அத்தியாயம் – 5

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 5

மணியுடன் அவன் வீட்டை அடைந்த ஆதி உறவினர்களைக் கூட்டி பஞ்சாயத்து வைத்தார்.

“சின்னப் பசங்க… அதுவும் தாயில்லா பசங்க… இவங்களைக் கஷ்டப்படுத்த உனக்கு எப்படி மனசு வருது ? ” என்று மணியின் தந்தை ராமுவை பார்த்து ஆவேசமாகக் கேட்ட ஆதியை பார்த்து ஏளனமாகச் சிரித்தார் ராமு‌.

“என் புள்ளைங்க மேல உனக்கு என்ன அத்தனை அக்கறை ? “

“மாமா… கேட்க ஆள் இல்லன்னு நினைச்சு பேசறயா ? என்ன இருந்தாலும் கோமதி எங்க அக்கா. அதோட புள்ளைங்க வாழ்க்கை கெட்டுப்போக நாங்க விடமாட்டோம். ” என்றான் ராஜா.

“டேய்… என்ன டா அக்கா… பசங்கன்னு உரிமை கொண்டாடிக்கிட்டு வரீங்க ? அவ என்ன உங்க கூடப் பிறந்தவளா ? ஏதோ ஒரு முறைக்கு அக்காவா இருந்தா… அதை உடனே உரிமையா எடுத்திடுக்கிட்டு வந்துடுவீங்களா ? “

“ஏன் உன் மகளுக்குக் குடிசை கட்டினோமே அப்ப இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே ? இல்ல உன் பொண்டாட்டி செத்ததுக்கு முறை செஞ்சோமே அப்ப இதே கேள்வியைக் கேட்டிருக்கலாமே ? “

“ராசா… நீ இந்த ஊருக்காரன். அதனால தான் முறை செய்ய ஒத்துக்கிட்டேன். இவன் யாரு ? அசல் ஊரு… புதுசா வந்திட்டு இப்ப என்னை என்னென்னவோ பேசறான். “

“இவரு ஒன்னும் புதுசு இல்ல… பரமேஸ்வரன் பெரியப்பாவோட பையன் ஆதிசேஷன். பெரியப்பா உயிரோட‌ இருந்த வரை அவருதான் எல்லா விஷேசத்துக்கும் முன்ன நின்னாரு. மறந்துட்டியா ? “

“அட… பரமேஸ் மாமா பையனா இவரு ? ” எனக் கேட்ட ராமு… “உன்னைய நான் சின்னப் பையனா இருந்தப்போ பார்த்தது அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல. ” எனக்கூறி வழிந்தார்.

“இப்ப நான் யாருன்னு தெரிஞ்சிடுச்சு இல்ல… அப்ப பதிலை சொல்லுங்க. எதுக்கு உங்க பொண்ணுக்கு அவசர கல்யாணம் பண்றீங்க ? ” என்றார் ஆதி காரமான குரலில்.

“அது… வயசு புள்ளையை வீட்டில் வெச்சிருக்கறது… அத்தனை சரியில்ல தானே ஆதி. அதான்… “

“அதுக்கு யாருக்குமே சொல்லாம ஒரேநாளில் நிச்சயம் பண்ணி… மறுநாள் கல்யாணம் பண்ணனுமா என்ன ? “

“இல்ல… அது… நல்ல வசதியான ஆளு. அதான்… புள்ள வசதியா வாழுமேன்னு…. ” என்று ராமு இழுக்க…,

“யாரவன் ? ” என்று கேட்ட ஆதியின் குரலில் அதிகாரம் தெறித்தது.

“நம்ம மேட்டுதெரு ஆளு தான். “

“யோவ் மாமா… அந்தாளுக்கு வயசு நாப்பதுக்கு மேலிருக்கும். இந்தச் சின்னப் புள்ளையைப் போய் அந்தாளுக்குக் கட்டி வெக்கறேன்னு சொல்ற ? அதுவும் அவன் சரியான குடிகாரன்… ” என்று ஆவேசமாகக் கத்தினார் ராஜா.

