அத்தியாயம் – 20 ( final episode)

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 20

Final episode

பத்து நாள் இடைவிடாத உழைப்பில் சிறப்பாக எடுக்கப்பட்ட விளம்பர படத்தை எடிட் செய்யும் வேலையில் மூழ்கியிருந்தான் மாறன். அவனை நெருங்கினாள் கிருஷ்ணவேணி.

“ம்ஹூம்.. ” என்றவள் செருமலுக்கு நிமிராமல் தன் பணி செய்து கொண்டிருந்தான்.

“மாமா… “

“சொல்லு… வேணி. “

“நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பனும். காலேஜ் லீவ் முடிஞ்சுது. இனி எக்ஸாம் முடியற வரை லீவ் போட முடியாது. “

“சரி, “

“சரியா… ? ” என்றவள் அவனருகே சென்று பொத்தென அமர்ந்தாள்.

“வேணி… எடிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். டிஸ்டப் பண்ணாதே. “

“உனக்கு வேணும்னா என்னைக் கூப்பிட்டுக்குவே… வேலை முடிஞ்சதும் எப்படியோ போன்னு விட்டுடுவியா ? “

“எப்படியோ போன்னு விட்டேனா ? அதான் புருஷ் வரானே… அவனோட தானே அனுப்பறேன். “

“நான் அவங்களோட போகல. இரண்டு பேரும் லவ் பண்ணி சாவடிப்பாங்க. எனக்குப் பஸ் டிக்கெட் புக் பண்ணி கொடு. “

“சரி… புக் பண்ண சொல்லிடறேன். “

அவனையே வெறித்தவள், “போடா… ” என்றுவிட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

காலையில் தான் தீட்டு கழித்து மிதுளாவை ஊருக்கு அழைத்துச் சென்றிருந்தனர் ஆதிசேஷனும் விசாலமும். வீட்டில் இப்போது இருவர் மட்டுமே இருக்க, மாறன் அவளைத் திரும்பியும் பாராது வேலையே கண்ணாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ச்சே… நானும் சாயந்திரத்திலிருந்து பார்க்கறேன். மூஞ்சியில எந்த ரியாக்ஷ்னும் காட்டாம அமைதியா அந்தச் சோபாவே கதின்னு உட்கார்ந்திருக்காரு. இத்தனை நாள் தான் வேலையிருந்தது… எதுவும் பேச முடியல. இன்னிக்காவது பேசலாம் இல்ல. இன்னிக்கு விட்டா அடுத்த லீவ் கிடைக்கற வரை பார்க்க கூட முடியாது. அங்க போனதும் எக்ஸாமுக்கு படிக்கனும். ஏகப்பட்ட வேலையிருக்கு. ” என்று முணுமுணுத்தபடியே படுக்கையறையில் குட்டிப்போட்ட பூனையைப் போல நடந்து கொண்டிருந்தாள் கிருஷ்ணவேணி.

அப்போது அவளின் கைப்பேசி ஒலிக்க, அதை எடுத்துப் பார்த்தாள். அழைப்பு விடுத்திருந்தது சிநேகா தான். மாறன் மேல் இருக்கும் கடுப்பை காட்ட ஒரு ஜீவன் கிடைத்துவிட்டதைக் கண்டு இன்புற்ற வேணி, அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

“சொல்லு சிநேக்… “

“நாளைக்கு எத்தனை மணிக்குக் கிளம்பறது க்ரிஷ் ? ” என்று கேட்டாள் சிநேகா.

“நீ காரில் போயிடு சிநேக். நான் பஸ்ஸில் வந்திடறேன். “

“ஏன் ? என்னாச்சு ? ” என்றாள் சிநேகா.

“ஒன்னுமாகல… நீயும் உன் ஹப்பியும் லவ் பண்ணிக்கிட்டே வருவீங்க. நான் வந்தா இடைஞ்சலா இருக்கும். எதுக்கு உங்களுக்கு இடைஞ்சலா நான் இருக்கனும் ? நான் பஸ்ஸிலேயே வந்திடறேன். ” என்றவள் சலிப்பாகக் கூற,

“என்னாச்சு க்ரிஷ் ? ஏன் ஒருமாதிரி பேசற ? உன் சித்தி எதுவும் சொன்னாங்களா ? “

“அவங்களை ஏன் இப்ப ஞாபகப்படுத்தரச் சிநேக். நான் ஏற்கனவே செம கடுப்பில் இருக்கேன். இதுல அவங்களை வேற இழுக்காதே. அப்புறம் நீதான் வாங்கிக்கட்டிக்கனும். “

“சரி சரி டென்ஷனாகாதே… நான் போனை வெச்சிடறேன். ” என்றவள், “உன் டிரஸ் இங்க இருக்கே ? அதை நானே எடுத்திட்டு வந்திடவா ? “

“ம்… “

“சரி… பாரு. நான் அப்புறம் கூப்பிடறேன். ” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.

