அத்தியாயம் – 4

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 4

வேணி ஒரு வார காலம் அங்கே இருந்தாள். அந்த வாரத்தின் கடைசி நாளில் ஊரும் உறவும் கூடி பாட்டிக்கு படையலிட்டு சாமி கும்பிட்டினர்.

அந்த ஒரு வார காலத்தில் மணியோடு பேச அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் அவ்வப்போது புன்னகையால் அவளுக்கு நம்பிக்கை தந்து கொண்டிருந்தான் மணி. அவன் தந்த நம்பிக்கையில் தளர்ந்திருந்த கிருஷ்ணவேணி மனம் தெம்படைந்தது.

நாளை காலை முதல் வண்டிக்கு அவள் கிளம்ப வேண்டும். அதற்காகத் தன் உடைமைகளைப் பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அறை கதவின் ஓசை கேட்க, திரும்பினாள்.

வேணியின் தந்தை ஆதிசேஷன் நின்றிருந்தார். “வேணி… நாளைக்குக் காலையில் கிளம்பறியாம்மா ? ” என்ற கேள்வியோடு அறை உள்ளே நுழைந்தவர் கட்டிலில் அமர்ந்து மகளின் முகம் கண்டார்.

“ஆமாம் அப்பா… காலையில் முதல் பஸ்ஸை பிடிச்சா தான் திருச்சிக்கு ஒன்பது மணிக்குள்ள போக முடியும். அங்கிருந்து பெங்களூர் பஸ் பிடிச்சா போய்‌ சேர நைட்டாகிடும். ” என்ற மகளைக் கண்களில் துளிர்த்த நீருடன் பார்த்தார் ஆதி.

அவரின் கண்ணீரை கண்ட வேணி, “அப்பா என்னாச்சு ? ஏன் அழறீங்க ? ” எனக்கேட்டு துடிக்க,

“இன்னும் ஒருநாள் சேர்ந்து இருந்திட்டு போ பாப்பான்னு சொல்ல முடியாத சூழ்நிலையில் நான் இருக்கறதை நினைக்கும் போது எனக்கே என் மேல வெறுப்பு வருது பாப்பா. “

“அப்பா… என்னப்பா இது ? ஏன் இப்படிப் பேசறீங்க ? நான் எங்க இருந்தாலும் உங்க பொண்ணு தான். ” என்ற வேணியின் முகம் பார்க்க முடியாமல் தலையைக் குனிந்து கொண்ட ஆதி,

“உனக்காக வாழனும்னு தான் நினைச்சேன். ஆனா… நான் செஞ்ச தப்பால உன் நிலையே தலைகீழா மாறிடுச்சே வேணிம்மா. அதை நினைக்கும் போது… நெஞ்சை அடைக்குது. “

“அப்பா… நான் அப்படி எல்லாம் நினைக்கலப்பா. இன்னும் சொல்லனும்னா நான் கூடத் தான் ரொம்ப ஆசைப்பட்டேன் புது அம்மா வேணும்னு. அதுல எந்தத் தப்பும் இல்லப்பா. அம்மா… நம்மை எப்படிப் பார்த்துக்கிட்டாங்களோ… அதே மாதிரி வர அம்மாவும் பார்த்துப்பாங்கன்னு நினைச்சது நம்ம தப்பு தான். ” என்ற வேணி “அவங்களுக்கும் புது வாழ்க்கையோட எதிர்பார்ப்பு இருக்கறதில் தப்பில்ல தானே ? ” என்று கேட்டு முடித்தாள்.

“ம்ஹூம்… உன் பாட்டி உன் மனசிலும் இந்த எண்ணத்தை நல்லாவே விதைச்சிட்டு போயிட்டாங்க. ” என்றவர் குரலில் சலிப்பு மேலோங்கியது.

