அத்தியாயம் 5

மாதங்கள் இரண்டு கடந்துவிட்டது சாதனா கல்லூரி செல்வதையே நிறுத்திவிட்டாள். சுரேஷ் எவ்வளவு எடுத்து சொல்லியும் மறுத்தவள் அதற்கு மேல் கட்டாயப்படுத்தினால் அழுகை வசம் சென்றாள். அவள் துயரத்திற்கு காரணமானவனை கொல்ல ரத்தம் துடித்தாலும் சாதனா அதற்கும் மறுத்துவிட்டாள். அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்தி மேலும் கதை திரித்தான் சிவா. 

இதற்கிடையில் சாதனாவிற்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடினார்கள் அண்ணன்கள் இருவரும். அதை தெரிந்துக்கொண்ட சிவா அதையும் கெடுத்தான் நம்பாதவர்களை மிரட்டினான். அவனை  மீறி வந்தவர்கள் கண்களில் பணத்தாசை மின்னியது. 

ரவி குரைக்கும் சத்தம் கேட்டு எட்டி பார்த்தார் வாசுகி. திருமண இடைதரகர் தன் மிதிவண்டியை நிறுத்த அவசரமாக புடைவையை சரிசெய்தவர் அவரை வரவேற்று அமர வைத்தவர் தண்ணீர் சொம்பை நீட்ட குடித்து முடித்துவிட்டு  சொம்பை கீழே வைத்தார் அவர். 

“என்ன அண்ண ஏதாச்சும் இடம் வந்திருக்கா?” வாசுகி ஆவலாக கேட்க 

“உன் பொண்ணு  அழகுக்கு நீ நான்னு போட்டி போடுறானுங்க வாசு ஆனா தகுதியா பாக்கணும்ல”

“ரொம்ப ஒசத்தியா பாக்க வேண்டாம் ஏதோ எங்க தகுதிக்கு ஏத்த மாதிரி இருந்தால் சரிதான்”

“எங்க உம்பிள்ளை தான் மெத்த படிச்ச பையான பார்க்க சொன்னான்.  அதுவும் சரிதான் படிச்ச பிள்ளைக்கு படிச்ச பையன் தானே ஒத்துவரும். நம்ம இனத்தில எல்லா பசங்களும் வசதியாக இருந்தாலும் படிச்சவனா இல்லையே வாசு”

“என்ன அண்ணா பண்றது? நம்மகிட்ட சொத்தா? சொந்தமா? ஏதோ என்னால முடிஞ்சது படிக்க வச்சேன் அது அது புலைச்சிக்கும் பாருங்க”

“சரிதான் கெட்டிக்கார பிள்ளைங்க. உம் மவன் மட்டும் வேலைக்கு போயிருந்தால் நல்ல  பெரிய இடமாவே பார்கலாம் எங்க? சரி இந்தாமா இந்த பையன் அரிசி மில்லில் சூப்பர்வைசரா இருக்கான். நாற்பது பவுன் நகை வண்டி கேக்குறாங்க” என ஜாதகத்தை நீட்ட அதை வாங்கிக்கொண்டார் வாசுகி. 

“அவன் இந்த குரூப் பரீட்சைக்கு படிச்சிட்டு இருக்கான் அண்ணா அதான் கிடைச்ச வேலைய விட்டுட்டான் போல” மகனை விட்டுக்கொடுக்காமல் பேசினார் வாசுகி. 

“நல்லாயிருந்தா சரி” என விடைபெற்றவர் சுந்தரமூர்த்தி வீட்டிற்க்கு சென்றார். 

அவர் சொன்ன எந்த வரனும் சுந்தரமூர்த்தியை திருப்தி படுத்தவில்லை.  அவர் முகத்தில் பிடித்தமின்மையை பார்த்தவர்

“என்ன அவசரம் சுந்தரம்? பாப்பாக்கு என்ன வயசா ஆகிட்டு? பொறுமையா பார்த்துக்கலாம்” எனவும் மறுப்பாக தலையசைத்தவர் 

“மூனு மாசத்துக்குள்ள செய்யனும்னு ஜோசியர் சொல்லிருக்கார் சேகர். இல்லைனா பத்து வருஷம் தள்ளி போயிடும்னு சொல்லிட்டார்” 

“வேற இடத்தில பார்க்கலாமே? “

“இல்லை சேகர் இவர் நல்ல கைராசியானவர் தான் சொந்தத்தில தான் மாப்பிள வரும்னு சொன்னார். ஆனா நமக்கு ஏத்த மாதிரி ஒருத்தரும் கண்ணில் படலையே” அவர் அலுத்துக்கொள்ள  சேகர்க்கு சட்டென்று அந்த யோசனை தோன்றியது. 

