அன்பின் ஆழம் – 11

விடியும் பொழுதும், அந்தி சாய்வதும், எந்தவித மாற்றமுமின்றி, தினம்தோறும் திட்டமிட்டபடி, திட்டமிட்ட நேரத்தில் நிகழ்கின்றன. ஆனால், அதில் உழலும் மனித வாழ்க்கையில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள். மனிதன் திட்டமிடுவது ஒன்று, நடப்பது வேறு.

இதற்கு மீரா மட்டும் என்ன விதிவிலக்கா? ஒருவழியாக, தங்கள் காதலில் ஒரு பிடிமானம் வந்தது என்று பெருமூச்சுவிடுவதற்குள், ஹரி, ஊருக்கு போக திட்டமிட்டிருந்தான். ஊரில் இருந்து வந்தவன், நான்கு நாட்களாகியும், அவளிடம் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்று வருந்தினாள்.

மாத இறுதி என்பதால், பணிச்சுமை அதிகமாக இருந்தது. மதிய உணவு இடைவேளையில் பேசலாம் என்றால், நண்பர்கள் முன் மனதில் உள்ளதை கேட்க ஒரு தயக்கம். ஊரிலிருந்து அவனுடைய மாமாவும் உடன் வந்ததால், மாலை நேரங்களில் சந்தித்து பேசுவதற்கும், கைப்பேசியில் தொடர்பு கொள்வதற்கும் வாய்ப்பே இல்லாமல் போனது.

வெள்ளிக்கிழமை, மதிய உணவு அருந்திவிட்டு, நண்பர்கள், பணிக்கு திரும்ப எழுந்தனர்.

“ஹரி! உன்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்!” அவனை போக வேண்டாம் என்று மீரா தடுத்தாள்.

“சீக்கிரம் சொல்லு மீரா; ரிப்போர்ட்ஸ் எல்லாம், ஒரு மணிக்குள்ள பேக்கப் (Backup) எடுக்கணும்!” பொறுப்பாக பேசினான்.

“அதெல்லாம் எடுக்கலாம்; நீ முதல்ல உட்காரு!” அவள் வலியுறுத்த, இவர்கள் பேச்சை கேட்ட அரவிந்தனால், அவளை சீண்டாமல் இருக்கவே முடியவில்லை.

“வேலையும், நட்பையும் பிரிச்சு பார்க்கணும்னு அறிவுறுத்திய கண்டிப்பான ஆஃபிசர் ஒருத்தர் இருந்தாங்க டா மகேஷ்…” என்று எங்கோ பார்த்தபடி நண்பனிடம் சொல்ல, எதிர்பார்த்த மாதிரி, மீரா கடுப்பானாள்.

“அது நட்பு; இது காதல்…வேலைய விட முக்கியமானது; நீ கிளம்பு!” அழுத்திச் சொல்லி, கையால் ஜாடை காட்டினாள்.

எதிர்பார்த்த ரியாக்க்ஷன் கிடைத்துவிட்ட கர்வத்தில், வெற்றி புன்னகையுடன் அங்கிருந்து நகர்ந்தான் அரவிந்தன்.

“ரெண்டு வாரம் மேல ஆச்சு ஹரி, அப்பாகிட்ட வந்து பேசுறேன்னு சொல்லி!” எதிரில் அமர்ந்தவனிடம், நேரடியாக ஊரில் நடந்ததை பற்றி கேட்காமல், சுற்றிவளைத்தாள்.

கவலை ரேகைகள் வழிந்தோடும் அவள் முகத்தை கவனித்தவன், மெல்லிய புன்னகையுடன், “மேல எத்தன நாள் ஆச்சு?” கேள்வியை திருப்பினான்.

“ம்ம்… முழுசா ரெண்டு நாள் ஆச்சு!”, என்று உதட்டை சுழித்தாள்.

“ரெண்டு வாரம், நான் சொன்னது, வேலை நாட்கள் மட்டும்; வார நாட்கள் இல்ல; அப்படி பார்த்தா, இன்னும் முழுசா நாலு நாள் டைம் இருக்கு!” கணக்கு பாடம் எடுத்து அவளை கடுப்பேத்தினான்.

“விளையாடாத ஹரி!” அழாத குறையாய் கெஞ்சி, “எங்க, மறுபடியும் ஏதாவது காரணம் சொல்லி, விட்டுட்டு போயிடுவியோன்னு பயமா இருக்கு டா!” மனதில் உள்ளதை கொட்டினாள்.

