அத்தியாயம் 34 & 35

“எல்லாம் பக்காவா ரெடி பண்ணியாச்சு சிவா. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க. எங்களை மீறி அவனால சோஷியல் மீடியால எதுவும் போஸ்ட் செய்ய முடியாது” என்றான் பிரேம்.
“ஹப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு பிரேம். நான் வேற, என்ன தான் செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்னு எங்க எங்கேஜ்மெண்ட் போட்டோவை நேத்து தான் போட்டேன். இன்னிக்கு காலைல தான் தெரிஞ்சிது, யாரு மாப்பிள்ளைனு தெரிஞ்சிக்க நிறைய அவன் டிரை பண்ணிட்டு இருக்கான்னு. அப்ப பழி வெறியோட சுத்துறான்னு தானே அர்த்தம். இந்த நேரத்துல இந்த போஸ்ட்டை போட்டுடோமே. பலரையும் ரீச் ஆகுற என்னோட ஃபேன் பேஜ் வேற அவன் கைல இருக்கு. அதுல அன்னத்தை வருத்துறா மாதிரி எதுவும் போஸ்ட் போட்டுட கூடாதேனு தான் உங்ககிட்ட அவசரமா இதை செய்ய சொன்னேன்” என்றான்.
“உங்க கவலை புரியுது சிவா” என்று பிரேம் சொன்னதும்,
“அவன் அப்படி போடுறது கூட எனக்கு கவலை இல்லை பிரேம். நான் மீடியால தானே பத்து வருஷத்துக்கு மேல இருக்கேன். நிறைய பார்த்துட்டேன். தப்பே செய்யாம நிறைய திட்டு வாங்குவது அவமானப் படுத்தப்படுவது மீடியா பெர்சன்ஸ் தான். பப்ளிக்ல நடிக்க வந்தா நாமளும் பப்ளிக் பிராப்பர்டினு நினைச்சு எவன்னே தெரியாதவன்லாம் தப்பா பேசிட்டு சுத்துவான். பேர் புகழ் கிடைக்க நம்ம டீரீமை அச்சீவ் செய்ய நாம கொடுக்கிற விலை இதுனு நினைச்சிட்டு கடந்து போய்டுவேன். ஆனா இது என் மனைவியை தாக்கிச்சுனா அவளால இதெல்லாம் தாங்கிக்க முடியாது. அவ கஷ்டப்படுறதை என்னால தாங்கிக்க முடியாது. சாதாரண குடும்பத்து பொண்ணு அவ! மீடியா பத்தி தெரியாது. அவளை எதுவும் பாதிச்சிட கூடாதுனு தான் பயந்து போனேன்” என்றான்.
“உங்க அன்னம் கொடுத்து வச்சவங்க!” என்று சிரித்தவாறு சொன்ன பிரேம்,
“நீங்க கவலைப்படுற மாதிரி எதுவும் நடக்காது. நாங்க பார்த்துக்கிறோம்” என்றான்.
“தேங்க்யூ சோ மச் பிரேம்” என்று இணைப்பை துண்டித்தவன் தனது வேலையில் மூழ்கி போனான்.
****
காலை அலுவலகத்திற்குள் நுழைந்த இன்பா, மோகனை தனது இடத்திற்கு அழைத்தான்.
“ஏற்கனவே டீம்ல ஆட் குறைப்பு நடக்குறது தெரியும்லடா மோகன். அசோக்கைலாம் அதனால் தானே ரிலீஸ் செஞ்சோம். இப்போ இன்னும் சில பேரை ரிலீஸ் செய்ய சொல்லி மேனேஜ்மெண்ட்ல சொல்லிருக்காங்க. அதனால் இந்த வாரத்துல உன்னை ரிலீஸ் செஞ்சிடுவோம். நல்லா வேலை செய்ற பையனை அனுப்ப எனக்கும் மனசில்லடா அதான் உன்னை பென்ச்க்கு அனுப்புறதுக்கு பதிலா ஹெச் ஆர்க்கிட்ட ஏதாவது பிராஜக்ட்ல அசைன் செய்ய சொல்லிருக்கேன்” என்றான் இன்பா.
என்ன சொல்வதென தெரியாது திகைத்து முழித்த மோகன், “சரி இன்பா. ஷிப்ட் இல்லாத பிராஜக்ட்டா கிடைச்சா நல்லா இருக்கும்” என்று சொன்னான்.
“அது நீ ஹெச் ஆர்க்கிட்ட பேசிக்கோ மோகன். உன்னோட வேலைலாம் பாலாஜிக்கு சொல்லி கொடுத்திடு” என்றான்.
