அன்பின் ஆழம் – 05
“மீரா சாப்பிட வரல்ல?” கீதாவிடம் கேட்டுக்கொண்டே கேன்டீனை (Canteen) கண்களால் அலசினான் அரவிந்தன்.
“இல்ல டா! அவளுக்கு ஏதோ வேலை இருக்காம். அடுத்த லன்ச் பிரேக்ல சாப்பிட்டுக்கறேன்னு சொன்னா!” பதிலளித்தபடி அவன் எதிரே இருந்த இருக்கையில் உட்கார்ந்தாள்.
வயிற்றில் குழந்தை அசைவதை இரசித்தவள், “தங்கத்துக்கு பசிக்குதா? இதோ அம்மா இட்லி சாப்பிட போறேன், சரியா!” என்று வயிற்றை தடவிக்கொண்டே அதோடு பேச, அவன் முகத்தில் இருந்த தவிப்பை கவனிக்கவில்லை.
அவன் தன் காதலை சொன்ன நாளிலிருந்து நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவதை தவிர்தாள் மீரா. அவளால் ஹரியிடம் சகஜமாக பழகமுடியவில்லை. அரவிந்தன் அவளிடம் சொன்ன அதே காரணம் தான். மனதில் காதலுடன், ஹரியிடம் நட்பாய் மட்டும் பழக மனசாட்சி உறுத்தியது.
அது தெரியாமல், சடாரென்று எழுந்தவன், “இதோ வரேன்!” என்று சொல்லி, மீராவை தேடி வேகமாக நடந்தான். அதே சமயம், சாப்பிடுவதற்காக வந்த மகேஷும், ஹரியும், அவன் வெளியே செல்வதை பார்க்க,
“எங்கடா இவ்வளவு அவசரமா போற?” மகேஷ் அவனை வழிமறித்து கேட்டான். அவனுக்கும், அதே பதில் தான்; அரவிந்தன் கண்களில் இருந்த கவலையை கவனிக்காமல் இருவரும் அவனை கடந்து சென்றனர்.
மீரா கணினியில், பவர்பாய்ன்ட் ப்ரெஸன்டேஷன் (Powerpoint Presentation) ஒன்றை செய்வதில் மூழ்கியிருந்தாள்.
“உனக்கென்ன பிரச்சனை?” திடமான குரலில் கேட்டபடி, எதிரே நின்று அவளை முறைத்தான். மதிய உணவு இடைவேளை என்பதால், ஓரிரண்டு ஊழியர்கள் தான் அங்கு இருந்தனர். அவர்களும் வேலையில் மும்முறமாக இருந்ததால், அரவிந்தன் குரல் உசத்தி பேசியும் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.
அவன் கேள்வி புரிந்தும் புரியாதவளாய், “நல்ல சமயத்துல வந்த டா! இந்த பேக்ரவுண்ட் கலர் (Background Color) எப்படி இருக்கு சொல்லு?” கேள்வியை திசைதிருப்பினாள்.
அதை பார்ப்பது போல், அவள் அருகில் வந்தவன், “முதல்ல சாப்பிட வா!” தாழ்ந்த குரலில் அழைத்து, அவள் கைகளை பிடித்து இழுத்தான்.
“எனக்கு பசிக்கல; நீ போய் சாப்பிடு!” மறுத்து பேசி, அவன் பிடியிலிருந்து கைகளை விலக்கிக் கொண்டாள். அதில் எரிச்சல் அடைந்தவன், “என்னை அவாய்ட் பண்றியாடி?” நேரடியாக கேட்டான்.
‘உன்ன இல்ல டா…. ஹரியை!’ என்று சொல்ல அவள் மனம் துடித்தது.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. நிஜமாவே திங்கட்கிழமை நம்ம கொடுக்க போற ப்ரெஸன்டேஷனுக்கு தான் எல்லாம் தயார் செய்யறேன்.” என்று விளக்கி, அவனுக்கு காண்பித்தாள்.
அவள் கூறியதில், ஓரளவு உண்மை இருந்தாலும், அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. “சரி, உன் இஷ்டம்! நான் அப்போவே சொன்னது தான்…. முடிவு எதுவா இருந்தாலும், எப்பவும் போல என் தோழியா இரு…. அது போதும்.” நினைவூட்டி, குனிந்த தலையுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் மனம் நொந்து பேசியதை சகித்துக்கொள்ள முடியாமல், விலகி செல்லும் அவன் கரத்தை பிடித்து தடுத்தாள்.
