அன்பின் ஆழம் – 09

நண்பர்கள் காலை உணவை சாப்பிட்டுக் கொண்டே, ​​இங்கிலாந்துக்கும் ஜிம்பாப்வேவுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்தனர். அலுவலகம் புறப்படும் பரபரப்பிலும், கிடைக்கும் அந்த ஓரிரண்டு நிமிடங்களை வீணாக்காமல் ஆட்டத்தை பார்த்து மகிழும் தீவிர ரசிகர்கள்.

அரவிந்தன் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டு இருக்கும் போட்டியில் மூழ்கியிருந்தான். ஹரி கண்கள், திரையை பார்த்தாலும், சிந்தனை எல்லாம் முந்தினம் மீரா வீட்டில் நடந்ததை ஒட்டியே இருந்தது. அரவிந்தனிடம் எதையும் சொல்லாததால், இயல்பாக இருக்க பாடுபட்டான் ஹரி.

அப்போது, அரவிந்தன் கைபேசிக்கு வந்த குறுஞ்செய்தி, அவர்கள் கவனத்தை திருப்பியது. அரவிந்தன், அதை படித்துவிட்டு, “மீராவுக்கு உடம்பு சரியில்லையாம் டா; லீவு சொல்லியிருக்கா.” என்று நண்பனிடம், தகவல் சொல்ல,

“ஓ அப்படியா! நான் அவகிட்ட பேசிட்டு வரேன்.” சொல்லி, மேலும் அரவிந்தனுக்கு பேச வாய்ப்பு கொடுக்காமல், வேகமாக எழுந்து, தன் அறைக்குள் புகுந்தான் ஹரி. அவளை தொடர்புகொள்ள முயன்றான்; பல முறை அழைத்தும், பதிலேதும் இல்லை; எதிர்பார்த்தது தான் என்று மனதை தேற்றிக் கொண்டான்.

‘லெட்ஸ் பீ ஃப்ரண்ட்ஸ்’ அவன் அனுப்பிய மூன்று வார்த்தை குறுஞ்செய்திக்கு, ‘சரி’ என்று உடனே பதில் அனுப்பியிருந்தாலும், அவளுக்கு வருத்தம் இருக்கும் என்று யூகித்தான் ஹரி. அதனால்தான் அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்திருப்பாள் என்றும் நினைத்தான். சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து, அரவிந்தனிடம் மழுப்பலாக பேசி அன்றைய பொழுதை சமாளித்தான் ஹரி.

அதே சமயம், மீராவின் வீட்டில்….

“மீரா இன்னும் எழுந்திருக்கவே இல்லிங்க…. “எட்டு மணியாகியும், மகள் அறையைவிட்டு வராததை எண்ணி, அலுவலகத்திற்கு புறப்பட்டு கொண்டிருக்கும் கணவனிடம் வருந்தினாள் நிர்மலா.

“அதான் சொல்லிட்டேனே…. அவ விஷயத்துல இனி தலையிட மாட்டேன்னு!” கராராக சொல்லி, முன் கதவை நோக்கி நடந்தார். அவர் கோபம் துளியும் குறையவில்லை என்று கவனித்தவள்,

“நீங்களும் பிடிவாதம் பிடிச்சா என்ன அர்த்தங்க…” விடாமல் கேட்டு, அவரை பின்தொடர்ந்தாள் நிர்மலா.

வருந்தும் மனைவியை பார்த்து, “வேறென்ன பண்ண சொல்ற…. அறிவுரை தான் சொல்ல முடியும்; கேக்கலேன்னா, வீட்டுல அடைச்சு வைக்க முடியுமா…. இல்ல அவளுக்கு கட்டாய கல்யாணம் தான் செய்து வைக்க முடியுமா?” பட்டால் தான் புரியும் என்பதை போல், விரக்தியில், கேள்வியை அவளிடமே திருப்பி, அவள் பதிலுக்கு காத்திராமல், புறப்பட்டார்.

கணவனிடம் பேசித் தோற்றவள், நேரடியாக மகளின் அறையை நோக்கி நடந்தாள். அவள் கதவை தட்டவும், மீரா திறக்கவும், சரியாக இருந்தது.

“என்ன உன் புருஷன் கிளம்பிட்டாரா?” அதிகாரமாய் கேட்டாள் மீரா, கதவருகே நின்றபடி.