“ஏன் சுத்தரம் இல்லை? உனக்கு நல்லா தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் சொக்க தங்கம்” 

“யாரப்பா சொல்ற? “

“உன் தங்கச்சி மகன்தான்.  நல்லா படிச்சவன் அடக்கமான புள்ள யாரு வம்பு தும்புக்கும் போனது இல்லை” எனவும் உடனே மறுத்தார் சுந்தரமூர்த்தி. 

“அதான் உறவு இல்லைனு ஆகிபோச்சே சேகர்”

“என்னப்பா நீ…. வாசு யாரு? உன் ரத்தம்… நீ தானே அந்த பிள்ளைகளுக்கு தாய்மாமன்? நீ வேண்டானாலும் இல்லைனு ஆகிடுமா? மாமாகாரனா நீ தானே நின்னு மாலையிடனும்”  

சுந்தரமூர்த்தி தயங்க 

“ஒன்னு சொன்னா கோச்சிக்க மாட்டியே சுந்தரம்? பேசமா உன் தங்கச்சி பிள்ளைங்க மூனையும் உன் வீட்டுக்கு எடுத்துடு. மூனும் பத்தரைமாத்து தங்கம். அதுசரி உங்க வீட்டு பொண்ணு வளர்ப்பு அப்படிதானே இருக்கும். புருஷன் செத்தாலும் ஒத்தையா நின்னு வளர்த்திடுச்சி வாசு” என்றவர் 

“இன்னும் என்னப்பா சண்டை? உனக்கு விருப்பம் இல்லைனு சின்னம்மா தந்த சொத்தெல்லாம் திரும்ப கொடுத்துட்டு தானே போனது வாசு” சேகர் சொன்ன உண்மை அவர் மனதை பிழிந்தது.  அன்று ஆதரவற்று நின்ற அழகேசன் குடும்பத்திற்கும் சுந்தரமூர்த்திக்கும் சமமான பங்கை கொடுத்தனர் வசுகியின் பெற்றோர். அதில் மீனாவிற்கு  விருப்பமில்லாமல் போக காதல் மனைவி பக்கம் நின்றுவிட்டார் சுந்தரமூர்த்தி.  வாசுகி மேல் அதுவே பகையை வளர்க்க  வார்த்தைகள் தடித்து இறுதியில் அழகேசனும் வாசுகியும் சேர்ந்து அந்ந சொத்துகளை திருப்பிக்கொடுத்துவிட்டனர். அவர்கள் தங்கியிருக்கும் நிலத்திற்கான பணத்தை தன் பரம்பரை செயினை விற்று அதில் வாங்கிக்கொண்டார் அழகேசன். அன்று மீனாவின் காதல் போதனைகளில் சிக்கி தங்கையை விட்டுவிட்டார் சுந்தரமூர்த்தி. காலம் சென்ற பிறகு இன்று மனதில் உறுத்தியது. 

“அது அவன் இன்னும் வேலைக்கு போகலைனு… ” அவர் இழுக்க 

“நீ விட்டோட மாப்பிளை தானே கேட்ட  வேலைக்கு போறவன் அதுக்கு ஒத்துவருவானா? அதுவும் உன் கிட்ட இருக்க சொத்துக்கு அவனுக்கும் ஏதாச்சும் பொறுப்ப கொடுத்து பார்த்துக்க சொன்னா கையிலே இருப்பான்” என போராடினார் சேகர். பிரிந்த இருகுடும்பத்தை இணைத்து வைத்தால் அவருக்கும் பெருமை தானே. அவர் பேசி பேசியே தமிழ் தான் அவர் மருமகன் என பதியவைத்தார். தமிழின் நற்குணங்கள் பிரசித்தி என்பதால் மனதார அதை ஏற்றுக்கொண்டார் சுந்தரமூர்த்தி. 

“வாசு அதுக்கு சம்மதிக்குமா சேகர்?” 

“சந்தேகம் தான்  சுத்தரம். போன மாசம் தான் ரம்யாக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லி என்கிட்ட ஜாதகம் தந்துவிட்டது. இப்போதைக்கு மகனுக்கு செய்யுமா?” என்றவர் எதை சொல்லி வாசுகியை சம்மதிக்க வைப்பது என யோசிக்க 

“சேகர் நம்ம சுரேஷ்கு ரம்யாவ கேட்கலாமா? பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாம். நாலை பின்னே சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்கலாம்” 

‘தான் தங்கைக்கு  செய்தது போல் தன் மகளுக்கும் நேர்ந்துவிட்டால்’ என்ற பயத்திலேயே அந்த முடிவெடுத்தார் சுந்தரமூர்த்தி. சந்தோஷமாக விடைப்பெற்றார் சேகர்.

