அன்பின் ஆழம் – 08

அலுவலகத்திலிருந்து புறப்பட்ட நண்பர்கள், வீட்டின் அருகே இருந்த பல்பொருள் அங்காடி ஒன்றை வந்தடைந்தனர். மாலை நேரம் என்பதால், கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது. வந்த வேலையை சீக்கிரம் முடிக்கும் பொருட்டு, ஆளுக்கொரு திசையில் நடந்தார்கள்.

ஹரி கடைக்குள் சென்று, காலை உணவுக்கு தேவையான பிரட், ஜாம், மற்றும் சில பழ வகைகளை வாங்கி வர, அரவிந்தன், கடை வாசலில் இருந்த தள்ளுவண்டி உணவகத்திலிருந்து வாங்கிய சப்பாத்தி, சன்னா மசாலா பார்சலோடு அவனுக்காக காத்திருந்தான். விடுமுறை நாட்களில் மட்டும் தான் தடபுடல் சமையல் எல்லாம். மற்றபடி, மதியம் கேண்டீனிலும், இரவு உணவகத்திலும் அருந்தினர்.

அரவிந்தன் பைக்கை உயிர்ப்பிக்க, அவன் கைப்பேசி ஒலித்தது. அழைத்தது தன் அம்மா என்றதும், உடனே எடுத்து பேசினான். இரண்டு நிமிடத்திற்கும் குறைவாக பேசி அழைப்பை துண்டித்தான் அரவிந்தன். ஒரு பக்கம் பேச்சை மட்டுமே கேட்ட ஹரிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

“அம்மா கிட்ட பேச எதுக்கு டா கணக்கு பாக்குற?” கடிந்தான் ஹரி, இரவு உணவுக்கு பின், காற்று வாங்க மொட்டை மாடிக்கு வந்தவுடன்.

‘என்ன கணக்கு….’ என்று யோசிக்க, தான் அம்மாவிடம், இரவு ஒன்பது மணிக்கு மேல் அன்லிமிடெட் டாக் டைம்மில் (Unlimited Talk Time) பேசும் படி வலியுறுத்தியது நினைவுக்கு வர, அதை எண்ணி சிரித்தான்.

“அட…. கணக்கு எல்லாம் இல்ல டா. அந்த நேரத்துல பேசினா தான், சீரியல் பாக்குற ஜோருல சீக்கிரம் பேசிட்டு வெப்பாங்க. இல்லேன்னா, வீடு பாரு…. நாங்களும் உன்னோட வந்து இருக்கோம்னு கதையளக்க ஆரம்பிச்சிடுவாங்க.”

“அவங்க கேட்கறதுல என்ன தப்பு? அவங்கள அழைச்சிட்டு வர வேண்டியது தானே.” அக்கறையாய் ஹரி சொல்ல,

“அதெல்லாம், உனக்கும் மீராவுக்கும் கல்யாணமான அப்புறம் பார்த்துக்கலாம்…. அதுவரைக்கும், பேச்சுலர் லைஃப் என்ஜாய் பண்ணலாம்.” எதார்த்தமாக பதிலளித்தான் அரவிந்தன்.

“அது…. அது…. நாங்க ஒரு வருஷத்துக்கு பிறகு கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கோம்.” தயக்கதுடன் சொல்லி, அவனை அது வரை காத்திருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டான் ஹரி.

ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல், “சரி! பார்க்கலாம்” என்று மட்டும் அரவிந்தன் பதில் சொல்ல, அதுவே ஹரிக்கு வேதனையாக இருந்தது.

“நீயும் சீக்கிரம் லைஃப்ல செட்டில் ஆகணும் டா,” வாடிய குரலில் வருந்தினான் ஹரி.

“அதெல்லாம் செட்டில் ஆயிடலாம்.” நண்பனின் தோளை தட்டி, “ஒரு வருஷம் இருக்குல்ல…. கல்யாணமே செஞ்சிக்கலாம்….” என்று சொல்லி கண்சிமிட்டினான்.

