அன்பின் ஆழம் – 06

ஜன்னல் வழியே நுழைந்த சூரிய கதிர்கள், செல்லமாக முத்தமிட, எழ மனம் இல்லாத குழந்தையை போல், சிணுங்கிக் கொண்டே விழித்தான் ஹரி. கண்ணிமைகள் திறப்பேனா என்று வாதம் செய்ய, சோம்பல் முறித்தபடி எழுந்தவன், கைப்பேசியில் நேரம் பார்க்க, மணி எட்டாகிவிட்டதே என்று திடுக்கிட்டான்.

அறையின் கதவை திறந்து வெளியே வந்தவனின் கண்கள் முதலில் தேடியது, அரவிந்தனை தான். அவன் இல்லை என்றதும், ‘என்ன விட்டுட்டு நீ மட்டும் ஜாக்கிங்க் போயிருக்கியா’ மனதில் சொல்லிக்கொண்டான்.

இருபது நிமிடங்களில் தன் காலை வழக்கங்களை முடித்துவிட்டு வந்தவன், சமையல் அறைக்குள் புகுந்தான். ஜாக்கிங்க் செய்துவிட்டு திரும்பும் நண்பன் பசியாய் வருவான் என்று, காலை உணவு சமைக்க தொடங்கினான்.

“ம்ம்ம்…. உருளைகிழங்கு மசாலா வா? வாசம் மூக்க துளைக்குதே!” ஜாக்கிங்க் சென்று திரும்பியவன், நேராக, சமையல் அறையில் நுழைய,

“உன் வியர்வை நாற்றம் தாங்க முடியல டா! முதல்ல போய் குளி!” நண்பனை விரட்டிவிட்டான் ஹரி.

கால் மணி நேரத்தில் குளித்துவிட்டு, டி-ஷர்ட் ஷார்ட்ஸ்ஸில் வந்தான் அரவிந்தன். தோசை வார்த்து கொடுக்கும் தோழனை பார்க்க ஏதுவாய், மேடையில் அமர்ந்தான்.

“சரி சொல்லுடா! மீரா ஏதாவது சொன்னாளா?” டேப் ரெக்கார்டரில், பாஸ் பட்டனை (Pause Button) விடுவித்ததை போன்று, நேற்று விட்டயிடத்திலேயே தொடங்கினான்.

ஹரியும் இதை பற்றி தெளிவாக பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தான். ஆனால் அதற்கு முன் அவன் சாப்பிடவேண்டும் என்று அன்புகட்டளையிட்டு, சுட சுட மசால் தோசையும், தேங்காய் சட்னியும் பரிமாறினான்.

சாப்பிட்டு முடித்த நண்பர்கள், கோப்பையில் இஞ்சி டீயுடன், பால்கனியில் வந்து அமர, “உன் கிட்ட மூணு கேள்வி கேட்க போறேன். ஆமாம், இல்லன்னு ஒரு வார்த்தைல பதில் சொல்லணும், புரியுதா? பலமான குரலில் பேச, அரவிந்தன், அவனை ஆழ்ந்து பார்த்தான்.

‘பில்ட் அப் எல்லாம் பயங்கரமா இருக்கு; கண்டிப்பா மீரா இவன்கிட்ட பதில சொல்லி அனுப்பியிருப்பா ‘உறுதியாய் நம்பியவன், சம்மதம் என்று தலையசைத்தான்.

“மீராவுக்கு நீ என் ஸிஸ்டம் ஆக்ஸஸ் கொடுத்தியா?” திடமாக கேட்டான் ஹரி.

“ஆமாம்…. அது…. அது!” அவன் தடுமாற,

“விளக்கம் எதுவும் வேண்டாம்னு சொன்னேன்!” நினைவூட்டி, அடுத்த கேள்விக்கு வந்தான்.

“இரண்டாவது கேள்வி!” தொண்டையை சரி செய்து கொண்டு, “என் கதை புத்தகத்த, அவகிட்ட படிக்க சொல்லி கொடுத்தியா?” கேட்டான்.

‘கிராதகி, எல்லாத்தையும் இவன் கிட்ட சொல்லியிருக்காளே’ மனதில் அவளை திட்டிக்கொண்டே, விதிமுறைகளுக்கு உட்பட்டு, “ஆமாம்” என்று மட்டும் பதிலளித்தான்.