“அப்படியில்லப்பா… இப்ப நானும் வளர்ந்துட்டேன். என்னாலையும் உணர்வுகளைப் புரிஞ்சிக்க முடியுது… அதைக் கணக்கீடு செஞ்சி பார்க்கும் போது… பதினேழு வயசில் சின்னம்மாவோட மன உணர்வுகள் எப்படி இருந்திருக்கும்னு இப்ப என்னால புரிஞ்சிக்க முடியுது. நான் அப்பவும் அவங்களை வெறுக்கல… இப்பவும் அவங்களல வெறுக்கல. இதை அவங்க புரிஞ்சிக்கிட்டா போதும். “

“புரிஞ்சிக்க முயற்சி கூடப் பண்ணாதவளை என்ன சொல்றது ? “

“எதுவும் சொல்ல வேண்டாம் அப்பா. அவங்க போக்குலயே போங்க. அதுதான் நல்லது. இல்லன்னா தங்கச்சியும் தம்பியும் தான் பதிக்கப்படுவாங்க. “

“நீ அவங்களைத் தம்பியா தங்கச்சியா ஏத்துகிட்ட… ஆனா அவங்க… “

“அவங்க என்ன பண்ணுங்க… அவங்க சின்னக் குழந்தைங்க. அம்மா சொல்றதை தானே குழந்தை கேட்கும். “

“எல்லாத்துக்கும் ஒரு பதில் தயாரா இருக்குமே உன்கிட்ட. யாரையும் விட்டுக் கொடுத்திட மாட்டியே… “

“நான் ஏன் விட்டுக்கொடுக்கனும். அவங்க என்னை வேண்டான்னு சொன்னாலும்… அவங்க தான் என் குடும்பம். அவங்களை நான் விட்டுக்கொடுத்தா… உங்களை விட்டுக்கொடுத்த மாதிரி. என் அப்பாவை நான் எப்பவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ” என்றவள் கண்கள் துளிர்க்க… அதை அவர் அறியாமல் துடைத்தாள்.

“பாப்பா… நீ படிச்சு முடிச்சு வரும்போது நீ வாழ ஒரு நிம்மதியான சூழ்நிலையை அமைச்சி தரது அப்பாவோட பொறுப்பு. சரியா ? “

“சரிப்பா… “

“காலையில் உன்னைத் திருச்சி பஸ் ஸ்டேன்டில் கொண்டு போய் விடச்சொல்லி மணிக்கிட்ட சொல்றேன். காலை பஸ்ஸுக்கு கிளம்பனும்னு நினைச்சு முன்னாடியே எழுந்திரிச்சு கஷ்டப்பட வேண்டாம். “

“அவரை எதுக்குச் சிரமப்படுத்தறீங்க அப்பா. நான் பஸ்ஸுலயே போயிகறேன். ஏற்கனவே ஒரு வாரமா நிக்கக் கூட நேரமில்லாம ஓடிக்கிட்டு இருந்தாரு. நாளைக்கும் காலையில் சீக்கிரம் எழுந்து கஷ்டப்பட வேண்டாம். கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். “

“பாரு டா அக்கறையை… ” என்ற ஆதி சிரிக்க, அவரைப் பார்த்த வேணி,

“அப்பா… இதுவரை அவரு உங்க மைத்துனரா இருந்திருக்கலாம்… ஆனா இனிமே மூத்த மாப்பிள்ளையாக்கும். அதுக்கான மரியாதையை நீங்களும் உங்க மனைவியும் கொடுக்கனும். ஆமாம் சொல்லிட்டேன். ” என்று கேலி செய்யும் தொனியில் கூறினாள்.

அவள் மனதின் வார்த்தைகள் கேலியாக வந்ததில் சந்தோஷப்பட்ட ஆதி, “சரிங்க பாப்பா… இனிமே மாப்பிள்ளையைக் கௌரவமா நடத்தறோம். இதுவரை செஞ்ச தப்பை மன்னிச்சிடுங்க. ” என்றார் அவரும் அதே கேலியுடன்.