மகள் பேச்சில் மரியாதை இல்லாத போதும், நிதானம் கடைபிடித்தவள், “அப்பா உன் நல்லதுக்கு தானே சொல்றாரு…. கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாரு மா….” பொறுமையாய் எடுத்துச்சொல்ல,

“நல்லா யோசிச்சிட்டேன் மா; நான் யாருக்காகவும் வாழ போறது இல்ல; அப்பாவுக்காகட்டும், ஹரிக்காகட்டும்….” தன் முடிவை தீர்க்கமாக சொல்லி, “ரெண்டு பேரும் வறட்டு கௌரவம் பிடித்த சுயநலவாதிகள்” முணுமுணுத்தாள்.

இரவு ஹரியுடன் வாக்குவாதம் செய்திருப்பாள் என்று யூகித்த நிர்மலா, மேலும் எந்த அறிவுரையும் சொல்லாமல், “சரி! குளிச்சிட்டு வா…. வேலைக்கு கிளம்ப நேரமாகுதுல்ல.” என்றாள்.

“நான் இனிமே வேலைக்கும் போகப்போறது இல்ல” மீரா முரடு பிடித்தாள். தன்னை புரிந்து கொள்ளாத தந்தையிடம் இனி பேசப்போவதில்லை என்றும் பின்வாங்கிய ஹரியை பார்க்க போவதில்லை என்பதில் உறுதியாக இருந்தாள்.

“ஏன்?” நிர்மலா எதிர்க்க,

“அதான் சொன்னேனே! இனி யாருக்காகவும் வாழ போறது இல்லன்னு.” மீரா அழுத்திச் சொல்ல, நிர்மலா எதுவும் பேசாமல் நின்றாள்.

அவள் கோபத்திற்கு தனிமை தான் தீர்வு என்று அறிந்து, அங்கிருந்து அமைதியாக நகர்ந்தாள்.

வார இறுதியும், அதை தொடர்ந்து வந்த திங்கட்கிழமையும், அவள் மனநிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. அரவிந்தனுக்கு மட்டும் உடல் நலம் சரியில்லை என்று அவ்வப்போது தகவல் கொடுத்தாள்.

எதையும் அவளாகவே முன்வந்து சொல்லும் வரை, நண்பர்களிடம் இதை பற்றி பேச வேண்டாம் என்று நிலமையை சமாளித்தான் ஹரி. அவர்கள் பிரிவை பற்றி அறியும் நண்பர்கள், அன்று நடந்த வாக்குவாதம் பற்றியும் அறிய நேரிடும் என்றும், அதனால், மீரா அப்பா பேரும் அடிப்படும் என்ற நல்லெண்ணத்தில் மறைத்தான்.

செவ்வாய்கிழமை, மதிய உணவு இடைவேளையில் ஒன்று கூடினர் நண்பர்கள்; மீராவை தவிர.

“என்னடா ஹரி? மீரா டாக்டர் கிட்ட போயிட்டு வந்து போன் பண்ணாளா?” வினவிக்கொண்டே நண்பன் அருகில் வந்து அமர்ந்தான் அரவிந்தன்.

‘என் அழைப்ப எடுத்து பேசினாதானே எனக்கு ஏதாவது தெரியும்’ மனதில் எண்ணியவன், மழுப்ப காரணம் தேட,

“இப்போதான்டா பேசினேன்” எதிரில் இருந்த கீதா குறுக்கிட்டாள். நண்பர்கள் இருவரும் அவளை ஆவலாய் பார்க்க, “இன்னும் காய்ச்சல் குறையலையாம்…. வைரல் ஃபீவர்ன்னு டாக்டர் சொன்னாராம்….” தகவல் சொல்லி, “நான்கூட ஊருக்கு கிளம்புரத்துக்கு முன்னே வந்து பாக்குறேன்னு சொன்னேன்…. எனக்கு ஏதாவது இன்ஃபெக்க்ஷன் (Infection) ஆயிடுமோன்னு பயப்படறா” அவளை வரவேண்டாம் என்று மீரா சொன்னதையும் கூற,

“எப்போதான் சரியாகுமாம்…. அடுத்த வாரம் வேற ஹெட் ஆஃபிஸ்ல பாராட்டு விழா ஏற்பாடு செய்திருக்காங்க…. அவ இல்லாம நான் மட்டும் எப்படி…. “கவலையாய் அரவிந்தன் புலம்ப,

“அதுக்குள்ள சரியாகிடும் டா! நாளைக்கு காலையில ஆஃபிஸ் வரத்துக்கு முன்னால, அவள போய் பார்த்துட்டு வரேன்.” ஹரி யோசனை சொல்லி, அன்றைய பொழுதையும் எப்படியோ சமாளித்தான்.

