அன்பின் ஆழம் – 12
மதிய நேரம் உணவு அருந்த வந்த அரவிந்தன், வேண்டுமென்றே, மகேஷ் அருகில் அமர்ந்து, மீராவுக்கு, ஹரி அருகில் உட்கார இடம் கொடுத்தான். காலையில், அவன்தான் ஹரியை, மீரா வீட்டில் இறக்கிவிட்டது. அவனை பொருத்தவரை, இன்று தான் ஹரி மீராவின் பெற்றோரை முதல் முறையாக சந்தித்து தங்கள் காதலை பகிர்ந்து கொண்டதாக நினைத்திருந்தான். காதலர்கள் அன்று நடந்த கசப்பான நிகழ்வுகளை அரவிந்தன் காதில் போடவே இல்லை.
“என்னடா ஹரி! மிஸ்டர் வரதன், என்ன சொல்றாரு பொண்ண தருவாரா மாட்டாரா?” கிண்டலாக கேட்டான்.
இதை பற்றி எல்லாம் அறியாத மகேஷ், “என்னடா ஹரி! மீரா அப்பாவ பார்த்து பேசினியா?” கண்கள் விரித்து ஆச்சரியமாக வினவினான்.
அதற்கு, அரவிந்தனே சுருக்கமாய் பதில் சொல்லி, அவர்கள் காலையில் அரைமணி நேரம் தாமதமாக வந்ததையும் அழுத்தமாக சொல்லி, மீராவை நக்கலாக பார்த்தான். அவன் முகபாவனையை இரசித்த ஹரி,
“எல்லாம் நல்லா போச்சு டா! மேலோட்டமாக பதிலளிக்க,
“வெரி குட் டா மச்சான்! லவ் பண்ண லைசென்ஸ் கிடைச்சாச்சுன்னு சொல்லு மீரா” இருவரையும் ஓட்ட,
“அத ஏன் கேக்குற மகேஷ்! எங்கப்பா சம்மதம் இல்லாம, கல்யாணம் இல்ல, காதலிக்கவே மாட்டேன்னு வசனம் பேசினான் டா நம்ம எழுத்தாளர்” போட்டு கொடுத்து, ஓரக்கண்ணால் அவனை விழுங்கினாள்.
அதற்கு உரக்க சிரித்தவன், “அடப்பாவி! உனக்கே இது ரொம்ப ஓவரா தெரியல?” மேலும் அவனை கிண்டல் செய்தான்.
ஹரியின் பக்குவமான குணம் அறிந்த அரவிந்தன், “போதும் நிறுத்துங்க! அவன் காரணம் இல்லாம எதையும் பேசமாட்டான்” என்று நண்பனுக்கு பரிந்து பேச,
“நீ உன் நண்பனுக்கு தான் எப்பவும் ஜால்ரா அடிப்ப!” உதட்டை சுழித்தாள் மீரா.
அவள் விடாமல் புலம்புவதை கண்ட ஹரிக்கு, எரிச்சலானது. “அதான், ஆஃபிஸ்லையும், தேவைபடறப்ப வீட்டுக்கு போகும் போதும் பேசிக்கலாமுன்னு சொன்னேன்ல. “அவள் முகம் பார்த்து நினைவூட்டினான்.
கிண்டல் ஜோரில் இருந்த மகேஷ், “வெளிய சந்தோஷமா ஊர் சுத்துறத விட்டுட்டு, ஆஃபிஸ்லையும், வழியலையும் பார்த்து பேசுறது எல்லாம் காதல்னு சொன்னா நியாயமா டா! பாவம் மீரா நீ?” கலாய்க்க, ஹரியின் எரிச்சல், கோபமாய் உருவெடுத்தது.
“பார்க், பீச்சுன்னு சுத்துறது தான் காதல்னா மன்னிச்சுக்க மீரா… எனக்கு அதெல்லாம் தெரியாது!” உரக்க சொல்லி, உணவு அருந்தாமலேயே அங்கிருந்து வேகமாக நடந்தான்.
பேசியதுக்கு வருந்தி, மகேஷ் அவனை அழைக்க, அதை பொருட்படுத்தாமல் வெளியேறினான் ஹரி.
“ஏண்டா மகேஷ்! அவன பற்றி தான் உனக்கு தெரியுமே” அரவிந்தன் வருந்த, மகேஷ், மீராவிடம் மன்னிப்பு கேட்டான். அவன் தவறு ஒன்றும் இல்லை என்று உணர்ந்த, மீரா இயல்பாக இருக்க முயன்றாள்.
