அன்பின் ஆழம் – 07
போக்குவரத்து நெரிசல்களை எல்லாம் கடந்து, ஒரு வழியாக அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தவள், வழக்கமாக வண்டி நிறுத்தும் இடத்தில் ஏதோ பழுதுபார்க்கும் வேலை நடப்பதை கவனித்தாள். அத்தனை தூரம் வந்த அலுப்பில், பெருமூச்சுவிட்டவள், சுற்றி முற்றி, வேறு காலியிடம் தேட, பத்தடி தூரத்தில் ஒன்று தென்பட்டது. அந்த குறுகிய இடத்தில், எப்படியோ வண்டியை நுழைக்க முடிந்ததே தவிர, சைடு ஸ்டாண்ட் போடும் அளவுக்கு துளியும் இடமில்லை; சென்டர் ஸ்டாண்ட் போட இவளுக்கு வரவில்லை.
வண்டியுடன் மல்லுகட்டி கொண்டிருக்க, பின்முதுகில் யாரோ தட்டுவதை உணர்ந்து, திடுக்கிட்டு திரும்பினாள்.
“ஹரி…. நீயா!” என்று அவள் பதற, அவன் எதுவும் பேசாமல், கையை மட்டும் அசைத்து, வெளியே வர சொல்லி, இரண்டே நொடியில், வண்டியை துல்லியமாக நிறுத்தினான்.
“பாரு மீரா! பையன், எப்படி பொறுப்பா வேலை செய்யறான்!” கிண்டல் செய்து கொண்டே, திடீரென்று முளைத்தவன் போல் வந்து நின்றான் அரவிந்தன்.
அவர்களும் கிட்டத்தட்ட அதே சமயத்தில் வந்ததால் மீரா வண்டியுடன் போராடுவதை கவனித்தனர். ஹரி அங்கேயே இறங்க, அரவிந்தன் தன் வண்டியை நிறுத்திவிட்டு பின்தொடர்ந்தான்.
“நான் மட்டும் உடனே வண்டிய நிறுத்தலேனா, அப்படியே குதிச்சிருப்பான் தெரியுமா?” அரவிந்தன் விடாமல் நண்பனை புகழ்ந்துதள்ள,
“அவனுக்கு அந்த அளவுக்கெல்லாம் என் மேல பாசம் இல்ல….” ஹரியை முறைத்தபடி, அரவிந்தனுக்கு பதில் சொன்னாள் மீரா. அவன் எழுதிய மூன்று வார்த்தை காதல் கடிதம், அப்போது அவள் கண்முன் நின்றது.
அவள் ஜாடை பேச்சு, அவன் மௌனம், இரண்டையும் கவனித்தவன், “காதலிக்க ஆரம்பிச்சு, முழுசா ஒரு நாள் கூட ஆகல…. அதுக்குள்ள சண்டையா?” புரியாதவனாய் வினவ,
“இவளுக்கு வேற வேலை இல்ல டா!” கண்டுகொள்ளாதே என்றான் ஹரி.
ஹரி நிதானமாக பேச, அரவிந்தனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. அவர்களே பேசி தீர்த்து கொள்ளட்டும் என்று நினைத்து, “ஆளவிடுங்க சாமி! உங்க சண்டைக்குள்ள நான் வரல்ல…. எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு!” என்று சொல்லி நழுவினான்.
“உனக்கு என்னடி பிரச்சனை?” நண்பன் நகர்ந்ததும் மீராவை கேட்டான் ஹரி.
“உனக்கு என்ன பிடிச்சிருக்கா இல்லையா ஹரி?” திடமாக கேட்டு, “நீயும் உன் காதல் கடிதமும்….” தலையை தொங்க போட்டு முணுமுணுத்தாள் மீரா.
“பிடிக்காம தான் சரின்னு சொன்னேனா?” அவனும் திடமாய் சொல்லி, “ஒரு சில விஷயங்கள உன்னோட பேசணும்னு நெனச்சு, அப்படி எழுதினேன்.” விளக்கினான்.
“உன் சஸ்பென்ஸ் எல்லாம் கதை எழுதுறதோட நிறுத்திக்க…. என்கிட்ட வேண்டாம்!” தீர்மானமாக சொல்லி, “இப்ப சொல்லு…. என்ன விஷயம்?” என்று வினவினாள்.
