அத்தியாயம் – 3

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 3

நினைவுலகில் மூழ்கியிருந்த வேணியைக் கலைத்தது கதவு தட்டும் ஓசை. வழிந்தோடியிருந்த கண்ணீரை தன் இரு கரங்களால் அழுத்த துடைத்த கிருஷ்ணவேணி எழுந்து‌ கதவருகே சென்றாள். தாழ்பாளை இயக்கி கதவை திறந்தவள் எதிரே நின்றிருந்தார் ஆதிசேஷன்.

“அப்பா… ” என்றழைத்த படியே ஆதியின் மார்பில் தன் தலையைச் சாய்த்தாள் வேணி.

“வேணிம்மா… அழாதடா… பாட்டிக்கு வயசாகிடுச்சு இல்ல… அதான் இப்படி. “

“ஆனா… ஏன் ப்பா… இப்பவே போகனும். பாட்டியும் போயிட்டா எனக்கு யார் துணையா இருப்பான்னு பாட்டி ஏன் யோசிக்கவே இல்ல ? “

“அப்படி எல்லாம் இல்லடா கண்ணு… ” என்றவர் மகளை அணைத்த படி அறை உள்ளே சென்றார்.

“இல்லப்பா… பாட்டி என்னைப் பத்தி யோசிக்கல. அதான் அம்மா மாதிரியே பாட்டியும் பாதியிலயே போயிட்டாங்க. “

“அப்படி எல்லாம் சொல்லாத பாப்பா… பாட்டி உன்னைக் கோழையா வளர்க்கல… நல்ல தைரியமான‌ பொண்ணா தானே வளர்த்திருக்காங்க. அந்தத் தைரியத்தில் தான் பாட்டி போயிருக்காங்க. நீ இப்படி மூலையில் உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருந்தா… பாட்டியோட வளர்ப்பு சரியில்லன்னு ஆகிடாதா ? “

“அப்படிச் சொல்லாதீங்க அப்பா. நான் தைரியமா தான் இருக்கேன். பாட்டிக்கு திடீர்னு இப்படி நடக்கும்னு நான் யோசிச்சி கூடப் பார்க்கல… அதான். ” என்றவள் தந்தையின் மடியில் தலையைச் சாய்த்தாள்.

“பாப்பா… பாட்டியும் சரி, உன் அம்மாவும் சரி… உன்னை விட்டு எங்கையும் போக மாட்டாங்க. அவங்க நினைப்பு உன்னைச் சுத்தி சுத்தி தான் வரும். “

“எனக்குத் தெரியும் அப்பா… அவங்க என் மேல வெச்சிருக்கற பாசம் அப்படி. அவங்க இழப்ப என்னால ஏத்துக்க முடியல. அதான் கொஞ்சம் அசட்டுத்தனமா பேசிட்டேன். “

“அப்பாவுக்கு உன்னைப் பத்தி தெரியும் டா. நீ விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்ல. உனக்கு ஆறுதல் சொல்ல தான் அப்பா வந்தேன். நீ பேசு… இன்னும் உனக்குள்ள இருக்கற ஆதங்கத்தை எல்லாம் கொட்டி தீர்த்துடு. ” என்றவர் அவளின் கேசம் வருடி கொடுக்க… அதில் தன் கவலைகளைக் கொஞ்ச நேரம் தொலைத்தாள் கிருஷ்ணவேணி.

சிறிய இளைபாறலுக்குப் பின் வேணி, “அப்பா… ” என்றழைத்தாள்.

“சொல்லுடா… “

“அது… இந்தக் கல்யாணம்… ” என்றவள் பாதியில் நிறுத்த… அவள் கூறாமலேயே அவள் மனம் அறிந்த ஆதி,

“மணி உன் சித்தி மாதிரி இல்லடா. ரொம்ப நல்ல பையன். ” என்று விளக்கினார்.