“இருக்கட்டுமே… அவனுக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. இப்ப வரை வாரிசு இல்ல… அதான் என் புள்ளையைக் கட்டிக்கக் கேட்கறான். அதுபோகக் கல்யாணத்துக்கு ஒத்த பைசா வேண்டான்னு சொல்லிட்டான். எனக்கு வேற என்ன வேணும். “

“நல்லா வாயில வருது மாமா… ” என்ற ராஜா… “மரியாதையா கல்யாணத்தை நிறுத்திடு. இந்தப் புள்ளையைக் கரை சேர்க்கற பொறுப்பை நாங்க ஏத்துக்கறோம். “

“நீங்க ஏத்துக்கறீங்களா ? நீங்க மாப்பிள்ளை தேடி கல்யாணம் பண்றதுக்குள்ள என் புள்ள கிழவியாகிடும். அதுபோக… நாள் கணக்கா எல்லாம் என்னால காத்திருக்க முடியாது. மேட்டுதெருக்காரன் புள்ளையும் கட்டிக்கிட்டு எனக்கு மாசா மாசம் பணமும் தரேன்னு சொல்லிருக்கான். அதை எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது. “

“உனக்குப் பணம் தானே வேணும் நான் தரேன். “

“நீ எத்தனை நாளைக்குத் தருவே ? நாளைக்குப் பணம் வேணும்னு உன் வீட்டு வாசலுக்கு வந்தா உன் பொண்டாட்டி என்னை விளக்கமாத்த காட்டி விரட்டி அடிப்பா… இதுவே என் பொண்ணு வீடா இருந்தா… நான் எப்ப வேணா போய்க் காசு கேட்கலாம். என் புள்ளையே அப்பாவுக்குக் காசை அள்ளி அள்ளித் தருவா. நீங்க சொல்ற மாதிரி நடந்தா… நான் நடுத்தெருவில் நிக்கனும்… அதெல்லாம் என்னால முடியாது. “

“யோவ்… “

“ராஜா கொஞ்சம் அமைதியா இரு. ” என்ற ஆதிசேஷன் மனதில் வேறு எண்ணம் உதித்தது. ராமுவின் தேவை பணம் மட்டுமே.‌.. மகளை வைத்து அதை அடைய திட்டமிட்டுள்ளார். மகனை பற்றிய கவலை அவருக்குச் சிறிதளவும் இல்லை. அந்த மேட்டுதெருக்காரன் யாரோ எவரோ அவன் இந்தப் பெண்ணை மணந்தாலும் மணியைப் பற்றிக் கவலைப்பட மாட்டான். அதே நேரத்தில் அந்தப் பெண்ணும் வயது வித்தியாசம் அதிக உள்ள குடிகாரனை கட்டிக்கொண்டு கஷ்டப்படுவாள். இதற்கு ஒரே தீர்வாக… தானே ஏன் இப்ப பொண்ணை மணந்து… அனைத்து சிக்கலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாது. என்று எண்ணமிட்ட ஆதி…. தன் தொண்டையைச் செருமி பேசத் தொடங்கினார்.

“என்னோட முதல் சம்சாரம் செத்து இரண்டு வருஷம் ஆகுது. எங்களுக்கு ஒரு பொம்பளப்புள்ள இருக்கு. நான் உங்க மகளை இரண்டாம் தாரமா கட்டிக்கறேன். கூடவே உங்க மகனையும் என்னோட வெச்சிக்கறேன். உங்க செலவுக்கு மாசா மாசம் ஒரு தொகையைக் கொடுத்திடறேன். ஆனா நீங்க என் வீட்டுப்பக்கம் வரக்கூடாது. இதுக்கு நீங்க ஒத்துக்கறீங்களா ? ” என்று கேட்க ராமுவிடம் ஏக சந்தோஷம்.

