அன்பின் ஆழம் – 04

புதிய வாரம் தொடங்கியது. அலுவலகத்திற்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தான் அரவிந்தன். வெளிர் நீலத்தில் முழுக்கை சட்டையும், அதற்கு பொருத்தமான அடர் சாம்பல் நிறத்தில் கால்சட்டையும் அணிந்திருந்தான். ஹால் சுவற்றில் மாட்டியிருந்த பிள்ளையார் படம் போட்ட நாட்காட்டியில் தேதி கிழித்தவன், அப்படியே ஒரு கும்பிடும் போட்டான். பேச்சுலர்கள் வாழும் வீடு என்பதால், பூஜை அறை என்று தனியாக எதுவும் இல்லை.

அது என்னமோ, இன்று பிள்ளையார் முன் வழக்கத்தை விட சற்று அதிக நேரம் நின்று பிரார்த்தனை செய்தான். செய்யவேண்டியதுதானே! மனதில் அவ்வளவு பாரம் அல்லவா!

‘பிள்ளையார் அப்பா! எனக்கு திடீர்னு ஏன் மீரா மேல இப்படி ஒரு உணர்வு? இது சரியா, தப்பா எனக்கு தெரியல. மனசுல இருக்கறத தைரியமா அவகிட்ட சொல்ல ஒரு வழி காட்டுபா?’ என்று மனதில் நினைக்க, மணி அடித்தது. அது அவன் கைப்பேசியின் ரிங்டோன் ஒலி.

பிள்ளையாருக்கு கன்னத்தில் போட்டுக் கொண்டு, வலது புறம் திரும்பி, மேஜையில் இருந்த கைப்பேசியை எடுக்க, முகமெல்லாம் புன்னகை.

‘நூறு வயசுடி உனக்கு’ என்று மனதில் சொல்லிக்கொண்டே, “ஹெல்லொ!” என்றான். அவன் குரல் கேட்டதும், “அரவிந்த்! ஆஃபிஸ் போற வழியில, என்ன அப்படியே கீதா வீட்டுல விடுறையா? என் சன்னி பஞ்சர் பா!” படபடவென்று பேசினாள்.

“நீயும் உன் டப்பா வண்டியும்….போன வாரம் தானே சர்வீஸ் விட்ட….அதுக்குள்ளவா பஞ்சர்” சிரிப்பை அடக்கி கொண்டு, அவளை கலாய்க்க,

அந்த பக்கத்தில் இருந்து ‘ம்ம்….’ என்று மெல்லிய பதில் மட்டும் தான் வந்தது.

“சரி! அரை மணி நேரத்துல வரேன். தயாரா இரு!”அவன் சம்மதம் சொல்ல,

“ம்ம்…. சரி! தாங்க்ஸ் டா!” என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

கீதாவின் வீடு, அலுவலகம் போகும் வழியிலேயே இல்லை. இருந்தும் அவன் அழைத்து செல்ல சம்மதம் சொன்னது, தன் மனதில் உள்ளதை சொல்லிவிடலாம் என்று நினைத்து. வழி காட்டிய பிள்ளையாருக்கு, மெல்லிய சிரிப்புடன், கண்சிமிட்டி நன்றி சொல்லிவிட்டு, ஃப்ரிட்ஜை நோக்கி நடந்தான்.

முன்தினம் ஐயங்கார் பேக்கரியில் இருந்து வாங்கி வைத்த க்ரீம் பன் சாப்பிட்டு, கூடவே ஆவி பறக்க தேனீரும் பருகி விட்டு, மீரா வீட்டிற்கு பைக்கில் சிட்டாய் பறந்தான்.

ஐந்தே நிமிடத்தில் அவள் வீட்டு வாயிலில் நின்றவன், தான் வந்ததை குறிப்பிட்டு அவள் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பினான். அவளும் ‘இதோ வரேன்’, வெளியே வருவதாக பதில் அனுப்ப, சாலையை கவனித்தபடி காத்திருந்தான்.

வளைகாப்பு விழாவிற்கு அவளை அழைத்து செல்வதை பற்றி நினைக்கையில், அன்று அலைபாயுதே படத்தில் வந்த வளைகாப்பு காட்சி தான் அவன் கண்முன்னே வந்தது. அந்த கதாநாயகி போல், இவளும் தழைய தழைய பட்டுப்புடவையும், தலைநிறைய பூவுமாய், தேவதையாக வரப்போகிறாள் என்று கண்ணில் காதலுடன் காத்திருந்தவன், டூயட் பாடாதது ஒன்றுதான் குறை.

