அத்தியாயம் 2

கண்கள் தீயாக எரிய கடிகாரத்தை நிமிர்ந்து பார்த்தான் தமிழ் மாறன். சின்ன முள் ஒன்றை தாண்டிய நேரம் அந்த ஏகாந்த இரவு தத்துபூச்சிகள் இசை மீட்ட ரம்மியமாக இருந்தும் ரசிபதற்கு மனமின்றி மீண்டும் கையில் இருந்த பேணாவை உற்று பார்த்தான் அவன். 

மனம் சமன்பட மறுத்தது. தூரத்தில் தெரு நாய்கள் குரைத்து கெண்டிருக்க அதை கண்டு அவன் வளர்கும் ரவியும் ஓடி ஓடி குரைத்தது. என்னவென்று பார்க்க எழுந்து வெளியில் வந்தவன் நடுகூடத்தில் தங்கைகள் உறங்க அவர்களுக்கு நன்றாக போர்த்திவிட்டு திண்ணையில் படுத்திருந்த வாசுகியை தாண்டி வாசலில் வந்து நின்றான். 

அவனை கண்டு வாலாட்டியது ரவி. அதன் தலையை தடைவி கொடுத்தவன் கண்ணில் அவன் தந்தையின் படம் பட அதை பார்த்துக்கொண்டிருந்தான். நினைவில் கம்பீரமான அழகேசன் முகம் வந்தது கண்களை இறுகமூடிக்கொண்டு அதில் இருந்து தப்பிக்க நினைத்தான் போல். செவியில் புல்லட் சத்தம் கேட்க  தன்னை தலைக்கு மேல் தூக்கி போட்டு பிடிக்கும் தந்தையின் பிம்பம் தோன்ற துவண்டு போன மனம் சலனம்மற்று ஒருநிலை அடைய புதிய உறுதியோடு கதவை அடைத்தவன்  படுத்துக்கொணடான். 

 தமிழ் மாறனின் தந்தையான அழகேசன்  பிறக்கும் போதே பணக்காரர். படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லாதவர் பள்ளி பக்கம் சென்றதேயில்லை ஆனால் அவர் உடன் பிறந்த குமரேசனோ படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஆனால் பிரச்சினை அங்கே தான் ஆரம்பித்தது குமரேசன் படிப்பில் மட்டுமல்லாது பணத்திலும் பேராசை கொண்டுவிட்டார். பெரிய படிப்பு படித்து அரசாங்க வேலை கிடைத்தது அவருக்கு அதே சமயம் அழகேசன் அதை வைத்து பல நேரங்களில் அவமான படுத்தபட்டார்.

பாசகார அழகேசன் தம்பி மேல் பொறாமை கொள்ளாமல் நியாயஸ்தனாக தான் உழைத்தாலும் தப்பிக்கு சேரவேண்டிய பங்கை தாயிடம் கொடுத்துவிடுவார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போலதான் தம்பியை பார்த்து “தானும் படித்திருக்கலாம்” என்ற ஆசை வந்தது அழகேசனுக்கு. அதை தாழ்வு மனப்பான்மையாக மாற்றி உழைப்பாளியான அழகேசனை குன்றி போகவைத்த பெருமை குமரேசனையே சேரும். 

ரம்யா ஒரு வயது குழந்தையாக இருந்த சமயம் புதிய மில் கட்டும் வேலையில் இறங்கிய அழகேசன் கொஞ்ச நாள் மற்ற பொறுப்பை தம்பியிடம் கொடுத்திருந்தார்.  

சூழ்ச்சிகாரனான குமரேசன் அதை பயன்படுத்திக் கொண்டு மொத்த சொத்தையும் யாரும் அறியாது தனது பெயருக்கு மாற்றிக்கொள்ள அதை அறியாது இரவு பகலாக பாடுபட்டு மில்லை கட்டினார் அழகேசன். பத்திரம் பதிய வேண்டும் என்று அவரை ஏமாற்றி கைநாட்டு வாங்க படித்து பார்க்க தெரியாமல் தம்பி தானே என்று அவரும் வைத்துவிட்டார் விளைவு  பெரிய கடன் தொகை அவர் வாங்கியதாக நோட்டீஸ் வர பதைத்துபோய் வக்கீல்லை சந்தித்த போதுதான் குமரேசன் தன்னை ஏமாற்றியதே தெரிந்தது. கடனை அடைக்க பணம் இல்லாமல் சொத்தில் கைவைக்க போக அங்கேயும் அவர் ஏமாற்ற பட்டிருந்தார். பரம்பரை வீட்டைதவிர அனைத்தும் குமரேசன் பெயருக்கு பணம் வாங்கிக்கொண்டு அழகேசன் விற்று விட்டதாக பத்திரத்தை காட்டினார் குமரேசன். 