“சரி இன்பா. தேங்க்ஸ்” என்று வெளியே வந்தவன் தனது இருப்பிடத்திற்கு சென்றான்.
ராஜனுக்கு அழைத்த இன்பா, “ஹெச் ஆர்க்கிட்ட மோகனுக்கு பூனே பிராஜக்ட் ஏதாவது கொடுக்க சொல்லிருக்கேன். ஒரு வாரத்துல இவன் அங்க போய்டுவான். ஹெச் ஆர் அவன்கிட்ட நேரடியாக பேசிடுவாங்க” என்றான்.
காதலர் தினத்தன்று தனது அண்ணனிடம் பேசிய பிறகும் ராஜனால் அமைதியாக இருக்க முடியவில்லை.
அதனால்
மோகனை சென்னையை விட்டு வேறு கிளைக்கு இடமாற்றம் செய்ய இயலுமா என்று மறுநாள் இன்பாவிடம் கேட்டிருந்தான் ராஜன். ஏற்கனவே ராஜன் சொல்லி தான் அன்னத்தை சென்னையிலேயே வேறு கிளைக்கு மாற்றியிருந்தான் இன்பா. ஆக பிரச்சனையின் தீவிரம் அறிந்தவனாய் இதனை செய்ய ஒப்புக் கொண்டான்.
“தேங்க்யூ சோ மச் இன்பா” என்று ராஜன் நன்றியுரைக்க,
“நன்றிலாம் எதுக்கு! நங்கையை நான் பேசினதுக்கு அவளுக்கு கொடுத்த கஷ்டத்துக்கு இது பிராயச்சித்தமா இருக்கட்டும்” மன வலியோடு இன்பா உரைக்க,
“செஞ்ச தப்புக்கு பிராயச்சித்தமா மத்தவங்களுக்கு உதவி செஞ்சி எஸ்கேப் ஆகலாம்னு நினைச்சா கர்மா விட்டுடுமா என்ன? இதை நினைச்சு நிம்மதி இல்லாம நீங்கப்படுற இந்த மனவலி தான் அதுக்கான தண்டனை இன்பா. ஒன்ஸ் அகைன் தேங்க்யூ சோ மச் இன்பா” என்று இணைப்பை துண்டித்தான் ராஜன்.
நண்பர்களிடம் தனது பிராஜக்ட் ரிலீஸ் பற்றி தெரிவிக்க மோகன் இணையத்தை இயக்கிய போது தான் சிவாவின் நிச்சய போட்டோ அவனின் கண்ணில் பட்டது.
‘அடிப்பாவி! என் கூடவே சுத்திட்டு அவரையா வளைச்சு போட்டிருக்க! புளியங்கொம்பா பிடிச்சிட்டு தான் என்னை கழட்டி விட்டுட்டு போய்ட்டியா?’ மனதிற்குள் கறுவிக் கொண்டவனுக்கு இப்படி செய்து விட்டாளே என்ற வலியும் வேதனையும் அதே சமயம் இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆக வேண்டுமென்ற வெறியும் உருவானது.
****
மாலை ஏழு மணியளவில் நடனப்பள்ளியில் அந்த போட்டி குழுவினருடன் நடனப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிவாவின் கைபேசியில் அழைப்பு வந்த வண்ணம் இருக்க,
“யார்டா அது? எடுக்கலைனா விட வேண்டியது தானே. டார்ச்சர் செய்றாங்க” என்று சலித்தவாறே எடுத்து பார்த்தவனுக்கு மோகனின் எண்ணென்று தெரிந்ததும்,
“நான் பேசிட்டு வரேன். நீங்க பிராக்டிஸ் செய்யுங்க” என்று கூறியவாறு தனது அலுவலக அறைக்குள் சென்றான்.
அங்கு சென்று இருக்கையில் அமர்ந்த சமயம் மீண்டுமாய் மோகனிடம் இருந்து அழைப்பை வரவும், காதினில் ஒலிவாங்கியை மாட்டியவாறு அழைப்பை ஏற்றவனாய், “ஹாய் மோகன்! எப்படி இருக்க?” என்று கேட்டான்.
“நல்லா இல்லண்ணா! நல்லாவேஏஏஏ இல்லைண்ணா” என்று அவன் ராகம் போட்டு பேசியதிலேயே தண்ணீர் அடித்திருக்கிறானென புரிந்தது அவனுக்கு.
“இப்படி ஏமாந்து போய்ட்டீங்களேண்ணா நீங்களும்” என்று போதையில் அழுகை குரலில் பேசினான்.
“என்னடா என்ன ஏமாந்துட்டேன்னு சொல்ற” அவன் வாயை கிளறினான் இவன்.
