அத்தியாயம் – 2

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 2

ஆதிசேஷன் மலர்கொடியை விரும்பி மணம் புரிந்துக்கொண்டார். அவர்களின் அன்புக்கு பரிசாகக் கிடைத்தவள் தான் வேணி என்கிற கிருஷ்ணவேணி. மலர்கொடி தன் மகள் வேணி மேல் அதீத பாசம் வைத்திருந்தார். மலர்கொடி வேணியை இடுப்பில் சுமந்த படியே அனைத்து வேலைகளையும் செய்துவிடுவார். வேணியைத் தரையில் தவழ விட்டால் கூட உடனே வந்து தூக்கி இடையில் வைத்துக் கொள்வார்.

“ஏன் டி இப்படிச் செய்யற ?” என்று வைரம் மலர்கொடியிடம் கேட்பார்… அதற்கு மலர்கொடியோ, “அத்த, பாய் போட்டு புள்ளையைத் தவழ விடுங்க. தரையெல்லாம் மண்ணும் சாணியுமா இருக்கு… புள்ளைக்கு வயித்தால போயிடும்.” என்று தன் அத்தையிடமே சண்டைக்குப் போய்விடுவார்.

மலர்கொடியின் அன்பை கண்டு வீட்டின் தரை பகுதியை மாற்றி வடிவமைத்தார் ஆதிசேஷன். “ஏன்டா பையா… உன் பொண்டாட்டி தான் புள்ள மேல இப்படிப் பைத்தியமா இருக்கான்னா… நீயும் ஏன்டா இப்படி அவளுக்கு ஏத்த மாதிரியே நடந்துக்கற ? ” என்று வைரம் ஆதியிடம் கேட்க,

“அம்மா அது எம்புள்ள ம்மா… அது மேல மலரு காட்டற பாசத்தை நான் எப்படிக் குறை சொல்ல முடியும் ? ” என்றார் ஆதி.

“என்னவோ போங்க… புள்ளைய தனியா வளர விட்டா தான் புள்ளைக்கு நல்லது கெட்டது தெரியும். இப்படி இடுப்புலையே வெச்சிருந்தா… நாளைக்குத் தனியா நடக்கும் போது நடக்கத் தெரியாம நடந்து கீழ விழுந்திடும். ” என்று வைரம் கூறி முடிக்கும் முன் அவர் முன் நின்றார் மலர்கொடி.

“அத்த… என் புள்ளை ஏன் தனியா நடக்கப் போகுது. நான் இருக்கற வரை… இவளை தனியா விட மாட்டேன். “

“அட கூறுகெட்டவளே… காலத்துக்கும் உம்புள்ளையை இடுப்பில் சுமப்பியா ? ” எனக்கேட்டு வைரம் தன் கையைத் தாடையில் வைத்து வியக்க,

“அத்த… மரத்துக்கு இலையும், பூவும், காயும், கனியும், பாரமாகுமா என்ன ? சுகமா தானே இருக்கும். அது மாதிரி தான் என் புள்ளையை நான் சுகமா சுமப்பேன். “

“என்னவோ பண்ணுங்க… ” என்றபடியே நகர்ந்துவிடுவார் வைரம்.காலம்‌… மெல்ல நகர்ந்து வேணியின் பள்ளி படிப்பு தொடங்க வேண்டிய நேரத்தை அவர்களுக்கு உணர்த்தியது. அதைப் பற்றி ஆதி மலர்கொடியிடம் பேச நேரம் தேடினார்‌.

அதற்கான வாய்ப்பு அன்றைய இரவு நேரத்தில் கிடைத்தது. அந்தப் பெரிய வீட்டின் மாடியறை ஆதி மற்றும் மலர்கொடியின் இருப்பிடமாக இருந்தது. மகளை உறங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் மலர்கொடி.

இரவு நேரம் பால்கனி வழியாகக் குளிர் காற்று அந்த அறையை அடைந்து இடத்தைக் குளுமைப்படுத்த… மகளை இருவருக்கும் நடுவில் படுக்க வைத்து தாலாட்டு பாடல் பாடிக் கொண்டிருந்தார் மலர்கொடி. மலரின் மெல்லிய வாசம் மனதிற்கு இதமளிக்கும் அதே போல இந்த மலர்கொடியின் தேன் குழைத்த குரலும் மனதிற்கு இதமளித்தது.

