அன்பின் ஆழம் – 14

புலராத காலை பொழுதில் வான்மேகங்கள் வளர்பிறை நிலவின் ஒளியில், சத்தமின்றி நகர்ந்து கொண்டிருந்தன. வெறிச்சோடி கிடந்த சாலையில் மகிழுந்தும் கூட, முன்விளக்கு வீசிய மிதமான வெளிச்சத்தில், சீராகவே பறந்தது. அதில் பயணித்த ஹரியின் மனம்தான் நிலைகொள்ளாமல் தத்தளித்தது.

அதுவும் மீராவின் வீட்டை கடந்து போகும்போது, ‘மீ…ரா…’ சத்தமாக அழைக்க துடித்தது அவன் உதடுகள். மாடியிலிருந்த அவள் அறையின் திரையிடப்பட்ட ஜன்னல்களை, கண்ணுக்கெட்டும் வரை, கழுத்தை வளைத்து, ஏக்கத்துடன் பார்த்தான்; ஜன்னலோரம் வந்து நிற்பாளா என்ற நப்பாசையில்.

இலட்சிய பாதையில், தான் எடுத்துவைக்க போகும் முதலடியில், பக்கத்தில் இரு என்று அவளுக்கு ஆசைகாட்டிவிட்டு, இன்று அவளை ஒரு விருந்தாளியாக மட்டுமே வர சொன்னது அவனுக்கு வருத்தமாக இருந்தது. தன் காதலை பற்றியும், காதலியை பற்றியும், கடுகளவும் உடன்பாடு இல்லாத அம்மாவை அவளுக்கு எப்படி அறிமுகம் செய்வது என்ற கவலை வேறு. அன்று அவள் தங்கள் காதலை பற்றி, அம்மாவின் மனநிலை என்னவென்று விசாரித்தபோது மேலோட்டமாக பதில் சொல்லி மழுப்பிவிட்டான்; இவ்வளவு விரைவில் இவர்கள் சந்திக்க நேரிடும் என்று அவன் துளியும் எதிர்பார்க்கவில்லை.

வண்டியில் இருந்து இறங்கியவன், ஓட்டுனர் காட்டிய காகிதத்தில் கையொப்பமிட்டு, கட்டணம் செலுத்த, வாசுகி, மகன் வசிக்கவிருக்கும் வீட்டை, மேலும் கீழுமாக பிரமிப்பாய் பார்த்து, கண்களால் அளவிட்டாள். கொண்டுவந்த இரண்டு கைப்பெட்டிகளை, இருபுறமும் சுமந்து, ஹரி முன்னே செல்ல, மகனை பின்தொடர்ந்தாள் வாசுகி. வலதுபக்கம் தென்பட்ட பிள்ளையார் இருக்கும் திசையில் அவள் கால்கள் திரும்ப, கைகள் தானாகவே கும்பிடு போட்டது.

‘பரவாயில்லையே! மாமியாருக்கும் மருமகளுக்கும் இதுல நல்ல ஒற்றுமை தான்!’ மனதில் எண்ணியவனுக்கு, லேசாக நம்பிக்கை பிறந்தது.

முதல்மாடி ஏறிவந்தவளின் கண்னைப் பறித்தது, வாசற்படிக்கு அழகூட்டிய படிக்கோலம்.

“அட! கோலம் ரொம்ப ஜோராயிருக்கே… யாரு… உன் நண்பனின் மனைவியா போட்டிருக்கா?” மலைப்பில் கேட்க,

“இருக்கும் மா!” தனக்கே புலப்படாத நிலையில் பதிலளித்து, கதவை திறந்தான்.

உள்ளே சென்றவர்களுக்கு மேலும் வியப்பூட்டும் விதமாக பல விஷயங்கள் கண்ணுக்கு தென்பட்டது. அலங்கரிக்கபட்ட ஹால், பால் காய்ச்ச தயார் நிலையிலிருந்த சமையலறை என்று, அவள் கவனிக்க, கைப்பெட்டிகளை வைக்க, விருந்தினர் அறைக்கு சென்றவனுக்கு, இதையெல்லாம் யார் செய்திருப்பார் என்று புரிந்தது.