“அட ஃபீல் பண்ணாத டா! அவன் கோபம் எல்லாம் அஞ்சு நிமிஷம் தான்” சொல்லி நண்பனை தேற்றி, “முதலாளி நண்பரே!” அரவிந்தனை அழைத்து, “என் ஆளு சாப்பிடாம போறான். நாங்க ரெண்டுபேறும், ஜோடியா அடுத்த லன்ச்சுல சாப்பிட்டுக்குவோம்…. வேல செய்யாம, ரெண்டு லன்ச் பிரேக்குல லவ் பண்றோம்னு நீங்க புரளி பேசாதீங்க!” கிண்டலாக சொல்லி, சமாளித்தாள்.
அவள் எதார்த்தமாக இருப்பது, நண்பர்களுக்கு ஆறுதலாய் இருந்தது.
“சரி! சரி! என் நண்பன் மனசு கோணாம நடந்துக்கோ!” அவனும் கேலியாக பேச,
“அதான் அவன் உன்கிட்ட ஒண்ணு விடாம எல்லாத்தையும் ஒப்பிப்பானே;” அவனிடமே கேட்டு தெரிந்துகொள் என்றாள்.
“அவன் சொல்லித்தான் தெரியணும்னு இல்ல; அவன் முகத்த பார்த்தாலே, நீ எந்த அளவுக்கு அவன கொடும படுத்தினன்னு எனக்கு தெரிஞ்சிடும்” அவர்கள் நட்பின் ஆழத்தை பற்றி பெருமையடித்து கொள்ள, “ம்ம்… சரி! சரி!” என்று உதட்டை சுழித்தவள், அங்கிருந்து நகர்ந்தாள்.
இருக்கைக்கு திரும்பும் வழியில், ஹரியிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று தோன்றியது மகேஷுக்கு. ஆனால், மீரா எல்லாவற்றையும், பார்த்து கொள்வதாக சொல்ல, மீண்டும் அவன் கோபத்தை கிளற வேண்டாம் என்று எண்ணத்தை கைவிட்டான்.
“சாப்பிட வா!” அதிகாரமாய் சொல்லி, ஹரியை உலுக்கினாள்.
“நீ பேசினதுலேயே எனக்கு வயிறு நிரம்பிடுச்சு!” கோபம் குறையவில்லை என்று ஜாடை பேச்சில் உணர்த்தினான்.
அக்கம் பக்கம், சக ஊழியர்கள் இருப்பதை நினைவில் கொண்டு, “நீதான டா, எதுவாயிருந்தாலும் லன்ச் பிரேக்குல பேசலாமுன்னு சொன்ன; இப்போ நீ வரலேன்னா, இங்கேயே பேச வேண்டியதா இருக்கும்.” இரகசியமாய் எச்சரித்து,
“உனக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிட்டு காத்திருப்பேன்; ஒழுங்கா வா!” மிரட்டாத குறையாய், சொல்லி நகர்ந்தாள்.
‘இம்சை டி உன்னோட!’ முணுமுணுத்து கொண்டே அவளை பின்தொடர்ந்தான்.
கண்ணில் கோபம் குறையாமல் வந்து உட்கார்ந்தான் ஹரி. அவளே பேசத் தொடங்கினாள். “அவங்க கிட்ட நான் எதார்த்தமாதான் டா சொன்னேன். அவங்களும் நம்மள சும்மா தான் ஓட்டினாங்க. இருந்தும் உனக்கு ஏன் கோபம் வந்துதுன்னு யோசிச்சு பாரு ஹரி!” சொல்ல மௌனமாக சிந்தித்தான்.
எதிரில் இருக்கும் அவன் கைவிரல்களை கோர்த்து, “புரிஞ்சிக்கோ ஹரி! இப்போ நமக்குள்ள இருக்கற உறவு வேற… அவங்க நம்ம நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும், நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல நடக்குற எல்லா விஷயத்தையும் அவங்க கிட்ட பகிர்ந்துக்க முடியாது!” விளக்கி பெருமூச்சுவிட்டவள் மேலும் பேசினாள்.
“அதுக்காக, மறைக்கணும்னு சொல்லல… ஒரு விஷயம் சொன்னா, அவங்க நம்ம மேல இருக்கற அக்கறையில கருத்து சொல்லுவாங்க; அது நமக்கு சில சமயம் சரின்னு படும்; சில சமயம்…. இதோ… இன்னைக்கு நடந்தா மாதிரி மனஸ்தாபத்துல முடியும்.” சொல்லி,
“அதுக்கு தான்… அதுக்கு தான் நமக்கே நமக்குன்னு பேசிக்க நேரம் வேணுமுன்னு….” தயக்கத்துடன் கேட்க,
அவள் சொல்ல வருவதை புரிந்து கொண்டான் ஹரி. மெல்லிய குரலில், “நீ சொல்றது சரி தான் மீரா! லன்ச் டைம்ல பேச முடியாது தான். ஆனா வேற எப்படின்னு எனக்கு புரியல….” வழி தெரியாமல் தடுமாற,
“பரவாயில்ல! பார்த்துக்கலாம் டா! நான் காலையில பேசணும்னு நெனச்சது வேற…” என்று மெதுவாக ஆரம்பித்தாள்.