அந்த இதமான இசையில் கிருஷ்ணவேணி ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவினாள். மகளுக்கு மறுபக்கம் படுத்திருந்த ஆதி வேணி உறங்கிவிட்டதை அறிந்து மெல்ல தன் பேச்சை ஆரம்பித்தார்.

“மலரு, நம்ம புள்ளைக்கு ஐஞ்சு வயசாகிடுச்சு. “

“ஆமாம் மாமா… இந்த வருஷ பொறந்த நாளுக்கு நம்ம குலசாமிக்கு கிடா வெட்டிடுவோம். “

“ம்.. சிறப்பா செஞ்சிடுவோம் மலரு. ” என்றவர் இடைவெளி எடுத்து, “மலரு… பாப்பாவை ஸ்கூலில் சேர்க்கனும். ” என்றிட

“…. ” மலரிடம் மௌனம்.

அவரின் மௌனத்தை ரசித்த ஆதி அவர் புறமாகத் திரும்பி… மகள் மேல் வைத்திருந்த மலரின் கரத்தை பிடித்துத் தன் கரத்தில் ஒளித்துக் கொண்டார்.

“என்ன மலரு… புள்ள படிக்க வேண்டாமா ? படிச்சா தானே அதோட எதிர்காலத்துக்கு நல்லது. “

“நீங்க சொல்றது சரிதான் மாமா… ஆனா பகலெல்லாம் புள்ளைய பிரிஞ்சி இருக்கனும்னு நினைக்கும் போதுதான் மனசு கணத்து போகுது. “

“மலரு… பக்கத்து டவுனுல நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. தனியார் பள்ளிக்கூடம் தான்… புள்ளைய நாமளே கொண்டு போய் விட்டுட்டு நாமளே கூட்டிக்கிட்டு வந்திடலாம். அப்படி இல்லன்னா அவங்களே வண்டியும் வெச்சிருக்காங்க… அதுல கூட அனுப்பலாம். புள்ள படிப்பு முக்கியம் மலரு. “

“ஏன் மாமா.. அங்க இருக்கற வாத்தியாருங்க நம்ம புள்ளைய அடிப்பாங்களா ? “

“நம்ம புள்ளையை எதுக்கு அடிக்கப் போறாங்க மலரு. “

“நான் ஒன்னாப்புப் படிக்கப் போனப்ப..‌.‌ என்னைய வாத்தியாரு அடிச்சிட்டாரு மாமா. அதுல இருந்து பள்ளிக்கூடம்னாலே எனக்குப் பயம் தான். “

“அதெல்லாம் நடக்காம பார்த்துக்கலாம் மலரு. “

“சரி மாமா… நீங்க பாப்பாவை அங்க சேர்க்க ஏற்பாடு பண்ணுங்க. “

“எங்க நீ ஒத்துக்க மாட்டியோன்னு நினைச்சி பயந்துட்டேன் மலரு. நீ இப்ப ஒத்துக்கிட்டது எனக்கு எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா ? “

“என் புள்ள நல்லா‌ இருக்கனும்னு தானே நான் நினைக்கறேன். அப்ப புள்ளையோட வளர்ச்சிக்கு நானே எப்படிக் குறுக்க நிப்பேன் மாமா. “

“சரி மலரு… நாளைக்கே போய்ப் பாப்பாவுக்கு அட்மிஷன் போட்டுடலாம். “

“நானும் உங்களோட வரலாமா மாமா… “

“நீ இல்லாமலா மலரு… கட்டாயம் நீயும் வரனும். ” என்றவர் மகளைத் தாண்டி தன் மனையாளை அணைத்தார். மலர்கொடியும் அவரின் அன்பில் கரைந்தார்.

அடுத்து வந்த நாளில் மகளைப் பள்ளியில் சேர்த்துவிட்டு தானும் அவளுடன் பள்ளி சென்று வந்தார்மலர்கொடி. அவரின் தவிப்பை உணர்ந்த ஆதி… மலருக்கு எடுத்து கூறி புரிய வைத்தார்.

