அத்தியாயம் – 6

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 6

நினைவுலகில் மூழ்கியிருந்தவரை கலைத்தாள் வேணி.

“அப்பா… “

“சொல்லு பாப்பா… “

“அது வந்து மணி மாமா… “

“அவனை நினைச்சு நீ பயப்படறியா பாப்பா ? “

“இல்லப்பா… அது… என்ன கேட்க வந்தேன்னா ? ” என்று வேணி கூறிக்கொண்டிருக்கும் போதே கீழே ஏதோ விழுந்து உடைந்தது.

“ம்ச்… ” என்ற ஆதிசேஷன்… தன் மகளைப் பார்க்க…

“நாம அப்புறம் பேசலாம் அப்பா. நீங்க போகங்க. ” என்றுவிட்டு அவரை விட்டு விலகி நின்றாள்.

“எந்த அப்பாவுக்கும் என் நிலை வரக்கூடாது.. ” என்று மனதில் கூறிக்கொண்டவர்… மகளின் தலையை வருடிக் கொடுத்து…

“வேணிம்மா… கல்யாணமாகிடுச்சே… மணி இனி உன்னை எப்படிப் பார்த்துப்பானோன்னு நினைச்சு கவலைப்படாதே‌. நீ எதிர்பார்க்கற மாதிரி ஒரு நல்ல வாழ்க்கையை அவன் அமைச்சி தருவான். ” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு நகர்ந்தார்.

ஆதி கீழே சென்ற கொஞ்ச நேரத்தில் விசாலத்தின் சத்தம் காதை கிழித்தது.

“எப்பவும் அவ நினைப்பு தான். அப்ப நானும் என் புள்ளைங்களும் உங்களுக்கு அத்தனை தூரம் வேண்டாதவங்களா போயிட்டோமா ? அவ தான் முக்கியம்னு நினைச்சிருந்தா… என்னை எதுக்குக் கட்டிக்கனும். “

“விசாலம்… இந்தக் கேள்வியை நீயும் பல தரம் கேட்டுட்ட நானும் பதில் சொல்லிட்டேன். திரும்பத் திரும்ப‌ எத்தனை தரம் கேட்டாலும் என் பதில் அதே தான். ” என்ற ஆதி தன் அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

மிதுளாவை பார்த்த விசாலம்… “பார்த்தியா டி… நான் பேசினா மட்டும் உள்ள போய்க் கதவை சாத்திக்கறாரு உங்க அப்பா. இதுவே உன் அக்கா கிட்டன்னா மணிக்கணக்கா பேசுவாரு. நாம எல்லாம் அவருக்கு இரண்டாம் பட்சம் தான். உசாரா இல்லன்னா… நமக்கு எதுவும் கிடைக்காது. ” என்றிட

மிதுளா… “அப்பாவை எப்பவும் குறை சொல்லிக்கிட்டே இருக்காத அம்மா. அக்கா எப்பாவது தான் இங்க வராங்க… அப்ப கூட அப்பா அவங்களோட பேசக்கூடாதுன்னு நீ சொல்றது கொஞ்சம் கூடச் சரியில்லை. அவங்க உனக்கு எதிரியில்ல… நீதான் அவங்களுக்கு எதிரியா இருக்க. “

“என்னடி பேசற ? நான் உங்களுக்காகத் தான் பேசறேங்கறதை புரிஞ்சிக்காம உளராதே. “

“நான் ஒன்னும் உளரல… “

“அடியேய் நான் மட்டும் பேசலன்னா… இந்தச் சொத்து மொத்தத்தையும் உன் மாமாவுக்கும் அக்காவுக்கும் கொடுத்திட்டு உன்னையும் உன் தம்பியையும் நடுத்தெருவில் நிறுத்திடுவாரு உங்க அப்பா. ஞாபகம் வெச்சிக்கோ. “

