அன்பின் ஆழம் – 02

மீரா, அரவிந்தனை அழைக்கலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்துடன் கைப்பேசியை உற்றுப் பார்த்து கொண்டிருந்தாள்.

“மேடம்! டீயா? காபியா?” பியூன் வந்து கேட்டப்போது தான் உணர்ந்தாள், மணி மூன்றாகிவிட்டது என்று.

“நன்றி! எனக்கு எதுவும் வேண்டாம் பா!” என்று அவனுக்கு பதில் அளித்தப்படி நாற்காலியிலிருந்து எழுந்து, தன் லன்ச் பேகை எடுத்துக்கொண்டு அரவிந்தன் அறையை நோக்கி வேகமாக நடந்தாள்.

“அரவிந்த்! உனக்கு இன்னும் என் மேல கோபம் குறையலையா?” கேட்டுக்கொண்டே அவன் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

கணினியிலிருந்து தலையை திருப்பி அவளை பார்த்தான்.

“நீ செஞ்சது சரியான்னு யோசிச்சு பாரு மீரா! கேள்வியை அவளிடமே திருப்பினான்.

“அப்படினா உனக்கு அவன் மட்டும்தான் நண்பனா? நான் இல்லையா?” அவளும் விடாமல் வாதாடினாள்.

“நான் உங்க நாலுபேரையும் ஒரேமாதிரி தான் பார்க்கிறேன் மீரா. நீதான் வேறுபடுத்தற!” அவளையே குறைகூறினான்.

“வேலையும் நட்பையும் பிரிச்சு பாக்கறது தப்பா?” நியாயம் கேட்டாள்.

“நான் அப்படி சொல்லல மீரா! கீதா விஷயத்துல கரிசனம் காட்டறா மாதிரி ஹரிக்கு செய்ய மாட்டேங்குறியே…. நீ செய்யறது தப்புதானே?” வருத்தமாக கேட்டான் அரவிந்தன்.

“நான் எடுத்த முடிவுக்கு பின்னாடி ஒரு காரணம் இருக்கு. அது தெரியணும்னா, நீ முதல்ல சாப்பிடு.” திட்டவட்டமாக சொல்லி, மடியில் இருந்த லன்ச் பேகை மேஜையில் வைத்தாள். “உனக்கு பிடிக்கும்னு சப்பாத்தி குருமா கொண்டு வந்திருக்கேன் தெரியுமா?” அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு டப்பாவை திறந்தாள்.

அவளின் அந்த குழந்தைத்தனமான முகபாவனையை கண்ட அரவிந்தனின் கோபம், காற்றில் பறந்தது.

“சரி வா, முதல்ல சாப்பிடலாம். அப்புறம் உங்க காரணத்த விளக்குங்க ஆஃபிசர் மேடம். நான் பொறுமையா கேட்கறேன்.” இதழோர சிரிப்புடன் கேலியாக பேசினான்.

மீரா, அரவிந்தன், ஹரி, கீதா மற்றும் மகேஷ் அரசாங்க வங்கி ஒன்றில் ஒரே சமயத்தில் வேலைக்கு சேர்ந்து நல்ல நண்பர்களானவர்கள். ஐவரும் ஒரே நிலையில் பணியை தொடங்கியபோதும், இன்று அலுவலகத்தின் வெவ்வேறு துறையிலும், பொறுப்பிலும் இருந்தனர்.

அரவிந்தன் இரண்டு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் முடித்ததாலும், சிறப்பு பயிற்சி மேற்கொண்டதாலும், கடின உழைப்பாலும் இன்று கிளையின் மேலாளராக பணிபுரிகின்றான். மீரா, மகேஷ் இருவரும் வங்கியின் தனிப்பட்ட துறைக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். அதனால், மீரா கட்டண செயலாக்கம் (Payments Processing) பிரிவிலும், மகேஷ் வீட்டுக்கடன் (Housing Loans) பிரிவிலும் தலைமை பொறுப்பை ஏற்றனர். ஹரியும் கீதாவும், மீராவின் குழுவில் வேலை செய்கின்றனர். இருவரும் வேலைக்கு தேவையான கடமைகளை ஆற்றினார்களே தவிர, பதவி உயர்வுக்கு என்று எந்த தனிப்பட்ட முயற்சியும் எடுக்கவில்லை. அவரவர்கள் குடும்ப சூழ்நிலையும் ஒரு காரணமாக இருந்தது.

வெவ்வேறு நிலையிலிருந்த போதும், அவர்கள் அலுவலகமே கண்போடும் அளவுக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

“சரி! இப்போ சொல்லு, அப்படி என்ன தப்பு கண்டுபிடிச்ச ஹரி கிட்ட?” மறுபடியும் ஆரம்பித்தான் அரவிந்தன், சாப்பிட்டு முடித்த கையோடு.