“உம்! சரி” என்று தலையாட்டியவன், “போன திங்கட்கிழமை, நீ உன் காதல அவகிட்ட சொன்னியா?” கண்கொட்டாமல் அவனை பார்த்து கொண்டே கேட்க, அரவிந்தன் முகம் காதலில் ஜொலித்தது.

“அவ முடிவ சொல்லிட்டாளா?” மெல்லிய குரலில் கேட்டு, தேர்வு முடிவுக்கு காத்திருக்கும் மாணவனை போல் ஆவலாய் காத்திருந்தான்.

“ம்ம்…. சொல்லிட்டா!” அரவிந்தன் கண்களில் இருந்த ஆவல், அவனை மேலும் பேசவிடாமல் கட்டிப்போட்டது.

இரண்டு நிமிடங்களுக்கும் மேல் ஹரி மௌனம் சாதிக்க, காத்திருந்தவனுக்கு ஒரு யுகம் போல் தோன்றியது.

“சொல்லு டா; அவ என்ன சொன்னா?” நண்பனின் தோள்களை போட்டு உலுக்கினான் அரவிந்தன்.

“இங்க பாரு அரவிந்தா…. இதுல…. இதுல என் தப்பு ஒண்ணும் இல்ல…. இதுக்கு முழு பொறுப்பு நீ தான்….” சுற்றிவளைத்து பேச,

“சரி சொல்லுடா! எஸ் ஆர் நோ?” பொறுமை இழந்தான் அரவிந்தன். அவன் குரல் உசத்தி கேட்க, சற்று, கலங்கியவன்,

“அவ…. அவ…. அவ என்ன விரும்பராளாம் டா!” ஒரு வழியாக உண்மையை உடைத்தான்.

“என்னடா சொல்லற?” புருவங்கள் உயர்த்தி கேள்வியாய் நோக்கினான்.

“எல்லாம் உன்னால தான் அரவிந்தா. நீ ஏன் அவகிட்ட என் கதைய படிக்க சொல்லி கொடுத்த?” தன் மீது தவறில்லை என்பதை அவனுக்கு புரிய வைக்க முயன்றான். ஆனால் அவன் மனதில் வேறொரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.

“உன்ன பிடிச்சியிருந்தா, அன்னைக்கே என்கிட்ட சொல்லியிருக்கலாமே. அதுக்கு ஏன் ஒரு வாரம் காத்திருக்க சொன்னா?” கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு, “உங்கள என்ன தப்பாவா நினைப்பேன்?” விரக்தியில் கேட்டான்.

மனம் நொந்து பேசும் நண்பன் அருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்தான் ஹரி. அவன் கைகளை இறுக்கி பிடித்து, “அப்படியில்ல டா. அவளுக்கு என் மேல வந்த திடீர் உணர்வு என்னன்னு புரியாததுனால தான் உன்ன வர சொல்லியிருக்கா. நீ உன் காதல் சொன்னதும், அவ சொல்ல வந்தத மறச்சிட்டா.” விளக்கியும், அவன் மௌனமாகவே இருந்தான்.

“அவளுக்கு என் மேல தோன்றிய உணர்வு வெறும் பரிதாபம் தான். நீ என்ன பற்றி சொன்னது, அவ என் கதைய படிச்சது, ஒண்ணோட ஒண்ணு போட்டு குழம்பி போயிருக்கா. அவ்வளவுதான். உன் காதல் தான் நிஜம்; நீ தான் அவளுக்கு சரியான ஜோடி!” கடைசி வார்த்தைகளை அழுத்தமாக சொல்லி, அங்கிருந்து எழுந்தான்.

தனிமையில் நிதானமாக யோசிக்கட்டும் என்று எண்ணி, ஹரி வெளியே சென்றான். நடந்ததை எல்லாம் மனதில் அசைப்போட்டான் அரவிந்தன்.

‘அவளுக்கு வந்தது திடீர் உணர்வுன்னா, அப்போ எனக்கு வந்ததுக்கு பேர் என்ன? குழப்பம் அவளுக்குக் மட்டும் தானா? எனக்கும் அவ மேல என்ன உணர்வுன்னு தெளிவா தெரியாமதானே ப்ரபோஸ் பண்ணேன். அப்போ யார் காதல் நிஜம்?’ நிதானமாக சிந்தித்தான்.