“அப்பா அப்படி ஒருநாளும் செய்ய மாட்டாரு. அப்படியே மாமா கிட்ட பொறுப்பைக் கொடுத்தாலும் மாமா… எங்களைக் கைவிட மாட்டாரு. நீ அவரை மதிக்காம இருக்கலாம்… ஆனா அவரு உன் மேல அன்பை மட்டும்தான் காட்றாரு. நீ என்ன பேசினாலும் நம்ம அக்கா தானேன்னு பொறுத்துப் போறாரு… உன்னை மாதிரி ஒரு அக்காவை அவரு இப்பவரை வெறுக்காம இருக்கறதே நீ செஞ்ச புண்ணியம். இப்படி நல்ல மனசு உள்ளவங்க உன்னைச் சுத்தி இருக்கறதை புரிஞ்சிக்காம அவங்களைப் பத்தியே தப்பா பேசற… இனியும் நீ இதையே செஞ்சா… அப்புறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. சொல்லிட்டேன்.” என்று எச்சரித்த மிதுளா தன் அறைக்குச் சென்று கதவை படாரென மூடிக்கொண்டாள்.

“பாரு டா வர்ஷூ… உன் அக்கா புரிஞ்சிக்காம போறா… நீயாவது இந்த அம்மாவை புரிஞ்சிக்கோயேன்… ” என்றபடியே மூன்று வயது மகனை தூக்கி இடையில் வைத்தாள் விசாலம்.

அவனோ… “அக்கா… அக்கா… ” எனக்கூறிய படியே தன் அன்னையின் இடுப்பிலிருந்து இறங்கி மிதுளாவின் அறைக் கதவை தட்டினான். கதவை திறந்த மிதுளா குழந்தையான தன் தம்பி வர்ஷனை அறைக்குள் அழைத்துக் கதவை சாத்திக்கொண்டாள்.

“மிதுளா… இத்தனை நாள் உன் பாட்டி இருந்தாங்க… இனி எதுனாலும் உனக்கு நான் தான் செய்யனும். அதை மறந்துடாதே. ” என்று விசாலம் கூற,

“தேவையில்ல… அக்கா மாதிரி நாங்களும் ஹாஸ்டல் போய்ப் படிச்சிக்கறோம். பாட்டி போனதுக்கு அப்புறம் இங்க எங்களுக்காக யாரும் இருக்க மாட்டாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ உன் புருஷனை மிரட்டி, உருட்டி, சண்டை போட்டு அவரைக் கூட்டிக்கிட்டு ஊர் ஊரா நல்லா ஜாலியா சுத்து. ” என்று பதில் தந்தாள் மிதுளா.

அவள் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த வேணிக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. தான் பெற்ற பிள்ளைகளிடமே சவால் விடும் தொனியில் பேசும் விசாலத்தைக் காண்கையில் வேணிக்கு சிரிப்பாகவும் வேதனையாகவும் இருந்தது.

“இந்த வீட்டில் என்ன நடக்குதுன்னே புரியல. ” என முணுமுணுத்த படியே தன் உடைமைகளை அடுக்கி வைத்தவள் படுக்கையைச் சரி செய்து படுத்துக்கொண்டாள்.

மறுநாள் விடியலில் எழுந்தவள் குளித்துத் தயாராகிக் கீழே வந்தாள். ‘ஏழு மணிக்குப் பஸ் வந்துவிடும்… தந்தையிடம் கூறிவிட்டு கிளம்ப வேண்டும்…’ என மனதில் நினைத்தவள் அவரின் அறைக்குச் சென்று கதவின் முன் தயக்கத்துடன் நின்றாள். தட்டலாமா… வேண்டாமா… ? என்ற யோசனையுடன் நின்றிருந்தவள் காதுகளில்…,

“அப்பா வெளிய போயிருக்காரு அக்கா… உங்களைக் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னாரு… அவரே திருச்சி கொண்டு போய் விடறாராம். ” என்ற குரல் கேட்க வியப்புடன் திரும்பினாள். மிதுளா அவளை நெருங்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டு மேலும் வியந்தாள்.

