அத்தியாயம் – 19

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 19

மொட்டை மாடி நிலவின் வெளிச்சத்தில் இரவின் குளுமையில் மாறனோடு பழங்கதைகள் பேசிக் கொண்டிருந்த வேணி, அவன் தோளில் சாய்ந்த படியே உறங்கிவிட, உறங்கும் அவளின் அழகை ரசித்த படியே அவனும் உறங்கிவிட்டான்.

விடியலுக்கு முன்னமே எழுந்திட்ட வினோத், அவர்களைத் தேடி மாடிக்கு வர, இருவரும் சுவர் ஓரமாக ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து உறங்குவதைக் கண்டு முறுவலித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“சகோ… மாறன் சகோ… ” என்றழைத்தவன், மெல்ல அவன் தோள் தொட்டு லேசாக அசைத்தான். அசைவில் உறக்கம் கலைந்து எழுந்தான் மாறன்.

“குட்மார்னிங் சகோ, ” என்று வினோத் கூற,

“வினோத்…” என்றபடியே சுற்றியும் பார்வையைச் சுழலவிட்டான் மாறன்.

“ஓ… மாடியிலேயே தூக்கிட்டோமா ? ” என்று முணுமுணுப்பாகத் தனக்குத் தானே கூறிக்கொண்டவன், வினோத்தை பார்த்து…. “சொல்லுங்க சகோ, ” என்றிட,

“நான் கிளம்பனும். அதான் உங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பலான்னு வந்தேன். “

“மணி என்ன ? “

“நேரம் விடியறை நாலு… “

“நாலாகிடுச்சா… ” என்றவன் எழ முயல, அவன் தோளில் சாய்ந்திருந்தவள் அசைந்தாள்.

அவளின் கன்னம் பற்றிய மாறன், “வேணிம்மா… எழுந்திரி. நேரமாகுது. ” எனக்கூறி லேசாகக் கன்னம் தட்டினான்.

வேணியின் உறக்கம் மெல்ல கலைத்தது. உறக்கத்தில் தன்னை யாராவது தொட்டால் கோபம் கொள்ளும் இயல்பு கொண்ட வேணி, “யார் என்னை அடிச்சது ? ” என்று கத்தியபடியே கண்விழித்தாள்.

“பேபி… இங்க பாரு. நான் தான். ” என்றான் மாறன்.

“நீங்கன்னா அடிப்பீங்களா ? ” என்றவள் விருட்டென எழுந்து நின்றாள். உறக்கம் முழுமையாகக் களையாத காரணத்தால் அவள் கால்கள் தடுமாறியது. சட்டென எழுந்த மாறன், அவள் இடைபிடித்துத் தடுமாறாமல் தடுத்தான்.

“நான் எங்க இருக்கேன் ? இது… ” என்றவள் கண்களைச் சூழலவிட,

“வேணி… என்னைப் பாரு. ” எனக்கூறி அவள் முகத்தைத் தன்புறமாகத் திரும்பினான் மாறன்.

“நாம மொட்டை மாடியிலேயே தூக்கிட்டோம். வினோத் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்லாரு. இங்க பாரு… நான் சொல்றது புரியுதா ? ” என்றவனை முழித்துப் பார்த்த கிருஷ்ணவேணி,

“மாமா… ” என்றுவிட்டு, நேற்று இரவு நடந்த நிகழ்வுகளை நினைவுப்படுத்திக் கொண்டு, மெல்ல ஆசுவாசம் அடைந்தாள்.

“சாரி… தூக்கத்தில் யாராவது எழுப்பினா நான் இப்படித் தான் அக்ரஷிவா பிஹேவ் பண்ணுவேன். ” என்று மாறனை பார்த்து கூறியவள், “வினோ… கிளம்பிட்டியா ? ” என்றாள்.