“நீயே சொல்லு, அவன் எவ்வளவு திறமைசாலி. நம்ம இங்க வேலைக்கு சேர்ந்தப்ப அவன் தானே கொடுக்கற எல்லா வேலைகளையும் முதல் ஆளா செஞ்சி முடிப்பான்; அவன் செயலிலும் ஒரு தெளிவு இருக்கும். சரிதானே?” என்றதும்,

“ம்ம்….” என்று அரவிந்தனும் தலையசைத்தான்.

அவள் மேலும் பேசினாள், “ஆனா இப்போ பாரு…. ரெண்டு வருஷமா ஏதோ தலைவிதியேன்னு வேலைக்கு வரான்…. கடனேன்னு வேலைய பார்க்கிறான். மேற்கொண்டு வளர எந்த முயற்சியும் எடுக்கமாட்டேன்றான். இப்படி இருக்க அவனுக்கு நான் ஏன் பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்யணும்?

“கீதாவும் தான் பெருசா எந்த முயற்சியும் எடுக்கல…. ஆனா அவள மட்டும் தேர்ந்தெடுத்திருக்க” மீண்டும் அவளுடன் ஒப்பிட்டு ஹரிக்காக வாதாடினான்.

“உண்மைதான்! அவளும் சொன்ன வேலை மட்டும்தான் செய்வா. அவ எப்பொழுதும் எதையும் மெதுவா தான் புரிஞ்சிப்பா. ஆனால் அவளால முடியாத போதும் தெரிஞ்சிக்க முயற்சி செய்யறா. அதான், அவளுடைய தன்னம்பிக்கைய ஊக்குவிக்க பதவி உயர்வுக்கு சிபாரிசு செய்தேன்.” நீண்ட விளக்கம் கொடுத்து, பெருமூச்சுவிட்டு, மேலும் பேசினாள்,

“ஆனா இவனோ வடிகட்டின சோம்பேறியா ஆயிட்டான். அதனால, தயவுசெய்து அவளோட இவன ஒப்பிட்டு பேசாத.”

அவள் சொன்னதை மனதில் அசைப்போட்டவன், “இப்படி யோசிச்சு பாரு மீரா…. பதவி உயுர்வு அவனையும் நல்லா வேலை செய்ய ஊக்குவிக்கலாம்ல?”

அதை கேட்டு ஏளனமாக சிரித்தவள், “அவனுக்கே தெரியும், அதுக்கெல்லாம் அவன் தகுதியானவன் இல்லன்னு…. அவன் மேல பரிதாபப்பட்டு நம்ம பதவி உயர்வுக்கு சிபாரிசு செஞ்சா, நம்மளே அவன் சோம்பேறிதனத்துக்கு தீனி போட்டு வளர்க்குறா மாதிரி ஆயிடும்.”

“அதுக்கில்ல மீரா….” என்று அவள் மனதை மாற்றுவதிலேயே குறியாய் இருந்தவனை கையால் ஜாடை காட்டி குறுக்கிட்டாள்,

“இதோ பாரு, போனா போகுதுனுதான் அவனுக்கு சம்பளவுயர்வுக்கு சரின்னு சொல்லியிருக்கேன். அப்புறம் அதையும் ரத்து செய்ய வேண்டியதாயிருக்கும்.”

அவள் பிடிவதாம் அறிந்தவன், “சரி! சரி! நீ செஞ்சது சரிதான் மா” கைக்கூப்பி சொல்லி சரண்டரானான்.

அவன் வேறுவழியில்லாமல் தன் முடிவை ஏற்றுக்கொண்டான் என்று உணர்ந்தாள் மீரா. அவன் அருகில் சென்று, தோளில் தட்டியவாறு மென்மையாக பேசினாள், “புரிஞ்சிக்கோடா! அவன் எனக்கும் நண்பன் தான். அவன் உற்சாகமா வேல செய்யணும்னு தான் எனக்கு ஆசை. முடிஞ்சா, அவன் பிரச்சனை என்னன்னு கண்டுபிடிச்சு அதுக்கு தீர்வு சொல்லு. சுருக்கமா சொல்லணும்னா, அவனுக்கு பாதைய காட்டு; அவன் பாரத்த சுமக்காத!”

அவள் எண்ணங்களை புரிந்து கொண்டவன் மெல்லிய சிரிப்புடன் சம்மதம் என்று தலையை ஆட்டினான். அவளும் லேசான மனதுடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

அரவிந்தனுக்கு தன் நண்பனின் பிரச்சனை என்னவென்று, முன்னமே தெரியும். இருவருக்கும் வேலைக்கு வரும் முன்னரே பழக்கம். ஒரே கல்லூரியில் படித்தனர்; பக்கத்து ஊர்காரர்கள்; சென்னையிலும் வீடொன்று வாடகைக்கு எடுத்து ஒன்றாக வசித்தனர்.