“ஆனா… எனக்கு இன்னும் படிப்பு முடியல ப்பா… அதை முடிக்க விடுவீங்களா ? “

” இப்ப யாரு உன்னைக் காலேஜ் போக வேண்டான்னு சொன்னது. பாட்டியோட காரியம் முடிஞ்சி சாமி கும்பிட்டதும் நீ உன் படிப்பை முடிக்கக் காலேஜ் கிளம்பிடலாம். “

“அப்பா… அது… அவரு… அதான் மணி மாமா… இதுக்குச் சம்மதிப்பாரா ? சின்னம்மா என்ன சொல்லுவாங்க ? நான் ஹாஸ்டல் போய்த் தானே படிக்கனும். அவங்களுக்கு அது… “

“அதெல்லாம் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ உன் சின்னம்மாவை நினைச்சு எதையும் யோசிக்காதே. மணி என் பேச்சை மீற மாட்டான். ” என்றவர் கூறிக் கொண்டிருக்கும் போதே அங்கே வந்தாள் மிதுளா. ஆதி மற்றும் விசாலத்தின் மகள்.

“அப்பா… அம்மா கூப்பிடறாங்க. ” என்றவள் குரலுக்குத் திரும்பிய ஆதி,

“உன்னோட கொஞ்ச நேரம் இருந்துட்டா… உடனே அவளுக்கு மூக்கு வேர்த்திடும். ” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு வெளிப்படையாக… “வரேன்னு சொல்லு மிது… ” என்றார்.

அழுது அழுது வீங்கி இருக்கும் தன் தமக்கையின் முகத்தை வெறித்துப் பார்த்த படியே அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் மிதுளா.

“வேணி… பாட்டியோட உடம்பை நல்லபடியா அனுப்பி வெச்சாச்சு. அதனால நீ குளிச்சிடு. அப்பா உனக்குச் சாப்பாடு கொடுத்தனுப்பறேன். ” என்றபடியே அந்த அறைவிட்டு நீங்கினார் ஆதிசேஷன்.

செல்லும் அவரைப் பார்த்த படியே அமர்ந்திருந்த வேணி… தன் கைப்பேசி அலறுவதை அறிந்து அதை எடுக்கச் சென்றாள். கைப்பேசியின் ஒளித்திரையில் ஒளிர்த்தது… அவள் தோழி சிநேகாவின் பெயர்.

தொண்டை வரை இருந்த துக்கத்தைக் குறைக்க ஒரு ஜீவன் கிடைத்துவிட்டதைக் கண்டதும் இதழ் மெல்ல விரிந்து நிம்மதி பெருமூச்சை வெளியேற்றியது. தொடு திரையில் தன் விரல் கொண்டு அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள் வேணி.

“ஹலோ க்ரிஷ்… என்னடி ஆச்சு ? ” என்று கேட்டது எதிர்புறம்.

“எல்லாம் முடிஞ்சு போச்சு சிநேக்… பாட்டி என்னை விட்டுட்டு போயிட்டாங்க. ” என்ற வேணியின் குரல் கேவியது.

“ஓ… மை காட்… ” என்ற சிநேகா… கொஞ்சம் இடைவெளி எடுத்து, “க்ரிஷ், பாட்டிக்கு வயசாகிடுச்சு இல்ல அதான்… விடு… வருத்தப்படாத… நாங்க எல்லாம் உன் கூடத் தான் இருக்கோம். ” என்று தைரியம் தரும் வகையில் பேசினாள்.

“என்னால முடியல சிநேகா… அழுகை அழுகையா வருது. எனக்கு இந்த வீட்டில் இருந்த ஒரே உறவு என் பாட்டி தான். இப்ப அவங்களும் இல்ல… இனி நான் என்ன பண்ணுவேன் ? “

“நீ ஏன் அங்க இருக்கறதை பத்தி யோசிக்கற ? உனக்குன்னு தனி வாழ்க்கை இருக்கு. இந்தப் பரந்து விரிச்ச பூமி இருக்கு. நான் இருக்கேன். நாம படிக்கற படிப்புக்கு நல்ல வேலை கிடைக்கும். பாரின் போற வாய்ப்பு இருக்கு. அங்க எல்லாம் நாம சேர்ந்து போகலாம் க்ரிஷ்… உனக்கான ஒரு நல்ல லைப் பார்ட்னர் கிடைக்கற வரை நான் உன் கூடவே இருப்பேன். ” எனக்கூறி சிநேகா உற்சாகப்படுத்த முயல,

“அப்ப லைப் பார்ட்னர் கிடைச்சிட்டா நீ என்னை விட்டு போயிடுவியா ? ” என்று எதிர் கேள்வி கேட்டு மடங்கினாள் வேணி.

