அத்தியாயம் – 17

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 17

விசாலம் யோசனையுடன் அமர்ந்திருக்க, அவரைக் கலைத்தாள் வேணி.

“சித்தி, மிதுளா கிட்ட போய்ப் பேசுங்க. அவ கொஞ்சம் பயந்து போய் இருக்கா. ” என்றிட, அவளை வெறித்துப் பார்த்தார் விசாலம்.

அவர் மடியில் உறங்கி கொண்டிருந்த வர்ஷனை தன் கரத்தில் மாற்றிக் கொண்ட வேணி, “போங்க, தம்பியை நான் பார்த்துக்கறேன். ” என்றுவிட்டு அவரை விடுவித்து அனுப்பி வைத்தாள்.

அவளைப் பார்த்த படியே மிதுளாவை பார்க்க அறைக்குச் சென்ற விசாலம், மிதுளா நலமாக இருப்பதையும், தைரியத்துடன் இருப்பதையும் கண்டு மேலும் வியந்தார்.

“மிது… ” என்று விசாலம் அழைக்க முகத்தைத் திரும்பி கொண்டாள் மிதுளா.

“போ… என்கிட்ட பேசாதே. “

“ஏன் டி கோச்சிக்கற ? நீ கோச்சிக்கற அளவு என்ன பண்ணிட்டேன் ? “

“ஏன் என்னைத் தனியா விட்டுட்டு போன ? நேத்து இராத்திரி நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா ? காலையில் மாமா மட்டும் வருவாரு. அவரு கூட எப்படிப் போறது ? என் பிரச்சனையைப் பத்தி எப்படிச் சொல்றதுன்னு தெரியாம அழுதுக்கிட்டே இருந்தேன். காலையில் அக்கா வந்ததும் தான் எனக்கு நிம்மதியே வந்துச்சு. “

“எனக்கு எப்படி டி தெரியும்? உனக்குத் திடீர்னு இப்படி ஆகும்னு ? “

“ஆமாம், உனக்குத் தந்தி போட்டு தகவல் சொல்லிட்டு வரும் ! “

“சரி விடு கோச்சிக்காதே. நான் ஒன்னும் ஊரை சுத்தி பார்க்க போகல… உனக்கும் உன் தம்பிக்கும் நல்லது பண்ண தான் போனேன். “

“உன் நல்லதை நீயே வெச்சிக்கோ. கூட இருக்க வேண்டிய நேரத்தில் கூட இருக்காம… அதுக்கு அப்புறம் நல்லது பண்ணி என்ன பிரியோஜனம். “

“அதான் வந்துட்டேன் இல்ல. அழுவாதே. “

“ஆமாம், வந்துட்ட… ஆனா அதுக்குள்ள எங்க எல்லாரையும் ஒரு கலக்கு கலக்கிட்ட. எத்தனை டென்ஷன் தெரியுமா ? “

“…”

“ஏன் ம்மா எதையும் புரிஞ்சிக்கவும் மாட்டேங்கற. தெரிஞ்சிக்கவும் மாட்டேங்கற. போன் யூஸ் பண்ண தெரியாது. ஏதாவது அவசரம்னா அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கத் தெரியாது. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச மட்டும் தெரியும். “

“மிது…”

“அப்பாவுக்கு மட்டும் ஏடாகூடமா ஏதாவது நடந்திருந்தா… நாம என்ன பண்ணுவோம்னு யோசிச்சி பார்த்தியா ? அக்கா மாமாவை நீ மதிச்சதே இல்ல. அவங்களும் உன்னை மதிக்காம போயிட்டா… நானும் தம்பியும் தனியா அனாதை மாதிரி தான் நிப்போம். நீ சேர்த்து வெக்கற சொத்து எங்களைப் பாதுகாக்காது. ஊரும் உறவும் தான் பாதுகாக்கும். தயவு செஞ்சு இனியாவது அதைப் புரிஞ்சி நடந்துக்கோ. “

“என் மாமியார் இல்லாத குறையைத் தீர்க்க வந்தவ மாதிரி பேசற மிது. நான் உன் அம்மா ! “

“இருந்திட்டு போ. உன் மாமியார் மட்டும் மாமியாரா நடந்திருந்தா நீ இப்படி இருந்திருக்க மாட்ட. அவங்க பாவம் சின்னப் பொண்ணுன்னு நினைச்சு விட்டுட்டாங்க. ஆனா நான் அப்படி இருக்க மாட்டேன். என்ன இருந்தாலும் உன் இரத்தமும் என் உடம்பில் ஓடுது இல்ல. அப்ப நீ பேசற மாதிரி நானும் பேசுவேன். ஆனா நான் பேசறது சுயநலமா இருக்காது. “

