அத்தியாயம் 3

அத்தியாயம் 3

சாதனாவை கைத்தாங்கலாக அழைத்து வந்தான் சதிஷ். கீழே விழுந்து உருண்டதில் நன்றாக சிராய்த்திருந்தது. அவளை அமரவைத்தவன் முகம் கால் கழுவி வர அசையாது விட்டத்தைப் பார்த்து அமர்திருந்தாள் சாதனா. அவளுக்கு இந்த விழுப்புண்கள் எல்லாம் புதிதல்ல சிறுவயது முதல் எதையாவது செய்து கை காலை உடைத்துக் கொள்வது வழக்கம் தான் ஆனால் இந்த அமைதி புதிது. 

சாதாரண நாளாக இருந்தால் இன்னேரம் அழுது ஊரை கூட்டிருப்பாள் தான் ஆனால் தமிழ்மாறனின் முத்தத்திலேயே அவள் சுயம் இழக்க அதையே நினைத்து கொண்டிருந்தவள் அவள் வீட்டினருக்கு வித்தியாசமாக தான் தெரிந்தாள். 

“அம்மு என்னடா ரொம்ப வலிக்குதா?” அவள் அமைதியை  வலி என நினைத்து சதிஷ் கேட்க ஆமாம் இல்லை என தலையை ஆட்டி வைத்தாள்.

ஏனோ அந்த நிகழ்வு அவள் அந்தரங்கத்தில் அவளே அறியாமல் சேர்ந்துக்கொண்டது. 

“நீ எதுக்கு அங்க போன?” சதிஷ் கோபம் கொண்டான். 

“முந்திரி பழம் பறிக்க போனேன் சின்னவனே இன்னைக்குனு பாத்து அந்த சிவப்பி நாய் அங்க சுத்திட்டு இருந்தது என்ன பாத்ததும் துரத்திட்டே வந்தது நான் பயந்து ஓடும்போது  சறுக்கி விழுந்துட்டேன்” உள்ளங்கையை ஊதிக்கொண்டே பதிலித்தாள் சாதனா. 

“சும்மா இல்லாமல் வண்டி ஓட்ட கத்துக்கிறேனு  ஓரமா இருந்த சிவப்பிய கொல்ல பாத்தல அதான் உன்னை பார்த்தாலே துரத்துது” சுரேஷ் திட்டியவாறு கார் சாவியை மாட்ட அவனை முறைத்தாள் அவள். 

“அது ஏதோ அறியா வயசுல செஞ்சது” அவள் முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள சோற்றை தட்டில் பிசைந்து கொண்டே வந்தார் சுந்தரமூர்த்தி. 

“என்னடா பாப்பாவ பேசுறிங்க? உங்களுக்கு முந்திரி பழம் பிடிக்கும்னு தானே பறிக்க போயி பிள்ளை அடிபட்டு வந்திருக்கு” என்றவாறே அவளுக்கு ஊட்ட இதழை சுழித்து அழகு காட்டியவள் வாயை திறந்து வாங்கிக்கொண்டாள். 

வடிவில் மட்டும் அன்றி அன்பை காட்டுவதிலும் தன் அன்னையை கொண்ட தன் தங்கையை பார்த்து சகோதரர்களுக்கு மனம் கசிந்தது.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு. இவர்களின் அதித பாசமே மூவர் வாழ்வின் நிம்மதியை குலைக்க போவதை அறியாதது அவர்கள் பிழையா? 

___________________

மழை வருவதற்க்கு அறிகுறியாக மின்னல்கள் மின்னி மறைய  ஜன்னலை மோதும் குளிர்காற்றை பொருட்படுத்தாது ஜில்லென்றிருந்த கம்பிகளை இறுக்கமாகப் பற்றியிருந்தாள் சாதனா. ஆகாய நீல புடவை, நெருக்க தொடுத்த தஞ்சாவூர் மல்லிகை என அவை அவளை அழகியாக்க  கழுத்தில் புரண்ட சுகந்த மணம் கொண்ட  ஈர மஞ்சள் கொடி புது பொலிவை தந்திருந்தது. அறை கதவு திறக்கப்பட்டதும் உடல் ஒரு முறை தூக்கிபோட அவள் கைகள் இறுக்கமாக கம்பியை அழுத்தியது. 