“ப்ராமிஸ் டா. உன்ன நான் தப்பாவே நினைக்கல…. எப்பவும் தப்பா நினைக்கமாட்டேன்.” உறுதியாய் சொல்லி, அவனுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, “உனக்கு பசிக்கலேனா, இதை ஒரு வாட்டி பாரு. இந்த வேலைய முடிச்சிட்டு, ரெண்டு பேரும் சேர்ந்து செகண்ட் லன்ச்சுல சாப்பிடலாம், சரியா?” விட்டுகொடுத்து பேச, அவன் முகம் மலர்ந்தது. இதழோர சிரிப்புடன், அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அவளும் இதையே காரணம் காட்டி, வாரத்தின் மீதமுள்ள நாட்களிலும், நண்பர்களுடன், குறிப்பாக ஹரியுடன் சேர்ந்து சாப்பிடுவதை தவிர்த்தாள்.
வெள்ளிக்கிழமை இரவு, பென் டிரைவில் கொண்டுவந்த ஹரியின் கடைசி கதையை படித்து முடித்தாள்.
‘முடிவெடுக்க வேண்டிய நேரம்!’ தனக்குத் தானே சொல்லிக்கொண்டு, பெருமூச்சுவிட்டவள், தன் அறையில் இருந்த வெள்ளை பலகையில், பட்டியலிட்டாள்.
‘ஹரியிடம் தோன்றிய உணர்வு???’ என்று எழுதி, கையிலிருந்த மார்க்கரை தாடையில் தட்டியபடி அறையின் குறுக்கும் நெடுக்கும் நடந்து தீவிரமாக சிந்தித்தாள்.
‘இது வரை அவன் மேல் உணர்ந்த காதல் துளிகூட குறையவில்லை என்பது தான் நிஜம். அவன் கனவுக்கு கைகொடுக்க நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதையும் தாண்டி, அவன் அன்புக்காக என் மனம் ஏங்குவதும் உண்மை தானே…. கற்பனையில் அவன் வர்ணித்த அந்த அன்பான கணவன், அழகான குடும்பம் எல்லாம் எனக்கு அவன் நிஜத்தில் தர வேண்டும்’ என்று யோசித்து, ‘காதல்’ என்று பதிலை எழுதி சுழித்தாள்.
‘அரவிந்தனுக்கு என்ன பதில் சொல்வது???’ அடுத்த கேள்வியை எழுதி, அதன் மேல் மார்க்கரை தட்டி சிந்தித்தாள்.
‘அரவிந்தனுடன் ஒப்பிடுகையில், அழகிலும் சரி, அந்தஸ்திலும் சரி, ஹரியின் நிலை குறைவு தான். ஆனால், அவை எல்லாம், நிரந்தரமல்ல’ என்று மறுப்பாய் தலையசைத்து, பக்குவமாக சிந்தித்தாள்.
‘திறமையை பொருத்தவரை, ஹரி, அரவிந்தனுக்கு சளைத்தவன் இல்லை; சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்தால், அவனுக்கு வெற்றி வெகு தொலைவில் இல்லை; அதற்கு என்னால் உறுதுணையாய் இருக்க முடியும்.’ என்று நினைத்து லேசாக புன்னகைத்தாள்.
‘எல்லாவற்றிர்க்கும் மேலாக, அரவிந்தனிடம் நான் ஒரு நல்ல தோழமையை உணர்கிறேனே தவிர, காதல் கடுகளவும் இல்லை. அவனும், என்னுடைய இந்த முடிவை பெருந்தன்மையோடு ஏற்பான்’ என்று நூறு சதவீதம் நம்பியவள், அது ஒரு பிரச்சனையே இல்லை என்பது போல் பலகையிலிருந்து அழித்தாள்.
‘பெற்றோரின் மனநிலை???’ இருவருக்கும் சேர்த்து சிந்தித்தாள்.