அவரைத் தழுவிக்கொண்ட கிருஷ்ணவேணி, நிம்மதி பெருமூச்சு விட, அவள் தலையை வருடி கொடுத்தார் ஆதிசேஷன்.

இருவரிடமும் கனத்த மௌனம். ஆதிசேஷன் மனத்திரையில் அவரின் கடந்த கால நினைவுகள் விரிய தொடங்கியது.

***

மலர்கொடி இறந்த பின் மகளுக்காகவே வாழ்ந்த ஆதிசேஷனின் வாழ்வில் விசாலம் நுழைய காரணம் மணி தான். தூரத்து உறவான அக்கா ஒருவரின் இறுதி காரியத்திற்குச் சென்ற போதுதான் மணியையும் விசாலத்தையும் கண்டார் ஆதி. உறவினர்கள் மூலம் அவர்கள் இருவரும் இறந்து போன அக்காவின் மகனும் மகளும் என்பதைத் தெரிந்துக்கொண்டார். அந்த இறுதி யாத்திரையில் பொறுப்பற்று இருந்த அக்காவின் கணவனைக் கண்டு வெறுத்த ஆதி… மணியின் பொறுப்புணர்வை கண்டு வியந்தார்.

அவருடன் வந்திருந்த தம்பி முறையான உறவினரின் காதில் மணியைப் பற்றிக் கிசுகிசுப்பாக விசாரித்தார்.

“தம்பி ராஜா, இந்தப் பையன் இறந்து போனா அக்கா பையனா ? “

“ஆமாம் ஆதி அண்ணே… பாவம் இந்தச் சின்ன வயசில் இவனுக்கு இப்படி ஒரு கஷ்டம். “

“ஆமாம் அக்கா புருஷன் எங்க ? “

“அதோ அங்க குடிச்சிட்டு விழுந்து கிடக்கறான் பாரு. அவன்தான்… “

“அவனா ? அவன் மொட குடிகாரன் ஆச்சே ? எப்படி இவனுக்கு இந்த அக்காவை கட்டி வெச்சாங்க. “

“அது சரியா தெரியல அண்ணா… “

“இப்ப இந்தப் பையனோட நிலைமை என்னாகும் ? இவனோட மாமன் யாரு ? “

“மாமான் இல்ல அண்ணா…. இந்த அக்கா அவங்க அம்மா அப்பாவுக்கு ஒத்த புள்ள… போன வருஷம் தான் பெருசுங்க இரண்டும் அடுத்தடுத்துப் போய்ச் சேர்ந்தாங்க. அதுல இருந்து இந்த அக்கா ரொம்பவே மனசொடிஞ்சி போயிடுச்சு. “

“அப்ப இந்தப் பையனை நான் கூட்டிக்கிட்டு போய் வளர்த்துக்கறேன். “

“பையனை மட்டும் கூட்டிக்கிட்டு போனா… புள்ளை என்ன பண்றது ? “

“புள்ளையா ? “

“ஆமாம் அண்ணா… அதோ அங்க உட்கார்ந்து இருக்கு பாரு… அது இந்த அக்காவோட பொண்ணு. பேரு விசாலம். ” என்று ராஜா சுட்டிக் காட்ட… துணி வைக்கும் கல் மேல் வாடிய நிலையில் அமர்ந்திருந்த விசாலம் தெரிந்தாள்.

“இதுவும் பார்க்க சின்னப் புள்ள மாதிரி தான் இருக்கு. “

“சின்னப் புள்ளையா ? அண்ணே வயசுக்கு வந்த பொண்ணுனே… இந்தக் குடிகார அப்பனை வெச்சிக்கிட்டு இந்தப் புள்ளைங்க எப்படி வாழப்போகுதோ தெரியல. “

“…”

“அண்ணா… அக்காவை எடுக்க நேரமாகிடுச்சு. போய் ஆக வேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் வா. ” என்ற ராஜா எழுந்து சென்றிட, அவருக்கு உதவ ஆதிசேஷனும் சென்றார்.அந்த இறுதி யாத்திரையைப் பதிமூன்றே வயதான மணி தன் தோளில் சுமந்திருப்பதைக் கண்ட உறவுகள் அவன் சுமையைப் பகிர்ந்து அந்த யாத்திரையை நல்லபடியாக முடித்துக் கொடுத்தனர்.

