அன்பின் ஆழம் – 03

போகும் வழியில் பேசிக்கொள்ளலாம் என்று சொன்னாளே ஒழிய, ஹோட்டலில் வந்து அமர்ந்தும் அமைதியாகவே இருந்தாள். அரவிந்தனும் முன் வந்து எதுவும் சொல்லவில்லை.

“என்ன சார் சாப்பிடுறீங்க?” என்று கேட்டு, அவர்களிடையே நிலவிய மௌனத்தை கலைத்தார், ஹோட்டல் பணியாளர்.

“எனக்கு வெஜிடபள் பிரியாணி!” அவரிடம் சொல்லிவிட்டு, மீராவிடம், “உனக்கு?” என்றான்.

“எனக்கு ஒரு ஆந்திரா மீல்ஸ்?” என்று திடமாக சொல்ல, பணியாளர் பத்து நிமிடங்களில் எடுத்துக்கொண்டு வருவதாக சொல்லி, அங்கிருந்து நகர்ந்தார்.

“ஏற்கனவே மேடம் ரொம்ப சூடா இருக்கீங்க…. இதுல ஆந்திரா மீல்ஸ் வேற கேக்குதா?” இதழோர சிரிப்புடன் வம்பிழுத்தான்.

அதற்கு அவள் முறைத்த விதமே சொன்னது, அவள் கோபம் துளிகூட குறையவில்லை என்று. மேலும் காலம் தாழ்த்தாமல், அவளிடம் எல்லாம் விளக்க வேண்டும் என்று உணர்ந்தான் அரவிந்தன்.

“நீ பார்த்த அத்தனையும், ஹரி, அவனே எழுதியது மீரா!” உண்மையை உடைத்தான் அரவிந்தன்.

அவள் கணினியில் பார்த்த அந்த ஃபைல்ஸ் (Files) கண்முன் வர, “எது…. ‘தெவிட்டாத இன்பம்’, ‘இரவில் உன்னுடன்’, ‘இதழோடு சேர்ந்திருப்பாயா’னு மிட்னைட் மசாலா மாதிரி பேரு வச்சிருக்கானே…. அத சொல்லறையா?” ஏளனமாக கேட்டுவிட்டு, “இதுக்கெல்லாம், ‘கனவே கலையாதே’னு ஃபோல்டர் வேற” என்று முகம் சுளித்தாள்.

அவள் கொச்சைபடுத்தி பேசுவதை சகித்துக்கொள்ள முடியாமல், “போதும் நிறுத்து! வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசாத!” கடிந்து கொண்டான்.

சுற்றி முற்றி பார்த்து, அமைதியானாள். அரவிந்தனும், இருக்கும் இடம் உணர்ந்து தன்மையாய் விளக்கினான்.

“அதெல்லாம் முற்றிலும் குடும்ப கதைகள் மீரா. ‘தெவிட்டாத இன்பம்’, மாமியார்-மருமகள் உறவை பற்றி, ‘இரவில் உன்னுடன்’, ஒரு நைட் வாட்ச்மேன் நிலவோட பேசும் கதை, ‘இதழோடு சேர்ந்திருப்பாயா’ ஒரு புல்லாங்குழல் கலைஞன் பற்றி. அவனுக்கு எழுத்தாளர் ஆகணும்னு ஆசை.” என்று விவரிக்க, அவள் சமாதானமானாள்.

அதற்குள், அங்கு வந்த பணியாளர், உணவு பரிமாறிவிட்டு செல்ல, அவள் சிந்தித்தாள்.

“எழுத்தாளராக விருப்பம் இருந்தா, அதற்கான முயற்சி எடுக்கவேண்டியது தானே. இப்படி விருப்பமில்லாத வேலை செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?” கேள்வி எழுப்பினாள்.

“ஈசியா சொல்லிட்ட மீரா! நெனச்சபடி வாழ அவன் குடும்ப சூழ்நிலை சாதகமா இல்ல.” மென்மையாய் சொல்ல,

“புரியல டா!” என்று சொல்லிக்கொண்டே, அப்பளத்தை சாதத்தில் நொறுக்கினாள்.