சுந்தரமூர்த்தி தன் முடிவை மகன்களிடம் பகிர  சுரேஷ் அறவே மறுத்தான். அவனுக்கு தமிழை சுத்தமாக பிடிக்கவில்லை. மீனா சிறு வயதிலேயே அவர்களை பணப்பேய்களாக அவன் மனதில் உருவேற்றியிருந்தார். தற்போதுவரை அவன் மனம் மாறாததற்கு சத்தரமூர்தியும் ஒரு காரணம். இறுதியாக சுந்தரமூர்த்தி கட்டாயத்தில் மனமேயின்றி சம்மதித்தான். 

சேகர் மீண்டும் வாசுகி வீட்டிற்கு வர பாவினி தான் வரவேற்றாள். 

“வாங்க மாமா”

“அம்மா இல்லையா சின்ன குட்டி?”

“அம்மா பால் வாங்க போயிருக்கு மாமா. நீங்க உட்காருங்க வந்துடும்” என்றவள் நாற்காலி எடுத்துப்போட அமர்ந்தவர் வெற்றிலை பாக்கை கொதப்ப பால் சொம்போடு வந்தார் வாசுகி. 

“வாங்க… ண்ன எதாச்சும் மறந்திட்டிங்களா? “

“இல்ல வாசு ஒரு விசயம் பேசனும் வந்து உட்காரு” எனவும் அமர்ந்தவரிடம் பொறுமையாக விளக்கினார் அவர். 

“என்ன மா உனக்கு என்ன தோணுது? “

“நான் என்ன அண்ண சொல்றது? இது சரியா வராது”

“அறிவு மவன் விசயத்தை நினைக்காதமா. அந்த புள்ள முகத்த பாத்த அப்படியா இருக்கு?” 

“அய்யோ அப்படி நான் நினைப்பேனா? என் பொறந்த வீட்டு வளர்ப்பு… அதை நானே தப்பா நினைப்பேனா? நானும் ரெண்டு பெண்ணு வச்சிருக்கேன்” அண்ணன் மகளுக்காக வருந்தினார் அவர். 

“உன் நல்ல மனசுக்கு ரெண்டும் நல்லா இருக்கும்பா. ஆனா  பாவம் சுந்தரம் தான் அந்த புள்ளைய கரையேத்தும் முன்ன உசிரவிட்டுடுவான் போல” எனவும் கண் கலங்கினார் வாசுகி. 

“சின்ன வயசுல எங்க அண்ண என்ன கைல தாங்கும். யாரு கண்பட்டதோ? நான் வாங்கின வரம் அவனும் கையவிட்டுட்டான் என் புருசனும் போய்சேந்துட்டார். அண்ணிக்கு என் மேல் என்ன கோவமோ? என் அண்ணன் வேணும் தான் எல்லா சொத்தையும் வேண்டாம்னு சொன்னேன்” அவர் புலம்ப வாசுகியை தேற்றினார் சேகர். 

“விடும்மா அந்த புள்ளையும் போய் சேர்ந்துட்டு. அதை பேசி என்ன ஆக போவுது? நம்ம நடக்கிறத பார்போம் உனக்கு சம்மதமா?”

“நாங்க அவங்க அளவுக்கு வசதி இல்லை அதுவும் என் மகன் வீட்டோட சம்மதிப்பானா?”

“அது தான் பிரச்சனையா உனக்கு? நீ சொல்லி உன் பிள்ளை பேச்சு மீறுமா? இந்த ஊருல தானே இருக்கப்போறான் அதுவும் தாய்மாமன் வீடு” 

“மனசு ஒப்பலையே அண்ண எனக்கு”

“ஏம்மா தங்கச்சி சுந்தரம்  உன் அண்ணன் தானே? நீயே விட்டுதரலாமா? அதுமட்டுமில்லாம உன் பொண்ணு ராணியாட்டம் வாழும்” ஒருவாறு வாசுகியை சம்மதிக்க வைத்த கேகர் மனநிறைவுடன் சென்றார். 

இரவு டியூசன் சென்டர் சாவியை மாட்டியவன் குளித்துவிட்டு வர அவனுக்காக காத்திருந்தார் வாசுகி. 

“தமிழு” அன்னையின் அழைப்பில்  திரும்பி பார்த்தான் அவன். 

“உங்கிட்ட பேசனும்” என்க அவர் அருகில் சென்று அமர்ந்தான். 

“சேகர் அண்ணன் வந்தார் ரம்யாக்கு ஒரு வரன் சொன்னார்” எனவும் மவுனமாக தாயை பார்த்தான் தமிழ்மாறன். 

“நாப்பது பவுண் நகையும் வண்டியும் கேக்குறாங்க” எனவும் அடக்கப்பட்ட கோபம் அவன் முகத்தில். 

