அத்தியாயம் – 8

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 8

மாறனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள க்ரிஷ் சிநேகாவிடம்… “இப்ப பேசினது தான் மாறனா ? ” என்று கேட்டாள்.

“ம்… ஆமாம்… “

“உன் மாமா பையனுக்கு இவரை எப்படித் தெரியும் ? ” என்றிட

“நம்மை மாதிரி தான் க்ரிஷ்… கல்லூரி நண்பர்கள் … “

“ஓ.. ” என்றவள் “இவங்க இப்ப எங்க இருக்காங்க சிநேக் ? “

“மூனு மாசத்துக்கு முன்னாடி வரை ஹைதராபாத்தில் பெரிய விளம்பர கம்பெனியில் வேலையில் இருந்தாங்க. இப்ப சொந்த கம்பெனி ஆரம்பிச்சி முன்னேற முடிவு பண்ணியிருக்காங்க. “

“எந்த ஊருல இவங்க கம்பெனி தொடங்கப் போறாங்க சிநேக் ? “

“அது… நம்ம திருச்சியில் தான். “

“என்னது ? திருச்சியா ? “

“ம்… “

“ஆனா ஏன் திருச்சியில் ஆரம்பிக்கறாங்க. பெரிய பெரிய சிட்டியில் கம்பெனி ஆரம்பிச்சாதானே அசலை எடுக்க முடியும். நல்ல பேரும் கிடைக்கும். “

“அது இல்ல க்ரிஷ்… சொந்த ஊருக்குப் பக்கத்தில் இருந்தா நல்லா இருக்கும்னு யோசிச்சாங்களாம். திருச்சின்னா… ஏர்போர்ட் கூட இருக்கு. அதனால… சென்னைக்கும் திருச்சிக்கும் பெரிய வித்தியாசம் வந்திடாதுன்னு நினைக்கறாங்க. சென்னையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது திருச்சியில தயாரிப்புச் செலவு கம்மியாக வாய்ப்பிருக்கு. இயற்கை சூழலலோட நிறைய இடங்கள் இருக்கு. சொந்த ஊரா இருக்கறதால எங்க விலை கம்மியா கிடைக்கும், யாரை பிடிச்சா இடத்தை வாடகைக்கு வாங்கலாங்கற விசயம் எல்லாம் நல்லா தெரியும். அதுபோக… திறமை எங்க இருந்தாலும் தேடி வருவாங்கன்னு மாறன் சொன்னாரு. அவரு சொன்ன மாதிரியே அவரோட டிசைன் பார்த்து தானே ஆடர் கொடுத்திருக்காங்க. அவரு சொன்னதை நிரூபிச்சிட்டாரு பாரு. ” என்று கூறிய சிதேகாவின் கண்களில் மாறன் மீதான ஈர்ப்பு தெரிய… க்ரிஷ் லேசாக அதிர்ந்தாள்.

“அது சரி… ஆனாலும் நீ ரொம்பத் தான் மாறன் புகழ் படாற… அவன் என்ன அத்தனை பெரிய ஆளா ? ” என்று தன் மனதில் சந்தேகத்தை வெளிப்படையாக க்ரிஷ் கேட்க,

சிநேகாவோ புன்னகையுடன், “ஆமாம் பெரிய ஆள் தான். ” என்றிடஅவளை வியப்பாகப் பார்த்த க்ரிஷ்,

“உன் மாமன் மகனை விட்டு கொடுத்து இன்னொருத்தரை பத்தி உயர்வா பேசறியே சிநேக் ? உன் மாமன் மகன் கோச்சிக்க மாட்டாறா ? ” என்றாள்.