‘அப்பா, தானே ஒரு சுயத்தொழில் செய்பவராக இருப்பதால், ஹரியையும் ஊக்குவிப்பார்; அம்மா, அப்பா பேச்சை தட்டுவதே இல்லை. ஹரி அம்மாவுக்கு பிடித்தமான வங்கி வேலையில் நான் இருப்பதால், என்னை மருமகளாய் ஏற்க அவரும் மறுப்பு சொல்ல மாட்டார்….’ எதிர்ப்புகள் இருக்காது என்று பலமாக நம்பியவள், ‘காதலுக்கு சம்மதம் சொல்லுவார்கள்’ என்று எழுதி, ஒரு ஸ்மைலியும் அதன் அருகில் வரைந்து பெருமையுடன் புன்னகைத்தாள்.
அனைத்து காரணங்களையும் ஆழ்ந்து பரீசீலத்ததில், ஹரியிடம் தன் காதலை சொல்வது சரி தான் என்று முடிவுக்கு வந்தவள், ‘ஐ லவ் யூ ஹரி! என்று எழுதி, இரகசியமாய் படித்தவள், தன் தலையை செல்லமாக தட்டிக்கொண்டு வெட்கத்தில் வழிந்தாள்.
மனநிறைவோடு உறங்க வந்தவள், ஹரியிடம் காதலை சொல்லி, பேச வேண்டிய எதிர்கால திட்டங்களை சிந்தித்தபடி, கனவில் மிதந்தாள்.
அடுத்த நாள், அலுவலகம் வந்ததிலிருந்து, ஹரியிடம் பேச சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள். அவள் மனதில் இருப்பதை கண்டறிந்தவன் போல, அரவிந்தன் அங்கு வந்தான். இரண்டு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருக்கும் ஹரி அருகே சென்று,
“ஹரி, மதியம் எனக்கு வேலை இருக்கு டா. திங்கட்கிழமை நம்ம அலுவலகத்துல நடக்க போற விழாவிற்கு நான் கொஞ்சம் ஏற்பாடுகள் எல்லாம் செய்யணும். அதனால நீ எனக்கு காத்திருக்காம கிளம்பு, சரியா!” என்று விளக்க,
“ஒண்ணும் பிரச்சனை இல்ல. நான் பஸ்ஸுல போயிக்கிறேன்!” என்றான்.
அரவிந்தனும், நண்பனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தான்.
இவர்கள் பேசியதை கேட்ட மீரா, தானும் ஹரியுடன் பேருந்தில் செல்ல திட்டமிட்டாள்.
“ஹரி! நானும் உன்னோட பஸ்ஸுல வரேன்!” வீட்டிற்கு புறப்பட்டு கொண்டு இருந்தவனிடம் சொல்ல,
“உன் வண்டிக்கு என்ன ஆச்சு?” அக்கறையாய் வினவினான்.
“வண்டி பஞ்சர் பா!” அன்று அரவிந்தனிடம் சொன்ன அதே சாக்கு சொல்லி சமாளிக்க, அவனும் அதை நம்பினான்.
பேருந்து நிறுத்தம் வந்து இருபது நிமிடங்களாகியும், பேருந்தும் வரவில்லை; அவளும் வாய்திறந்து எதுவும் பேசவில்லை. வெயில் சுட்டெறிக்க, கைக்குட்டையால் நெற்றி வியர்வை துடைத்து கொண்டவன், “ஷேர் ஆட்டோல போகலாமா மீரா!” என்று கேட்க,
“அடுத்த பஸ் ஸ்டாப் வரைக்கும் நடக்கலாமா?” என்று கேள்வியை திருப்பினாள்.
“இந்த உச்சி வெயில்லையா?” கண் கூசும் வானத்தை பார்த்தான்.
“தாகமா இருக்கு…. கரும்பு ஜுஸ் குடிச்சிட்டு பஸ் ஏறலாம்!” மழுப்பலாக பதில் சொன்னாள்; அவனும் சம்மதித்தான்.
சிறிது தூரம் நடந்ததும், “ஹரி! உன்கிட்ட கொஞ்சம் பேசணும்!” குனிந்த தலையுடன் மெல்லிய குரலில் தொடங்கினாள்.
“வேலை விஷயம்னா…. ப்ளீஸ்…. எந்த அறிவுரையும் சொல்லாத; எனக்கு கொடுக்கற வேலைய செய்யறேன்; மேற்கொண்டு பயிற்சி, படிப்புல எல்லாம் எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல….” அவள் குணம் அறிந்து மூச்சுவிடாமல் எச்சரிக்க,
“நம்ம கல்யாணம் செஞ்சிக்கலாமா?” மனதில் இருந்ததை பட்டென்று கேட்டாள்.