அவள் வந்தாள்; பட்டுப்புடவையில் அல்ல….பச்சை நிற காட்டன் சுடிதாரில்….அலுவலகத்திற்கு எப்போதும் வருவது போலவே… அதே வாட்ச், அதே ஹாண்ட் பாக்; தன் எண்ணோட்டத்தை நினைத்து தனக்குள் அவன் சிரிக்க,

“குட் மோர்னிங்! அரவிந்த்!” என்று சொல்லி, மீரா பைக்கில் ஏறினாள்.

“குட் மோர்னிங்!” என்று அவனும் பதிலுக்கு சொல்லி பைக்கை உயிர்ப்பித்தான். சில நொடிகளில் பைக் சாலை நெரிசலில் கலக்க, “வளைகாப்பு விழாவுக்கு போறா மாதிரியே தெரியலையே. இவ்வளவு சிம்பில்லா ட்ரெஸ் செஞ்சியிருக்க!” வாய்விட்டு கேட்டேவிட்டான்.

அதற்கு லேசாக சிரித்தவள், “என்ன செய்ய? விழாவுக்கு மட்டும் போனா, நல்லா ட்ரெஸ் பண்ணலாம்….என் பாஸ் எனக்கு ஒரு மணி நேரம் தானே பர்மிஷன் கொடுத்திருக்காரு.” பொய்யாக சலித்துகொள்ள,

“ஏன் சொல்லமாட்ட, பர்மிஷனும் கொடுத்து, பிக்கப் டிராப்பும் செஞ்சா… இதுவும் சொல்லுவ….இதுக்கு மேலையும் சொல்லுவ.” அவனும் அவளை சீண்டினான். அதை இரசித்து சிரித்தாள்.

திங்கட்கிழமை காலை என்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகவே இருந்தது. வண்டிகள் குறுக்கும் நெடுக்குமாக நகர, அரவிந்தன், கவனம் முழுவதையும் சாலையில் செலுத்த வேண்டியதாயிற்று. தன் மனதில் உள்ளதை சொல்லாமலே கீதாவின் வீடுவரை வந்தான்.

மீரா வண்டியை விட்டு இறங்கியதும், அவனும் பைக்கை ஓரங்கட்டிவிட்டு, உடன் நடந்தான். அதை கவனித்தவள்,

“நீயும் உள்ள வரையா?” ஆச்சரியத்தில் கண்கள் விரித்து கேட்டாள்.

அன்று கீதா விழாவிற்கு வர சொல்லி வற்புறுத்தியபோது, இது ஒரு பெண்கள் சடங்கு என்று காரணம் சொல்லி தட்டிக்கழித்தான். மேலும், ஹரியும் மகேஷும் கூட ஊரிலிருந்து திரும்பாத நிலையில், அவன் மட்டும் தனியாக விழாவில் பங்கெடுத்துக்கொள்ள தயங்கினான். ஆனால் இன்று, மீராவிடம் தன் காதலை சொல்ல தனிமையில் ஒரு நிமிடம் கிடைக்காதா என்று ஏங்கினான்.

“ம்ம்….” என்று தலையசைத்து, “உனக்கு ஒரு மணி நேரமெல்லாம் பர்மிஷன் கிடையாது. போறோம்… தலைய காட்டுறோம்…கிளம்பறோம்…வா!” என்று கராராக கட்டளையிட, அவளும் பயந்து கீழ்ப்படிவது போல் நடித்து,

“சரி வா!” என்று அவன் தோளில் செல்லமாக தட்டினாள்.

மாக்கோலமும், மாவிலை தோரணமுமாக அலங்கரிக்கப்பட்ட வீட்டினுள் நுழைய, கீதாவின் கணவர் ரமேஷ், அவர்களை அக்கறையாக நலன்விசாரித்து  உள்ளே அழைத்தார். கீதா இருக்கும் இடத்தை மீராவிற்கு கைக்காட்டி, அரவிந்தனை தன்னுடன் வரும்படி அன்பாக அழைத்தார். ஆனால், அவனும் கீதாவை பார்த்துவிட்டு வருவதாக சொல்லி நழுவினான்.

(அவன் வந்த நோக்கம், பாவம் அவருக்கு தெரியாதே!)