‘எனக்கு மனசுல பட்டத உடனே சொல்லிடேன். ஆனா மீரா, நிதானமா இருந்திருக்கா. ஒரு வாரம் பொறுமையா சிந்திச்சு முடிவெடுத்திருக்கா.’ யோசித்து பார்க்க,

ஒரு வாரமாய் அவள் தன்னிடம் சகஜமாக பழகியதும், ஹரியை விட்டுதான் விலகி இருந்தாள் என்றும் கவனித்தான். வாரம் முழுவதும் சொற்பொழிவுக்கு ஒன்றாக வேலை பார்த்த போதும் கூட, அவள் இயல்பாகவே இருந்தாள் என்று உணர்ந்தான். இத்தனை நாளாக வராத காதல், இப்போது வந்திடுமா என்று தெளிவடைந்தான்.

நண்பனுக்கு யோசிக்க காலவகாசம் கொடுக்க வேண்டும், என்ற ஒரே காரணத்துக்காக வெளியே சென்றவன், மாலை ஏழு மணி அளவில் வீடு திரும்பினான். வரும் போதே உணவகத்தில் இருந்து, பரோட்டா குருமா வாங்கி வந்தான்; அரவிந்தன் மதியம் சரியாக சாப்பிட்டிருக்க மாட்டான் என்ற அக்கறையில்.

வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். மிகவும் சாதாரணமாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்.

“என்னடா ஹரி? இவ்வளவு நேரம் எங்க போன?” முகத்தில் பொலிவுடன் வினவினான்.

“நம்ம சுந்தர் அண்ணா கடையில, டைப் செஞ்சு முடிச்ச ரெண்டு கதைய ப்ரின்ட் போட போயிருந்தேன். கரண்ட் கட். அதான் நேரமாச்சு” ஏதோ காரணம் சொல்லி, “வா சாப்பிடலாம்” என்று காலையில் எதுவும் நடக்காதது போல் அழைத்தான்.

“முதல்ல இங்க வந்து உட்காரு!” சோஃபாவை தட்டி ஜாடை காட்ட, அவனும் அருகில் வந்து அமர்ந்தான்.

“ஹரி! மீரா உன்னதான் டா விரும்பரா!” என்று அவன் தொடங்கியதும்,

“இல்ல இல்ல….” ஹரி மறுக்க, எதுவும் பேச வேண்டாம் என்று கையால் ஜாடை காட்டி,

“அவ ஒரு வாரம் நிதானமா யோசிச்சுதான் சொல்லியிருக்கா.” என்றதும், மீரா தன்னிடம் சொன்ன எதிர்கால திட்டங்கள் தான் அவன் கண்முன் நின்றது.

“உனக்கே தெரியும் அவ ஒரு விஷயத்துல இப்படிதான்னு முடிவெடுத்துட்டா, பின்வாங்கவே மாட்டா…., “என்றதும், ஹரி மீண்டும் குறுக்கிட்டான்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்ல; பத்து நாளுக்கு முன்னாடி, எனக்கு பதவி உயர்வுக்கு கூட சிபாரிசு செய்யாதவ, இப்ப கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கலியா?” சுட்டிக்காட்டி, மேலும் பேசினான்.

“உடனே இல்லாட்டாலும், கொஞ்ச நாளுல கண்டிப்பா மனச மாத்திப்பா. அது வரைக்கும் நீ உன் காதல்ல உறுதியா இரு; அது போதும்.” தீர்மானமாக சொன்னான்.

‘கல்யாணம்’ அந்த ஒரு வார்த்தையிலேயே, மீராவின் மனநிலையை உறுதியாக உணர்ந்தான் அரவிந்தன்.

டி.வி. ஒலியை ரிமோட்டின் வாயிலாக குறைத்து, “கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்கறவ, கண்டிப்பா மனச மாத்திக்க மாட்டா. அவ வேலையில உன்கிட்ட கண்டிப்பா இருக்கறத்துக்கும், இப்போ கல்யாணம் செய்துக்க நினைக்கறதுக்கும் பின்னால ஒரே காரணம் தான் இருக்கு. அது, உன் திறமை மேல அவளுக்கு இருக்க நம்பிக்கை. எந்த சூழ்நிலையிலும் நீ உழைத்து முன்னேறணும்னு நினைக்கரா. அதுக்கு தேவையான ஊக்கத்த ஒரு மனைவியா உனக்கு கொடுக்க ஆசைப்படறா. அவ்வளவுதான்!” என்றதும், மீரா தன்னை எழுத்தில் மட்டும் கவனம் செலுத்த சொன்னதை எண்ணி அசைப்போட்டான்.

