அத்தியாயம் – 18

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 18

“என் பொண்ணு ஒரே போடா போட்டுட்டாளே… ” என்று நினைத்த ஆதி, மாறனை பார்க்க, மாறனோ அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் டா உன் பொண்டாட்டி இஷ்டத்துக்குப் பேசிட்டு போறா ? அவளை எந்தக் கேள்வியும் கேட்காம அமைதியா நிக்கற ? ” என்று விசாலம் மாறனிடம் எகிற,

“அக்கா, அவ சொன்னதில் தப்பு எதுவும் இல்லையே ? ” என்ற மாறன், சாப்பாட்டுப் பொட்டலங்களை உணவு மேஜை மேல் வைத்தான்.

“என்னடா தப்பில்ல ? சின்னம்மாங்கற மரியாதை இல்ல, தாய்மாமன் பொண்டாட்டின்னு அதிகாரமா பேசிட்டு போறா ? “

“அக்கா, அவ முதலில் நியாயமா மரியாதை தந்து தான் பேசினா. நீதான் அதைக் கெடுத்துக்கிட்ட ? “

“ஓ… அப்படியா ? ” என்ற விசாலம், “தாய்மாமன் முறை செய்யனும் இல்ல, அப்ப வெச்சிக்கறேன் உன்னை ! ” என்றிட,

மிதுளா அறை வாசலுக்கு வந்து, “அம்மா, சவால் எல்லாம் விடாதே. ஏன்னா இவரு உன் தம்பி மட்டும் இல்ல. மூத்த மாப்பிள்ளை… பதில் முறைக்கு மாமா சொத்தையே கேட்டாலும் நீ கொடுத்து தான் ஆகனும். ” என்றிட, அவளைத் திரும்பி பார்த்து முறைத்தார் விசாலம்.

“ஆமாம் விசாலம், மாப்பிள்ளை கிட்ட பேசும் போது… கொஞ்சம் பார்த்துப் பதமா பேசு. ஏன்னா அவரு பொண்டாட்டி உன்னை விடப் பெரிய வாயாடியா இருக்கும் போல. ” என்றார் ஆதி நமட்டுச் சிரிப்புடன்.

“எல்லோரும் கணக்கு போட்டு தான் காய் நகர்த்தி இருக்கீங்க. பேசிக்கறேன்… ” என்ற விசாலம் சோபாவில் பெத்தென்று அமர,

மாறன் தட்டில் உணவுகளை எடுத்து வைத்து ஆதியிடம் கொடுத்தான். “மாமா, சாப்பிடுங்க. மாத்திரை போடனுமாம். டாக்டர் சொன்னாரு. ” எனக்கூறி வினோத்தை பார்த்தான்.

அவரும் உணவு தட்டை பெற்றுக் கொண்டு புன்னகையுடன் வினோத்தை பார்த்து, “தப்பா எடுத்துக்காதீங்க தம்பி… எங்க குடும்பத்தில் கொஞ்சம் லூசுத்தனமா தான் பேசவோம். ” என்றிட,

அவனும் சிரித்துவிட்டான். மாறனும் சிரித்த படியே விசாலத்திற்கு உணவை வழங்க, அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

“அக்கா, இங்க பாரு… என்னைப் பாரு. ” என்ற மாறன் விசாலத்தின் கன்னத்தைத் தன் புறமாகத் திருப்பி, “மிதுவுக்கு நல்லா பெருசா ஊரே வாயை பிளக்கற அளவுக்கு விசேஷம் பண்ணலாம். ஆனா ஒரு மாசம் கழிச்சுப் பண்ணலாம். இப்போதைக்கு மாமாவுக்கு உடம்பு சரியாகனும். அவ விசேஷத்தில் மாமா திடகாத்திரமா இருந்தா தானே உனக்குச் சந்தோஷம். ” என்று அன்பான குரலில் கேட்க,

அவனைக் கண்கள் கலங்க பார்த்தார் விசாலம். என்னதான் எடுத்தெறிந்து பேசினாலும் மணிமாறன் தவிர வேறு எந்த உறவும் விசாலத்திற்கு இல்லை. மாறன் வேணியைத் திருமணம் முடித்ததிலிருந்து, எங்கே அவன் தன்னை விட்டுக்கொடுத்துவிடுவானோ என்ற பயம் விசாலத்தின் மனதை பிராண்ட தொடங்கியிருந்தது. அதன் காரணமாக இப்போது அவன் அன்பாகப் பேசவும் கண்கள் கசிந்து கண்ணீர் வழிந்தது.

