அன்பின் ஆழம் – 13

“அட! என்னம்மா! இன்னும் சமையல் அறையிலேயே இருக்க! அவங்க எல்லாம் வரத்துக்குள்ள ட்ரெஸ் பண்ணிட்டு வா!” கேசரிக்கு ரவை வருத்து கொண்டிருந்த அகிலாவிடம் விரட்டாத குறையாய் சொன்னான் அரவிந்தன். அவன் அவசர பேச்சையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாத அகிலா, மெல்லிய சிரிப்புடன்,

“உன் நண்பர்கள் வர இன்னும் சொளையா ஒரு மணி நேரம் இருக்கு டா! அதுக்குள்ள, நான் பத்து தடவ தயாராகிடுவேன்.” தன் சுறுசுறுப்பை பற்றி பெருமையடித்து கொண்டாள்.

“இன்னும் சப்பாத்தி வேற செய்யணுமா?” பிசைந்து வைத்த மாவு கண்ணில் பட, பதறினான்.

“அதெல்லாம் அவங்க வந்தவுடனே சூடா போட்டுக்கலாம்!” பதறாதே என்று செல்லமாக, அவனை சமையலறையிலிருந்து விரட்டினாள்.

இவன் படுத்தும்பாட்டை கவனித்த ஹரி, “அவங்களுக்கு தெரியாததா? அவங்கள ஃப்ரீயா விடுடா… வா நம்ம கொஞ்ச நேரம் பால்கனியில உட்கார்ந்து பேசலாம்!” என்று சொல்ல,

“முதல்ல அத பண்ணு பா ஹரி!” அகிலா ஆமோதிக்க, ஹரி, அவன் தோள்களை பற்றி, இழுத்துச் சென்றான்.

ஹாலை கடப்பதற்குள், திரும்பியவன், “ஓ மறந்துட்டேன் மா! கேசரில முந்திரி மட்டும் போடு; திராட்சை வேண்டாம்; அப்படியே சக்கரை கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்! அது தான் மீராவுக்கு பிடிக்கும்! குறிப்புகள் தர,

“அட வாடா! துவரம் பருப்புக்கும் கடலை பருப்புக்குமே வித்தியாசம் தெரியாது; நீ அவங்களுக்கு சொல்லித்தறியா…” கிண்டல் செய்து நண்பனை தரதரவென்று இழுத்தான். வாரயிதழ் படித்து கொண்டிருந்த அசோகன், இவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டத்தை பார்த்து இரசித்தார்.

அரவிந்தன், திட்டமிட்டபடி அவன் பெற்றோரை சென்னைக்கு அழைத்து வந்திருந்தான். முதலில், வேறு பெரிய வீடு வாடகைக்கு பார்க்க எண்ணியவன், நண்பர்கள் அருகிலேயே இருக்க விரும்பி, ஏற்கனவே வசித்து வந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டிலேயே இருந்திட முடிவுசெய்திருந்தான். மகன் மனசு மாறுவதற்குள், வந்துவிட வேண்டும் என்று, ஹரி, மகேஷ் வீட்டிற்கு குடித்தனம் போகும் முன்னமே பெற்றோரும் புறப்பட்டு வந்துவிட்டனர்.

ஹரியின் அம்மா, வாசுகி, மகனிடம், திங்கட்கிழமை நல்ல நாள் என்று தேதி குறித்து கொடுக்க, அவன் அன்றே மகேஷ் வீட்டில் குடியேற திட்டமிட்டிருந்தான். வார இறுதி தாயுடன் செலவழித்துவிட்டு, அப்படியே வீட்டிற்கு தேவையான பொருட்களை ஊரிலிருந்து எடுத்துவர நினைத்தான். ஹரி கிளம்புவதற்குள், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்து, அப்படியே பெற்றோரிடமும், அறிமுகபடுத்த நினைத்தான் அரவிந்தன்.