“ஆமாம் க்ரிஷ், இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். “

“சரி… பார்த்து போ. ரீச்சாகிட்டு கூப்பிடு. “

“ஓகே… “

“அம்மா அப்பாவை கேட்டேன்னு சொல்லு. “

“ம்… “

“அப்புறம் அவங்களைக் கூட்டிக்கிட்டு ஒருநாள் வீட்டுக்கு வா. “

“நீ, கல்யாண விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு கூப்பிடு. நான் குடும்பத்தோட ஆஜர் ஆகிடறேன். ” என்றான் வினோத் புன்முறுவலுடன்.

“ம்… ” என்றவள் “அதுக்குக் கொஞ்சம் லேட்டாகும் வினோ. அப்பாவோட உடல்நிலையைப் பார்த்துக்கிட்டு தான் ஏற்பாடு பண்ணனும். எனக்கும் எக்ஸாம் இருக்கு, மாமாவுக்கும் வேலையிருக்கு. மே பீ ஒன் ஆர் டூ மன்த்ஸ் ஆகலாம். “

“அது பரவாயில்லை… ஆனா கல்யாண விருந்து வைக்கலன்னா நான் உன்னோட பேசவே மாட்டேன். எல்லார்கிட்டையும் சொல்லி… உன்னோட பேச வேண்டான்னு சொல்லிடுவேன். ஆமாம் ! ” என்று மிரட்டல் விடுத்தான்.

அவனைக் கடுமை நிறைந்த பார்வை பார்த்த க்ரிஷ், “சரிடா… ” என்றிட,

“கோச்சிக்காதே பேபி… ” என்ற வினோத் அவள் கன்னம் கிள்ள,

கோபம் தணிந்தவளாக, “சரி வா.. உனக்கு டீ போட்டுத் தரேன். குடிச்சிட்டுக் கிளம்பு. ” என்றுவிட்டு கீழே சென்றாள். அவளை மாறனும் வினோத்தும் தொடர்ந்தனர்.

படியில் இறங்கி கொண்டிருந்த வேணியிடம் மாறன், “வேணிம்மா நீயும் சீக்கிரம் ரெடியாகிடு. நாம ஆறு மணிக்கு கிளம்பனும். ” என்றான்.

நடந்தவள் திரும்பி அவனைப் பார்த்து… ” எங்க ? ” என்றிட,

“எங்கன்னா ? ஷுட்டிங் ஸ்டாட்டுக்கு தான். “

“நானுமா ? இங்க ஆள் இருக்க வேண்டாமா ? “

“நீ இருக்க வேண்டாம். அக்காவோட துணைக்குக் கற்பகம் அம்மாவும் கல்யாணி பாட்டியும் இருக்கட்டும். நீ இருந்தா அக்கா தேவையில்லாம வலுசண்டைக்கு இழுப்பா. உனக்கும் தேவையில்லாம மன உளைச்சலாகும். என்னோட வந்தா… எனக்கும் உதவியா இருக்கும். “

“உங்க அக்காவுக்குப் பயந்து திரும்பத் திரும்ப நான் ஓடிக்கிட்டே இருக்கனுங்கறீங்க ? அப்படித் தானே ? “

“அச்சோ… அப்படி எல்லாம் இல்ல வேணிம்மா. உனக்கு இங்க இருக்கனும்னா இரு. எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல. நீதான் இப்ப நல்லா பேசறியே ? அப்புறம் நான் ஏன் உன்னைப் பயந்து ஓடச்சொல்லப் போறேன். இது உன் வீடு… அவதான் இங்க விருந்தாளியா வந்திருக்கா ? “

“அப்புறம் என்ன ? “

“உன்னோட அவ சண்டை போட்டா மாமாவுக்குத் தான் பிரஷராகும். அதுபோக எனக்கும் நீ அங்க வந்தா உதவியா இருக்கும். அதுக்குத் தான். ” என்று இழுத்தான் மாறன்.

“அப்பாவோட சேர்ந்து நல்லா சமாளிக்கக் கத்துக்கிட்டீங்க. ” என்றவள், “நானும் வரேன். உங்க அக்கா மூஞ்சை பார்த்துக்கிட்டே இருந்தா எனக்கும் கடுப்பாகும். ” என்றபடியே சமையலறை நுழைந்தாள்.