மதியம் நடந்த உரையாடலில், ஹரிக்கு பல விஷயங்கள் விளங்கியது. தன்னை தவிர, மற்றவர்களிடம் அவள் சகஜமாகவே இருந்தாள்; ஜுரம் என்று சொன்னதெல்லாம் சுத்த பொய்; நேரில் சென்று பேசுவதை தவிர, வேறுவழியில்லை; மாலையில் சென்றால், அரவிந்தனும் உடன் வருவனோ என்று பயந்து, காலையில் பார்த்துவிட்டு வருவதாக சொன்னான்.

‘ஒரு உண்மையை மறைக்க, எத்தனை பொய் சொல்ல வேண்டியிருக்கு’ நாளைய பிரளயத்தை எண்ணி பெருமூச்சுவிட்டான் ஹரி.

ஏதோ ஒரு வேகத்தில் கிளம்பியவனுக்கு, மீராவின் அப்பாவை எப்படி சமாளிப்பது என்ற பதற்றம் இருந்தது. அவள் வீட்டை அடைந்ததும், கடவுள் அவன் பிரச்சனைக்கு வழி காட்டியது போல் உணர்ந்தான். வரதன் கார் அங்கு இல்லை. பாதி பிரச்சனை தீர்ந்தது போல் ஒரு உணர்வு.

“ஆன்டி! மீரா கிட்ட கொஞ்சம் பேசணும்; வெளிய வர சொல்றீங்களா.” கதவை திறந்த நிர்மலாவிடம் பணிவாக கேட்டான் ஹரி.

“உள்ள வா பா!” எப்போதும் போல் அன்பாய் அழைத்தாள் நிர்மலா. உள்ளே சென்று மேலும் பிரச்சனையை வளர்க்க வேண்டாம் என்று, அவன் தயங்கி நிற்க,

“அவ வீட்டுல இல்ல; கோவிலுக்கு போயிருக்கா; அவ வரத்துக்கு முன்னால உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” நிர்மலா காரணம் சொல்ல, பின்னால் திரும்பி பார்த்தவன், அப்போது தான் கவனித்தான், காரும் இல்லை; சன்னியும் இல்லை என்று.

‘இது என்ன புது பிரச்சனை’ குழம்பியவன், அவளை பின்தொடர்ந்தான்.

எதிர்பாராத நேரத்தில் அவன் வந்தது, நிர்மலாவுக்கு சாதகமாகவே இருந்தது. வீட்டில் உள்ளவர்களிடம் பேசித்தோற்று போனவள், ஹரியிடம் மனம்விட்டு பேசினால் தீர்வு கிடைக்கும் என்று நம்பினாள். இது வரை அரங்கேறிய நாடகத்தில், பொம்மையாய் ஒரு ஓரத்தில் நின்றவள், நடு மேடைக்கு வந்து பொறுப்பாய் பேசினாள்.

“இங்க பாரு ஹரி, “சோஃபாவில் அமர்ந்தவனின் எதிரே நின்று, தன்மையாய் தொடங்கினாள், “மீரா உன்ன கல்யாணம் செய்துக்க போவதா சொன்னது, எங்களுக்கு ஆச்சரியம் தான். நாங்க, உன்ன வேண்டாம்னு சொன்னது, நீ கெட்டவன்ற அர்தத்துல இல்ல. அவர் பேசினத எதையும் மனசுல வெச்சுகாதே பா.”

“பரவாயில்ல ஆன்டி! எனக்கு உங்க நிலமை புரியுது. நான் இனி மீராவ தொந்தரவு செய்ய மாட்டேன். அவள பழையபடி வேலைக்கு வர சொல்லத்தான் இப்போ இங்க வந்தேன். “தான் வந்த நோக்கத்தை தெளிவுபடுத்தினான் ஹரி.