பால்கனி சுவற்றில் சாய்ந்து, சுற்றி ஒரு முறை பார்த்து பெருமூச்சுவிட்டவன்,

“நாம ஒண்ணா இருக்கலாம்னு சொல்லிட்டு, என்ன மட்டும் மகேஷ் வீட்டுக்கு போக சொல்றியே டா!”வருந்தினான் ஹரி.

எதிரே நாற்காலியில் அமர்ந்தவன், “மீரா வந்து போக, அவங்க வீடு தானே டா வசதியா இருக்கும். அதான்…” காதலை காரணம் காட்டி மடக்க நினைக்க,

அதற்கு விரக்தியில் சிரித்தவன், “உனக்கு எப்பவுமே அவ மட்டும் தான் டா ஒஸ்தி… என்ன பற்றி யோசிச்சியா?” பொறாமை கொஞ்சம் தலைத்தூக்கியது.

“உனக்காக யோசிக்காம இருப்பேனா டா!” சொல்லி நண்பன் அருகில் வந்து தட்டிகொடுத்து, “இனி நீ அதிக நேரம் எழுதறதுல செலவிடணும்… தனிமையான இடம் இருந்தா வசதியா இருக்கும்… நான் உன் கூட இருந்தா தொல்லை தான்…” நிறைகளை மட்டுமே அடுக்க, ஹரி கண்களுக்கு, அதிலுள்ள குறைகள் மட்டுமே தெரிந்தது.

“நீ எனக்கு தொல்லையா…. சீ போடா!” பொய் சொல்வதற்கும் ஒரு அளவு உண்டு என்பதை போல் சலித்து கொள்ள,

“சரி! இப்போ என்ன கெட்டு போச்சு; மகேஷ் சொன்னா மாதிரி, அந்த வீடு நமக்கு பேச்சுலர் லைஃப் அனுபவிக்க ஒரு இடம். அடிக்கடி வந்து உன்னோட இருக்கேன், போதுமா!” என்று சொல்ல, ஹரி முகம் மலர்ந்தது.

“அப்புறம்… மறந்துட்டேன் பாரு …” அரவிந்தன் தலையில் தட்டி கொண்டு,

“மகேஷ் உன் வீட்டுக்கும் சேர்த்து இன்டர்னெட் இணைப்பு கொடுத்துட்டானாமா… அதனால, நீ என் லேப்டாப் எடுத்துட்டு போ… அங்கேயே வெச்சுக்கோ சரியா!” என்று தகவல் சொல்ல, மீண்டும் ஹரி முகம் வாடியது.

“முதல்ல எந்த பதிப்பாளர் ஆவது தொடர்பு கொள்ளட்டும்…. கடிதம் அனுப்பி விளையாட்டு போல இத்தோட மூணு வாரமாச்சு….” நம்பிக்கை இழந்தவனாய் பேச,

நண்பன் வருத்தம் புரிந்தும், அதை வெளிக்காட்டாமல், “அட என்னடா! மூணு வாரம் தானே ஆச்சு; மூணு வருஷமா நடக்கவே நடக்காதுன்னு நெனச்ச…. இப்போ துவங்கிட்ட… இனி எல்லாம் ஒண்ணொண்ணா சரியான நேரத்துல வரும் பாரு…” மனம் தளர வேண்டாம் என்று சொல்ல, ஹாலில் பேச்சு சத்தம் கேட்டது.

நண்பர்கள் வந்துவிட்டார்கள் என்று உணர்ந்து, “பாரு… முதல்ல உன் ஆளு வந்துட்டா…. அடுத்து பதிப்பாளர் வருவார் ….” அரவிந்தன் கோர்வையாய் பேச, ஹரி கவலை மறந்து சிரித்தான்.

மகேஷும், மைதிலியும், வரும் வழியில் மீராவை அவர்கள் காரிலேயே அழைத்து வந்ததால் அனைவரும் ஒரே நேரத்தில் வந்திருந்தனர். நண்பர்கள் பால்கனியிலிருந்து வருவதற்குள், அவர்களே, அரவிந்தன் பெற்றோரிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.