“இப்ப வேண்டாம்; சாயங்காலம் வீட்டுக்கு போகும் போது பேசலாம்!” யோசனை சொல்ல, அவளும் சம்மதித்தாள். இருவரும் அலுவலகத்திற்குள் நுழைய,
“ஹரி…. அப்போ நம்ம விஷயத்த பற்றி, கீதா, மகேஷ் கிட்ட சொல்லிடலாமா?” மெல்லிய குரலில் மீரா குழைய,
“உனக்கு இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா?” பார்வையால் வருடியபடி அவன் கேட்க, வெட்கத்தில் அவள் முகம் சிவந்தது.
பஞ்ச பாண்டவ நண்பர்கள் வெகு நாட்களுக்கு பிறகு, லன்ச் பிரேக்கில் ஒன்று கூடினர். விழாவை பற்றியும், தினசரி அலுவலக நிகழ்வுகளை பற்றியும் கிசுகிசுத்த படி, உண்டு மகிழ்ந்தனர்.
மகேஷ், நண்பர்கள் நால்வர் கையிலும், ஆளுக்கொரு பத்திரிக்கை கொடுத்து,
“அடுத்த வெள்ளிக்கிழமை எங்க புது வீடு கிரகப்பிரவேசம். எல்லாரும் கட்டாயம் வந்திடணும், சரியா?” அன்பாக அழைத்தான்.
நண்பர்கள் அதை பிரித்து, முன்னும் பின்னுமாக, அதன் வடிவமைப்பு, கொடுத்துள்ள விவரங்கள் என விமர்சனம் செய்தனர்.
(இவர்கள் பேசி முடிப்பதற்குள், நம்ம, மகேஷ் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம்.)
இவர்கள் நால்வரும், வீட்டிற்கு ஒற்றை பிள்ளைகள் என்றால், அவன், அக்கா தம்பியுடன் பிறந்தவன். வேலைக்கு சேர்ந்த ஒரு வருடத்திலேயே, தன் மாமன் மகள் மைதிலியை திருமணம் செய்து கொண்டான். ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்த்திக்கு ஒரு மகன் என்று பேர் சொல்லும் பிள்ளைகளுடன் அளவான குடும்பம். அவன் தந்தை, தன் உழைப்பில் கட்டிய தனி வீட்டை, இன்று அடுக்குமாடி வீடாக மாற்றி, ‘பிரிந்தும் இணைந்திருப்போம்’ என்று தன் மூன்று பிள்ளைகளுக்கும் சொத்தை பிரித்து தந்திருந்தார். மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வீட்டின் கிரகப்பிரவேச விழாவிற்கு தான் நண்பர்களை அழைத்தான் மகேஷ்.
“வாழ்த்துக்கள் டா மச்சான்! கண்டிப்பா வரேன்.” அரவிந்தன் பத்திரிக்கையை மடித்தபடி கூற,
“முதலாளியே வரேன்னு சொல்லிட்டான்; எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்ல; கண்டிப்பா வரோம்!” அனைவர் சார்பிலும், சொல்லி, மீரா, அரவிந்தனை பார்த்து கண் சிமிட்டினாள்.
“பேருக்கு தான் நான் முதலாளி; யாராவது என்ன மதிக்கிறீங்களா!” என்று, அவளை முறைத்தான்.
“மன்னிச்சுக்க மகேஷ்! என்னால வர முடியாது!” கீதா தாழ்ந்த குரலில் சொல்ல, அனைவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பியது.
“அடுத்த புதன்கிழமை, பிரசவத்துக்காக அம்மா வீட்டுக்கு, ஊருக்கு புறப்பட நாள் பார்த்திருக்காங்க! அதுக்கு பிறகு நாள் ஒண்ணுமே சரி இல்லையாம்!” இடது கையால் இடுப்பை தாங்கி, நிமிர்ந்து அமர்ந்து வருந்தினாள் கீதா.
“இவ்வளவு சீக்கிரம் லீவு எடுத்தா பணிநீக்கம் செய்ய வாய்ப்புகள் அதிகமே!” அக்கறையாய் மகேஷ் கேட்க,
“அது ஒண்ணும் பிரச்சனை இல்ல டா; அவ ‘ஊதிய இழப்பு’ (Loss of Pay) அடிப்படையில் லீவு எடுக்க ஏற்பாடு செய்யறேன்” யோசனை சொன்னான் அரவிந்தன்.
