அன்பின் ஆழம் – 25.2

அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று புரியாமல் மௌனமாக அமர்ந்திருந்தார் வரதன். ஹரி, அவர் வலது புறம் இருந்த அதே ராசியான சோஃபாவில், நிமிர்ந்து அமர்ந்திருந்தான்.

“அங்கிள்! உங்க பொண்ணு கொடுத்த ஊக்கத்தாலும், உதவியாலும், நான் நெனச்சு கூட பார்க்க முடியாத வெற்றிய இந்த குறுகிய காலத்துல அடைஞ்சுட்டேன். ரெண்டு புத்தகங்கள் வெளியிட்டதுலேயே, அவகிட்ட வாங்கின முதலீட்டு பணத்த இலாபத்தோட என்னால திருப்ப முடிஞ்சுது…” தன்னம்பிக்கை முகத்தில் மின்ன சொன்னவன், கொண்டு வந்த பையிலிருந்து ஒரு காசோலையை எடுத்து, அவரிடம் நீட்டினான்.

வழக்கம்போல, அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் சிலை போல அமர்ந்திருந்தார். நொடிகள் நிமிடங்களாக, “அப்பா! வாங்கிகோங்க ப்ளீஸ்!” மீரா கெஞ்சினாள்.

அடுத்த கணமே மகளை பார்வையால் சுட்டெரித்தவர், “என்ன கேட்டா இதெல்லாம் செஞ்ச? உன் பணம்; உன் காதல்; உன் வாழ்க்கை; நான் எதுலையும் தலையிடறதா இல்ல. ”வார்த்தைகளால் இரு இதயங்களையும் குத்திவிட்டு எழுந்தார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க!” இளஞ்சோடிகளின் சார்பில் குரல் கொடுத்தாள் நிர்மலா. மூவரின் பார்வையும் அவள் பக்கம் திரும்ப, மனைவிக்கு மரியாதை கொடுத்து அப்படியே நின்றார் வரதன்.

“நம்ம பொண்ணு சொன்ன ஒரே காரணத்துக்காக கடினமா உழைச்சு, சாதிச்சிட்டு வந்திருக்காரு. இப்போவும், நீங்க இவ்வளவு வெறுத்து பேசினா என்ன அர்த்தம்?” ஹரிக்காக கணவனிடம் வாதாடினாள்.

மனைவியும் அவர்கள் பக்கம் சாய்ந்ததை எண்ணி கடுப்பானவர் பெருங்குரலில் சிரித்தார். “ஹா…ஹா…ஹா…! இதுக்கு பேரு உழைப்பா!” ஏளனமாக தொடங்கியவர், “ஏதோ ரெண்டு புத்தகங்கள் நல்லா விற்பனையானா, அவன ஒரு பிரபலமான எழுத்தாளாருன்னு தலையில தூக்கி வெச்சு கொண்டாட சொல்றியா?” கேள்வியை திருப்ப, மனைவி பதில் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

“அப்பா!” கெஞ்சலாக தொடங்கினாள் மீரா. “நீங்க சொன்னா மாதிரியே எனக்கு ஏத்தவனா, தன்ன உயர்த்திகிட்டு வந்திருக்கான் பா; இதுக்கு மேல, அவன் என்ன செய்யணும்னு எதிர்பாக்குறீங்க?” தெளிவுபடுத்த சொன்னாள்.

மகளை நன்றாக வசியம் செய்திருக்கிறான் என்று தோன்றியது அவருக்கு. அவள் பக்கம் திரும்பி, மென்மையாக, “இதெல்லாம் முன்னாடியே செஞ்சிருக்கணும்னு சொல்றேன். தன்னை நல்ல நிலமையில உயர்த்திகிட்டு, அப்புறம் வந்து பொண்ணு கேட்டிருந்தா, நான் ஏன் வேண்டாம்னு சொல்ல போறேன்.” அவரும் தெளிவுபடுத்தினார்.

ஹரி பேச்சுக்கு இணங்கி அவனை வெளியே கடன் வாங்க விட்டிருக்க வேண்டுமோ என்று தோன்றியது அவளுக்கு. நடந்து முடிந்ததை பற்றி, வருந்தி பிரயோஜனம் இல்லை என்று உணர்ந்தவள் பேச்சற்று நின்றாள்.