அரவிந்தன் இன்னும் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஊரிலிருந்து கொண்டுவராத நிலையில், அனைவருக்கும் அமர போதுமான இருக்கைகள் இல்லை. அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்தாத நண்பர்கள், தங்கள் வீடு போல் எண்ணி, எளிமையாக, தரையில் சப்பளமிட்டு அமர்ந்தனர்.

அகிலா அவர்களுக்கு, அழகிய கண்ணாடி டம்பளரில், பழச்சாறு கொண்டுவந்து உபசரித்தாள். அரட்டை அடித்து கொண்டே அதை பருகினார்கள். மகன் முகத்தில் இருந்த உற்சாகத்தை இரசித்தவள், சமையலறைக்குள் புகுந்தாள். நண்பர்கள் அரட்டை அடிக்க, அதை வேடிக்கை பார்த்தார் அசோகன்.

“இன்னும் ரெண்டு நாள்தான் மீரா! அதுக்கப்புறம், ஹரிய பார்க்க எங்க வீட்டுக்கு தான் வரணும்.” எடுத்த எடுப்பிலேயே மைதிலி, மீராவை ஓட்ட,

“ஆமாம் மைதிலி! அடுத்த வாரம் போடானா கேட்க மாட்டேன்றான். விட்டா போறும்னு ஓடறான்!” அரவிந்தனும் கூட சேர்ந்து கிண்டல் செய்ய,

“திங்கட்கிழமை நல்ல நாளுன்னு அம்மா சொன்னாங்க! அவ்வளவுதான்….நீங்களா எதுவும் கற்பனை செய்துகாதீங்க, சரியா!” சீண்டாதீர்கள் என்று ஹரி எச்சரிக்க, அரவிந்தன் சுதாரித்து கொண்டான்.

“அதுக்கில்ல டா! ஆஃபிஸ்ல, மீட்டிங்க் இருக்கறதுனால, என்னால லீவு போட முடியாது. அடுத்த வாரமுன்னா உனக்கு ஷிஃப்டிங்குல கூடமாட உதவலாமுன்னு, அப்படி சொன்னேன்” தெளிவுபடுத்தினான்.

உடனே மைதிலி, “என்னங்க! நீங்க லீவு போட்டு, ஹரிக்கு ஒத்தாசையா இருக்கலாமே!” கணவனை இழுத்துவிட, அதற்கு பெருமூச்சுவிட்டவன்,

“அவன் மீட்டிங்க்கு கூப்பிடறதே எங்க டீம தான்….” முதலாளி நண்பனை பார்த்து, “ரியல் எஸ்டேட் மார்க்கெட் டௌன் ஆனா, வீட்டுக்கடன் கொடுக்குற எங்களால என்ன செய்ய முடியும்…”புலம்பி, “இவனுக்கு படம் போட்டு காட்ட நானும் அவசியம் போகணும்.” ப்ரெஸன்டேஷன் கொடுக்க வேண்டும் என்பதை நீட்டி முழக்கி சொன்னான்.

பேச்சுவார்த்தை, அலுவலகம் சம்மந்தமாக போகாமல் திசைதிருப்ப, “நீயாவது வாடி; பாவம் ஹரி! தனியாவா பால் காய்ச்சுவான்?” மைதிலி, மீரா பக்கம் திரும்பி சொல்ல, மீரா ஹரியை பார்த்தாள். தேவையில்லாமல் சந்திக்க வேண்டாம் என்று அவன் சொன்னது நினைவுக்கு வர, “எனக்கும் முடிக்க வேண்டிய பயிற்சி நிறைய இருக்கு…” என்று சொல்லி மழுப்ப, அதில் மைதிலி சமாதானமானலும், நண்பர்கள் அவள் சொன்னது வெறும் சாக்கே என்று உணர்ந்தனர்.