வீணாக கவலை கொள்கிறாள் என்று உணர்ந்தவன், அவள் கைகளை தன்னுள் அடக்கி, “எப்படி விட முடியும்! நீ என் நிழலாச்சே!” உருக்கமாய் பேச,

அதற்கெல்லாம் மசியாதவளாய், “அதான் இருட்டிலேயே ஒளிஞ்சிட்டு இருக்கியா?” எதிர்கேள்வி கேட்டு அவன் பிடியிலிருந்து கையை திருப்பி கொண்டாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பேசிவிட வேண்டும் என்று தோன்ற, “வசனம் எல்லாம் நல்லாதான் பேசுற… ஆனா சொன்ன டைமுக்கு எதுவும் செய்ய மாட்டேன்றியே…“ காத்திருப்பதன் வலியை உணர்த்தினாள் மீரா.

அவள் பேச்சை இரசித்தவன், “கோவிச்சுக்காத டி! நான் நினைத்த அளவுக்கு வேலை வேகமா நடக்கல; உங்க அப்பாவ பார்க்க செவ்வாய்கிழமை வரேன், போதுமா?” திடமான பதில் சொல்லி எழுந்தான்.

இன்னும் இவன் எதையும் வெளிப்படையாய் சொல்லவில்லை என்று தோன்றியது அவளுக்கு.

“என்ன வேலை? எங்க அப்பா கிட்ட ஏதாவது சொல்லி அவர தயார் படுத்தணுமா? ஊரில் நடந்ததை பற்றி ஏதாவது துப்பு கிடைக்கும் என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே அவன் அருகில் நடந்தாள்.

“நீ எதுவும் பேசாம இருந்தாலே நல்லது!” அன்று நடந்ததை எண்ணி நமுட்டு சிரிப்புடன் சொன்னான். அவள் முகம் இன்னும் அதிகமாய் சுருங்க,

“காலையில ஏழு மணிக்கு அவர் வீட்டுல இருக்கா மாதிரி பார்த்துக்கோ! அது போதும்; நான் பேசிக்கிறேன்!” திட்டத்தை தெளிவுபடுத்தினான்.

“என்ன பேச போற ஹரி?” விடாமல் நச்சரித்தாள்.

அதற்கும் சிரித்து மழுப்பியவன், “அது, எனக்கும் என் மாமனாருக்கும்… உனக்கு அவசியமில்ல!” குனிந்து அவள் காதில் கிசுகிசுத்து, வேகமாக முன்னே நடந்தான்.

அவன் வசனம் பேசினாலும், அதில் ஒரு நம்பிக்கையும், காதலும் வீசியது. அதனால் மேலும் எதுவும் கேட்காமல், மனநிறைவோடு அவனை பின்தொடர்ந்தாள் மீரா.

சொன்ன நேரத்திற்கு வந்து நின்றான் ஹரி. கதவை திறந்தவளுக்கு, ஒரே பிரம்மிப்பு. அவள் அன்று வாங்கி தந்த சட்டையை அணிந்திருந்தான். அதுவே அவளின் பாதி கேள்விகளுக்கு பதிலளித்தது.

உள்ளே நடந்தவன், யார் விருந்தோம்பலுக்கும் காத்திராமல், உரிமையோடு, வரதனுக்கு வலதுபுறம் இருந்த சோஃபாவில் அமர்ந்தான்; ஆம்! அன்று அமர்ந்த அதே இடம் தான்.

செய்தித்தாளில் மூழ்கியிருந்தவர், அவனை கண்டவுடனே வேகமாக எழுந்தார். மகள் விஷயத்தில் தலையிடுவதில்லை என்பதில் தீர்மானமாக இருந்தார்.

“அங்கிள்! ப்ளீஸ் உட்காருங்க!” திடமாய் சொல்லி, “உங்கள பார்க்க தான் வந்தேன்.” என்றான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல், எதிரே நின்று கொண்டிருக்கும் வீட்டின் பெண்களை பார்க்க, மனைவி, நிலமையை பொறுமையாக கையாளும்படி கண்ஜாடை காட்டினாள்.

அவர் அமர்ந்ததும், “முதல்ல, அன்னைக்கு நடந்ததுக்கு, நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.” சமாதான கொடியை ஆட்டி, பேச தொடங்கினான்.

“உங்க கோபம் ரொம்ப நியாயமானது தான். ஒரு அப்பாவா, உங்க பொண்ணு சௌகரியமா வாழணும்னு நினைக்கிறிங்க. அதனால நீங்க என்ன வேண்டாம்னு சொல்றதும் சரிதான்…” பணிவாய் அவன் பேச, பையன் பின்வாங்கிவிடுவானோ என்ற நப்பாசையில், அவனை தலை நிமிர்ந்து பார்த்தார்.