“இதுல கோச்சிக்க என்ன இருக்கு க்ரிஷ்… மாறன் ஈஸ் வெரி டெலண்டட்… அது புருஷ்கே நல்லா தெரியும் இப்ப. அப்புறம் என்ன ? “

“இருந்தாலும்…”

“க்ரிஷ், இப்ப உன்னைப் பத்தி கூடதான் பெறுமையா பேசுறேன். அது தப்பா என்ன ? அது மாதிரி தான் மாறனோட திறமையைப் பத்தி பெறுமையா பேசறேன். இதுல இருந்தாலும்னு இழுக்க எதுவும் இல்ல. என்னைப் பத்தி என் புருஷ்க்கு நல்லா தெரியும். அதனால நீ கவலைப்பட வேண்டாம். “

“ம்… புரிதல் இருந்தா சரி. ” என்றவள் சிறிய இடைவெளி எடுத்து… “சரி மாடல் யாரு ? ஒருவேளை அவங்க பெரிய மாடலா இருந்தா… நம்மை மாதிரி ஸ்டூடண்ட்ஸை காஸ்டியூமரா ஏத்துக்குவாங்களா ? ” என்று சந்தேகத் தொனியில் க்ரிஷ் கேட்க,

“மாடல் பெரிய ஆள் எல்லாம் இல்ல… அவங்களும் மாறனோட படிச்சவங்க தான். சோ பெருசா எந்தக் கேள்வியும் வராது. இன்னும் சொல்லனும்னா ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருக்காங்க. நாம அவங்களைத் தேடி போக வேண்டியதில்லை அவங்களே நாம இருக்கற இடம் தேடி வருவாங்க… “

“ஓ… ” என்றவள் “சரி… பத்து நாளில் எப்படி ரெடி பண்றது. அல்ரெடி நான் வேற ஒரு வாரம் லீவ் போட்டுட்டேன். இப்ப திரும்பவும் லீவ் கேட்டா… தர மாட்டாங்க. “

“இப்ப லீவ் போட என்ன அவசியம் இருக்கு க்ரிஷ். காலேஜ் டைமில் கூட நீ டிசைன் பண்ணலாம். உன்னை யாரும் ஏன்னு கேட்டு கொஸ்டின் ரைஸ் பண்ண மாட்டாங்க. சாயந்தர நேரம் ஷாப்பிங் போய் மெட்டீரியல் வாங்குவோம்… டிசைன் ஓகே ஆனதும் நம்ம பிள்ளைங்களுக்கு ஆளுக்கு ரெண்டா பிரிச்சி கொடுத்துத் தெச்சி வாங்கிப்போம். ஷூட்டிங் ஆரம்பிச்சதும் லீவ் போடுவோம்… அங்க போய் ஏதாவது ஆல்டர் தேவைனா பண்ணிப்போம். ” என்று தன் திட்டத்தை விளக்கினாள் சிநேகா.

“பக்காவா பிளான் போட்டிருக்கச் சிநேக். “

“நீதானே சொல்லுவ…. எதையும் பிளான் பண்ணி பண்ணனும்னு. “

“சரிதான்… ஆனா என் வாழ்க்கையே இப்ப பிளான் இல்லாம தான் போயிக்கிட்டு இருக்கு. “

“சலிச்சிக்காதே பேபி… உன்னோட நல்ல மனசுக்குக் கட்டாயம் நல்லது தான் நடக்கும். “

“…”

“நீ வேணா பாரு இந்த விளம்பரம் ஓகே ஆகி… பட்டி தொட்டி எல்லாம் பரவப் போகுது. உன்னோட டிசைன் புது டிரண்டா உருவாகப் போகுது… அதுக்கு அப்புறம் உன் குடும்பமே உன்னை உன் இஷ்டம் போல நடந்துக்கோன்னு சொல்லி முழுச் சுதந்திரம் தந்து துணையா இருக்கப் போகுது. “

“நீ சொல்றது நடந்தா போதும். ” என்றவள் வரைபடங்களை வரைய தயாரானாள்.

சிநேகா அவளோடு இணைய… ஒரு இரவு ஒரு பகலில் உடைக்கான வரைப்படங்கள் தயாரானது. அதை மாறனுக்கு மெயில் அனுப்ப ஏதுவாகக் கணினியில் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

அவளை மணக்கும் காபியோடு நெருங்கிய சிநேகா… “ரெடியா பேபி ? ” என்று கேட்க,

“ஆல்செட்… மெயில் ஐடி சொல்லு… அனுப்பிடலாம். “

“ம்… ” என்றவள் மாறனின் ஐடியை கொடுக்க… அந்த ஐடிக்கு வரைப்படங்களை அனுப்பிவிட்டு காபியை எடுத்து பருக தொடங்கினாள்.

