அத்தியாயம் – 16

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 16

கொஞ்ச நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே நின்றிருக்க, புருஷ் அவர்களைத் தேடி அங்கே வந்தான்.

“மாறன் என்னாச்சு ? ” என்றவன் குரலுக்குத் திரும்பினர் இருவரும்.

“ஒன்னுமில்லடா…. “

“மாமாவுக்கு எப்படி இருக்கு ? “

“அவர் ஓகே… இப்பதான் போன் வந்துச்சு. ஹாஸ்பிட்டலில் சேர்த்துட்டாங்களாம். சாயந்திரம் இங்க வந்திடுவாங்க. “

“சரி… கீழ போய் மிதுளாவை பாரு. அழுதுகிட்டே இருக்கா. அப்பா கிட்ட பேசனுமாம். போய் அவளைச் சமாதானப்படுத்து. “

“அவ கிட்ட அதுக்குள்ள ஏன் சொன்ன புருஷ். ” என்ற மாறன் வேணியைப் பார்க்க,

“நீங்க முன்னாடி போங்க. நான் வரேன். ” என்றுவிட்டு வானத்தை வெறித்த படி நின்றாள்.

“டேய், நீ இங்கையே இரு. நான் கீழ போறேன். ” என்று புருஷிடம் கூறிய மாறன் கீழே இறங்க, அவன் நண்பர்களும் நண்பிகளும் மேலேறி வந்தனர்‌.

மாறன் திரும்பி புருஷை பார்க்க, “நீ போ… நாங்க பார்த்துக்கறோம். ” என்றான்.

“ஒன்னும் வேண்டாம். ஒழுங்கு மரியாதையா எல்லோரும் கீழ போங்க. ” என்றான் மாறன் கடுமை நிறைந்த குரலில்.

“உன் பொண்டாட்டியை நாங்க எதுவும் பண்ணிட மாட்டோம். கீழ போ… ” என்றாள் அவள் தோழியரில் ஒருத்தி.

“வேண்டாம்… ” என்று மாறன் தலையசைத்து மறுக்க,

“கீழ மிது அழறா… ” என்றான் நண்பர்களில் ஒருவன்.

அவர்களைக் கோபத்தோடு பார்த்த மாறன், அங்கிருந்து செல்ல, அவனின் நண்பர்கள் வேணியைச் சூழ்ந்துக்கொண்டனர்.

“ஹாய்… ” என்றாள் ஒருத்தி

அவர்களைக் கேள்வியாய் பார்த்த வேணி, “ஹாய்…” என்றாள்.

“மாறனை பத்தி போட்டுக் கொடுக்கலான்னு தான் வந்திருக்கோம். ” என்றாள் இன்னொருத்தி.

அவர்களை முறுவலோடு பார்த்தவள், “அன்னிக்கு அளவு கொடுக்க வந்தப்ப நீங்க பேசிக்கிட்டதை நானும் கேட்டேன். இப்ப இங்க வந்து நேரில் பார்த்து அவரோட பேசினதுக்கு அப்புறம் எனக்கும் அவரைப் பத்தி புரிஞ்சிடுச்சு. கீழ பேசினது ஒரு படபடப்புப் பதற்றத்தில் பேசினது. அதை வெச்சி நான் அவரோட சண்டை போட்டதா யாரும் நினைச்சிக்காதீங்க. ” என்றவளை கண்டு வியந்தனர் நண்பர்கள்.

“பரவாயில்லையே நாங்க சொல்லாமையே நாங்க பேச வந்த விசயத்தைக் கப்புன்னு பிடிச்சிட்டீங்களே ? “

“சரி… ஆனாலும் நாங்க ஒன்னு சொல்லிடறோம். “

“மாறன் உங்களை ரொம்பவே நேசிக்கறான். எத்தனை பெண் தோழிகள் இருந்தாலும் யாரையும் இதுவரை தப்பான நோக்கத்தில் பார்த்தில்ல. ரொம்ப ரொம்ப ரொம்ப நல்ல பையன். அவன் நேசிக்கற ஒரே பொண்ணு நீங்க தான். அதனால அவனோட சண்டை போடாதீங்க ப்ளீஸ். “

“இதை ஏன் சொல்றோம்னா… நீங்க சண்டை போட்டா அவன் மொத்தமா தளர்ந்து போயிடுவான். அதுக்குத் தான். “

என்றவர்கள் மாறி மாறி பேச, “கண்டிப்பா சண்டை போடுவேன். என் புருஷனோட சண்டை போட எனக்கு உரிமையில்லையா ? ” என்று எதிர் கேள்வி கேட்டாள் வேணி.