அவளைத் தொடர்ந்த மாறன், “பேபி… என் மேல கோவமா ? “

“அதெல்லாம் ஒன்னுமில்ல… கொஞ்சம் காண்டா இருக்கு ? ” என்றபடியே அடுப்பை பற்ற வைத்தாள்.

“உங்களுக்கு டீயா ? காபியா ? ” என்று கேட்டபடியே பால் பாக்கெட்டை குளிர்சாதனப் பெட்டியில் இருந்து எடுத்த வேணியிடம்,

“எனக்கு எதுனாலும் ஓகே. என்னோட சாய்ஸ் இதுன்னு நான் என்னிக்கும் கேட்டது இல்ல. அதெல்லாம் என் அம்மாவோட போயிடுச்சு. “

“அதான் இப்ப கேட்கறேன் இல்ல ? சொல்ல வேண்டியது தானே ? என்ன சிம்பதி க்ரியேட் பண்றீங்களா ? உங்களை விட எனக்கு அதிகக் கஷ்டம் இருக்கு. சொல்லவா ? “

“தெரியாம சொல்லிட்டேன் தாயே. எதையாவது போடு. நான் போய்க் குளிச்சிட்டு வரேன். ” என்றுவிட்டு நகர முயன்றவன் டிசர்ட்டை பற்றியவள்,

“இருங்க ரூமுல மிது தூங்கறா… அவ எந்த நிலையில் படுத்திருக்காளோ தெரியல ? நீங்க பாட்டுக்கு போகாதீங்க ? ” எனக்கூறி அவனைத் தடுத்தாள்.

“சரி, அப்ப நீ போய்… என் டிரஸை எடுத்திட்டு வந்து தருவியாம். நான் வெளிய இருக்கற பாத்ரூமில் குளிச்சிப்பேனாம்.” என்றபடியே அவள் கன்னத்தைத் தன் விரல் கொண்டு வருட, அவளோ அதைத் தட்டிவிட்டு,

“அப்ப நீங்க டீ போடுங்க. நான் போய் உங்களுக்குத் தேவையானதை எடுத்திட்டு வரேன். “

“நீ டீ போட்டுக் கொடுத்திட்டு கூடப் போய் எடுத்திட்டு வாடி செல்லம். “

“ம்… ” என்றவள் அவனை முறைத்தபடியே தேநீர் தயாரிக்கத் தொடங்கினாள்.

“பேபி… இப்பவாவது சொல்லேன் ! “

“என்ன சொல்றது ? “

“ம்… என்னைப் பிடிச்சிருக்குன்னு. “

அவனைக் கூர்மையாகப் பார்த்த கிருஷ்ணவேணி, “பிடிச்சிருக்குன்னு சொல்லச் சொல்லி, நீங்க என்னை ரொம்பப் பேர்ஸ் பண்றீங்க மாறன். ” என்றவள் கூற மாறன் முகம் மாறியது. அதுவரை குதூகலத்துடன் இருந்தவன், ஏதோ தவறு செய்ததைப் போல உணர்ந்தான்.

சில கனங்கள் அவனிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருக்கவே அவன் முகத்தைத் திரும்பி பார்த்தாள் வேணி.

“என்னாச்சு ? மூஞ்சு ஏன் இப்படி இருக்கு ? ” என்று கேட்டபடியே தேநீரை வடிகட்டினாள்.

அவனோ… “சாரி வேணி… நான் உன்னைப் பேர்ஸ் பண்ணனும்னு நினைக்கல. ஏதோ ஒரு ஆர்வத்தில் தான் கேட்டேன். தப்பா இருந்தா மன்னிச்சிக்கோ. ” என்றான் மாறன்.

அவன் முகம் பார்த்தவள் வடித்த தேநீரை சர்க்கரை கொண்டு கரைத்த படியே, “உங்களைப் பிடிக்காம தான் உங்க அக்காவோட சண்டை போட்டேன். இது என் வீடு, என் இஷ்டபடி தான் நடந்துக்கனும்னு சொன்னேன். நைட் முழுக்க உங்க நெஞ்சில் சாய்ஞ்சி தூங்கினேன் ? இதை விட வேற என்ன ப்ரூஃப் வேணும் உங்களுக்கு ? ” என்றவள் அவன் கைகளில் தேநீர் குவளையைத் திணித்தாள்.

