“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, பிரதியை சரிபார்த்து, சொல்லுங்க…  நீங்க சரின்னு சொன்னதும், தேவையான பிரதிகளை அச்சிடலாம். “சொல்லி, மீராவை பார்த்தார். அவள் இன்னும் பேராவலோடு, அந்த புத்தகத்தை புரட்ட,

“ஒரு இருபது நிமிஷம் காத்திருந்திங்கனா, இன்னைக்கே  அடுத்தகட்ட வேலைகளுக்கான விஷயங்களை பேசிடலாம்.” என்றதும், அவன் உடனே சம்மதம் தெரிவித்தான். அவரும், தேவையானதை எடுத்து வருவதாக சொல்லி, மீண்டும் அவர்களுக்கு தனிமையை கொடுத்தார்.

தன் படைப்பு, உலகத்திற்கு அறிமுகம் செய்ய தயாரக இருப்பதை கண்டதில், ஹரிக்கு இன்பம் என்றால், அது தன்னவள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருப்பதை காண்கையில் பேரின்பம்.

மீரா, தன், விரல்களால், முன் அட்டையை மென்மையாக தடவி, பக்கங்களை புரட்டினாள். திறந்த பக்கத்தில், தன் முகத்தை புதைத்து, அதன் நறுமணத்தை ஆழ்ந்து சுவாசித்தாள். அதனை பார்த்து கொண்டிருந்தவன்,

“பாரு மீரா… இப்போகூட நீ செய்யறத பார்த்தா, பொறந்த குழந்தையோட, உச்சந்தலை முகர்ந்து பாக்குறா மாதிரியே இருக்கு.”  என்று சொல்லியேவிட்டான்.

அவள் வேகமாக தலை நிமிர்த்தி அவனை பார்க்க, மீண்டும் தர்க்கம் செய்வாளோ என்று பயந்தான் ஹரி. ஆனால் அவளோ,

“நிஜம்தான் ஹரி!” என்றதும், அவன் கண்கள் வியப்பில் விரிந்தன.

“ஒரு குழந்தைய தூக்கி வச்சு கொஞ்சுறா மாதிரிதான் இருக்கு டா!” கண்கள் மகிழ்ச்சியில் நனைய அவளை தோளோடு சேர்த்து அணைத்தான் ஹரி.

இருக்குமிடம் உணர்ந்து, கண்களை துடைத்து கொண்டவள், “பாரு டா! இந்த ஓவியம், கதைக்கு எவ்வளவு பொருத்தமா இருக்கு!” என்றாள்.

அவனும் ‘உம்’ என்று தலையசைத்து சிந்தித்தான்.

வாசுகி வரைந்த ஓவியங்களில், மீரா, இந்த கதைக்காக தேர்ந்தெடுத்து கொடுத்தது, வயதில் முதிர்ந்த ஒரு பெண், வீட்டின் முன் வாசலில் இருக்கும் திண்ணையில் உட்கார்ந்து, இளம் வயது பெண் ஒருவருக்கு தலை சீவி கொண்டிருப்பது போல ஒரு காட்சி. அப்பெண்ணின் கையில் முகம் பார்க்கும் கண்ணாடி, வலது புறத்தில் நெருக்கமாக கட்டிய முல்லை சரம், என்ற சின்ன சின்ன விவரங்கள் ஓவியத்திற்கு மெருகூட்டின.

‘தெவிட்டாத இன்பம், கதை தலைப்புக்கு, வெளிதோற்றத்தில், அம்மா-மகள் உறவு மாதிரி தோன்றினாலும், கதை, மாமியார்-மருமகளை பற்றியதுன்னு வாசகர்கள் தெரிந்துகொள்ளும் போது, செம்ம திருப்பமாக இருக்கும்’, மீரா அன்று சொன்னது, அவனுக்கு நினைவுக்கு வர,

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல கூட, இப்படி, தெவிட்டாத இன்பம் வழியணும்டி!’ ஏக்கத்துடன் தன்னவளை பார்த்து சொன்னான் ஹரி.

“ம்ம்…கண்டிப்பா வரும்டா… வராம எங்க போகபோவுது…. காலம் அவங்களுக்கு பதில் சொல்லும்!” உறுதியாய் சொல்ல, அவள் நம்பிக்கையை மெச்சி விரக்தியில் சிரித்தான்.