மிதமான ஒப்பனை, அளவான அணிகலன்கள் என்று, மாம்பழ நிற பட்டு புடவையில், மேடிட்ட வயிற்றுடன் நடுவிலிருந்த பெரிய இருக்கயில் அமர்ந்திருந்தாள் கீதா. வளைகாப்புக்கு வந்திருந்த பெண்கள், வரிசையில் வந்து, அவள் கன்னத்தில் சந்தனம் பூசி, நெற்றியில் குங்குமமிட்டு, கைகளில் கண்ணாடி வளையல்களை அணிவித்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்களுக்கிடையே, நண்பர்களை பார்த்த கீதா, அவர்களை அருகே வரும்படி கையசைத்து காட்டினாள். வரிசையில் இருந்தவர்கள் வழிவிட, மீராவும், அரவிந்தனும் அவள் அருகில் சென்றார்கள். கீதாவிற்கு வலதுபுறம் அமர்ந்த வயதில் முதிர்ந்த பெண்மணி, மீராவிடம் தட்டை நீட்டி, சடங்குகள் செய்ய சொல்லி ஒவ்வொன்றாய் விளக்கினார். அவற்றை முறைப்படி செய்துகொண்டே, தோழியின் காதில், கிசுகிசுத்தாள் மீரா.

“என்னடா வரமாட்டேன்னு சொன்ன?” தோழி போட்டுக்கொடுத்ததை வைத்து அரவிந்தனை வம்பிழுத்தாள் கீதா.

“அது….அது….” என்ன சொல்வதென்று புரியாமல் அவன் தடுமாற, ஓரக்கண்ணால், அவனை பார்த்து சிரித்தவள், “அது ஒண்ணும் இல்ல கீதா, மாப்பிள்ளைக்கு விருந்து சாப்பாடு சாப்பிடணுமா!” அவன் சாப்பிடுவதில் கொண்ட ப்ரியத்தை குறிப்பிட்டு கிண்டல் செய்ய,

எதுவும் பேசாமல் அசடுவழிந்தவன், அவள் ‘மாப்பிள்ளை’ என்று தன்னை அழைத்ததை எண்ணி, ‘அய்யோ! மனுஷன் நிலமை புரியாம உசுப்பேத்துராளே!’ என்று மனதில் நினைத்து தவித்தான்.

நண்பர்கள் மேலும் சில நிமிடங்கள் அரட்டை அடிக்க, மீராவே முன்வந்து, சீக்கிரம் கிளம்புவதாக சொல்லி, கீதாவை சமாதானப்படுத்தினாள். அரவிந்தனும் வேலை சுலபமாக முடிந்தது என்று எண்ணி, பெருமூச்சுவிட்டான்.

“அரவிந்த், அஞ்சு நிமிஷம், எதிரில் இருக்க பிள்ளையார் கோவிலுக்கு போயிட்டு கிளம்பலாமா?” பைக் நிறுத்திய இடத்திற்கு எதிரே கைக்காட்டி, மெல்லிய குரலில் கேட்டாள்.

‘உன் காதல்ல சொல்ல நான் கொடுக்கற கடைசி வாய்ப்பு டா அரவிந்தா!’ பிள்ளையார் அசரீரியாய் சொல்வதை போல் உணர்ந்தான் அரவிந்தன்.

மௌனமாய் நின்றவன், மறுத்துவிடுவானோ என்று பயந்து, “ரொம்ப சக்தி வாய்ந்த பிள்ளையார்….நினைத்த காரியம் நிறைவேறும்….” என்று அவள் சொல்லி முடிக்கும் முன், புன்முறுவலோடு சம்மதம் என்று தலையசைத்தான்.

கோவிலில் அவ்வளவு கூட்டம் இல்லை. பிள்ளையார் சன்னிதியில் நின்று இருவரும் கைக்கூப்பி, கண்கள் மூடி, சில நிமிடங்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தார்கள். அர்ச்சகர் ஆரத்தி தட்டுடன் அவர்கள் முன் வந்து நிற்க, தீபாராதனையை பக்தியோடு கண்ணில் ஒற்றிக் கொண்டார்கள். அவர் திருநீறு பிரசாதமும், கற்கண்டு கட்டிகளையும் விநியோகித்தார். அதை பெற்றுகொண்டு, வெளியே வந்தவர்கள், பிரகாரத்தை மூன்று முறை வலமும் வந்தார்கள்.

“அங்க ரெண்டு நிமிஷம் உட்கார்ந்துட்டு போகலாமா?” கோவிலுக்குள் இருந்த குளத்தின் படிக்கட்டுகளை கை காட்டினாள்.