இவன் எதற்கு தேவையற்றதை பேசி குழப்புகிறான் என்ற பயத்தில் அவனை கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றாள் மீரா.

“… ஆனா பாருங்க, உங்களுக்கு, என்ன எந்த அளவுக்கு பிடிக்கலியோ, அதே அளவுக்கு, மீராவுக்கு என்ன பிடிச்சிருக்கே!” என்று சொல்லிக்கொண்டே, என்னவள் என்ற உரிமையோடு, ஒரு கணம் அவளை பார்த்தான்.

மீண்டும் முகத்தை திருப்பி கொண்டவரிடம், “எனக்காக அவ ஆசையா பார்த்த வேலைய உதரி தள்ளினா; தன்னுடைய சின்ன வயசுலேந்து ஒரு முன்மாதிரியா பார்த்த உங்ககிட்டையே பேசாம இருந்தா.” அவனுக்கு தன் வாழ்க்கையில் கொடுத்த முன்னுரிமையை வலியுறுத்தி, “இப்படி பட்டவள, நான் எப்படி விட முடியும்னு சொல்லுங்க?” மானசீகமாக கேட்டு, அவர் பேச காத்திருந்தான்.

அவன் பேச்சில் இருந்த காதலில் உறைந்து போய் நின்றாள் மீரா.

பதில் சொல்லும்வரை விடமாட்டான் என்று உணர்ந்த வரதன், “ஏற்கனவே சொன்னதுதான்… எல்லாம் உங்க இஷ்டம்… நான் இதுல தலையிடறதா இல்ல!” தீர்மானமாய் தன் முடிவை சொல்லி, மீண்டும் எழுந்தார்.

“நான் இன்னும் முழுசா பேசி முடிக்கல; அதையும் கேட்டுட்டு போங்க, ப்ளீஸ்” அவரை தடுத்தான். இன்றோடு இதற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என்று, அவர் மீண்டும் அமர்ந்தார்.

“வெறுப்பும், வீண்விவாதமும் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது அங்கிள்!” மென்மையாக தொடங்கி, மேலும் பேசினான். “மீராவ கல்யாணம் செய்துக்க நினைக்கற என் எண்ணம் உண்மையானது. அவள நல்லபடியா வச்சு பார்த்துக்கணும், வாழ்க்கையில முன்னேறணும்னு நானும் பொறுப்பா தான் யோசிக்கிறேன். என் மேல இருக்கற நம்பிக்கையில, அவ எனக்கு பணம் கொடுக்க முன் வரலாம்; ஆனா, என்ன பற்றி ஒண்ணுமே தெரியாத நீங்க, இதுக்கு சம்மதம் சொல்லணும்னு நினைக்கறது ரொம்ப தப்பு. அதான்… “என்று கொண்டுவந்த கவரிலிருந்து, மூன்று ஃபைல்களை எடுத்து, முன்னிருந்த டீபாயில் பரப்பினான்.

‘இவன் என்ன, ஒப்பந்தம் கையிடலாம்னு சொல்லிட்டு, இன்சூரன்ஸ் ஏஜென்ட் மாதிரி இத்தன பேப்பர கட பரப்பறான்’ யோசித்தபடி, புருவங்கள் உயர அவனை பார்த்தாள் மீரா.

முதல் ஃபைலிலிருந்து, இரண்டு பக்கம் கொண்ட முத்திரை காகிதத்தை அவர் முன் நீட்டி, “இது, நான் மீராவிடம் கடனா வாங்கிக்குற தொகைக்கு கடன் பத்திரம். என் புத்தகங்கள் விற்பனை வசூலேந்து, தவணை முறையில திருப்பி தரதா எழுதி கையொப்பம் போட்டிருக்கேன்.” விளக்கி, அவர் கையில் வாங்குவாரா என்று ஒரு நிமிடம் காத்திருந்தான். அவர் முகத்தை சுளிக்க, மனம் தளராமல், அடுத்த ஃபைலை திறந்தான்.

அது சற்று கனமாகவே இருந்தது. அதுவும் முத்திரை பத்திரம் தான். ஆனால், அதிக பக்கங்களுடன், கொஞ்சம் பழுப்பாக, பழையதாக இருந்தது. கட்டைவிரல் நுணியால், அதன் பக்கங்களை விசிறி போல் வேகமாக புரட்டி, பெருமூச்சுவிட்டவன்,

 “இது என் வீட்டு பத்திரம். கடன் பணத்த நான் மொத்தமா திருப்பி கொடுத்ததுக்கு அப்புறம், இத வாங்கிக்குறேன்.” சுருக்கமாக சொல்லி அதை கீழே வைத்தான். மீரா அவனை கேள்வியாய் நோக்குகிறாள் என்று அவளை பார்க்காமலே உணர்ந்தான்.