முதல் பக்கத்தில், ‘அப்பாவிற்கு சமர்ப்பணம் எழுத்துக்களின் மேல், விரல்கள் வருட, “உங்க அப்பா ஆசிர்வாதம், உன்ன உயர்ந்த நிலைக்கு கொண்டு போகப் போகுது பாரு!” என்று உதடுகள் அசரீரி உதிர்த்தது.

மேலும் சில பக்கங்களை புரட்டி, இங்குமங்குமாய், படித்ததில் பிடித்த, வரிகளை சுட்டிக்காட்டியவள், கடைசி பக்கத்தில், இருந்த தன்னவனின் புகைப்படத்தை கண்களால் பருகினாள்.

“எத்தன அழகா இருக்க பாரு!” பாராட்டி, கண்பட்டு விடக்கூடாது என்று விரல் சொடுக்கி திருஷ்டியும் எடுத்தாள். இவள் செய்கையை இரசித்தவன்,

“அது, காதல் செய்த மாயம்!” என்று அவள் காதோரம் நெருங்கி ஓதினான்.

அவன் தோரணையில் மயங்கியவள், புத்தகத்தை மூடி, மார்போடு அணைத்து கொண்டு, “இது நம்ம தலைச்சன் பிள்ளை; இந்த பிரதி, எனக்கு மட்டும் தான் சொந்தம்!” உரிமை கொண்டாட,

“அப்போ நான் என்ன இலவச இணைப்பா?” ஏக்கத்துடன் கேட்டவன் கண்ணில், பொறாமை எட்டிப்பார்த்தது என்பது தான் நிஜம். 

சற்றும் எதிர்பார்க்காத விதமாக, ஹரியுடன் வார இறுதியயை கழித்த மிதப்பிலேயே தொடர்ந்து வந்த நாட்களை உற்சாகமாக ஓட்டினாள் மீரா. அச்சிட்ட பிரதியை, மாலை நேரங்களில், இவள் சரி பார்த்து, பரிந்துரைகளை பட்டியலிடுவதும், இரவு உணவுக்கு பின், அவன் பங்குக்கு, சரி பார்த்து, அவள் குறிப்பிட்டவற்றோடு ஒப்பிடுவதுமாக, இருவரும் தனி தனியே இயங்கினர்.

வழக்கம்போல ஒரு நாள், அலுவலகத்திலிருந்து திரும்பியவள், ஹரி வருவதற்காக காத்திருந்தாள். அவன் உள்ளே நுழையவும், இவள் புத்தகத்தை புரட்டி கொண்டு இருப்பதற்கும் சரியாக இருந்தது. அன்று சொன்ன உவமை அவன் கண்முன் வர, அவள் குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுவது போல் தோன்றியது அவனுக்கு. சிந்தனையை, சிரிப்பில் மறைத்தவன்,

“இன்னும் எத்தனை முறை அத படிப்ப மீரா!” அச்சிட கூட கொடுத்தாகிவிட்டது என்பதை நினைவூட்டினான்.

“நீ வீட்டுக்கு வர வரைக்கும் நான் வேற என்ன செய்யறது!” புலம்பி கொண்டே, எழுந்தவள், புத்தகத்தை அவன் கையில் திணித்து, “வண்டி சாவியை கொடு! நான் கிளம்பறேன்” என்றாள்.

“உங்க அம்மாவுக்கு போன் செஞ்சு, ஆறு மணிக்குதான் வீட்டுக்கு வருவேன்னு தகவல் சொல்லு!” என்றதும், புருவங்களை உயர்த்தி தன்னவனை பார்த்தாள்.

“அரவிந்தன் வரான்! உன்ன பார்த்து ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம்!” ஹரி விளக்கம் சொல்ல, அவள் புருவங்கள் இறங்கி, முகமும் சுருங்கியது.

பேசி முடித்தவன், தன் அறையை நோக்கி நடக்க, “இப்போ எதுக்கு இங்க வரான்…ஏற்கனவே நம்மள பிரிச்சு வெச்சது பத்தாதாமா அவனுக்கு… அடுத்து என்ன தண்ணியில்லாத காட்டுக்கு அனுப்பி, இப்படி தினமும் அஞ்சு நிமிஷம்… பத்து நிமிஷமுன்னு சந்திக்கிறதுக்கும் ஆப்பு வெக்க போறானா…” படபடவென்று பொறிந்தாள்.