இத்தனை ஆண்டுகளில் அதிகம் பேசாதவள் இன்று உரிமையோடு அக்கா என்றழைத்து பேசவும்… வேணிக்குக் கண்கள் கலங்கிவிட்டது.

அத்தோடு நிற்காமல் அவள் கைகளில் கொண்டு வந்திருந்த தட்டிலிருந்த டம்ளர்களில் ஒன்றை எடுத்து..‌. “அக்கா… உங்களுக்குக் காபி தானே ? ” எனக்கேட்டு அவளிடம் நீட்டினாள்.

“தம்பிக்குப் பூஸ்ட் ரெடி… ” என்ற மிதுளா சோபாவிற்குக் கீழே அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த வர்ஷனை நெருங்கினாள்.

அவளைப் பார்த்த படியே தொடர்ந்த வேணி சோபாவில் அமர்ந்து காபியை பருகத்தொடங்கினாள்.

“அக்கா… நீங்க படிச்ச ஹாஸ்டல் எப்படி இருக்கும் ? ” என்றவள் கேட்க, வேணி அதிர்ந்துவிட்டாள்.

“ஹாஸ்டல் எல்லாம் வேண்டாம் மிது… வீட்டில் இருந்தே படி. அம்மாவோட சண்டை போடாதே. ” என்றவளை மேலும் கீழுமாகப் பார்த்த மிதுளா…

“அம்மாவோட இருக்கறதுக்கு ஹாஸ்டலே மேல் அக்கா. “

“ஏன் இப்படிச் சொல்ற ? அவங்களுக்கு என்னைப் பிடிக்கல… அதனால நான் ஹாஸ்டல் போனேன். ஆனா நீங்க அவங்களோட பசங்க. அவங்களை விட்டுட்டு போறேன்னு சொல்றது நல்லவா இருக்கு ? “

“நல்லா இல்ல தான்…. ஆனா எப்ப பாரு அப்பாவோட சண்டை போட்டுக்கிட்டு அப்பாவை குறை சொல்லிக்கிட்டே இருந்தா நாங்க எப்படி நிம்மதியா இருக்க முடியும். நான் மார்க் கம்மியா வாங்கினா கூட அப்பாவை தான் குறை சொல்றாங்க. உங்க பொண்ணை மட்டும் வசதியான ஸ்கூலில் படிக்க வெச்சி பெரிய படிப்பு படிக்க வெக்கறீங்க… நான் பெத்த புள்ளன்னா இளக்காறமா ? ன்னு கேட்டா அப்பா என்ன பண்ணுவாரு. இந்த ஊருல நல்ல பெரிய ஸ்கூல் இல்லன்னு தினமும் திருச்சி போயிட்டு வர மாதிரியான ஸ்கூலில் சேர்த்து விட்டாங்க. காலையில் ஆறரைக்கு வேன் வந்திடும்… அதுல ஏறி உட்கார்ந்தா… திருச்சி போறதுக்குள்ள ஒரு தூக்கம் தூங்கி எழுந்திடுவேன்‌. இத்தனை நாள் பாட்டி ஐஞ்சு மணிக்கே எழுந்து இரண்டு வேளைக்கும் சமைச்சி ஹாட் பேக்குல போட்டு கொடுத்திடுவாங்க. ஆனா இனி சோறும் கிடைக்காது. கேன்ட்டீன் சாப்பாடு சாப்பிட… எதுக்குத் தினமும் வந்திட்டு போகனும். பேசாம அங்கையே தங்கிடலாம் இல்ல. “

“…”

“அக்கா…” என்றவள்… ” கொஞ்ச நேரம் தம்பியை பார்த்துக்கோங்க… நான் இப்ப வந்திடறேன். ” என்றுவிட்டு தன் அறைக்கு ஓடினாள்.