“என்னடி ஆச்சு உனக்கு?” அடிக்கும் வெயிலில், அவளுக்கு பைத்தியம் பிடித்து விட்டதோ என்று ஒரு கணம் யோசித்தான்.
‘விஷயத்தை தொடங்கியாச்சு; இனி இவன்கிட்ட திடமா தான் பேசணும் என்று உணர்ந்தவள், பெருமூச்சுவிட்டு,
“நான் சொல்லறத முழுசா கேளுடா! அப்புறம் உன் விருப்பம் என்னன்னு சொல்லு!” அதிகாரமாய் சொல்லி அவன் வாயடைத்தாள்.
“உன்னுடைய ‘தெவிட்டாத இன்பம்’ கதை படிச்சேன். உன் எழுத்துல மயங்கியது தான்….” அவள் முடிப்பதற்குள்
“அது…. நான்…. என் கதை…. உனக்கு எப்படி….” பேச வார்த்தை இன்றி தடுமாற, அவளுக்கு இதெல்லாம் எப்படி தெரிந்தது என்று பயந்தான்.
“குறுக்க பேசாதன்னு சொன்னேன்ல!” திடமாய் சொல்லி நினைவூட்டினாள்.
சாலையை கடக்க, சுரங்க பாதையில் நுழைந்தவுடன், மீரா பேசத் துவங்கினாள். “நீ ஊருக்கு போகற அவசரத்துல….” என்று தொடங்கி, அவள் ரிப்போர்ட்ஸ் தேடியது, முதற்கொண்டு, அரவிந்தன் அவளிடம் புத்தகம் கொடுத்து படிக்க சொன்னது வரை அனைத்தையும் முழுவீச்சாக விளக்கினாள்.
அவள் சொன்னதை எல்லாம் நிதானமாக உள்வாங்கியவன், “இவ்வளுவுதானா! அது…. நீ என்ன இத்தன நாளா கொள்கை இல்லாம வேலை செய்யறேன்னு சொல்லுவல்ல…. அதான் அப்படி தோணியிருக்கு…. இதுக்கு போய் கல்யாணம் எல்லாம் சொல்லிகிட்டு…. மக்கு!”அவள் குழம்பியதாய் விளக்கி, செல்லமாக தலையில் தட்டினான்.
“ப்ளீஸ் ஹரி! நான் எதையும் யோசிக்காம பேசமாட்டேன்னு உனக்கு தெரியாதா?” அவன் அலட்சியம் செய்வதை கண்டிக்கவும் சுரங்க பாதையை விட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது.
நடைபாதயில் நடக்க துவங்கியதும், “ஒண்ணே ஒண்ணு சொல்லு ஹரி! உனக்கு வர மனைவிய அந்த கதையில வர கதாநாயகன் மாதிரியே பார்த்துப்பல்ல” கெஞ்சலாய் கேட்டாள்.
“அதுக்கு இல்ல மீரா….!” எப்படி சொல்லி புரியவைப்பது என்று அவன் தடுமாற,
“ஆமாவா? இல்லையா?” நீட்டி முழக்காமல் பதில் சொல் என்றாள்.
“ஆ…. ஆ…. ஆமாம்!” என்று அவனும் மென்று முழுங்கினான்.
“அது போதும் ஹரி! என்ன நீ அப்படி பாசமா பார்த்துக்கோ; பதிலுக்கு நான் உன் லட்சியத்திற்கு உறுதுணையா இருப்பேன்.” என்றாள்.
இவ்வளவு உறுதியாக பேசுபவளிடம் என்ன சொல்லி புரியவைப்பது என்று அவன் சிந்திக்க, அவளே மேலும் பேசினாள்.
“நம்ம உடனே கல்யாணம் செய்துக்கலாம்; நீ உன் வேலைய ராஜினாமா செய்துட்டு, முழு நேரமும், கதை எழுதறதுல மட்டும் கவனம் செலுத்து. பதிப்பிக்க தேவையான பணம், என் சேமிப்பில் இருந்து எடுத்துக்கலாம். உங்க அம்மாவுக்கு இந்த வங்கி வேலை ரொம்ப பிடிக்கும்னு அரவிந்த் சொன்னான். எனக்கும் அப்படிதான்னு உனக்கு நல்லாவே தெரியும். அதனால அவங்களுக்கு, நீ வேலைக்கு போகலன்ற வருத்தம் இருக்காது. சரின்னு சொல்லுடா!” பேச்சற்று நடந்தவனின் கைகளை இறுக பிடித்தாள்.