பாதி திறந்த கதவின் இடுக்கில் நின்றவன், அவள் தலையை ஐவிரல்களில் குவித்து, “இத்துனூண்டு மண்டைக்கு இவ்வளவு யோசனை நல்லதில்லமா! என் நண்பன் பசியா வருவான். பால் வாங்கிட்டு வந்திருக்கேன்… போய் டீ போடு!” நமுட்டு சிரிப்புடன் சொல்லி, உடைமாற்றி கொண்டு வருகிறேன் என்றான்.

“ஐலவ்யூ மட்டும் சொல்லமாட்ட… ஆனா தாலி கட்டின பொண்டாட்டி மாதிரி வேல மட்டும் சொல்லு…”கழுத்தை நொடித்தவள், அவன் கன்னத்தை அழுத்தமாக கிள்ளிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.

அரவிந்தன், எதற்காக வருகிறான் என்று யோசித்து கொண்டே, பால் காய்ச்ச, வாசற்கதவு மணி ஒலித்தது. விரைந்தோடி போய் கதவை திறந்தவள் கண்டது, மகேஷை.

“அரவிந்தன் வந்துட்டானா?” கேட்டபடி அவன் உள்ளே நுழைய,

“உனக்கும் அவன் வரது தெரியுமா?” என்று வினவினாள்.

“இப்போதான் போன் செஞ்சி ஹரி வீட்டுக்கு வர சொன்னான்!” என்றதும், மீராவின் பயமும், பதற்றமும் அதிகமானது தான் மிச்சம்.

சரியென்று தலையசைத்தவள், சமையலறைக்குள் புகுந்தாள். சுடசுட தேனீரை இறக்கவும், அரவிந்தன் வருவதற்கும் சரியாக இருந்தது. காற்றில் பரவிய ஏலக்காயின் மணத்தை உள்மூச்சால் இழுத்தவன், உரிமையோடு சமையலறைக்குள் நுழைந்து,

“ஆஹா! மீரா கையால சாப்பிட்டு எத்தன நாளாச்சு!” என்று ஒரு கோப்பையை எடுத்து டீயை பருகினான்.

மற்ற இருவருக்கும் அவள் பரிமாற, அரவிந்தன், டீயில் பிஸ்கட்டுகளை தோய்த்து ருசித்தானே தவிற, வந்த விஷயத்தை சொல்லவில்லை.

“சொல்லுடா! என்ன விஷயமா இங்க வந்த?” கேட்டேவிட்டாள் மீரா!”

அவள் சற்றுமுன் செய்த ஆர்ப்பாட்டத்தை எண்ணி சிரித்தவன், “கேட்குறால்ல, சொல்லு… நீ கைகாட்டற இடத்துக்கு, மறுகேள்வி கேட்காம, டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போக, மூட்ட முடிச்சோட தயாரா இருக்கா!” அவளை பார்வையால் விழுங்கியபடி வம்பிழுத்தான் ஹரி.

நண்பன் ஜாடை பேச்சு, அவள் முறைக்கும் விதமென கவனித்த அரவிந்தனுக்கு, விளக்கமேதும் சொல்லாமலேயே அவள் பயம் புரிந்தது.

வெளிர்ந்த முகமாய், பேச்சற்று நிற்கும் அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன், இதழோர சிரிப்புடன், “என்ன உங்கிட்டேந்து காப்பாத்த, எனக்கே எனக்குன்னு ஒருத்தி வந்துட்டா.” மெல்லிய குரலில் சொன்னான்.

அதை கேட்டவள் கண்கள் பளபளக்க, சிலை போல நின்றாள். மகேஷ் நண்பனை ஆறத்தழுவி வாழ்த்தினான். பிறந்த ஊர், பெயரென்று, மகேஷ் மேலும் விவரங்களை கேட்க, இன்பதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய் மீரா நின்றாள். அரவிந்தன் அலுவலக விஷயம் பேசவரவில்லை என்ற நிம்மதியில் கண்ணீர் சிந்துகிறாள் என்று மகேஷ் நினைக்க, மற்ற இரு நண்பர்களுக்கும் அவள் மனநிலை நன்றாகவே புரிந்தது.