“பைத்தியம் மாதிரி கேட்கற பார்த்தியா ? உனக்குக் கல்யாணம் முடிஞ்சா… நாம வேற வேற வீட்டில் இருப்போம்… ஆனா என்னிக்கும் உன்னைத் தனியா விடமாட்டேன். “

“ம்ச்… “

“என்னாச்சு ? என் மேல நம்பிக்கை இல்லையா ? “

“இல்ல சிநேக்… எனக்கு இப்ப கல்யாணம் ஆகிடுச்சுன்னு சொன்னா நீ என்ன பண்ணுவ ? “

“விளையாடாதே க்ரிஷ்… “

“விளையாடல சிநேக்… “

“என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு பேபி… “

“பாட்டி என் மொத்த கனவுக்கும் வேட்டு வெச்சிட்டு போயிட்டாங்க. அதுக்கான காரணம் புரியாம குழப்பத்தில் இருக்கேன். “

“என்ன சொல்றன்னு புரியல… “

“சிநேக்… என்னை என் தாய்மாமா அதான் என் சின்னம்மாவோட தம்பி மணிக்குக் கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. “

“என்ன ? ” எனக்கேட்டு அதிர்ந்தாள் சிநேகா.

“ஆமாம்… விடியக்காலை தான் நான் ஊருக்கு வந்து சேர்ந்தேன். நான் வந்து பார்த்தப்போ பாட்டியால பேச முடியல. ஆனா… பாட்டியோட கடைசி ஆசை நான் மணி மாமாவை கல்யாணம் பண்ணிக்கனுங்கறதுன்னு அப்பா சொன்னாரு. அப்பா அப்படிக் கேட்கும் போது அதை மறுத்து பேச என்னால முடியல. நானும் சரின்னு சொல்லிட்டேன். பாட்டி முன்னாடி எனக்கும் அவருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுச்சு. கல்யாணம் முடிஞ்ச பத்து நிமிஷத்துக்குள்ள பாட்டியோட கண்கள் மூடிடுச்சு. ” என்ற கிருஷ்ணவேணியின் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது.

“க்ரிஷ்… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல. “

“… “

“நீ இதுக்குச் சம்மதிச்சிருக்கக் கூடாது. உங்க மாமா… படிச்சவரா ? அவரைப் பத்தி உனக்கு என்ன தெரியும் ? அவரும் உன் சித்தி மாதிரி இருந்தா உன் வாழ்க்கை என்னாகறது ? உனக்குன்னு ஒரு எதிர்காலம் இருக்கு. படிச்ச பொண்ணு நீ… “

“அப்பாவை எதிர்த்து பேச முடியல சிநேக். “

“போடி… “

“நீயும் கோச்சிக்கிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லு. “

“நான் கோச்சிக்கல க்ரிஷ். ஆதங்கமா இருக்கு. காலேஜ் டாப்பர் நீ… ஒரு கிராமத்து ஆளை கட்டிக்கிட்டு அந்த ஊருல என்ன பண்ண முடியும். உன்னோட டிசைனிங் ஸ்கில் எத்தனை பெரிய உயரத்தை நீ அடைய உறுதுணையா இருக்கும் தெரியுமா ? அதை ஒரு நொடியில் தூக்கி போட்டுட்டியே… “

“… “

“சரி… அந்த ஆளு… அதான் உன் மாமா… அவரைப் பத்தி சொல்லு… “

“அவரைப் பத்தி என்ன சொல்றது ? “

“ம்… அவரு என்ன படிச்சிருக்காரு ? குணம் எப்படி ? எங்க வேலை செய்யறாரு ? இதைப் பத்தி சொல்லு. “

“அது எதுவும் எனக்குத் தெரியாது சிநேக். “

“ஏய்… என்ன விளையாடறியா ? அவரு சின்ன வயசில் இருந்து உங்க வீட்டில் இருக்கறதா தானே சொன்ன ஞாபகம் எனக்கு இருக்கு. இப்ப எதுவுமே தெரியாதுன்னு சொல்ற… “