உணர்ச்சிவசப்பட்டு பேசுகிறாள் என்ற முதலில் நினைத்தவன், இப்போது, தன்னுடன் வாழ ஒரு எதிர்கால திட்டமே போட்டுவிட்டாள் என்று புரிந்து கொண்டான். தன் கனவுகளுக்காக, அவள் வாழ்க்கையை பணயம் வைப்பதில் அவனுக்கு விருப்பம் இல்லை.
“நீ என் மேல நம்பிக்கை வச்சு பேசுறதே எனக்கு ஆறுதலா இருக்கு மீரா; நீ உனக்கேத்தவன கட்டிக்கிறது தான் சரி!” அவள் மேல் உள்ள அக்கறையில் சொல்ல, அவள் அப்படியே நடுரோட்டில் நின்றாள். அவன் பக்கம் திரும்பி,
“உனக்கென்ன கல்யாணம் செய்துக்க இஷ்டமான்னுதான் கேட்டேன்; எனக்கு யாரு சரி யாரு தப்புனு அறிவுரை கேட்கல. புரியுதா!” கொந்தளித்தவள் அவனிடமிருந்து விலகி வேகமாக முன்னே நடந்தாள்.
அவள் கைகளை பற்றி இழுத்தவன், என்ன சொல்வதென்று தெரியாமல், அக்கம் பக்கம், பார்க்க, பத்தடி தூரத்தில், கரும்பு ஜூஸ் கடை ஒன்று கண்ணுக்கு தென்பட்டது. “கரும்பு ஜூஸ் கேட்டியே…. குடிக்காம போனா என்ன அர்த்தம்!” என்று சம்பந்தம் இல்லாமல் பேச, அதை இரசித்தவள் நிற்கவே செய்தாள். நிதானமாகவும் சிந்தித்தாள்.
அவனருகே வந்து, “நீ இப்பவே சொல்லணும்னு இல்ல ஹரி! நல்லா யோசிச்சு சொல்லு; உன்ன கட்டாயப்படுத்த எனக்கு எந்த உரிமையும் இல்ல; ஆனா நீ சரின்னு சொல்லணும்னு ஆசை படறேன்” ஏக்கமாய் சொல்லி, கையில் இருந்த பை ஓன்றை, அவன் கையில் திணித்தாள்.
“என்ன இது?” என்று அவன் முழிக்க,
“இது, உனக்காக நான் வாங்கின சட்டை. உனக்கு என்னை பிடிச்சிருந்தா, திங்கட்கிழமை அலுவலக விழாவிற்கு இத போட்டுட்டு வா! விருப்பம் இல்லேன்னா…. திரு…. திருப்பி….” உதடுகள் சொல்ல தயங்க, முகமும் சேர்ந்து வாடியது.
“அது என்ன, நீ மட்டும் யோசிக்க ஒரு வாரம் எடுத்துப்ப; நான் என் முடிவ சொல்ல வெறும் ரெண்டு நாள் தான் கொடுப்ப?” வாடிய அவள் முகத்தை மலர வைக்க சீண்டிப்பார்த்தான்.
“அது…. அது…. அரவிந்த் என்ன காத…. காதலிலக்…. காதலிக்கறதா சொல்லியிருக்கான்!” திக்கி திணறி சொல்ல,
“இது எப்போ நடந்தது?” கண்கள் விரித்து கேட்டவன், அடுத்த அதிர்ச்சி அலையை உணர்ந்தான்.
நடுரோட்டில் நின்று பேசுவது நினைவுக்கு வர, “சொல்றேன்! முதல்ல எனக்கு கரும்பு ஜூஸ் வாங்கி தா!” அன்புக்கட்டளை இட்டாள்.
“எவ்வளவு முக்கியமான விஷயம் கேட்கறேன்….” அவன் திடமாக கேட்க,
அதை சற்றும் பொறுட்படுத்தாமல், “சீக்கிரம் வா; தாகமா இருக்கு!” என்று சொல்லிக்கொண்டே கடையை நோக்கி, அவனை தரதரவென்று இழுத்து சென்றாள்.