மூவரின் வாயையும் அடைத்த திருப்தியில், அவர் இடத்தைவிட்டு நகர,

“எல்லாராலையும் தைரியமா நெனச்சத செஞ்சிடமுடியாது அங்கிள்! யாராவது நம்ம மேல நம்பிக்கை வெச்சு ஒரு சின்ன ஊக்கம் தரமாட்டாங்களான்னு தோணும்.” எதார்தத்தை எடுத்துரைத்தவன், “மீரா அப்படி ஒரு நம்பிக்கை வார்த்தை எனக்கு சொன்ன பிறகு தான், சாதிக்க, உண்மையான உழைப்பு போதும்னு புரிஞ்சிகிட்டேன்!” என்று, மீராவால் தான் தனக்கு வாழ்க்கையில் ஒரு பிடிமானம் பிறந்தது என்று உணர்த்தினான்.

“என் பொண்ண சுயமா சிந்திச்சு முடிவெடுக்கறவளா வளர்த்தது, உன்ன மாதிரி ஒருத்தனுக்கு கட்டி கொடுக்க இல்ல; உன் மேலையே உனக்கு நம்பிக்கை இல்ல… யாராவது வந்து நமக்கு ஊக்கம் தருவாங்களா, உதவி செய்யுவாங்களான்னு யோசிக்கற நீ, நாளைக்கு குடும்ப பொறுப்ப எப்படி சுமப்ப…” ஓயாமல் அவநம்பிக்கையோடு ஏசி, மகளிடம் திரும்பினார்.

“இங்க பாரு மீரா! காதல் கண்ண மறைக்கும். இப்படி ஆசை வார்த்தை பேசுறவனையும், அனுதாபம் எதிர்பார்க்கிறவனையும் கல்யாணம் செய்துக்கணுமான்னு யோசி.” தீர்மானமாய் ஹரி அவளுக்கு ஏற்றவன் இல்லை என்று சொன்னார்.

மீராவும் விடுவதாக இல்லை. “அப்பா! ஹரி மேல காதல் வரத்துக்கு முன்னாலேயே அவன் எனக்கு ஒரு நல்ல நண்பன். ஆசை வார்த்தை பேசி என்ன ஏமாத்தணும்னு அவனுக்கு அவசியம் இல்ல. சொல்லப்போனா, நான் தான் அவன முதல்ல காதலிச்சேன்.” தன்னவனை ஏக்கத்துடன் பார்த்தவள் தர்க்கம் செய்தாள்.

கோபத்தின் உச்சியில் இருந்தவர், “பாரு! பாரு! நீயே அவன் எவ்வளவு சந்தர்ப்பவாதின்னு நிரூபிக்குற…” மகள் வழியிலேயே சென்று மடக்க, அவள் குழம்பியவளாய் கண்கள் சுருங்க பார்த்தாள்.

“ஒரு நண்பனா, உன் பேச்ச கேட்டு முன்னேறாம, நீ கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்ன உடன, இப்படி புகழ், பணம் எல்லாம் சேர்த்து உன்ன வசியம் செய்யுற அவன் தந்திரம் உனக்கு புரியலையா?” அவன் உழைப்பை கொச்சை படுத்த,

“அப்பா!” கொந்தளித்தாள் மீரா.

அதை பொருட்படுத்தாமல் அவர் மேலும் ஏசினார். “உன்ன இம்ப்ரெஸ் பண்ண தான் இதெல்லாம் செஞ்சிருக்கான். உங்க கல்யாணம் முடிஞ்ச அடுத்த நிமிஷமே, இதெல்லாம் வந்த வேகத்துலேயே போயிடும். அப்புறம், காலத்துக்கும் நீ தான் அவனுக்கு உழைச்சு கொட்டணும்.” வரதன் கடுமையாக பேச, மூவரின் முகமும் வாடியது.

அவர்கள் அமைதி, அவர் ஆணவத்திற்கு தீனியாக, இருமாப்புடன் தன் அறைக்குள் புகுந்தார். நிர்மலாவும் அவர் பின் செல்ல, மீரா, தன்னவன் அருகில் ஓடி வந்து மண்டியிட்டு அமர்ந்தாள்.

“அப்பா பேசினத மனசுல வெச்சுக்காத டா ஹரி!” சொன்னவளுக்கே தெரியும், தன் தந்தை எவ்வளவு கூர்மையாக பேசி அவன் மனதை புண்படுத்தி இருக்கிறார் என்று.