“அப்போ, அவளுக்கு பதிலா, வேற யாராவது தற்காலிகமா வேலைக்கு சேர்க்க போறியா?” மீரா அடுத்த சந்தேகம் எழுப்பினாள்.
“அதுக்கு அவசியமில்லை. உன் குழு உறுப்பினர்களுக்கு, சமமா வேலைய பிரிச்சு கொடுத்திடு; கொஞ்சம் கூடுதல் பொறுப்பு, ஹரி எடுத்துகிட்டா போதும்; நிலமைய சமாளிச்சுடலாம்.” யோசனை சொல்லி,
“அதுவும் இப்போ, ஹரி நீ சொல்லற எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டுவானே” மீராவை குறும்பாக பார்த்தான்.
மீரா முகத்தில் ஒரு வெட்கம், ஹரி முகத்தில் ஒரு புன்னகை, என்று கவனித்த கீதா, “என்னடி நடக்குது இங்க?” இருவரையும் மாறி மாறி பார்த்து கேட்டாள்.
“அது…. அது…. ஹரியும் நானும் கல்யாணம் செஞ்சிக்கலாம்னு இருக்கோம்!” உதடுகள் சொல்ல, கண்கள் தன்னவனை வருடியது.
“அடிப்பாவி! இது எப்போ நடந்தது? அவன் வேல செய்யலேன்னு அப்படி புலம்புவ. இப்போ எங்கேருந்து வந்தது இந்த காதல், கல்யாணம் எல்லாம்? சொல்லு! சொல்லு!” அருகில் இருக்கும் தோழியின் கன்னத்தை செல்லமாக கிள்ளி கேட்டாள் கீதா.
“ச்சீ போடி!” வெட்கமடைந்தவள் தலைதாழ்த்தி, பொய்கோபம் கொள்ள, மகேஷ் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தான்.
மீதமுள்ள மதிய உணவு இடைவேளையை, புது காதல் ஜோடிகளை, ஓட்டியும், கிண்டல் செய்தும் கழித்தனர்.
மாலை வண்டி நிறுத்திய இடத்திற்கு, வந்தவள், ஹரியிடம் சாவியை நீட்ட, அவன் அதை வாங்க மறுத்தான்.
“நம்ம அன்னைக்கு மாதிரி பேசிகிட்டே வீட்டுக்கு நடந்து போகலாம்!” என்றதும், புருவங்களை உயர்த்தி அவனை ஆழமாய் பார்த்து தலையசைத்தாள்.
‘இவங்க லவ் பண்ண, ஆனாவூனா என்ன அம்போன்னு விட்டுட்டு போறாங்களே’ புலம்பும் சன்னியின் கூக்குரலை காதில் வாங்காமல் சாலையை நோக்கி நடந்தனர்.
மாலை நேரம் என்பதால், இதமான தென்றல் வீசியதே தவிர, அன்று போல் வெயில் இல்லை. இருவரின் மனமும் ஒத்துப்போனதால், பேச்சில் தயக்கமும் இல்லை. ஹரி, நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.
“மீரா! நம்ம ஒரு வருஷத்துக்கு பிறகு கல்யாணம் செஞ்சிக்கலாமா?” என்று கேட்டான்.
“ஏன் ஹரி? எதுக்கு கல்யாணத்த தள்ளி போடணும்? நமக்குள்ள காதல் வேணும்னா புதுசா முளைச்சிருக்கலாம். ஆனா எத்தனை வருஷமா நல்ல நண்பர்களா இருக்கோம்.” பயம் வேண்டாம் என்று அவள் விளக்கினாள்.
காரணம் அது இல்லை என்பது போல், அவன் மறுப்பாய் தலையசைத்து, “நீ எனக்கு பக்கபலமா இருக்கணும்னு நினைக்கிற; நான், மனைவியா வர உன்ன நல்ல நிலையில வச்சி பார்த்துகணும்னு ஆசைப்படறேன்.” அவள் கண்களை பார்த்து சொல்லி, “அதுமட்டும் இல்ல மீரா…. நீ எனக்காக காத்துக்கிட்டு இருக்கன்ற அந்த எண்ணமே, என்ன லட்சியத்தை நோக்கி வேகமா நகர்த்தும்.” என்று அழுத்தி சொன்னான்.