‘இதெல்லாம் உன் வேலையா டி?’ ஹரி, தன்னவளை மனதில் அன்பாக திட்டினான்.

அந்த அலமாரியின் தட்டை, மீரா கடவுள் வழிபாட்டிற்கு ஏதுவாய் மாற்றி அமைத்திருந்தது, அவனுக்கு அனைத்தையும் விளக்கியது.

பின்னால் வந்த வாசுகியும் அதை கவனித்தாள். ஆனால், அவளை ஸ்தம்பிக்க வைத்தது, ஒன்றே ஒன்று தான்; தன் கணவனின் புகைப்படம்.

“அப்பா போட்டோ எப்படி… இதெல்லாம் கூட கொடுத்துட்டு வந்தியா?” அதை பார்த்துகொண்டே மகனை வினவ,

அம்மாவின் குரலில் இருந்த மென்மையை, உணர்ந்தவன், மீராவை பற்றி சொல்ல இதைவிட நல்ல சந்தர்ப்பம் அமையாது என்று நினைத்தான். பின்னாலிருந்து, அவள் தோள்களை, இறுக பிடித்து,

“எல்லாம் மீரா ஏற்பாடு மா! எப்படி இருக்கு?” காதோரம் கேட்டான்.

ஹரி கேட்டது தான் தாமதம். வெடுக்கென்று திரும்பியவள், கண்களில் பூரிப்பு இல்லை; கோபம் தான் எரிமலையாய் கொப்பளித்தது. ‘மீரா’ அந்த பெயரை கேட்டாலே, தன் மகனின் எழுதும் ஆசைக்கு வீண்நம்பிக்கை கொடுத்து அவன் மனதை கலைத்தவளுமாய், வீட்டு பத்திரத்தை, வஞ்சகமாக சூறையாடியவளுமாய் தான் வாசுகி கண்ணுக்கு தோன்றினாள்.

“இது என்ன அதிகப்ரசங்கித்தனம்? யாரு எத செய்யறதுன்னு ஒரு வரம்பு வேண்டாமா? அவங்க வீட்டுல எதையும் கண்டுக்க மாட்டாங்களா?” கடுகாய் வெடித்தாள்.

எடுத்தயெடுப்பிலேயே வாசுகி அவ்வளவு வெறுப்பைக் காட்ட, “அவ மேல தப்பு இல்லம்மா… நான் தான், நீ அனுப்பின லிஸ்ட அவகிட்ட கொடுத்து, வாங்கி வெக்க சொன்னேன்.” மீராவுக்கு பரிந்து பேசினான் ஹரி.

செயலுக்கு மகன் பொருப்பேற்றாலும், பழியை மீரா மீதே போடும் மனநிலையில் இருந்தவள், “நீயே கூப்பிட்டாலும், அவ பல்ல இளிச்சிட்டு வரலாமா?” என்று கேள்வியை மகனிடமே திருப்பினாள்.

வாக்குவாதத்தை வளர்க்காமல், எப்படி புரிய வைப்பது என்று ஹரி யோசித்து மௌனம் காக்க, அவள் சொன்னது நியாயமே என்று முடிவுகட்டிக்கொண்டாள். அலமாரியில் இருந்த, தன் கணவனின் புகைப்படத்தை எடுத்து, மகன் கையில் திணித்தாள்.

“யாராவது கடவுள் படத்தையும் மனுஷங்க படத்தையும் ஒண்ணா வெப்பாங்களா.” குறைகூறி, “அப்பா படத்த ஹால்ல மாட்டு. நான் குளிச்சிட்டு வரேன்.” சொல்லி, அவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்.

‘உன்ன குலசாமின்னு சொல்ற மீரா மனச, அம்மாவுக்கு புரியவை’ நிழற்படமாய் கையிலிருந்த அப்பாவிடம் தன் ஆதங்கத்தை கொட்டி பெருமூச்சுவிட்டான். 