மீராவின் செயல்களை தினம் தினம் பார்த்து கொண்டிருப்பவள், அது அவ்வளவு சுலபம் இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தாள். மீரா அன்று அவனுக்காக வாக்குவாதம் செய்தது, பிறகு, அலுவலகம் போவதில்லை என்று எடுத்த முடிவு, தந்தையிடம் பேசாமல் இருப்பது என்று அனைத்தையும் விளக்கி முடித்து,

“அவ செய்யறது எல்லாம் பார்த்தா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு பா. நீ பேசினா எல்லாம் சரியாகும்னு தோணுது…. கொஞ்சம் பொறுமையா…. பக்குவமா…. புரியவை.” தயக்கத்துடன் கேட்க,

இவ்வளவு நடந்ததும், மீராவின் அம்மா நிதானமாக பேசுவது, அவனுக்கு ஆறுதலாய் இருந்தது. அவளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, “கவலை படாதீங்க ஆன்டி! நான் அவகிட்ட பேசுறேன்.” என்றான்.

கண்ணோரம் தேங்கிய கண்ணீரை, புடவை நுனியில் துடைத்துக் கொண்டவள், “சரி பா; அவ வர நேரமாச்சு; நான் சொன்னா மாதிரி காட்டிக்காத.” கேட்டுக் கொண்டு சமயலறைக்குள் சென்றாள்.

நிர்மலா வலுக்கட்டாயமாய் தந்த காபியை பருகியபடி, மீராவிடம் எப்படி பேசலாம் என்று மனசுக்குள் ஒத்திகை பார்த்து கொண்டிருந்தான் ஹரி.

“அம்மா….!” பெருங்குரலில் கத்தி, “யார் வீட்டுக்கு வந்தாலும், உட்கார வெச்சு, காபி தந்து உபசரிப்பியா?” ஹரியை கண்ட அதிர்ச்சியில், ஆர்ப்பாட்டம் செய்தாள் மீரா.

“கோவிலுக்கு போயிட்டு வரவ, இப்படி கடுமையாவா பேசுவ?” தாயும் அதிகாரமாய் கடிந்து, “இது நீ தொடங்கி வெச்ச பிரச்சனை; நீதான் முடிச்சு வெக்கணும்.” அழுத்தமாய் சொல்லி அவள் வாயடைத்தாள்.

அப்படி பேசியதுக்கு, ஹரியிடம் கண் ஜாடையில் மன்னிப்பு கேட்டு, அவர்களை தனிமையில் விட்டு, தன் காலை பணிகளை செய்ய, அங்கிருந்து நகர்ந்தாள் நிர்மலா.

“வந்த விஷயத்த சொல்லு!” முகத்தை திருப்பி கொண்டு வினவினாள் மீரா.

“வேலைக்கு ஏன் வரல? நேரடியாக கேட்டான்.

இத்தனை நாளாகியும், அவன் மனம் மாறவில்லை என்ற நினைக்க, அவன் மேல் கோபம் தான் அதிகரித்தது அவளுக்கு. “உடம்பு சரியில்ல.” என்றாள்.

அவள் அருகே வேகமாக நடந்தவன், “அது மத்தவங்களுக்கு சொன்ன காரணம்; எனக்கு உண்மையான காரணத்த சொல்லு!” அதிகாரமாய் கேட்க,

“உன்ன பார்க்க விருப்பமில்ல; போதுமா…. நீ கிளம்பு!” முகத்தை காட்டாமலே அவனை விரட்டினாள்.

அவளை வலுக்கட்டாயமாக தன் பக்கம் திருப்பினான் ஹரி. அப்போதும் அவள் பிடிவாதமாய் முகத்தை தொங்க போட்டுக் கொள்ள, “இது நியாயமே இல்ல மீரா; நீதானே சொன்ன…. கல்யாணம் செய்துக்க முடியலேன்னா, நண்பர்களாகவே இருந்துடலாம்னு” தாழ்ந்த குரலில் கேட்க,

நிமிர்ந்து அவனை முறைத்தவள், “உனக்கு இஷ்டமில்லேன்னா, நண்பர்களாகவே இருந்துடலாம்னு சொன்னேன்; எங்க அப்பாவுக்கு பிடிக்கலேன்னா பின்வாங்குன்னு சொல்லல.” வித்தியாசத்தை தெளிவுபடுத்தினாள்.