“சரி இப்ப என்னை என்ன பண்ண சொல்ற ? உன் அக்கா கிட்ட போய் மன்னிப்பு கேட்கனுமா ? “

“அதெல்லாம் நீ கேட்க வேண்டியதில்ல. ஏன்னா அவங்க உன்னை எப்பவோ மன்னிச்சிட்டாங்க. இனியாவது அவங்களைக் குறை சொல்லாம இருக்கப் பாரு. “

“உனக்கு நான் தைரியம் சொல்ல வந்தா… என்னக்கே அறிவுரை சொல்ற. பேசிக்கறேன். ” என்ற விசாலம், “இப்ப என்ன சாப்பிடற ? ” என்றிட

“நீ சமைக்கப் போறியா ? “

“பின்ன ? “

“தயவுசெஞ்சு சமைக்காதே. மாமா ஏதாவது வாங்கிட்டு வந்து தரேன்னு சொன்னாரு. நான் அதையே சாப்பிட்டுக்கறேன். “

“என்னவோ பண்ணு. ” என்ற விசாலம் அறைவிட்டு வெளியே வர, அங்கே மாறன், ஆதி, வினோத், மற்றும் வேணி நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

“நீ ஆயிரம் காரணம் சொல்லு க்ரிஷ். ஆனா கல்யாணம் ஆனதை எங்க கிட்ட சொல்லாம இருந்தது தப்பு தான். ” என்று கோபத்தோடு கூறினான் வினோத்.

“தம்பி, கோச்சிக்காதீங்க. சீக்கிரம் ஒரு வரவேற்பு வெச்சி எல்லோரையும் அழைச்சிடலாம். ” என்றார் ஆதிசேஷன்.

“ஆமாம் வினோத், என் பிரண்ட்ஸ் கூட உங்களை மாதிரி தான் கோச்சிக்கறாங்க. சீக்கிரம் ஒரு வரவேற்பு வெச்சிடலாம். ” என்றான் மாறன்.

“போங்க மாறன்…” என்று அவனிடம் உரிமையோடு கோபித்துக் கொண்டான் வினோத்.

“இவளோட கல்யாணத்தில் புகுந்து ஒரு கலக்கு கலக்கனும்னு நாங்க பல வருஷம் பேசியிருக்கோம். படிப்பே முடிக்கல… அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கிட்டா. இதைக் கேட்டா எத்தனை பேரு மனசு உடைஞ்சி போவாங்க தெரியுமா ? ஒன் சைடா இவளை பல பேர் லவ் பண்றானுங்க. அவனுங்க எல்லாம் வந்தா… உங்களை ஒரு வழி பண்ணிடுவானுங்க. “

“அதெல்லாம் பார்த்துக்கலாம் வினோத்.” என்ற மாறன், வினோத்தின் காதருகே சென்று… “நீங்க அதுல ஒரு ஆள் இல்லையே ? ஏன் கேட்கறேன்னா… என் வேணியை நான் யாருக்கும் விட்டுக் கொடுத்திட மாட்டேன். அந்த விசயத்தில் நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே பொசஸிவ். ” என்றிட,

அவனைப் பார்த்து மெல்ல சிரித்த வினோத், “ச்சே.. ச்சே… நான் வெறும் பிரண்ட் தான். ” என்றான் அசடு வழிய.

“நல்லது… ” என்ற மாறன் அவன் தோள் தட்டிவிட்டு, “வாங்க நாம போய்ச் சாப்பாடு வாங்கிட்டு வருவோம். ” எனக்கூறி இழுத்துச் சென்றான்.

அவர்கள் வெளியேறிச் சென்றதும் ஆதிசேஷன் அருகே வந்து அமர்ந்த வேணி, “இப்ப எப்படி ப்பா இருக்கு ? ” என்றிட,

“நல்லா இருக்கு வேணிம்மா. ” என்று பதில் தந்தார்.

