அன்பின் ஆழம் – 01 (கதை சுருக்கம்)
வாழ்க்கை ஒரு நதி என்றால்,
அன்பு அதில் வழிந்தோடும் நீர் அல்லவா!
அன்பெனும் நீரின் ஆழம்,
மழைபெய்ய பெருகுவதும்,
கதிரவனின் இதமான சூட்டில் வற்றிவிடுவதும்
இயற்கை தான்.
அதுவே புயலின் சீற்றத்தாலும், தீவிர வெப்பத்தாலும் தாக்கப்பட்டால்….
அதில் உயிர்வாழும் ஜீவராசிகளின் நிலை என்ன?
இதமாக நீந்திக்கொண்டிருந்த அத்தனை ஜீவன்களும், மூழ்கியும், தாகத்தால் தவித்தும் தத்தளிப்பர்.
அதே போல் தான் மனித வாழ்க்கை.
அன்பிற்காக ஏங்குவது மனித இயல்பு.
ஆனால், அந்த அன்பு திணிக்கப்படும் போது, அவன் தடுமாறுகிறான். கட்டாயப்படுத்தி செலுத்தும் அன்பு, சில நேரங்களில் நன்மையும், சில நேரங்களில் தீமையும் விளைவிக்கிறது. நன்மையும் தீமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் பொருத்தே.
உறவுகள் நம்மீது பொழியும் அன்பின் ஆழம், நிர்ணயிக்கும், நாம் வாழ்க்கையில் நீந்துகிறோமா, மூழ்குகிறோமா இல்லை தத்தளிக்கிறோமா என்று.
அப்பா மகளிடம் கொண்ட அன்பு, வானிலிருந்து பெய்யும் மழை போன்றது.
பொத்தி வளர்த்த மகளின் காதலை அவர் மறுப்பதும் ஒரு வகை அன்புதான்.
அதை அக்கறை என்றும் சொல்லலாம்.
மழை புயலாக மாறிவிடுகிறது; மகள் அதில் மூழ்காமல் மிதந்து வர போராடுகிறாள்.
அம்மா மகனை இதமான சூட்டினால் அரவணைப்பது அன்பு என்றால், ஈன்றெடுத்த பிள்ளை காதலிக்காக வாதாடும் போது அவள் கொந்தளிப்பதும் அன்புதான்.
அது பயம் கலந்த பாசத்தால் ஏற்படும் உரிமை போராட்டம் என்றும் சொல்லலாம்.
வறண்டு போகும் நதியில் சோர்ந்து போகாமல் அந்த பாசப்பிடியின் உஷ்ணம் குறைய மகன் பொறுமை காப்பானா?
நண்பர்களிடையே நிலவும் அன்பு, மழையும் வெயிலுமாக கலந்திருக்க, அவர்கள் காதலர்களாக மாறும்போதும் நிலைக்குமா?
கருத்து வேறுபாடுகளும், பொய் கோபங்களும், சின்ன சின்ன சண்டைகளும், ஊடல்களும் புயலாக, உஷ்ணமாக உருவெடுத்தாலும், நிச்சயமாக அவையும் அன்பெனும் ஆழத்தின் வெவ்வேறு கோணங்களே.
இப்படி தங்கள் அன்பின் ஆழத்தை சோதிக்க வந்த இடையூறுகளை உடைத்தார்களா?
ஒன்று சேர்ந்து வாழலாம் என்ற முடிவுக்கு பின் இருந்த இலட்சிய பாதையில் பயணித்தார்களா?
வெற்றி வாகை சூடினார்களா இந்த காதல் ஜோடிகள் என்று கதையை படித்து தெரிந்துகொள்ளலாம்.