கால்மணி நேரத்தில், குளித்துவிட்டு, பூஜை செய்ய தயாராகி வந்தவள், மீரா வாங்கி வைத்த பித்தளை விளக்குகளை அகற்றினாள். பதிலுக்கு தான் கொண்டு வந்த வெள்ளி விளக்குகளை ஏற்றினாள். அந்த பித்தளை விளக்குகளை, மகனிடம் கொடுத்து,

“இதெல்லாம், நான் லிஸ்டுல எழுதவே இல்லையே!” நக்கல் செய்து, அடுத்து என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று சமையலறையை நோக்கி நடந்தாள்.

அச்சமயம், வாசற்கதவு மணி ஒலிக்க, கைகடிகாரத்தில் நேரம் பார்த்தவனின் மனம் ஒரு கணம் பதறியது. ஆறரை மணி கூட ஆகவில்லை தான். இன்ப அதிர்ச்சி என்ற பெயரில், மீரா வந்திருக்க கூடாது என்று பிரார்தித்துகொண்டே, கதவை திறக்க,

“என்னடா ஹரி! இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” வினவிக் கொண்டே,ராணி, மீரா ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ள சொன்ன பொருட்களை அவனிடம் கொடுத்தாள். பேச்சு சத்தம் கேட்டு, வாசுகி வர, அவளை கண்ட ராணிக்கு தான் அதிர்ச்சி.

“வணக்கம் மா! என் பேரு ராணி; வீடு பிடிச்சிருக்கா?”

அவள் அறிமுகப்பேச்சில், வந்தவள், வீட்டின் உரிமையாளர் என்று புரிந்துகொண்டு, “ரொம்ப நல்லாயிருக்கு மா! ஆனா, இவன் ஒருத்தனுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வீடு…” கேட்டு, வீட்டின் பரப்பளவை கண்ணால் காட்டினாள்.

அதற்கு சிரித்தவள், தன்னடக்கத்துடன், “இருக்கட்டும் மா! ஹரி எனக்கு உடன்பிறவா தம்பி மாதிரி; நீங்க அவனோட வந்து தங்க வசதியா இருக்கும்; நாளைக்கே அவனுக்கு கல்யாணமானா தேவைப்படும்…” அன்பாக எடுத்துரைத்தாள் ராணி.

“கல்யாணமா!” ஏளனமாக சிரித்தாள் வாசுகி. “இந்த காலத்து பசங்க, கல்யாணமாகுற வரைக்குமெல்லாம் காத்திருக்கிறது இல்ல” சொல்லி, கையால் அலங்காரங்களை சுட்டிகாட்டி, “இதோ பாரு! அந்த பொண்ணு தனியா வந்து என்னவெல்லாம் செஞ்சிட்டு போயிருக்கு?” என்று சலித்துகொண்டாள்.

வாசுகி பேச்சில் அதிருப்தியை உணர்ந்த ராணி, மீரா வந்தது தனக்கு தெரியும் என்று ஒப்புக்கொள்வதா, இல்லை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா என்று குழம்பி நின்றாள்.

“நீதான் மா கொஞ்சம் பார்த்துக்கணும்; விட்டா இந்த பொண்ணு வந்து குடும்பமே நடத்திடுவா போல இருக்கு” இன்னும் அதிகமாக மீராவை கொச்சைபடுத்தி பேச, ஹரி துடிதுடித்தான்.

வாசுகியின் மனநிலையை இப்போது நன்றாக புரிந்துகொண்ட ராணி, “அப்படியெல்லாம் செய்ய மாட்டாங்க; ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பசங்க!” விட்டுகொடுக்காமல் பேசி, குழந்தைகளை பள்ளிகூடத்திற்கு கிளப்ப வேண்டும் என்று சொல்லி, அங்கிருந்து நழுவினாள்.

கதவடைத்து வந்தவன் பேசாமல், பொருட்களை சமையலறையில் வைக்க, அவனை பின்தொடர்ந்தவள், “இதெல்லாம் யார் கணக்குல வரும்? பணம் செலவழித்தது நீயா? அவளா?” என்று குத்தலாக கேட்டாள்.