‘என்ன நடிப்பு…’ என்பது போல் இருந்தது வரதனுக்கு. எரிச்சல் பொங்கியெழ, “வங்கியில கொடுத்தா வீட்ட ஜப்தி பண்ணிடுவாங்க; என் பொண்ணுகிட்ட கொடுத்தா, நீ பணத்த திருப்பி கொடுக்கலேனாலும், உன் மேல பரிதாபப்பட்டு, பத்திரத்த திருப்பி கொடுத்திடுவான்னு தந்திரமா?” வேண்டுமென்றே அன்று அவன் சுயத்தை தொட்ட அதே வார்த்தையை அழுத்திச் சொல்லி, உசுப்பேத்தினார்.

உதை கூட வாங்கிக்கொள்ள தயாராக வந்திருக்கும் அவன் மனப்பக்குவம், பாவம் அவருக்கு தெரியாதே. அன்று போல் நிலமை கைமீறி போய்விடுமோ என்ற பீதியில், தாயும் மகளும் நடப்பதை எல்லாம் பதற்றத்தோடு வேடிக்கை பார்த்தனர்.

ஹரி அவர் கேள்விக்கு, மெல்லிய சிரிப்புடன் நிதானமாக பதிலளித்தான்.

“வங்கில கொடுத்தா, வீட்ட ஜப்தி பண்ணிடுவாங்கன்னு எனக்கு பயம் தான்.” அதை ஒப்புக்கொள்வதில் எந்தவித தயக்கமும் இல்லை என்பது போல் சொல்லி, “இது எங்க அப்பா வாழ்ந்து, நடமாடிய வீடு. எழுதும் என் ஆசைக்கு, அவர் ஊக்கம் கொடுத்த வீடு. இந்த சென்டிமென்ட் எல்லாம் வங்கியில யாருக்கும் புரியாது…” என்று, தன்னவளை இமைக்காமல் பார்த்து, “ஆனா, இதெல்லாம் என் உணர்வுகளுக்கு முக்கியதுவம் கொடுக்கற உங்க பொண்ணுக்கு மட்டும் தான் புரியும்.”  

‘என் மீராவுக்கு’ என்று சொல்ல துடித்தது மனசு; ஆனால், காதலை இன்னும் அங்கீகரிக்காத தந்தை முன்னால் அப்படி உரிமை கொண்டாடுவது தவறு என்று நினைத்து, ‘உங்க பொண்ணு’ என்று சொன்னான்.

அவன் உறுதியான பேச்சில், வரதன் பிடிவாதம் கொஞ்சம் ஆட்டம் கண்டது என்னமோ உண்மைதான். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், “இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம்; எல்லாத்தையும் எடுத்துட்டு, நடைய கட்டு.” அவனை விரட்ட,

 “நான் இத திருப்பி எடுத்துட்டு போக வரல;” மறுத்து, அவர் பக்கம் நகர்த்தினான். கடைசியாக இருந்த ஃபைலை எடுத்தான். அதிலிருந்த சீல் செய்யப்பட்ட ஒரு கவரை எடுத்து உயர்த்தி காட்டி,

“இது, நான் உங்களுக்கு எழுதிய கடிதம். எங்க திருமணத்துக்கு சம்மதம் சொல்லணும்னு தோணும்போது, இத பிரிச்சு படிங்க.” விளக்கம் தந்து, மீராவை பார்த்தான்.

“மீரா! இதெல்லாம் பத்திரமா உள்ள வெச்சுட்டு வா. ஆஃபிஸ்க்கு கிளம்பலாம்!” அதிகாரமாய் சொல்ல, அவள் ஸ்தம்பித்து போனாள். அவன் பார்வையில் வீசிய தன்னம்பிக்கையை மெச்சியவள், அவன் சொல்படி நடந்தாள்.

தன் கட்டுக்குள் எதுவும் இல்லை என்று உறைந்து போனவரிடம், “பணம் வேணும்னா உங்க விருப்பத்த மீறி வாங்கியிருக்கலாம்; ஆனா உங்க சம்மதம் இல்லாம, மீராவ கல்யாணமில்ல, காதலிக்க கூட மாட்டேன்” என்று சொல்ல, வரதன் புருவத்தை உயர்த்தி பார்த்தார்.