மூன்று பிள்ளைகளை வைத்துகொண்டு பணத்துக்காக அவர் அல்லாட தன் நகை மொத்தத்தையும் தூக்கிகொடுத்தார் வாசுகி அப்படியும் பணம் பத்தாமல்  வீட்டை குமரேசனிடம் மொத்தமாக கொடுத்துவிட்டு மீத கடனை அடைந்தார் அழகேசன். 

அன்றே மனைவி பிள்ளைகளோடு வெளியேறியவரை தாங்கி கொண்டது வாசுகியின் தாய் தந்தைதான். தன் மகனை எதிர்த்து ஒரு பங்கை வாசுகிக்கு கொடுத்து அங்கே குடியேற வைத்தனர். அதன் பிறகு அழகேசன் எவ்வளவோ முன்னேற முயன்றார். ஏமாற்ற பட்ட வலி அவர் உயிரை  குறைக்க ஆரம்பித்தது ஊரே அவரை “ஏமாளி” என கைகொட்டி சிரிக்க அவமானம் ஒரு பங்கு பிய்த்துத் தின்றது அவரை. சான் ஏறினால் முழம் சரிக்கியது.  இதில் குமரேசன் வேறு அழகேசன் அகலகால் வைத்து  தனக்கு நஷ்டம் பண்ணிவிட்டதாக விட்ட கதையில் அழகேசனின் தாய் தந்தையும் மகனை கைவிட்டு விட்டனர். 

கூழிக்கு வேலை செய்தார் பத்தவில்லை பிள்ளைகள் பசியில் மனம் துடித்தது அவருக்கு. குமரேசன் பிள்ளைகள் காரில் பள்ளிசெல்ல பாவினிக்கு  மருந்து செலவே அதிகமாக இருக்க அதற்காகவே நிறைய உழைக்க நேர்ந்தது. 

அவர்கள் குடும்பத்தை ஊரே

“தரித்திரம்” 

“விலங்காத குடும்பம்” 

“அவங்க மூஞ்சில முழிச்சா விடியாது” என பலவிதமாக தூற்றியது. 

ஒரு மனிதன் தன் நிலையில் இருந்து இறங்கிவிட்டால் எத்தனை அவமானம் நேருமோ அத்தனையும் அனுபவித்தனர். “கடன் கேட்டுவிடுவாரோ” என உற்றார் உறவினர்கள் முகம் கொடுக்க மறுத்தனர். 

அழுத்தங்கள் கூடி ஒரு நாள் இரவோடு இரவாக அழகேசன் இதயம் தன் துடிப்பை நிறுத்திவிட்டது. பழைய நினைவுகள் அலையாக எழ கண்ணை அழுந்த தேய்த்தார்  சுந்தரமூர்த்தி. 

“தான் நினைத்திருந்தால் அழகேசனுக்கு  உதவியிருக்கலாம்” என்ற எண்ணம் எழ தங்கையின் விதவை கோலம் கண்முன்னே வந்து நெஞ்சை நெருடியது. நேற்று கூட பார்த்தாரே  மாங்காய் கூடையை தலையில் சுமந்துகொண்டு மெலிந்த உடலோடு வாசுகியை. அதே தங்கை தங்கள் வீட்டில் எப்படி வாழ்ந்தாள் என நினைக்க அவர் தவறிய கடமை எள்ளி நகையாடியது அவரை. 

கதவு திறக்கும் சத்தத்தில்   தெளிந்தவர் உள்ளே வந்த மகனை கேள்வியாக பார்த்தார். 