“மலரு… இந்த ஒரு வாரம் முழுக்க நீயும் பாப்பாவோட ஸ்கூலுக்குப் போய் மதியம் வரை காத்திருந்து அவளை அழைச்சிட்டு வந்துட்ட… ஆனா இனி அப்படி எல்லாம் இருக்க முடியாது… பாப்பாவுக்கு முழு நேரம் பள்ளிக்கூடம் ஆரம்பமாகப் போகுது. “

“மாமா…”

“வேற வழியில்ல மலரு. பாப்பா நல்லா படிக்கனுமா வேண்டாமா ? “

“படிக்கனும் மாமா… “

“அப்ப கொஞ்சம் பொறுத்துகோ. காலையில் ஒன்பது மணிக்குப் போனா சாயந்தரம் நாலு மணிக்குள்ள வந்திட போறா. “

“சரி மாமா… ஆனா பாப்பாவை பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விடவும் அழைச்சிட்டு வரவும் நானும் போவேன். “

“ஏன் மலரு அடம்பிடிக்கற. பாப்பா நம்ம காரில் தானே போயிட்டு வரப்போறா… “

“அதெல்லாம் முடியாது… “

“சரி… சரி… நீயும் நம்ம டிரைவர் கூடப் போயிட்டு வா. “

“தேங்க்ஸ் மாமா… “

“பாருடா… என் மலரு இங்கிலீஷ் எல்லாம் பேசறா.. “

“என் பாப்பா சொல்லிக் கொடுத்தாளாக்கும். “

“ஓ… அதுக்குள்ள இந்தச் சின்ன மேடம் பெரிய மனுசி ஆகிட்டாங்களோ ? ” என்று கேட்ட ஆதி உறக்கத்திலிருந்த வேணியின் தலை முடியை கோதி விட்டார்.”நான் ஒன்னு கேட்கவா மலரு… “

“கேளுங்க மாமா… “

“நீ ஏன் நமக்கு இன்னொரு புள்ள வேணான்னு சொல்ற ? நம்ம வம்சத்தைத் தளைக்க வைக்க ஒரு ஆண் வாரிசு வேண்டாமா ? “

“ஏன் மாமா… பொம்பளப் புள்ள வாரிசு இல்லையா ? ஆம்பள புள்ள தான் வாரிசாக முடியுமா ? பொம்பள புள்ளைக்கும் நாம தானே அப்பா அம்மா. நம்மோட இரத்தம் தானே இந்தப் புள்ள உடம்புலையும் ஓடுது. நீங்களும் ஏன் மத்தவங்க மாதிரி யோசிக்கறீங்க ? “

“ஐயோ மலரு‌.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லல… “

“போங்க… பேசாதீங்க… “

“மலரு.. என்னைப் பாரேன்… ” என்றவர் மலர்கொடியின் முகம் நிமிர்த்தி… “என்ன தான் நாம பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும் ஒருநாள் பாப்பா நம்மை விட்டுட்டு புருஷனோட புகுந்த வீட்டுக்கு போயிடுவா இல்லையா ? அதை நினைச்சு தான் சொன்னேன்‌. “

“…”

“இங்க பாரு மலரு… புள்ள எதுவா இருந்தாலும் அது நம்மோட உசுரு தான். அதை நான் எப்பவும் பிரிச்சி பார்க்க மாட்டேன். என்னை நம்பு. நான் சொல்ல வந்தது என்னன்னா… நாம இன்னொரு குழந்தை பெத்துக்கலாமான்னு தான் கேட்க வந்தேன். “

“நிஜமா ? “

“உன் மேல சத்தியம் மலரு… ” என்றவரை மலங்க மலங்க பார்த்த மலர்கொடி அவரின் நெஞ்சில் தலை சாய்ந்தார்.

“மாமா… பாப்பாவை எதுக்கு வீட்டை விட்டு அனுப்பனும்…நம்மோடவே வெச்சிக்கலாம். “

அவரின் கேசம் வருடிய ஆதி,

“உன் இஷ்டப்படியே செய்வோம் மலரு. ” என்றிட,

“ஏன் மாமா… உங்களுக்குக் கண்டிப்பா பையன் வேணுமா ? “

“கட்டாயம் எல்லாம் எதுவுமில்ல… “

“அப்ப இனிமே இதைப் பத்தி கேட்க கூடாது. நமக்குப் பாப்பா மட்டும் போதும் அவளை நல்லா படிக்க வெச்சி… காலத்துக்கும் நல்லா பார்த்துக்கிட்டா போதும். “

“சரி மலரு… ” என்றவர் அணைப்பில் இதமாக இமை மூடி உறக்கத்தைத் தழுவினார் மலர்கொடி.இப்படியே சில நாட்கள் கரைய வேணிக்கு பள்ளி விடுமுறை நாட்கள் வந்தது. அந்த விடுமுறை நாட்கள் எல்லாம் மலர்கொடி வேணியுடனே கழித்தார். தாய் தன் மகள் மேல் வைத்திருக்கும் அன்பை கண்டு வியக்காதவர் எவரும் இல்லை.