தமிழ்மாறன் மெல்ல நடந்துவருவதை கீழ் கண்ணில் பார்த்தவளுக்கு மூச்சடைத்தது. அவன் காலடி அவளை நெருங்கி நிற்க அந்த நீண்ட வலிமையான கரங்கள் அவள் தோளை அழுந்த தழுவி மெல்ல இறங்கவும் இதயம் பலமாக அடித்துக்கொண்டது அவளுக்கு. அவன் மறு கரம் தயக்கமேயின்றி அவள் வெற்றிடையில் மயிலிறகாக வருடி மாயம் செய்ய இன்பமான இம்சையில் கண்ணை மூடியவள் முதுகில் படர்ந்த ஈர இதழ்கள் ஊர்வலத்தில் “மா..றா” என சினுங்கியவாறு கண்ணை இறுக்கமாக மூடியபடி அவன் மார்பில் முகம் புதைத்தாள்.  

வாழ்வின் எல்லை வரை வேன்டும் வேண்டும்

இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு

வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டுமே

அவள் செய்கையில் சிரித்தவன் அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முட்ட கண்ணை திறந்து அவனை பார்க்க  நினைத்தவள் தன் மேனியில் உலாவிய அவன் ஒற்றை கரத்தின் அழுத்தத்தில் மீண்டும் இமையை இறுக்க அந்த முரட்டு இதழ்கள் அழுத்தமாக அவள் இதழோரத்தில் பதியவும் அவன் சட்டையை பிடித்துக்கொண்டாள் சாதனா. அவன் முத்த புயலில் மொத்தமாக சுயம் இழந்தவள்  அவன் மேல் படர்ந்து மெல்ல இமை திறந்து அவனை கண்டாள். 

சின்னச் சின்ன அத்துமீறல் புரிவாய்

என் செல் எல்லாம் பூக்கள் பூக்கச் செய்வாய்

மலர்களில் மலர்வாய்…

பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

நான் தூங்கும்போது விரல் நகம் களைவாய்

சத்தமின்றித் துயில்வாய்

பொங்கிய காதலோடு அவன் கழுத்தில் முத்தம் வைக்க  அவளை அணைத்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அவன் விழுந்த நொடி சட்டென்று எழுத்தமர்ந்தாள் சாதனா. 

சுற்றிலும் பார்வையை சுழலவிட்டவளுக்கு அது கணவாக இருக்க வேண்டாமே என்ற ஏக்கம் படர்ந்தது. சில நாட்களாக வரும் இந்த கணவில் இருந்து தப்பிக்க ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை அலாரம் வைத்திருந்தாள். அப்படியும் அவளை வேட்டையாடிய கணவில் அவள் மனம் மெல்ல தடுமாறியதுதான் அவளின் பெரும் பயமே.  அருகில் அலாரம்  மணி மூன்றை காட்டிய படி ஓயாமல் ஒலியெழுப்ப தலையணையை இறுக கட்டிக்கொண்டாள்.

சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே

சின்னச் சின்னதாய் கோரிக்கைகள் செவிகொடு சினேகிதனே

அவள் கணவில் வந்த சினேகிதனின் நினைவில் கட்டிலில் உருண்டாள். அந்த தொடுகை அனைத்தும் நிஜம் என்பதுபோல அவன் தொட்ட இடங்களை நினைத்து உடல்சிலிர்க்க சிவந்த முகத்தில் தானே அறைந்துக்கொண்டாள். அன்று அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்ததிலிருந்து இம்சிக்கும் அவன் நினைவை கண்டு பயத்தில் இருப்பவளுக்கு  அவன் ஆளுமையான தொடுகை மட்டும் அடி நெஞ்சில் இனிக்க அது கணவு போல் இல்லாமல்  நிஜந்தில் உணர்ந்தது போல் இருந்த உணர்வை எதில் சேர்ப்பது என தெரியாது அமைதியாக படுத்திருக்க அப்படியே உறங்கிபோனாள். 