“ஐயோ… நாங்க அப்படிச் சொல்ல வரல. நீங்க அவனைத் தூக்கி போட்டு கூட மிதிக்கலாம். மனைவிங்கற உரிமையோட, ஆனா அவன் அன்பை சந்தேகப்பட்டு மட்டும் பேசாதீங்க. “

“ம்… ” என்றவள் அவர்களைப் பார்த்து, “இனி பேசல. போதுமா ? ” என்றிட,

“தேங்க்யூ… ” என்று ஏக குரலில் கூறினர் நண்பர்கள் அனைவரும்.

“சரி வாங்க கீழ போகலாம். உங்க தங்கச்சி அழுகை படம் ஓட்டிக்கிட்டு இருக்கா. ” என்றபடியே வேணியின் கைப்பிடித்து இழுக்காத குறையாகக் கீழே அழைத்துச் சென்றனர்.

அங்கே மிது அழுகையுடன் அலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்க, மாறன் அவளைச் சமாதானம் செய்ய முதுகை தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். அவர்களுடன் வேணி இணைய, சில நிமட பாச போராட்டத்திற்குப் பிறகு சகஜ நிலைக்கு வந்தனர்.

அலைப்பேசி இணைப்பு துண்டிக்கபட, மிது வேணியின் தோளில் சாய்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அதுவரை மௌனம் காத்த நண்பர்கள், மாறனை நெருங்கி, “மாறா, நாங்க கிளம்பறோம். ” என்றனர்.

அதன் பிறகு தான் மாறனுக்குச் சுய உணர்வு திரும்பியது. கண்களைத் துண்டால் அழுத்த துடைத்தவன் எழுந்து அவர்கள் அருகே வந்தான்.

“நாளைக்கும் ஷுட்டிங் போக முடியுமான்னு தெரியல. இப்ப என்ன பண்றது ? ” என்று கேட்க மாறனின் குரலில் தவிப்புத் தெரிந்தது.

“பரவாயில்லை மச்சி, நீ இங்க பாரு… நாளைக்கு இல்லன்னா என்ன ? நாளைக்கு மறுநாள் ஆரம்பிச்சிடலாம் ? ” என்றான் புருஷ்.

அவர்கள் பேசுவதைக் கவனித்த வேணி எழுந்து அவர்கள் அருகே வந்தாள்.

“ஷுட்டிங் ஸ்டாப் பண்ணாதீங்க ? இது உங்க முதல் பிராஜெக்ட் கம்மியான டைமில் ஏதாவது நடந்தா அதை மாத்த முடியாம போயிடும். அப்பாவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல… நீங்க இன்னிக்கே ஷுட்டிங் ஆரம்பிச்சிடுங்க. உங்க பிளானை மாத்த வேண்டாம். மிதுளாவை நான் பார்த்துக்கறேன். ” என்றாள் வேணி.

“இன்னிக்கு வேண்டாம் க்ரிஷ். நாளைக்குக் கூட நாங்க ஸ்டாட் பண்ணிக்கிறோம். ” என்ற புருஷ் மாறனை பார்த்து, “நாங்க இன்னிக்கு ஸ்பாட்டுக்கு போய் அதை ரெடி பண்ணி வைக்கறோம். நீ சாயந்திரம் மாமா வந்ததும் அவரைப் பார்த்திட்டு அவரை இங்க செக்கப்புக்கு கூட்டிக்கிட்டுப் போறதுன்னா போயிட்டு மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கோ. நாளையிலிருந்து நம்ம வேலையைத் தொடங்கிடுவோம். ” என்றான்.

அவனைப் பார்த்துப் பெருமூச்சொன்றை வெளியேற்றிய மாறன், “நீ சொல்ற மாதிரியே செஞ்சிடலாம். வேணி சொல்லற மாதிரி டைமும் இல்ல. சமாளிப்போம்… ” என்றிட, அவனை ஆரத்தழுவி அவனுக்குத் தைரியம் கொடுத்தனர் நண்பர்கள்.