அவரின் தோளில் சாய்ந்தவள் தலையை வருடிய படியே, “உனக்கு அந்த ஊருல எத்தனை நல்ல பேர் இருக்குன்னு நான் பார்த்திட்டேன் வேணிம்மா. உன்னைப் படிக்க அனுப்பினேனே தவிர, உன்னை நினைச்சு பயப்படாத நாளே இல்ல. என் பொண்ணு அங்க எப்படி இருப்பா ? அவளுக்கு யாராவது தொல்லை கொடுத்து… அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து பல நாள் தூங்காம இருந்திருக்கேன். ஆனா இன்னிக்கு ஒரு அரை நாளில் என் பொண்ணோட பெருமையைத் தெரிஞ்சிக்கிட்டேன். “

“அப்படி எல்லாம் இல்லப்பா… என்னால முடிஞ்ச நல்லதை எல்லாருக்கும் செஞ்சேன் அவ்வளவு தான். நான் செஞ்சிலுவை சங்கத்தில் சேர்ந்திருந்தேன் இல்லையா ? அது மூலமா நிறையப் பேரை பாத்திருக்கோம். நிறைய உதவிகள் செஞ்சிருக்கோம். இரத்த தான முகாம் நடத்தியிருக்கோம், சுகாதாரம் பத்தி சொல்லி கொடுத்திருக்கோம். அதனால எனக்கு அங்க கொஞ்சப்பேரை தெரியும். “

“ஆமாம், ஆமாம், அந்தக் கொஞ்ச பேரை நாங்களும் பார்த்தோம். ” என்ற ஆதிசேஷன், “காருல ஒரு மினி சூப்பர் மார்க்கெட்டே இருக்கு. அரை நாளில் அத்தனை பேர் வந்து பார்த்திட்டு போனாங்க. இதுல பயங்கர அட்வைஸ் வேற. உடம்பை பார்த்துகோன்னு சொன்னதோட நிக்காம… நிறையப் பேர் பெரிய பெரிய ஆஸ்பித்திரிங்க பேரை சொல்லி அங்க போய்ச் செக்கப் பண்ணிக்கோங்கன்னு சொல்லி அப்பாய்ன்மெண்ட் வரை வாங்கிக் கொடுத்திருக்காங்க. ” என்று ஆதி கூற,

“அதுவரை போயிடுச்சா ? ” எனக்கேட்டு சிரித்தாள் கிருஷ்ணவேணி.

“நாம நல்லது செஞ்சா நமக்குத் தேவைப்படற நேரத்தில் நல்லது நம்மைத் தேடி வரும்னு உன் பாட்டி அடிக்கடி சொல்லுவாங்க வேணிம்மா. இதை நீ உண்மைன்னு நிரூபிச்சிட்ட. உன்னைத் தனியா வளர விட்டுட்டேன்னு நினைச்சேன். இல்ல… நீ ஒரு நல்ல சமுதாயத்தை வளர்த்திருக்க. ” எனக்கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டார் ஆதிசேஷன்.

அவர்களை இமைகாமல் பார்த்துக் கொண்டிருந்த விசாலம், “ஊருல இவ புராணம் கேட்டது போதாதுன்னு, இங்க வந்தும் இவ புராணத்தையே கேட்க வேண்டியதா இருக்கு. நான் பெத்ததும் அப்படித் தான் இருக்கு, என்னைக் கட்டினதும் அப்படித் தான் இருக்கு‌. ” என்று முனகியபடியே ஆதியை நெருங்கினார்.

“ஏங்க, காலையில் ஊருக்குக் கிளம்பிடலாம் இல்ல ? ” என்று கேட்ட விசாலத்தை அதிர்வுடன் பார்த்தாள் வேணி.

“ஏன் கேட்கறேன்னா ? போய் மிதுளாவுக்குச் சடங்கு சுத்தனும், குச்சு கட்டனும், பத்து நாள் கழிச்சு விசேஷம் வைக்கனும். இங்க இருந்தா சரிப்பட்டு வராதுல்ல அதுக்குத் தான் கேட்கறேன். “

ஆதிசேஷன் அமைதியாக இருக்க வேணி அவரைப் பார்த்து, “சித்தி, இப்ப இதெல்லாம் அவசியமா ? ” என்று கேட்டாள்.

“இதெல்லாம் அவசியமில்லாம வேற எது அவசியம் ? ” என்று எகிறிக் கொண்டு வந்தார் விசாலம்.