______________

கண்களை பிரிக்க முடியாமல் பிரித்தான் தமிழ் மாறன். மணி மூன்று பத்து என காட்ட சட்டென்று எழுந்து அமர்ந்தவன் உறக்கம் கலையாது அப்படியே கண்ணை மூடி அமர்ந்திருந்தான். மீண்டும் பக்கத்து வீட்டு சேவல் கூவ தன்னை சுத்தபடுத்திக்கொண்டு வந்தவன்  ஒலி எழுப்பாமல் தந்தையின் படத்தை வணங்கிவிட்டு தனது அறைக்கு சென்று மடிக்கணினியை எடுத்தவன் அதில் முழுகிப்போனான். சற்றும் சுணங்கவில்லை மூலையும் கையும் தாம்பாட்டுக்கு வேலைச் செய்தது. சரியாக ஐந்து மணிக்கு அதை மூடி வைத்தவன் வெளியே வர அவசரமாக வரகாப்பி கொண்டுவந்தாள் ரம்யா. 

“என்ன ரம்யா அதுக்குள்ள எழுந்துட்ட?” என்றவன் டீயை குடித்தவாறு வெளியே செல்ல தனக்கும் எடுத்துக்கொண்டவள் தன் அண்ணனோடு வந்து அமர்ந்தாள். 

“குளுருதுல தமிழு” என கையை தேய்த்தவளை ஆதுரமாக பார்த்தான் மாறன். 

“எதுக்கு சீக்கிரமே எழுந்த நீ? இன்னும் கொஞ்சம் தூங்கி இருக்கலாமே?”

“தூக்கம் வரலை தமிழு  அதான் எழுந்து வரகாப்பி வச்சேன். நீ முழிச்சிருப்பேனு தெரியும் அதான் உனக்கும் வச்சேன்” என்றவள் அவனிடம் டம்ளருக்காக கையை நீட்ட அவள் கரத்தில் இருந்த டம்ளரை அவனே வாங்கிக்கொண்டான். 

“ரம்யா உன்கிட்ட கொஞ்சம் பேசனும் பேசவா?” அவன் தயங்க அவனை முறைத்தவள் மெல்ல முதுகில் அடிக்க சிரித்தான் அவன். 

“பேசவானு கேட்கிற? நீ எங்ககிட்ட நல்லா பேசி எத்தனை நாள் ஆச்சி” என ஏங்கியவளை  பார்க்காது தூர வெறித்தவன் கேட்க தயங்கி அந்த கேள்வியை ஆரம்பிக்க கனிவாக சிரித்தாள் தங்கைக் காரி. 

“ரம்யா அண்ணன் கேட்குறேனு தப்பா நினைக்காதடா எனக்கான சில கடமை இருக்கு அதை விட்டுக்கொடுக்க என்னால் முடியாது அதே சமயம் இப்போ செய்ற நிலமைலையும் நான் இல்ல உ…  உனக்கு புரியுது தானே? ” அவன்  தயங்க மாறன் தனக்காக வருந்துகிறானோ என பதறினாள் ரம்யா. 

“ப்ச் தமிழு என்ன பேச்சு பேசுற? நீ படும் கஷ்டம் எனக்கு தெரியாதா?”

“அதுக்கில்லை டா அம்..அம்மா உனக்கு கல்யாணம்  பண்றது நினைச்சி கவலைபடுது. அதுக்காக உன்ன ஒன்னும் இல்லாம அனுப்ப எனக்கு மனமில்லை ரம்யா. அப்படி மட்டும் நடந்தா என் மனசாட்சியே என்ன கொண்ணுடும்”

“இப்போ இது ரொம்பவும் முக்கியமா?” அவள் கோபம் கொள்ள 

“முக்கியம் தான்டா நான் மட்டும் சாதாரணமா படிச்சிருந்தா அம்மா உங்களுக்குனு ஏதாவது சேர்த்திருக்கும். இதுவரைக்கும் சேர்த்தது எல்லாம் எனக்கே செலவு பண்ணியாச்சு. அதுவே எனக்கு மனசை உருத்துது ரம்யா. ஏதோ உங்களுக்கு சேர வேண்டியதை நானே பறிச்சிக்கிட்ட மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு. நானும் சித்தப்பா மாதிரி சுயநலவாதியா மாறிடுவேனோனு பயமாருக்கு” அவன் வருந்த அதட்டினாள் அவள். 