ஹரியின் குடும்ப நிலவரம் கூட அரவிந்தனுக்கு நன்றாக தெரியும். அவன் வேலையில் ஈடுபாடுயில்லாமல் இருந்தது ஏன் என்று அவனுக்கு முழுமையாக தெரிந்த போதும், அதை மீராவிடம் விளக்க முடியாத சூழ்நிலையில் இருந்தான். தன் நண்பனின் இரகசியத்தை காப்பாற்றி, அவனை வேலையில் தக்கவைக்க, தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்யவேண்டும் என்று மனசுக்குள் தீர்மானம் செய்தான். அதனால்தான் மீராவிடம் மேலும் விவாதிக்காமல் அமைதியாய் இருந்தான்.

வாரம் ஆரம்பித்த வேகத்தில் முடிந்தது. சனிக்கிழமை அரைநாள் என்பதால், அலுவலகமே வெறிச்சோடியிருந்தது. அரவிந்தனும் நீண்ட சோம்பல் முறித்து, தன் நாற்காலியிலிருந்து எழுந்தான்.

பெரும்பாலான வார இறுதி நாட்களை அரவிந்தன் நண்பர்களுடன் கழிப்பான். ஆனால், இந்த வாரம் ஹரி தன் தந்தையின் வருடாந்திர சடங்குகளை செய்ய ஊருக்கு போயிருந்தான். மகேஷும் தன் குடும்பத்தினருடன் குலதெய்வ வழிபாட்டிற்கு சென்றுயிருந்தான். அதனால் அரவிந்தன், வழியில், பிரியாணி பார்சல் வாங்கிக்கொண்டு நேராக வீட்டிற்கு சென்று ஒய்வு எடுக்கலாம் என்று திட்டமிட்டான்.

அறையிலிருந்து வெளியே வந்தவன், மீரா ஏதோ மும்முறமாக வேலை செய்து கொண்டிருப்பதை கவனித்தான். அவன் தன்னருகில் வருவது கூட தெரியாமல், கணினிக்குள் மூழ்கி இருந்தாள்.

“என்ன மேடம்? அப்படி என்ன வேலை, சனிக்கிழமை அதுவுமா?” கேட்டபடி அவளருகில் குனிந்து, மேஜையில் இருந்த பேப்பரை எடுத்துப் பார்த்தான்.

“எல்லாம் உங்க நண்பர் வேலைதான் பாஸ்?” நக்கலாக பதிலளித்து அவன் முகத்தை பார்த்தாள்.

“புரியலையே!”

“ஹரி கவனிக்கர நிர்வாகங்களின் கணக்கு விவரங்களை மாத கடைசியில் எனக்கு ஒரு ரிப்போர்ட் தயார் செய்து அனுப்புவான். ஊருக்கு கிளம்பற அவசரத்துல அவனும் அனுப்பல; நானும் கேட்க மறந்துட்டேன். அதான் நானே தயார் செய்துகிட்டு இருக்கேன்.” வீண்வேலை என்று புலம்பினாள்.

“அவனுக்கு போன் செய்து பாஸ்வொர்ட் கேட்க வேண்டியதுதானே?” யோசனை சொன்னான்.

“தெரியும் பா! ஆனா, இன்னைக்கு அவங்க வீட்டுல சடங்கு இல்ல; வேலையா இருப்பான்…. தொந்தரவு செய்ய வேண்டாம்னுதான், ஹெல்ப் டெஸ்க்ல கேட்டேன்; திங்கட்கிழமை தான் தருவாங்களாம்; அதுவர காத்திருக்க முடியாதுன்னு தான் நானே ரிப்போர்ட் தயார் செய்திடலாம்னு….” அவள் முடிக்கும் முன்,

“இவ்வளவுதானே! எனக்கும் சிஸ்டம் ஆக்ஸஸ் (System Access) இருக்கே, மறந்துட்டியா?” அவள் தலையில் செல்லமாக குட்டி, “இரு, உனக்கு இப்போவே ஹரி கணினிக்கு ஆக்ஸஸ் தரேன்!” என்று உடனே தேவையானதை செய்து கொடுத்தான்.

மீரா ஆச்சரியத்திற்கு ஏற்ப, ஹரி எல்லா ரிப்போர்ட்டுகளையும் தயார் நிலையில் வைத்திருந்தான். ஐந்து மணி நேர வேலை ஐந்தே நிமிடத்தில் முடிந்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள்.

