அத்தியாயம் – 9

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 9

இரவு சரியாக உறங்காத காரணத்தால் விடியறை நேரத்தில் நன்றாக உறங்கிவிட்டாள் கிருஷ்ணவேணி. அவள் எழுந்து வந்து பார்த்த போது வீட்டில் ஆண்கள் பெண்கள் என்று ஐந்து பேர் அடங்கிய சிறிய பட்டாளமே இருந்தது. அதில் இரண்டு ஆண்கள் மூன்று பெண்கள் இருக்க, அவர்கள் யார் என்று தெரியாமல் க்ரிஷ் குழப்பத்துடன் நின்றாள்.

அவளை நெருங்கிய சிநேகா… “க்ரிஷ், இவங்க ஐஞ்சு பேரும் மாடல்ஸ். இவங்களை வெச்சி தான் இந்த விளம்பர படம் எடுக்கப் போறாங்க. நாம இவங்களுக்குத் தான் அளவெடுக்கனும். ” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினாள்.

“ஐஞ்சு பேர் தானா ? ” என்றாள் க்ரிஷ்,

“இவங்க ஒரு செட் க்ரிஷ்… இன்னும் குழந்தைங்க இருக்காங்க. அவங்களோட அளவெல்லாம் நமக்கு மெயிலில் வந்திடும். “

“ம்… ஓகே… ” என்றவள் “நான் ரெப்ரெஷ் ஆகிட்டு வந்திடறேன். ” என்று கூறிவிட்டு நகர முற்பட,

அதைக் கேட்ட கூட்டத்தில் இருந்த இரண்டு ஆண்களில் ஒருவன்… “ஒன்னும் அவசரம் இல்ல மிஸ்.க்ரிஷ்… நாங்க இரண்டு நாள் இங்க தான் தங்கப் போறோம். நீங்க பொறுமையாவே வாங்க. ” என்றான்.

அவன் அப்படிக் கூறியதை கேட்டதும் அதே கூட்டத்தில் இருந்த பெண்ணொருத்தி… “உனக்கு டைம் இருக்கலாம். நீ ஒரு வெட்டிப் பையன். ஆனா இரண்டு நாளில் காஸ்டியூம் ரெடியான தான் மாறனால ஷூட்டிங் போக முடியும். ” என்று கடுகடுப்பாகப் பேச,

இன்னொருத்தி, “அதானே… நாம என்ன இங்க தங்கி ஊரை சுத்தி பார்க்கவா வந்திருக்கோம். இரண்டு நாள் இருக்கறோம்னு சொல்ற. அளவு கொடுத்திட்டு உடனே கிளம்பனும். மாறன் அங்க வெய்ட் பண்ணிக்கிட்டு இருப்பான். “

“ஏன் டா வாய்ப்பில்லாம சும்மா சுத்திக்கிட்டு இருந்த உன்னைக் கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தா… நீ பொண்ணைப் பார்த்ததும் பல்லை காட்டற பார்த்தியா ? ” என்றாள் இன்னொருத்தி.

“மாறனுக்கு மட்டும் இந்த விசயம் தெரிஞ்சுது… உன்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான். ஒழுங்கா வந்த வேலையை மட்டும் பாரு. “

“ஐயோ போதும் நிறுத்துங்க டி. ” என்று கத்தினான் க்ரிஷிடம் பேசியவன்.

“கத்தாத… போய் அடக்க ஒடுக்கமா உட்கார். க்ரிஷ், நீங்க ரெப்ரெஷ் பண்ணிட்டு வாங்க. நாங்க வெய்ட் பண்றோம். ” என்றாள் அவனை முதலில் அதட்டிய பெண்.

“இதைத் தானே நானும் சொன்னேன். ” என்றவன் கேட்க,

“ஸ்சுப்… ” என்று அதட்டினர் பெண்கள் அனைவரும்.

“போங்கடி… ” என்றவன் சலிப்புடன் சோபாவில் அமர்ந்து கொண்டான். அவனருகே சென்று அமைதியாக அமர்ந்தான் மற்றொரு ஆண் மகன்.

“ஏன்டா… நான் வாயை திறந்தேனா ? நீ மட்டும் ஏன் வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கற ? பாரு இந்தப் புதுப் பொண்ணுங்க முன்னாடி நம்மை அசிங்கப்படுத்திட்டாளுங்க. ” என்றான்.