“அதவிட வேறென்ன எனக்கு பெருசா சந்தோஷம் கொடுத்திட முடியும்.” உள்ளப்பூர்வமாக சொல்லி, நண்பனை தோளோடு சேர்த்து அணைத்தான் ஹரி.

தன் பெற்றோரை சென்னைக்கு அழைத்து வருவதை, அரவிந்தன் ஒத்திப்போட்டதற்கு காரணமே ஹரி தான். அவனை விட்டு சென்றால், வீட்டு வாடகை, மற்றும் இதர செலவுகளை எல்லாம், ஹரி தனியாக சமாளிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணினான். செலவுகளை கட்டுப்படுத்த, அவன் பேச்சுலர்கள் வாழும் விடுதியில் (Bachelor Accommodation) போய் தங்க கூட தயங்க மாட்டான் என்றும் அறிந்தான்.

அங்கு தங்குவதில் உள்ள சிரமங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இப்போது, வேறு சில காரணங்களும் அவன் மனதில் ஓடியது. அன்னியர்களோடு தங்கும் போது, புத்தகம் பதிப்பிக்க தேவையான சுற்றுசூழல்களும், வசதி வாய்ப்புகளும் குறைவாக இருக்கும் என்று நம்பினான். அதைவிட முக்கியமாக, மீரா, அவனை எப்படி ஒரு ஆண்கள் தங்கும் விடுதியில் போய் சந்திக்க முடியும் என்றும் கவலை கொண்டான். அவர்கள் திருமணம் நல்ல படியாக நடக்கும் வரை, ஹரியுடன் தான் இருக்க வேண்டும் என்று மனதில் இரகசிய தீர்மானம் செய்து கொண்டான்.

“சரி! அப்போ முதல்ல இந்த மாதிரி விளம்பர பலகைகள் வெச்சு, வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்போம். நீங்களும், உங்க குழு உறுப்பினர்கள் கிட்ட, என்ன பேசணும், எப்படி பேசணும் எல்லாம் விளக்கி சொல்லுங்க.” மீட்டிங்குக்கு வந்த துறை தலைவர்களுக்கு விளக்கி முடித்தான் அரவிந்தன்.

அன்று சொற்பொழிவில் பேசிய ‘கோர் பாங்கிங்க்’ விழிப்புணர்வு திட்டங்களை, செயலில் கொண்டு வர, தன் கிளையில் இருந்து தொடங்கலாம் என்று எண்ணி, சம்பந்தப்பட்ட ஊழியர்களை சந்தித்து பேசினான். அவர்களும், உடன்பாடு பதிலுடன், கைக்குலுக்கிவிட்டு, ஒவ்வொருவராய், நகர்ந்தனர்.

கதவு வரை சென்ற மீரா, மீண்டும் அவன் எதிரே வந்து நின்றாள்.

“அரவிந்த்! நீயும் சீக்கிரம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செஞ்சி, லைஃப்ல செட்டில் ஆகணும் டா.” மெல்லிய குரலில் சொல்ல,

பார்த்து கொண்டிருந்த ஃபைலை ஒரே திருப்பில் மூடி, “அது எப்படி, புருஷனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசுறீங்க?” நண்பர்கள் திருமணமே செய்து கொண்டது போல பாவித்து, நமுட்டு சிரிப்புடன் அவளை கேட்டான் அரவிந்தன்.

ஒரு கணம் குழம்பினாலும், அவன் ஜாடை பேச்சை புரிந்து கொண்டாள் மீரா. ஹரியும், அவனிடம் இதை பற்றி பேசி இருக்க வேண்டும் என்று நினைத்தாள். இரண்டு நாட்களாக மதிய உணவு இடைவேளை போது, மற்றவர்கள் எல்லாம் கலகலப்பாய் இருக்க, இவன் மட்டும் தனியாக இருந்தது போல் தோன்றியது அவளுக்கு.