“சிநேக்… நான் இப்ப மட்டும் ஹாஸ்டல் இல்ல. ஐஞ்சாவது படிக்கும் போதிருந்தே ஹாஸ்டல் தான். ஸ்கூலிங்க ஊட்டியில்… இப்ப காலேஜ் பெங்களூருல… நான் ஊருக்கு வரதே வருஷத்துக்கு ஒரு தரமோ இரண்டு தரமோ தான். அப்பவும் மாமாவோட பேசினது இல்ல. ஏன்… அப்பாவோட பேச கூட அதிக வாய்ப்பிருக்காது. பாட்டி மட்டும் தான் என்னோட பேசுவாங்க. அதனால அவரைப் பத்தி தெரிஞ்சிக்க முடியல. “

“அவரோட பேசினதே இல்லையா க்ரிஷ் ? “

“ம்ச்… “

“சரி உன் பாட்டி அவரைப் பத்தி சொல்லியிருப்பாங்க இல்ல… “

“ம்ச்… நான் எதுவும் கேட்டுக்கிட்டது இல்ல. “

“சரி… இப்ப போய்ப் பேசு. அவருக்கிட்ட உன்னோட கனவை பத்தி சொல்லு. “

“…”

“என்ன அமைதியா இருக்க ? “

“எனக்குத் தயக்கமா இருக்குக்குச் சிநேக். “

“தயங்கினா நீ காலேஜ் வர முடியாது க்ரிஷ். “

“இல்ல சிநேக்… அப்பா நான் காலேஜ் போகலான்னு சொல்லிட்டாரு. “

“நிஜமாவா ? “

“ம்… இப்ப தான் கேட்டேன். பாட்டிக்கு திதி கொடுக்கற சடங்கு முடிஞ்சதும் நீ காலேஜ் போகலான்னு சொன்னாரு. “

“தேங்க் காட்… ” என்ற சிநேகா, “க்ரிஷ் நீ முதலில் கிளம்பி இங்க வந்திடு. அப்புறம் உன் மாமாவை எப்படிக் கரைக்ட் பண்றதுன்னு யோசிக்கலாம். “

“ம்… “

“சரி… அழுதுக்கிட்டே இருக்காம… போய்க் குளிச்சிட்டு சாப்பிடு. நான் இராத்திரி கூப்பிடறேன். “

“ஓகே… சிநேக்… “

“பை… டேக் கேர். ” என்ற சிநேகா அழைப்பை துண்டிக்க… அணைந்த கைப்பேசியை வெறித்த படியே அமர்ந்திருந்தாள் கிருஷ்ணவேணி.

கதவு லேசாகத் தட்டும் சத்தம் கேட்க திரும்பி பார்த்தவள்… கதவருகே மாமா மணி நின்றிருப்பதைக் கண்டு துணுக்குற்றாள்.

“இவரு எப்ப வந்தாருன்னு தெரியலையே ? ” என மனதில் நினைத்தவள்… மௌனம் காக்க அவனே கேட்டான்… “உள்ள வரலாமா ? ” என்று.அவன் குரல் கேட்டு நிமிர்ந்தவள்… “வாங்க… ” என்றிட, கையில் அவளுக்கான உணவு தட்டோடு அறை உள்ளே நுழைந்தான் மணி.

“சாப்பாடு கொண்டு வந்திருக்கேன். காலையில் இருந்து நீ எதுவுமே சாப்பிடல. அதான் கொண்டு வந்திருக்கேன். ” என்றவன் அவள் முன் சிறிய மேஜையை இழுத்துவிட்டு அதில் தட்டை வைத்தான்.

அவள் சாப்பிடாமல் யோசனையுடன் இருக்க, “திடீர்னு கல்யாணம் நடந்ததால நீ குழம்பி போயிருப்பன்னு தெரியும். அதான் மாமா கிட்ட கேட்டுட்டு நானே உன்னைப் பார்க்க வந்தேன். ” என்ற மணி அவள் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

“வேணி… உன்னோட கனவுகளுக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன். எனக்குத் தெரியும் நீ காலேஜ் படிக்கற. உன் படிப்பை நினைச்சு இப்ப நீ கவலையோட இருப்பன்னு. நீ தாராளமா படிக்கப் போகலாம். ” என்றவன் கூற,

“தேங்க்ஸ்… ” என்றவள் மெல்ல சகஜ நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தாள்.