“அப்பா அம்மு  ஜாதகம் வேணும்” என்றான் சுரேஷ்

“இன்னைகேவா? அப்படி என்ன அவசரம்? மணி எட்டு கூட ஆகலை” என்ற தந்தையை முறைத்தவன்

“காலண்டர் பாத்துட்டு தான் வந்தேன். இப்போதான் நல்ல நேரம் போட்டிருக்கு இப்ப விட்டா மதியம் தான் நல்ல நேரம்” என்றவனிடம் சாவியை எடுத்து கொடுத்தார் சுந்தரமூர்த்தி. 

“இன்னைக்கே திருமண மையத்தில் பதிவு பண்ணிட்டு வந்திடுரேன். அப்பறம் ப்பா இராத்திரி மேட்ரிமோனில சாதனா பேர்ல ஜடி ஒப்பன் செஞ்சிருக்கேன்” என்ற சுரேஷ் தந்தை முகத்தில் இருந்த குழப்பத்தில் சிரித்தவன் “வீட்டோட மாப்பிள்ளை தான் வேணும்னு போட்டிருக்கேன் ப்பா” என்றுதும் தான் சிரித்தார் சுந்தரமூர்த்தி. 

அதற்குக்குள் வெளியில் சாதனாவும் சதிஷும் கத்திக்கொண்டிருக்க அவசரமாக வெளியே வந்தவர்கள் சத்தமாக சிரித்து விட்டனர். அவர்கள் வீட்டு இளவரசி சாதனா கையில் ஹிட் டப்பாவோடு ஓடிக்கொண்டிருக்க பனியனோடு சட்டையை  வீசிக்கொண்டு அவளை துரத்தினான் சதிஷ். 

சுரேஷ் பின்னே மறைந்தவளை பிடித்து வெளியே இழுத்த சதிஷ் அவள் கையில் இருந்த மருந்து டப்பாவை பரிக்க பார்க்க இருவரையும் பிரித்துவிட்ட சுரேஷ் ஒரு அதட்டுபோட சண்டையை நிறுத்திவிட்டு அவனை பார்த்தனர் இருவரும். 

“என்னடா சண்டை சின்ன பிள்ளை கூட? ” சுரேஷ் தம்பியை கடிய தன்னை பார்த்து ஒழுங்கு காட்டியவள் மண்டையில் கொட்டினான் சதிஷ். 

“பாரு பெரியவனே” என சாதனா பொய்யாக கண்ணை கசக்க தம்பியை முறைத்தான் அவன். 

“ண்ணா இவளா சின்ன பிள்ளை? சரியான குட்டி பிசாசு ”  அவளை மீண்டும் கொட்ட வந்தவனை கண்டு ஸ்பீக்கர் வைக்காமலே  அலறினாள் சாதனா. 

“டேய்” என தம்பியை பாவமாக பார்த்த சரோஷ் காது கம்பி வைத்து குத்தியது போல் வலித்தது. 

“என்னடா? என் குழந்தைய எதுக்கு அடிக்கிற?” சுந்தரமூர்த்தி மகள் தலையை வருட திருதிருவென்று முழித்தாள் அவள். 

“அப்பா இவ என்ன பண்ணானு தெரியாம பேசாதிங்க” எனறவன் சட்டையை தூக்கி அவள் மேலேயே வீசினான். 

“டேய் என்னடா ஒரே ஹிட் நாத்தம்” சுரேஷ் அதை தூர வீச அவனை முறைத்தான் சின்னவன். 

“எல்லாம் இவ வேலைதான்” என அவன் கத்த “என்னடா பாப்பா பண்ண?” என பாசமாக உருகினார் தந்தை. அப்போதே சுரேஷ் உஷாராக சுதிஷ் பக்கம் தாவி தள்ளி நின்று விட்டான். 

“சொல்லுடி அப்பாகிட்ட” என கத்திய சின்ன அண்ணனை முறைத்தவள்

“சின்னவன் தான் ப்பா  என்ன இந்த மருந்த அடிக்க சொன்னான்” என இமைகொட்டினாள் அவள். 

“எது நானா? பொய் சொல்லாதடி” 

“நான் பொய் சொல்லமாட்டேன் சின்னவனே நல்லா யோசிச்சு பாரு. என்கிட்ட வந்து நீ என்ன சொன்ன?”

“என் பர்யூம் தீர்ந்திட்டு  நீ போட்ட பர்யூம என் டிரஸ்லையும் அடிச்சிவிடுனு சொன்னேன்” என

“ம்ம் பாருங்க ப்பா சின்னவனே ஒத்துகிட்டான்” என்ற சாதனாவை எல்லாரும் குழப்பமாக பார்க்க சதிஷ் தலையில் தட்டினாள் அவள். 