இத்தனை நேரம் நிதானம் கடைபிடித்தவன், கண்களில் கோபம் தணலாய் எரிய, “பால், ஆவின் கம்பனி வினியோகித்தது; சிலிண்டர் இன்டேன் கம்பனி உற்பத்தி செய்தது” ஏளனமாக பதில்சொல்லி, “இஷ்டமிருந்தா பால் காய்ச்சு; இல்லேன்னா விட்டுடு” கராராய் சொல்லி, முகத்தை திருப்பிகொண்டான்.

எவளோ ஒருத்திக்காக, மகன் தன் மேல் எரிந்து விழவது தாங்கிகொள்ள முடியாதவள், “இங்க பாரு ஹரி! எனக்கு அவள சுத்தமா பிடிக்கல; என் விருப்பத்த மீறி, அவளதான் கல்யாணம் செஞ்சிப்பேன்னா, தாரளமா செஞ்சிக்கோ; குடும்பம் நடத்திகோ…என்னால அவகூட கண்டிப்பா உறவாட முடியாது; உனக்கு என்ன பார்க்கணும்னு தோணிச்சுன்னா, நீ மட்டும் ஊருக்கு வா!” உறுதியாய் தன் முடிவை சொல்ல,

கோபத்தில் வார்த்தை விட்டுவிடுவோமோ என்று பயந்து, கதவை நோக்கி நடந்தான். அவன் பேசாமல் போக, “யார் வாங்கினா எனக்கென்ன?” கழுத்தை நொடித்தவள், “வந்ததுக்கு பால் காய்ச்சி கொடுத்துட்டு போறேன்; நல்ல நேரம் ஏழரை மணி வரைதான். அதுக்குள்ள வீட்டுக்கு வா!” கடமைக்காக செய்கிறேன் என்று அவன் காதில் விழும் அளவுக்கு உரக்க சொன்னாள்.

மனம் நொந்து, கீழே வந்தவன், அமைதியாக காட்சியளிக்கும் பிள்ளையாரை பார்க்க துக்கம் தொண்டையடைத்தது. இதற்கு மேலும் மீராவை வர சொல்ல வேண்டுமா என்று தோன்ற, மறுகணம் யோசிக்காமல், அவளுக்கு போன் செய்தான்.

அவன் குரல் கேட்டதும், “என்ன எழுத்தாளரே… ஏற்பாடு எல்லாம் எப்படி இருக்கு… அம்மாவுக்கு பிடிச்சிருக்கா?” படபடவென்று பேசினாள்.

‘கடவுளே! இது என்ன சோதனை!” மனதில் குமுறியவன் “மீரா! நீ இங்க வராத! அத சொல்லதான் போன் செஞ்சேன்.” என்று குறுக்கிட்டான்.

அவன் பேச்சில் அதிர்ந்தவள், “ஏண்டா! ஏதாவது பிரச்சனையா?” தாழ்ந்த குரலில் கேட்க,

மனதளவில் காயப்படுத்தி, அவளிடம் உண்மையும் சொல்லாமல் மறைப்பது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என்று, “அம்மாவுக்கு நீ செய்த ஏற்பாடுகள்ல உடன்பாடு இல்ல; இந்த நிலையில நீ அவங்கள சந்திச்சா வெறுப்பும், கோபமும் தான் மிஞ்சும்… அதான்… புரிஞ்சிக்கோ டி!” முடிந்தளவுக்கு உண்மையை சொல்லி மன்றாடினான்.

கண்ட கனவு கண்ணில் கரைந்து வழிய, ஹரியின் இக்கட்டான சூழ்நிலையை கருதி, “பரவாயில்ல டா! உன் நிலமை எனக்கு புரியுது; என்ன பற்றி நெனச்சு கவலபடாத… எனக்கும் ஆஃபிஸ்ல நிறைய வேலை இருக்கு!” ஆறுதலாய் பேசி, அவனை தேற்றினாள்.

மறுகேள்வி எதுவும் கேட்காமல், பெருந்தன்மையுடன் பேசினாலும், அவளுடைய வலியும், வேதனையும், அவனால் உணர முடிந்தது.