“அவனோட அப்பா இருந்த வரைக்கும் இவன் நிலமை வேற. எந்த கவலையும் இல்லாம சுதந்திரமா எழுதினான். அப்பா, அவன எழுத சொல்லி உற்சாக படுத்தினார்; அவனும் எழுதிக்கிட்டே, அம்மாவின் ஆசைப்படி வங்கியிலும் வேலைக்கு சேர்ந்தான்; தன் கதைகளை பதிப்பிக்க தேவையான பணம் கூட சேர்க்க ஆரம்பிச்சான். கொஞ்சம் பணம் சேர்த்ததும் முழு நேரம் எழுதலாம்னு திட்டமிட்டான்….” பெருமூச்சுவிட்டு, கொஞ்சம் தண்ணீர் பருகி, மேலும் பேசினான்.

“ஆனால், அவங்க அப்பா திடீர்னு உடல்நல குறைவால் இறக்க, எல்லாம் தலைகீழா மாறியது. சேர்த்துவைத்த பணம் எல்லாம் அவர் மருத்துவத்திற்காக செலவாக, குடும்ப பொறுப்பும் இவன் தலையில் விழுந்தது. அம்மாவும், வங்கி வேலைய விடக்கூடாதூன்னு பிடிவாதமா சொல்ல, அவன் ஆசைகளை புதச்சிட்டான்.”

அவன் பேசுவதை கேட்டுக்கோண்டே, பாதி உணவை சாப்பிட்டு முடித்தாள் மீரா. “அம்மா கிட்ட எடுத்து சொன்னா புரிஞ்சிக்க போறாங்க, அவ்வளவுதானே?” சுலபமாய் சொல்ல,

வாயில் இருந்த உணவை மென்று விழுங்கியவன், மறுப்பாய் தலையசைத்து, “அவங்க ஒண்ணும் நம்ம பெற்றோர் மாதிரி முற்போக்கு சிந்தனை கொண்டவங்க கிடையாது.

கம்பீரமா சொல்லிக்க அரசாங்க உத்தியோகம், நிரந்தர வருமானம் என்று வாழ்க்கைய ஓட்டுற சராசரி பெண். சுயதொழில் மேல சுத்தமா நம்பிக்கை இல்ல” கடைசி வார்த்தைகளை அழுத்திச் சொல்ல,

“எனக்கென்னமோ, அவன் கதை எழுதறதுல கூட முழு ஈடுபாடு கொண்டிருக்க மாட்டான் போல் தோணுது. அதான் அவனோட அம்மாவே அலட்சியம் செய்றாங்க.” தன் யூகத்தை சொல்ல, அதை அவன் மறுத்தான்.

“அவன் எழுதிய ஒவ்வொரு கதையும் நான் படிச்சிருக்கேன். ஆழமான சிந்தனைகளோடு ஒண்ணொண்ணும் அவ்வளவு அருமையா இருக்கும் தெரியுமா?” நண்பனுக்காக பறைசாற்றினான்.

அரவிந்தன் எந்த அளவுக்கு நியாயப்படுதினானோ, அவளுக்கு அது ஒரு பெரிய விஷயமாகவே படவில்லை. மேற்கொண்டு எதுவும் பேசாமல், மீதமிருந்த உணவை இருவரும் சாப்பிட்டனர்.

ஹோட்டலை விட்டு வெளியே வந்த அரவிந்தன் மனம் தான் திருப்தியடையவில்லை. அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.

“அவன் உறுதியா தான் இருந்தான் மீரா, இனி எழுதமாட்டேன்னு…. நான் தான்…. நான் தான்…. காலம் இப்படியே இருக்காது ஹரி…. நம்பிக்கை இழக்காதேன்னு….” அரவிந்தன் தயங்கி தயங்கி பேச, அவன் கண்களை ஆழமாய் பார்த்தாள் மீரா.