“வாய் திறந்து சொல்லலாம் இல்ல ? ” என்றபடியே முகத்தைத் தொங்கவிட்டிருந்தான் மாறன்.

“சொல்ல முடியாது போடா… ” என்றவள் இரண்டு தேநீர் குவளையுடன் ஹாலுக்கு வர, அங்கே தேமே என்று அமர்ந்திருந்தான் வினோத்.

அவன் கைகளில் ஒரு குவளை தேநீரை கொடுத்தவள், அவனருகே அமர்ந்து பேசிய படியே தேநீரை குடித்தாள்.

“எல்லார்கிட்டையும் சிரிச்சி சிரிச்சு பேசு. என் கிட்ட மட்டும் மூஞ்சை காட்டு. ” என்று மனதில் அவளைத் திட்டிய படியே அவர்களை நெருங்கினான் மணிமாறன்.

சில நிமிட உரையாடலுக்குப் பிறகு வினோத், ” ஓகே க்ரிஷ், நான் கிளம்பறேன். அப்பாவை பார்த்துக்கோ. சுகர் டெஸ்ட் எடுத்து ரெகுலர் டேப்ளெட் எடுத்துக்க வை‌. நாம அப்புறம் சந்திக்கலாம். ” என்றுவிட்டு மாறனை பார்த்தான்.

“சகோ… ” என்றபடியே அவனை ஆரத்தழுவிய வினோத், “க்ரிஷை பார்த்துக்கோங்க. உங்க பேமலி விசயத்தில் நான் தலையிட விரும்பல, ஆனாலும், உங்க சிஸ்டர் க்ரிஷை டார்ச்சர் பண்ணாம பார்த்துக்கோங்க. நான் வரேன். ” என்றான்.

“ம்… பார்த்து போங்க. போயிட்டு கால் பண்ணுங்க. என் நம்பர் இருக்கில்ல ? ” என்றான் மாறன்.

“இருக்கு… நேத்து தானே சேவ் பண்ணினேன். ” “ஓகே பை… க்ரிஷ் அப்பா கிட்ட சொல்லிடு. ” என்றபடியே வாசல் நோக்கி நடந்தான் வினோத். அவனை மாறனும் வேணியும் தொடர்ந்து சென்று வழியனுப்பி வைத்தனர்.

அவன் கார் புழுதியை கிளம்பிக் கொண்டு கிளம்பியது. இருவரும் மீண்டும் வீட்டிற்குள் நுழைய, வேணி நேராகப் படுக்கையறைக்குச் சென்றாள். மாறனுக்குத் தேவையான உடைகளை எடுத்து வந்து அவன் முன் வைத்தவள், “போங்க போய்க் குளிங்க. ” என்றிட,

அவளை முறைத்தபடியே உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றான்.

அவளோ நமட்டுச் சிரிப்புடன் உணவு மேஜை மேல் சிதறி கிடந்த உணவு பொட்டலங்களை எடுத்துக் குப்பையில் போட்டு மேஜையைத் துடைத்துச் சுத்தம் செய்தாள். வாசலுக்குச் சென்றவள் அதைக் கூட்டி கோலமிட்டாள்.

குளித்து முடித்து வந்த மாறன் தலையைத் துவட்டிய படியே அவள் வரையும் கோலத்தை ரசித்துக் கொண்டு நிற்க, கோலமிட்டு எழுந்தவள் அவனை நெருங்கி வந்து கோலமாவை கன்னத்தில் பூசிவிட்டு செல்ல,

“ம்ச்… இப்பதான் குளிச்சேன். ” என்று முணுமுணுத்த படியே கன்னத்தைத் துண்டால் துடைத்தான்.

அவளோ கள்ளச் சிரிப்புடன் படுக்கையறை சென்று குளித்துத் தயாராகி வர… கடிகாரத்தில் இருந்த முற்கள், நேரம் ஐந்தே முக்கால் என்றது.