“உன்னோட இந்த நிலமைக்கு நான் தானே காரணம்…. உன் காதல்ல….” அவள் முடிக்கும் முன்,

“நீ உன் விருப்பத்த சொன்ன; அவ்வளவுதான் மீரா; நான் அப்போவே அத மறந்துட்டேன்!” எதிர்பார்ப்புகள் இல்லை, அதனால் ஏமாற்றமும் இல்லை என்று உணர்த்தினான்.

“அப்படின்னா அத செயல்ல காட்டு;” வேறொருவரை திருமணம் செய்துக்கொள் என்று சொல்லாமல் சொல்ல,

“காட்டாம…. உன் நெனப்புல தாடி வளத்துட்டு, சோக பாட்டு பாடுவேன் நெனச்சையா?” கிண்டலாக பேசி, வாடிய அவள் முகத்தில் சிரிப்பை வர வைக்க முயன்றான். அவன் வேடிக்கை பேச்செல்லாம் அவள் முன் செல்லாக் காசானது.

“உங்க கல்யாணத்துக்கு நான் என் மனைவியோட தான் வருவேன்! போதுமா?” திடமாய் அவன் சொல்ல,

“அது மட்டும் நடந்தா, நான் ரொம்ப சந்தோஷ படுவேன் டா!” நிம்மதி முகத்தில் மலர, அங்கிருந்து நகர்ந்தாள்.

“வேணும்னா, உங்க அப்பாகிட்ட, எனக்கு ஒரு நல்ல பொண்ணா பார்க்க சொல்லு….” உரக்கச் சொல்லி, அவளை வம்பிழுத்தான்.

பாதி திறந்த கதவின் இடுக்கில் நின்றவள், கேள்வியாய் அவனை பார்க்க, “உனக்கு மாப்பிள்ளை தேடுற வேலை தான் அவருக்கு இப்போ மிச்சமே” என்று சீண்ட, அவள் ஒருவழியாக சிரித்தாள்.

இருக்கைக்கு வந்தவளுக்கு, ‘அப்பா’ என்றுதும், ஹரியை பற்றி இன்னும் வீட்டில் சொல்லாதது தான் நினைவுக்கு வந்தது. இரண்டு நாட்களாக பேசலாம் என்று கிளம்பியவளுக்கு ஒரு வித தயக்கம். நினைத்த அளவுக்கு சுலபமாய் இல்லை. இன்று மாலை, ஏழு மணிக்கு ஹரி வருவதற்குள் எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று கவலையாய் இருந்தாள்.   

“என்னம்மா! இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” கடிகாரம் சரியாக தான் ஓடுகிறதா என்று சரிபார்த்து கொண்டே மகளிடம் கேட்டாள் நிர்மலா.

“உங்க ரெண்டு பேர்கிட்டயும் முக்கியமான ஒரு விஷயம் பேசணும்.” மீரா மெல்லமாய் தொடங்கினாள்.

“சரி மா! முதல்ல கை கால் அலம்பிட்டு வந்து ஏதாவது சாப்பிடு; அப்புறம் பேசலாம்.” தாய்க்கே உரிய பாசத்தில் சொன்னாள் நிர்மலா. மீராவும் இயல்பாய் இருப்பது போல் காட்டிக்கொள்ள, அவள் சொற்படி நடந்தாள்.

வரதன், வியாபார விஷயமாக, அதிகாலையிலேயே செங்கல்பட்டு வரை சென்றதால், அவரும் வழக்கத்துக்கு மாறாக, சீக்கிரமே வீடு திரும்பியிருந்தார்.

பங்கு சந்தை நிலவரம், பெட்ரோல் விலை உயர்வு என்று தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தவரின், அருகில் வந்து அமர்ந்தாள் மீரா. அதற்குள் மணி ஆறாகி விட்டது என்று உணர்ந்து, நேராக விஷயத்திற்கு வந்தாள்.

“அப்பா! நான் ஒருத்தர கல்யாணம் செஞ்சிக்க விரும்பறேன்!” சொல்லிவிட்டு, பதற்றத்துடன் அவர் முகத்தை பார்த்தாள்.