“பதிப்பிக்கறத பற்றி அப்புறம் யோசிக்கலாம். இப்போ, சமீபத்துல தமிழ் தட்டச்சு, கணினியில வந்திருக்கு. அதுல உன் கதையெல்லாம் டைப் செஞ்சு வெச்சா பிற்காலத்திற்கு பயன்படும்னு…. “அவன் முடிப்பதற்குள்,

“அப்போ நீ தான் அலுவலக நேரத்துல கதை எழுத சொல்லி அவன கெடுக்கறியா? விரப்பாக கேட்டு முறைத்தாள்.

பிரச்சனை திசைதிரும்புவதை உணர்ந்தவன், “அய்யோ இல்ல மீரா!” என்று பதறி, “அவன், வீட்டுல, என் லேப்டாப்ல (Laptop) தான் டைப் செய்வான்” அழுத்திச் சொல்லி, “வீட்டுல இணைய இணைப்பு (Internet Connection) இல்லாததுதனால, பென்டிரைவ்ல (Pen Drive) கொண்டுவந்து இங்க இமெயில் (Email) செஞ்சிப்பான். ப்ரௌசிங்க் சென்டர் (Browsing Center) எல்லாம் அவ்வளவு பாதுகாப்பு இல்ல பாரு….” என்று மூச்சுவிடாமல் விளக்க, அவன் படும்பாட்டை உணர்ந்தாள் மீரா.

‘அரவிந்தன் முகம் தெரியாதவருக்கு கூட முன்வந்து உதவும் மனப்பாங்கு கொண்டவன். அப்படியிருக்க, ஹரி அவன் உயிர் சிநேகிதன் அல்லவா….’ என்று மனதில் எண்ணியவள்,

“சரி டா! நான் எதையும் பாக்கல; எதையும் கேக்கல; போதுமா!” சொல்லி, முன் நடந்த அவன் தோளினை இறுக பிடித்தாள்.

“ம்ம்…. சரி வா, வீட்டுக்கு கிளம்பலாம்” திரும்பாமல் அவனும் பதிலளித்தான்.

தன்னை இன்னும் நம்பவில்லை என்று உணர்ந்தாள் மீரா.

“படம் பார்க்க போகலாமா?” எந்தவித அறிகுறியும் இல்லாமல் அவள் கேட்க, வெடுக்கென்று திரும்பினான் அவன்.

“ஐஸ்கிரீம் சாப்பிட கேட்டேன்! மீலஸ்ல கொடுத்த கேசரி ரொம்ப கம்மியா இருந்துது” முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு குழைய,

அவன் முகத்தில் லேசான ஒரு புன்னகை மலர்ந்தது. காரணம், அவளுக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும்; அவனுக்கும் தான்.

“கம்மியா இருந்ததுனால தான், எனக்கு கொடுக்காம நீயே எல்லாத்தையும் சாப்பிட்டியா?” அவனும் குறும்பு பார்வையுடன் கேட்க, அவள் அசடுவழிந்தாள்.

அதை இரசித்தவன், “சரி, அதுக்கு எதுக்கு டி, படத்துக்கு போகணும்?” என்றான்.

“ம்ம்….” என்று நீட்டி சொல்லி, உதட்டை சுழித்தவள், “சாப்பிட்ட ஆந்திரா மீல்ஸ் காரம் தணிய ஜில்லுன்னு ஒரு ஐஸ்கிரீம்; நீ சொன்ன மொக்க கதையில காஞ்சிபோன மண்டைய குளிர வைக்க ஒரு நல்ல படம்!”  நக்கலாய் விளக்கம் சொல்ல,

‘மொக்க கதையா…. கஷ்டம்னா என்னன்னே தெரியாத வளர்ந்த உனக்கு அது மொக்க கதையாதான் மா இருக்கும்….’ மனதில் எண்ணியதை வெளியே காட்டிக்கொள்ளாமல்,

“சரி, எந்த படத்துக்கு போகலாம்னு நீயே சொல்லு? முடிவை அவளிடமே விட்டான்.

“அலைபாயுதே! சத்யம் தியேட்டர்ல!” இடத்தையும் சேர்த்து சொல்ல, அவன் பக்கென்று சிரித்தான்.