அதன் பிறகு தன் ஊருக்கு வந்த ஆதி மணியைப் பற்றி மறந்தே போனார். ஒருநாள் தன் ஊரிலிருந்த தென்னந்தோப்பில் யதார்த்தமாக அவனைக் கூலி வேலை செய்யும் நபர்களுடன் பார்த்தவர்… “அடடா…. இந்தப் பசங்களைப் பத்தி மறந்தே போயிட்டேனே. ” என நினைத்து தேங்காய் உறித்துக் கொண்டிருந்த மணியை நெருங்கினார்.

“மணி… ” என்றவர் குரலுக்குத் திரும்பிய மணி அவரின் முகம் காண,”என்னைத் தெரியுதா ? ” எனக்கேட்டார் ஆதிசேஷன்.

“நீங்க…” என்றவன் கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு… “நீங்க அம்மாவோட இறுதி சடங்குக்கு வந்திருந்தீங்க. நினைவிருக்கு. ” என்று பதில் தந்தான்.

“நினைவிருந்தா சந்தோஷம். ” என்ற ஆதி… “என்னை மாமான்னு கூப்பிடு தம்பி. உன் அம்மா எனக்கு அக்கா முறை தான். “

“அப்படிங்களா… சரிங்க இனி மாமான்னே கூப்பிடறேன். “

“ஏன் தம்பி… நீ ஸ்கூலுக்குப் போறதில்லையா ? “

“இல்லங்க மாமா… அம்மாவுக்கு உடம்புக்கு சரியில்லாம போனதிலிருந்து நான் வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டேன். ஸ்கூலுக்குப் போறதை நிறுத்தி ஒரு வருஷம் இருக்கும்…”

“நான் உனக்கு உதவி பண்றேன். நீ படிக்கறியா ? “

சற்றே யோசித்த மணி… “என் அப்பா நல்லா குடிப்பாருங்க… நான் படிக்கப் போயிட்டா அக்காவை வேலைக்குப் போகச் சொல்லிடுவாரு. அம்மா சாகும்போது அக்காவை அப்பாவை நம்பி தனியா விட்டுடாதேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. அதனால என்னால படிக்கப் போக முடியாதுங்க மாமா. என்னை மன்னிச்சிடுங்க. “

“இந்தச் சின்ன வயசில் அக்கா மேல அக்கறை வெச்சி தன் வாழ்க்கையைப் பணயம் வெக்க துணிஞ்ச இந்தப் பையனுக்கு ஏதாவது நல்லது செய்யனும். ” என்று மனதில் நினைத்தவர்‌…

அவனிடம்… “தம்பி உனக்கு எப்பவாவது ஏதாவது உதவி தேவைப்பட்டா என்னை வந்து பாரு. என் வீடு அதோ தெரியுது பாரு அதுதான். ” என்றிட அவனும் மண்டையை ஆட்டிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தான்.

இது நடந்து இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் ஒருநாள் இரவு ஆதிசேஷனின் வீட்டுக் கதவு தட்டப்பட்டது.

“இந்த நேரத்தில் யாரு ? ” என்ற கேள்வியோடு வெளியே வந்து பார்த்தவர் முன் மூச்சிறைக்க நின்றிருந்தான் மணி.

“மணி… என்னப்பா இந்த நேரத்தில் வந்திருக்க… ” என்று கேட்டவர் அவனை நாற்காலியில் அமர வைத்து ஆசுவாசப்படுத்த முயன்றார்.

அவனோ அவரின் உபசரிப்பை கவனியாது… “மாமா… மாமா… அக்காவுக்கு அப்பா கல்யாணம் பண்ணப்போறாரு. அதுவும் அவரை மாதிரியே ஒரு குடிகாரனுக்கு. வந்து அக்காவை காப்பாத்துங்க மாமா… ” என்று இறஞ்சினான்.