அவனுக்கும் அந்த இடம், தன் காதலை சொல்ல ஏதுவாக இருக்கும் என்று தோன்றியது. “சரி” என்று தலையசத்தான்.

அரவிந்தன், அவள் முகம் பார்க்க வசதியாய், ஒரு படி கீழே அமர்ந்தான். துப்பட்டாவை சரிசெய்து கொண்டிருந்த அவள் கரங்களை பிடித்து,

“ஐ லவ் யூ மீரா!” என்று எந்தவித அலட்டலும் இல்லாமல் சொன்னான்.

“ச்சீ போடா! உனக்கு விளையாட நேரமே இல்லையா!”  சிரித்துக்கொண்டே சொல்லி, கைகளை தன் பக்கம் இழுத்து கொண்டாள்.

“நிஜமாதான் சொல்றேன் டி. நான் உன்ன காதலிக்கிறேன்” திடமான குரலில், அதுவும் தெளிவாக தமிழில் கூறினான்.

அவன் விளையாட்டாக பேசவில்லை என்று இப்போது உணர்ந்தாள். “திடீர்னு என்னடா?” முகத்தில் குழப்பம் வழிந்தோட வினவினாள்.

“தெரியல!” மெல்லிய குரலில் துவங்கியவன், சற்று அவள் பக்கம் திரும்பி உட்கார்ந்து, மேலும் பேசினான்.

“சனிக்கிழமை, உங்க அப்பா, உன் கல்யாண பேச்சு எடுத்தப்போ, என் மனசுக்குள்ள, ஏதோ ஒரு இனம்புரியா தவிப்பு. வேறொருவர நீ கல்யாணம் செஞ்சிண்டு போயிட்டா நம்ம நட்போட நிலமை என்னாகும்னு பயம். நீ எப்பவும் என் பக்கத்துலே இருக்கணும்னு நினைக்கறது, என் சுயநலமா இல்ல காதலானு குழம்பினேன்….கொஞ்சம் நேரம் யோசிச்சேன்…. நமக்குள்ள ஏற்கனவே நல்ல சிநேகிதம் இருக்கு…. அதை ஏன் காதல்….கல்யாணம்னு, அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டு போக கூடாதூன்னு….”

அவன் சொன்னதை எல்லாம் உள்வாங்கி நிதானமாக அசைப்போட்டு மௌனமாய் இருந்தாள். அரவிந்தனே மேலும் பேசினான்,

“நீ உன் சம்மதம் சொன்னா, நானே உங்க அப்பா கிட்ட பேசுறேன். அவர் முற்போக்கு சிந்தனையாளர்; அதுக்கும் மேல, எங்களுக்குள்ள எப்பவும் ஒரு பரஸ்பர புரிதல் உண்டு; அதனால அவர் கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லுவார்!” இது சாத்தியம் என்று அவன் காரணங்களை அடுக்கி கொண்டே போக, அவள் இன்னும் சிந்தனையில் கலந்தவளாய் இருந்தாள்.

“மீரா! ஏதாவது சொல்லு!” என்று அவள் மடியை உலுக்கினான்.

சுயத்துக்கு வந்தவள், “கொஞ்சம் யோசிக்க டைம் கொடு!” என்றாள் மெதுவாக.

மறுப்பு சொல்லாமல், கோபம் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்யாமல், நிதானமாக அவள் காலவகாசம் கேட்டதே அவனுக்கு நிம்மதி அளித்தது.

மெல்லிய புன்னகையுடன் பெருமூச்சுவிட்டவன், “முடிவு எதுவா இருந்தாலும் பரவாயில்ல டீ; ஆனா, எப்பவும் போல என்னோட நல்ல தோழியா இரு…. அது போதும்!” என்று தழைந்து பேச,

அவன் சங்கடத்தை உணர்ந்தவள், லேசாக சிரித்து, “சரி டா! ஒரு வாரத்துல சொல்லறேன்” என்று சொல்லி, “வா கிளம்பலாம்!” ஆஃபிஸ் புறப்பட அழைத்தாள்.

அவள் பக்குவமாய் கையாளுவதை கவனித்தவன், குற்ற உணர்ச்சியில் துடித்தான். அருகில் நடந்தவளின் முகம் பார்த்து, “முறையா அப்பா அம்மாவோட வந்து பேசியிருப்பேன்….மனசுல காதல்ல வச்சிண்டு நட்பா மட்டும் பழகுறேனு பொய் சொல்ல தெரியல டி….” மனம் நொந்து பேச,

“நான் எதுவும் தப்பா நினைக்கல டா!” புன்சிரிப்புடன் ஆறுதலாய் பேசி அவன் தோளில் தட்டிக்கொடுத்தாள்.