“இந்த அன்னம் பொண்ணு உங்களை ஏமாத்துதுண்ணா. உங்ககிட்ட இருக்க பணத்துக்காக உங்களை ஏமாத்துட்டு இருக்குண்ணா” என்றான்.
“அன்னமா? அன்னம் என்னடா என்னை ஏமாத்துறா? உன்னோட ஃப்ரண்ட் தானே அவ?” என்று கேட்டான்.
“இல்லண்ணா இல்ல! அவ என் ஃப்ரண்ட்டே இல்ல! அவ நயவஞ்சகிண்ணா! ஏமாத்துக்காரிண்ணா” போதைக்குரலில்
உளறினான்.
“ஏன்டா என்னாச்சு?” ஒன்றும் தெரியாதவன் போல் இவன் கேட்க,
“என்னை லவ் பண்ணி ஏமாத்திட்டாண்ணா! என்னை தான்ணா அவ லவ் பண்ணா! நீங்க பணக்காரன்னு தெரிஞ்சதும் உங்களை வளைச்சு போட்டுட்டு என்னை கழட்டி விட்டுட்டாண்ணா” எனக் கூறியவாறு ஓவென அழுதான்.
“மனசு வலிக்குதுண்ணா! மனசு வலிக்குது. அவளை நான் சும்மா விட மாட்டேன். இதே வலியை அவளுக்கு தருவேன். என்னையாடி வேண்டாம்னு சொன்ன! எப்படி நீ கல்யாணம் செய்றனு பார்த்துடுறேன். சிவாண்ணா ஃபேன் நான்னு. நான் சொல்லி தானே உன்கிட்ட பேசினாரு. நான் சொன்னா சிவா அண்ணா கேட்பாரு. அண்ணா கேட்பீங்க தானே” என்றான்.
“நான் என்ன செய்யனும்னு சொல்றடா” என்று சிவா கேட்க,
“இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கணா! அவ உங்களுக்கு வேண்டாம். உங்க பணத்துக்காக தான் அவ உங்களை கல்யாணம் செஞ்சிக்கிறா! அவ நல்லா வாழ கூடாதுண்ணா நல்லா வாழ கூடாது. என்னையா வேண்டாம்னு சொன்ன! நீ நல்லா வாழக் கூடாதுடி! எல்லார் முன்னாடியும் உன்னை அவமானப்படுத்தலை நான் மோகன் இல்லடி”
போதையில் முன்னும் பின்னுமாக ஒரு மணி நேரம் அவன் உளறி தள்ள, அவனுக்கேற்றவாறு பேசி இணைப்பை துண்டித்த சிவாவின் முகத்தில் வஞ்ச புன்னகை.
“வலைல தானா வந்து தலைய விட்டுட்டியேடா மோகன்” என்று சிரித்தான் சிவா.
*****
மறுநாள் காலை சுந்தரேஸ்வரன், சுந்தரராஜன், சிவசுந்தரம் ஆகிய மூன்று சுந்தரங்களும் மோகனை சுற்றி நின்றிருந்தனர்.
“எங்க வீட்டு பொம்பளை பிள்ளைய மிரட்டுற அளவுக்கு தைரியம் எங்கிருந்துடா வந்துச்சு” என்று அவனை அறைய கையை ஓங்கிக் கொண்டு ஈஸ்வரன் முன்னேறி செல்ல, அவனை தடுத்து பிடித்த ராஜன், “இருங்கண்ணா போலீஸ் பார்த்துப்பாங்க” என்றவாறு அவனை தன்னோடு நிற்க வைத்து கொண்டான்.
கூனிக் குறுகி அமர்ந்திருந்தான் மோகன்.
மோகன்
வழக்கமான நேரத்திற்கு அலுவலகம் வந்த போது நுழைவு வாயில் அருகிலேயே அவனை மடக்கிய காவலர்கள் விசாரிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
யார் தன் மீது புகார் அளித்திருப்பது எனக் கேட்டவனுக்கு எந்த பதிலும் அளிக்காமல் தான் அழைத்து வந்திருந்தனர். அவன் மனத்தில் பெருத்த பயம் குடிக்கொண்டிருந்தது. மனதின் நடுக்கத்தை மறைத்தவாறு தான் உடன் சென்றான்.
அங்கு சென்று இவர்கள் மூவரை பார்த்ததும் தான், சிவாவின் வேலை இது என புரிந்தது.