அவன் செய்ததை மட்டுமே சுட்டிக்காட்டி பேசுகிறாள் என்று பொறுமையிழந்தவன், “அப்போ உங்க அப்பா என்ன பேசினாலும் பரவாயில்ல…. நான் சகிச்சிக்கணும்னு சொல்றியா?” குரலை உயர்த்தி கேட்க,

உண்மை விளம்பியாய் இவன் எல்லாவற்றையும் சொல்லிவிட்டு என்னை குறைகூறுகிறானே என்று அவனை பார்த்து முறைத்தவள், “நான் தான் அப்போவே சொன்னேனே…. பணம் விஷயத்த அவர்கிட்ட சொல்ல வேண்டாம்னு…. நீதானே பெருசா புரிய வெக்கலாம்…. புரியும் வரை காத்திருக்கலாம்னு எல்லாம் வசனம் பேசின.” அவனை போலவே பேசிக் காட்டி முகம் சுழித்தாள்.

அதற்கு ஏளனமாக சிரித்தவன், “அது சரி! உண்மைய சொன்னதுக்கே, உங்க அப்பா என்ன இவ்வளவு கேவலமா நினைக்கறாரு…. இதுல அவருக்கு தெரியாம வாங்கியிருந்தேன்னா, எனக்கு திருட்டு பட்டம் கட்டி ஜெயில்ல கம்பி எண்ண வச்சிருப்பாரு.” வரதன் சுபாவத்தை விளக்கினான் ஹரி.

தன் அப்பாவின் குத்தல் பேச்சு அவனை எந்த அளவுக்கு காயப்படுத்தி இருக்கும் என்று உணர்ந்தாள். கண்களில் நீர் வழிய, சோஃபாவில் வந்து அமர்ந்து, அன்று நிகழ்ந்த அனைத்தையும் அசை போட்டாள்.

தான் வந்த நோக்கம் இதுவல்ல என்று சுதாரித்து கொண்டு, சமாதானம் சொல்ல, அவள் அருகே வந்து அமர்ந்தான். அவள் கைகளை தழுவியவாறு, “மன்னிச்சுக்க மீரா! உங்க அப்பா சொன்ன எதையும் நான் மனசுல வெச்சுக்கல; அவருக்கு என்ன பற்றி ஒண்ணும் தெரியாது…. அதனால அப்படி பேசிட்டாரு,” கவலை கொள்ளாதே என்று சொல்லி, “எனக்கு உன் நட்பு தான் முக்கியம். நீ பழையபடி ஆஃபிஸுக்கு வா…. எல்லாம் சரியாகிடும்.”

‘ஆஃபிஸ்’ என்று அவன் சொன்னது தான் தாமதம். வெடுக்கென்று அவன் பிடியிலிருந்து தன் கைகளை திருப்பி கொண்டவள், “இல்ல ஹரி! நான் இனிமே ஆஃபிஸ் வர மாட்டேன்.” திடமாய் சொன்னாள்.

“இவ்வளவு சொல்லியும், ஏன் டி இப்படி அடம் பிடிக்கற?” சினந்தான் ஹரி.

அவளும் குரலை உயர்த்தி, “எதுக்காக வரணும்; யாருக்காக வரணும் சொல்லு ஹரி?” கேள்வியை அவனிடமே திருப்பி, மேலும் பேசினாள்.

“நான் உழைச்சு சேர்த்த பணத்த, ஒரு நல்ல காரியத்துக்கு செலவழிக்கணும்னு நினைக்கறது தப்பா. ஆனா அத கொடுக்க என் அப்பாவுக்கும் இஷ்டமில்ல; அத வாங்கிக்க உனக்கும் விருப்பமில்ல…. இப்படி என் வாழ்க்கயில முக்கியமானவங்கன்னு நினைக்கற நீங்களே என் மனச புரிஞ்சிக்காம வறட்டு கௌரவம் பாக்குறீங்க…. இனி நான் வேலைக்கு போய் சம்பாதிச்சு என்ன செய்ய போறேன்.” மனதில் உள்ள அத்தனையும் கொட்டி தீர்த்தாள்.