“ம்ம்…. அம்மா…. ஆட்டுக்குட்டி…. வீட்டுக்கு போகணும்னு எல்லாம் சொல்லிட்டு, இப்போ அலைபாயுதே பார்க்கணுமா….அதுவும் சத்யம் தியேட்டர்ல….” நமுட்டு சிரிப்புடன் அவளை ஓட்ட,

“வேண்டாம்! வீட்டுக்கு போகலாம் வா!” என்று சொல்லி அவள் முகம் சுளித்தாள்.

“இந்த ரோஷத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…. வா படம் பார்க்கலாம்!” இதழோர சிரிப்புடன் மேலும் அவளை சீண்டினான்.

இருவரும் மகிழ்ச்சியாய் படத்தை கண்டுகளித்தனர். கதைகளத்தை வித்தியாசமாக, காலச்சக்கரத்தின் முன்னும் பின்னும் எடுத்துச் சென்ற இயக்குனரின்  தனித்துவத்தை பற்றி, கண்ணை பறிக்கும் பாடல் காட்சிகள், அதற்கு ஈடு இணையான பாடல் வரிகள், மெலடி மெட்டுக்கள் என்று ஓயாமல் விமர்சித்து கொண்டே பைக் நிறுத்திய இடத்தை வந்தடைந்தனர்.

சூரியன் அஸ்தமனமாகி, வானெங்கும் இருள் படர்ந்திருக்க, சாலைகள் தெருவிளக்கின் ஒளியில் பளிச்சிட்டது. வாரயிருதியை உல்லாசமாக கழிக்க வந்த மக்களின் கூட்டம் அலைமோதியது.

“நேரம் போனதே தெரியல டா!” ஜகஜோதியாய் பளிச்சிடும் கடைகளை பிரமிப்பாய் பார்த்து கொண்டே வினவினாள் மீரா.

“ம்ம்…. மணி ஏழாச்சு! அப்படியே டின்னர் சாப்பிட்டு போகலாமா?” அவள் உயரத்துக்கு குனிந்து அவள் காதில் கிசுகிசுத்தான்.

வெடுக்கென்று அவன் பக்கம் திரும்பி கண்களை விறித்து பார்த்து, “ஆளவிடு சாமி! இதுக்கு மேல லேட்டா போனா, அம்மா வீட்டுல சேர்க்கமாட்டாங்க” என்று சொல்லி, கும்பிடு போட்டாள்.

அவள் சொன்னபடியே, மீராவின் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் அரவிந்தன்.

மீராவின் அம்மா நிர்மலா, வீட்டு வாயிலில் இருந்த திண்ணையில், உட்கார்ந்து மல்லிப்பூ தொடுத்து கொண்டிருந்தாள். இவர்கள் வருவதை கவனித்தவள், வாயிற்கதவு அருகே வந்தாள்.

அன்றைய பொழுதை பற்றி இருவரிடமும், சில நிமிடங்கள் அளவளாவி விட்டு,

“உள்ள வந்து சாப்பிட்டு போ பா அரவிந்தா! சூடா தோசை வார்த்து தரேன்!” என்று உரிமையோடு அழைத்தாள்.

“இருக்கட்டும் ஆன்டி; இன்னொரு நாள் வரேன்!” அவன் பணிவுடன் மறுக்க,

“தோசையா மா! தொட்டுக்க சட்னியா? சாம்பாரா?” ஆவலாய் கேட்டு, அவள் தோளினை சுற்றிவளைத்து செல்லம் கொஞ்சினாள் மீரா.

“தோசை அரவிந்தனுக்கு மட்டும் தான். உனக்கு மதியம் செய்த சாதமும் ரஸமும் தான்” திட்டவட்டமாக சொல்லி, தன் தோளிலிருந்து மீராவின் கைகளை விலக்கினாள்.

உடனே அரவிந்தன் பக்கம் திரும்பியவள், “உனக்காக தானே நான் ஹோட்டல்ல சாப்பிட்டேன். தண்டனை எனக்கு மட்டுமா. இது என்ன நியாயம். ஒழுங்கா வந்து ரசம் சாதம் கொஞ்சம் சாப்பிடு!” அதிகாரமாய் அவனை அழைக்க,

“சரி! வீட்டுக்கு போய் ஒரு குட்டிக்குளியல் போட்டுட்டு வரட்டுமா?” என்றான் மெல்லிய சிரிப்புடன்.