“சார் இவங்க வீட்டு பொண்ணு தான் சார் என்னை லவ் பண்ணி ஏமாத்திடுச்சு. நியாயமா நான் தான் சார் புகார் கொடுத்திருக்கனும்” என்று மூன்று சுந்தரங்களை முன் வைத்து காவலரிடம் மோகன் கூறியது தான் ஈஸ்வரனுக்கு கோபத்தை விளைவித்து அடிக்க கை ஓங்க வைத்தது.
முந்தைய நாள் இரவு தனது கைபேசியை ரெக்கார்ட்டிங்கில் வைத்து விட்டு தான் மோகனிடம் பேசினான் சிவா.
அவனிடம் பேசியவற்றை சேமித்து வைத்தவன், அதனை ராஜனுக்கு அனுப்பினான்.
மோகன் மீது நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக இருந்த சிவா, அன்னத்தின் குடும்பத்தினரிடம் இதை பற்றி பேசிவிட்டு செயலில் இறங்க நினைத்தான். அதற்காக தான் ராஜனுக்கு அனுப்பினான். ராஜன் அதனை தனது அண்ணன் ஈஸ்வரனுக்கு அனுப்ப, அடுத்த ஒரு மணி நேரத்தில் மூவருமாக கான்ஃபெரன்ஸ்ஸில் பேசி அடுத்து செய்ய வேண்டியவைகளை திட்டமிட்டனர்.
அதன்படி அன்றிரவே சிவாவும் ராஜனும் சிவாவின் வக்கீலுடன் காவல் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
மறுநாள் காலை ஈஸ்வரன் சென்னைக்கு வந்ததும் அவனிடம் பேசலாம் எனக் கூறி விட்டனர்.
மீனாட்சியிடம் வியாபாரம் விஷயமாக அவசரமாக சென்னை கிளை அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமென கூறி தான் வந்திருந்தான் ஈஸ்வரன்.
விடியற்காலை ஈஸ்வரன் வந்திறங்கியதும் காவல் நிலையம் வந்தவர்கள், மோகனை அழைத்து வர வைத்து விட்டனர்.
“நேத்து நீ பேசுனதுலாம் ரெக்கார்ட் ஆகி இருக்கு. இப்ப அந்த பொண்ணுக்கு எது நடந்தாலும் அதுக்கு நீ தான் காரணம்னு நாங்க உள்ளே தூக்கி வைக்கிறதுக்கு ஏத்த சரியான ஆதாரம் இது. அப்படி நாங்க எதுவும் எடுக்க கூடாதுனா, இனி உன்னால இந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனையும் வராதுன்னு எழுதி சைன் போட்டு கொடுக்கனும். இப்ப எழுதி கொடுத்துட்டு அப்புறம் வச்சி செய்யலாம்னு நினைச்சா, உன்னை நாங்க வச்சி செஞ்சிடுவோம் பார்த்துக்க” என்றார் காவல் ஆய்வாளர்.
ஈஸ்வரன் அடிக்க வந்ததிலேயே அரண்டு போயிருந்த மோகன், கண்களில் நீர் தேங்க சிவாவை பார்த்தான்.
“என் பொண்டாட்டியை அவமானப்படுத்துவேன்னு என்கிட்டயே சொல்லுவியா நீ” என்று பல்லை கடித்தான் சிவா.
அவனை வெட்டி விடும் ஆத்திரம் வந்தது சிவாவிற்கு. “முருகா” என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“நீ செஞ்சது தப்புடா மோகன். அன்னத்துக்கு உன்னை பிடிக்கலை. நீ நிறைய பொய் சொல்லிருக்க அவக்கிட்ட! பொய்ல ஆரம்பிக்கிற உறவு நிலைக்காதுடா! உன்னோட குணாதிசயத்துக்கும் கொள்கைக்கும் ஏத்த மாதிரியான பொண்ணா பார்த்து கட்டிக்கோ! அதுக்கு அன்னம் கண்டிப்பாக செட் ஆக மாட்டா! உனக்கு பூனே பிராஜக்ட் கிடைக்கும். இங்க எழுதி கொடுத்துட்டு ஒழுங்கா பூனே போய் உன் வேலையை பாரு!” என்றான் ராஜன்.