“எனக்கு ஒன்னும் புரியலையே பாப்பா” என்ற தந்தையை கண்டு விழியை சுழற்றியவள் “அதுவா ப்பா என் ரூம்ல கரப்பான் பூச்சி வந்துட்டுனு நான் ஹிட் அடிச்சேன் அப்போ  என் டிரெஸ்லையும் தெரியாமல் அடிச்சிக்கிட்டேன். சரி குளிச்சிட்டு மாத்திக்கலாம்னு வெளியே வந்தேன் அப்போ சின்னவன் என்ன கிராஸ் பண்ணிபோனவன் திரும்பி வந்து ஸ்மேல் நல்லாருக்கு என்ன பர்யூம்னு கேட்டான்”

“சரி நீ சொல்லிருக்கலாம்ல” என்ற தந்தையை  பார்த்து சிரித்து “விதி யாரை விட்டது” என்றவள்

“நான் சொல்லதான் வந்தேன் ஆனா இவன் இருக்கானே” என அவள் நினைவு பின்னோக்கி செல்ல மூவரும் அவளோடு அதில் பயணித்தனர். 

கையை துடைத்தவாறே வெளியே வந்த சாதனாவை கடந்துபோன சதிஷ் அவள் மேல் வந்த புதுவித வாசனையில் திரும்பி வந்தவன் 

“என்ன அம்மு பர்யூம் வாசனை நல்லாருக்கு” என்க தலையில் அடித்துக் கொண்டவள் உண்மையை சொல்லவர

“உனக்கு இந்த மாதிரியான நல்ல ரசனை இருக்க வாய்ப்பில்லையே? உன் பிரண்ட்ஸ் யாராச்சும் பிரசன்ட் பண்ணாங்கலா? அந்த மலையாளி பொண்ணு அதான் செல்லம் பப்பாளிக்கு  பாலிஷ் பண்ண மாதிரி அழகா அடக்கமா  இருப்பாளே நம்ம ஷாம்லி அவ கொடுத்தாளா?” என்றவனை  பார்த்து பல்லைகடித்தாள் சாதனா. 

அவன் சொன்ன ஷாம்லிக்கு சதிஷ் மேல் இரண்டு கண்கள் என தெரிந்துகொண்ட சாதனா சதிஷை அவள் கல்லூரி திசை பக்கமே தலைவத்து படுக்கவிடாமல்  பாடுபட அவள் சின்ன அண்ணனோ  சாதனா வின் எதிரியாகிய ஷாம்லியை வர்னித்து ஷாம்லி மேல் தனக்கும் ஒரு கண் என்றால் என்ன செய்வாள். 

அவள் மவுனமாக தலையை ஆட்ட அவளை கெத்தாக பார்தவன் “பாரு அவளுக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட். இனி நீ என்ன பன்றனா அவ கிட்ட கேட்டு என்ன என்ன காஸ்மெடிக்ஸ் யூஸ் பண்ணனும்னு  கத்துக்க. அப்பறம் ஒரு விஷயம் இனி நீ யூஸ் பண்ற அந்த பாட்டி காலத்து பர்யூம தூக்கி போட்ரு” என அவள் கன்னத்தை தட்டிவிட்டு “மறக்காமல் நான் எடுத்து வச்சிருக்கிற டிரெஸ்லையும் அடிச்சிரு என்னோட பர்யூம் காலியாகிட்டு” என சொல்லி விசில் அடித்துக்கொண்டே சென்றவனை நம்பியார் போல் கையை பிசைந்து பார்த்வள். 

“மாட்டுனான்டா என் பம்பர கட்டு மண்டையா” என்றவாறே தாமதிக்காமல் அவன் சொன்னதை செய்து முடித்தாள். 