அரவிந்தன் அவன் கையை அழுத்தி பிடித்து, “இன்னும் என்ன யோசிக்கிற ஹரி? அவளுக்கு சரின்னு மட்டும் சொல்லு; அப்புறம் பாரு…. நீ வெற்றியின் உச்சகட்டத்துக்கு போறது உறுதி.” அரவிந்தன் உள்ளப்பூர்வமாக சொல்ல, மீரா அரவிந்தனின் பெருந்தன்மையை பற்றி பறைசாற்றியது தான் நினைவுக்கு வந்தது.

“அரவிந்தா! உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா?” அவன் காதலை மண்ணோடு மண்ணாக்கிய குற்றவுணர்ச்சியில் கேட்டான்.

அதற்கு லேசாக சிரித்தவன், “இல்ல டா! அவ வேறொருவரை கல்யாணம் பண்ணா, எங்க நட்புக்கு பங்கம் வந்துடுமோன்னு பயந்தேன். அத வெளிப்படுத்த தெரியாம, ஏதேதோ சொல்லி அவள குழப்பிட்டேன்.” என்றதும், பேச வார்த்தையின்றி போனான் ஹரி.

மீரா ஒரு வரியில் அவன் மனநிலையை பற்றி சொன்னது எவ்வளவு சரி என்று புரிந்தது. இவர்கள் பரஸ்பர புரிதலுக்கு முன்னால், தான் எம்மாத்திரம் என்பது போல் தோன்றியது அவனுக்கு.

ஹரி எதுவும் பேசாமல் சிந்தனையில் மிதக்க, “ஆனா இப்போ அந்த பயம் இல்ல. அவ கல்யாணம் செய்துக்க போறது, என் நண்பனை தானே!” முடிவே செய்துவிட்டான் அரவிந்தன். இதழோர சிரிப்புடன் எழுந்தவன் ஹரியின் தோளை தட்டி, “வா சாப்பிடலாம்! இன்னியோட உன் பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பை சொல்லு” மனதில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் வாழ்த்தினான்.

காதலை விட்டுக்கொடுக்கும் நண்பன் ஒரு புறம்; காலத்துக்கும் துணையாய் வருகிறேன் என்று சொல்லும் தோழி மறுபுறம். இப்படிப்பட்ட நண்பர்களை பெற்ற நல்ல அதிர்ஷ்டத்தை நினைத்து வியந்தான் ஹரி.

அலுவலக விழா ஏற்பாடுகளை கவனிக்க, அரவிந்தன் காலையில் சீக்கிரமே போகவேண்டியிருந்தது. அறையை விட்டு வெளியே வந்தவன்,

“புது சட்டை; புது காதலி; ம்ம்…. ம்ம்…. கலக்குர ஹரி!” கண்ணாடி முன்னின்று தலை வாரி கொண்டிருந்தவனை ராகம் போட்டு வம்பிழுத்தான். இனி அவனுக்கு, அந்த சட்டை ஏன் வந்தது எதற்காக வந்தது, சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

“ஏன் டா…. நீ வேற…. எனக்கே பயமா இருக்கு…. எடுத்த முடிவு சரியான்னு தெரியல!” புலம்பினான் ஹரி.

“எல்லாம் சரியாதான் இருக்கும்!” நண்பனின் தோளை தட்டி, ஆறுதலாய் பேச,

“உனக்கு இதுல….” ஹரி தொடங்க, “ஒரு வருத்தமும் இல்ல” அரவிந்தன் உறுதியாய் சொல்லி முடித்தான்.

ஒப்புக்காக தலையசைத்து அவன் திரும்ப, “எங்கடா சட்டை இருந்த பை?” வினவினான் அரவிந்தன்.

“அந்த ஷெல்ஃப்ல வச்சியிருக்கேன்!” சொல்லி இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டினான்.

அதை எடுத்தான் அரவிந்தன். அதில் பழைய செய்தித்தாள் ஒன்றை மடித்து வைத்து, வெளியே தெரியதவாறு மூடினான்.

“என்ன டா செய்யற?” குழப்பமாய் கேட்டான் ஹரி.

“ம்ம்….” இழுத்து சொல்லி, “இத கொண்டு போய் மீரா கிட்ட கொடுக்கபோறேன். நீ அவ காதலுக்கு சம்மதம் சொல்லலேன்னு வருந்துவா. அப்புறம் உன்ன நேருல பார்த்ததும் பூரிச்சு போவா…. எப்படி என் மாஸ்டர் பிளான்?” சட்டை காலரை தூக்கிவிட்டு வில்லத்தனமாக சிரித்தான் அரவிந்தன்.