ஐந்து நிமிடம் கழித்துச் சிநேகாவின் கைப்பேசி ஒலிக்க… அழைத்தது யாரெனப் பார்த்தாள். மாறன் என்ற பெயர் ஒளிர்த்தது.

“க்ரிஷ்… மாறன். ” என்றவள் அலைப்பேசியை ஒலி பெருக்கியில் போட்டு பேசினாள்.

“ஹலோ… “

“ஹலோ… சிநேகா… உங்க மெயில் வந்துச்சு… டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. ” என்றான் மாறன்.

“தேங்க்யூ மாறன். “

“மெட்டீரியல் எப்ப ரெடியாகும் ? “

“நீங்க ஓகே சொல்லிட்டீங்க இல்ல… இரண்டு நாளில் ரெடி பண்ணிடுவோம் மாறன். “

“மெட்டீரியல் எல்லாம் வாங்கியாச்சா ? “

“இல்ல மாறன்… நாளைக்குத் தான் போறோம். “

“நாளைக்குத் தான் போறீங்களா ? அப்ப நீங்க அனுப்பியிருக்கற காம்பினேஷன் பைனல் இல்லையா ? “

“மாறன்… அது டிசைன்ஸ் தான். காம்பினேஷன் இல்ல. காம்பினேஷன் இன்னும் நல்லா இருக்கும். நாங்க மெட்டீரியல் பார்த்து வெச்சிட்டு தான் டிசைன் பண்ணியிருக்கோம். நாளைக்கு எங்களுக்கு மெட்டீரியல் கிடைச்சிடும். கிடைச்சதும் இரண்டு நாளில் தைச்சிடுவோம். சோ… டோன் வொரி… ” என்றாள் அதுவரை மௌனம் காத்த க்ரிஷ்.

“க்ரிஷ்… ” என்று எதிர்புறம் சந்தேகமாகக் கேட்க,”எஸ்… க்ரிஷ் தான் பேசறேன்.”

“…”

“என்ன ? நான் பேசினா மட்டும் அமைதியாகிடறீங்க ? என்கிட்ட பேசக்கூடாதா ? நான் ஒன்னும் டொடர் பீஸ் எல்லாம் இல்ல மிஸ்டர். மாறன். “

“அச்சோ அப்படி எல்லாம் இல்ல… அது… ” என்றவன் நிறுத்த”வேற என்ன ?

“வேற எதுவுமில்ல. சிநேகாவோட பேசி பழக்கம் இருக்கு. உங்களோட பேசி பழக்கம் இல்ல இல்லையா அதான். தப்பா நினைச்சிக்காதீங்க. “

“தப்பா நினைக்க என்ன இருக்கு மாறன் ? நாம சேர்ந்து வேலை பார்க்க போறோம் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிட்டா தானே… ஏதாவது தப்பு நடந்தா சரி செஞ்சிக்க முடியும். “

“கரைக்ட்… ” என்று சத்தமாக வந்த குரல் பின் மெல்ல… “பேசி தானே ஆகனும். ஆனா கொஞ்சம் பயமா இருக்கு ? ஒருவேளை உனக்கு என்னைப் பிடிக்கலன்னா ? ” என்றிட,

“நீங்க பேசறது கேட்கல மாறன். ” என்றாள் க்ரிஷ்.

“ஆங்…. உங்க கிட்ட பேசல. இங்க… இங்க பேசினேன். “

“அங்க ரொம்பப் பேசறீங்க. சரி போகட்டும்… உங்க மாடலை நாங்க எப்ப பார்க்கறது. அவங்களைப் பார்த்தா தான் அளவெடுத்து தைக்க முடியும். “

“நாளைக்குக் காலையில் உங்க வீட்டு வாசலில் என் மாடல்கள் நிப்பாங்க க்ரிஷ். கவலைப்படாதீங்க. “

“மாறன்… எல்லோரும் புதுசா ? “

“ஆமாம்… “

“இல்ல… சொல்றனேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க எடுத்திருக்கற பிராஜெக்ட் ரொம்பப் பெருசு. உங்களோட கிரியேட்டிவ் டிசைன் ரொம்ப நல்லா இருக்கு. எல்லாத் தரப்பும் புதுசா அனுபவம் இல்லாதவங்களைச் சேர்க்கறதால உங்களுக்கு ஏதாவது நஷ்டம் வந்திட போகுது. “