அவரின் கண்களைத் துடைத்துவிட்டவன், “மாமாவுக்கு உடம்பு சரியாகட்டும், அதுக்குள்ள நானும் என் வேலையை முடிச்சிடுவேன், மிதுவுக்கும் உடம்பு சரியாகிடும். பங்ஷனில் அவளும் தெம்பா தைரியமா இருப்பா. இப்ப ஊருக்கு போனா… ஆளுக்கு ஒன்னா பேசுவாங்க. அதனால ஒரு வாரம் பத்து நாள் இங்கையே இருங்க. தீட்டுச் சாங்கியம் எல்லாம் இங்கையே முடிச்சிட்டு போவோம். இங்க இருந்தா கற்பகம் அம்மா, கல்யாணி பாட்டி, எல்லாம் உனக்குத் துணையா இருப்பாங்க. அங்க போனா நீ தனியாளா சமாளிக்கனும். இங்க இருந்தா மிதுளாவை பார்க்க நம்ம சொந்தக்காரங்க யாரும் வரமாட்டாங்க. ஆனா, ஊருக்கு போனா நொடிக்கு ஒருத்தர் வருவாங்க. அவங்களைச் சமாளிக்கனும், சமைக்கனும், ஆள் மேய்க்கனும். மாமாவும் ரெஸ்ட் எடுக்கப் போயிடுவாரு. நானும் வேலை இருக்குன்னு இங்க வந்திடுவேன். நீ தனியா அங்க சமாளிக்க முடியுமான்னு யோசி. “

மாறன் கூறியதை கேட்ட விசாலத்தின் விழிகள் பிதுங்கியது. அவரின் ரியாக்ஷ்னை கண்டு மனதில் சிரித்த மாறன், “இப்ப புரியுதா ? வேணி பேசும்போது நான் ஏன் அமைதியா இருந்தேன்னு. ” என்று முடித்தான்.

“இவ்வளவு சொல்லியும் நீ ஊருக்குப் போகனும்னா சொல்லு, நான் வேணிகிட்ட பேசி சமாளிச்சிக்கறேன். ” என்ற மாறனை வெறித்துப் பார்த்த விசாலம்,

“இல்ல வேணாம், ஒரு வாரம் கழிச்சே போறேன். ” என்றிட, உள்ளிருந்த மிதுளா கனமாகச் சிரித்துவிட்டாள்.

சிரித்தவளை முறைப்பாக விசாலம் பார்க்க, “மிது… அமைதியா இரு. ” என்று அவளை அதட்டினான் மாறன்.

“சரி… அக்கா. இப்ப இதைச் சாப்பிடு. காலையில் பேசிக்குவோம். வர்ஷனுக்கு இட்லி இருக்கு… நைட் எழுந்தா சாப்பிட கொடு. பிஸ்கட், பால் கூட வாங்கிட்டு வந்திருக்கேன். சரியா… ” என்றபடி உணவு தட்டை விசாலத்தின் கைகளில் கொடுத்தான்.

தட்டில் விசாலத்திற்குப் பிடித்த உணவு இருப்பதைக் கண்டதும் கண்கள் விரிந்தது அவருக்கு. “அக்காவுக்கு என்ன பிடிக்கும்னு என் தம்பிக்கு தான் தெரியும். ” என்றபடியே உணவை பிட்டு வாயில் வைத்தார்.