படிக்கட்டுகளில் அமர்ந்து காதல் சொன்னதும்,

‘சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனேசின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சிநேகிதனே’ என்று

காதோரம் நெருங்கி வந்து சம்மதம் சொல்லுவாள் என்று எதிர் பார்த்தவனுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான். காத்திருப்பதும் சுகம் என்று மனதை தேற்றிக் கொண்டான்.

‘சிநேகிதனே சிநேகிதனே ரகசிய சிநேகிதனேசின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சிநேகிதனே’

என்று பாட, அவளுக்கும் தான் ஆசையாக இருந்தது. ஆனால், அரவிந்தனின் காதில் அல்ல; ஹரியின் காதில்……

ஆமாம்! மீராவுக்கு, ஹரி மேல் காதல் மலர்ந்திருந்தது. அரவிந்தனுக்கு மட்டும் தான் ஒரே நாள் இரவில் காதல் மலருமா? இவளுக்கு மலராதா….

சனிக்கிழமை அன்று, தன் வீட்டிற்கு ரசம் சாதம் சாப்பிட வந்தவன், வெறும் கையுடன் வந்திருந்தால் கூட, இன்று அவனுக்கு சம்மதம் சொல்லியிருப்பாளோ என்னமோ. ஒரு நாள் இடைவெளியில், அவள் வாழ்க்கையை பற்றி, திட்டமே தீட்டிவிட்டாள். அதற்கு காரணம், அன்று அரவிந்தன், அவளிடம் கொடுத்த அந்த புத்தகம்; ஹரி எழுதிய கதை; தன்னை ஹரியிடம் ஈர்த்த கதை.

ஹரி எழுத்தின் மேல் மீராவுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லை என்று வருந்தினான் அரவிந்தன். அதனால், அவள் வீட்டிற்கு திரும்பி போகும் போது, ஹரி எழுதிய, ‘தெவிட்டாத இன்பம்’ கதையை எடுத்து சென்றான். அவளை ஒரு சில பக்கங்களாவது படித்து பார்க்க சொல்லி வேண்டினான்.

அலட்சியமாக வாங்கி கொண்டாளே தவிர, படிப்பதை பற்றி எல்லாம் யோசிக்க கூட இல்லை. ‘குட் நைட்’ என்று சொல்லிவிட்டு, தன் அறைக்குள் வந்து கதவை தாளிட்டவளின் கண்களை மேஜயில் இருந்த புத்தகம் உறுத்தியது. அரவிந்தனுக்காக சில பக்கங்களை புரட்டலாம் என்று நினைத்து, அதை எடுத்துகொண்டு வந்து படுக்கையில் சயனித்தாள்.

வேண்டா வெறுப்பாக புத்தகத்தை திறந்தவளுக்கு, முதலில் அவள் மனதை கவர்ந்தது, அவன் கையெழுத்து. அவ்வளவு முத்து முத்தாக இருந்தது. அலுவலகத்தில், ஆங்கிலத்தில், அவன் எழுதுவதை பார்த்ததுண்டு தான். ஆனால் அவன் தமிழ் கையெழுத்து, அழகின் மொத்த உருவமாய் இருந்தது.

‘ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் இஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன்’னு சும்மவா சொன்னாங்க என்பது போல் இருந்தது அவளுக்கு. அதை எண்ணி தனக்குள் சிரித்தவள், முதல் பக்கத்திலிருந்தே படிக்க துவங்கினாள்.

படிக்க படிக்க, தன்னையும் அறியாது, அந்த கதாநாயகனை ஹரியாகவே கற்பனை செய்துகொண்டாள். ஹரிக்கு இவ்வளவு காதலா; இவ்வளவு ஆசையா; இவ்வளவு எழுத்து திறனா; என்று பக்கத்துக்கு பக்கம் மெய்சிலிர்த்து போனாள்.