“வேணி… ” என்றவன் ஏதோ கூற எத்தனிக்க… அவன் இடையில் செருகி வைத்திருந்த சிறிய ரகக் கைப்பேசி அலறியது.

“ம்ச்… ” என்ற சலிப்போடு அதை எடுத்தவன் அழைப்பது தன் மாமா என்பதை அறிந்ததும்… “மாமா தான் கூப்பிடறாரு. நான் போகனும்… அப்புறம் பேசலாம். நீ எதை நினைச்சும் கவலைப்படாம சாப்பிட்டு‌ தூங்கு. ” என்றுவிட்டு அந்த அறையை விட்டு நீங்கினான்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத வேணி… அவன் கொண்டு வந்த உணவை உண்ண ஆரம்பித்தாள். உணவின் இடையில் அவன் பற்றிய யோசனை அவளை ஆட்கொண்டது.

ஆள் பார்க்க மாநிறத்திலும் நல்ல உயரத்திலும் இருப்பான். கருகரு மீசை.. சில நாட்கள் சேவ் செய்யப்படாத தாடி, நல்ல அடர்த்தியான கேசம், அதில் நல்ல தேங்காய் எண்ணையும் விளக்கெண்ணையும் கலந்து பூசி வடுகெடுத்து வாரி இருக்கும் விதம், கழுத்தில் முறுக்கு சங்கிலி, கையில் ஒரு காப்பு, பழுப்பு நிற வேட்டி எப்போதும் அணிந்திருக்கும் எளிய ரக டீசர்ட் அவ்வப்போது அணிவும் பருத்தியாலான சட்டை, வீடு, தோட்டம், வயல், ரைஸ் மில் என்று பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருப்பான்.

“எப்பவும் இந்த வீடே கதின்னு இருக்கற இவரையே சித்தி மதிக்க மாட்டாங்க. இதுல இவரு பொண்டாட்டியான என்னை எப்படி மதிப்பாங்க. இனி என் வாழ்க்கை எப்படி இருக்குமோ தெரியலையே ? ஒருவேளை நான் இவரை நல்லா பார்த்துப்பேன்னு நினைச்சு தான் பாட்டி இவரைக் கட்டிக்கச் சொல்லியிருப்பாங்களோ ? நாம வேலைக்குப் போய்ச் சம்பாதிச்சா… இவரை இந்த இடத்தில் இருந்து அழைச்சிட்டுப் போயிடலாம். அதுதான் சித்திக்கும் தேவையா இருக்கும். ஏன்னா… அவங்க பையன் வர்ஷன் தான் இந்தக் குடும்பத்துக்கு வாரிசா இருக்கனும்னு சித்தி நினைப்பாங்க. இவரு இங்க இருந்தா…. அப்பா இவர் கிட்டையே எல்லாப் பொறுப்பையும் தந்துடுவாருன்னு அவங்களுக்குப் பயம் இருக்கும். காலையில் கூடச் சண்டை போட்டாங்களே ? ” என்று நினைத்தவள் “எப்படியோ… நாம இங்கையே இருக்க வேண்டிய நிலை வராதுன்னு தான் தோணுது. எப்படியாவது கேம்பஸ்ல செலக்ட் ஆகி… பாரின் போயிடனும். கூடவே இவரையும் அழைச்சிட்டுப் போயிடலாம். ” என்று முடிவுக்கு வந்தவள் பால்கனி சென்றாள்.

மாலை வேளை விடைபெற்று கிளம்பியிருக்க… இரவு பொழுது வானத்தை அடைந்திருந்தது. நிலா மகள் உலா வர தொடங்கினாள். அதில் தன் மனபாரத்தைக் கரைத்தவள் இளம் தென்றலில் தீண்டலில் இதமான தூக்கத்தைத் தழுவினாள்.

தொடரும்…