சில நிமிடங்களுக்கு முன்னால், குடும்பம் நடத்துவதை பற்றி பேசியவள், இப்போது குழந்தை தனமாக நடந்து கொள்வதை பார்த்து, வியந்தவன், அவளை பின் தொடர்ந்தான்.
“தம்பி, ரெண்டு கிலாஸ் கரும்பு ஜூஸ் போடு பா; ஐஸ் வேண்டாம்;” ஹரி தெருவோர கடையில் இருக்கும் சிறுவனிடம் சொல்ல,
“எலுமிச்சை சாறு சேர்த்துக்கோ; அப்படியே டிஸ்போசபிள் கப்புல தா!” மிச்சத்தை மீரா சொல்லி முடித்தாள்.
அவளை கண்கொட்டாமல் பார்த்து முறைத்தவன், “இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…” என்று சிடுசிடுத்து, “சரி, விஷயத்த சொல்லு!” என்றான்.
அந்த சிறுவன், கரும்பு துண்டுகளை இயந்திரத்தில் நுழைக்க, அருகில் இருந்த மரத்தின் நிழலில் வந்து நின்றனர்.
“அது ஒண்ணுமில்ல டா! சனிக்கிழமை அவன் வீட்டுக்கு வந்தப்ப, அப்பா என் கல்யாண பேச்செடுத்தார். அதுல கொஞ்சம் குழம்பி போனவன் என் கிட்ட அப்படி பேசிட்டான்.” அவ்வளவு முக்கியமானது இல்லை என்பது போல் ஒரு வரியில் சொல்ல, மறுப்பாய் தலையசைத்தவன்,
“அப்படியெல்லாம் இருக்காது; நீ நடந்தத ஒண்ணு விடாம சொல்லு; அவன் குழம்பினானா இல்லையான்னு நான் சொல்லறேன்.” நண்பனை விட்டுக்கொடுக்காமல் பேசினான் ஹரி.
சிறுவன் வந்து, ஜூஸ் கொடுக்க, அதை மெதுவாய் பருகி கொண்டே நடந்த அனைத்தையும் விளக்கினாள் மீரா.
அவள் சொன்னதை எல்லாம் நிதானமாக கேட்டவன், “அப்போ, நான் உன்ன விரும்பலேன்னு சொன்னா, அரவிந்தனுக்கு சரின்னு சொல்லுவியா? அருகில் நடப்பவளிடம் தலை திருப்பி வினவ,
“பைத்தியமா டா நீ!” எரிமலையாய் வெடித்தாள். “உன்னோட எப்படியெல்லாம் வாழணும்னு நான் கனவு காணறேன்…. ச்சீ போடா….” வெறுத்து போனாள்.
இவனுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவளை சமாதானம் செய்ய, “அதுக்கில்லடி…” அவன் கேள்வியின் நோக்கத்தை விளக்க முயல, அவள் குறுக்கிட்டாள்.
“நீ என்ன முடிவு எடுத்தாலும், நான் அவனுக்கு ‘நோ’ தான் சொல்ல போறேன். அதுக்குள்ள என் காதல் கதைக்கு ஒரு முடிவு தெரிஞ்சா, ஒரு நண்பனா, அவன் கிட்ட பகிர்ந்துக்கலாம்னு நெனச்சா…. நீ இப்படி கேவலமா கேட்கறையே!” அவன் யூகம் எவ்வளவு தவறு என்று சுட்டிக்காட்ட,
“மன்னிச்சுக்க டி!” நான் அந்த அர்த்தத்துல சொல்ல வரல; அவன் உனக்கு எல்லாவிதத்திலும் ஏற்றவன். நீ அவனுக்கு சம்மதம் சொன்னாலும், நான் உங்க ரெண்டு பேருக்கும் மனதார சந்தோஷப்படுவேன்.” தத்துவம் பேச,
“நீ என்னை சந்தோஷப்படுத்து; அது போதும்” கேலியாக சொல்லி, அவனை பார்த்து கண்சிமிட்டினாள்.
அவள் குறும்பு பார்வையை இரசித்தவன், “அப்போ, என் நண்பன் வருத்தப்பட்டா பரவாயில்லையா?” என்று கேட்டு வம்பிழுத்தான்.
விளையாட்டாக கேட்டாலும், அதில் நியாயம் இருக்கு என்று உணர்ந்தவள் தாழ்ந்து பேசினாள்.