“மணி… ” என்று ஆதிசேஷன் அழைக்க,

“என்ன மாமா ? சாம்பார் வேணுமா ? ” என்று கேட்டபடியே அவரை நெருங்கினான்.

அவரோ, அவன் காதருகே, “சமாளிச்சிட்ட… ” எனக்கூறி புன்னகைக்க, “எல்லாம் உங்க டிரைனிங் தான் மாமா. ” என்றுவிட்டு சாம்பாரை தட்டில் ஊற்றினான்.

அவன் கன்னத்தைத் தட்டிய ஆதி, “யாரு மருமகன் ? ஆதிசேஷன் மருமகன்னா சும்மாவா ? ” என்றிட,

“போதும்… உங்க பெருமை. அக்கா முறைக்குது. ” என்றுவிட்டு நகர்ந்தான்.

“வினோத்… வாங்க. சாப்பிடுங்க. ” என்ற மாறன் வினோத்தை அழைக்க,

“க்ரிஷ் கோச்சிக்கிட்டு போயிருக்காளே ? ” என்றான் அவன்.

அதைக் கவனித்த விசாலம், “அதெல்லாம் என் தம்பி சமாதானம் செஞ்சிப்பான். நீ உட்கார்ந்து சாப்பிடு. காலையிலிருந்து நானும் பார்க்கறேன்… உன் பேச்சும் தோரணையும் சரியாயில்ல. ஏதோ அவசரத்துக்கு ஒத்தாசை செஞ்சியேன்னு பொறுமையா இருக்கேன். ” என்றபடியே உணவை மெல்ல,

அவர் வாயில் தன்னையே மெல்வதாய்த் தோன்றியது வினோத்திற்கு. “ஐயோ ஆன்ட்டி, அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. ” எனக்கூறி அவசரமாக மறுத்தான் வினோத்.

“அப்ப நீ முதலில் சாப்பிடு தம்பி. விருந்தாளிங்களுக்கு முதலில் சாப்பாடு போடறது தான் எங்க வழக்கம். இவருக்கு உடம்பு சரியில்ல, காலையிலிருந்து நானும் சரியா சாப்பிடலங்கறதாலே தான் நாங்க முதலில் சாப்பிடறோம். ” என்று முடித்தார் விசாலம்.

“சரிங்க ஆன்ட்டி, ” என்ற வினோத் அமைதியாக உணவு மேஜையில் அமர, மாறன் அவனுக்கு உணவை பரிமாறினான்.

“நீங்க சாப்பிடுங்க… நான் மிதுளாவுக்குச் சாப்பாடு கொடுத்திட்டு வரேன். ” என்ற‌ மாறன், மிதுளாவுக்கு உணவு கொடுத்துவிட்டு வந்தான்.

“நீங்க சாப்பிடலையா ? ” என்று வினோத் கேட்க,

“வேணியைச் சமாதானம் பண்ணிட்டு அவளோட சேர்ந்து சாப்பிட்டுக்கறேன்… நீங்க சாப்பிடுங்க. “

“மாறன் சகோ… நீங்களுமா என்னைத் தப்பா நினைக்கறீங்க ? “

“ச்சே… ச்சே… இல்ல சகோ. “

“உங்க அக்கா என்னைத் தப்பா நினைக்கறாங்கன்னு நினைக்கறேன். “

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சகோ. “

“நிஜமாவே இல்ல தானே ? “

“நிஜமா…”

“தேங்க்ஸ் சகோ… ” என்ற வினோத் “நாளைக்குக் காலையில் சீக்கிரம் நான் கிளம்பனும். க்ரிஷ் கிட்ட சொல்லிடுங்க சகோ. ” என்றான்.

“கண்டிப்பா சொல்லிடறேன் சகோ. ” என்ற மாறன் அவன் தோள் தட்டி கொடுத்தான். வினோத் சிறிய புன்னகையுடன் நன்றி கூறினான்.