அலைப்பேசியைத் தூக்கி மெத்தையில் எறிந்தவள், தானும் சென்று கட்டிலில் விழுந்தாள்.

சில நிமிடங்கள் கழிந்திருக்கும் மாறன் அறை உள்ளே நுழைந்தான். படுக்கையில் கிடந்தவள் முகத்தைத் திருப்பிக் கொள்ள… “இப்ப உனக்கு என்னதான் பிரச்சனை வேணி ? ” என்று கேட்டான்.

“பிரச்சனைன்னு நான் சொன்னேனா ? “

“இல்ல… உன் பிரண்டு போன் பண்ணி கேட்கறா ? க்ரிஷ் ஏன் அப்ஷட்டா பேசறான்னு ? “

“ஓ… அப்ப நீங்களா கேட்க வரல. அவ போன் செஞ்சதால தான் வந்திருக்கீங்க ? ” என்று கேட்ட படியே எழுந்து அமர்ந்தவளை, பார்த்த மாறன்,

“எதுக்குக் கோவப்படற வேணி ? “

“நானும் பார்க்கறேன்… வேலை தொடங்கின நாளிலிருந்து நீங்க என்னை விட்டு விலகி விலகி போறீங்க. முதலில் வேணிம்மா, பேபின்னு கூப்பிட்டீங்க. இப்பெல்லாம் வேணின்னு அழுத்தமா கூப்பிடறீங்க ? முன்னெல்லாம் சும்மா சும்மா வந்து தொட்டு தொட்டு பேசுவீங்க. இப்ப நானே பக்கத்தில் வந்தாலும் விலகி போறீங்க. ஏன் ? காரணம் சொல்லுங்க. “

“நீதானே என்னைப் பேர்ஸ் பண்றீங்கன்னு சொன்ன ? “

அவனை விழித்துப் பார்த்தவள், “லூசாய்யா நீ ? ” என்றிட, அவன் முகம் மாறியது.

“நான்தான் அப்பவே கேட்டேனே சொன்னா தான் காதலான்னு ? ” என்றாள் அவள்.

“அப்படி எல்லாம் நீ எதுவும் சொல்லல. “

“மாறன்… ” என்றவள் கோபத்துடன் அவனைப் பார்க்க,

“ஆமாம் சொன்ன… ஆனா அதை வாயால சொல்லலாம் தானே ? சொன்னா கொஞ்சம் சந்தோஷப்படுவேன் இல்ல ? ” எனக்கூறி முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டான் மணிமாறன்.

கொஞ்ச நேரம் அவனையே வெறித்தவள், “இப்ப நான் வாயால சொன்னா உங்களுக்கு இருக்கற கோபம் போயிடும் ? அப்படித் தானே ? “

“கோபம் எல்லாம் இல்ல வேணி. ஒரு எதிர்பார்ப்பு… அவ்வளவு தான். ” என்றான் மாறன் சன்னமான குரலில்.

அவன் முகத்தைத் தன் விரல்களால் திருப்பிய வேணி… தன் இதழ் கொண்டு அவன் முகமெங்கும் முத்த மழை பொழிய தொடங்கினாள்.

நெற்றியில் தொடங்கிக் கண், காது, மூக்கு, கன்னம், என்று வரிசையாக வந்தவள், அவன் இதழருகே வந்து நிறுத்தி, “இது போதுமா ? இல்ல… ” என்று கேட்டு கண்களால் அவன் இதழை நோக்க, அவளின் அணுக்கமும் வாசமும் அவனுள் ரசாயன மாற்றத்தை நிகழ்த்தி அவனை அவன் வசம் இழக்க செய்தது.

“உன் வாய் திறந்து என்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னா… இன்னும் நல்லா இருக்கும். ஒருமுறை சொல்லு டி… ப்ளீஸ். ” என்று கொஞ்சலும் கெஞ்சலும் கலந்து வந்தது அவன் குரல்.