கண்ணில் இருந்த தூக்கம் மறைய, காதல் உதித்தது. இரவு உணவு அருந்தும் போது, அப்பா, அவள் திருமணத்தை பற்றி பேசியது, கதையில் வரும் கதாநாயகன், மனைவியிடம் கொண்ட காதல், புகுந்த வீட்டார் கதாநாயகி மீது பொழியும் அன்பு என்று எல்லாம் கலந்து, அவள் உணர்வுகளை கிள்ளியது. இப்படிபட்ட திருமண வாழ்க்கையை விட ஒரு பெண்ணுக்கு வேறென்ன பேரானந்தம் கிடைத்துவிட முடியம் என்பது போல்,தோன்றியது அவளுக்கு.

அதே சமயம், காலையில், அரவிந்தன் சொன்னதை எல்லாம் மனதில் அசைப்போட்டாள். ஹரியின் குடும்ப சூழ்நிலையை பற்றி, இப்போது சிந்திக்க, அவன் மேல் பரிதாபம் வந்தது. ‘கனவே கலையாதே’ என்று அவன் அந்த ஃபோல்டருக்கு பெயர் வைத்ததன் காரணம் இப்போது விளங்கியது.

‘அவனை திருமணம் செய்து கொண்டு, அவன் கனவுகள் நனவாக உறுதுணையாய் இருந்தால் என்ன?’ என்று மனதில் நினைக்க, இது காதலா இல்லை அனுதாபமா என்று குழம்பினாள்.

அரவிந்தனிடம் மனம்விட்டு பேசினால் தெளிவு கிடைக்கும் என்று தோன்றியது அவளுக்கு. அதனால் தான், சன்னி பஞ்சர் என்று சாக்கு சொல்லி, அவனை காலயில் வரவழைத்தாள். அவனோ தன் காதலை சொல்ல, மீரா பேச வார்த்தையின்றி போனாள்.

கடவுளிடம் தன் குழப்பத்திற்கு விடை தேடி வந்தவள், இன்னும் அதிகம் குழம்பியவளாய் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

‘இது என்ன சோதனை கடவுளே!’ என்று தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள். அன்றைய தினம், தலைக்கு மேல் வேலை இருந்த போதும், அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. கணிணியை உயிர்ப்பித்து, காத்திருக்கும் அந்த நொடி கூட, தன் நண்பர்கள் பற்றிய சிந்தனை தான்.

‘தன் காதலை சொல்லி ஹரியின் கனவுகளை நிஜமாக்குவதா? இல்லை, தன்னை காதலிக்கிறேன் என்று சொன்ன அரவிந்தனின் மனமுடையாமல் காப்பதா? முடிவுக்கு வர முடியாமல் புழுங்கினாள்.

அலைபாய்ந்த மனதை திசைதிருப்ப, உயிர்ப்பித்த கணிணியில் மெயில்பாக்ஸ் திறந்தாள். அவளை மேலும் சோதனைக்கு உள்ளாக்குவது போல், இருந்தது, இன்பாக்ஸ்ஸில் இருந்த அந்த மெயில்; ஹெல்ப் டெஸ்க்கிலிருந்த வந்த மெயில்; அவள் கேட்டிருந்த ஹரியினுடைய சிஸ்டம் ஆக்ஸஸ் கோட்.

குழம்பி சுற்றும் தலையை இருகைகளாலும் அழுத்தி பிடித்து, மேஜையில் ஊன்றி அமர்ந்தாள். ஒரு மணி நேரத்திற்கும் மேல் நடந்ததை மீண்டும் மீண்டும் மனதில் அசைப்போட்டவளுக்கு ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது. தான் தெளிவாக முடிவெடுத்தால் மட்டுமே, தன் நண்பர்களிடம் உண்மையாக இருக்க முடியும் என்று புரிந்துகொண்டாள்.

ஹரி ஸிஸ்டம் திறந்தாள். அதிலிருந்து, மேலும் சில புத்தகங்களை தன் பென் டிரைவில் ஏற்றிகொண்டாள்.

‘ஒரு வாரம் இவற்றை படிக்கலாம். ஒரு வாரம் கழித்தும், ஹரியிடம் இதே காதலை உணர்ந்தால் அதை அவனிடம் சொல்லலாம். வெறும் அனுதாபமே என்று தோன்றினால், தன் மனதில் நினைத்த அத்தனையும் அரவிந்தனிடம் சொல்லி, அவனையே முடிவெடுக்க சொல்லலாம்’ என்று தீர்மானம் செய்தாள்.

யார் காதல் ஜெயிக்கும்? யார் காதல் தோற்கும்? காதல் தோற்ற போதும் நட்பு நீடிக்குமா? அனைத்துக்கும் பதில் சொல்லும், அவர்கள் அன்பின் ஆழம்….