இத்தனை பேரை மீறி அவன் அங்கு என்ன செய்து விட முடியும். பெரிய பின்புலம் இருக்கும் குடும்பமும் அல்லவே! தான் இவ்வாறு காவல் நிலையத்திற்கு வந்தது பற்றி பெற்றோருக்கு தெரிந்தால் எத்தனை துயர் அடைவார்கள் என அனைத்தையும் யோசித்து அமைதியாக அவர்கள் கூறியது போலவே எழுதி கொடுத்து விட்டு அவன் கிளம்பிய சமயம்,
“என்னோட ஃபேன் என்னோட ஃபேன்னு சொல்லுவியே! உண்மையான ஃபேன் யாரு தெரியுமா மோகன். அந்த நடிகரோட நடிப்பையும் நடனத்தையும் பார்த்து மட்டும் அட்ராக்ட் ஆகாம, அவரோட நல்ல குணங்களையும் செய்கைகளையும் போதனைகளையும் மனசுல எடுத்துக்கிட்டு நல்ல வழில தன்னோட வாழ்க்கையை அமைச்சிக்கிட்டு வாழுறான் பாத்தியா அவன் தான் உண்மையான ஃபேன். அப்படியான ஒரு இன்ஸ்பிரேஷனா நான் இருக்கனும்னு நினைச்சேன் மோகன். இப்படி ஒரு ஃபேன் கும்பல் எனக்கு தேவையே இல்லை. அந்த ஃபேன் பேஜை டெலீட் செஞ்சிடு” என்றவன் அவன் முகத்தையும் பார்க்காது வெளியே சென்று விட்டான்.
அந்த வாரயிறுதியில் பூனே சென்று விட்டான் மோகன்.
அத்தியாயம் 35
ஒரு வாரம் கடந்திருந்ந நிலையில் ஒரு
வார நாளில் வேலையை முடித்து விட்டு நேரே ராஜனின் வீட்டிற்கு சென்றாள் அன்னம்.
நங்கையை கண்டதும் ஓடிச் சென்று கட்டிப் பிடித்து கொண்டவள், “லவ் யூ அண்ணி” என்று கன்னத்தில் முத்தமிட்டாள்.
அவளை பார்த்தவாறு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை நந்திதா, ஓடோடி வந்து அன்னத்தின் துணியை பிடித்திழுத்தாள். தாயினருகில் நிற்பவளை தள்ள முயற்சித்தாள்.
“என்ன பாப்பா?” என்று சின்னவளை அவள் தூக்க முயல, அவளிடம் செல்லாது தாயிடம் சென்றவள் அவளின் கால்களை கட்டிக் கொள்ள, நங்கை குனிந்து குழந்தையை தூக்கினாள்.
உடனே நங்கையின் கன்னத்தில் முத்தமிட்ட சின்னவள், “பாப்பா தான் முத்தா தருவா” என்று மீண்டும் முத்தமிட்டாள்.
“பாரேன் இந்த குட்டிப்பொண்ண” என்று கன்னத்தில் கை வைத்து விட்டாள் அன்னம்.
“என்னா பொசசிவ் அம்மா மேல இந்த வயசுலேயே! உங்க அப்பா பாடு திண்டாட்டம் தான்” என்று அன்னம் கேலி செய்ய, “பேச்சை பாரு!” என்று அன்னத்தின் கையில் அடித்தவள்,
“அவன் இல்லாத போது தான் இந்த பாசமெல்லாம். சுந்தர் வந்துட்டா அப்பா அப்பானு அவன் பின்னாடியே சுத்துவா! அப்படி தானடா கன்னுக்குட்டி” என்று சின்னவளின் கன்னத்தை நங்கை கிள்ள, கிளுக்கி சிரித்தாள் அவள்.
“என்ன நடந்துச்சு? உன்ற புருஷன் பிரபோஸ் செஞ்சிட்டாரா? செம்ம ஹேப்பி மூட்ல இருக்க போலயே” அன்னத்தை நங்கை கேலி செய்ய,
“அட போங்க அண்ணி! எவ்ளோ பெரிய உதவி நீங்களும் அண்ணனும் எனக்கு செஞ்சிருக்கீங்க தெரியுமா! சொந்த பொண்ணை பாதுகாக்கிற மாதிரி என்னை காத்திருக்கீங்க அண்ணி! உங்களுக்கு ஆயுளுக்கும் நான் கடன்பட்டிருக்கேன் அண்ணி” என்று கண் கலங்கியவாறு உரைத்தாள்.
“ம்ப்ச் என்ன பெரிய வார்த்தைலாம் பேசிட்டு இருக்க” என்று நங்கை அவளை அதட்ட,
“பெரிய வார்த்தை பேசுற அளவுக்கு பெரியவ ஆகிட்டாளா அன்னம்! அப்படி என்ன பெரிய வார்த்தை பேசினா?” என்று கேட்டவாறு சமையலறையில் இருந்து வந்தார் நங்கையின் தந்தை சுரேந்தர்.
அவருக்கு மோகன் பற்றிய விவரங்கள் தெரியாது என்பதால் சின்னவளின் செய்கையை கூறி சிரித்து பேசியவாறு இருந்தனர்.
ராஜன் அந்நேரம் வேலையிலிருந்து வரவும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டனர்.