மூன்று வயதான வர்ஷன் வேணியைப் பார்த்து சிரிக்க… அவனை அப்படியே அள்ளி எடுத்து கொஞ்ச வேண்டும் போலத் தோன்றியது. ஆனா விசாலம் வந்து எக்கு தப்பாக ஏதாவது கூறிவிட்டால் வேணியால் அதைத் தாக்கிக் கொள்ள முடியாது என்று மௌனமாக அவனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அறைக்குள் சென்ற மிதுளா கைப்பேசியோடு வந்தாள். “அக்கா உங்க நம்பர் என்கிட்ட இருக்கு. ஆனா என் நம்பர் உங்க கிட்ட இருக்காது. இப்ப நான் ரிங் தரேன்… சேவ் பண்ணிக்கோங்க. ” என்றுவிட்டு அழைப்பு விடுத்தாள்.

அவளின் அன்பில் வேணி நெகிழ்ந்து போய் அமர்ந்திருக்க… அங்கே வந்தார் விசாலம்.

“ஏன் டி இங்க நின்னு என்ன பேசிக்கிட்டு இருக்க ? ஸ்கூலுக்குக் கிளம்பலையா ? “

“இன்னிக்கு ஞாயத்துகிழம… ஸ்கூலு லீவ்வு… ” என்று பதில் தந்த மிதுளா வேணிக்குப் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளைக் கோபத்தோடு பார்த்த விசாமல்… “நான் பெத்ததுங்களே எனக்கு எதிரா நிக்குதுங்க. எல்லாம் அந்த மனுசனை சொல்லனும். ” என்று முணுமுணுத்த படியே சமையலறை சென்றார்.

“ஏன் அம்மாவை கஷ்டப்படுத்தர மிது..‌. “

“நான் என்ன கஷ்டப்படுத்தரேன். சொந்த அக்கா கூடப் பேசக்கூடாதுன்னு சொல்லி அவங்க தான் என்னைக் கஷ்டப்படுத்தராங்க. இத்தனை நாள் நீங்க எனக்கு அக்கா மட்டும் தான்.. ஆனா இப்ப மாமாவை கல்யாணம் பண்ணி அத்தை முறைக்கு வந்துட்டீங்க. எனக்கு எங்க மாமாவை ரொம்பப் பிடிக்கும்… இனி உங்களை விட்டுத்தர மாட்டேன். “

அதைக் கேட்டபடியே அங்கே வந்தார் ஆதிசேஷன். மிதுளாவின் வார்த்தைகள் அவர் மனதில் நிறைவை தந்தது.

“வேணிம்மா… ரெடியா ? ” என்றவர் குரலில் அக்கா தங்கை இருவரும் கலைய‌…

“அப்பா வந்துட்டீங்களா ? ” என்று கேட்ட மிதுளா… “அப்பா நானும் தம்பியும் உங்க கூடத் திருச்சி வரவா ? அக்காவை டிராப் பண்ண… “

“உங்க அம்மா ஆடுவா மிது. நீ இரு… நான் அக்காவை விட்டுட்டு வந்து கூட்டிக்கிட்டு போறேன். ” எனக்கூறி அவள் தலையை வருடிக் கொடுத்தார் ஆதிசேஷன்.

“ம்ஹூம்…. ” என்று சிணுங்கிய மிது வேணியைப் பார்த்து… “அக்கா நான் போன் பண்ணினா எடுங்கக்கா. இத்தனை நாள் பாட்டி இருந்தாங்க… மனசு சரியில்லைன்னா அவங்க கிட்ட பேசுவேன். அவங்க ஆறுதல் சொல்லுவாங்க… இப்ப அவங்க இல்ல… இனி நீங்க தான் எனக்குத் துணை. என்னை உங்க தங்கையா ஏத்துப்பீங்க தானே ? ” என்று கேட்டவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவளைத் தன்னோடு கட்டி கொண்ட வேணி… “நீ என்னிக்கு பொறந்தியோ அன்னிக்கே எனக்குத் தங்கச்சியாகிட்ட…. உன்னை நான் எப்பவும் அப்படிதான் நினைக்கறேன். நீ தைரியமா இரு… உனக்கு எப்பவும் துணையா நான் இருப்பேன். ” என்றவள் அவள் கன்னத்தில் முத்தமிட்டு தன் அன்பை பகிர்ந்தாள்.