பத்து நிமிடத்தில், மகன் வீடு திரும்பியதும், தான் ஜெயித்துவிட்டதாக எண்ணி, இறுமாப்புடன் பால் காய்ச்சினாள் வாசுகி. வானொலியில் ஃப்ம் ஒலிக்கவிட்டு, உரிமையோடு சமைக்கவும் துவங்கினாள். அதுவரை ஓயாமல் மீராவை ஏசிய உதடுகள், வானொலியில் ஒலித்த சுப்ரபாதத்தை உச்சரித்தது.

சிறிது நேரத்தில், வண்டியில் பொருட்கள் வந்து இறங்க, அதனை எடுத்துவைப்பதில், ஹரியின் கவனமும் திரும்பியது. ஒரு மணி நேரத்தில் ஹாலை நிரப்பிய பெட்டிகளில், எதை முதலில் திறப்பது என்று கண்ணால் அலச, ஜன்னல் மேல் வைத்திருந்த விளக்குகள் மீராவை அவன் கண்முன் நிறுத்தியது. அதை ஏக்கமாய் கையில் வைத்து தழுவவும்,

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா

கை நீட்டினேன் என்னைக் கரைசேர்க்கவா’ 

வானொலியில் பாடல் ஒலிக்கவும் சரியாக இருந்தது. கண்கள், தானாகவே சுவற்றிலிருந்த தந்தை முகம் பார்க்க, துக்கம் வெள்ளப்பெருக்கெடுத்தது. சோகத்தை மறைக்க, தன் அறைக்குள் புகுந்தவன், கையிலிருந்த விளக்குகளை பத்திரப்படுத்த, அலமாரியை திறந்தான். அதில் அவனுக்காக மீரா வைத்திருந்த பரிசு பொருளை பார்த்தவன், அவளை உடனே சந்திக்க வேண்டும் என்று முடிவுசெய்தான்.  

காலையில், வாசுகியை சந்தித்து பேசியதை, ராணி, மகேஷ் வீட்டில் சொல்ல, அது அப்படியே அரவிந்தன் காதிற்கும் எட்டியது. வாசுகி அவ்வளவு முற்போக்கு சிந்தனை கொண்டவள் அல்ல, என்று அரவிந்தன் முன்னமே அறிந்ததால், மகேஷ் சொன்னதில், அவனுக்கு பெரும் வியப்பு இல்லை.

ஆனால், பதினோறு மணியளவில், ஹரி அலுவலகம் வந்த போதுதான், பிரச்சனை பெரிது என்பதை உணர்ந்தான். காதலர்கள், அடுத்த உணவு இடைவேளையில் சாப்பிட்டு கொள்வதாக சொன்ன போது, காரணம் கேட்காமல், வழக்கமான கிண்டல் கேலி எதுவும் செய்யாமல், அவர்களை தனிமையில் விட்டான்.

தனக்காக ஓடோடி வந்தவனை கண்டதிலேயே மீராவிற்கு ஒரு பெருமிதப்பு. ‘இரண்டாவது இடைவேளையில் சாப்பிடலாம்!’ என்பதை தாண்டி, அவளிடம் அவன் எதுவுமே பேசவில்லை. அவன் பக்கத்தில் இருக்கிறான் என்ற அந்த எண்ணமே, அவளுக்கு, பணியில் கவனம் செலுத்த உற்சாகம் ஊட்டியது. அவளை நேரில் கண்டதில், அவனுக்கும் நிம்மதி பிறந்தது.

மதியம் கேண்டீனில், ஜன்னலோரம், இருந்த இருக்கையில், பேசுவதற்கு ஏதுவாய், எதிரெதிரே உட்கார்ந்தனர். வழக்கமாக கேண்டீன் உணவு சாப்பிடும் ஹரி, வீட்டு சாப்பாடு எடுத்து வந்திருந்தான்.

“என்னடா! அம்மா காலையிலேயே சமச்சு, டப்பா கட்டி கொடுத்திருக்காங்க போல!” அவன் பரப்பிய மூன்றடுக்கு கேரியரை பார்த்து கேட்டாள்.