“வெறுப்பேத்தாதடா… ” என்றவன் மௌனமாக,

பெண்களோ மாறன் புகழ் பாட ஆரம்பித்திருந்தனர். அதைக் கேட்ட படியே குளியலறைக்குள் நுழைந்த கிருஷ்ணவேணி தன்னை ரெப்ரெஷ் செய்து கொண்டு வந்தாள்.

வார இறுதியானதால் அன்று கல்லூரி விடுமுறையாக இருந்தது. காலை வேளை உணவாக ரவா உப்புமாவை தயாரித்து உண்டுவிட்டு… வேலையில் மூழ்கினர்.

மூன்று நாட்களில் உடைகள் எல்லாம் தைத்துத் தயாராகிவிட்டது. அதை மாறனிடம் தெரிவிக்க வேண்டும் என்று க்ரிஷ் சிநேகாவிடம் கூற,

“நான் நம்பர் தரேன் க்ரிஷ் நீயே பேசிடு.” என்றாள் சிநேகா.

“நான் மட்டும் தனியா எப்படிப் பேசறது. நீயும் இரு. உன் போனிலேயே பேசலாம். “

“ம்ச்… என் புருஷோட மனசு விட்டு பேசி ரொம்ப நாளாகுது க்ரிஷ். நீ மாறனோட பேசினா… அந்தக் கேப்பில் நான் என் புருஷ் கூடக் கொஞ்சம் கடலை போடலான்னு பார்க்கறேன். புரிஞ்சிக்கோயேன். “

“நான் மட்டும் தனியா எப்படிப் பேசறது சிநேக் ? எனக்கு ஒருமாதிரியா இருக்கு. “

“நீ என்ன கடலையா போடப்போற ? வேலை விசயமா பேசிட்டு வெச்சிட போற. அதுக்கு எதுக்கு இப்படி நர்வசாகுற ? “

“அதில்ல சிநேக்… “

“நீ சரிபட்டு வர மாட்ட… உன் போனை கொடு… ” என்ற சிநேகா மாறனின் எண்ணை அதில் பதித்துக் கொடுத்தாள்.

“நீயே பேசு. ” என்றவள் தன் கைப்பேசியோடு படுக்கை அறைக்குள் சென்றுவிட்டாள்.

“இவ வேற… ” என்று முணுமுணுத்த க்ரிஷ்… மாறனின் எண்ணை வெறித்துப் பார்த்தாள்.

அவள் மனத்திரையில் மாடல் அழகிகள் பேசிக் கொண்டது எல்லாம் நிழலாடியது.

“மாறன் என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேங்கறான் வர்ஷா. அவனுக்காகத் தான் மாடலிங் பீஃல்டையே தேர்ந்தெடுத்தேன். ஆனா அவன் வேலை விசயத்தைத் தவிர வேற எதைப் பத்தியும் என் கிட்ட பேச மாட்டேங்கறான். அவனைக் கரைக்ட் பண்ண ஏதாவது ஐடியா இருந்தா கொடேன். ” என்றொருவள் கேட்க,

“மாறன் மாதிரி ஒரு பையன் கிடைச்சா யாரு தான் வேணான்னு சொல்லுவாங்க. அழகில் மட்டும் இல்ல குணத்திலும் தங்கம் டி. அவனை மாதிரி யாராலையும் இருக்க முடியாது. பொண்ணுங்க மேல அவனுக்கு இருக்கற அக்கறை இருக்கே அதுவே பொண்ணுங்களை அவன் பக்கம் சாய வெச்சிடும். ஆனா, அவனைக் கரைக்ட் எல்லாம் பண்ண முடியாது. அந்த நினைப்பு உன் மனசில் இருந்தா அதை இப்பவே தூக்கி தூரமா போட்டுடு. அதுதான் உனக்கு நல்லது. “

“ஆமாம் வர்ஷா… மாறன் எந்த அளவுக்கு ஸ்வீட்டோ அதே அளவுக்கு டெரர். காலேஜில் ஒரு பையன் எங்களை டீஸ் பண்ணிட்டான்னு அவனை ஒரு இராத்தி முழுக்க மரத்தில் தலைகீழா தொங்க விட்டவன். அதை மறந்துடாதே. “

“அதுவுமில்லாம மாறன் மனசில் வேற யாரோ இருக்காங்க. அதனால அவனை நினைச்சி உருகறதை விட்டுட்டு வேற வேலையைப் பாரு. “

அவர்களின் சம்பாஷனையைக் கவனித்த படியே வேலையில் மூழ்கியிருந்த கிருஷ்ணவேணி, இப்போது அதை நினைத்து பார்த்து, தன் மனதை சமன்படுத்திக் கொண்டாள்.