அவர்கள் கொஞ்சுவதைத் தூரத்தில் நின்று கோபமாகப் பார்த்துக் கொண்டிருந்த விசாலத்தைக் கண்டுவிட்டார் ஆதி.

“மிது… உங்க அம்மா முறைக்காரா… அப்புறம் போனில் பேசிக்கோங்க. இப்ப அக்காவோட நான் கிளம்பறேன். வேணி வாம்மா… இன்னும் லேட் பண்ணினா… நீ அழுதுக்கிட்டே கிளம்ப வேண்டியதாகிடும். ” என்றவர் வேணியின் பையை எடுத்துக் கொள்ள… அவர்களை அவசர நடையில் நெருங்கி வந்தார் விசாலம்.

“ஏங்க… வெளிய போகனும்னு சொன்னேன் இல்ல… நீங்க கிளம்பல ? ” என்றவரை முறைத்த ஆதி…,

“நாளைக்குப் போகலாம். ” என்றுவிட்டு நகர முயல,

“நாளைக்கு மிது ஸ்கூலுக்குப் போயிடுவா ? அவ‌ள் ஸ்கூலுக்குப் போயிட்டா வர்ஷனை யாரு பார்த்துப்பா ? நீங்க வாங்க இப்பவே போயிட்டு வந்திடுவோம். “

“விசாலம் வேணியைக் கொண்டு போய் விடனும். பஸ்ஸும் போயிருக்கும். அவ எப்படிப் போவா ? “

“அதான் டிரைவர் இருக்கானே… அவன் கூட்டிக்கிட்டு போவான். நீங்க கிளம்புங்க… நிறையப் பொருட்கள் வாங்கனும். புள்ளைங்களுக்குத் துணியே இல்ல. ” என்ற விசாலம் காபியை பருகிய படியே சோபாவில் அமர… ஆதி கடுங்கோபத்தோடு நின்றிருந்தார்.

பிள்ளைகள் முன் சண்டையிட்டு சண்டையிட்டு அவர்கள் அழுது புலம்புவதைப் பல முறை பார்த்தவர் ஆதி. ஆனால் அப்போது பிள்ளைகளைச் சமாதானம் செய்யத் தன் அன்னை வைரம் இருந்தார். இப்போது அவர் இல்லை என்பதை உணர்ந்ததும் வந்த கோபத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க முயன்றார்.

அவரின் முயற்சியை வேணி நொடியில் உணர்ந்து தந்தையின் மனதிற்கு ஆறுதல் மொழி கொடுத்தாள்.

“அப்பா… நான் டிரைவர் அண்ணாவோட போறேன். நீங்க ஒன்னும் வொரிப் பண்ணிக்காதீங்க. நான் ரீச்சாகிட்டு உங்களுக்குக் கூப்பிடறேன். ” என்றவள் அவர் கையிலிருந்த தன் பையை வாங்கினாள்.

வேதனை நிறைந்த கண்களுடன் மகளைப் பார்த்த ஆதிக்கு பார்வையாலேயே ஆறுதல் கொடுத்தாள் வேணி.

“நான் கிளம்பறேன் அப்பா… ” என்றவள் வாசல் நோக்கி நடக்க மிதுளாவும் ஆதியும் அவளைத் தொடர்ந்தனர்.

அவள் காரை அடையவும் ஓட்டுநர் கேள்வியோடு ஆதிசேஷனை பார்த்தார்.

அவரோ… “பாப்பாவை திருச்சி பஸ் ஸ்டேன்டில் கொண்டு போய் விட்டுட்டு வா முருகேஷா. ” என்றிட… புரிதலுடன் தலையை ஆட்டிவிட்டு வண்டியை எடுத்தார் அந்த முருகேஷன்.

வேணி இருவரிடமும் விடைபெற்று தன் பயணத்தைத் தொடங்கினாள். இரவு வேளை நெருங்கும் முன் அவள் பெங்களூரில் தான் தங்கியிருந்த இடத்தை அடைந்தாள்.

தொடரும்….