இவர்கள் பேச்சை கலைப்பது போல், அகிலா, உணவு அருந்த அழைத்தாள். பெண்கள், பதார்த்தங்களை எடுத்துவர, அவளுக்கு உதவ, ஐந்து நிமிடத்தில், எல்லோரும் வட்டமாக உட்கார்ந்து, சாப்பிட தொடங்கினர்.

“அடடா! வாசனையே மூக்க துளைக்குதே! எத முதல்ல சாப்பிட!” வகைவகையாய் கண்முன் இருந்த உணவை பிரம்மிப்பாய் பார்த்தபடி, மகேஷ் வினவ,

“மைதிலி சாப்பாட விடவா ருசியா இருக்க போகுது?” அரவிந்தன் கேலி செய்தான்.

தட்டில் கொஞ்சம் பகோடாவும், சாலடும்  போட்டுகொண்டவன், “அட போடா! அவளுக்கு இதுல பாதி பதார்த்தத்தோட பேரு கூட தெரியாது.” மனைவியை சீண்ட,

“அப்ப இந்த தொப்பை தொந்தி எல்லாம் எங்கிருந்து வந்தது!” வம்பாக அவன் பெருத்த வயிற்றை தட்டி, கேட்டாள் மீரா.

அதற்கு அவன் அசடுவழிய, “நல்லா கேளு மீரா!” மைதிலியும் சேர்ந்து ஒத்தூதினாள். மேலும் கிண்டலும் கும்மாளமுமாக விருந்து தொடர, மூன்றாவது முறையாக, கேசரி உண்டவள், “ஆன்டி! கேசரி அட்டகாசம்!” பாராட்ட,

கண்கள் சிரிக்க மகனை பார்த்தவள், “உனக்கு பிடிச்சா மாதிரி செய்ய, அரவிந்த் தான் சொல்லிகொடுத்தான், மீரா!” அகிலா பதிலளித்தாள். நண்பனின் பாசத்தை கண்ணால் பாராட்ட, அவள் கைபேசி ஒலித்தது.

திரையில், ரமேஷ் என்று படிக்கவும், நண்பர்களும் சேர்ந்து பேசட்டும் என்று, அழைப்பை இணைத்தவள் ஸ்பீக்கரில் போட்டாள். அவள் ஹலோ சொல்ல கூட காத்திருக்காதவர்,

“மீரா! எங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கா!” குரலில் பெருமை ததும்ப அறிவிக்க, “வாழ்த்துக்கள்!” என்று கோஷம் போட, அந்தயிடமே திருவிழா கோலம் பூண்டது.

தோழியின் உடல்நலம் பற்றி விசாரிக்க, மீரா பல கேள்விகளை அடுக்க, “சும்மா தொணதொணன்னு பாட்டியாட்டம் கேள்வி கேட்டுகிட்டு,” கண்கள் சுருங்க கேட்டு, அவளிடமிருந்து கைப்பேசியை பிடுங்கினான் அரவிந்தன்.

அதற்கு உதட்டை சுழித்தவள், சாப்பாட்டில் கவனத்தை திருப்பினாள். நண்பர்கள், ரமேஷுடன் மாறி மாறி அரட்டையடித்தனர். மகேஷ் அவரிடம், குழந்தையை பார்க்க, ஊருக்கு வரும் தன் திட்டத்தை சொல்ல,

“உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல்; நாங்களே சீக்கிரம் சென்னைக்கு வந்துடுவோம்! நீங்க மருமாளுக்கு தாய்மாமன் சீரோட தயாரா இருங்க!” உரிமை கொண்டாட,

“அது என்ன கேர்ள் பிரெண்ட்ஸ் எல்லாரையும் சகோதரி முறை வெச்சு சொல்றது… ஏன் உங்க தம்பியா முற செஞ்சா உங்களுக்கு கசக்குமா?” அரவிந்தனும் உரிமையோடு கொந்தளிக்க, ரமேஷ் சரண்டரானார்.