ஆதி சாப்பிட்டு முடித்திருக்க, விசாலம் அவரிடமிருந்த தட்டை வாங்கிக் கொண்டு அடுக்களை நுழைந்தார். உணவு மேஜையை நெருங்கிய ஆதி வினோத்திடம், “ரொம்ப நன்றிப்பா… இன்னிக்கு நீ மட்டும் இல்லன்னா… எனக்கு என்ன நடந்திருக்கும்னே தெரியாது. “

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க அப்பா. க்ரிஷோட அப்பான்னா எனக்கும் அப்பா தான். ஏன்னா… க்ரிஷ் என் அப்பாவை அவளோட அப்பாவா தான் பார்ப்பா. அவ உதவின்னு கேட்கும்போது நான் அங்க ஊரில் இருந்ததே… என் அதிர்ஷ்டம் தான். ” என்றவன் கண்கள் கலங்கியது.

மாறனும் ஆதிசேஷனும் அவனின் தோள்களைத் தட்டி சமாதானம் கூறி சாப்பிட வைத்தனர். அவனும் உண்டு முடிக்க, மூவருக்கும் படுக்க ஏற்பாடு செய்து தந்தான் மாறன்.

“மாமா… நீங்களும் அக்காவும் உள்ள படுத்துக்கோங்க. ஏன்னா மிதுளா அங்க தான் இருக்கா. நாங்க மூனு பேரும் இங்க ஹாலில் படுத்துக்கறோம். ” என்று மாறன் கூற,

“ஆம்பள பசங்க இரண்டு பேரும் வெளிய படுத்துக்கோங்க… உன் பொண்டாட்டியை உள்ள வந்து படுக்கச் சொல்லு. ” என்றார் விசாலம்.

“அதை அவ முடிவு பண்ணிக்கட்டும் விசாலம். ” என்ற ஆதி… “நீ வா… எனக்குத் தூங்கம் வருது. ” என்றபடியே அறை உள்ளே விசாலத்தை இழுத்துச் சென்றார்.

“ஏங்க ? என்னங்க நீங்க ? பசங்க ரெண்டு பேரும் கீழ படுத்துப்பாங்க. அவ எங்க படுப்பா ? “

“அதை அவ முடிவு பண்ணிக்கட்டும் விசாலம். நீ பேசாம தூங்கு. உன் கூட வாயாட என்னால முடியாது. வர்ஷன் தூக்கம் கலைஞ்சி எழுந்தா… அப்புறம் நீதான் அவனைத் தூக்கிகிட்டு நடக்கனும். ” என்று சன்னமான குரலில் கூறியவர், கட்டிலில் படுத்துக் கண்களை மூடினார்.

விசாலம் உறங்கும் மகனை பார்த்துவிட்டு தலையணையை மிதுளா அருகே எடுத்துப் போட்டு படுத்துக் கொண்டார்.

மாறன் விரித்துத் தந்த படுக்கையில் விழுந்த வினோத், களைப்பில் உறங்கிவிட்டான்.

அனைவரும் அவரவரிடத்தில் அமைதியாக உறங்குவதைக் கண்டு நிம்மதி அடைந்த மாறன். வேணியைத் தேடி மாடிக்குச் சென்றான்.

இளத்தென்றலின் இதமான குளிர் காற்றுத் தேகம் வருட, வானத்தில் ஒளிர்த்த வெண்ணிலவின் வெளிர் நிறம் செயற்கை மின் விளக்கின் வெண் ஒளியை போன்ற, இயற்கையான வெண் ஒளியை புவிதனில் படரவிட, அந்த ஒளி தந்த வெளிச்சத்தில் சிலையென நின்றிருந்த பெண்ணவளை கண்டு மனம் கொள்ளா ஆனந்தம் அடைந்தான் மணிமாறன்.

அவளின் சுடிதார் துப்பட்டா காற்றில் அலையாடி, அவள் தேகம் விட்டு விலகி செல்ல, அதைத் தன் கரத்தில் பற்றித் தடுத்து நிறுத்தினான். துப்பட்டாவை கையில் ஏந்தியவன் அவளை நெருங்கி சென்று… “வேணிம்மா… ” என்றழைக்க,

“நீங்க ஒன்னும் பேச வேண்டாம். நான் எதையும் கேட்கற மூடில் இல்ல. ” என்றாள் வேணி கடுமை நிறைந்த குரலில்.