“பணம் வாங்கிக்க ஒப்பந்தம் கொண்டு வரேன்னு சொல்லிட்டு, எதுக்கு டா வீட்டு பத்திரம் எல்லாம் கொண்டு வந்த… இருக்குற பிரச்சனை போதாதா?” கிடைத்த சந்தர்ப்பத்தில் கேட்டேவிட்டாள்.
அவனும் சற்று இயல்புக்கு திரும்பினான். “ம்ம்…செக்யூரிட்டி இல்லாம யாரு கடன் கொடுப்பாங்க,… ”,லேசாக சிரித்து, “உனக்காக இல்லேனாலும், உங்க அப்பாவுக்கு, என் மேல ஒரு நம்பிக்கை வர வேண்டாமா.” மென்மையாய் சொன்னான்.
உணவை வாயில் இட்டபடி யோசித்தாள் மீரா. “அரவிந்த் கிட்ட சூரிட்டி (Surety) கையெழுத்து கேட்டிருக்கலாமே; அதுக்கு எதுக்கு வீட்டு பத்திரம் எல்லாம்…” சமாதானமாகாதவளாய் கேட்டாள்.
“கேட்டு…. உங்க அப்பாவுக்கு என் மேல நம்பிக்கை இல்லன்னு, நடந்தத எல்லாம் அவன்கிட்ட சொல்ல சொல்றியா?” யோசிக்காமல் எதையும் செய்யவில்லை என்று உணர்த்தினான். அவள் நிதானமாக சிந்திக்க, அவனே மேலும் பேசினான்.
“சொல்ல கூடாதூன்னு ஒண்ணும் இல்ல; வீணா அவன் உங்க அப்பாவ தப்பா நெனச்சுப்பான்; அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல பரஸ்பர புரிதல் இருக்கு; தற்காலிகமா நடந்த விஷயத்த எல்லாம் சொல்லி, அவன குழப்பணுமா? எல்லோர் நன்மையையும் கருதி முடிவு எடுத்திருப்பதாக விளக்கினான்.
பேசிக்கொண்டே, நல்ல பசியில், இருவரும் வேகமாக சாப்பிட்டு முடித்திருந்தனர்.
“எனக்கு இன்னொரு விஷயம் தெரிஞ்சுக்கணும் ஹரி!” அவள் குழைய, கைகடிகாரத்தை பார்த்தவன், “சரி! சீக்கிரம் கேளு!” என்றான்.
“அம்மா கிட்ட நம்ம காதல பற்றி சொல்லிட்டியா!” விடையறிய கண்கொட்டாமல் பார்த்தாள்.
“ம்ம்…” என்று அவன் தலையசைத்த விதமே, அம்மாவின் மனநிலையை எடுத்துரைத்தது.
“இதுக்குதான் டா….” அவள் மறுபடியும் புலம்ப தொடங்க,
“ப்ளீஸ் மீரா! காலம் அவங்களுக்கும் பதில் சொல்லும்; என்னோட மாமா எல்லாத்தையும் பாத்துக்கறேன்னு சொல்லிட்டாரு. அதனால, அதிகமா யோசிச்சு குழம்பாத!” அவளை பேசவிடாமல் தடுத்து, இருக்கையை விட்டு எழுந்தான்.
இத்தனை தூரம் அவன் பேசியதே போதுமாக இருந்தது.
“சரி! எங்க அப்பாவுக்கு ஏதோ கவர் கொடுத்தியே… என்ன அது?” உடன் நடந்தவனிடம் கேட்டு, கண்சிமிட்டினாள்.
“அது, எனக்கும் என் மாமனாருக்கும் பெர்ஸனல்!” அவள் காதில் கிசுகிசுத்தான்.
காலையில், அதை பீரோவில் வைக்கும் போது, சற்று கனமாகவே இருந்தது. இவன் மூன்று வார்த்தைகளுக்கு மேல் கடிதம் எழுதமாட்டானே என்று எண்ணி சிரித்தாள்.