இவர்கள் வேடிக்கை பேச்சை இரசித்து அனைவரும் சிரித்தனர். மகனுக்கு இவ்வளவு நெருங்கிய நண்பர்களா என்று மலைப்பில், நடப்பதை எல்லாம் கண்டு களித்தனர் அவன் பெற்றோர்.

கீதாவிற்கு மயக்கம் தெளிந்தவுடன் பேசுவதாக கூறி, அழைப்பை துண்டித்தான் அரவிந்தன். வேடிக்கை பேச்சு, மேலும் நீடிக்க, அரவிந்தன், ஃப்ரிட்ஜிலிருந்து, ரசகுல்லா டின் ஒன்று எடுத்து வந்து, குழந்தை பிறந்த நற்செய்தியை கொண்டாடுவதாக, சொல்லி பரிமாற, மேலும் சாப்பிட வயிற்றில் இடமில்லை என்று அனைவரும் தட்டிக்கழித்தனர்… மீராவை தவிர.

அவன் அன்பாக ரசகுல்லா ஒன்றை, அவள் வாயில் ஊட்டிவிட, மீரா கண்கள் ஹரியை பார்த்தது. “பாரு டா அரவிந்தா! அவன் எப்படி முறைக்கிறான்.” சிறுபிள்ளை போல் அவன்மேல் புகார் சொல்ல,

“அவன் கடக்கறான்!” பொருட்படுத்தாதே என்று சொல்லி, நண்பனை பார்க்க திரும்பினான் அரவிந்தன். ஆள்காட்டி விரலை உயர்த்தி காட்டி, “ரமேஷுக்கு சொன்னது தான் உனக்கும்…. மீராவ சிஸ்டர் அப்படி இப்படின்னு கூப்பிட சொன்ன….” என்று மிரட்ட,

“நான் சொன்னா மட்டும் நீ அப்படியே கேட்டுட போற!” அவனும் பொய்கோபம் கொள்ள, சங்கோஜமின்றி, மேலும் இரண்டு ரசகுல்லாக்கள் விழுங்கினர் நண்பர்கள்.

ஆண்கள் சிறிது நேரம் நாட்டு விவகாரம் பேச, மீராவும் மைதிலியும், அகிலாவிற்கு சமையலறையில் உதவி செய்தனர். மகனுக்கு நல்ல நண்பர்கள் அமைந்ததில், தான் திருப்தி கொண்டதாக கூறி, மனைவியும் நல்லவிதமாக அமைந்தால் போதும் என்று தன் ஆதங்கத்தை பகிர்ந்துகொண்டாள். மைதிலி, கவலை கொள்ள வேண்டாம் என்று சொல்ல, மீராவின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது என்னமோ உண்மைதான்.

அவர்களை வழியனுப்பிவிட்டு வந்த அகிலா, ஒன்றை மட்டும் நன்றாக புரிந்துகொண்டாள். மருமகளாக வருபவள், குடும்பத்தை மட்டும் அனுசரித்தால் போதாது; அவன் நண்பர்களுடனும் சகஜமாக பழகவேண்டியதும் மிகமிக அவசியம் என்று.

“மீரா! என்ன கோயம்பேடு பஸ் ஸ்டாப்புல இறக்கி விடு!” கைப்பேசியில் அவள் குரல் கேட்டதும், அதிகாரமாய் சொன்னான் ஹரி.

அவள் கேட்ட எதிர்கேள்விகளுக்கு பதில் சொல்லாது, நேரில் வர சொல்லி, அழைப்பை துண்டித்தான்.

‘முசுடு எழுத்தாளர்!’ முணுமுணுத்து கொண்டே மகிழ்சியாக புறப்பட்டாள்.

பேருந்து நிறுத்தம் வரும் வரை, எதையும் சொல்லாதவன், பயணிகள் காத்திருக்கும் இடத்தில் வந்து அமர்ந்ததும், அவள் கையில் ஒரு பட்டியலை நுழத்தினான்.