“ஆமாம்! நான் ஏன் அவர்கிட்ட பேசறதை நினைச்சு இத்தனை தூரம் டென்ஷன் ஆகனும். வேலையைப் பத்தி தானே பேசப்போறேன். அதை மட்டும் பேசிட்டு வெச்சிடுவோம். பேசவே பயந்தா…. நாளைக்கு ஷூட்டிங் போகும் போது எப்படி அவரைப் பேஸ் பண்ண முடியும். அன்னிக்கு அவரு தயங்கினப்ப… ஜம்பமா பேசிட்டு… இப்ப இப்படிச் சொதப்பறது சரியில்ல. பேசிடுவோம். ” என்ற முடிவுடன் மாறனின் எண்ணை தொடுதிரையில் ஒளிரவிட்டாள்.

அதை இயக்கி அழைப்பு விடுத்தவள் எதிர்முனையில் ஒலித்த மெல்லிசை பாடல் வரிகளைக் கேட்டு அதன் இன்னிசையில் லயத்துப் போய் இமை மூடி நின்றுவிட்டாள். சட்டென மாறனின் குரல் ஒலி கேட்க திடுக்கிடலுடன் கலைந்தாள் கிருஷ்ணவேணி.

“ஹலோ… ” என்றது மாறனின் குரல்.

“ஆங், ஹ..லோ.. “

“சொ…”

“மாறன், நான் க்ரிஷ் பேசறேன். ” என்றவள் கூற எதிர்முனையில் எப்போதும் ஏற்படும் சில நொடி மௌனம்.

அதன் பின் ஒரு மெல்லிய கணைப்புச் சத்தம் அதைத் தொடர்ந்து வந்தது அவன் குரல் ஒலி, “சொல்லுங்க க்ரிஷ்… “

“மாறன் டிரஸ் எல்லாம் ரெடி. “

“வாவ், சூப்பர்… “

“டிரஸ் எல்லாம் நீங்க ஆள் அனுப்பி வாங்கிக்கறீங்களா ? இல்ல நாங்க ஷூட்டிங் ஸ்பாட் வரும்போது கொண்டு வரவா ? “

“நீங்க வரும்போது கொண்டு வந்தா கூடப் போதும். “

“நீங்க டிரஸ் டிசைன்ஸ், மாடல் எல்லாம் பார்க்க வேண்டாமா ? நான் வேணா போட்டோ எடுத்து அனுப்பவா ? “

“நீங்க ப்ரியா இருந்தா போட்டோ எடுத்து அனுப்புங்க. அப்படி இல்லன்னா நீங்க ஷூட்டிங் வரும்போது கூட நான் பார்த்துக்கறேன். “

“ஏங்க எப்படி எங்க மேல இத்தனை நம்பிக்கை ? ஒருவேளை உங்க எதிர்பார்ப்பை நாங்க பூர்த்திச் செய்யாம இருந்தா… லாஸ்ட் மினிட்ல என்ன பண்ணுவீங்க ? ஒருமுறை பார்த்திடலாமே ? நான் வேணா வீடியோ கால் வரவா ? “

“ஐயோ… வேண்டாம்… ” என்றவன் பதற

“ஏன் ? ஏன் வேண்டான்னு சொல்றீங்க ? “

“இல்ல… அது… நான் கொஞ்சம் வெளிய இருக்கேன். அதான். வேற ஒன்னுமில்ல. “

“என்னவோ கடைசியில் எங்களைக் குறை சொல்ல கூடாது. அப்புறம் நான் டென்ஷனாகிடுவேன். “

“ஓகே… ஓகே… “

“சரி எப்ப ஷூட்டிங் வரது ? “

“நாளைக்கு நைட் கிளம்பிடுங்க. நான் கார் அனுப்பறேன். உங்களைப் பிக்கப் பண்ண புருஷ் வருவான்… அவனோட வந்திடுங்க. “

“அப்படியா ? சரி… “

“சரி க்ரிஷ்… வேற என்ன ? “

“வேற எதுவும் இல்ல. ” என்ற க்ரிஷ் உதட்டை பிதுக்க,

“அவ்வளவு தானா ? ” என்று கேட்ட எதிர்புறத்தில் ஏதோ ஒரு எதிர்பார்ப்புத் தெரிந்தது.