“ம்ம்! சாம்பார் சாதம், உருளைகிழங்கு வருவல், அப்புறம் உனக்கு பிடிச்ச கேசரி… சாப்பிடுறியா” என்று அவள் பக்கம் தள்ள,

“கண்டிப்பா! மாமியார் சமையலாச்சே” கண்கள் விரித்து சொல்லி, பெரும் ஆவலோடு, சாம்பார் சாதத்தை ருசித்தாள். கேசரியை மட்டும் மொத்தமாக தன் பக்கம் இழுத்து கொண்டாள்.

(இவள் மகனுக்கு கூட கொடுக்காமல் கேசரியை சாப்பிடுவாள் என்று அறிந்திருந்தால், வாசுகி, அதை கட்டிக்கொடுத்திருக்கவே மாட்டாளோ என்னமோ)

அவள் பங்குக்கு, தான் கொண்டுவந்த தக்காளி சாதத்தை அவனுடன் பகிர்ந்து கொள்ள, அவள் எதுவுமே நடக்காதது போல், இயல்பாய் இருந்தது, அவன் மனதை உறுத்தியது.

“உனக்கு என் மேல கோபமே இல்லையா மீரா? உன் மனச எவ்வளவு காயப்படுத்தியிருக்கேன்!” பொறுக்கமுடியாமல் கேட்க,

“இதுல உன் தப்பு ஒண்ணுமே இல்ல ஹரி! உன் கைமீறி நடந்த விஷயம்…” அவள் சொல்ல, அவன் இல்லை என்று தலையசைத்து வெட்கத்தில் குனிந்தான்.

“நீ வரவேண்டாம்னு சொல்றப்ப வருத்தமாதான் இருந்துது… ஆனா எனக்காக நீ ஓடோடி வந்த பாரு…” அவன் நற்குணத்தை எடுத்து சொல்லி, அவன் கைகளை பற்றி மேலும் பேசினாள் “அம்மாவுக்கும், எனக்கும் நடுவுல மாட்டிகிட்டு நீ படற கஷ்டம் எனக்கு புரியாம இல்லடா!” கவலை கொள்ளாதே என்றாள்.

“அதுக்கில்ல… ஊருல அவங்க பேசினதெல்லாம் நான் உன்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணும்… இன்னைக்கு அதிகமாவே கோபப்பட்டாங்க… அதான் உன்ன வரவேண்டாம்னு…” அம்மாவின் மனநிலையை விளக்க முயல,

“அட எனக்கு ஒரு வருத்தமும் இல்லப்பா!” விட்டுத்தள்ளு என்று சொல்லி, “கேசரி… செம்மடா!” பாராட்டியபடி, விழுங்கினாள்.

“அதுல உனக்கு பிடிக்காத திராட்சையும் சேர்த்து சாப்பிட்டு பொய் சொல்றா மாதிரி தான், அம்மா குணத்த பொருட்படுத்தாத மாதிரியே பேசி சமாளிக்கற!” அவள் உண்மை உணர்வுகளை தனக்காக மூடி மறைப்பதாய் சொன்னான்.

அவன் உவமை சொன்னதை இரசித்து சிரித்தவள், “எழுத்தாளரே! கேசரியில எனக்கு திராட்சை பிடிக்காதுன்ற சின்ன விஷயமே அவங்களுக்கு தெரியல… நீங்கதான் என்னோட அருமைபெருமை எல்லாம் எடுத்து சொல்லியிருக்கணும்… தப்பெல்லாம் நீங்க செஞ்சிட்டு, அவங்கள குறை சொல்றிங்க” என்றதும், அவள் வெகுளிதனத்தை இரசித்து சிரித்தான்.

சில நிமிடங்கள் மௌனத்தில் நகர, “நான்கூட, உனக்கு வாங்கி வெச்ச பரிசு பொருள்ல பார்த்துட்டு தான், என்னோட சண்டபோட வந்தியோன்னு பயந்துட்டேன்.” கண்கள் தழைய அசடுவழிந்தாள்.

அவன் இதுவரை அந்த பேச்சை எடுக்காததால், அவன் அதை பார்த்தானோ இல்லையோ என்ற சந்தேகம் அவளுக்கு. தானாக வாய்விட்டு அதை சொல்லிவிடக்கூடாது என்று பொதுவாக கேட்டாள்.