“நாங்க உனக்குத் துணையா இருக்கோம் மாறன். கவலைப்படாதே. ” என்றவர்கள் கூற நெகிழ்ந்து அவர்களை இன்னும் அதிகமாக இறுக்கிப் பிடித்து ஆறுதல் அடைந்தான் மணிமாறன்.

அவர்களின் நட்பை கண்டு வேணியும் நெகிழ்ந்து கண்ணீரை கசியவிட்டாள்.

நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்பப் புருஷ் மட்டும் அங்கே தாமதித்தான்.

“நான் கொஞ்ச நேரம் கழிச்சி வரேன். நீங்க முன்னாடி போய் ஸ்பாட்டைப் பாருங்க. ” எனக்கூறி மற்றவர்களை வழியனுப்பி வைத்தான் புருஷ்.

அவர்கள் கிளம்பியதும் புருஷும் மாறனும் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கே வேணியும், சிநேகாவும் பேசிக் கொண்டிருக்க, அவர்களை நெருங்கினார்கள் இருவரும்.

“அதுசரி… நீங்க இல்லாம நாங்க எப்படி ஷுட்டிங் போறது க்ரிஷ் ? ” என்று கேட்டான் புருஷ்.

“இப்ப அதைப் பத்தி தான் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டு இருந்தோம். ” என்றாள் சிநேகா.

“என்ன முடிவெடுத்திருக்கீங்க ? “

“நாளைக்கு உங்களோட சிநேகா வருவா. அல்ரெடி தைச்சி வெச்சிருக்கற டிரஸ் தானே ? அதனால அல்ட்டர்ரேஷன் எதுவும் இருக்காது. அப்படி இருந்தா சிநேக் பார்த்துப்பா… “

“அவ ஒருத்தியால மேனேஜ் பண்ண முடியாதே வேணிம்மா… “

“உண்மை தான். ஆனா நாளைக்கு மட்டும் சமாளிக்கட்டும். நாளை மறுநாள் வேற ஒரு இரண்டு பேர் வருவாங்க. அவங்களோட சேர்ந்து பார்த்துப்பா. “

“ஆனா டிசைன் உன்னோடது. அவங்களால அதைக் கரைக்ட்டா கொடுக்க முடியுமா ? “

“மிஸ்டர்.மாறன்… டிசைனிங் பேப்பர் எல்லாம் எல்லார்கிட்டயும் கொடுத்திருக்கேன். அதனால டிசைனில் மாற்றம் வராது. சின்னச் சின்ன ஆல்ட்ரேஷன்ஸ் தான் இருக்கும். அதை அவங்க பார்த்துப்பாங்க. அதனால டிசைனில் சொதப்பல் வராது. நீங்க கவலைப்பட வேண்டாம். நடுவுல நடுவுல நானும் வருவேன். பார்த்துப்பேன்… “

“அப்படின்னா ஓகே… மிஸஸ். மாறன். ஏன்னா வேலைன்னு வந்துட்டா நான் கொஞ்சம் பர்பக்ஷ்ன் எதிர்பார்ப்பேன். ” என்றான் மாறன்.

“நானும் தான் மிஸ்டர். மாறன். ” என்று வேணியும் கூற,

“ஐய்யையே… ” என்ற புருஷ் சிநேகாவை பார்த்து, “பேபி, இதுங்களை வெச்சிக்கிட்டு நாம தான் பாடாபடப்போறோம்னு நினைக்கிறேன். ” என்றிட,

“ஆமாம் மாமா… எனக்கும் கொஞ்சம் பயமா தான் இருக்கு. ” என்று அவனுக்கு ஒத்து ஊதினாள் சிநேகா.

“வேலையில் சரியா இருக்கனும். வேலை வேற உறவு வேற. ” என்று இருவரும் ஏக குரலில் கூற,

“சரிதான்… ” என்றனர் புருஷும் சிநேகாவும்.

நால்வரும் புன்முறுவலுடன் நின்றிருக்க, கற்பகம் அம்மா அவ்விடம் வந்தார்.

“கண்ணுங்களா காலை சாப்பாடு தயாரா இருக்கு. வந்து சாப்பிடுங்க. ” என்றவர் அன்புடன் அழைக்க, நால்வரும் நெகிழ்ந்து போயினர்.