வீட்டுப் பிரச்சனை, நாட்டுப் பிரச்சனையை விட பெரியதாக இருக்கும் என்று எண்ணி, தொலைக்காட்சியை அணைத்தவர், அவள் பக்கம் திரும்பி,

“நல்லது மா! யார் அந்த பையன்? எவ்வளவு நாளா பழக்கம்?” வழக்கமான கேள்விகளை அடுக்கினார், எந்தவித எதிர்ப்போ, அதிர்ச்சியோ காட்டாமல்.

“என்னடி சொல்லற?” என்று நிர்மலா தான் கொஞ்சம் பதறினாள்.

“அவள பேசவிடு நிர்மலா!” மனைவியை கடிந்துகொண்டவர், “அவளுக்கும் வயசாயிடுச்சு…. பக்குவமா முடிவெடுப்பா.” என்று மகள் மீதுள்ள நம்பிக்கையை எடுத்துரைத்தார்.

அப்பாவின் நம்பிக்கை அவளுக்கு தெம்பூட்டியது, “உங்களுக்கு நல்லா தெரிஞ்ச…. பழகினவன் தான் பா….” மெல்ல மெல்ல அவள் துப்பு கொடுக்க,

“யாரு அரவிந்தனா?” நிர்மலா மீண்டும் படபடவென்று கேட்டு குறுக்கிட்டாள்.

“இல்லம்மா! ஹரி!” ஒரு வழியாக மர்மத்தை உடைத்து, அருகில் இருந்த தந்தையையும், எதிரே நின்ற தாயையும் மாறி மாறி பதற்றத்துடன் பார்த்தாள்.

“அவனா?” என்று முகம் சுளித்த தந்தை, “அவன் உனக்கு கீழே வேலை பாக்குற பையன் இல்ல?” கேட்க, ‘ஆம்’ என்பது போல் தலையை மட்டும் அசைத்தாள் மீரா.

“பதவி, ஊதியம், இப்படி எந்த விதத்திலும் உனக்கு சரிசமமா கூட இல்லாத ஒருத்தன எப்படிமா உன்னால காதலிக்க முடிஞ்சிது.” மகள் முடிவில் திருப்தி இல்லாதவராய், பேசி, “இந்த காலத்து காதலெல்லாம் புரிஞ்சிக்கவே முடியல.” என்று பெருமூச்சுவிட்டார்.

குறைகளை மட்டுமே சுட்டிக்காட்டி பேசும் தந்தையிடம், “பணம், பதவி மட்டும் இருந்தா போதுமா பா?” எதிர்கேள்வி கேட்டு, “நல்ல குணம் வேண்டாமா….” அவன் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல முயன்றாள்.

அவள் வாதத்தில் எரிச்சலடைந்தவர், “முதல்ல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோ மீரா! நாங்க காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு சொல்லற பெற்றோர் இல்ல. உனக்கு சரியான வாழ்க்கைத்துணைய தேர்ந்தெடுன்னு தான் சொல்லறோம்.” மனைவிக்கும் சேர்த்து பன்மையில் திடமாய் விளக்கினார்.

“அப்பா சொல்றது சரிதானேடி?” நிர்மலா அவள் பங்குக்கு ஒத்தூத,

அன்னை முகத்தை பார்த்தவள், “அவன் இப்ப வேணும்னா சுமாரான வேலையில் இருக்கலாம். ஆனா ஒரு நாள், கண்டிப்பா என்னவிட உயர்ந்த நிலைக்கு வருவான் மா.” தர்க்கம் செய்தாள் மீரா.

மனைவி பேசும் முன், “அது எப்படி, இத்தன நாளா வராத முன்னேற்றம், திடீர்னு வந்துடும்? குறுக்கிட்டார் வரதன்.

“ஏனா இதுவர, கட்டாயத்துனால பிடிக்காத வேலைய செஞ்சிட்டியிருந்தான்…. இனி அவனுக்கு பிடிச்ச வேலைய செய்யப்போறான்…. “தந்தையின் கண்களை பார்த்து அழுத்தமாய் சொல்ல,

“அது என்ன பிடிச்ச வேலை?” வங்கி வேலையை விட சிறந்தது வேறென்ன இருந்திட முடியும் என்பது போல் வினவினார்.