எழுந்தவன், அவள் தோளில் ஆறுதலாய் தட்டி கொடுத்து, “பரவாயில்ல மீரா. இது ஒண்ணும் முதல் முறை இல்லையே!” பழகிவிட்டது என்று மென்மையாக சிரித்து, “நீ அவர்கிட்ட எதுவும் வாதம் செய்யாத!” பொறுமையாக சொல்லி, புறப்பட்டான்.

“தம்பி! ஒரு நிமிஷம் நில்லு பா!” அழைத்தாள் நிர்மலா. அவனிடம் கவர் ஒன்றை நீட்டி, “உங்க வீட்டு பத்திரத்த எதுத்துட்டு போ பா!” என்றாள்.

அதற்கு மறுப்பாய் தலையசைத்தவன், “வேண்டாம் ஆன்டி! அத அங்கிள் கையாலேயே வாங்கிக்குறேன்.” சொல்லி புறப்பட்டான். 

 “அப்போ காசோலையாவது எடுத்துட்டு போ பா!” மேஜையிலிருந்ததை கவனித்து சொல்ல, “அது மீராவுக்கு சொந்தம்!” சொல்லி எடுத்து கொள்ள மறுத்தான்.

“ஹரி! என்ன செய்யற!” மீரா பதற, “மிஸ்டர் வரதன் மனசு மாறி, பத்திரத்த அவர் கையாலேயே எங்கிட்ட கொடுக்கட்டும்!” சொல்லி கண்சிமிட்டினான்.

நடந்ததை எல்லாம் மறந்து, ஹரி இயல்பு நிலைக்கு திரும்பிய போதும், மீரா அவன் மேல் கோபத்தின் உச்சியில் இருந்தாள். நாலைந்து நாட்கள், அவனை சந்திக்காமலும், பேசாமலும், மாலையில் உணவு மட்டும் சமைத்துவிட்டு, அவன் வருவதற்குள் வீடு திரும்பினாள். பணத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு, பத்திரத்தையும் வாங்கிக்கொள்ளாமல் போனவன் மனதில் என்ன இருக்கிறது என்று அவளால் யூகிக்க முடியவில்லை.

ஹரி நடந்ததை எல்லாம் அரவிந்தனிடம் பகிர்ந்துகொண்டான். நண்பர்களுக்காக, வரதனிடம் சண்டையிட தயாராக இருந்தவனை, ஹரி அமைதியாக இருக்கும் படி பணிந்து கேட்டுக்கொண்டான். தானே எல்லாவற்றையும் சமாளித்து கொள்வதாகவும் சொன்னான். அரவிந்தனும், ஹரியின் தன்னம்பிக்கையை மெச்சி, அமைதிகாத்தான்.

மாலையில், வழக்கம் போல், பணியிலிருந்து திரும்பியவள், தொலைக்காட்சியில் மூழ்கி இருக்க, அவள் கைபேசியில், குறுஞ்செய்திகள் குவிந்த வண்ணமாய் இருந்தன. தன்னவன் தான் அனுப்புகிறான் என்று தெரிந்தும், அலட்சியம் செய்தாள். அந்த பக்கம் வந்த நிர்மலா, அதை எடுத்து படித்தாள். அம்மா, கைபேசியில் குறுஞ்செய்தியை படிப்பதை கூட பொருட்படுத்தவில்லை. நேரில் பார்த்து காதலிக்காதவன், குறுஞ்செய்தியில் காதல் வார்த்தைகள் அனுப்பிவிடுவானா என்ற எகத்தாளம் அவளுக்கு.

‘மீரா! வந்து டீ போட்டு கொடு டி! உன் கையால டீ குடிக்காம நாக்கே செத்து போச்சு மா!’ படித்தவள் முகத்தில் மென்மையான புன்னகை.

“உங்க அப்பா பண்ண தப்புக்கு, பாவம் ஹரி என்ன பண்ணுவான்; இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி பேசாம இருக்க போற?” மகளை செல்லமாக கடிந்தாள்.

“அவர் பேசுறது புரியலேன்னா, இவன் செய்யுறது சுத்தமா புரியல மா! ரெண்டு பேரும் சமரசமாகட்டும், அப்புறம் இவங்ககிட்ட எல்லாம் பேசுறேன்.” தீர்மானமாக சொல்லி, சேனலை மாற்றினாள்.