அவன் தலை முடியை தன் கரம் கொண்டு பிடித்தவள், அவன் கண் பார்த்து, “எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களை விட்டுட்டு போக மனசே வரமாட்டேங்குது. ஆனா இன்னும் படிப்பிருக்கு. அடுத்த வாரத்திலிருந்து செமஸ்டர் எக்ஸாம் வேற ஆரம்பிக்குது. எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியல மாமா. பத்து நாளா உங்க பின்னாடியே சுத்திட்டு… இப்ப திடீர்னு போகனும்னா… எப்படிப் போறதாம் ? ” என்றவள் சிணுங்கலாகக் கூற,

அவள் இடைவளைத்து தன்னோடு சேர்த்துப்பிடித்தான் மாறன். அவன் நெஞ்சோடு தன்னைச் சாய்த்தவள், “சொல்லு மாமா… நான் பாட்டுக்கு சிவனேன்னு நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தேன். என்னைக் கல்யாணம் பண்ணி கூட்டிக்கிட்டு வந்து இப்படி உன்னை நினைச்சு உருக வெச்சி, இப்ப ஊருக்கு போ… படி, எக்ஸாம் எழுதுன்னா எப்படி எழுதறதாம் ? அதுக்குத் தான் உங்களைப் பிடிச்சிருக்குன்னு சொல்லாம இருந்தேன். ஆனா என்னால என்னோட அன்பை சொல்லாம இருக்க முடியல. “

அவள் தலையை வருடிக் கொடுத்தவன், “எனக்கும் உன்னை அனுப்ப மனசே வர மாட்டேங்குது பேபி. அதான் கோவமா இருக்கற மாதிரி நடந்துக்க முயற்சி செஞ்சேன். நீ என்னடான்னா இப்படிப் பட்டுன்னு முத்தம் கொடுத்து என்னைச் சரண்டராக வெச்சிட்ட. “

“ம்… “

“சிணுங்காத டி. அப்புறம் நடக்கக் கூடாதது நடந்திடும். “

“நடக்கக் கூடாததுன்னா ? “

“ம்… “

“சொல்லு மாமா… “

“இப்ப நீ படிக்கனுமா ? வேண்டாமா ? “

“படிக்கனும். அது என் கனவு மாமா. “

“அப்ப பேசாம ஊருக்கு போ. “

“போடா… ” என்றவள் அவனிடமிருந்து விலக முயல, அவளை விடாமல் தன்னோடு சேர்த்துப் பிடித்தான். இவன் இறுக்கம் அதிகரித்தது.

“பேபி… போன் இருக்கில்ல… அதுல பேசுவோம். நாம தான் லவ் பண்ணாமையே கல்யாணம் பண்ணிக்கிட்டோமோ… அதனால இப்ப லவ் பண்ணுவோம். அப்புறம் படிப்பெல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் ஒரு ரிஷப்ஷன் வெச்சி எல்லாரையும் கூப்பிட்டு விருந்து போட்டு, எல்லாரோட ஆசீர்வாதத்தோட நம்ம கல்யாண வாழ்க்கையைத் தொடங்குவோம். ” என்றான்.

“அதுக்கெல்லாம் ஏழு எட்டு மாசம் ஆகும். பரவாயில்லையா ? “

“கஷ்டம் தான்… ஆனா சமாளிப்போம். புது எக்ஸ்பீரியன்ஸா இருக்குமில்ல ? “

அவனை வெற்றுப் பார்வை பார்த்த கிருஷ்ணவேணி மௌனமாக, அவள் கன்னம் பற்றி அவள் விழி பார்த்தான் மணிமாறன்.

“என்னாச்சு பேபி ? ஏன் திடீர்னு அமைதியா இருக்க ? “

“ஒன்னுமில்ல… நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பனும். நீ என்னை டிராப் பண்றியா ? ” என்று கேட்டாள்.

அவள் விழி பார்த்தவன், “அதுதான் உன் விருப்பம்னா கண்டிப்பா டிராப் பண்றேன். ” என்றான்.

“அப்ப உனக்கு விருப்பமில்லையா மாமா ? “

“விருப்பம் இல்லாம இருக்குமா பேபி ? ” என்றவன் அவள் கழுத்து வளைவில் தன் முகம் பதித்தான்.

“சரி… விடு. போய் வேலையைப் பாரு. ” என்றவள் அவன் பிடியிலிருந்து விடுபட, அவனுக்குத் தன் உயிர் தன்னை விட்டு போவதை போல இருந்தது.

“கொஞ்ச நேரம் இரேன்… ப்ளீஸ். “

“எத்தனை நேரம் இருந்தாலும்… பிரிஞ்சிப் போகும்போது வலிக்கும் மாமா. போ… போய் வேலையைப் பாரு. ” என்றவள் எழுந்து செல்ல, ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு.

அவளைத் தொடர நினைத்தவன் எழ, அவனின் கைப்பேசி ஒலித்தது. சலிப்புடன் அழைத்து யாரெனப் பார்த்தான் மாறன். தொடுத்திரையில் ‘மாமா’ என்ற எழுத்துக்கள் ஒளிர்ந்தது.

அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தான் மாறன். “ஹலோ மாமா சொல்லுங்க. ” என்றவனிடம் ஆதிசேஷன், “மாப்பிள்ளை பாப்பா நாளைக்கு ஊருக்கு போறேன்னு சொன்னா… நீங்க அவளோட துணைக்குப் போறீங்களா ? என்று கேட்டார்.

“இப்பதானே பேசிக்கிட்டோம். ” என்று மனதில் நினைத்த மாறன்…. “ஆமாம் மாமா, நான் கொண்டு போய் விட்டுட்டு வரலான்னு இருக்கேன். போன தடவையே அவகிட்ட சொல்லாம கிளம்பினது சங்கடமா இருந்தது. சரி பிராஜெக்ட் கிடைச்சதும் சொல்லிக்கலான்னு நினைச்சுச் சமாதானம் செஞ்சிக்கிட்டேன். இப்ப அவ என்னோட இருந்து பிராஜெக்ட் முடிக்க முழு ஒத்துழைப்பு கொடுத்திருக்கா… தனியா அனுப்ப முடியாது இல்லையா ? அதான் நானே போகலான்னு இருக்கேன். ஏன் மாமா அங்க எதுவும் வேலையிருக்கா ? “

“அதெல்லாம் ஒன்னுமில்ல மாப்பிள்ளை… ” என்றவர் நிறுத்தி பின் தொடர்ந்தார். “நான் சாயந்திரம் நம்ம ஜோசியரை வரச்சொல்லி ஜாதகம் பார்த்தேன். உங்களோட வரவேற்பு, மிதுளாவோட சடங்கு இரண்டுக்கும் நாள் குறிச்சிட்டேன். வேணியோட எக்ஸாம் முடிஞ்சதும்… அடுத்தடுத்த முகூர்த்த நாளில் விசேஷத்தை வெச்சிக்கலான்னு சொல்லிட்டாரு. “

“அப்படியா மாமா ? ஆனா ரிஷப்ஷனை வேணியோட‌ படிப்பு முடிஞ்சதும் வெச்சிக்கலான்னு நினைக்கறேன் ? “

“அது சரி வராது மாப்பிள்ளை… படிப்பு முடிய இன்னும் ஏழு எட்டு மாசம் இருக்கு. கல்யாணம் முடிஞ்ச பொண்ணு மாப்பிள்ளையை அத்தனை நாள் பிரிச்சி வெக்கறது நல்லா இருக்காது. பாப்பா இப்ப உங்களோட தான் இருக்கா… காலையில் ஊருக்கு வான்னு கூப்பிட்டதுக்கு வரலன்னு சொல்லிட்டா. இனியும் லீவ் விட்டா அங்க தான் வருவான்னு நினைக்கிறேன். அப்படி இருக்கும் போது நான் ஒரு அப்பாவா செய்ய வேண்டியதை செஞ்சிடனும் இல்லையா ? “

“மாமா… நீங்க… ஏதோ தப்பா நினைச்சிருக்கீங்கன்னு நினைக்கறேன். நாளைக்கு ஊருக்கு கிளம்பறதால இங்கிருந்தே கிளம்பிக்கலான்னு நினைச்சிருப்பா. ” என்றவன் குரல் தடுமாறியது.

“இதுல தப்பா நினைக்க என்ன இருக்கு மாப்பிள்ளை ? என் பொண்ணு உங்களை மனப்பூர்வமா ஏத்துக்கிட்டாங்கறது எனக்குச் சந்தோஷம் தான். “

“…”

“நீங்க ஒன்னும் டென்ஷனாக வேண்டாம். பாப்பா கிட்ட ரிஷப்ஷன் பத்தி சொல்லிடுங்க போதும். நான் நாளைக்குக் கூப்பிடறேன். ” என்ற ஆதி அழைப்பை துண்டித்தார்.

“நம்ம முகத்தைப் பார்த்தே எல்லாத்தையும் கணிச்சிடுவாரு. இவரு கிட்ட போய் மறைக்க முடியுமா ? ” என நினைத்த மாறன் க்ரிஷிடம் வரவேற்பு குறித்துக் கூறிட அவளைத் தேடிச் சென்றான்.

மாடியில் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தவளை பின்னிருந்து அணைத்தவன், ஆதி கூறிய சேதியை கூறிட, “அப்பாவுக்கு நம்ம தவிப்பு எப்படித் தெரிஞ்சுது ? ” என்று தன்னுள் தானே கேட்டுக் கொண்டு மௌனமாக இருந்தாள்.