பால்கனியில் நங்கையுடன் நின்றிருந்தாள் அன்னம். ராஜன் தனது மகளுடன் விளையாடியவாறு அமர்ந்திருந்தான்.
“மோகனுக்கு பூனே பிராஜக்ட் கொடுத்து அனுப்பி விட்டாங்களாம் இன்பா. ராஜாண்ணா பேசி தான் செஞ்சதா சொன்னாங்க. இந்தளவுக்கு எந்த சொந்தக்காரங்க இந்த காலத்துல உதவுவாங்க அண்ணி. அதுவும் நீங்க நெருங்கின சொந்தம் கூட இல்லையே” அன்னம் நன்றியுணர்வுடன் பேச,
நங்கை அதற்கு ஏதோ பதில் கூற எத்தனிக்க, “நீ சிவாவுக்கு தான் நன்றி சொல்லனும்” என்றான் ராஜன்.
இவள் புரியாது அவனை பார்க்க, மோகனின் சோஷியல் நெட்வொர்க்கிங்கை கண்காணிக்க ஆள் வைத்தது முதல் மோகனின் கைபேசி பேச்சை ரெக்கார்ட் செய்து காவலரிடம் புகாரளித்து அவனிடம் பேசி எழுதி வாங்கியது வரை அனைத்தையும் கூறி முடித்தான் ராஜன்.
“நிஜமா இவ்வளோ செஞ்சாங்களா?” ஆனந்த அதிர்ச்சியுடன் அவள் கேட்க,
“ஆமா அன்னம். ஆனா அந்த பையனை நேர்ல பார்த்தப்ப சும்மா வாய் சவடால் விடுறவன் மாதிரி, பெரிசா எதுவும் செய்ற தைரியம் இல்லாத பையன் மாதிரி தான் தெரிஞ்சான் எனக்கு.
பார்க்க அப்படி தான் இருப்பாங்க. இப்படி ஆளுங்களை நம்ப கூடாதுனு ஈஸ்வரண்ணா சொன்னாங்க” என்றான் ராஜன்.
“என்னது ஈஸ்வரண்ணா வந்தாங்களா?” என ஆச்சரியமாய் அவள் கேட்க,
“ஆமா நம்ம குடும்ப பொண்ணோட பிரச்சனையை நீங்க பாருங்கனு சிவாவை தனியாவா அனுப்ப முடியும். ஈஸ்வரண்ணாக்கு தான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் கொடுத்துலாம் அனுபவம் இருக்குனு அவர்கிட்ட இந்த விஷயத்தை சொன்னேன். உடனே நானே வரேன்னு வந்துட்டாரு” என்றாள்.
“அய்யய்யோ அப்ப மீனாட்சிக்கு இது தெரியுமா?” என்று பதறியவாறு அன்னம் கேட்க,
“இல்லடா அன்னம். மீனு அண்ணி ரொம்ப இளகின மனசு உள்ளவங்க! இதெல்லாம் சொன்னா அவங்க தாங்க மாட்டாங்கனு சொல்லலைனு அண்ணா சொன்னாங்க” என்றான் ராஜன்.
“அப்பாடா! எனக்கும் அதே பயம் தான் இருந்துச்சு ராஜாண்ணா” என்றவள் மேலும் சில மணி நேரம் அவர்களுடன் பேசி விட்டு உறங்குவதற்காக விருந்தினர் அறைக்கு சென்று விட்டாள்.
“சாபமா போக இருந்த என் வாழ்க்கைக்கு வரமாக வந்திருக்கீங்க சிவசு அத்தான். உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்குது சிவசு அத்தான்” என்று அவனுக்கு மெசேஜ் செய்து விட்டு நெடு நாளைக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள் அன்னம்.
****
இரண்டு மாதங்களுக்கு பிறகு திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்த வண்ணமிருக்க, திருச்செந்தூர் முருகன் கோவிலிற்கு சென்று தனது வேண்டுதலை முடித்து விட்டு வந்திருந்தான் சிவா.
மோகனின் பிரச்சனைக்கு பிறகு சோஷியல் மீடியாவை உபயோகிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டாள் அன்னம்.
இணையத்தை உபயோகித்து வாட்ஸ்அப்பையும் சிவாவின் யூ டியூப் சானலை மட்டும் பயன்படுத்தி வருகிறாள்.
அந்த வாரயிறுதி நாளில் சனிக்கிழமை காலை வேளையில் ருத்ரனின் வீட்டில் அமர்ந்திருந்தான் சிவா.
சிவா மாலை கழட்டியப்பின் அவனுடன் வெளியே செல்ல திட்டமிட்டு அவனை வர சொல்லியிருந்தாள் அன்னம்.