“அவன் எனக்கும் நண்பன் டா! உன்னதான் கல்யாணம் செஞ்சிக்க போறேன்னு சொன்னா, நமக்காக முதல சந்தோஷப்பட போறது அவன் தான்!” அரவிந்தன் மேல் உள்ள அசாதாரண நம்பிக்கையில் பதிலளித்தாள்.
“உம்….” என்று தலயசைத்தவன், “மீரா! இன்னும் கொஞ்ச தூரம் நடக்கலாமா?” அமைதி வேண்டி கேட்டான். அரைமணி நேரத்தில், உலகமே தலைகீழாக மாறியது போல் தோன்றியது அவனுக்கு.
‘காலத்துக்கும் இப்படியே சேர்ந்து நடக்கலாம் ஹரி!’ சொல்ல துடித்த உதட்டையும், கோர்க்க நெருங்கிய கரத்தையும் கட்டுப்படுத்தி, “உம்!” என்று மட்டும் சொன்னாள்.
வீட்டிற்கு திரும்பியும் சிந்தனையில் கலந்தவனாகவே இருந்தான். அவள் அரவிந்தனை பற்றி சொன்னதில் எந்த அளவுக்கு உண்மை இருந்ததோ, அதே அளவுக்கு, தான் மீராவிற்கு தகுந்தவன் அல்ல என்றும் ஆணித்தனமாக நம்பினான்.
“என்ன டா! லைட் கூட போடாம உட்கார்ந்திருக்க!” கேட்டுக்கொண்டே அரவிந்தன் உள்ளே நுழைய, ஹரி சுயத்துக்கு வந்தான்.
“கொஞ்சம் தலைவலி டா; அதான் அப்படியே தூங்கிட்டேன்.” மழுப்பலாய் பதில் சொல்ல, “ஓ அப்படியா! இரு நான் உனக்கு இஞ்சி டீ போட்டு தரேன்!” அக்கறையாய் சொல்லி, பைக் சாவியை கீ ஹோல்டரில்(Key Holder) மாட்டினான். அப்போது அவன் கண்களுக்கு தென்பட்டது அந்த பை;
அதிலிருந்த சட்டையை வெளியே எடுத்து ஆராய்ந்தவன், “ஏது டா இது?” என்று வினவ, “மீரா கொடுத்தா டா!” யோசிக்காமல் உளறினான் ஹரி.
“ஏதாவது சொன்னாளா?” ஆர்வமாய் அவன் கேட்க, அதன் உள்ளர்த்தம் தெளிவாக உணர்ந்தான் ஹரி. அரவிந்தன் கண்களில் இருந்த தவிப்பையும் கவனித்தான். அதை எதிர்கொள்ளமுடியாமல்,
“ஒண்ணும் சொல்லல டா!” என்று எழுந்தவன், “எனக்கு சாப்பிட எதுவும் வேண்டாம். ரொம்ப அசதியா இருக்கு; குட் நைட்!” என்று சொல்லிவிட்டு தன் அறைக்குள் சென்று தாளிட்டான்.
நண்பர்கள் வழக்கமாக செய்யும் குறும்புதனம் நினவில் வர, ‘ஒரு வேள ரெண்டு பேரும் சேர்ந்து என்ன ஓட்டறாங்களோ’ தனக்குள் முணுமுணுத்து கொண்டு, ஏக்கத்துடன் அந்த பையை தடவி பார்த்தான் அரவிந்தன்.
‘எத்தனை நாளுக்கு இப்படி ஒளிஞ்சிக்க முடியும் ஹரி?’ அறைக்குள் சென்றவனை, மனசாட்சி வாட்டியெடுக்க, ‘அரவிந்தன் மனம் நோகும்படி நான் எதுவுமே செய்யக்கூடாது; மீராவும் நல்லா இருக்கணும்; அதுக்கு அரவிந்தனும் மீராவும் சேர்வது தான் நல்லது.’ என்ற முடிவுக்கு வந்தான்.
யார் யாருக்கு விட்டுக்கொடுத்தார்? நண்பர்கள், அவள் நலம் கருதி எடுத்த முடிவில், மீரா மிதந்தாளா, மூழ்கினாளா இல்லை தத்தளித்தாளா? அனைத்திற்கும் பதில் சொல்லும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்….