அத்தியாயம் 6.2

அவன் சென்றதும் தலை கவிழ்ந்திருந்தவளை பார்த்தவன் சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்த அறைக்குள் இழுத்துக்கொண்டான். 

“என்ன பண்றீங்க? யாரச்சும் பாக்க போறாங்க” என அவள் ஓட பார்க்க அவளை முறைத்தான் தமிழ். 

“பாத்தா பாக்கட்டும் ஆமா உனக்கு என்னடி அவன்கிட்ட பேச்சு” தமிழ் அதட்ட அடிபட்ட பார்வை பார்த்தாள் அவள். 

“ப்ச்…. தப்பா கேட்கலை சது அவன் கூட நீ பேசுறது எனக்கு பிடிக்கலை”

“அ…  அவன் தான்”

“இருக்கட்டும் நீ தவிர்த்திருக்கலாமே? “

“இனி…மே பேசலை” என்றவள் கண்கள் கலங்க அவளை நெருங்கி நின்றான் அவன். அவள் அழுவதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அவள் உள்ளங்கையை எடுத்தவன் இதழ் பதிக்க கையை இழுத்துக்கொண்டாள் சாதனா. 

“உன்ன பசங்ககூட பேசாதனு சொல்லலை சது ஆனா… சிவா கூட வேண்டாம்” எனவும் தலையசைக்க மேலும் நெருங்கி நின்றான் அவன். 

தமிழின் செய்கை அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நேற்று வரை அவளை திரும்பிகூட பார்க்காதவன் இன்று இத்தனை உரிமையை எடுப்பது ஒருவித படபடப்பையும் தந்தது. 

“என்ன தீடீர்னு?” கேட்டுவிட்டு நாக்கை கடித்தாள். 

“இன்னைக்கு ஸ்பெஷல் டேல அதான்” என்றவன் கரம் மெல்ல அவளை வளைக்க தன்னோடு அனைத்துபிடித்தான்.  

மென்மையாய் மெல்ல நகரும் இந்த நாட்குறிப்பில்

பன்மையாய் நீ வந்து சேரும் மானமென்ன

என்னவோ செய்கிறாய் நீ என் ஆயுள்

எல்லைகள் போல ஆகிறாய்

மண்டபத்தில் ஒலித்த பாடலுக்கு கண்கள் மின்ன அவன் முகம் அவள் முகத்தை நெருங்க தலையை பின்னே சாயத்தாள் சாதனா. 

ஓஹ்ஹோ ஓஹோஹோ

காந்தமாய் என்னை ஈர்க்கும்

உந்தன் அன்பு இன்றும்

சாந்தமாய் என்னைக்கட்டிப்போடும்

ஜாலமென்ன கேட்கிறேன் கூறடிப்பெண்மையே

வாழ்க்க போகும் தூரம் நீயும் நானும் போகவேணும்

எந்தன் நெஞ்சில் கோடி ஆசை தோன்றுதே

சாதனா ஒற்றை கண்ணை திறக்க அதற்காகவே காத்திருந்தவன் போல் அவள் தாடையில் இதழ் பதித்தான். 

“லிப்ஸ்டிக் ஒட்டிக்கும்” என அவளை இறுக்கி அனைத்துவிட்டு விடுவித்தான் தமிழ்மாறன். 

“த்தா…ன்” பாதி காற்றுதான் வந்தது அவளுக்கு. 

“கையில என்ன பூவா? நான் வாங்கிட்டு வந்ததா?” என அவள் கையில் இருந்ததை வாங்கியவன் அவளை பார்க்க அவள் தலையில் பூ மட்டும் குறைந்தது. 

“ம்ம் ஆமா” என்றவள் கையை நீட்ட அவளை திருப்பியவன் அழகாகக் சூட்டிவிட்டான். சாதனாவிற்கு நிறைவாக இருந்தது அவன் செயல். 

 கெட்டி மேளம் சத்தத்தின் நடுவில்

“பொண்ண அழைச்சிண்டு வாங்கோ  முகூர்த்த புடவை கொடுக்கணும்” என ஐயர் கத்த ரம்யாவை அழைத்து வந்தனர் பெண்கள்.  கன்னிகாதானம் செய்ய அழகேசனின் ஒன்றுவிட்ட தங்கையும் அவர் கணவரும் நின்றனர். தந்தையை நினைத்து கண் கலங்கள் ஐயர் சொல்லியதை செய்தவள் புடவையை பெற்றுக்கொண்டு சென்றுவிட சுரேஷை அழைத்து சம்பிரதாயங்கள் செய்தனர். 