“ஏய்ய் தமிழு அந்த ஆளை உன் கூட சேர்த்து நினைக்கூட செய்யாதே. ச்சே அவரு பேச்சு நமக்கு வேண்டாம். நீ நல்ல இடத்துக்குப் போனதுக்கு அப்பறம் எங்களுக்கு எதுவும் செய்யாமலா விடுவ? ஆனா அந்த ஆள் நம்ம அப்பாகிட்ட இருந்த எல்லாத்தையும் ஏமாற்றி வாங்கினவர். உன் புத்தி ஏன் கண்டதையும் நினைக்குதோ” அவள் அழுத்துக்கொள்ள 

“செல்வம் போன் பண்ணான்” என்ற மாறனை அதிர்ந்து பார்த்தாள் ரம்யா சட்டென்று அவளிடம் ஒரு தடுமாற்றம். 

“எ… . என்ன சொன்னார்? “

“அவன உடனே கல்யாணம் பண்ணிக்க சொல்லி அவன் அம்மா அப்பா போர்ஸ் பண்றாங்களாம்” 

“அப்போ பண்ணிக்க வேண்டியது தானே? அதை எதுக்கு உனக்கு போன் பண்ணி சொன்னார்” அவள் கோபம் கொள்ள  தரையை பார்த்தான் மாறன். 

“ம்ம் என்னால தான் அவன் கல்யாணம் தள்ளிப் போகுதாம்” 

“நீ என்ன தாலி கட்டகூடாதுனு அவன் கையை பிடிச்சா வச்சிருக்க?” அவள்  அலுத்துக்கொள்ள சிரித்தான் அவன். 

“சில விஷயங்களை தெளிவு படுத்தனும் டா. அன்னைக்கு நீயும் அவனும் சிரிச்சி பேசிட்டு இருந்ததைப் நான் பார்த்தேன். உனக்கு அவனை பிடிச்சிருக்கா ரம்யா? எதுவா இருந்தாலும் சொல்லு எப்படியாவது நா…” அவனை முடிக்க விடாது சுட்டெறிந்தது அவள் பார்வை. 

“சிரிச்சி பேசினா காதலா? நீயும் மத்தவங்க மாதிரி நினைக்கிறது நினைச்சா வருந்தமா இருக்கு தமிழு” 

“சாரி டா செல்வம் நீயும் விரும்புற மாதிரி என்கிட்ட சொன்னான். அதான் ஒரு வார்த்தை உன்கிட்ட கேட்க நினைச்சு… தாப்பாயிட்டோ?  என்ன மன்னிச்சிடு ரம்யா” மாறன் வருந்தினான். 

“செல்வம் அம்மா  பத்தி தெரிஞ்சுமா நான் அவர் மேல் ஆசை படுவேன். எனக்கு செல்வத்தை பிடிக்கும் தான் ஆனா அது காதல் இல்லை” என்ற தங்கைக்கு அந்த செல்வம் மேல் ஒரு சிறு ஈடுபாடு இருப்பதை மாறன் உணர்ந்தான். 

இருவருக்கும் திருமணம் என்பது ரம்யாவிறக்கு நிம்மதியான வாழ்வை தராது என்பது அண்ணன் தங்கை இருவருக்குமே நன்றாக புரிந்த ஒன்று. 

“புரியுது டா” என்ற சகோதரனின் வாடிய முகத்தை பார்த்து செல்வம் மீது கோபமாக வந்தது அவளுக்கு. அவன் காதல் சொன்ன அன்றே மறுத்துவிட்டாள் ரம்யா.

“நான் வேண்டாம்னு சொல்லியும் கேட்காம உன்கிட்ட  வந்து வேற மாதிரி பேசியிருக்கிறார்”  

“அப்படியில்லை ரம்யா நான் வேலைக்கு போகததால் நீ வீட்டை பார்த்துக்கனும் என்ற கட்டாயத்தில் அவனை மறுக்கிறதா அவன் நினைக்கிறான்”

“நல்ல கற்பனை திறமைதான் ஆனா அதை நம்ம குடும்பத்தில் காட்டாமல் ஏதாச்சும் கதை எழுத பயண்படுத்தினா ஓகோனு போயிடுவார்” என்றவள் எழுந்து சென்றுவிட்டாள்.

தங்கையின் திடமான முடிவில் மாறனும் கவலையற்று நிம்மதியடைந்தான்.