“நீ என்ன சொன்ன? “

“சரினா சொல்ல முடியும்? வேண்டாம்னு சொல்லிட்டேன். இன்னொருத்தன் வந்தான் நகையே வேண்டாம்னு  வயசு ஒரு முப்பத்து நாலு இருக்கும். எனக்கு சரினு படுது நீ என்னப்பா சொல்ற?” எனவும் முறைத்தான் அவன். 

“என்னப்பா பண்றது? அவங்க கேட்கிறதை செய்ய எனக்கு வசதி இல்லையே இதாச்சும் பரவாயில்லை ஒருத்தன் ரெண்டாம் தாரமா கேட்கிறான்” வாசுகி மூக்கை சீந்த கோபத்தை கட்டுப்படுத்தவே அவனுக்கு சிரமமாக இருந்தது. 

“ரம்யாக்கு என்ன வயசாகிட்டுனு இப்ப மாப்பிள்ளை பாக்குறிங்க இருப்பத்தி ரெண்டு தானே கொஞ்ச நாள் போகட்டும்” 

“அவளுக்கு வயசாகலை ப்பா ஆனா எனக்கு வயசாகிட்டே ராவெல்லாம் தூக்கம் வரலை கண்ணை மூடினா என் பிள்ளைகளை கரையேத்தாம போயிடுவனோனு பயமா இருக்கு” வாசுகியின் வேதைனை அவ்னுக்கும் புரிந்தது. 

“நான் இல்லையா ம்மா?” என்ற மகனை பார்த்தவர் “எப்படி தமிழு நம்புவேன்? கிடைச்ச வேலையும் விட்டுட்ட” என்க அவனிடம் வார்த்தையில்லை. 

“ரம்யாவ சுரேஷ்க்கு  எங்க அண்ணன் கேட்டாராம்” எனவும் அதிர்ந்து பார்த்தான் அவன். 

“நான் சரினு சொல்லிட்டேன்” என்ற தாயை அசையாது பார்த்தான். 

“ரம்யாக்கு மட்டுமில்லை உனக்கும் தான்” 

“புரியலை மா… தெளிவா சொல்லு? “

“அவங்க வீட்டோடு மாப்பிள்ளையா உன்னை கேட்டாங்க… நான் சரினு சொல்லிட்டேன்” எனவும் “அம்மா…” என அவன் கத்த பயந்துபோனார் அவர். 

“யாரை கேட்டு சம்மதம் சொன்னிங்க? “

“யாரை கேட்கனும்? உங்கள பெத்துக்க யாரை கேட்டோம் உங்கள படிக்க வைக்க யாரை கேட்டேன்” என அழுதார் வாசுகி. 

“எனக்கு விருப்பம் இல்லமா”

“ரம்யாவ பாரு தமிழு”

“அம்மா கொஞ்ச நாள் பொறுத்துக்க ரமய்க்கு பெரிய இடமா பாத்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்”

“இல்ல தமிழு நான் சொல்றதை கேளு நீ. பெத்த எனக்கு செய்ய தெரியாதா?” 

“ஓஓ அப்படியா? ரம்யா சம்மதிச்சா செய் மா  என்னை விட்டுரு” 

“நீயும் நான் பெத்தவன் தான் தமிழு”

“ஏன் ம்மா? “

“உங்க அப்பா சாகும் போது உன் பொறுப்பில் தானே இவங்களை விட்டுட்டு போனார்” 

“அம்மா நான் மாட்டேனு சொல்லலை ஆனா வீட்டோட மாப்பிள்ளையா என்னால போகமுடியாது அதுவும் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்”

“நீ சுயநலமா யோசிக்கிற தமிழு உங்க சித்தப்பா மாதிரி” வாசுகி வாயை விட காயப்பட்டான் தமிழ்மாறன். 

“நீ உன் வாழ்க்கையை தான் நினைக்கிற உன் கவுரவம்  தான் உனக்கு முக்கியம். எங்க அண்ணன் பையனை கட்டிகிட்டா என் மக ராணி மாதிரி வாழ்வா ஆனா அதெல்லாம் உனக்கு முக்கியம் இல்லை நீ போ தமிழு நான் பெத்த பொண்ணு எக்கேடு கெட்டா உனக்கு என்ன? ” வாசுகி மேலும் அவனை வதைத்தார். 

“அவ தலை எழுத்து  ரெண்டாம் தாரமோ? மூனா தாரமோ?” அவர் மூக்கை சீந்த இறுகி நின்றான் அவன். 

“ரம்யா வாழ்க்கை நல்லா இருக்கனும்னு என்னை விற்க பாக்கிறல மா. உன் இஷ்டம் போல செய்” என்றவன் வெடுக்கென்று எழுந்து சென்றுவிட்டான்.