பரமேஸ்வரன் ஐயாவின் செல்வாக்கு பற்றியும் சொத்துச் சுகங்கள் பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்தார் ராமு. இப்போது அவரின் மகன் தன் மகளை மணந்தால்… அவள் அடைய போகும் நன்மைகளை எண்ணிப்பார்த்து… “எனக்குச் சம்மதம்… ” என்று உற்சாகக் குரலில் கூறினார்.

உறவுகளும் ஆதி விசாலத்தைத் திருமணம் செய்வதை அமோதித்தது.

“உங்க பொண்ணைக் கூப்பிடுங்க… அந்தப் புள்ள கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கறேன். ” என்றார் ஆதிசேஷன்.

“அவ சின்ன மாப்பிள்ளை… அவளைப் போய் எதுக்குக் கேட்டுக்கிட்டு ? நான் சொன்னா போதும். “

“அதெல்லாம் முடியாது…‌அந்த பொண்ணு சம்மதிக்கனும். ” என்று ஆதி பிடிவாதம் பிடிக்க… பக்கத்து வீட்டில் இருந்த விசாலத்தை அழைத்து வந்தனர்.

“இங்க பாரு புள்ள… என் பேரு ஆதிசேஷன். உங்க அப்பா ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நிறுத்த ஒத்துக்கிட்டாரு… ஆனா… நான் உன்னைக் கட்டிக்கறேன்னு சொல்லி கேட்டேன். அவரு சம்மதிச்சிட்டாரு… உன் விருப்பம் என்னன்னு கேட்க தான் கூப்பிட்டோம். ” என்ற ஆதி… “எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு. என் முதல் மனைவி இப்ப உயிரோட இல்ல. எங்களுக்கு ஒரு மகள் இருக்கா… அவ பேரு கிருஷ்ணவேணி. என்னைக் கட்டிக்க உனக்குச் சம்மதமான்னு சொல்லு. யோசிக்க நேரம் வேணும்னாலும் எடுத்துக்கோ. ” எனக்கூறி தன் வாதத்தை நிறைவு செய்தார்.

விசாலம் தலையைக் குனிந்ததிருந்த காரணத்தால் அவளின் முகப் பாவத்தை ஆதியால் அறிய முடியவில்லை. ஆதி தயக்கதோடு… “உனக்கு விருப்பமில்லன்னா… வேண்டாம். இந்தப் பேச்சை இத்தோட நிறுத்திக்குவோம். உனக்குப் பிடிச்ச மாதிரி மாப்பிள்ளை பார்க்கறோம். ” என்றிட

விசாலத்தைச் சுத்தியிருந்த பெண்கள்… “அண்ணே… இது தாயில்லா புள்ள. நீங்க நல்லது செய்ய வந்தது தெரியாம அமைதியா இருக்கு. நாங்க புரிய வைக்கறோம். புரிஞ்சிப்பா… ” என்றுவிட்டு விசாலத்தைத் தனியாக அழைத்துச் சென்று ஏதோ கூறினர். திரும்பி வந்த விசாலம் ஆதிசேஷனை திருமணம் செய்யச் சம்மதம் தெரிவித்தாள்.

ஆதிசேஷன் – விசாலத்தின் திருமணம் இனிதாக நடந்து முடிந்தது. அக்கா விசாலத்துடன் மணியும் ஆதியின் வீட்டை தஞ்சமடைந்தான்.

விசாலத்திற்கு அன்றைய இரவு அந்த வீட்டில் முதல் இரவாக இருக்க… ஆயிரம் கனவுகளோடு ஆதியின் அறைக்குள் சென்றாள். அங்கே வேணி தன் தந்தையின் நெஞ்சில் படுத்துறங்குவதைக் கண்டு ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.

விசாலம் வந்ததை உணர்ந்த ஆதி… “விசாலம்… வந்துட்டியா ? கல்யாண களைப்பில் இருப்ப… அந்தப் பக்கம் படுத்துக்கோ… அங்க புதுப் போர்வை இருக்கு பாரு…. அதை எடுத்துக்கோ. ” என்றுவிட்டு மகளை அணைத்தபடியே உறங்கிவிட்டார்.