“அப்பாவுக்கு உடம்பு முடியல. அவரால அலைய முடியாது. மாமாவுக்கு அவரோட கம்பெனி வேலையிருக்கு. அவராலையும் செய்ய முடியாது. யாரை வெச்சி விசேஷம் பண்ணுவீங்க ? ” என்று வேணி அர்த்தத்துடன் கேட்க,

“அதுக்கு ? வயசுக்கு வந்த புள்ளையை இப்படியே குத்த வெச்சி உட்கார வைக்கனுங்கறியா ? “

“நான் அப்படிச் சொல்லலே. “

“வேற எப்படிச் சொல்லற ? உனக்கு எல்லாம் நல்லா பெருசா செஞ்சாறே உன் அப்பா… அப்ப இதெல்லாம் வேண்டான்னு சொல்ல வேண்டியது தானே ? “

“லூசு மாதிரி பேசாதீங்க ? “

“யாரை பார்த்து லூசுங்கற ? “

“பின்ன லூசு இல்லாம வேற என்ன ? நான் என்ன சொல்றேன். நீங்க என்ன சொல்றீங்க ? ” ” நான் ஒன்னும் விசேஷமே வேண்டான்னு சொல்லலே. இப்ப வேண்டான்னு தான் சொல்றேன். “

“இப்ப வேண்டான்னா ? இப்பதான்டி அவ உக்காந்து இருக்கா. இப்ப செய்யாம வேற‌ எப்ப செய்யறதாம். பத்து வருஷம் கழிச்சா ? “

வார்த்தைக்கு வார்த்தை பேசிய விசாலத்தைக் கண்டு கோபத்தை அடக்க முடியாமல் திணறினாள் வேணி. அவள் இதுவரை விசாலத்திடம் ஒரு வார்த்தை கூட எதிராகப் பேசியதில்ல. இன்று வேணி விசாலத்திடம் பேசுவதைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார் ஆதிசேஷன். விசாலமோ அமைதியாக அமர்ந்திருக்கும் தன் கணவனைத் துணைக்கு அழைத்தார்.

“ஏங்க… அமைதியா உட்கார்ந்து இருக்கீங்க ? உங்க பொண்ணு என் பொண்ணுக்கு விசேஷம் செய்யக்கூடாதுன்னு சொல்றா ? அதைக் கேட்டுக்கிட்டு அமைதியா இருக்கீங்க ? ஏய் மிதுளா…. கேட்டியா உன் அக்கா பேசறதை. இப்பவாவது நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. ” என்று கத்த அவரின் சத்தம் வாசல் தாண்டி கேட்டது.

கடைக்குச் சென்று உணவு வாங்கிக் கொண்டு வந்த மாறனும் வினோத்தும் கனமான சத்தம் கேட்டு அவசரமாக வீட்டிற்குள் நுழைந்தனர்.

“அக்கா… ஏன் கத்திக்கிட்டு இருக்க ? உன்னால கொஞ்ச நேரம் அமைதியா இருக்க முடியாதா ? ” என்று கேட்ட படியே உள்ளே நுழைந்த மாறனை பிடித்துக் கொண்டார் விசாலம்.

“என்னை ஏன்டா கேட்கற ? உன் பொண்டாட்டியை கேளு. அவதான் அராஜகம் பண்றா. என் மகளுக்கு விசேஷம் நடக்கக் கூடாதாம். அதுக்கு ஆயிரம் சப்பை காரணம் சொல்ற ? “

“என்னாச்சு மாமா ? ” என்றான் மாறன் ஆதிசேஷனை பார்த்து.

அவரோ, “எனக்குத் தெரியாதுப்பா… உன் பொண்டாட்டியையும் அக்காவையும் கேட்டுக்கோ. நான் வாய் திறக்கல. ” என்றுவிட்டு நமட்டு சிரிப்புடன் அமைதியானார்.

தன்னை அவர் சிக்க வைத்து ரசிப்பதை உணர்ந்த மாறன், அவரை ஒரு வெற்றுப் பார்வை பார்த்துவிட்டு, “வேணிம்மா… என்ன நடந்துச்சு ? ” என்றிட,