“ஏண்டா உனக்கு இந்த விபரீத விளையாட்டு?” வேண்டாம் என்று ஹரி சொல்ல,

“உன் ஆளு கொஞ்சம் நேரம் வருத்தமா இருந்தா, ஒண்ணும் ஆகாது!” மீண்டும் அவனை கிண்டல் செய்தான் அரவிந்தன்.

“அதுக்கில்ல டா…. அப்புறம் அவ விழாவுல ஒழுங்கா பேசலேனா?” ஹரி காரணம் சொல்ல,

“அதுக்குள்ளதான் நீ வந்திடுவியே.” தர்க்கம் செய்தான் அரவிந்தன்.

“ரொம்ப பிளான் பண்ணற; அவ உடனே பிரிச்சு பார்த்துட்டு, உன்ன மொத்து மொத்துன்னு மொத்துவா பாறேன்.” ஹரி தன் யூகத்தை சொல்ல, அதற்கு உரக்க சிரித்தவன்,

“நோ சான்ஸ்” உறுதியாய் சொல்லி, “அவ சரியான ரோஷக்காரி; கண்டிப்பா தொட்டு கூட பார்க்க மாட்டா…. பச்ச மிளகா….” செல்லமாக பெயர் வைத்து தோழியை அழைக்க,

“சரி! ஒரு வேள திறந்தா….” விடாமல் நச்சரித்தான் ஹரி.

“சரி டா! உனக்கு அப்படி தோணுச்சுனா ஒரு காதல் கடிதம் எழுதி தா. அதையும் உள்ள வெக்கலாம். எனக்கு அடியும் மிஞ்சும்!” அரவிந்தன் யோசனை சொல்ல,

“இப்போ எழுதணுமா! அடப்போடா! உனக்கு நேரமாகுது, கிளம்பு!” என்று நழுவினான் ஹரி.

“உனக்கு எழுத சொல்லித்தரணுமா; சும்மா சாக்கு சொல்லாம எழுது டா!” சொல்லி அரவிந்தன், அலுவலகம் புறப்பட தயாரானான். ஹரியும், மெல்லிய சிரிப்புடன், நண்பனின் அன்புக் கட்டளைக்கு செவி சாய்த்தான்.

அரவிந்தன் அலுவலகம் வந்ததும், நேராக மீராவின் இருக்கைக்கு சென்றான். அவள் கணிணியில், சொற்பொழிவுக்கு தயார் செய்ததை சரி பார்த்து கொண்டிருந்தாள். விழா நாள் என்பதால், சுடிதாருக்கு பதிலாக புடவை உடுத்தியிருந்தாள். அந்த கஞ்சி போட்ட இளம் பழுப்பு நிற சேலையில், பிரம்படி கொடுக்கும் பள்ளி ஆசிரியை போலவே இருந்தாள்.

கையில் இருந்த பையை சாமர்த்தியமாக மறைத்து கொண்டு, “குட் மோர்னிங் மீரா! ஆடிட்டோரியம் போகலாமா?” என்று கேட்டான்.

‘உம் சரி” என்று அவளும் தேவையானதை எடுத்துக்கொண்டு எழ,

“ஓ! மறந்துட்டேன் மீரா…. ஹரி, இத உன்கிட்ட கொடுக்க சொன்னான்!” எதார்த்தமாய் சொல்லி, கையில் கொடுக்காமல், உஷாராக டெஸ்க்ல மேல் வைத்தான்.

அதை, அவள் கண்கள் பார்த்தது தான் தாமதம். துக்கம் தொண்டையை அடைத்தது. புடவையை சரி செய்வது போல், தலைகுனிந்து, முகத்தில் இருந்த சோகத்தை மறைத்தாள்.

அவள் படும்பாட்டை கண்கொட்டாமல் கவனித்தவன், “என்னது அது?” அப்பாவியாக முகம் வைத்து கேட்க,

“ஒண்ணும் இல்ல” இடமும் வலமும் தலையசைத்து, “நீ முன்ன நட! நான் வாஷ்ரூம் போயிட்டு பத்து நிமிஷத்துல வரேன்.” தனிமையை நாடினாள்.

“சரி! சீக்கிரம் வா! விழா தொடங்கும் முன், வந்தவங்க கிட்ட அறிமுகம் செஞ்சிக்கலாம்.” சொல்லி அங்கிருந்து நகர்ந்தான்.