சோபாவில் அமர்ந்து அன்றைய வேலைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்த மாறனை நெருங்கிய கிருஷ்ணவேணி, “நான் ரெடி… ” என்றிட,

அவளை நிமிர்ந்து பார்த்த மாறன், அவள் உடுத்தி வந்த உடையில் தன்னை மறந்தான்.

இமைக்காமல் தன்னைப் பார்க்கும் அவனை, “நானே போய் டிரஸ் எடுத்தா கூட இவ்வளவு கரைக்டா பிட்டிங்கா எடுக்க முடியறதில்ல. நீங்க எப்படித் தான் இப்படிப் பிட்டிங்கா எடுத்திங்களோ தெரியல ? ” என்றாள் கேலி கலைந்த குரலில்,

அவளின் கேலி பேச்சுக்கு எதிர்வினை புரியகூடாது என்று முடிவெடுத்த மாறன், “போகலாமா ? நேரமாகிடும். ” என்றுபடியே சோபாவில் இருந்து எழுந்து நின்றான்.

அதே நேரம் உறக்கம் கலைந்து எழுந்து வந்தார் ஆதிசேஷன்.

“என்ன மாப்பிள்ளை வேலைக்குக் கிளம்பியாச்சா ? ” என்றவர் குரலுக்கு இருவரும் திரும்பினர்.

“குட்மார்னிங் அப்பா… ” என்ற வேணி ஓடிச் சென்று அவரைக் கட்டிக் கொள்ள,

“குட்மார்னிங் வேணிம்மா… ” என்றபடியே அவள் தலை முடியை வருடிக் கொடுத்தார் ஆதி.

மாறனோ, “மாமா… இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும். அதான்… ” என்றிட,

“சரி, மாப்பிள்ளை… நல்லா பண்ணுங்க. நம்ம குலசாமி துணை இருக்கும். ” என்று வாழ்த்தினார்.

“ம்… தேங்க்ஸ் மாமா. ” என்ற மாறன் அவர் கால்களில் விழுந்து வணங்க, அவன் தலை தொட்டு ஆசி கூறினார் ஆதிசேஷன்.

“அப்பா… உங்களுக்குக் காபி போட்டு தரவா ? ” என்று வேணி கேட்க,

“நானே போட்டுக்கறேன் வேணிம்மா… நீங்க கிளம்புங்க. “

“மாமா… சாப்பிட்டதும் மாத்திரை இருக்கு. மறக்காம போட்டுக்கோங்க. மதியம் நான் ஒரு எட்டு வந்து பார்த்திட்டு போறேன். வெளிய எங்கையும் அலையாதீங்க. அக்கா உங்களுக்கு ஏதாவது வேலை சொன்னா… எனக்குப் போன் பண்ணுங்க. நான் பேசிக்கறேன். அங்க என் பிரண்ட்ஸ் யாராவது ப்ஃரியா இருந்தா, இங்க உங்க உதவிக்கு அனுப்பி வைக்கறேன் மாமா. கொஞ்சம் கவனமா இருங்க. ” என்றான் மாறன்.

“பயப்படாத மணி. நான் கவனமா இருக்கேன். என்னைப் பத்தி யோசிச்சு உன் வேலையில் கவனம் இல்லாம இருந்திடாதே. இது உன்னோட பல வருஷ கனவு… இதை நீ அடையறது தான் எனக்குப் பெருமை. “

“கண்டிப்பா உங்களைப் பெருமைப்படுத்துவேன். ” என்ற மணிமாறனை தன் மார்போடு அணைத்து நெற்றியில் முத்தமிட்டார் ஆதிசேஷன்.

முதல்முறையாக அவர்களில் அன்பை நேரடியாகப் பார்த்த கிருஷ்ணவேணிக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. அது ‘தன்னைத் தன் தந்தை எப்படி நேசிக்கின்றாறோ அதில் அணு அளவும் குறையில்லாமல் மணிமாறனையும் நேசிக்கிறார்’ என்பது தான்.