நிர்மலா சொன்னது போல், இவள் மனதை மாற்றுவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்று புரிந்து கொண்டான். “கொஞ்சம் நிதானாமா யோசி மீரா; நான் வாங்க மாட்டேன்னு சொல்லலியே…. ஆனா இப்போ, உங்க அப்பா விருப்பத்த மீறி, நான் அந்த பணத்த வாங்கினா, உங்க ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் வர நான் தான் காரணமாவேன். அதுவே என்ன காலத்துக்கும் உறுத்தும் டி.” திட்டத்தை கைவிடலாம் என்று அறிவுருத்த, அவளும் மௌனமாக சிந்தித்தாள்.

அவனும் அமைதியாக காத்திருந்தான். சில நிமிடங்களில், அவன் பக்கம் திரும்பியவள், அவன் கையை வருடியபடி, “இங்க பாரு ஹரி! உன்கிட்ட இனி பேசவே கூடாதூன்னு தான் இருந்தேன். ஆனா உன்ன நேருல பார்த்தவுடன, அந்த கோபம் எல்லாம் கரைஞ்சு போச்சு டா; கடைசியாக ஒரு யோசனை சொல்றேன், கேட்பியா?

“ம்ம்…. “என்று அவன் தலையசைக்க,

“நீ இந்த பணத்த வாங்காம இருந்தாலும், என் அப்பாவுக்கும் எனக்கும் நடுவுல இருக்க மனஸ்தாபம் மறைய போறது இல்ல. ஒரு பர்சனல் லோன் மாதிரி நெனச்சு, இத கடனா வாங்கிக்க டா. முடிஞ்ச போது தவணை முறையில் திருப்பி கொடு;” விளக்கி கொண்டே போக, அவன் சிலை போல உட்கார்ந்திருந்தான்.

“உனக்கு சும்மா வாங்க தயக்கமா இருந்தா, நம்ம வேணும்னா சட்டப்படி ஒரு ஒப்பந்தம் போட்டு கையிடலாம்.” என்று சொல்லி பெருமூச்சுவிட்டவள்,

“நீ திருப்பி கொடுக்கற வர, கல்யாணப் பேக்சு கூட எடுக்க வேண்டாம். ஒரு வருஷம் மேல ஆனாலும் பரவாயில்ல…. காத்திருக்கேன்” பிடிவாதத்தின் உச்சியில் இருந்தவள், நாணலாய் வளைந்து கொடுத்தாள்.

இவ்வளவு சொல்லியும், குனிந்த தலை நிமிராமல் மௌனமாய் இருந்தவன் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவன் முகம் நிமிர்த்தி,

“ஒண்ணு புரிஞ்சிக்கோ ஹரி! எல்லாரையும் திருப்தி படுத்தி தான், நம்ம ஆசைகளை பூர்த்தி செஞ்சிக்கணும்னா, அது ஒரு கனவாகவே போயிடும் டா. அவங்க மனசு மாறர வர காத்திருபேன்னு தள்ளி போட்டா, அத ஒரேடியா தள்ளி வைக்க வேண்டியிருக்கும். காலம் இவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லும்…. நம்ம எடுத்த முடிவு சரின்னு…. நீ சாதிக்கும் வர, இந்த அவமான பேச்செல்லாம் காதுலேயே போட்டுக்காத டா.”

அவள் பேச பேச, அவன் கண்கள் குளமானது. அவன் முகவாயை கையில் ஏந்தி, “டோன்ட் பீ அ பீப்புல் ப்ளீஸர் ஹரி (Don’t be a people pleaser Hari!) ஏதாவது சொல்லு டா” என்று அவனை உலுக்கினாள்.

சற்று நிமிர்ந்து உட்கார்ந்தவன், கண்களை துடைத்து கொண்டு, “நீ என் மேல வச்சியிருக்குற இந்த அளவு கடந்த அன்பும், நம்பிக்கையும் தான் டி என்ன பயமுறுத்துது…. ஒரு வேள இதுல தோல்வி…. “முழுவதையும் சொல்லும் முன், அவன் வாயை பொத்தி, மறுப்பாய் தலையசைத்து,

“நல்லதே நினை. உன் சூழ்நிலைய பயன்படுத்திக்கிறேன்னு நினைக்காத; நீ இதுக்கு சம்மதிச்சா, நான் வேலைக்கு வருதுல ஒரு அர்த்தம் இருக்கும்.” தீர்மானமாய் தன் முடிவை சொன்னாள்.