“உங்க வேலைலாம் எப்படி போகுது சிவா?” சிவாவிடம் பேசிக் கொண்டிருந்தார் ருத்ரன்.
“ரொம்ப நல்லா போகுது பெரியப்பா. சூப்பர் டேன்சர் ஷோல ஒரு ஜோடிக்கு நான் தான் கொரியோகிராப் செய்றேன்” என்றான்.
“அது இன்னும் கொஞ்ச நாள்ல முடியுதுனு சொன்னாங்களே” என அவர் கேட்க,
“ஆமா பெரியப்பா! கல்யாணத்துக்கு அடுத்த நாள் தான் ஃபைனல்ஸ்” என்றான்.
“அப்ப கல்யாணம் முடிஞ்ச உடனே சென்னைக்கு கிளம்பிடுவீங்களா?” எனக் கேட்டார்.
“ஆமா வந்தாகனும்” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே வந்து நின்றாள் அன்னம்.
திருமணம் நிச்சயமான நாளில் இருந்து அன்று தான் சிவாவை தாடி இல்லாது பார்க்கிறாள் அன்னம்.
ரசனையாய் அவனை பார்த்தவள், “செம்ம சூப்பரா இருக்கீங்க அத்தான்” என்று அவனுக்கு மட்டுமே கேட்குமாறு உரைத்து விட்டு அருகில் அமர்ந்து விட்டாள். வெட்கை புன்னகை சிந்தினான் அவன்.
அனைவருமாய் ஒன்றாக அமர்ந்து காலை உணவை உண்டப்பின், “சரிங்க மாமா நாங்க கிளம்புறோம்” என்றாள் அன்னம்.
“பார்த்து பத்திரமா போய்ட்டு வாங்க. சீக்கிரம் வந்துடுங்க” என்று வழியனுப்பி வைத்தார் ருத்ரன்.
சிவாவின் இருச்சக்கர வாகனமான புல்லட் வண்டியில் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் அன்னம்.
வாகனத்தை இயக்கியவனாய், “முதல்ல எங்க போகனும் வெள்ளப்புறா” எனக் கேட்டான்.
“கல்யாண ஷாப்பிங் தானே பிளான் செஞ்சிருக்கோம்! டி நகர் போகலாம். நங்கை அண்ணி கூட ஒரு தடவை போய்ருக்கேன்” என்றாள் அன்னம்.
“அப்படியே அஞ்சலி ஜீவனுக்குலாம் ஒரு டிரஸ் எடுத்து கொடுத்துடலாம் அன்னம்” என்றான் சிவா.
“ஓ ஓகே எடுக்கலாம். ரொம்ப நாளா கேட்கனும்னு நினைச்சேன். உங்களுக்கு அஞ்சலியை எப்ப எப்படி தெரியும்? அஞ்சலி உங்களை அண்ணானு தானே கூப்பிடுறாங்க. அப்புறம் ஏன் எல்லாரும் உங்களையும் அஞ்சலியையும் லவ்வரா சேர்த்து வச்சு பேசினாங்க. எங்க ஆபிஸ்ல உங்க ஷூட்டிங் நடந்தப்ப அங்க வேலை செய்றவங்களே அப்படி பேசினாங்க தெரியுமா” ஆதங்கத்துடன் கேட்டிருந்தாள் அன்னம்.
“ஆக்சுவலி அஞ்சலி என்னை சிவானு தான் கூப்பிடுவா! ரொம்ப சாதாரண குடும்பத்து பொண்ணு. டேன்ஸ் மேல் இருக்க ஆசைனால பேக் டான்சரா இருந்தவ அஞ்சு வருஷமா என்கிட்ட அசிஸ்டென்ட்டா இருக்கா! எல்லா ஃபங்ஷன்லயும் டேன்ஸ் ஷோ எல்லாத்துலயும் என் கூடவே தான் இருப்பா. அவ இருந்தா என் வேலையை பத்தி நான் கவலைப்படவே வேண்டாம். அந்தளவுக்கு டெடிகேட்டா வேலை செய்வா. அதனால் நான் அவகிட்ட பாஸ் மாதிரியே நடந்துக்க மாட்டேன். ஃப்ரண்ட்லியா தான் இருப்பேன்.
உங்க ஆபிஸ்ல ஷூட் செஞ்ச அந்த சீரியல்ல அவளுக்கும் ரோல் இருக்கு. நீ சீரியலையே பார்த்திருப்பியே அது தான் அவளுக்கு முதல் தடவை ஆக்டிங். அதனால நான் அவ சீன் ஷூட்டிங் இருக்கும் போது நானும் வருவேன் அவளுக்கு ஹெல்ப் பண்ணுவேன். என் ஷூட்டிங் நடக்கும் போது அவ இருப்பா.