மகள் அருகில் வந்து அமர்ந்தவள், “உங்க அப்பா மனசுல என்ன நெனச்சுகிட்டு இப்படி பேசுறாருன்னு புரியாம இருக்கலாம். ஆனா, ஹரி தெளிவா சிந்திக்குறான் டி!” பொறுமையாக எடுத்து சொல்ல,

“அம்மா!” என்று அவளை ஆழமாய் பார்த்தாள்.

“ஹரி, முதலேந்து ஒரு விஷயத்துல ரொம்ப தெளிவா இருக்கான் மீரா. நீ மட்டும் போதும்னு அவன் என்னைக்கும் நினைக்கவே இல்ல. பணம் கொடுக்கறேன்னு நீ முன்வந்த போதும், எங்ககிட்ட சொல்லிட்டு வாங்கிக்க நெனச்சான். உங்க அப்பா அவன அவ்வளவு அவமானபடுத்தி பேசியும், அவர மதிச்சு பணத்த திருப்பி கொடுக்க வந்தான். எல்லாத்துக்கும் மேல, அவர் கையால தான் பத்திரத்த வாங்கிப்பேன்னு சொல்றப்ப, அவன் உன்னோட அப்பாவுக்கு எவ்வளவு முக்கியதுவம் கொடுக்குறான்னு புரிஞ்சுது!” நடந்ததை எல்லாம் உற்று கவனித்தவள், பேச, மீரா சிந்தனையில் கலந்தாள்.

மகள் முகத்தை தன் பக்கம் திருப்பி, மனதிலிருந்ததை மேலும் பேசினாள். “ஆண் வாரிசு இல்லாத எங்களுடைய கடைசி காலத்த நினைக்கும் போது கவலையா இருக்கும். ஆனா, ஹரி செய்யற ஒவ்வொரு விஷயத்த பாக்குறப்ப, என் மகளையும், எங்களையும், இவன விட சிறப்பா வேறயாரும் அரவணைக்க முடியாதுன்ற நம்பிக்கை வலுவடையுது.” அவன் நற்குணங்களின் கலவை என்று எடுத்துரைக்க,

“ஆமாம் மா! அவன் ரொம்ப நல்லவன்! நீயாவது புரிஞ்சுகிட்டையே!” மீரா விரக்தியாக நன்றி தெரிவித்தாள்.

“நானும் அத மறுக்கல… ஆனா, என் கணவரோட பரிபூரண சம்மதமும் ரொம்ப முக்கியம்; அத மறக்காத!” மகளுக்கு வலியுறுத்த,

“அவருக்கு எப்படி புரிய வெக்குறதுன்னு தான் மா தெரியல!” சலித்து கொண்டாள் மீரா.

“அதுக்கு நீ முதல்ல, இப்படி தொட்டதுக்கெல்லாம் ஹரி கிட்ட கோபப்படாம இரு. அவன் சொல்படி நட; அது போதும்.” அறிவுரை சொன்ன அம்மா, ஹரியை எவ்வளவு உயர்வாக பார்க்கிறாள் என்று வியந்தாள்.

அம்மாவின் சொற்படி, அடுத்த அரை மணி நேரத்தில் தன்னவன் வீட்டு வாசலில் நின்றாள்.

கதவை திறந்தவனுக்கு, லாட்டரியில் பரிசு விழந்தது போல, முகமெல்லாம் புன்னகை. “மீரா…..” என்று அவன் ஏக்கத்தில் அழைக்க, முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், ஃப்ரிட்ஜை நோக்கி நடந்தாள்.

அவன் விடாமல் அவளை அழைப்பதை லட்சியம் செய்யாமல், பால் கவர் ஒன்றோடு, சமையலறையை நோக்கி நடந்தாள். பின் தொடர்ந்தவன், அவளை வலுக்கட்டாயமாக பிடித்து, தன் பக்கம் திருப்பினான்.

“அஞ்சு நாளாச்சு டி உன்ன பார்த்து பேசி…” ஏக்கம் ததும்பும் குரலில் அழுத்திச் சொன்னான். அவன் மனவலியை பேசும் வார்த்தையிலும், அழுந்த பிடித்திருக்கும் அவன் கரங்களிலும் உணர்ந்தாள்.