அதை கேட்டு பூரித்தவள், “உன்னோட நோக்கம் ரொம்ப உயர்ந்தது ஹரி. உனக்காக எத்தனை நாள் வேணும்னாலும் காத்திருக்க நான் தயார்” சம்மதம் சொல்வது போல் தொடங்கி, “ஆனா, உன்னோட இந்த லட்சிய பாதைல தொடக்கத்துலேந்து பயணம் செய்ய விரும்பறேன்; முடிவுல வந்து சொகுசா சேர்ந்து வாழ மட்டும் இல்ல.” சுகதுக்கம் இரண்டிலும் பங்கு வேண்டும் என்று வலியுறுத்தினாள்.
“உம்….” என்று மட்டும் சொல்லி யோசித்தான். “இங்க பாரு ஹரி!” என்று அவன் கையை இறுக பிடித்து, அவளே மேலும் பேசினாள்.
“என் அன்பு உனக்கு மட்டும் தெரிஞ்சா போதும். வெளி உலகத்துக்கு தான் இந்த கல்யாணம், தாலி எல்லாம். உன்னோட மற்ற கடமைகளுக்கு எல்லாம் நான் பொறுப்பு. இந்த வேலைய விட்டுட்டு, எழுதறதுல மட்டும் நீ கவனம் செலுத்து.” என்றாள்.
“இல்ல மீரா!” மறுப்பாய் தலையசைத்து, அவள் கைகளை விலக்கியவன், “இப்போதைக்கு, வேலைய விட வேண்டாம்னு நினைக்கறேன். எழுதறதுல எனக்கு கொஞ்சம் பிடிமானம் வரட்டும்….” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“உனக்கு உன் மேலயே நம்பிக்கை இல்லையா டா?” கடிந்தாள் மீரா.
“நம்பிக்கை இருக்கு; அதி நம்பிக்கை கூடாதூன்னு நினைக்கறேன்.” அவனும் கொஞ்சம் எரிச்சல் கொள்ள, அவள் நிதானம் கடைப்பிடித்தாள்.
“அதுக்கில்ல ஹரி! வேலையும் பார்த்துக்கிட்டு, எழுதவும் செய்யணும்னா, உன் உடம்பு என்னத்துக்கு ஆறது?” அவன் உடல் நலத்தில் அக்கறையுள்ளவளாய் பேச, அவள் முகம் வாடியது.
அவள் பயத்தை போக்கி, இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று புரிய வைக்க முயன்றான். அவள் பக்கம் திரும்பி, “அதுக்கு, நீ என்ன ஆஃபிஸ்ல, பிழுஞ்சு வேல வாங்காம இருந்தாலே போதும்.” குறும்பு பார்வையுடன் அவள் காதில் கிசுகிசுத்தான்.
அவன் பேச்சில் மயங்கியது என்னமோ உண்மைதான். ஆனால், அதை வெளிக்காட்டாமல், முறைத்தவள், “சரி பார்த்துக்கலாம்! அதுக்குன்னு என்கிட்ட எந்த சிறப்பு சலுகையும் எதிர்பார்க்க கூடாது புரிஞ்சுதா?” ஆள்கட்டி விரலை உயர்த்தி காட்டி கண்சிமிட்டினாள்.
அதற்கு அவன், “அடீங்க!” என்று அவளை செல்லமாக விரட்ட, தப்பிக்க நினைத்தவள், முன் செல்லும் ஒரு பெண் மேல் சரிந்தாள். அந்த பெண் இவளை மேலும் கீழும் பார்க்கவும், இவள் அசடுவழியவும், ஹரி சிரிப்பை அடக்கி கொண்டு ரசித்தான்.
இருவரும், இருக்கும் இடம் உணர்ந்து, கவனத்தை சாலையில் திருப்பி, சில நிமிடங்கள் மௌனமாக நடந்தனர்.
“சரி, எப்போ பதிப்பிக்கும் வேலைய தொடங்க போறீங்க எழுத்தாளரே?” செல்லம் கொஞ்சினாள் மீரா.