அந்த ஷூட்டிங் டைம்ல இரண்டு பேரும் சேர்ந்து நிறைய ரீல்ஸ் போட்டிருக்கோம். டப்ஸ்மேஷ் மாதிரி ரீல்ஸ் தான். நீ கூட பார்த்திருப்பியே! ஹீரோ ஹீரோயின் பேசுற சினிமா டயலாக்ஸ் அண்ட் சின்ன சின்ன டேன்ஸ் கிளிப்ஸ்லாம் என்னோட சேர்ந்து எடுத்துட்டு அவளோட இன்ஸ்டா பேஜ்ல என்னை டேக் செஞ்சி ரீல்ஸ் போடுவாள். இப்படி இரண்டு பேரும் ஒன்னா இருக்கனால எல்லாரும் அப்படி பேச ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி எல்லாரும் எங்களை ஜோடியா சேர்த்து பேசவும் என்னை அண்ணானு கூப்பிட ஆரம்பிச்சிட்டாள்” என்றான்.
இத்தனை நாட்களில் பல முறை அன்னம் நடனப்பள்ளிக்கு சென்றிருக்கிறாள். செல்லும் பொழுதெல்லாம் அத்தனை இனிமையாக பழகுவாள் அஞ்சலி. சிவாவின் குணாதிசயங்களையும் இத்தனை நாட்களில் அறிந்த வகையில் அவளால் சிவா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடிந்தது.
“அன்னிக்கு அவங்களை தூக்கிட்டு வந்தீங்களே! அவங்க கால்ல எதுவும் அடிபட்டுடுச்சா?” எனக் கேட்டாள் அன்னம்.
“ஆமா கால்ல சுளுக்கு பிடிச்சிருச்சு. அன்னிக்கு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய்ட்டு வீட்டுல விட்டுட்டு தான் போனேன்” என்றான்.
“அவங்க எங்க தங்கியிருக்காங்க. யார் கூட இருக்காங்க” எனக் கேட்டாள்.
“இங்க தனியா ரூம் எடுத்து தான் தங்கியிருக்கா. மீடியால வேலை செய்ற பெண்கள் சில பேர் கூட தங்கியிருக்காங்க. ரூம் ஷேரிங் மாதிரி தான். அவளோட அம்மா அப்பாலாம் திருச்சில இருக்காங்க” என்றான் சிவா.
அதன் பிறகு அவள் ஏதும் கேட்காமல் அமைதியாக வர, “நீ ரொம்ப யோசிக்காத அன்னம். அஞ்சலி நம்ம மேரேஜ் வரைக்கும் தான் நம்ம டேன்ஸ் ஸ்கூல்ல வேலை பார்ப்பாள். அதுக்கு பிறகு ஜீவன் முழுசா பார்த்துப்பான். அஞ்சலிக்கு பதிலா வேறொருத்தரை வேலைக்கு எடுத்துருக்கேன்” என்றான் சிவா.
“இல்ல இல்ல அவங்க இருக்கிறதுல எனக்கு எதுவும் பிரச்சனை இல்லை” என்று அன்னம் ஏதோ கூற,
“உனக்கு பிரச்சனை இல்லை. ஆனா வெளில பேசுறவங்கனால் நமக்குள்ள பிரச்சனை வந்துட கூடாதுனு அவ நினைக்கிறா” என்றான்.
“ஓ ஆனா அவங்க உங்களை சிவான்னே தான் கூப்பிட்டுட்டு இருந்திருக்கனும். திடீர்னு அண்ணாக்கு கூப்பிட்டா தான் எல்லாருக்கும் சந்தேகம் வரும்” என்றாள் அன்னம்.
“நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன். அவ கேட்கலை” என்றான்.
அவள் மீண்டும் அமைதியாகி போனாள்.
“என்ன அமைதியாகிட்ட! வாட் இஸ் ஈட்டிங் யுவர் ஹெட்” என்று கேட்டான் சிவா.
“நிஜமாவே நீங்க இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணது இல்லையா? அன்னிக்கு கேட்கும் போதும் எதுவும் சொல்லலை. சின்ன வயசுலேயே மீடியாக்குள்ள வந்துட்டீங்க. அதுக்கு பிறகு தான் காலேஜ் கரஸ்ல படிச்சிருக்கீங்க. கிரஷ்லாம் இருந்திருக்கும் தானே” என்று கேட்டாள் அன்னம்.
— தொடரும்