ஹரியை பற்றி உயர்வாய் எடுத்து கூற தக்க சந்தர்ப்பம் கிடைத்தது போல் தோன்றியது அவளுக்கு. இருக்கும் குறுகிய நேரத்தில், அவர் மனதை கவரும்படி நச்சுனு நாலு விஷயம் உயர்வாக சொன்னால் போதும் என்று நினைத்தாள் மீரா.

“அவன் ஒரு சிறந்த எழுத்தாளன் பா….” என்று தொடங்கி பெருமூச்சுவிட்டவள், “அவன் இதுவர பதினெட்டு கதைகள் எழுதியிருக்கான் பா…. ஆனா எதையும் பதிப்பிக்க முடியாத சூழ்நிலைனால, அவன் ஆசைகளை அப்படியே புதச்சிட்டான் பா.” மென்மையாக அவன் திறமையை எடுத்துச் சொல்ல,

ஏளனமாக சிரித்து, மறுப்பாய் தலையசைத்தவர், “இந்த காலத்துல யார் தான் எழுதறது இல்ல, தெருவுக்கு ஒருத்தன் கதை எழுதறான், அதையும் ஒருத்தன் சினிமா படமா வேற எடுக்கறான்.” கலை உலகத்தில் கடுகளவு கூட நாட்டம் இல்லாதவர் கொச்சையாய் விமர்சிக்க,

“ஹரி ஒண்ணும் ஏனோதானோன்னு எழுதறவன் இல்ல…. ஒவ்வொரு கதையும் கருத்தூன்றி எழுதியிருக்கான் தெரியுமா…. ” குரலை உசத்தி வாதாடினாள் மீரா.

மகள் எதிர்த்து பேசுவதில், கோபமடைந்தவர், “அவ்வளவு நல்லா எழுதியிருந்தா, இத்தனை நாளா ஏன் ஒரு கதையகூட வெளியிடல்ல?” காரணம் கேட்டு அவரும் குரலை உயர்த்த, கடிகாரத்தை பார்த்தாள் மீரா.

அவன் எந்த நேரமும் வந்துவிடுவான் என்று உணர்ந்து, தழைந்து போனாள் மீரா. “அவன் குடும்ப சூழ்நிலை தான் காரணம் பா; அதான், நான் அவனுக்கு பணம் கொடுத்து உதவலாமேன்னு….” பேச்சோடு பேச்சாக சொல்ல வர,

“ஹா…. ஹா…. “பெருங்குரலில் சிரித்தவர், “அதானே பார்த்தேன்…. ஆதாயம் இல்லாம உன்ன அவன் காதலிக்கல….” அவர் சொல்லவும் காலிங்க் பெல் அடிக்கவும் சரியாக இருந்தது.

சரியாக ஏழு மணி; ஹரி தான் வந்திருப்பான் என்று அறிந்தாள் மீரா. கடைசி நிமிடம் வரை வீட்டில் சொல்லாதது அவள் தவறு. அதை உணர்ந்தவள், அப்பாவிடம் கைக்கூப்பி, தாழ்ந்த குரலில் கெஞ்சினாள்.

“அப்பா! ஹரி உங்ககிட்ட பணம் விஷயம் பேசத்தான் வந்திருக்கான். உங்களுக்கு இதுல உடன்பாடு இல்லேனாலும் பரவாயில்ல…. அவன்கிட்ட சாதரணமா பேசுங்க…. அவன் மனச காயப்படுத்துறா மாதிரி எதையும் சொல்லிடாதீங்க…. நம்ம அவன் கிளம்பினத்துக்கு அப்புறம் திரும்ப பேசலாம்…. ப்ளீஸ் பா!”

அவர் முகத்தில் கோபம் குறையவில்லை என்றாலும், மௌனமாக இருந்தார். தந்தை தன் வேண்டுக்கோளுக்கு இணங்கி நடப்பார் என்று நம்பியவள், கதவை நோக்கி நடந்தாள்.