வாஷ்ரூம் சென்றவளுக்கு ‘ஓ….’ என்று கதறி அழ வேண்டும் போல் இருந்தது. மனதில் இருந்த சோகம் வெள்ளமாய் பெருக்கெடுக்க, கண்ணிமைகளை இறுக மூடி கண்ணீருக்கு அணை கட்டினாள்.

‘இன்று முக்கியமான நாள். அரவிந்தனும், நானும், இந்த சொற்பொழிவுக்காக கடினமா பாடுபட்டிருக்கோம்.’ தனக்குத்தானே சொல்லிக்கொள்ள, “அரவிந்த்!” என்று உரக்க சொன்னாள்.

‘அவன் காதலுக்குதான் ஒரு நல்ல முடிவு சொல்ல முடியல…. இந்த சொற்பொழிவாவது அவனுக்கு நல்லமுறையில செஞ்சி தரணும்’ பக்குவமாக சிந்தித்து, ஆடிட்டோரியம் நோக்கி நடந்தாள்.

ஆம்! இது அவர்களுக்கு மிகவும் முக்கியமான நாள். பல கிளைகளிலிருந்து, உயர் பதவியில் இருந்த ஊழியர்கள் விழாவில் பங்கெடுத்து கொள்ள வந்திருந்தனர். வங்கிகள் செயல்படும் முறையில், காலத்துக்கு ஏற்ப தேவையான மாற்றங்களை பற்றியும், நவீன தொழில்நுட்பங்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ள வந்திருந்தனர். இதில் மிகச்சிறந்த வகையில் சொற்பொழிவாற்றும் குழுக்கு சிறப்புபரிசுகள் கூட அறிவிருத்திருந்தனர். எல்லாவற்றிர்க்கும் மேலாக, இதில் வெற்றி பெற்றால், கிளை மேலாளர் என்ற வகையில், அரவிந்தனுக்கு பேரும் புகழும், அவர்கள் கிளைக்கு அங்கீகாரமும் கிடைக்கும்.

தன் சொந்த பிரச்சனையை பணியில் காட்டக்கூடாது என்று திடமாக யோசித்து, அரவிந்தனை நோக்கி நடந்தாள் மீரா. அவள் முகத்தை பார்த்தே அவளின் மனநிலை அறிந்தான் அரவிந்தன். ஏன் சீண்டினோம் என்று கூட தோன்றியது அவனுக்கு.

“வா மீரா! அடையார் கிளை மேலாளரை உனக்கு அறிமுகம் செய்யறேன்!” என்று அழைத்து, விழா தொடங்கும் வரை ஏதோ ஒன்றில் அவள் கவனத்தை திருப்பினான்.

(விளையாடுவது ஏன்; இப்போ ஃபீல் பண்ணுவது ஏன் என்று தான் அவனை கேட்க வேண்டும்.)

விழா தொடங்க அரைமணி நேரமே இருந்த நிலையில், சொற்பொழிவில் பங்கேற்போர், மேடைக்கு இடதுபுறம் வந்து அமர்ந்தனர். பார்வையாளர்கள், நிகழ்சியை பார்ப்பதற்கு வாட்டமாய் பிடித்த இடத்தில் அமர்ந்தனர். அன்று வங்கி விடுமுறை நாள் என்பதால், ஊழியர்கள், தன் சொந்த விருப்பத்தில், விழாவை காண வந்தனர். மகேஷும், கீதாவும் இது தான் சாக்கு என்று வீட்டிலே இருக்க முடிவு செய்தனர்.

திட்டமிட்ட நேரத்தில், கடவுள் வாழ்த்து, வரவேற்புரை என்று விழா செவ்வனே துவங்கியது. விழா நடத்துபவர், சொற்பொழிவுக்கான விதிமுறைகளை கூற, எல்லோரும் உன்னிப்பாக கவனித்தனர்…. அரவிந்தனை தவிர….

அரவிந்தன் கவனம் செலுத்தாமல், கைப்பேசியில் மூழ்கியிருந்தான். அவன் அலட்ச்சியத்தை கண்ட மீரா, எரிச்சலடைந்தாள்.