சோகத்தை மறைத்து முறைத்தவள், “நம்ம காதல் கதையில இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்ல… அத மறந்து இப்படி காதல் வசனமெல்லாம் பேசுறீங்களே எழுத்தாளரே!” நிலமையை நினைவூட்டி, அவன் கையை உதறினாள்.

அவள் செய்கையை பெரிது படுத்தாது, விடாமல் பின் தொடர்ந்தவன், “நம்ம முயற்சி செஞ்சோம்…. நெனச்சபடி நடக்குல… அதுக்குன்னு இப்படி துவண்டு போய், என்கிட்ட பேசாம இருக்கலாமா!” மென்மையிலும் மென்மையாய் கெஞ்ச,

அவன் முகத்தை பார்க்க முடியாமல், கண்களை இறுக மூடிக்கொண்டாள். ஈரம் தோய்ந்த துணியை பிழிந்தது போல, இறுக மூடிய இமைகளின் வழியே நீர் கசிய, “என்னால உனக்கு எவ்வளவு அவமானம் டா! பணம் கொடுத்து உதவறேங்கற பேருல, உனக்கு இன்னும் அதிகமா தொல்லைய தான் கொடுத்திருக்கேன் ஹரி!” தேம்பி தேம்பி அழ,

இல்லை என்று மறுப்பாய் தலையசைத்தவன், அவள் கண்களை துடைத்துவிட்டான். அவள் முகத்தை கையில் ஏந்தி, கண் பார்க்க நிமிர்த்தி,

“உங்க அப்பா பேசினதுல எனக்கு ஒரு வருத்தமும் இல்ல டி! அவர் குத்தல் பேச்சுக்கும், மறுப்புக்கும் பின்னால, அவர் உன் மேல வெச்சிருக்க அன்பின் ஆழம் தெரிஞ்சுது மீரா!” விளக்க, அவனை புருவங்கள் உயர்த்தி பார்த்தாள் மீரா.

“ம்ம்….” என்று புன்னகைத்தவன், “வெறும் ரெண்டு புத்தகம் விற்பனையான பணத்த மட்டுமே நம்பி, நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லாம, குடும்ப பொறுப்ப தனியாளா ஏத்துக்க தைரியம் இருக்கான்னு கேட்டாரே…. அதுலயே உனக்கு புரியல…. அவர் என்கிட்ட எதிர்பார்க்கிறது திடமான உழைப்பு மட்டுமேன்னு….” சொல்லி பெருமூச்சுவிட்டு,

“அவர் மகள ராஜகுமாரியா வளர்த்துட்டாரு; கணவனும் அவள அப்படி நடத்தணும்னு அவர் நெனைக்கறதுல தப்பு இல்லையே!” சொல்லி, கண்சிமிட்டியவன், “எனக்கும் அதான் ஆசை; அதற்கான முயற்சி எடுத்துகிட்டு இருக்கேன்னு, உனக்கும் நல்லாவே தெரியும். இதுக்கு போய் மனம்தளரலாமா?” விளக்கி, அவளை தேற்றினான்.

அவன் பேச்சில் சுதாரித்து கொண்டவள், “இவ்வளவு தெளிவா யோசிக்குற நீ, அவர் கிட்ட, வேலையில உனக்கு கிடைச்ச பிரமோஷன், இங்கிரிமெண்ட் பற்றி எல்லாம் சொல்லி இருக்கலாமே டா!”

அதற்கும் மென்மையாக சிரித்தவன், “நான் என்ன தேர்தல் வாக்குறுதியா கொடுக்கறேன்… தற்பெருமை அடிச்சுகிட்டு, பட்ஜட் மாதிரி வரவு செலவு எல்லாம் அவர்கிட்ட சொல்ல….” அவள் மூக்கை செல்லமாக வருடியவன், “என் தேவதைய எனக்கே எனக்கு கொடுக்க சொல்றேன்.” தன்னவள் என்று உரிமையை உணர்த்தினான்.