“சீக்கிரமே மீரா! அரவிந்த், எனக்கு ஒரு பர்சனல் லோனுக்கு ஏற்பாடு செய்யுறதா சொல்லியிருக்கான். அது கிடைச்சதும்….” அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“மறந்துட்டியா ஹரி! அதுக்குதான் என் சேமிப்பு பணம் உபயோகிக்கலாம்னு சொன்னேனே. மேலும் தேவைபடுமா?” போதாது என்று நினைத்து கேட்டாள்.
“அத இப்ப தொட வேண்டாம். உனக்கு ஏதாவது திடீர் செலவு வந்தா என்ன பண்ணுவ? தனக்கு வந்த பண நெருக்கடி சூழ்நிலைகளை மனதில் வைத்து அறிவுறித்த,
“எனக்கு ஒரு செலவும் இல்ல…. வரவும் வராது.” புரியாமல் வாதாடினாள்.
“இல்ல இருக்கட்டும்! நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பயன்படுத்திக்கலாம்!” வேறுவிதமாக சொல்லி மறுக்க,
அதற்கும், விளையாட்டாய், அவன் தோளில் தட்டி, “அப்போ நீதான் என்ன நல்லா பார்த்துக்க போறியே. நமக்கு இந்த பணத்தோட தேவையே இருக்காது.” உறுதியாய் பேசினாள்.
“அதுக்கில்ல மீரா…. எல்லாம் நம்ம நினைக்கிற மாதிரி நடக்கும்னு சொல்ல முடியாது பாரு.” அவன் பொறுமயாய் விளக்க, இவள் பொறுமையிழந்தாள்.
“எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்து ஹரி!” அவன் பக்கம் திரும்பி, “உனக்கு என்ன கல்யாணம் செய்துக்க இஷ்டமா இல்லையா? இல்லேனா இப்பவே சொல்லு; நம்ம எப்பவும் போல நல்ல நண்பர்களாவே இருந்திடலாம்.” கேட்டு, நடுரோட்டில் அப்படியே நின்றாள்.
கடந்து செல்பவர்கள் பார்வை எல்லாம், இவர்கள் மீது படுவதை உணர்ந்தவன், அவள் கையை பிடித்து, ஒரு ஓரமாய் இழுத்தான்.
“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி கோபப்படுற?” அவனும் சினந்தான்.
“பின்ன என்ன ஹரி! நான் சொன்ன எல்லா விஷயத்துக்கும், ஏதோ ஒரு காரணம் சொல்லி என்ன மாத்திக்க சொன்ன…. அதுல எல்லாம் ஒரு நியாயம் இருந்துது. ஆனா நம்மகிட்ட பணம் இருக்கறப்ப, நீ வெளிய வட்டிக்குதான் வாங்குவேன்னு சொல்லற…. உன் பணம்னு பிரிச்சு பேசுற…. ஒரு பெண்ணை சார்ந்து இருக்க கூடாதூன்னு உன் சுயகௌரவம் தடுக்குதா?” பொறிந்து தள்ளினாள்.
“என்ன ஏன் டி இவ்வளவு கேவலமா நினைக்கற….” மனம் நொந்தான் ஹரி.
“உன்ன காயப்படுத்தணும்னு அப்படி சொல்லல ஹரி….” தாழ்ந்த குரலில் பேசி, அவன் கரம் பிடித்து, “எல்லா ஆண்களுக்கும் உள்ள சராசரி மனநிலை தானே…. தப்பில்ல டா…. ஒண்ணு மட்டும் தெரிஞ்சிக்க…. நீ என்ன திருமணம் செய்துக்க சம்மதம் சொல்லலேனாலும், ஒரு தோழியா இந்த பணத்த கொடுத்திருப்பேன்…. உன் எழுத்து திறனுக்கு ஒரு காணிக்கையா….” என்று வருந்தி, அவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்.
மீரா சொன்னவற்றை மனதில் அசை போட்டுக்கொண்டே அவளை பின்தொடர்ந்தான் ஹரி. அவள் தன் மேல் வைத்த கண்மூடித்தனமான நம்பிக்கை அவனை பயமுறுத்தியது என்றாலும், அவள் காட்டும் அன்பை கொச்சை படுத்தவும் விரும்பவில்லை.
“உங்க அப்பா அம்மா கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, பணத்த வாங்கிக்கறேன், போதுமா!” அவள் அருகில் சென்றவன், தன் முடிவை சொன்னான்.