“ஒண்ணும் அவசரமில்ல; வந்து உன் பங்கு ரசம் சாதம் சாப்பிட்டா போதும்!” அவள் அழுத்திச் சொல்ல, “சரி! சரி!” என்று சம்மதம் சொல்லி, விடைபெற்றான்.

அரை மணி நேரத்தில், டீ-ஷர்ட், ஜீன்ஸில், மாப்பிள்ளை கணக்காக வந்தவனுக்கு விருந்து உபசரிப்பும் அதே விதமாகத்தான் இருந்தது. அவன் வந்ததும், குடும்பமாக உட்கார்ந்து உணவு அருந்தினர். அரவிந்தனுக்கும், மீராவின் தந்தை வரதனுக்கும் இடையே தொடங்கிய தொழில்ரீதியான உரையாடல் டின்னர் சாப்பிட்டு முடித்த பின்னும் நீடித்தது.

மீராவின் அப்பா சுயதொழில் செய்யும் ஒரு தொழிலதிபர். தொடக்கத்தில் சமையலறைக்கு தேவையான நவீன சாதனங்களை மட்டுமே உற்பத்தி மற்றும் விநியோகம் செய்து கொண்டு இருந்தவர், இன்று படிப்படியாக வளர்ந்து, வடிவைமப்பு, அலங்காரம் என்று அனைத்தையும் கவனிக்கின்றார். சமீபகாலமாக பிரபலமடைந்து வரும் மாடுலார் கிட்சென் (Modular Kitchen) முறையும் தன் தொழிலில் சேர்க்க, விரும்பி, அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டார். அதை பற்றிதான் அரவிந்தனிடமும் கலந்தாலோசித்து கொண்டிருந்தார்.

பேசிக்கொண்டே கம்ப்யூட்டர் டேபிள் முன்னால் இருந்த இருக்கையில் வந்தமர்ந்தனர். வரதன், சில பொத்தான்களை தட்டி, கணினியை உயிர்ப்பித்தார்.

“இதெல்லாம் வீட்டை மேம்படுத்தும் செலவுகளுள் அடங்குமா?” வினவிக் கொண்டே மேலும் கீழும் திரையை ஓட்டிக் காட்டினார்.

அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக ஆராய்ந்து, அரவிந்தன் அவருக்கு விளக்கம் சொல்ல, மீராவும் அங்கு வந்து அமர்ந்தாள்.

“பாரு மீரா! அங்கிள் (Uncle), தொலைநோக்கு பார்வையோட எவ்வளவு அழகா திட்டமிடுகிறாரு! நீ ஏன் அவருக்கு தொழில்ல உதவியா இருக்க கூடாது?” அரவிந்தன் அவளை கேட்க,

“நல்லா கேளு பா! வேலைய விட்டுட்டு தொழில்ல கவனிக்க வர சொன்னா, மாட்டேன்றா!” மகளை பற்றி போட்டுக் கொடுத்தார் வரதன்.

“பொண்ணுங்க காலத்துக்கும் சமையலறையில தான் இருக்கப் போறோம், இதுல தொழில்ரீதியுமா அதையே செய்யணுமா?” அவள் சலித்துக்கொள்ள,

“அது சரி, அப்போ, கல்யாணமாவது செஞ்சிக்கலாம் இல்ல…. நாங்க காட்டுற ஒவ்வொரு மாப்பிள்ளையும் ஏதோ காரணம் சொல்லி தட்டிக்கழிச்சா என்ன அர்த்தம்?” விடாமல் வாதாடினார் வரதன்.