“மணி அழாதே… நான் வரேன்… முதலில் கொஞ்சம் அமைதியாகு. எப்படி மூச்சு வாக்குது பாரு…இந்தா இந்தத் தண்ணியைக் குடி. “

“மாமா… நாளைக்குக் காலையில் முகூர்த்தம். அக்காவை கல்யாணத்துக்குத் தயார் பண்ணிக்கிட்டு இருக்காங்க. உடனே போகலன்னா… அக்கா வாழ்க்கையும் அம்மா வாழ்க்கை மாதிரியே பாழாகிடும். அம்மா என்கிட்ட கேட்ட ஒரே ஒரு வாக்குறுதி அக்காவை நல்லா பார்த்துக்கனுங்கறது தான். அதுவே முடியலன்னா… நான் செத்துப்போயிடுவேன். ” எனக்கூறிக் கதறினான் மணி.

அப்போது… “அப்படி எல்லாம் சொல்லக்கூடாதுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. அப்படிச் சொல்லாதீங்க… ” என்றொரு மழலை குரல் கேட்டது.

ஏழு வயது நிரம்பிய கிருஷ்ணவேணி தன் பாட்டி வைரத்தின் விரல் பிடித்தபடி நின்றிருந்தாள்.

“மணி… இது என் பொண்ணு வேணி… அப்புறம் இவங்க என் அம்மா வைரம். ” என்று ஆதி கூற,

வைரம் ஆதியிடம், “தம்பி… யாருப்பா இந்தப் பையன் ? இந்த இராத்திரி வேளையில் இப்படி மூச்சிறைக்க வந்திருக்கான். ” என்று கேட்க,

“அம்மா இது கோமதி அக்காவோட பையன் மணி. ” என்று பதில் தந்தார் ஆதிசேஷன்.

“கோமதியா ? நாலு மாசத்துக்கு முன்னாடி செத்து போன கோமதியோட பையனா ? “

“ஆமாம் அம்மா… “

“ஏன்ப்பா… இராத்திரி வேளையில் இப்படித் தனியா வந்திருக்க ? உன் கூட யாரும் வரலையா ? ” எனக் கேட்ட வைரம் அவள் தலையை நீவிக் கொடுக்க… வேணி டம்ளரில் இருந்த தண்ணீரை எடுத்து அவன் கைகளில் கொடுத்தாள்.

பால் மணம் மாறா வேணியின் அன்பில் தன் தாயை கண்ட மணி கண்ணீர் சிந்தினான். “அழாதீங்க… அப்பா உங்க பிரச்சனை எதுவா இருந்தாலும் தீர்த்திடுவாரு. ” என்ற வேணியின் குரலில் இருந்த நம்பிக்கை… அவனையும் நம்பிக்கை அடைய வைத்தது. அவள் கைகளிலிருந்த தண்ணீர் டம்ளரை வாங்கியவன் அதைப் பருகி தன்னை ஆசுவாசப்படுத்தினான்.

“மணி… கவலைப்படாதே… உங்க அக்கா கல்யாணம் நடக்காது. அதுக்கு நான் பொறுப்பு. ” என்றவர் “நான் உங்க ஊருல இருக்கற என் தம்பிக்கிட்ட பேசிட்டு வரேன். நீ அத்தை கொடுக்கற சாப்பாட்டைச் சாப்பிடு. ” என்றுவிட்டு தன் தாய் வைரத்தை பார்த்தார்.

“நான் பார்த்துக்கறேன் கண்ணு… ” என்ற வைரம் மணியைச் சாப்பிட வைக்க… அதற்குள் ஆதி ராஜாவை தொடர்பு கொண்டு பேசினார். மறுநாள் விடியற்காலை மணியின் வீட்டில் பஞ்சாயத்துக் கூடியது.

தொடரும்…