“வா ஹரி! உள்ள வா!” சிரமப்பட்டு முகத்தில் சிரிப்பை வரவழைத்து அழைத்தாள் மீரா.

“எல்லாம் ஓ. கே தானே?” தனியே பேச கிடைத்த ஒரு நிமிடத்தில் உறுதி செய்துகொண்டான் ஹரி.

“பார்த்து பொறுமையா பேசு டா!” அவன் கைகளை இறுக பிடித்து, மீரா துப்பு கொடுக்க, இருவரும் உள்ளே சென்றனர்.

அப்பாவிடம், அவன் வந்திருப்பதை தெரிவித்ததும், அவர் கண்டுகொள்ளாமல் இருந்தார். நிர்மலாவும், கணவன் வழி நடந்தாள். அதை எல்லாம் கவனித்தாலும், கவனிக்காதவன் போல ஹரி சகஜமாக வணக்கம் சொல்ல, மீராவே முன் வந்து, அவனை உட்கார்ந்து பேச சொன்னாள்.

வரதனுக்கு வலதுபுறம் இருந்த சோஃபாவில் அமர்ந்தவன், சுற்றி வளைக்காமல், “மீரா சொல்லியிருப்பான்னு நினைக்கறேன்….” என்றதும்,

“உம்…. உம்…. எல்லாம் தெரியும், நீ எதுக்கு வந்தன்னு சொல்லு….” சிடுசிடுத்தார் வரதன்.

எதிர்பார்த்தது தான் என்று மனசுக்குள் எண்ணி, எதிரே நின்றுகொண்டிருந்த மீராவிடம் கவலைபட வேண்டாம் என்று கண் ஜாடை காட்டி, வரதன் பக்கம் திரும்பி பேசினான்.

தன் வாழ்க்கையில் இனி நடக்கவே நடக்காது என்று தள்ளி வைத்த கனவுக்கு மீரா தந்த ஊக்கத்தை பற்றியும், இருவரும் திருமணம் செய்துகொள்ள நினைத்ததை பற்றியும், சொல்லி, “பதிப்பிக்க தேவையான முதலீட்டு பணத்தை மீரா தரேன்னு சொல்லியிருக்கா…. நீங்க அனுமதி தந்தா….”

அவன் முழுவதையும் சொல்லி முடிப்பதற்குள், வரதன், கோபத்தின் உச்சியை அடைந்தார்.

“பணம் பறிக்க எவ்வளவோ வழியிருக்கறப்ப, ஏன் பா இப்படி காதல், அது இதுன்னு சொல்லி பெண்கள் மனச கலைக்குறீங்க…. வரதட்சணை கொடுக்கல் வாங்கல் கூட குற்றமா பாக்குற இந்த காலத்துல, காதலிக்கிறேன்னு சொல்லி, பணம் பிடுங்க உனக்கு அசிங்கமா இல்ல?” எடுத்த எடுப்பிலே அவனை அவமானப்படுத்தி பேசினார் வரதன்.

“அப்பா….” என்று மீரா பதற,

“பரவாயில்ல அங்கிள்! உங்க ஆதங்கம் நியாயம் தான்;” அமைதியாக தொடங்கி, “எனக்கும் அவள ஏமாத்தணும்னு எல்லாம் எண்ணம் இல்ல; அப்படி இருந்தா உங்ககிட்ட வந்து அனுமதி கேட்டிருப்பேனா, சொல்லுங்க?” பொறுமையாய் கேட்டு அவரை ஆழ்ந்து பார்த்தான்.

அவன் சொன்னது உண்மையே என்றாலும், அதை ஏற்க, அவர் மனம் இடம் கொடுக்கவில்லை. அதற்கு ஏளனமாக சிரித்தவர்,

“ஆஹா…. அதானே உன் தந்திரம்…. அப்படி வந்து கேட்டாதானே, மீரா கண்ணுக்கு நீ நல்லவனா தெரியுவ; உண்மைய எடுத்து சொல்ற நான் அவளுக்கு கெட்டவனா தெரியுவேன்.” குதர்க்கமாய் சொன்னார்.