தமிழ்தான் மாலை போட்டு சுரேஷை  அழைத்துவந்தான். தமிழை முறைத்துக்கொண்டு  மாலை வாங்கிக்கொண்டான் அவன். ஏனோ தமிழ்மாறனை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

‘வெட்டி பயலுக்கு என் தங்கையா?’ என்ற நினைப்பு தமிழை பார்த்தாலே அவன் முகம் கடுத்தது. இதை சொல்லி சுந்தரமூர்த்தியிடம் பலமுறை திட்டுவாங்கிவிட்டான். அவனை தவிர்த்து மற்றவர்கள் அவர்கள் திருமணத்தில் நிறைவை உணர்ந்தனர்.

மேடையில் அவன் அமர ரம்யாவை அழைந்து வந்தனர் பெண்கள். மெல்ல சுரேஷ் அதில் ஒன்ற ரம்யாவின் அழகில் கர்வத்தோடு அவளை நெருங்கி உரசி என அவளை மூச்சடைக்க வைத்துக்கொண்டே  தாலிக்கொடியை அவள் கழுத்தில் முடிந்தான்.  அனைத்தும் நல்லபடியாக முடிய மதியம் கடந்திருந்தது ஏறக்குறைய மண்டபத்தில் பலர் கிளம்பியிருந்தனர். 

“சதிஸ் டைம் ஆச்சு பாரு ரிஜிஸ்டர் ஆபிஸ் போகணும்” என  அவசரபடித்தினார் சுந்தரமூர்த்தி. 

“இதோ ப்பா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்காங்க” 

“டேய் அதான் சொன்னனே திரும்ப சாமி கும்பிட்டு தான் வீட்டுக்கு போகனும். நைட்டு சாதனா பரிசம் இங்கதானே அப்பறம் எதுக்கு? எல்லாம் இங்கையே இருக்கட்டும் நம்ம மண்டபம். நம்ம ஆளுங்க எல்லாம் இங்க தான் இருப்பாங்க கிளம்ப சொல்லு” என்றவர்  முன்னே செல்ல எல்லோரையும் இரண்டு காரில் ஏற்றிவிட்டு அவர்கள் பின்னே அவனும் வண்டியில் சென்றுவிட்டான். 

அவர்கள் செல்லும்வரை சிவா ஓரமாக அமர்ந்து சாதனாவையே பார்த்துக்கொண்டிருந்தான். நீலா திரும்பி மகனை கேள்வியாக பார்க்க தலையசைத்தவன் கழுத்தை தடவி பார்க்க செயினில் கோர்த்த தாலி பத்திரமாக இருந்தது. முன்னவே குடும்பமாக திட்டம்போட்டு தான் வந்திருந்தனர். அவன் தாலியை சாதனா கழுத்தில் போடலாம் என நினைத்த நேரம் சதிஷ் சாதனாவையும் வண்டியில் ஏற்றிவிட அவளுக்காக அமைதியாக காத்திருந்தான். 

அவன் முடிவில் தீவிரமாக இருந்தான். அதை விட வெறி அவள் மீது தமிழ் மீது . 

‘தன்னை நிராகரித்துவிட்டு ஒன்னும்மில்லாத அன்னாடங்காட்சி வெட்டி பையனான தமிழை அவள் திருமணம் செய்தால் தன் மரியாதை என்னாவது?’ என்ற சிந்தனைகள் தீ மூட்ட தமிழை மிரட்டினான். பதிலுக்குத் தமிழ்மாறன் அமைதியாக சென்றுவிடுவான் என நினைத்திருந்தவனை மண்ணில் போட்டு புரட்டிவிட்டான் தமிழ். அவன் ரௌத்திரத்தில்  ‘எங்கே செத்துவிடுவமோ?’ என பயந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவனை மிரட்டி தான் ஊர் முன் மன்னிப்பு கேட்க வைத்திருந்தான் தமிழ். இது இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். 

அந்த வஞ்சமும் சேர சாதனாவை கடத்த நேரம் பார்த்தவன் தமிழை சேர்த்து அசிங்கபடுத்த நினைத்து யோசித்த திட்டம் தான் இது. சாதனா கழுத்தில் தாலியை போடும் வரையில் யாருக்குமே சந்தேகம் வரகூடாது என்பதனால் தன் கழுத்திலேயே போட்டுக்கொண்டு வந்திருந்தான். முக்கியமாக அவன் தாலியை போடும் நேரம் தமிழ் அருகில் இருக்கவேண்டும்  யாரும் இடையில் வந்து தடுத்துவிடகூடாது என்பதற்காக இவ்வளவு நேரம் காத்திருந்தான். 