“ரொம்ப நன்றி அரவிந்த்!” உளமார நன்றி தெரிவித்து, “பத்து நிமிடம் காத்திருக்கியா…. என்ன அப்படியே வீட்டுல விட்டுடு!” என்று கேட்டாள்.

மீராவின் வீடு, இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இரண்டு தெரு தள்ளியிருந்தது. அவர்கள் இருவரும் பைக்கில் வர, இவள் சன்னியில் (Sunny) வருவாள்.

“ஏன், உன் வண்டிக்கு என்ன ஆச்சு?”

“இல்லப்பா! வண்டி சர்வீஸ் சென்டர்ல விட்டுருக்கேன்.”

“சரி! அப்போ வெளிய சாப்பிட்டு போகலாம் வா!” சிறிதும் யோசிக்காமல் அழைத்தான்.

“அம்மா வீட்டுல உணவு சமைச்சிருப்பாங்க!” தயக்கத்துடன் பதிலளித்தாள்.

“அத டின்னருக்கு சாப்பிடு! எப்படியிருந்தாலும், இந்த வேலை முடியலேன்னா சாயங்காலம் தானே வீட்டுக்கு போயிருப்ப!” லாஜிக்(logic) பேசி அவள் வாயடைத்தான்.

“சரி டா! அம்மாகிட்ட சொல்லிக்கறேன்!” சம்மதம் சொன்னபடி, தேவையான ரிப்போர்ட்ஸ் இருக்கிறதா என்று மீண்டும் ஒரு முறை சரிபார்த்து கொண்டாள். அந்த ஃபோல்டெர்(folder) மூட, அவள் கண்களுக்கு வேறொரு ஃபோல்டெர் தென்பட்டது. அதுவும் அதன் பெயர் தான் அதில் என்ன இருக்கு என்று பார்க்க, அவளுக்கு ஆர்வத்தை தூண்டியது.

“கனவே கலையாதே!” உரக்கச்சொல்லி, “பாருடா இவன! என்னலாம் வச்சிருக்கான்னு!” சொல்லிக்கொண்டே அதை அலசினாள்.

இவள் மேலும் பார்த்தால் பிரச்சனையாகிவிடும் என்று அறிந்தவன், அவளை திசைத்திருப்ப,

“நமக்கு எதுக்கு; கிளம்பு, எனக்கு ரொம்ப பசிக்குது.” வயிற்றை தடவியபடி கெஞ்சினான்.

அவன் சொல்வது எதற்கும் செவிமடுக்காமல், மேலும் ஆராய்ச்சி செய்தாள். ஒன்றன் பின் ஒன்றாக பார்த்து, அவள் கண்கள் கோபத்தில் சிவந்தது.

“இப்ப புரியுது அவன் ஏன் வேலையில கவனம் செலுத்தறது இல்லன்னு.” சொல்லி அரவிந்தனை பார்த்து முறைத்தாள். “இதுல நீ அவனுக்கு சிபாரிசு வேற….” தலையை அசைத்து அசைத்து, “கையும் களவுமா மாட்டிட்டான்; வரட்டும் அவனுக்கு இருக்கு…! என்று முணுமுணுத்தாள்.

“ப்ளீஸ் மீரா! நீ நினைக்குறா மாதிரியில்ல. அது என்னன்னு நான் சொல்றேன். அவன எதுவும் கேட்காத.” காலில் விழாத குறையாய் கெஞ்சினான்.

“ஓ! இதுக்கு நீயும் உடந்தையா? ரெண்டு பேரும் சேர்ந்து கூட்டுக்களவாணித்தனமா செய்யறீங்க!” அவனிடம் சீற்றம் கொண்டது தான் மிச்சம்.

இனி அவளிடம் எதையும் மறைக்க முடியாது என்று உணர்ந்தவன், “உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்றேன். உனக்கும் எல்லாம் தெளிவாகிடும்…. என்ன நம்பு டி!” சூழ்நிலை கைதியாய் அவளிடம் மன்றாடினான்.

ஹரி மேல் நம்பிக்கை இல்லாத போதும், அரவிந்தனிடம் மதிப்பும் மரியாதையும் அவளுக்கு அதிகமாகவே இருந்தது.

“சரி கிளம்பு! போற வழியில பேசிக்கலாம்!” கடுமையான குரலில் சொல்லி நடந்தாள்.

ஹரியை பற்றி அரவிந்தன் அவளிடம் சொல்லப்போகும் உண்மைகளுக்கு செவி சாய்ப்பாளா மீரா…. பதில் சொல்லும் நட்பின் மேல், அவள் வைத்த அன்பின் ஆழம்….