அவளை இயல்பு நிலைக்கு கொண்டுவர, ஹரி, அவள் தோள்களை சுற்றி வளைத்து, “மீரா! இன்னும் நாலே மாசத்துல கல்யாணமாம்… பையன் எவ்வளவு ஃபாஸ்டா இருக்கான் பாரு!” நண்பனை மேலும் பேச சொல்லி கண்களால் ஜாடை காட்ட,

“என்ன செய்ய மீரா! நான் கல்யாணம் செய்துக்க போறது ஒரு டீச்சர…. அவங்களுக்கு பங்சுவாலிட்டி, டிசிப்பிளின் எல்லாம் ரொம்ப முக்கியம்… சொன்னத கேட்கலேனா அப்புறம் பிரம்படிதான்..” விளையாட்டாய் பேச,

“அவங்க கொடுக்கறது இருக்கட்டும்…. முதல்ல, என் கையால வாங்கிக்க” வெடுக்கென்று சிரித்தவள், செல்லமாக அவன் முதுகில் தட்டி, தன்னவன் பக்கம் திரும்பினாள். “உனக்கும் சேர்த்து தான்… சஸ்பென்ஸ, கதை எழுதறதோட நிறுத்திக்கோன்னு சொன்னா கேக்குறியா…கேக்குறியா….’ கூடுதலாக இரண்டு அடி கொடுத்தாள்.

“என் சார்புலையும் நாலு போடு மீரா!” மகேஷும் ஒத்தூதி, அவனிடம், போனில் எப்படி அரவிந்தன் திடமாக பேசினான் என்பதையும் விவரித்தான்.

“சரி! சொல்லு டா! எப்போ இதெல்லாம் நடந்தது?” மகேஷ் வினவ, நண்பர்கள் நால்வரும், வட்டமாக தரையில் அமர்ந்தனர்.

“அவ பேரு அஞ்சலி. தனியார் பள்ளியில ஆசிரியரா இருக்கா. அவங்க அம்மாவும், எங்க அம்மாவும் கல்யாணத்துக்கு முன்னாடி, ஒரே இடத்துல தான் வேலை செஞ்சாங்களாம். எதேர்ச்சியா, போன வாரம், வடபழனி முருகன் கோவிலுல சந்திச்சியிருக்காங்க. பேச்சோடு பேச்சா, கல்யாண விஷயமும் பேசியிருக்காங்க.” என்று சொல்லி பெருமூச்சுவிட்டவன்,

“நேற்று தான் நான் அவள சந்திச்சு பேசினேன்… எங்க எண்ணங்கள் ஒத்து போச்சு… ” சொன்னவன் குரலில் ஒரு தடுமாற்றம். “கல்யாணம் செஞ்சிக்கலாம்னு முடிவு எடுத்தேன்.” சொல்லி, “எடுத்தோம்!” என்று திருத்தி சொல்லி சுருக்கமாக விளக்க,

“அரவிந்தன்…கல்யாணம்…” இதை தாண்டி அவளுக்கு வேறெதுவும் காதில் விழவில்லை.

நண்பர்களாகவே இருந்த போதிலும், அரவிந்தனால், அஞ்சலியுடன் பேசிய அனைத்தையும் அவர்களிடம் பகிரந்து கொள்ள முடியவில்லை; மறைக்க வேண்டும் என்பதை காட்டிலும், அவசியமில்லை என்று மென்றுமுழுங்கினான்.

“பொண்ணு போட்டோ காட்ட சொல்லு மீரா…. பாக்கடிலேயே வச்சிகிட்டு சுத்தறான்!” மதியம் தன்னிடம் காட்டியது நினைவுக்கு வர, ஹரி, அவனை சீண்டினான். அரவிந்தனும் முகத்தில் வெட்கம் தழுவ, சட்டை பையிலிருந்து அதை எடுக்க, மீரா அவன் கையை பிடித்து, எடுக்கவேண்டாம் என்று தடுத்தாள்.

“வேண்டாம் அரவிந்த்! காட்டாத!” என்றதும் மூவரும் அவளை ஆச்சரியமாய் பார்க்க, “நானும் உங்களுக்கு ஒரு நற்செய்தி சொல்லணும்!” என்று மேலும் புதிர் போட்டாள்.

கீதா ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தவள், “அடுத்த வாரம் ஹரி பிறந்த நாள் வருது; அன்னைக்கு நம்ம எல்லாரும் சந்திக்கலாம்… நீயும் அஞ்சலிய அழைச்சிட்டு வந்து எங்களுக்கு அறிமுகம் செய்… பிறந்தநாள் கொண்டாடினா மாதிரியும் ஆச்சு… அஞ்சலிய பார்த்தா மாதிரியும் ஆச்சு… சரியா?” அரவிந்தனிடம் சொல்ல, அவன் உடனே சம்மதம் என்று தலையசைத்தான்.