“அதுவும் ஒரு காரணம்தான்… நான் இன்னைக்கு உன்ன சந்திக்க நெனச்சதுக்கு!” திடமான குரலில் பேச, தலை நிமிர்த்தி அவனை ஆவலாய் பார்த்தாள். “காலைலேந்து உன் மனசு நோகும்படி நடந்துக்கிட்டேனேன்னு தான் முதல் விஷயமா அத பற்றி கேக்கல…” விளக்கம் சொல்லி, அவளை பேச விடாமல்,

“உனக்கே தெரியுதுல, நான் கோபப்படுவேன்னு… இப்போ எதுக்கு எனக்கு லேப்டாப் எல்லாம்… அதான் தேவைப்படும் போது அரவிந்த் கிட்ட வாங்கிக்குறேனே… காச வீணாக்கிகிட்டு…” திட்டி அவளை முறைக்க,

“எனக்கு கொடுத்த சன்மான பணத்துல ஆசையா வாங்கி கொடுத்தா… காச வீணாக்குறேன்னு திட்டரியே…” சிறுபிள்ளை போல் அப்பாவியாய் முணுமுணுக்க,

“சன்மான பணம் உனக்கு எவ்வளவு வந்துதுன்னு எனக்கு தெரியும்… கையவிட்டு போட்ட மீதி பணம் வீண் செலவுதானே?” அவள் செய்தது தவறு என்றே வாதம் செய்ய,

“மீதி பணம், நம்ம கம்பனி அக்கௌன்ட்லேந்து தான் எடுத்தேன்.” தங்கள் ஜாயின்ட் அக்கௌன்டிலிருந்து எடுத்ததாக சொல்லி, ”உன் கலைக்கு தேவையான அசையா சொத்து இந்த லேப்டாப்… எப்படியும் நீதான் இந்த பணத்த திருப்பி கொடுத்திட போறியே…” நீண்ட விளக்கத்துடன் கண்சிமிட்டி அவனை மடக்கினாள்.

அவள் தொழில்ரீதியாக பேசுவதை மெச்சியவன், “ஓ! மேடம், இதெல்லாம் ஒரு வியாபார நோக்கத்தோட தான் செஞ்சியிருக்கீங்க…”மேலும் கீழுமாக தலையசைத்து, நமுட்டு சிரிப்புடன், “சரி… நாளைக்கு தொழில் நஷ்டமாகி, என்னால பணத்த திருப்பி கொடுக்க முடியலேன்னா, இந்த அசையா சொத்தோட மதிப்பாவது திருப்பி கொடுத்திடறேன்.” கடைசி வரியை அழுத்திச் சொல்ல,

எதிர்பக்கத்திலிருந்து ஸ்பூன் பறக்க தயாரானது. “அடப்பாவி! கடன் அடைச்சு இந்த இராஜகுமாரிய மீட்பேன்னு சொல்லாம, நழுவபாக்குற!” கண்கள் அகல சண்டையிட்டாள்.

வாய்விட்டு சிரித்தவன், “இவ்வளவு காஸ்ட்லியான இராஜகுமாரி எல்லாம், இந்த எழுத்தாளருக்கு கட்டுபடியாகதும்மா.” கிண்டல், செய்ய, அவன் இனி பேச்சுக்கு கூட பிரிவதை பற்றி யோசிக்க கூடாது என்று நினைத்தாள்.

“இல்லடா! உனக்கு அவசியமுன்னு நெனச்சு தான் வாங்கினேன். அது நம்முடையது! போதுமா!” ஆழ்ந்த குரலில் சொல்ல,

“புரியுது டி!” அவனும் தலையசைத்தான்.

பணிக்கு திரும்பும் வழியில், “இன்னைக்கு ஈவினிங், டின்னருக்கு வெளிய போகலாமா?” ஹரி மெல்லிய குரலில் கேட்க, அவனை புருவங்கள் உயர்த்தி பார்த்தாள் மீரா.

“பார்ரா… இன்னைக்கு என் ஆளு, வெளிய கூட்டிட்டு போறேன்னு எல்லாம் சொல்றாரு…” அருகில் நடந்தவனை இடித்து கிண்டல் செய்தாள்.