அன்றிலிருந்தே வேணியை விசாலம் தன் எதிரியாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.

மறுநாள் விடிந்ததும் ஆதி வயல் வேலைக்குச் சென்றுவிட…. விசாலம் அத்தை வைரத்தை தேடி சமையலறை சென்றாள்.

“நீ ஏன்ம்மா.. இத்தனை சீக்கிரம் வந்துட்ட ? போய்க் கொஞ்ச நேரம் ஓய்வெடு. ” என்று வைரம் யதார்த்தமாகக் கூற,

“ஓய்வெடுக்கற அளவு எதுவும் நடக்கல. நடுவுல நந்தி மாதிரி ஒன்னு கிடக்கும் போது… என்ன நடக்கும். எனக்குப் பொறந்த வீட்டிலும் எந்த நல்லதும் நடக்கல… புகுந்த வீட்டிலும் அது நடக்க வாய்ப்பில்ல போல. அன்னிக்கு எங்க அப்பா ஏற்பாடு செஞ்ச கல்யாணத்தை நான் கட்டியிருந்தா… நான் தான் அங்க ராணியா இருந்திருப்பேன். நல்லது செய்ய வந்தேன்னு சொல்லிட்டு உங்க பையன் எனக்குச் செஞ்சது துரோகம். ” என்று வெடுக்கெனப் பேசினாள்.

அவள் கூறியதை கேட்டு வைரம் வாயடைத்துப் போனார். சின்னப் பெண் விவரம் தெரியாது என்று நினைத்திருந்த வைரத்திற்கு அவள் கோமதியின் மகளாகத் தெரியாமல் ராமுவின் மகளாகக் காட்சி தந்தாள்.

“அப்படி இல்ல விசாலம்… பொறந்ததிலிருந்து அப்பன் நெஞ்சுலையே படுத்து பழகினவ வேணி… அதான் திடீர்னு மாத்திக்க முடியல. “

“அப்ப எதுக்கு என்னைக் கட்டிக்கனும் ? ஓ… அவரு மகளுக்கு ஆயா வேலை பார்க்கவா ? “

“இந்தா புள்ள இப்படி எல்லாம் பேசாதே… என் மவன் உன்கிட்ட விசயத்தைச் சொல்லி சம்மதம் கேட்டு தானே கட்டிக்கிட்டான். “

“ஆமாம், சொன்னாரு. ஆனா என்னைக் கட்டிக்கச் சம்மதமான்னு தான் கேட்டாரு. புள்ளைக்கு ஆயா வேலை பார்ப்பியான்னு கேட்கல… நான் அதுக்கே யோசிச்சேன். என்னைச் சுத்தி இருந்த பொம்பளைங்க…. வசதியான குடும்பம் மூத்த தாரத்துக்கு ஒத்த பொம்பள புள்ள தான். நீ இவரைக் கட்டிக்கிட்டா உன் புள்ளை தான் வாரிசா இருப்பான்னு சொன்னாங்க. ஆனா இங்க வந்து பார்த்தா…. அடுத்தப் புள்ளைக்கு இவரு வாய்ப்பே கொடுக்க மாட்டாரு போலத் தெரியுது. ” என்று காட்டமாகப் பேசினாள்.

“போதும் விசாலம். ” என்ற வைரம்… “அவன் வரட்டும் நான் பேசறேன். ” என்றுவிட…

“பேசினா சரி… இல்லன்னா நான் கிளம்பி எங்க அப்பா வீட்டுக்கு போயிடுவேன். ” என்று எச்சரிக்கும் விதத்தில் கூறிவிட்டு தனியறைக்குச் சென்றுவிட்டாள்.