அப்படி இருந்த நேரத்தில் தான் ஒரு அசம்பாவிதம் நடந்தது.அந்த ஊர் திருவிழா நடந்த சமயம்… ஆதியும் மலர்கொடியும் வேணியுடன் திருவிழாவை காண சென்றனர். குழந்தையைச் சிறு சிறு விளையாட்டு ஊஞ்சல்களில் அமர வைத்து அவள் சுற்றி வருவதைக் கண்டு கை தட்டி ரசித்துக் கொண்டிருந்தார் மலர்கொடி. ஆதி இருவருக்கும் திண்பண்டம் வாங்க கடைக்குச் சென்ற வேளையில் பெரிய அளவு ராட்டினம் ஒன்று அதன் அச்சிலிருந்து உடைந்து கீழே விழ ஆரம்பித்தது. அதைக் கண்ட மக்கள் கூட்டம் அங்குமிங்கும் சிதறி ஓடியது. வேணி குதிரை வடிவ ஊஞ்சலில் அழுதபடியே அமர்ந்திருக்க… அவளைத் தூக்க ஓடினார் மலர். அதற்குள் பெரிய ராட்டினம் கீழ் புறமாகச் சரிய… மகளைக் காப்பாற்ற விரைந்தார்… வேணியைக் கையில் எடுத்த சமயம் ராட்டினம் சரிந்து மலர்கொடி மேல் விழ… மகளை மடியில் ஒளித்து வைத்து அவளைக் காப்பாற்றித் தன் உயிர் துறந்தார் மலர்கொடி.

அதுவரை தன் மகளை இமைக்குள் வைத்து பார்த்துக் கொண்ட மலர்கொடி… உயிரற்ற உடலாய் கூடத்தில் கிடத்தப்பட்டுக் கிடக்க… அவர் அருகே அழுத படியே தன் தாயை எழுப்பிக் கொண்டிருந்தாள் வேணி.

“அம்மா… அம்மா… ” என்ற வேணியின் அழுக்குரல் கல் மனதையும் கரைய‌ வைத்து கண்ணீரை வழிய வைத்தது.

“இந்தப் புள்ள மேல உசுரையே வெச்சிருந்தாளே… இப்படிப் பாதியிலையே போட்டாளே…. அடியேய் மலரு… பாரு டி உம் புள்ளை அழுகுது. எழுந்து வாடி… ” என்று கதறினார் வைரம்.

இடிந்து போய் அமர்ந்திருந்த ஆதி… தன் தாயின் கதறல் கேட்டு மெல்ல அசைந்தார். எழுந்து தன் மனையாளின் உடலருகே சென்றவர் கண்களுக்கு… மகள் வேணி மனைவி மலரின் தாடையை வருடிக் கொண்டு இருப்பதைப் பார்த்ததும் வெடித்துக் கொண்டு அழுகை வந்தது.

“வேணி… பாப்பா… ” என்ற கதறலோடு தன் மகளை அணைத்தவர்… இனி தன் வாழ்வு தன் மகளுக்காகவே என்று முடிவெடுத்தார்.

தாயின் உடல் அந்த வீட்டை விட்டு வெளியேறுவதை அறிந்து அவ்வுடலை தொடர முயன்ற வேணியைத் தன் கை வளைக்குள் நிறுத்திக் கொண்டார் வைரம். எங்கும் அழுகுரல்… அழுது அழுது ஓய்த மூவரும் மலர் இல்லாத வாழ்க்கைக்குத் தங்களைப் பழகி கொள்ள ஆரம்பித்தனர்.

இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு… ஊரும் உறவும் ஆதியை மறுமணம் புரிந்து கொள்ள வழியிறுத்த ஆரம்பித்தது. அதை அநேக முறை தவிர்த்து வந்தவர்… எதன் காரணம் கொண்டோ விசாலத்தை மணம் செய்யும் முடிவை மேற்கொண்டார். விசாலத்தின் வருகை தந்தையையும் மகளையும் மொத்தமாகப் பிரித்துவிடும் என்பதை அறிந்திடாத வைரமும் அந்தத் திருமணத்தை மனமார ஏற்க தயாரானார். வேணியும்‌ தனக்குப் புதிய தாய் கிடைக்கப் போவதாய் நினைத்து உவகைக் கொண்டாள்.

தொடரும்…