“அப்படியென்ன தான் இருக்கு அந்த ஃபோன்ல. அத ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வை! அவள் கோபமாக சொல்ல,

அரவிந்தனோ, கண்களை கைப்பேசியில் இருந்து எடுக்காமல், வந்த சிரிப்பை அடக்கமுடியாமல் அடக்கி, “வாங்கி கொடுத்ததுதான் வாங்கி கொடுத்த…. சம்மதம் சொல்ல பச்சை சட்டை கொடுத்திருக்கலாமே…. இப்படியா கண்கூசும் அளவுக்கு சிவப்பு நிறத்துல எடுத்து கொடுப்ப? நக்கலாய் கேட்க,

மீரா புருவங்கள் உயர்த்தி அவனை கேள்வியாய் பார்த்தாள். ஸ்தம்பித்து போனவளின் முகம் பார்த்து,

“எனக்கு எல்லாம் தெரியும் டி! அங்க பாரு!” என்று கைக்காட்டி, “உன் ஆளு சிம்லா ஆப்பிள் போல ஜொலிக்கறத பாரு!” என்றான்.

அரவிந்தன் கைக்காட்டிய இடத்தை பார்க்க, அங்கு ஹரி அமர்ந்திருந்தான். அவள் கொடுத்த சட்டை அணிந்தவனை கண்டவளுக்கு ஈடில்லா மகிழ்ச்சி. அணையை உடைத்து, கண்கள் ஆனந்த மழையில் நனைந்தன. பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து அவளை பார்த்துக்கொண்டிருந்தவன், கண்சிமிட்டி, தன் சம்மதத்தை அவளுக்கு தெரிவித்தான்.

அரவிந்தன், தொண்டையை சரிசெய்துகொள்வது போல ஒலியெழுப்பி, “மீரா மா! நம்ம கிளையே, இந்த சொற்பொழிவ நம்பிதான் இருக்கு; சரியா பேசுவல்ல” கேலியாக அவளை பார்த்து நகைத்தான்.

“இதெல்லாம் உன் வேலையா?” அவனை முறைத்து, கண்களை துடைத்து கொண்டாள்.

“ம்ம்…. என்ன கயட்டி விட நினச்சல்ல….” அவனும் நமுட்டு சிரிப்புடன் கேலியாக பதிலளிக்க,

“அடப்பாவி! விழா முடியட்டும்…. இருக்கு உனக்கு!” தோளில் தட்டி, செல்லமாக மிரட்டினாள்.

ஓரிரு நிமிடத்தில் சொற்பொழிவு தொடங்கியது. ஒருவர் பின் ஒருவராக பேச, இவர்கள் முறையும் வந்தது. எல்லோரையும் கவரும் விதமாக இருவரும் பேசினர். சில காலமாய் பிரபலமாகி வரும் ‘கோர் பேங்கிங்’ பற்றி, பாமர மக்களுக்கு எப்படி அதிக விழிப்புணர்வை உருவாக்க முடியும் என்பதை விவரித்தனர். தாங்களே சொந்தமாய் சிந்தித்து வடிவமைத்த சில வழிமுறைகளையும் விளக்கினர். நண்பர்களாக இருந்ததாலோ என்னமோ, இயல்பாகவே அவர்களால், ஒருவரை ஒருவர் அனுசரித்து மேடையில் பேச முடிந்தது.

ரொம்ப நல்லா போச்சு மீரா! முதல் பரிசு கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு!” இருக்கைக்கு திரும்பி வந்தவன் கூற, பக்கத்தில் அமர்ந்தவள், அவன் கைகளை அழுத்தி பிடித்து,

“என்ன மன்னிச்சிரு டா!” குற்றவுணர்ச்சியில் மெல்லிய குரலில் வருந்தினாள்.

“நீ எந்த தப்பும் செய்யல; உன் முடிவுக்கு பின்னால இருக்கும் நோக்கம் மிக உயர்ந்தது” உறுதியாய் சொல்லி, அவள் பிடியில் இருந்த தன் கரத்தினை விலக்கி, அவளுக்கு ஆறுதலாய் தட்டிக் கொடுத்தான்.

“உம்…” என்று தலையசைத்தவள் தன் நோக்கத்தை சரியாக புரிந்துகொண்டான் என்று நிம்மதி அடைந்தாள்.

 “மீரா! இந்த மாதிரி அவன் முன்னாடி ஃபீல் பண்ணாத, புரிஞ்சிதா; அவன் ஏற்கனவே எடுத்த முடிவு சரியா இல்லையான்னு குழம்பியிருக்கான்.” எச்சரிக்க, அவள் கண்கள் ஹரியை தேடியது.