‘மஞ்சள், குங்குமம், பூ, பழம், பால்….’ என்று அவள் உரக்க படிக்க, “அம்மா இதெல்லாம் வாங்கி வெக்க சொன்னாங்க” அவன் சொல்ல,

“என்னையா?” கண்கள் விரித்து கேட்டாள். அதற்கு பதிலளிக்கும் விதமாக, முறைத்தவன்,

“எல்லாம் உனக்கு விளையாட்டா?” என்று கடிந்து, “திங்கட்கிழமை பால் காய்ச்ச, என்ன வாங்கிக்க சொன்னாங்க… நான் ஊருலேந்து வந்து வாங்க கஷ்டமா இருக்கும்… அதனால நீ இதெல்லாம் வாங்கி, புது வீட்டுல வெச்சுடு. ராணி அக்கா கிட்ட ஒரு செட் சாவி இருக்கு.” முதலாளி, பி.ஏ வுக்கு வேலை சொல்வது போல் விளக்க,

அருகில் இருப்பவனை செல்லமாக இடித்து, “இதெல்லாம் காதல் இல்லையா, எழுத்தாளரே?” கேட்டு கண்சிமிட்டினாள்.

அவளை மீண்டும் முறைத்தவன், சற்று தள்ளி அமர்ந்து, “எனக்கு உதவியா இருக்கணும்னு நீ சொன்னதுனால கேட்டேன்.” திடமாக சொல்ல, “ஒத்துக்கமாட்டியே!” உதட்டை சுழித்தவள், மீண்டும் பட்டியலை படித்துகொண்டாள். அதை மடக்கிவைத்து,

“அம்மா ஏண்டா பால் காய்ச்ச வரல்ல?” அக்கறையாய் வினவினாள்.

“வரதாதான் இருந்தாங்க டி! திடீர்னு அத்தைக்கு உடம்புக்கு முடியல்ல; தள்ளி போட வேண்டாம்னு என்னையே பார்த்துக்க சொல்லிட்டாங்க!”

“ம்ம்!” தலையசைத்தவள், “சரி! உங்க குலதெய்வம் யாரு?” என்றாள்.

“தெரியல! எதுக்கு கேக்குற?” குழப்பமாய் அவளை பார்க்க,

“பரவாயில்ல; உங்க அப்பா போட்டோ இருந்தா கொடு!” மேலும் புதிர் போட்டாள்.

 “எதுக்கு?” என்று அவன் கேட்க, அவன் கேள்வியை பொருட்படுத்தாமல் கொடுக்க சொல்லி வற்புறுத்தினாள். அவனும் தன் வாலட்டில் இருந்த ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோ கொடுக்க, அமைதியாக தன் பையில் வைத்து கொண்டாள்.

“என் போட்டோ கேட்டா ஒரு நியாயம் இருக்கு, எங்க அப்பா போட்டோ வெச்சுகிட்டு என்ன பண்ண போற?” குறும்பாக கேட்க,

“பேச்சுல காதல் கொஞ்சம் எட்டிப்பார்க்குதே…இது காதல்னு ஒத்துக்கோ; நான் காரணம் சொல்றேன்.” வம்பாக பேசி, வலையில் சிக்க வைத்தாள்.

“அதான் சொல்லிருக்கேனே டி… பிடிக்காம இல்ல… பயமா இருக்கு…”பல பயங்கள் மனதில் ஓட,

‘சரி! சரி! சொல்றேன்…புது வீட்டுல முதல் முதல்ல குலதெய்வம் போட்டோ வெச்சா நல்லதுன்னு சொல்லுவாங்க… உனக்கு தெரியலனு சொன்ன…அதான்…உன் எழுத்துக்கு ஊக்கமா இருந்த உங்க அப்பா போட்டோ வெக்கலாம்னு கேட்டேன்.” விளக்கம் சொல்ல, அவள் அன்பில் உறைந்து போனான் ஹரி.

இவள் அன்பை என்னவென்று சொல்வது என்று அவன் திணற, அவளே மேலும் பேசினாள்.