“நானும் எதையும் சொல்ல வரல வேணிம்மா. “

“அப்ப… வேற எதுக்கு வந்தீங்க ? “

“உன்னைச் சாப்பிட கூப்பிடலான்னு வந்தேன். “

அவனைத் திரும்பி பார்த்த வேணி, “உங்க அக்கா சமாதானம் ஆகிட்டாங்களா ? ” என்று வினவ,

“அவளை நினைச்சா கவலைப்படற. நீ கவலைப்படற அளவுக்கு அவ வொர்த் இல்ல வேணி. “

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க மாமா. ஏன்னா அவங்களால தான் அப்பாவோட எனக்கிருந்த நெருக்கம் குறைஞ்சிச்சு. அதனால அவங்களைப் பார்த்தா எனக்குக் கொஞ்சம் பயம் தான். என்ன இருந்தாலும் நீங்க அவங்க தம்பி தானே ? என்னை விட்டுக்கொடுத்திட்டு அவங்களுக்குச் சாதகமா பேசினா ? நான் எங்க போவேன். “

“இதே பயம் அவளுக்கும் இருக்கும் இல்லயா ? ” என்றவன் கேட்க, வேணியின் முகபாவம் கேள்விக்குறியாய் மாறியது.

“வேணிம்மா… உனக்கு அவங்க என் அக்காங்கற நினைப்பு, அவளுக்கு நீ என் மனைவிங்கற நினைப்பு. இது இரண்டில் எதுக்கு வேல்யூ ஜாஸ்தி. “

“…”

“என் மனைவிங்கற நினைப்புக்கு தான் வேல்யூ ஜாஸ்தி. அதனால தான் நீ பேசினதும் அக்கா அமைதியாகிட்டா. அதனால உன் மனசில் இருக்கற பயத்தைத் தூக்கிப்போட்டுட்டு, உன் உரிமையை, கடமையைச் செய். உன் பாட்டியும் அதைத் தான் விரும்புவாங்க. “

அவனையே சில நிமிடங்கள் ஆழமாகப் பார்த்த வேணி, அவன் கூறியதில் இருந்த உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டாள்.

அவளிடம் அமைதி நிலவ, “சரி வா சாப்பிடலாம். ” என்றழைத்தான் மாறன்.

“எனக்குப் பசியில்ல மாமா. அப்பா சாப்பிட்டாரா ? “

“எல்லோரும் சாப்பிட்டு தூங்கிட்டாங்க. “

“வினோத்…”

“அவனும் தான்… “

“நீங்க…”

“உன்னோட சேர்ந்து சாப்பிடலான்னு காத்திருக்கேன். “

“அப்ப இன்னும் கொஞ்ச நேரம் காத்திருங்க. “

“நான் வேணா சாப்பாட்டை இங்கையே எடுத்திட்டு வரேன். நிலாச்சோறு சாப்பிடலாம் ! ” என்றிட,

சிறு வயதில் ஒருமுறை பாட்டி வைரத்தின் கைகளால் இருவரும் நிலாச்சோறு சாப்பிட்ட ஞாபகம் அவள் மனதில் வந்து போனது. சரியெனத் தலையசைத்தாள் கிருஷ்ணவேணி. கீழே சென்ற மாறன் உணவோடு வந்தான். இருவரும் தரையில் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர்.