அதற்கு முகம் சுளித்தவள், “ம்ம்….” என்று ராகம் போட்டு, “உங்க தொழில் மாதிரியே, நீங்க காட்டுற மாப்பிள்ளை போட்டோக்களும் செம்ம போரா இருக்கு பா.” காரணம் சொல்ல,

இவர்கள் செல்லச் சண்டை இரசித்தபடி அமர்ந்தான் அரவிந்தன். மகள் பேச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத தந்தை, அரவிந்தனிடம் திரும்பி,

“நீயாவது அவளுக்கு பிடிச்சா மாதிரி மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லு பா. வர போற மருமகனாவது எனக்கு தொழில்ல கைகொடுக்கட்டும்.” என்று விரக்தியில் புலம்பினார்.

அதற்கு மீரா, அரவிந்தனிடம், “நீ எனக்கு மாப்பிள்ளை தேடுறது இருக்கட்டும்…. திங்கட்கிழமை நான் கீதா வளைகாப்புக்கு போயிட்டு பத்து மணிக்கு மேல தான் அலுவலகத்துக்கு வருவேன்.” வந்த விஷயத்தை சொல்லி பெருமூச்சுவிட்டு,

“எனக்கு தூக்கம் வருது. குட் நைட். நீ நிதானமா பேசிட்டு கிளம்பு.” என்றாள்.

மேலும் அரைமணி நேரம் அவருடன் பேசிவிட்டு, அரவிந்தன் வீட்டிற்கு புறப்பட்டான்.

காலையிலிருந்து ஓயாமல் அலைந்ததில் படுத்தவுடன் தூக்கம் வந்திருக்க வேண்டும் அவனுக்கு; ஆனால் அது வரவில்லை; அதற்கு காரணம், மீராவிடம் அவனுக்கு புதிதாய் மலர்ந்த உணர்வு…. அதை காதல் என்று அவனால் உறுதியாக சொல்லவும் முடியவில்லை; விட்டுத்தள்ளவும் முடியவில்லை.

‘பல வருடங்களாக பழகிய தோழியாகவே இருந்தாலும், இன்று மட்டும் ஏனோ என் கண்களுக்கு அவள் வித்தியாசமாக தோன்றினாள்’ புரியாமல் தவித்தான் அரவிந்தன்.

அதுவும், பகலெல்லாம் ஊர் சுற்றும் போது வராத உணர்வு, இப்பொழுது வந்த காரணம் என்ன என்று யோசிக்க, மேலே சுற்றிக்கொண்டிருக்கும் அந்த மின்விசிறியை காட்டிலும் அவன் தலை வேகமாக சுற்றுவதை போல் உணர்ந்தான்.

சற்று நிதானமாக சிந்தித்ததில், மீராவின் அப்பா, அவளுக்கு, பொருத்தமான ஒருவனை பரிந்துரை செய், என்று அவனிடம் சொன்ன போது, ஒரு தடுமாற்றம். அவளை வேறொருவருக்கு விட்டுக்கொடுக்க மனம் மறுத்தது. அவளை தானே திருமணம் செய்துகொண்டால் என்ன தவறு என்று தோன்றியது அவனுக்கு.

மீராவிடம் காதலை சொன்னால், அதை அவள் ஏற்றுக்கொள்வாளா, இல்லை தன்னை தவறாக நினைப்பாளா என்று பயந்த புத்தி அவனை கட்டிப்போட்டது. மனதில் உள்ள காதலை மறைத்து, பழகுவது உண்மையான நட்புக்கு அழகா என்று மனசாட்சி தூற்றியது. விடை தெரியா பல கேள்விகளுடன் இரவும் நகர்ந்தது.

அவனுடைய எல்லா கேள்விகளுக்கும், விரைவில் பதில் சொல்லும், அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…..

பின் குறிப்பு:

இந்த பகுதியில், ஹரி எழுதியதாக குறிப்பிட்டிருக்கும் கதை தலைப்புகள் யாவும் என் கற்பனையே. எதார்த்தத்துடன் ஏதேனும் ஒற்றுமை இருந்தால், அது தூய தற்செயல் நிகழ்வே.

ஆங்கில சொற்களுக்கு, இணையான தமிழ்ச்சொற்கள், நடைமுறையில் இருக்கும் போதிலும், உரையாடல்கள் எதார்த்தமான பேச்சுத் தமிழில் இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து, ஆங்காங்கே ஆங்கில சொற்கள் உபயோகித்துள்ளேன்.