விசாலம் பேசியதை அறிந்த ஆதிக்கு அதீத கோபம் வந்தது. ஆனால் வைரம் அவரிடம்… “கண்ணு… கோவப்படாதே அது சின்னப் புள்ள. கல்யாண கனவும் ஆசையும் இருக்கறது இயற்கை தானே ? உனக்கும் சின்ன வயசு தான்… மலரு தான் இன்னொரு புள்ளை வேணான்னு சொல்லி குழந்தை பெத்துக்கறதை தள்ளிப்போட்டா… அதுக்காக வந்த புள்ளையும் அதையே செய்யனும்னு நினைக்கறது தப்பு. நீ விசாலத்தோட நல்ல படியா குடும்பம் நடத்து. வேணியை இனி நான் பார்த்துக்கறேன். ” என்று கூறிவிட்டார்.

ஆதி தாயின் வார்த்தையை அரை மனதுடன் ஏற்றுக்கொண்டு விசாலத்துடன் இல்வாழ்க்கையைத் தொடங்கினார்.

என்றாலும் விசாலம் அடங்கவில்லை. வேணியைக் கொஞ்சி பேசினால் கூட எதையாவது போட்டு உடைக்க ஆரம்பித்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த ஆதி விசாலத்தை அடிக்க… மயங்கி விழுந்தாள் விசாலம்.

ஆனால்… அந்த மயக்கம் வேணியை ஆதியிடம் இருந்து முழுவதுமாகப் பிரித்தது.

ஆமாம், விசாலம் கருவுற்றிருந்தாள். அதன் பிறகு அவளை அடக்க முடியவில்லை. எதற்கெடுத்தாலும் சண்டை. ஒருமுறை கோபத்தில் வேணியை அடித்துவிட்டாள் விசாலம். அதில் கோபமடைந்த ஆதி விசாலத்தைத் தள்ளி வைக்கப் பஞ்சாயத்தைக் கூட்டும் முடிவெடுக்க…,

அப்போதும் அவரைத் தடுத்தது வைரம் தான். “வேணியை நல்லா படிக்க வெச்சி தைரியமான பொண்ணா வளர்க்கனும். அவ இங்க இருந்தா உங்களோட சண்டையால படிக்க முடியாம போயிடும். நீ அவளை ஹாஸ்டலில் சேர்த்திடு. அவ படிக்கட்டும். ” என்றவரை கோபமாகப் பார்த்த ஆதி,

“அம்மா… விளையாடறியா ? இவளுக்காக என் மகளைப் பிரியனுமா ? “

“ஆதி… அவ யாரோ இல்ல. உன் மனைவி. “

“அதுக்கான மரியாதையை நான் கொடுத்துக்கிட்டு தான் இருக்கேன். “

“வேணி நல்லா இருக்கனும்னு நீ நினைச்சா ஹாஸ்டலில் சேர்த்துவிடு. இல்லன்னா நானும் என் பேத்தியும் தனி வீடு பார்த்து போறோம். ” என்று விட… ஆதி வேணியை ஹாஸ்டல் வசதியுடன் இருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டார்.

அன்றிலிருந்து விடுமுறைக்கு மட்டுமே வரும் மகளை எண்ணி மனம் நொந்து போனார். ஆனால் வேணி நன்றாகப் படித்தாள். அவள் விரும்பும் கல்வியை அவளுக்குத் தந்து காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டார் ஆதிசேஷன்.

இப்போது வேணி பேஷன் டிசைனிங் படிக்கிறாள். அதுவும் மெரிட் தேர்வில் தேர்வாகி மத்திய அரசின் நேரடி கல்லூரியில் இடம் கிடைத்து படிக்கிறாள். இப்போது அவள் இறுதியாண்டில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

தன் தாய் மேல் அதிக நம்பிக்கை வைத்திருந்த ஆதிசேஷன் மகள் வேணிக்கு மணியை மணமுடிக்கும் யோசனைக்குத் தன் தாயை பயன்படுத்திக் கொண்டார். இது அவரும் அவர் தாயாரும் மட்டுமே அறிந்த ரகசியம்.

தொடரும்…