“சின்ன வயசில் ஒருமுறை நாம நிலாச்சோறு சாப்பிட்டோம் இல்ல ? ” என்றவள் கேட்க,

“உனக்கு அது ஞாபகம் இருக்கா வேணி ? “

“ம்… முதல் முறை அப்பாவ விட்டுத் தனியா பிரிஞ்ச நாள். அப்பாவோட தூங்க கூடாதுன்னு பாட்டி செஞ்ச ஏற்பாடு தான் நிலாச்சோறு. “

“…”

“அக்ஷ்வலா என் பாட்டி எனக்கு ஒவ்வொரு காலத்திலும் தேவையானதை சரியா கொடுத்திருக்காங்க. இப்ப உங்களைக் கொடுத்த மாதிரி. “

“…”

“ஆமாம், உங்களை எனக்குக் கல்யாணம் பண்ணி வெக்கலான்னு பாட்டி எப்படி முடிவெடுத்தாங்க. உங்களுக்கு என்னைப் பிடிக்கும்னு அவங்களுக்கு எப்படித் தெரியும் ? “

“எப்படித் தெரியும்னா, என்ன சொல்றது… ” என்ற மாறன், “உன்னைப் பத்தி அவங்க கேட்கற கேள்விகளுக்கு எனக்குத் தெரிஞ்ச பதிலை சொல்லுவேன்‌. “

“அப்படின்னா ? “

“அது… உன்னைப் பத்தி நீ உன் பாட்டிக்கிட்ட சொல்ற விசயம் எல்லாமும் என் காதுக்கு வந்திடும் வேணி. நீ முதல் முறை சேவை செய்யறேன்னு சொன்னப்போ, மாமா வேண்டான்னு சொன்னாரு, ஆனா நான் தான் பாட்டி மூலமா மாமா கிட்ட தூது போனேன். அது மாதிரி உன்னோட ஒவ்வொரு தேவைக்கும், விரும்பத்துக்கும், என்னால செய்ய முடிஞ்சதை செஞ்சேன். உன்னோட படிப்பு, ஃபேஷன் எதைப் பத்தி எல்லாம் நீ பாட்டிக்கிட்ட சொன்னியோ அவங்க எதுக்கெல்லாம் அனுமதி கொடுத்தாங்களோ அதுக்கெல்லாம் நானும் ஒரு சின்னக் காரணம். அதனால கூட வைரம் அத்தை என்னை உனக்குக் கட்டி வெச்சா சரியா இருக்கும்னு நினைச்சிருக்கலாம். ” என்றவன் கூற,

“அடபாவி… ” என்ற வேணி உணவுண்பதை நிறுத்திவிட்டு அவன் டீசர்ட்டை பிடித்துத் தன்புறமாக அவனைத் திருப்பினாள்.

“எல்லாத்தையும் நீயே பண்ணிட்டு எதுவுமே தெரியாத மாதிரி பாவமா முகத்தை வெச்சி என்கிட்ட சீன் போட்டிருக்க. அப்படித் தானே ? ” என்றாள்.

“நான் என்ன சீன் போட்டேன் பேபிம்மா ? “

“பாரு… பாரு… திரும்பவும் அதையே பண்ற ? “

“ம்ச்… என் அக்காவால நீ உன் அப்பாவை பிரிஞ்ச, ஹாஸ்டலுக்குக் கிளம்பின அன்னிக்கி நீ உங்க அம்மா போட்டோவை பார்த்து அழுததைப் பார்த்ததும் எனக்கும் அழுகை வந்துடுச்சு பேபிம்மா. அக்கா கொடுக்காத அன்பை நான் கொடுக்கனும்னு நினைச்சேன். உன்னைப் பத்தி வைரம் அத்தை கவலைப்படும் போதெல்லாம் அவங்களுக்கு ஆறுதலா இருந்தேன். அவ்வளவு தான். இதுல உன்னை ஏமாத்தனும்னு நான் என்னிக்கும் நினைச்சதே இல்ல தெரியுமா ? ” என்றவன் சிறிய இடைவெளி எடுத்து, ” நீ ஊருக்கு வரும்போதெல்லாம் என்கிட்ட பேச மாட்டியான்னு எப்படி ஏக்கியிருக்கேன் தெரியுமா ? ” என்று கேட்டவன் அவளைப் பாவமாகப் பார்க்க, அவன் பார்வையில் கரைந்து போனாள் கிருஷ்ணவேணி.

தொடரும்…