ஹரி மறுப்பாய் தலையசைத்து, “அஞ்சலிய சந்திக்கலாம் மீரா…. ஆனா பிறந்தநாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம்?” என்றான்.

“எழுத்தாளரே! நீங்க அன்னைக்கு கொடுத்த வரத்த மறந்துட்டிங்களா?” கேட்டு, ஓரக்கண்ணால் அவனை விழுங்கினாள். அவள் ’எழுத்தாளரே’ என்று இசைத்த அந்த நொடியே கவிழ்ந்தவன், கன்னத்தில் குழிவிழ சிரித்து,

“சரி! சரி! எங்க போலாமுன்னு சொல்லு!” அவனும் சரணாகதியாக,

எதுவும் விளங்காத போதிலும், அவர்கள் காதல் பரிமாற்றத்தை கண்டுகளித்தனர் நண்பர்கள்.

“வெளிய போக வேண்டாம் ஹரி! வீட்டிலேயே ஆர்டர் செய்து சாப்பிடலாம்… பேச வசதியா இருக்கும்… கீதாவுக்கும் குழந்தையை பார்த்துக்க சுலபமா இருக்கும்.” விளக்கி, “சாப்பாடு நான் ஆர்டர் கொடுத்துக்குறேன்.” என்று பொறுப்பும் ஏற்றாள்.

“ஏற்கனவே நீயும், கீதாவும் இத பற்றி முன்னமே பேசி வச்சிடிங்க… சரி தானே?” குறும்பாக அவன் கேட்க,

“மைதிலியையும் சேர்த்துக்கோ டா!” மகேஷ் குறுக்கிட்டு, “ எனக்கு இப்போதான் நியாபகம் வருது… சாயங்காலம், சம்மந்தமே இல்லாம, உன் பிறந்தநாள் கொண்டாட்டம் பற்றி, மீரா ஏதாவது சொன்னாளான்னு கேட்டா டா!” என்று போட்டுகொடுக்க, தன்னவன் கூர்மையான பார்வையை எதிர்கொள்ள முடியாமல், அசடுவழிந்தாள் மீரா.

“முடிஞ்சா! அஞ்சலிய, இவங்க மூணு பேரோட சேர விடாதடா அரவிந்தா!” மகேஷ் எச்சரிக்க, அவன் கலகலவென்று சிரித்தான்.

சிறிது நேரத்தில், நண்பர்கள் புறப்பட, “அரவிந்தா! அஞ்சலிய அழைச்சிட்டு வரப்ப, அர்ச்சனா ஸ்வீட்டோட தான் வரணும்!” மீரா, விளம்பரத்தில் வருவதை போலவே கேட்க,

“அட! கவனிச்சையா டா! அஷோக், அகிலா, அரவிந்தன், அஞ்சலி….. அட்டகாசமான (A) கிளாஸ் குடும்பம் டா!” மகேஷ் சுட்டிகாட்ட, அரவிந்தன் முகத்தில் பெருமை வழிந்தோடியது.

மீராவும், சாவியை விரலில் சுழற்றியபடி, வண்டியில் அமர, சத்தமிடும் அந்த விரலை அழுத்தி பிடித்தவன், “பிறந்த நாள் பரிசு அப்படி, இப்படின்னு ஏதாவது கொடுத்த….இருக்கு உனக்கு!” என்று மிரட்டினான்.

கையை மீட்டுக் கொண்டவள், “எழுத்தாளரே! கொடுக்க மாட்டேன்… ஆனா கேட்பேன்… நீங்க மறுப்பு சொன்னீங்க…. அவ்வளவுதான்” அவன் கன்னத்தில் தட்டி, சிட்டாக பறந்தாள்.

மீரா கேட்கவிருக்கும் பரிசை, ஹரி உடனே தந்திடுவானா, தடுமாறுவானா, இல்லை தர்க்கம் பேசி தள்ளிப்போடுவானா, பதில் சொல்லும், அவன், அவள் மீது வைத்த அன்பின் ஆழம்…

நண்பர்களை சந்திக்கவிருக்கும் அஞ்சலி, இவர்கள் நெருக்கத்தை புரிந்து கொள்வாளா, புதிராய் பார்ப்பாளா, இல்லை புறம் தள்ளுவாளா, பதில் சொல்லும், அவள், அவன் மீது வைத்த அன்பின் ஆழம்…