“அதுக்காக, அவகிட்ட பேசமாட்டேன், அவள பார்க்கமாட்டேன்; அவளோட பழகமாட்டேன்னு எல்லாம் சொல்ல வரல. எப்பவும் போல நல்ல நண்பர்களா இருப்போம். அவ ஊக்கம் இல்லாம, என்னால எதையும் சாதிக்க முடியாது. ஒரு நாள் நீங்களும் அத புரிஞ்சிப்பீங்க.” தங்கள் உறவின் வரம்புக் கோட்டின் எல்லையை நிலைநாட்டி, அவர் பதிலுக்கு காத்திராமல், வெளியேறினான்.

‘இதற்கு பேர் தான் புயலுக்கு முன் அமைதியா’ என்று எண்ணியவள், பெற்றோரிடம் தன்மையாக சொல்லிவிட்டு, அவனை பின்தொடர்ந்தாள்.

“வண்டி சாவி கொடு!” இன்னும் அதே விரப்பாக கேட்டு, கையை நீட்டினான் ஹரி.

அதை கொடுக்க மறுத்தவள், “ம்ஹூம்….” மறுப்பாய் தலையசைத்து, “இன்னைக்கு நம்ம லீவு போட்டுட்டு, வெளியே போறோம்!” என்று குழைந்தாள்.

சாவியை அவளிடமிருந்து வலுக்கட்டாயமாக பிடுங்கிகொண்டவன், “உங்க அப்பாகிட்ட சும்மா பேச்சுக்கு சொன்னேன்னு நெனச்சியா?” திடமாய் கேட்க,

“அதுக்கில்ல டா! உன்கிட்ட நிறைய பேசணும் ஹரி!” தன் ஆதங்கத்தை கொட்டினாள்.

அதற்கும் பிடிகொடுக்காதவன், “பேசணும்னா தினமும் லன்ச் பிரேக்ல பேசலாம்!” சுலபமாய் வழி சொல்ல,

“முக்கியமான விஷயமா இருந்தா?” கேள்வியை திருப்பினாள்.

“சனிக்கிழமை வேலைய முடிச்சிட்டு போறப்ப, பேசிக்காலம்!” எதற்கும் தீர்வு உண்டு என்பது போல் பதிலளித்து, “ஆனா அதையே ஒரு வழக்கமா வெச்சுக்காத, புரியுதா?” ஆள்காட்டி விரலை காட்டி, எச்சரித்தான்.

வண்டியை உயிர்ப்பித்து அவன் காத்திருக்க, ஏற மனமில்லாதவளாய்,

“ஹரி! எதுக்கு டா வீட்டு பத்திரமெல்லாம் கொடுத்த…” மனதில் ஓடிய பாரத்தை இறக்கி வைத்தாள்.

அவளிடம் சொல்லாமல், இன்று பல விஷயங்கள் செய்ததை உணர்ந்தவன், அவள் பக்கம் திரும்பி, “உன்கிட்ட இருந்தா பாதுகாப்பா இருக்கும்னு கொடுத்தேன்…. ன் மனைவியா வர நினைக்குறவ இத கூட எனக்காக செய்யமாட்டியா?” உரிமையோடு கேட்க,

“அதுக்கில்ல டா…. உங்க அம்மா….” ஊரில் என்ன நடந்திருக்கும் என்று தயக்கத்தில் கேட்டாள்.

வெளிப்படையாக பதில் சொல்லவில்லை என்றால், அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று அறிந்தவன், “நம்ம லட்சியத்த நோக்கி போறப்ப, எல்லாருடைய விருப்பங்களுக்கும் முக்கியதுவம் கொடுக்க முடியாது, மீரா…” சொல்லி பெருமூச்சுவிட்டவன், “காலம் அவங்களுக்கும் பதில் சொல்லும்!” அவள் சொன்னதையே சுட்டிகாட்டி, ஆதரவாய் அவள் கரத்தை பிடித்தான்.

‘இன்னும் எத்தனை பேர் விரோதத்தை, எனக்காக சுமக்கபோகிறானோ’ பதறிய அவள் மனம், இப்போது தான் அவனிடம் அதிகம் பேச வேண்டும் என்று ஏங்கியது. பல கேள்விகளுடன், பயணமும் தொடங்கியது.

‘காலம் பதில் சொல்லும்’ என்று பொறுமை காக்கும் இந்த பக்குவமான காதல் ஜோடிகள், சேரும் நாள் எப்போது…. விடை சொல்லும் பெற்றோர், பிள்ளைகள் மீது வைத்த அன்பின் ஆழம்…