“அம்மான்னா அம்மா தான். எங்க தேவை உணர்ந்து நடக்க உன்னால மட்டும் தான் முடியும் கற்பகம். ” என்றபடியே புருஷ் கற்பகம் அம்மாவை இறுக்க அணைத்து முத்தமிட்டான்.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியின் கண்கள் லேசாகக் கலங்க, அவளைத் தன் தோளோடு சேர்த்தணைத்து, “எனக்கும் கற்பகம் அம்மாவை பார்க்கும் போது நமக்கு அம்மா இல்லையேங்கற ஃபீலிங் வரும். ஆனா இவங்க நம்மையும் இவங்களோட பசங்களா தான் பார்ப்பாங்க. நீ இவங்களை உன் அம்மாவா நினைச்சிக்கலாம் வேணிம்மா. ” என்றான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“கொஞ்சினது போதும் புருஷோத்தமா. பிள்ளைகளை அழைச்சிட்டு வா… சாப்பிடலாம். ” “ஆமாம் மத்த பிள்ளைகள் எல்லாம் எங்க ? ” என்றவர் கேள்வியாய் நிறுத்தி, தன் பார்வையைச் சூழல விட வேறு யாரும் கண்களுக்குத் தென்படவில்லை.

“அவங்க எல்லாம் கிளம்பிட்டாங்க அம்மா. சொல்லிட்டு கிளப்பினா நீ விட மாட்டன்னு சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்க. “

“ஏன்டா சாப்பிட்டுட்டுப் போயிருக்கலாம் இல்ல. “

“அத்தனை பேருக்கும் சமைச்சி நீ கஷ்டப்பட வேண்டான்னு அவங்க நினைக்கறதில் தப்பு ஒன்னுமில்லையே கற்பகம். “

“இருந்தாலும் வீட்டுக்கு வந்த பிள்ளைகளுக்குச் சாப்பாடு போடாம அனுப்பறது சரியில்ல புருஷோத்தமா. “

“அம்மா… வேலை இருக்குன்னு தான் கிளம்பிட்டாங்க. இன்னொரு நாள் எல்லாரையும் அழைச்சி விருந்தே போட்டுடலாம். ” என்றான் மாறன்.

“என்னவோ போங்க… எல்லோருக்கும் சேர்த்து தான் உப்பும்மா கிண்டினேன். ” என்று கற்பகம் கூற,

“உப்பும்மாவா ? ” என்றாள் சிநேகா அதிர்வுடன்.

“அவசரத்துக்கு வேற எதுவும் பண்ண முடியல டி மருமகளே. இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ் பண்ணிக்கோ, அத்தை நாளையிலிருந்து விதவிதமா சமைச்சித் தரேன். “

“போ‌… அத்த… ” என்ற சிநேகா, “இன்னிக்கு நமக்கு விதிச்சது உப்புமா தான். அது சூடா இருக்கும் போதே போய்ச் சாப்பிட்டுடுலாம். இல்லன்னா தொண்டையில் இறங்காது. ” என்று கூறிய படியே உணவு மேஜைக்குச் சென்றாள். அவளை மற்றவர்களும் தொடர்ந்தனர்.

மிதுளாவுக்கு ஒரு தட்டில் உப்புமாவை போட்டுக் கொண்டு கற்பகம் அம்மா செல்ல, கிருஷ்ணவேணி அவரைத் தடுத்தாள்.

“அம்மா, நான் மிதுவோட சேர்ந்து சாப்பிடறேன். அவளுக்கு மட்டும் தனியா கொடுத்தா… சங்கடப்படுவா. நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. ” என்றவள் இரண்டு தட்டுடன் அறைக்குச் செல்ல, சிநேகாவும் அவளுடன் சென்றாள். அதைக் கவனித்த புருஷும் அவளைத் தொடர, மாறனும் அவர்களைத் தொடர்ந்தான்.

“இதுக்கு எல்லோரும் ரூமுக்கு போறோம்னு சொல்லியிருக்கலாம் தானே ? ” என்ற கற்பகம் அம்மா உப்புமா கிண்டி வைத்த பாத்திரத்தை தூக்கி கொண்டு படுக்கையறைக்குச் சென்றார்.

கலவையான உணர்வுகளுடன் விடிந்த அந்த விடியல், நண்பகலை கடந்து மாலை வேளையை அடைந்து இரவை நெருங்கியது.

வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து ஆதிசேஷன், விசாலம், வர்ஷன் மற்றும் கிருஷ்ணவேணியின் பள்ளித் தோழன் வினோத் நால்வரும் இறங்க… தன் தந்தையை ஓடிச் சென்று கட்டிக்கொண்டாள் கிருஷ்ணவேணி.

“ஒன்னுமில்லடா… பயப்படாதே. ” என்ற ஆதி அவள் தலையைக் கோதிவிட,

“ஹாய் க்ரிஷ்… ” எனக்கூறி அவள் கவலையைக் கரைத்தான் வினோத்.

“ஹாய் டா… எப்படி இருக்க ? “

“நல்லா இருக்கேன். ” என்றவன் அவள் தலையில் கை வைத்து முடியை கலைக்க,

“டேய்… ” என்றவள் அவன் கரத்தை தட்டிவிட்டாள்.

அவர்கள் விளையாடுவதைக் கவனித்தும் கவனியாததைப் போல நின்றிருந்த மாறன், “உள்ள போய்ப் பேசலாம். ” என்றிட,

“ஹாய்… ஐ ஏம் வினோத். ” என்று அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“ஐ ஏம் மாறன். மணிமாறன். “

“நைஸ் மீட்டிங் யூ. “

“உள்ள போகலாம். மாமா வாங்க. அக்கா ஏன் இங்கையே நிக்கற ? உள்ள போகலாம் வா. ” என்ற மாறன் முன்னே நடக்க, மற்றவர்கள் அவனைத் தொடர்ந்தனர்.

அவர்கள் உள்ளே சென்றதும் ட
படுக்கையறை வாசலில் நின்றிருந்த மிதுளா… “அப்பா…” என்று அழைக்க, ஆதியும் விசாலமும் திகைப்புடன் அவளைப் பார்த்தனர்.

“மிது என்ன பண்றா இங்க ? ” என்று கேட்ட படியே அவளை ஆதி நெருங்க, வேணி அவரிடம், “அப்பா அவ பெரிய பொண்ணு ஆகிட்டா. ” என்றாள்.

ஆதியும் விசாலமும் மாறனை பார்க்க, “ஆமாம் மாமா… நேத்து நைட் போன் வந்தது. காலையில் நாங்க இரண்டு பேரும் போய்த் தான் கூட்டிக்கிட்டு வந்தோம். அவளைப் பத்தி சொல்ல தான் போன் பண்ணினேன். நல்ல வேளை தான்… இல்லன்னா அக்கா என்ன பண்ணியிருப்பாளோ ? ” என்ற மாறன் தன் அக்காவை கேள்வியோடு பார்க்க, விசாலம் படபடப்புடன் சோபாவில் அமர்ந்தார்.

“என்ன பண்ணியிருப்பா ? என்னைச் சாகக் கொடுத்திட்டு நின்னிருப்பா. அப்பவே சொன்னேன்… புள்ளைங்க கிட்ட சொல்லிட்டு, கூட ஒரு ஆளையும் கூட்டிக்கிட்டு போகலான்னு. எங்க கேட்டா. ” என்ற ஆதி மிதுளாவை நெருங்கி அவள் தலையை வருடிக்கொடுத்தார்.

“அப்பா… உங்களுக்கு ஒன்னுமில்ல தானே ? ” என்று கேட்ட மிதுளாவின் குரல் உடைத்திருக்க,

“ஒன்னுமில்லடா கண்ணு. நீ எப்படி இருக்க ? உடம்பு எப்படி இருக்கு ? உன் பாட்டி இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். உன்னை அனுசரணையா பார்த்து பக்குவமா எல்லாத்தையும் சொல்லிக் கொண்டுத்திருக்கும். ” என்றவர் கண்கள் கலங்க,

அவர் கண்களைத் துடைத்துவிட்ட மிதுளா, “அதான் அக்கா இருக்காங்களே அப்பா. அவங்க எனக்கு எல்லாம் சொல்லித் தந்து அனுசரணையா பார்த்துபாங்க. காலையிலிருந்து அக்கா தான் என் கூடவே இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க. ” என்று ஆறுதல் கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட படியே அமர்ந்திருந்தார் விசாலம்.

தொடரும்…