அரைமணிநேரத்தில் அவர்கள் திரும்பி வந்துவிட சரியான சந்தர்ப்பத்தை எதிர்பாத்திருந்தான். சாதனா இதை அறியாது அங்கும் இங்கும் போய்வந்துக் கொண்டிருந்த தமிழை கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடன் பாவினி திரிய  சதிஷ் இரவு பரிசம் என்பதால் வெளியே ஆட்களை ஏவிக்கொண்டிருந்தான். சுந்தரமூர்த்தி சில உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர் அவர்களை வழியனுப்ப சென்றுவிட ஆங்காங்கே ஒரு சிலர் மட்டுமே. சுரேஷ் தன் நண்பன் அழைத்ததால் போனோடு தூரமாக சென்று மறைய சிவா எதிர்பார்த்த நேரம் வந்துவிட்டது என எழுந்து அவளை நெருங்கினான். 

தமிழ்மாறன் அப்போது தான் புதிதாக இரண்டு ரோஜா மாலையை கையில் வைத்துக்கொண்டு உள்ளே  வந்தவன் சிவா சாதனாவிடம் செல்வதை கண்டு வேகமாக வர சிவா “விடைபெற தான் வருகிறான்” என சாதனாவும் அவனை பார்த்தவாறு நின்றிருந்தாள். 

தமிழ்மாறனுக்கு சிவாவின் உடல் மொழியில்  ஏதோ தவறாக பட அவன் தமிழை திரும்பி பார்த்த பார்வையில் “சாதனா” என அவன் கத்திகொண்டே ஓடி வர கண் இமைக்கும் நேரத்தில் சிவா தன் கழுத்தில் இருந்த செயினை சாதனா கழுத்தில் போட்டுவிட்டான். 

என்ன நடந்தது என புரியவே அவளுக்கு சிலநொடி  தேவைப்பட்டது. அதற்குள் தமிழ்மாறன் ஓடிவந்து சிவாவை கொத்தாக அள்ளினான். அவன் கண்கள் சிவந்து ரத்தநிறம் கொண்டது ஆத்திரம் தொண்டையை அடைக்க  அவன் சிவா கழுத்தை நெறிக்க நீலாவும் அறிவும் தமிழைபிடித்து இழுத்தனர். 

“என்ன காரியம் டா செஞ்ச பொறுக்கி நாயே” அவன் விட்ட உதையில் தூர போய் விழுந்தான் அவன். 

“பாத்தா தெரியலை தாலி கட்டியிருக்கேன் இனி அவ என் சாதனா” என திமிராக அவன் எழுந்து நிற்க அப்படியே தரையில் விழுந்தாள் சாதனா. பாவினி அழுதுக்கொண்டே வாசலுக்கு ஓட ரம்யா சுரேஷிடம் ஓடினாள். 

“மாமா” என கத்திக்கொண்டே ரம்யா ஓடிவருவதை பார்த்த சுரேஷ் போனை வைத்துவிட்டு அவளிடம் செல்ல நேராக அவன் மேல் வந்து மோதினாள் அவள்.

“ஏதுக்குடி ஓடி வர?” அவன் அதட்ட கண்ணில் இருந்து நீர் கொட்டியது அவளுக்கு. புது மனைவி அழுததில் சுரேஷ் பதறிபோனான். 

“ஏய் என்னாச்சி? “

“அங்க… அங்க… சிவா சாதனா கழுத்தில தாலிய போட்டுடான் மாமா” எனவும் அதிர்ந்து போனவன்  அவர்களை தேடி ஓடி வர பாவினி சுந்தரமூர்த்தியை காணாமல்  அழுதவாறு தேட அவளை பார்த்துவிட்டு சதிஷ் அவளிடம் வந்தவன் விஷயம் கேள்விப்பட்டு உள்ளே ஓடினான். 

அங்கிருந்தவர்கள் ஒன்று சேர்ந்து வேடிக்கை பார்க்க தமிழும் சிவாவும் மாறி மாறி தாக்கி கொண்டனர். தமிழ் கையில் இருந்த மாலை சாதனா அருகில் கிடக்க கண்ணீர் சாரை சாரையாக பொழிந்தது அவளுக்கு.