தன்மானத்தை சீண்டிய அவர் பேச்சில், “ப்ளீஸ் அங்கிள்! கொடுக்க இஷ்டம் இல்லேன்னா விட்டுடுங்க; தந்திரம் செய்யறேன்னு எல்லாம் சொல்லாதீங்க.” என்று அவனும் திடமாக பேச,

அவன் குரலில் உள்ள ஏற்றத்தை, திமிரு பேச்சு என்று எடுத்துக்கொண்டவர், “உன்ன மாதிரி எதையும் சாதிக்காதவனுக்கு தான் கோபம், ரோஷம் எல்லாம் அதிகமா இருக்கும்.” அவனையே குறை கூறினார்.

அதற்கு விரக்தியில் சிரித்தவன், “குடும்ப பொறுப்புகளுக்காக, லட்சிய கனவை மூட்டை கட்டி வெச்ச, என் நிலமை, உங்கள மாதிரி பணக்காரர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல தான்.” என்று மனம்னொந்து சொல்லி, எழுந்தான் ஹரி.

“ஹரி…. ப்ளீஸ்!” என்று மீரா தடுக்க, அதை பார்த்த வரதன், “பணக்கார பொண்ணா பார்த்து லவ் பண்ணுன்னு உங்க வீட்டுல சொல்லி அனுப்பினாங்களா?” மேலும் அவனை அவமானப்படுத்த,

“ப்ளீஸ் போதும்…. நான் சொல்ல வர எதுவும் உங்களுக்கு தப்பா தான் தெரியும். என் எண்ணம் உண்மையானது; நான் பார்த்துக்கறேன்.” முடிந்த அளவுக்கு பணிவாக சொல்லி, கதவை நோக்கி நடந்தான்.

கையேந்தி இருக்கும் நிலமையிலும் இவனுக்கு இவ்வளவு வீம்பா என்று தோன்றியது வரதனுக்கு. கண்டிப்பாக, மகளிடம் வேறு ஏதாவது சொல்லி அவள் மனதை கலைப்பான் என்று நினைத்து, “டிமாண்டிங் இஸ் பிலோ யுவர் டிக்னிட்டி.” தொழிலதிபருக்கே உள்ள கெத்தில், கம்பீரமாய் அழுத்திச் சொன்னார் வரதன்.

குத்திப் பேசும் தந்தையை பார்த்து முறைத்தவள், “ஹரி! மனசுல எதுவும் வெச்சுகாதே டா! நான் அவர் கிட்ட திரும்பவும் பேசுறேன்.” கெஞ்சலாய் அவனை பின்தொடர, அவனோ திரும்பி கூட பார்க்காமல் வெளியேறினான்.

நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறெதுவும் செய்ய முடியாமல், நின்றாள் நிர்மலா.

வீட்டிற்குள் விரைந்து ஓடி வந்தவள், “நான் அவ்வளவு சொல்லியும், அவன தப்பான கண்ணோட்டத்திலேயே பாக்குறீங்களே…. ஏன் பா?” கண்ணீர் மல்க நொந்து கொண்டாள்.

“முதல் சந்திப்பிலேயே பணம் கேட்டு வரவன, வேற எப்படி பார்க்க சொல்ற?” கேள்வியை மகளிடமே திருப்பினார் வரதன்.

“பணம் தரேன்னு நான் தானே பா அவன்கிட்ட சொல்லி கட்டாயப்படுத்தினேன்.” தந்தைக்கு நினைவூட்ட, அதை ஏற்காதவர்,

“கொடுக்கறேன்னு நீ சொன்னாலும், அதை அவன் மறுத்திருக்கணும்…. அதுதான் புருஷ லட்சணம்.” மகளுக்கு கடைசியாக ஒரு முறை புரிய வைக்க முயன்றார். மேலும் பேச விருப்பமில்லாதவர், தன் அறையை நோக்கி நடக்க, அவரை வழிமறித்தாள் மீரா.