அதை உணராத க்ரிஷ், “ம்… ” கொட்ட,

“சரி… அப்ப நான் வெச்சிடவா ? “

“ஆங்… வெச்சிடுங்க. ” என்றவள் சட்டென ஏதோ நினைவு வந்தவளாக… “மாறன்… மாறன்… ஒருநிமிஷம். ” என்றிட,

“சொல்லுங்க… “

“ஷூட்டிங் எங்கன்னு சொல்லவே இல்லையே ? “

“ஷூட்டிங் திருச்சியில் தான். “

“ஓ… சரி… “

“அவ்வளவு தானா ? வெச்சிடவா ? “

“ம்… “

“ஓகே.. பை… ” என்றவன் அழைப்பை துண்டிக்க, துண்டிக்கப்பட்ட கைப்பேசியைப் பார்த்த படியே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தாள் கிருஷ்ணவேணி.

அப்போது அவள் கைப்பேசி மீண்டும் ஒலித்தது. அழைத்தது யாரென ஆர்வத்துடன் எடுத்து பார்த்தவள் தங்கையின் பெயரை பார்த்ததும் ஏதோ ஒரு சிறிய ஏமாற்றத்தை அடைந்ததைப் போல உணர்ந்தாள். என்றாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“சொல்லு மிது… எப்படி இருக்க ? “

“அக்கா நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க ? “

“நல்லா இருக்கேன் மிது. “

“அக்கா… நான் இப்ப படிக்கற ஸ்கூல் ஹாஸ்டலில் சேர்ந்துட்டேன். “

“ஏன் மிது ? நான் தான் ஹாஸ்டல் எல்லாம் வேண்டான்னு சொன்னேன் இல்ல ? ” என்று கிருஷ்ணவேணி கடிந்து கொள்ள,

“அக்கா… சாரி அக்கா. உங்க பேச்சை கேட்க கூடாதுன்னு நினைச்சு இப்படிப் பண்ணல. என்னால தினமும் வீட்டில் இருந்து இத்தனை தூரம் வர முடியல. நான்தான் அன்னிக்கே சொன்னேனே பாட்டியும் இல்ல… இனி என்னைக் கவனிச்சிக்க அங்க யாருமில்லன்னு. “

“உன் வயசு என்ன ? “

“அக்கா… “

“சொல்லு உன் வயசு என்ன ? “

“பதினைஞ்சு… “

“தம்பி வயசு என்ன ? “

“அக்கா அது… “

“மூனு வயசு. உன்னைப் பார்த்துக்க ஆள் இல்லன்னு சொல்றியே தம்பியை யார் பார்த்துப்பான்னு யோசிச்சியா ? “

“..”

“அன்னிக்கே நான் கவனிச்சேன் அவன் சித்திகிட்ட இருக்கறதை விட உன்கிட்ட தான் கம்பர்ட்டபுளா இருக்கான்னு தோணிச்சு. இப்ப நீ அவனைத் தனியா விட்டுட்டு வந்துட்டியே. அவனை யார் பார்த்துப்பா. உன் அம்மா அவனை நல்லா பார்த்துப்பாங்கன்னு உனக்கு நம்பிக்கை இருக்கா ? “

“இல்ல தான். ஆனா அப்பா இருக்காரு. அவரு அவனைப் பார்த்துப்பாரு அக்கா. அப்பாவோட அவனும் இருந்துப்பான். அதான்… “

“என்னவோ போ… எனக்குத் தெரிஞ்சதை பத்தி சொன்னேன். அப்புறம் உன் இஷ்டம். “

“…”