நடைக்கூடத்தில் அப்படியே நின்றவன், அவள் பக்கம் திரும்பி, “நீ எனக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்ச… நான் உனக்கு வலியும், ஏமாற்றத்தையும் தவிர எதுவுமே தரல… அதான்” மனமுறுகி வருந்த,

“நீ ஃபீல் பண்ணற அளவுக்கு ஒண்ணுமே நடக்கல… இதோ… இப்படி என்ன பார்க்க ஓடி வந்தியே…. அதுவே எனக்கு போதும்.” சொல்லி, அவன் தோளில் தட்டிக்கொடுத்து, “அம்மா, உனக்காக தான் ஊருலேந்து வந்திருக்காங்க… அவங்களோட நேரம் செலவிடு” என்று அழகாய் மறுத்தாள்.

அவள் பக்குவ பேச்சில், உறைந்தவன், மௌனமாய் நடக்க, “எழுத்தாளரே! ஆனா நான் இந்த சலுகைய வேறொரு நாள் பயன்படுத்திப்பேன்!” குறும்பாய் சொல்ல, அவன் பக்கென்று சிரித்தான்.

“கண்டிப்பா!” வரம் கொடுத்து, தன்னவளின் தலையை செல்லமாக தட்ட, அவன் கைப்பேசி ஒலித்தது.

புதிய எண் என்றதும், மெல்லிய குரலில், “ஹலோ! ஹரி ஹியர்!” என்றான். மறுமுனையிலிருந்து, “வணக்கம்! நான் சபரி பப்ளிகேஷன்லேந்து, ஸ்ரீராம் பேசுறேன். உங்க கதை, ‘தெவிட்டாத இன்பம்’ கதை சுருக்கம் படிச்சேன்…கதை களம் நல்லாயிருக்கு; நேருல வந்தா மத்தத மேற்கொண்டு பேசலாம்.” என்றதும், அவன் கண்கள் ஆனந்தத்தில் குளமானது.

அவர்களிடம், காலம்தாழ்த்தாமல் நாளையே வருவதாக சொல்லி, மேலும் ஐந்து நிமிடங்கள் மற்ற விஷயங்களை பேசி, அழைப்பை துண்டித்தான். ஒரு பக்க பேச்சிலிருந்தே எல்லாவற்றையும் புரிந்துகொண்டவள், பேரானந்தத்தில், தன்னவனை வளைத்து அரவணைத்து

“இனி உனக்கு எல்லாமே வெற்றி தான் டா ஹரி!” என்று பூரித்தாள்.

காலையிலிருந்து பல ஏமாற்றங்களை சந்தித்தாலும், இலட்சிய பாதையின் முதல் படியில், தன்னவள் அருகே இருப்பது அவனுக்கு ஈடில்லா மகிழ்ச்சியை தந்தது.

“இதே மாதிரி என்கூட எப்பவுமே இரு டி!” கண்ணீர் மல்க, அவள் தலையில் முட்டினான்.

நேராக, அரவிந்தன் அறைக்கு சென்று நற்செய்தியை பகிர்ந்து கொண்டனர். மகேஷையும் அழைத்து சொல்ல, நண்பர்கள் சந்தோஷத்தில் மூழ்கினார்கள்.

என் அன்பின் கனத்திற்கு ஈடாவாளா என்று தராசிலுள்ள எடைக்கல் போல் வாசுகி கர்வம் கொண்டாலும், சூழ்நிலைக்கேற்ப, தழைந்து போவேன் என்று மீரா செயலால் காட்டி, முள்ளாய் இருக்கும் தன்னவனின் நடுநிலை காத்துவிட்டாள். ஆனால் இது நிரந்தர தீர்வா…. பதில் சொல்லும், அவள், அவன் மீது வைத்த அன்பின் ஆழம்….

இலட்சிய பயணத்தின் முதல் படி ஏறி, பதிப்பாளருடன், பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும், ஹரி, முன்னே சென்றானா, தேங்கி நின்றானா, இல்லை பின்வாங்கினானா, பதில் சொல்லும், அவன் தன் இலட்சியத்தின் மேல் வைத்த அன்பின் ஆழம்…