“சரி! இன்னும் என்ன பயம் டா உனக்கு?” திடமாய் கேட்க, மூன்று வாரமாகியும், பதிப்பாளர்களிடம் இருந்து பதில் வரவில்லை என்று வருந்தினான்.

அவன் முகம் பார்க்க திரும்பியவள், “மூணு வருஷமா எத்தனையோ கதவுகள் திறந்திருக்கும்; அப்போ எல்லாம் கண்ண மூடிகிட்டு, இப்போ கவல படற… பொறுமையா இரு…நல்லதே நடக்கும்!” கம்பீரமாய் சொல்லி அவன் வாயை அடைத்தாள்.

நேற்று அரவிந்தனும் இவளை போலவே சொன்னது நினைவுக்கு வர, ‘இவங்க ரெண்டு பேரும் எப்படி தான் மாடுலேஷன் மாறாம ஒரே மாதிரி பேசுறாங்களோ’ என்று மனதில் வியந்தான்.

பேருந்து புறப்பட நேரம் நெருங்க, இருக்கையிலிருந்து எழுந்தவன், “உனக்கு முடியும்னா திங்கட்கிழமை காலையில பால் காய்ச்ச வா…” மெல்லிய குரலில் அழைக்க,

“எழுத்தாளரே! கொள்கை எல்லாம் காத்துல பறக்கறா மாதிரி இருக்கே!” அவள் கிண்டல் செய்ய,

“கற்பனையில ரொம்ப மிதக்காத! இது லட்சியத்த நோக்கி நான் வெக்குற முதல் அடி… நீ கூட இருக்கணும்னு கேட்டேன்.” சிரமப்பட்டு திடமான குரலில் சொல்ல,

“ஒத்துக்குமாட்டியே! முசுடு எழுத்தாளர்!” செல்லம் கொஞ்சி, அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.

காதலில் அவளை மிதக்க வைக்க அவனுக்கும் ஆசைதான். பெற்றோர் சம்மதிக்காமல், எங்கே காதல் நிறைவேறா கனவாக போய்விடுமோ என்ற பயம் அவனுக்கு.

ஞாயிற்றுக்கிழமை அவன் சொன்னதை செய்தாள்; சொல்லாததையும் செய்தாள். அவன் அப்பாவின் போட்டோவை, ஸ்டுடியோவில் கொடுத்து பெரிதாக்கி, லேமினேட்டும் செய்தாள். பட்டியலில் இருந்த பொருட்களை வாங்கியவள், கூடுதலாக, அவளுக்கு மிகவும் பிடித்த பிள்ளையார் படமும், இராமர் பட்டாபிஷேக படமும் வாங்கியிருந்தாள். ஜோடியாக பித்தளை விளக்குகளும், கொஞ்சம் இனிப்பு பண்டங்களும் வாங்கினாள்.

மாலை ஆறு மணியளவில் இரு கையிலும் பெரிய பைகளில் பொருட்களை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்தவளை, கண்ட ராணிக்கு ஆச்சரியமாக இருந்தது. ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டிய பொருட்களை ராணியிடம் கொடுத்துவிட்டு,

“அக்கா! நாளை பூஜைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துட்டு, ஒரு மணி நேரத்துல கிளம்பறேன், சரியா!” என்றாள்.

“பரவாயில்லையே! காதலிக்கும் போதே இவ்வளவு பொறுப்பா இருக்கையே!” பாராட்டி, சாவியை கொடுத்தாள். ராணி, தானும் உதவ முன்வர, மென்மையாக மறுத்தாள். தானே எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்ற உற்சாகம்.

ஹரி குடியேறும் வீட்டில் வலது கால் எடுத்து வைத்து பூரிப்புடன் நுழைந்தாள். காலி வீட்டை சுவாசித்தபடி வலம் வந்தவள், ஹரியுடன் பல சுகமான தருணங்களை கழிப்பதை பற்றி கற்பனை செய்துகொண்டாள்.