அவள் விடுவதாக இல்லை. “எல்லாம் சரி எழுத்தாளரே! அதான் பணத்த திருப்பி கொடுத்துடீங்களே; அந்த பத்திரத்த கொண்டு போய் அம்மா கிட்ட கொடுத்திருந்தா, நாங்களாவது நல்லபடியா உறவாடி இருப்போமே” சலித்து கொள்ள,

“அவங்களும் என் மீராவ வெறும் பணத்தாலையும், சொத்தாலையும் மதிப்பிட கூடாது. உன் அன்புக்கும் , நற்குணத்திற்கும் முன்னால, இதெல்லாம் ஒண்ணும் இல்லன்னு அவங்க புரிஞ்சுக்கணும்.” அதற்கும் விளக்கம் சொல்ல,

“எனக்கு என்னமோ, இவங்க மனசெல்லாம் மாத்த அலைஞ்சி திரிஞ்சி, தொடங்கின இடத்துலேயே வந்து நிற்கறோமேன்னு தோணுது டா” என்று நம்பிக்கை இழந்தவளாய் பேசினாள்.

அவள் தலையில் செல்லமாய் குட்டியவன், “நம்ம சரியான பாதையில முன்னோக்கி தான் போயிட்டு இருக்கோம். நடந்த ஒவ்வொண்ணும் அவங்களுக்கு, நம்ம மனபக்குவத்த எடுத்து சொல்லி இருக்கும். அவங்களும் சிந்திக்க துவங்கிடாங்க.” சந்தேகம் கொள்ளாதே என்று உறுதியாய் சொல்ல, அம்மா அவளை ஹரி சொல்படி நடக்க சொன்னது நினைவுக்கு வந்தது.

மேலும் விவாதிக்காமல் அவனுக்கு டீ தயாரித்து கொண்டுவந்தாள். அதை கொடுத்தவள் கண்ணில், மேஜையிலிருந்த அரவிந்தன்-அஞ்சலி திருமண பத்திரிக்கை தென்பட்டது. அதை கையில் எடுத்தவள், ஏக்கத்துடன் வருட, ஹரி அவர்கள் சுழ்நிலை அனைத்தையும் அரவிந்தனிடம் ஒளிவுமறைவு இல்லாமல் பகிர்ந்து கொண்டதாய் சொன்னான்.

“எங்க அப்பா மட்டும் நம்ம காதலுக்கு சம்மதம் தெரிவிச்சு இருந்தா, அரவிந்தன் கல்யாணத்துல, நம்மளும் கொஞ்சி குலாவி, நம்ம கல்யாணதுக்கு ஒரு ஒத்திகை பார்த்திருக்கலாம்!” புலம்பியவள், “தலைநரைச்சதுக்கு அப்புறம் தான் நீ என்கிட்ட ஐலவ்யூ சொல்லணும்னு விதியிருந்தா அத யாரால மாற்ற முடியும்.” என்று சிணுங்க,

அதற்கு வாய்விட்டு சிரித்தவன், “இவ்வளவு கலவரத்துலையும் இதான் உன் கவலையா?” அவள் தோளை சுற்றி வளைத்து காதில் கிசிகிசுத்தான்.

“கையை எடுங்க எழுத்தாளரே!” கழுத்தை நொடித்தவள், “பின்ன ராக்கெட் விடுறத பற்றியும், கப்பல் வாங்குறத பற்றியுமா கவலைபடுவாங்க!” காதலுக்கே உள்ள அடிப்படை விஷயம் என்று சலித்து கொண்டாள்.

“எத்தன வயசானாலும்,எத்தனை முறை சொன்னாலும், அந்த மூணு வார்தைய நீ வெட்கபடற அளவுக்கு ரொமான்டிகா சொல்லுவேன் பாரு….” வம்பிழுக்க, அதை இரசிக்கும் மனநிலையில் அவள் இல்லை.

அவள் உணர்வை புரிந்து கொண்டவன், “நம்பலாம் டி! அரவிந்தன் கல்யாணதுக்கு முன்னால, உங்க அப்பா மனசு மாறுரா மாதிரி ஏதாவது மேஜிக் நடக்கும்னு நம்பலாம்!” மெல்லிய குரலில் சொல்ல, அவளும் மென்மையாக தலையசைத்து கண்சிமிட்டினாள்.

எதுவும் நினைத்தபடி நடக்கவில்லை என்று அவள் வருந்த,

எல்லாம் நிறைவாக நிகழ்கிறது என்று அவன் நம்ப,

வியத்தகு அதிசயம் நேரும் என்று இருவரும் காத்திருக்க – அவர்கள்

விடாமுயற்சியை விட வேறு பெரிய மேஜிக் இல்லை ன்று புரியவைக்குமா,

அவர்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பின் ஆழம்…