அவள் குணம் அறிந்தவன், “சரி! நீ சொன்னது எனக்கு ஓ.கே. எனக்கு ரெண்டு வாரம் டைம் கொடு.” என்றான்.

“எதுக்கு?” அவள் கேள்வியாய் நோக்க,

“பின்ன! நீ சொன்னா மாதிரி ஒப்பந்தம் தயார் செய்யணும்; அத உங்க அப்பா கிட்ட கொடுக்கணும்….” அவன் அடுக்கி கொண்டே போக,

“என்னது அப்பாகிட்டயா…. மறுபடியுமா?” என்று பதறி எழுந்தாள்.

உடன் எழுந்தவன், லேசாக சிரித்து, “பயப்படாதே மீரா!” அவள் நெற்றியில் செல்லமாக முட்டி, “அவர் அடியே கொடுத்தாலும், பாதியில விட்டுட்டு ஓட மாட்டேன்.” என்று சொல்லி, கன்னத்தில் குழி விழ கண்சிமிட்டினான்.

அவன் பேச்சில் ஒரு தன்னம்பிக்கையை உணர்ந்தவள், சம்மதம் என்று தலையசைத்தாள்.

கடிகாரத்தில், மணியை பார்த்தவன், “ஒரு மணி நேரம் தான் பர்மிஷன் போட்டிருக்கேன்.” புறப்பட வேண்டும் என்று சொல்லி, “நீ எப்போ ஆஃபிஸுக்கு வர?” என்று வினவினான்.

“திங்கட்கிழமை வரேன் டா.” சொல்லி வாசல் வரை பின் தொடர்ந்தாள்.

“அப்போ வர வெள்ளிக்கிழமை மகேஷ் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு….” அவன் வினவ,

மெல்லிய சிரிப்புடன், “கண்டிப்பா வரேன்…. ஆனா….” என்று இழுத்து, “அங்க எல்லார்கிட்டயும் உன் தோழின்னு சொல்லணுமா, இல்ல காதலின்னு சொல்லணுமா? “அவன் அனுப்பிய குறுஞ்செய்தியை நினைவுபடுத்த, கையில் இருந்த கைப்பேசியை ஆட்டிக் காட்டினாள்.

“மன்னிச்சுக்க டி! இனி எந்த சூழ்நிலையிலும், அப்படி சொல்லி, உன் மனச காயப்படுத்த மாட்டேன்.” அவன் வருந்த,

“கடைசி நிமிஷத்துல நான் வீட்டுல சொன்னதும் தவறு தான் டா.” இவள் பங்குக்கு வருந்த,

‘பரவாயில்ல” என்று அவள் கன்னத்தில் செல்லமாக தட்டி புறப்பட்டான்.

“என் கேள்விக்கு பதில் சொல்லாம கிளம்பினா எப்படி?” வலிய வந்து வம்பிழுத்தாள்.

வாயிற் கதவு அருகே சென்றவன், “ம்ம்…. வருங்கால மனைவின்னு சொல்லு.” அவளை கண்களால் பருகியபடி பதில் சொல்ல, மகிழ்ச்சியும், பெருமையும் அவள் முகத்தில் நடனம் ஆடியது.

எதார்தத்தை எடுத்து சொல்லி சமாதானம் செய்ய வந்தவன், அவளின் எல்லையில்லா அன்புக்கு சரணாகதி ஆனான்.

இவர்கள் வாயிற் கதவு அருகே பேசும் சத்தத்தை கேட்ட நிர்மலா, பக்குவமான காதல் தான் ஜெயித்தது என்று புரிந்து கொண்டாள். தன் கணவன் மனம் மாறுவாரா என்பது தான் அவள் தற்போதிய கவலை.

மகள் பட்டுத் திருந்த போகிறாளா, இல்லை தந்தைக்கு பாடம் கற்பிக்க போகிறாளா…. பதில் சொல்லும் அவர்கள் புரிதலில் ஒளிந்து கொண்டிருக்கும் அன்பின் ஆழம்….

பின் குறிப்பு:

சண்டைகளும், கோபங்களும், நிறைந்த காதல், வெடுக்கென்று கோபித்து வெளியேறும் அலை போன்றது – ஆனால்,

அந்த அலையை சளைக்காமல் திரும்ப திரும்ப இழுத்து கொள்ளும் கடலின் சக்தி, நட்புக்கு உண்டு.

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.