பூஜை செய்வதற்கு ஏற்ப, வாங்கி வந்த கடவுள் படங்களையும், மாமனாரின் படத்தையும், கிழக்கு முகமாக வைத்து, கோலமிட்டாள். விளக்குகளுக்கு, பொட்டு வைத்து, திரியும் போட்டு, தயார் நிலையில் வைத்தாள்.

வீட்டின் வாசலிலும், நடுபகுதியிலும், காவி கலந்த கோலம் வரைந்து, வாங்கி வந்த தோரணங்களையும் தொங்கவிட்டு அலங்கரித்தாள்.

சமையலறையிலும், பால் காய்ச்ச வேண்டிய எல்லாவற்றையும் தயார் நிலையில் வைத்து, பெருமூச்சுவிட்டவள், ஹரியின் அறையை நோக்கி நடந்தாள்.

அவனுக்காக, தனக்கு கிடைத்த சன்மான தொகையில் முன்பே வாங்கி வைத்த பரிசு பொருளை, அவன் கண்ணில் படும் வண்ணம், அலமாரியில் நடு தட்டில் வைத்து, புன்னகைத்தாள்.

‘டேய்! முசுடு எழுத்தாளரே…எப்படியும் உனக்கு தெரியாம இந்த ஏற்பாடுகளை செய்ததுக்கு திட்ட போற! இதுக்கும் சேர்த்து திட்டு!’ தனக்குள் முணுமுணுத்து கொண்டு, அலமாரியின் கதவை சாற்றினாள்.

இரவு உணவுக்கு பின், தன் அறைக்குள் வந்தவள், நாளை என்ன உடை அணிவது என்று குழம்பினாள். புடவையா சுடிதாரா என்று மனசுக்குள் பட்டிமன்றம் நடத்த, அவள் கைப்பேசி ஒலித்தது. ஹரி என்றவுடன், முகம் எல்லாம் வெட்கம். தன்னவனையே கேட்கலாம் என்று எடுத்து பேச,

“மீரா! நம்ம திட்டத்துல ஒரு சின்ன மாற்றம்.” இரகசியமாய் அவன் பேச, அவள் மனம் பதறியது.

“அம்மாவும் திடீர்னு வரேன்னு சொல்லிட்டாங்க. அதனால கார் ஏற்பாடு செய்து அழைச்சிட்டு வரேன். பொருட்கள் எல்லாம் வண்டியில நாளை காலை வந்துடும்.” தகவல் தர, அவள் என்ன பேசுவது என்று புரியாமல், “ம்ம்” மட்டும் கொட்டினாள்.

“நாளைக்கு ஒன்பது மணிக்கு மேல வா; சீக்கிரம் வராதன்னு சொல்ல தான் போன் செஞ்சேன்” என்று சொல்ல,

“ஒண்ணும் பிரச்சனையாகாதுல ஹரி!” கவலை கொண்டாள்.

“பார்த்துக்கலாம் டி! நாம மட்டும்தானே! உன்னையும் அம்மா கிட்ட அறிமுகம் செஞ்சா மாதிரி இருக்கும்.” அவனே நம்பிக்கையுடன் சொல்ல, அவளுக்கு ஆறுதலாய் இருந்தது.

சரி என்று சம்மதம் சொன்னவள், மாமியாரை முதன் முதலாக சந்திக்க இருப்பதால், புடவையே கட்டலாம் என்று முடிவெடுத்தாள்.

தாயா தாரமா, தராசின் முள் போல் நிற்கும் ஹரி, நடுநிலை காப்பானா,

தாய் பாசமென உரிமை கொண்டாடும், அவள் பக்கம் சாய்வானா -இல்லை

தாரமாகும் முன்னமே தனக்காக பார்த்து பார்த்து செய்யும் இவள் பக்கம் சாய்வானா

பதில் சொல்லும், அவன், அவர்கள் மீது வைத்த அன்பின் ஆழம்…