“பிளஸ்பேக் ஓவர்” என்றவள்

“அப்பா நியாயபடி பார்த்தா சின்னவன் எனக்கு நன்றி தான் சொல்லனும். நான் நினைச்சிருந்தா கபோர்ட்ல இருந்த எல்லா டிரெஸ்லையும் அடிச்சிருக்கலாம் ஏதோ கூட பிறந்த பாவத்துக்காக மேஜைமேல இருந்த வொயிட் சட்டைமேல மட்டும் தான் அடிச்சேன்” என அவள் முடிக்க 

“ஏது மேஜை மேல இருந்த வொயிட் சட்டையா?” என சுரேஷ் அதிர 

“ஏதே மேஜை மேல் இருந்தது வொயிட் சட்டையா?” என கூவினர் இருவரும். சுரேஷ் இஸ்திரி போட்டு வைத்த  உடைய கண்டு சதிஷ் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரிக்க 

“சொதப்பிட்டியேடி சாதனா” தலையில் கை வைத்துக் கொண்டாள் சாதனா. 

சுரேஷ் கோப பார்வை சாதனாவை விட்டு தன்மேல் விழுந்தது கூட தெரியாமல் “அம்மு நீ நிஜமாவே எனக்கு நல்லது தான் செஞ்சிருக்கடி என் செல்லாக் குட்டி” என அவன் சிரிக்க கடுப்பான சாதனா 

“பெரியவனே கேட்ச்”  என ஹிட்டை தூக்கி போட சற்று நேரத்தில் சதிஷ் அசைபட்டவாறே   அவன் சட்டையிலும் ஹிட் மனந்தது. 

தன் பிள்ளைகளின் அட்டகாசத்தை கண்டு சிரித்துக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தி கண்ணில் சிறு வயதில் தங்கையிடம் வம்பிழுத்து அடிவாங்கிய நினைவு எழுந்தது. 

———————–

அந்திசாயும் நேரம் மனம் சோர்வாக இருக்க சற்றுநேரம் நடந்து வரலாம் என வெளியில் வந்திருந்தான் தமிழ் மாறன். யோசனையோடு இளைப்பாறிக் கொண்டே நடந்துக்கொண்டிருந்தவன் காதில் அந்த முனகும் சத்தம் விழ சுற்றும் முற்றும் பார்த்தான். சுற்றி யாருமே இல்லாது நிர்மலாக இருந்தது பாதை அவன் அடுத்த அடி எடுத்து வைக்க மீண்டும் அந்த சத்தம் சட்டென்று அங்கிருந்த கோரை புல்லை விளக்கியவன் எட்டி பார்க்க சரிவில் உருண்டு கிடந்தாள் ஒரு பெண். 

பதைத்துபோய் அவசரமாக இறங்கி அவளை திரும்பியவன் அதிர்ந்துபோனான். 

அவளை தூக்கிக்கொண்டு மேலே வந்தவன் அவள் உடையை சரிசெய்துவிட்டு “சாதனா சாதனா” என கன்னத்தை தட்ட விழியை மூடி மூடி திறந்தாள் சாதனா. மீண்டும் சரிவில் இறங்கி ஆற்றில் தண்ணீர் எடுத்தவன் அவள் முகத்தில் தெளிக்க நன்றாக முழித்தாள் அவள். 

திடிரென்று தன் முகத்துக்கு அருகே தெரிந்த அழகான வாலிபனை பார்த்தவள்  அது தமிழ் என்று தெரிந்ததும் பதைத்துபோய் அவன் மடியிலிருந்து எழ முட்டி கால் போட்டு அவளை தாங்கியபடி இருந்தவன் அவள் மேலேயே கவிழ்ந்து விழுந்தான். அவன் முரட்டு இதழ்கள் மென் பட்டென்று இருந்த அவள் இதழ் ஓரத்தில் அழுத்தமாக பட ரோமங்கள் முள்ளென குத்தி கீறியதில் ஒரு வினாடிகள் அவள் கருவிழி விரிந்து அடிவயிற்றில் மின்னல்கள் மின்னி ஓய்ந்த நேரம் அவளை தன்னை விட்டு பிரித்து தள்ளிவிட்டான் தமிழ் மாறன். 

“ஏய்ய்” அவள் அதிர்ந்து அவனை பார்த்து கத்த “அவசரமாக தன் இதழை சட்டையில் துடைத்தான்  தமிழ். அவன் முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்து இருந்தது. 

அவள் சொன்ன “ஏய்” அவன் காதில் விழுந்து இன்னும் சூடேற்ற அவளை எரிப்பது போல் பார்த்தவன் “ச்சீ” என்ற சொல்லோடு எழுந்து வேகமாக சென்றுவிட்டான்.