‘ஒண்ணு சொல்லுங்க பா! வியாபாரத்துல, வெற்றி தோல்வி தெரியாமத்தான முதலீடு செய்யறீங்க. ஆனா இவனுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம பழி சுமத்தினா, அது எந்த விதத்துல நியாயம்?” அவர் வழியிலேயே தர்க்கம் செய்தாள்.

அவள் முகத்தை கண்சிமிட்டாமல் பார்த்தவர், “வியாபாரமும், வாழ்க்கையும் ஒண்ணா உனக்கு?” திடமாய் கேட்டு, “இது இல்லேன்னா அதுன்னு வியாபரம் மாதிரி வாழ்க்கைய பார்க்க முடியுமா சொல்லு?” மனம் வருந்தி கேட்டார்.

தான் சொன்ன உதாரணம் தவறு என்று உணர்ந்தவள், “நம்புங்க பா! இது நான் நிதானமா எடுத்த முடிவுதான்.” என்று மன்றாடினாள்.

எவ்வளவு சொல்லியும் புரிந்து கொள்ளாத மகளை பார்த்து, “இங்க பாரு மீரா! நீ என்கிட்ட அனுமதி கேட்டு வரல்ல. முடிவெடுத்துட்டு, தகவல் சொல்லற; அவ்வளவுதான். உன் இஷ்டம் போல செஞ்சிக்கோ. இனி நான் உன் விஷயத்துல தலையிடமாட்டேன்.” வெறுத்து பேசி, தன் அறைக்குள் புகுந்து, கோபத்தை, கதவடைப்பதில் காட்டினார்.

தந்தைக்கு புரியவைப்பதில் தோற்றுப்போனவள், ஹரியிடமாவது நடந்ததுக்கெல்லாம் மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்து, அவள் அறைக்குள் புகுந்து தாளிட்டாள்.

இருதுருவமாய் போகும் கணவனையும், மகளையும் அமைதியாய் கவனித்து கொண்டிருந்த நிர்மலா, பேசுவதை காட்டிலும் ஆறப்போடுவதே நல்லது என்று நிதானம் கடைப்பிடித்தாள்.

அப்பாவிடம் பேசி புரிய வைக்க முடியாது; செயலில் தான் காட்ட வேண்டும் என்று முடிவுசெய்தாள் மீரா. ஹரியிடம் மன்னிப்பு கேட்டு, அவனை, எதை பற்றியும் கவலைப்படாமல், தன் குறிக்கோளில் மட்டும் கவனம் செலுத்த சொல்ல வேண்டும் என்றும் எண்ணினாள். அவன் நல்ல நிலமைக்கு வந்தால், அப்பா தானாக மனம் மாறுவார் என்று உறுதியாக நம்பினாள்.

ஹரியிடம் பேச, கைப்பேசியை எடுத்தவளுக்கு, வாழ்க்கையே சூன்யமானது போன்று தோன்றியது…. ஹரி அவளுக்கு அனுப்பிய மூன்று வார்த்தை குறுஞ்செய்தியை பார்த்து.

“சரி” என்று பதில் அனுப்பி, கைப்பேசியை ஸ்விட்ச் ஆஃப் செய்தாள்.

அக்கறை என்ற பெயரில், தன் காதலை அலட்சியம் செய்த தந்தைக்காகவும், அவமதிக்கப்பட்டேன் என்று புலம்பும் காதலனுக்காகவும் அழக்கூட மறுத்தாள் மீரா.

புயலிலும் சூறாவளி காற்றிலும், மூழ்கியே தீருவேன் என்று அடம்பிடிப்பவளை, முதலில் கரம் கொடுத்து மீட்க போவது யார்?

பக்குவமான காதல் ஜெயித்ததா,

பாசம் கண்ணை மறைத்ததா-இல்லை

பிடிவாதம் தான் பிளவை உண்டாக்கியதா?

பதில் சொல்லும் அன்பின் ஆழம்….