அதைக் கேட்டதும் சிரித்த மாறன்… “க்ரிஷ் முதல் முறை பண்றவங்க ரொம்ப ஆர்வத்தோட தப்பு எதுவும் நடந்திட கூடாதுங்கற கவனத்தோட பண்ணுவாங்க. உங்களை மாதிரி. உங்களோட டிசைன்ஸ் ஒன்னொன்னும் என்னோட கிரியேட்டிவிட்டியை அதிகப்படுத்திக் காட்டுது. அதுமாதிரி தான் மத்த எல்லோரும். இன்னும் சொல்லனும்னா எங்களை மாதிரி புது ஆளுங்களோட திறமையைப் பார்த்து வாய்ப்பு கொடுத்த கம்பெனி கூட என்னை மாதிரி யோசிக்கறவங்க தானே. அதனால தான் எனக்கொரு வாய்ப்பு கொடுத்திருக்காங்க. அதுமாதிரி நானும் மத்தவங்களோட திறமையை நம்பறேன். “

அவன் பேசியதை கேட்டு மெய் மறந்தாள் கிருஷ்ணவேணி.

“உங்க திங்கிங் வேற மாதிரி இருக்கு மாறன். ரியலி ஐ ஏம் இம்பிரஸ்டு. ” என்றிடஎதிர்புறம் கனத்த மௌனம்.

க்ரிஷுக்கும் சற்றே இடைவெளி தேவைப்பட்டது. தன் மனதை சமன் செய்தவள்… தொண்டையைச் செருமி மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தாள்.

“ஐ மீன்… உங்களோட திங்கிங் என்னை இம்பிரஸ் பண்ணிடுச்சுன்னு சொன்னேன். அதைத் தப்பா மீன் பண்ணிக்காதீங்க. ” என்று விளக்கிட,

“இல்ல..‌ இல்ல… ” என்றது எதிர்புறம் அவசரமாக.

“ஓகே… நான் வெச்சிடவா ? ” என்றவள் கேட்க,

“ஆங்… அப்புறம் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நீங்க வரவேண்டியதா இருக்கும். லீவ் போட முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதீங்க. ப்ளீஸ்… “

“அதுக்கு நாங்க வருவோம் மாறன்…. கவலைப்படாதீங்க. “

“ஓகே…”

“ஷூட்டிங் எப்ப ? “

“நீங்க மெட்டீரியல் ரெடின்னு சொன்னா… உடனே ஆரம்பிச்சிடலாம். எங்க பக்கம் எல்லாம் தயாரா தான் இருக்கு. “

“ஓகே… நான் ரெடி பண்ணிட்டு கூப்பிடறேன். “

“ஓகே பை… ” என்ற மாறன் இணைப்பை துண்டிக்க…

“நான் ஒருத்தி இருக்கேன் அதை மறந்துட்டீங்களே இரண்டு பேரும். ” என்றாள் சிநேகா.

“உன்னை யாரு மறந்தா… பேச வேண்டியதை பேசியாச்சு… அதனால போனை கட் பண்ணியாச்சு. போ… போய் அடுத்த வேலையைப் பாரு. ” என்ற க்ரிஷ் எழுந்து படுக்கையறை சென்றாள்.

அங்கிருந்த பால்கனி வழியாக வானத்தில் உலா வந்த நிலா மகளைப் பார்த்தவள்… “நான் ஏன் அப்படிச் சொன்னேன். அது தப்பில்லையா ? எனக்குக் கல்யாணமாகிடுச்சு… அதை மறந்து ஒருத்தரோட பேச்சை கேட்டு மயங்கிட்டேனே‌. இது எந்த விதத்தில் சரியா வரும் ? கடவுளே… அப்பா என் மேல வெச்ச நம்பிக்கையால தான் மணி மாமாவை கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாரு. அவரோட நம்பிக்கை எந்த விதத்திலும் உடைஞ்சிட கூடாது. என் மனசை பூட்டி வைக்க ஒரு பெரிய பூட்டை கொடு. ” என்று வேண்டிக் கொள்ள… அதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டார் இறைவன்.

தொடரும்….