அவள் மனதில் பல வருடங்கள் இருந்த பயம் அகன்று புதுத் தெம்பு பிறந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த வேளையில் தந்தைக்குக் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்துவிட்டாள் வேணி.

“காபி போட்டுட்டியா பட்டு. உன் அம்மா மாதிரியே… ” என்றவர் சட்டெனப் பாதியிலேயே நிறுத்திக் கொள்ள மாறன் சிரித்துவிட்டான்.

“அக்காவுக்கு ஏன் மாமா இப்படிப் பயப்படறீங்க ? ” என்றவன் கேட்க,

“உனக்கு இப்பதானே கல்யாணம் முடிஞ்சிருக்கு. கொஞ்ச நாள் கழிச்சு நீ பயப்படுவ இல்ல… அப்ப இதே கேள்வியை நானும் கேட்பேன். ” என்றார் ஆதி புன்னகையுடன்.

“அப்பா… என்னைப் பத்தி நீங்களே குறையா சொல்றீங்களே ? இது நியாயமே இல்ல… ” எனக்கூறிய வேணி முகத்தைத் திருப்பிக் கொள்ள,

“உன்னைப் பத்தி குறை சொல்லல பட்டு. எல்லாப் புருஷனும் பொண்டாட்டிக்கு பயந்து தான் ஆகனும்னு சொன்னேன். “

“போங்கப்பா… “

“சரி… சரி… கோச்சிக்காதே. ” என்றவர் அவள் முகம் திருப்பி, “உன் கல்யாணத்தைப் பத்தி அப்பா உன்கிட்ட கேட்காமையே முடிவு பண்ணிட்டேன். அதுக்குக் காரணம் மணி உனக்குப் பொருத்தமா இருப்பான்னு தோணிச்சு. அவனுக்கு உன்னோட நல்லது கெட்டதில் அக்கறை இருக்குன்னு எனக்குத் தெரியும். அதான் அவசரமா முடிவெடுத்தேன். உங்க விரும்பத்தைக் கேட்டுக் கல்யாணத்தைப் பெருசா நடத்தனும்னு தான் ஆசைப்பட்டேன். ஆனா பாட்டிக்கு திடீர்னு இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கல. அதான் உங்க விருப்பம் கேட்காமையே கல்யாணம் பண்ணிக்கக் கட்டாயப்படுத்தினேன். “

“இப்ப இந்த விளக்கம் எல்லாம் எதுக்குப்பா ? எனக்கு உங்களைப் பத்தி தெரியாதா என்ன ? நீங்க எனக்கு எது செஞ்சாலும் அது நல்லதா தான் இருக்கும். ” என்றாள் வேணி.

“அப்பாவை நீ புரிஞ்சிக்கிட்டதே போதும் வேணிம்மா. ” என்றவர், “சரி கிளம்புங்க. அப்புறம் நேரமாகிடும். ” என்று அறிவுருத்தினார்.

இருவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக் காரில் ஏறினர். கார் கிளம்பியது… மாறன் அமைதியாகக் காரை செலுத்தி கொண்டிருக்க, “இப்ப எதுக்கு மூஞ்சை ‘ம்ன்னு’ வெச்சிக்கிட்டு இருக்கீங்க ? ” என்றாள்.

“என் மூஞ்சி… நான் எப்படி வேணா வெச்சிப்பேன். ” என்றபடியே காரை செலுத்தான் மாறன்.

“ஓ… அப்படியா ? ” என்ற வேணி, “பார்த்துக்கறேன்… ” என்றவிட்டு மௌனமாள்.

ஷுட்டிங் ஸ்பாட்டை அடைந்தது அவர்களின் கார். அங்கே நண்பர்கள் சிலர் முன்னே வந்திருக்க… மாறன் அவர்களுடன் இணைந்து தன் பணியைத் தொடங்கினான். வேணியும் சிநேகாவும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்ய, இடைவிடாத பத்து நாள் உழைப்பில் தயாரானது விளம்பரப்படம்.

தொடரும்….