“சரி விடு… ஹாஸ்டல் எல்லாம் எப்படி இருக்கு ? டீச்சர்ஸ் எல்லாம் எப்படி நடந்துக்கறாங்க ? “

“ஆ… ஹாஸ்டல் எல்லாம் நல்லா தான் இருக்கு அக்கா. ஆனா எப்பவும் படி படின்னு சொல்லி இம்சை பண்றாங்க. அதான் கொஞ்சம் கடுப்பா இருக்கு. “

“இப்ப நீ பத்தாவதா இல்ல ஒன்பதாவதா ? “

“பத்தாவது “

“படிக்கறது நல்லது தானே. நல்ல மார்க் வாங்கினா… நீ நினைச்சதை படிக்கலாம் இல்லையா ? இனி வரப்போற வருஷங்கள் தான் உன்னோட எதிர்காலத்தை நிர்ணையிக்கும். அதுக்கான அடித்தளம் தான் இந்தக் கல்வி. அதை விரும்பி படிச்சா பர்டனா இருக்காது மிது. கஷ்டமா நினைக்காதே… “

“ம்… “

“சரி சாப்பிட்டியா ? “

“சாப்பிட்டேன் அக்கா. இன்னிக்கு சாப்பாத்தி போட்டாங்க. ஆனா மெல்லவே முடியல. ரொம்ப ஹார்டா இருந்தது. அதைச் சொன்னா அதுக்குத் திட்டினாங்க. பத்து நாளைக்கே எனக்கு இப்படி இருக்கே நீங்க இத்தனை வருஷமா எப்படி ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிடறீங்கன்னு தோணிச்சு. அதான் உங்களைக் கூப்பிட்டேன். “

அதைக் கேட்டு மெல்ல சிரித்த கிருஷ்ணவேணி… “மிது, எனக்கும் முதலில் கஷ்டமா தான் இருந்துச்சு. ஆனா வேற வழியில்லன்னு தெரிஞ்சதும் அதுக்கு என் மனசை பழக்கிக்கிட்டேன். “

“சாரி அக்கா… “

“எதுக்கு இந்தச் சாரி ? “

“இல்ல, அம்மா மட்டும் உங்களை நல்லா பார்த்துக்கிட்டு இருந்தா நீங்க ஹாஸ்டல் போய்க் கஷ்டப்பட்டிருக்க மாட்டீங்க தானே ? “

“அதை எல்லாம் யோசிச்சி நீ உன் மனசை கெடுத்துக்காதே மிது. நான் எதையும் மனசில் வெச்சிக்கல. அவங்க மனநிலை என்னன்னு தெரிஞ்சிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்களைக் குறை சொல்ல கூடாது. “

“…”

“அதை விடு. நடந்து முடிஞ்சதை பத்தி பேசி எதுவும் ஆகப்போறதில்ல. நீ ஒழுங்கா படி. நல்லா சாப்பிடு. நான் நாளைக்குத் திருச்சிக்கு வந்தாலும் வருவேன். வந்தா உன்னை வந்து பார்க்கறேன். “

“திருச்சி வரீங்களா ? “

“ம்… ஆமாம் மிது. “

“ஆனா அம்மா அப்பா தான் ஊரில் இல்லையே ? “

“ஊரில் இல்லையா ? ஏன் எங்கையாவது போயிருக்காங்களா ? “

“ஆமாம், அது கொடைக்கானல் போயிருக்காங்க ? “

“கொடைக்கானலா ? ” என்றவள் யோசனையாக நிறுத்த,

“அக்கா ஹாஸ்டல் பெல் அடிச்சுட்டாங்க. நான் ரீடிங் ரூம் போகனும். வெச்சிடவா ? ” என்று கேட்டாள் மிதுளா.

“ஆங்… ஓகே மிது. நான் திருச்சி வந்தாலும் ஊருக்கு போக மாட்டேன். வேற ஒரு வேலையா தான் வரேன். அதனால தங்கற இடம் அவங்களே தந்திடுவாங்க. நான் வந்ததும் உன்னை வந்து பார்க்கறேன். “

“சரிக்கா… வெச்சிடறேன். ” என்ற மிதுளா அழைப்பை துண்டிக்க… யோசனையுடன் அமர்ந்தாள் கிருஷ்ணவேணி.

தொடரும்…