“என்னன்னு சொல்லி?” அவனை திரும்பி பார்த்து பதறினாள்.
“வேறென்ன…. நம்ம கல்யாணம் செய்துக்க போறத…. என் கதை பதிப்பிக்க, நீ பணம் கொடுக்க போறத….” என்று சொல்லி, அவளிடம் பணம் வாங்க தனக்கு எந்த சுயகௌரவமும் இல்லை என்பதை வலியுறுத்தினான்.
“அது…. அது…. அதெல்லாம் வேண்டாம். அவங்க என் கணக்குவழக்குல எல்லாம் தலையிடறதே இல்லை…. பாரு…. சன்னி கூட நானேதான் யோசிச்சு வாங்கினேன்!” அவள் சுதந்திரத்தை பற்றி உதாரணமும் சேர்த்து சொல்ல,
அவன் மறுப்பாய் தலையசைத்து, “அது அவங்களுக்கு உன் மேல இருக்க நம்பிக்கை மீரா! நீ எப்பவும் பக்குவமா யோசிச்சு முடிவெடுப்பேன்னு நம்புறாங்க. அந்த நம்பிக்கை உடையாம இருக்கணும்னா, நம்ம விஷயத்த வீட்டுல்ல சொல்லறது தான் சரி.” முடிவாய் சொன்னான்.
“அவங்களுக்கு உன்ன ஏற்கனவே தெரியும்…. காதலுக்கு மறுப்பு எல்லாம் சொல்லமாட்டங்க தான்….” வானத்தை பார்த்து ஆராய்ந்து, அவன் பக்கம் திரும்பியவள், “ஓரு வேள ஒத்துக்கலேனா……” முகத்தில் கவலை வழிய வினவினாள்.
“நம்ம பேசி புரியவைப்போம்; அவங்க புரிஞ்சிக்கர வரைக்கும் காத்திருப்போம்.” சுலபமாய் வழி சொல்லியும், அவள் திருப்தி அடைந்ததாக தெரியவில்லை.
“அவங்களுக்கு சந்தர்ப்பமே கொடுக்காம, தப்பா யோசிக்க கூடாது மீரா.” மேலும் சொல்லி, பெருமூச்சுவிட்டவன், “அவங்களோட நல்லுறவு நம்ம திருமண வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம் மா.” கெஞ்சலாக பேச,
“சரி எழுத்தாளரே! பொண்ணு கேட்டு எப்ப வருவீங்க வீட்டுக்கு?” கேலியாக கேட்டு கண்சிமிட்டினாள்.
“நாளை மறுநாள் வரேன்…. அதுக்குள்ள, ஹரி வல்லவர், நல்லவருன்னு எல்லாம் உங்க அப்பா, அம்மா கிட்ட சொல்லி வை!” அவனும் கிண்டலாக பதில் சொல்ல,
“ம்ம்…. உலகத்துலேயே காதலிக்க ஆரம்பிச்சு நாலே நாளுல வீட்டுல்ல சொல்லறவங்க நம்மளாதான் இருப்போம்” என்று சலித்து கொண்டு, “சரி, என்ன சொல்லணும்…. அதையும்
நீங்களே எழுதி கொடுத்திடுங்க எழுத்தாளரே…. அப்படியே படிச்சு காட்டிடறேன்” மேலும் அவனை ஓட்டினாள்,
“அடீங்க!” என்று அவன் செல்லமாக கை ஓங்க, அவளோ தப்பித்து செல்லாமல், கண்கள் படபடக்க, அவன் தோளில் சாய்ந்தாள்.
‘விட்டுக்கொடுத்து வாழ வேண்டும்!’, இல்லற தர்மத்தின் முதல் பாடத்தை, பாசம்-கோபம், சண்டை-சமாதானம், கொஞ்சல்-கெஞ்சல் என்று ரோலர் கோஸ்டரில் ஒரே நாளில் சவாரி செய்து ஓரளவுக்கு புரிந்து கொண்டனர் நம் காதல் ஜோடிகள்.
இவர்கள் காதல் கதையை பற்றி தெரிந்துகொள்ள போகும் முற்போக்கு சிந்தனை கொண்ட மீராவின் பெற்றோர் பதில் என்ன…. விடை சொல்லும் அவர்கள் மகள் மீது வைத்த அன்பின் ஆழம்….