அருகில் இருந்தும் அவன் தூரமாய் இருப்பது போன்ற உணர்வு அவளுக்கு. விழா முடிய காத்திருந்தாள். ஒரு மணி நேரத்தில் விழா நிறைவுக்கு வர, இவர்களுக்கு முதல் பரிசும் அறிவித்தனர். இந்த போட்டியில் கலந்து கொள்ள, பெரும் இலட்சியத்துடன் அயராது உழைத்தவளுக்கு, இன்று இந்த வெற்றி கொடுத்த மகிழ்ச்சியை காட்டிலும் தன் காதல் கைக்கூடிய வெற்றிதான் பெரிதாக இருந்தது.

“வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!” முகத்தில் புன்னகையுடன் அவர்களை நோக்கி வேகமாக நடந்து வந்தான் ஹரி.

“உனக்கும் தான் டா மச்சான்!” வம்பிழுத்தபடி நண்பனை ஆரத்தழுவினான் அரவிந்தன். அவனை பின் தொடர்ந்து வந்தவளுக்கு, இவர்கள் சற்றுமுன் செய்த குறும்புதான் நினைவுக்கு வந்தது.

ஹரி அருகே உதட்டை சுளித்துகொண்டே சென்றவள், “காலி கவர கொடுத்து ஏமாத்துற….” அழுத்தமாய் கேட்டு, அவன் கையை நறுக்கென்று கிள்ளினாள்.

அவள் கிள்ளியது வலித்தது போல் அவனும், “ஆ….” என்று குரல் கொடுத்து, கன்னத்தில் குழி விழ சிரித்தான். அவள் கைகளை விலக்கி, “நீ அத திறந்து பாத்திருந்தா காலியா இல்லையான்னு தெரிஞ்சிருக்கும்.” என்றதும் அவள் புதிராய் கண்களை சுருக்கினாள். இவர்கள் செல்ல சண்டையை இரசித்தவன்,

“ஆமாம்! கதை ஆசிரியர், உனக்கு காதல் கடிதம் எழுதி உள்ள வச்சான்…. நான் தான் உறுதியா சொன்னேன்…. நீ அத பிரிச்சு பார்க்க மாட்டேன்னு.” தன் திட்டம் வெற்றியடைந்ததை கர்வத்துடன் விளக்கினான் அரவிந்தன்.

“காதல் கடிதமா?” வாயை பிளந்தாள் மீரா. உனக்கு விளையாட நேரம் காலமே இல்லையா என்று அவள் ஹரியை செல்லமாய் மிரட்ட, அரவிந்தன் மேலும் சீண்டினான்,

“டேய்! இவள நம்பி உன் வாழ்க்கைய பணயம் வெக்க போறியா? இத்தன நாளா ஆஃபிஸ்ல மட்டும் உன்ன அதிகாரம் பண்ணவ, இனி முழு நேரம் மனைவின்ற பேருல கொடுமை படுத்த போறா டா; யோசிச்சிக்க!”

அவன் விளையாட்டாய் பேசுகிறான் என்று தெரிந்தும், “அவன நம்பாத ஹரி! ஏதேதோ சொல்லி உன்ன குழப்பறான்!” அவளும் பதறுவது போல் நடிக்க,

“இவ அன்புத்தொல்லையை எதிர்கொள்ள நான் தயார்!” என்று உளமாற சொல்லி, அவள் தலையில் செல்லமாக தட்டினான் ஹரி.

அவன் பதிலில் நெகிழ்ந்து போனவள், “அப்படி சொல்லு ஹரி! சரி, நான் போய் அந்த காதல் கடிதத்த படிச்சிட்டு வரேன். நீங்க போய் எனக்கும் சேர்த்து சாப்பாடு எடுத்து வையுங்க.” அதிகாரமாய் சொல்லி, மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடினாள்.

பக்கம் பக்கமாய் கவிதைகள் எழுதியிருப்பான் என்று எதிர்பார்த்து போனவளுக்கு, ஏமாற்றம் தான் மிஞ்சியது. மூன்றே வார்த்தைகள் எழுதி, அவள் மூளையை குழப்பினது தான் மிச்சம்.

சம்மதம்! நிபந்தனைகளுக்கு உட்பட்டு!” மீண்டும் உரக்க படித்தவளுக்கு, ‘இது காதல் கடிதமா இல்லை கடன் பத்திரமா’ என்று தோன்றியது.

 நிபந்தனைகள் என்று பெயரில், ஹரி அவளிடம் கலந்தாலோசிக்க நினைத்த நிதர்சன உண்மைகளுக்கு செவி கொடுப்பாளா மீரா?

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் இல்லற தர்மத்தின் முதல் பாடம் என்று இந்த காதல் ஜோடிகள் அறிந்திருந்தார்களா….பதில் சொல்லும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…..