“ஒன்னும் நடக்கல. உங்க அக்கா தான் தேவையில்லாம குதிக்கறாங்க. நாளைக்கே ஊருக்குப் போகனுமாம். போய் அவங்க மகளுக்குச் சடங்கு சுத்தி விசேஷம் வைக்கனுமாம். நான் சொன்னேன் அப்பாவுக்கும் உடம்பு சரியில்லை, மாமாவுக்கு வேலையிருக்கு, இப்ப இதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் பொறுத்து செய்வோம்னு சொன்னேன். அதுக்கு உனக்கு மட்டும் பெருசா உங்க அப்பா செஞ்சாரு… அப்ப நீ அமைதியா இருந்தன்னு கேட்கறாங்க. ” அவள் கூறியதை சரியாகப் புரிந்து கொண்ட மாறன் தன் சகோதரியை பார்த்து,

“அக்கா… அவ சொல்றதும் நியாயம் தானே. மாமாவுக்கு உடம்பு சரியில்லை அவரை அலைய வைக்காதே. எனக்கும் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு வேலையிருக்கு. அதெல்லாம் முடியட்டும் விசேஷத்தை செய்வோம். கொஞ்சம் பொறுமையா இரு. ” என்று அறிவுரை வழங்கினான்.

“ஏன்டா வெவஸ்தை கெட்டவனே ? அதுவரை குத்த வெச்ச புள்ளையை அப்படியே விட முடியுமா ? ” என்று விசாலம் மீண்டும் பொங்க,

“இங்க பாருங்க என் புருஷனை பார்த்து தேவையில்லாத வார்த்தைகளைப் பயன்படுத்தாதீங்க. அப்புறம் நான் சும்மா இருக்க மாட்டேன். அவரு உங்க தம்பி மட்டும் இல்ல. மூத்த மாப்பிள்ளை. அதை ஞாபகம் வெச்சிக்கோங்க. ” என்று எச்சரிக்கை விடுத்தாள் வேணி.

“பாருடா… உன்கிட்ட எனக்கு உரிமையில்லையாம் ? ” என்று மாறனிடம் முறையிட்டார் விசாலம்.

அதற்கு வேணியோ, “ஏன் ? என் அப்பா கிட்ட எனக்கு உரிமையில்லன்னு நீங்க சொன்னப்போ நான் கேட்டுக்கல. அதுமாதிரி தான் இதுவும்.” என்று பதில் தந்தாள்.

“வேணிம்மா… கொஞ்சம் அமைதியா இரேன். ” என்ற மாறன் அவளைச் சமாதானம் செய்ய முயல,

அவன் கைகளைத் தட்டிவிட்டவள், “இவரு என் அப்பா. நீங்க என் புருஷன். அவரோட ஆரோக்கியம் எனக்கு முக்கியம். அதே மாதிரி உங்க வேலை நம்மோட எதிர்காலம். அதனால அதுவும் எனக்கு முக்கியம். இரண்டையும் இவங்களோட சுயநலத்துக்காக என்னால விட்டுத்தர முடியாது. ” என்றவள் “நான் தானே தாய்மாமன் பொண்டாட்டி, காலையிலேயே இவங்க மகளுக்குத் தலைக்குத் தண்ணீ ஊத்தி உட்கார வெச்சிட்டேன். கணக்குக்குச் சடங்கு சுத்தியாச்சு. பத்து நாள் கழிச்சு… இங்க சாங்கியம் பண்ணி தீட்டு கழிச்சிட்டு தான் அவளை இங்க இருந்து அனுப்புவேன். இது என் வீடு. என் வீட்டை தீட்டோட வெச்சிக்க நான் அனுமதிக்க மாட்டேன். நான் தீட்டுக் கழிச்சி அனுப்பினதுக்கு அப்புறம் அவங்க ஊருக்கு போய் விசேஷம்
வைக்கட்டும். என்ன வேணா பண்ணட்டும். ஆனா என் வீட்டில் இருந்து இப்படியே அவளைக் கூட்டிக்கிட்டு போக விட முடியாது. தெளிவா சொல்லிடுங்க உங்க அக்கா கிட்ட. ” என்றவள் மாடி நோக்கி விடுவிடுவெனச் சென்றுவிட்டாள்.

அவள் பேசியதை கேட்டு மாறனே வாய்பிளந்து நிற்க, விசாலத்தால் மறுப்பு கூற முடியாமல் கைகளைப் பிசைந்த படி நின்றிருந்தார்.

“தாய்மாமன் பொண்டாட்டின்னு சொல்லி என் கையைக் கட்டி போட்டுட்ட இல்ல. இரு… சீரு கேட்டு உன்னைக் கெடையறேன். ” என்று மனதில் கருவிக்கொண்டார் விசாலம்.

தொடரும்…