“என்னாச்சு பேபி ? பதிலே சொல்லாம இருக்க ? “

“அப்பா சொல்றதும் சரிதான். அவரோட கடமையை முடிச்சிட்டா ஊரு எதுவும் பேசாது. இல்லன்னா சாடை பேசும். ரிஷப்ஷன் சீக்கிரம் நடக்கறது தான் நல்லது. “

“நானும் அதையே தான் பீல் பண்ணினேன். ” என்றவன் அவள் கன்னத்தில் முத்தமிட,

“மிஸ்டர். மாறன்… பெரியவங்க கூப்பிட்டு அவசரப்படாதீங்கன்னு சொன்னதுக்கு அப்புறமும் நாம அவசரப்படறது நல்லதில்ல. நீங்க போய்ச் சமத்தா வேலைய பாருங்க. நான் உங்களுக்குச் சமைச்சி கொண்டு வரேன். “

“நான் அமைதியா தான் இருந்தேன். நீதான்… ” என்றான் சிணுங்கலாக.

“ஆமாம் நான் தான்… அதுக்குச் சாரி… இப்ப நீங்க போய் வேலையைப் பாருங்க. “

“போடி… ” என்றவன் அவளை விடுத்து செல்ல, அவளோ புன்முறுவலுடன் அங்கே நின்றிருந்தாள்.

மறுநாள் காரில் சிநேகாவையும் துணைக்கு அழைத்துக் கொண்டு மாறனோடு பெங்களூர் கிளம்பினாள் கிருஷ்ணவேணி.


நான்காம் வருடத்தின் முதல் பருவ செமஸ்டர் எக்ஸாம் முடித்து ஊருக்கு வந்த கிருஷ்ணவேணி, தங்கையின் விசேஷத்தை அக்காவாகவும் தாய்மாமன் மனைவியாகவும் இருந்து முன் நின்று நடத்த, விசாலம் மட்டும் முறுக்கிக் கொண்டே இருந்தார். அனைவரும் ஒன்று கூடிவிட்ட பிறகு தனி ஒருத்தியாக நின்ற விசாலத்தின் வார்த்தைகள் எதுவும் சபை ஏறவில்லை. அதை நினைத்து மனதில் புலம்பினாலும், வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் விசேஷ வீட்டை சுற்றி வந்தார்.

மிதுளாவின் விசேஷத்திற்கு அடுத்த நாள் மணிமாறன் – கிருஷ்ணவேணியின் திருமண வரவேற்பு சிறப்பாக நடைபெற்றது. உற்றார், உறவினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவரும் வந்து வாழ்த்து கூற அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டனர் இருவரும்.

அன்றைய இரவை அவர்களுக்கான முதல் இரவாக ஏற்பாடு செய்திருந்தார் ஆதிசேஷன். வேணியின் அறை அலங்கரிக்கப்பட்டிருக்க, அதனுள் இருவரும் தனித்திருந்தனர்.

அத்தனை நாட்களாய் தோன்றாத வெட்கம் மங்கை அவள் முகத்தில் மருதாணியின் சிவப்பை பூசிச்சென்றது. நாணத்துடன் அமர்ந்திருந்தவளை நெருங்கி அமர்ந்தான் மணிமாறன்.

“பேபி… “

“ம்… “

“வெட்கப்படறியா ? “

“ம்… “

“உன் வெட்கம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. “

“ம்…”

“உனக்கு அடுத்தப் பத்து நாள் லீவ் தானே ? “

“ம்…”

“எங்கையாவது வெளியூர் போகலாமா ? “

“ம்… “

“அடியேய்… ‘ம்’ தவிர வேற ஏதாவது பேசு. பக்கம் பக்கமா பேசிவியே… இப்ப ஏன் டி ‘ம்’ கொட்டி உசுரை எடுக்கற ? “

“ம்… “

“வேணி… “

“ம்… ” என்றவளை பார்த்து முறைத்தவன்,

“நீ சரிப்பட்டு வரமாட்ட… ” என்றுவிட்டு அன்று அவள் மிச்சம் வைத்த இதழை இன்று தன் முத்தத்தால் சிறைப்பிடித்தான். இவரும் தங்கள் இல்லற வாழ்வை இனிமையாக ஆரம்பித்தனர்.

எங்கோ ஒரு ஒலிபொருக்கியில் இந்தப் பாடல் வரிகள் கேட்டது.

மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் உன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

இருவரும் தங்கள் அன்பை மாறி மாறிப் பூசிக்கொண்டு இன்று போல என்றும் இணைந்து வாழ வாழ்த்து கூறி விடைபெறுவோம்…

சுபம்