திடீரென்று அவள் சிரிப்பதை கவனித்தவன் “எதுக்கு டி சிரிக்கர?” என்று வினவ,
மறுப்பாய் தலையசைத்தவள், இல்ல…. எனக்கு கவர்ல செய்தித்தாள் வெச்சு கொடுத்த…உங்க மாமனாருக்கு குமுதமா, ஆனந்த விகடனா?” கேலி செய்தாள்.
“உங்க அப்பாகிட்டையே கேளு… முடிஞ்சா பிரிச்சு காட்ட சொல்லு!” அவனும் சவால் விட்டான்.
அவனிடம் இன்று நாள் முழுவதும் கண்ட உற்சாகம், அவளுக்கு நினைவுக்கு வர, “ஆனா ஒண்ணு டா! என்னமா கெத்தா அவர்கிட்ட பேசின… மனுஷன் முகத்துல ஈ ஆடலையே” தன்னவனை புகழ்ந்தாள்.
மென்மையாக சிரித்தவன், “அது உன் அன்பு ஊட்டிய தெம்பு! அவன் பங்குக்கு அவளை புகழ்ந்து, “இருந்தும், மகேஷ் கிட்ட கொஞ்சம் கோபமா நடந்துகிட்டேன்ல” தவறுக்கு வருந்தினான்.
“அவங்க நம்ம நண்பர்கள் டா; கண்டிப்பா தப்பா நினைக்கவே மாட்டாங்க; ஒரு விதத்துல, நீ அப்படி நடந்துகிட்டதும் நல்லது தான். இனிமே அவங்களுக்கும் தெரியும்ல, நம்ம காதல் எப்படிபட்டதுன்னு.” நடந்தது நன்மைக்கே என்றாள்.
கேண்டீன் வாயிற் கதவருகே வந்தவன், “உண்மைய சொல்லு மீரா! உன்ன காதலிக்க கூட மாட்டேன்னு சொன்னதுல, உனக்கு வருத்தம் தானே!” என்றான்.
அவன் கண்களை பார்த்து பேச ஏதுவாய், தலை நிமிர்த்தியவள், “ம்ஹூம்” என்று தலையசைத்து, “நீ அப்படி சொன்னது எனக்கு முழு சம்மதம் டா. சொல்லப்போனா, உன்ன இன்னும் உயர்வா பாக்குறேன். எங்க அப்பாகிட்ட சும்மா பேச்சுக்கு சொல்லாம, அத உண்மையா கடைபிடிக்க நினைக்கறியே… இந்த மனசு யாருக்கு வரும்!” சொல்லி அவன் தோள்களில் தட்டி கொடுத்தாள்.
அவள் பக்குவமாய் எடுத்து கொண்டதை மெச்சி, அலுவலகத்தை நோக்கி நடந்தான். உடன் வந்தவள், மெல்லிய குரலில்,
“உன்னோட ஊர் சுத்துறது என் நோக்கம் இல்ல ஹரி; உன்னோட செலவிடற நேரத்துல, உனக்கு ஏதோ ஒரு விதத்துல உதவியா இருக்கணும்னு ஆசைபடறேன்; அவ்வளவுதான்!” தன் நோக்கத்தை தெளிவுபடுத்த,
அவள் முகம் பார்க்க திரும்பி, “கண்டிப்பா மீரா! என் லட்சிய பாதையில நான் எடுத்து வெக்குற ஒவ்வொரு அடியிலும் நீ என் பக்கத்துலேயே இருக்கணும் டி” ஆழ்ந்து சொல்லி, இறுக அவள் கை கோர்த்தான்.
பேச்சு வார்த்தைகள், சண்டைகளாக மாறினாலும், சமாதானத்தில் தான் முடிய வேண்டும் என்ற இல்லற தர்மத்தின் இரண்டாவது பாடத்தில், பட்டமே வாங்கிவிட்டனர், நம் காதல் ஜோடிகள்.
ஔடதம் வேறேதும் தான் உண்டோ,
ஓரப்பார்வைகள் ஊட்டும் நம்பிக்கையை காட்டிலும்!
ஒலியெழுப்பா உரையாடல்களுடன்,
ஐவிரல் கோர்த்து நடந்தால் போதும் என்றார்கள்!
ஏக்கங்கள், ஏமாற்றத்தில் தான் முடியும் என்று தெரிந்தும்,
எதிர்ப்பார்ப்புகள் குறையவில்லை!
ஊடலில் ஒரு தெளிவு பிறந்தது,
உச்சந்தலை முத்தத்தில் சலனமும் முளைத்தது!
ஈடாகுமா இவள் அன்புக்கு என்றான் அவன்,
இன்னும் ஏன் தயக்கம் என்றாள் இவள்!
ஆரம்பமானது இவர்கள் லட்சிய பயணம்,
அன்பின் ஆழத்தில்….