அத்தியாயம் – 15

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 15

தனிமையில் அலைப்பேசியோடு உரையாடியவள் சில நிமிடங்கள் கழித்து மாறனை நெருங்கினாள்.

“என் பிரண்ட் ஊரில் தான் இருக்கானாம். அவனே போறேன்னு சொல்லியிருக்கான். ” “உங்க அக்காவுக்குக் கூப்பிடுங்க… ஆள் வராங்க, பயப்படாம இருன்னு சொல்லுங்க. ” என்றிட

“ம்…” என்ற மாறன் அலைப்பேசியில் பதிந்திருந்த லேண்ட்லைன் எண்ணிற்கு அழைத்தான்.

அழைப்பு சென்ற மறுநொடியே ஏற்கப்பட்டது. “அக்கா… நான் தான். ” என்று மாறன் கூற,

“தம்பி, ஏதாவது பண்ணு டா. மாமா எழுந்திரிக்கவே மாட்டேங்கறாரு. நீ சொன்ன மாதிரி தண்ணி தெளிச்சி கூடப் பார்த்திட்டேன். எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. ” என்ற விசாலத்தின் குரல் நடுங்கியது.

“அக்கா… பயப்படாதே. ஆள் வராங்க. ” என்றவன், “மாமா எப்ப மயங்கி விழுந்தாரு ? ” என்று கேட்டபடியே கைப்பேசியை ஒலிப்பெருக்கியில் போட்டான்.

“காலையில் எழுந்திரிக்கும் போது நல்லா தான் இருந்தாரு. பனி அதிகமா இருக்குன்னு சொன்னவரு காபி போடறேன்னு அடுப்படிக்கு போனாரு. திடீர்னு பாத்திரம் விழுகற சத்தம் கேட்டுது… நான் போய் அடுப்படியில் பார்த்தா மயங்கி கிடந்தாரு. எனக்குப் படபடன்னு வந்துடுச்சு. அந்த நேரம் நீ கூப்பிடவும்… உன்கிட்ட சொன்னேன். “

“உன் கூட அங்க யாருமில்லையா ? வேலைக்காரங்க மாதிரி ? “

“ஒரு அம்மா வந்து சமைச்சி கொடுத்திட்டு போகும். அந்த அம்மா கூட இன்னும் வரல. “

“சரி சரி அழுவாதே. “

“அழுகாதேன்னு நீ சொல்ற. இங்க தனியா இருந்து பாரு… அப்ப தெரியும். “

“உன்னை யாரு தனியா போகச் சொன்னது ? “

“டேய்… உன் மாமா உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காரு. நீ நன்றியே இல்லாம பேசிக்கிட்டு இருக்க. “

“சித்தி… தேவையில்லாம பேசாதீங்க. ” என்று குரல் கொடுத்த வேணி, “அப்பாவுக்குச் சுகர் இருக்கா ? ” என்று கேட்க,

எதிர்புறம் அமைதி. “சித்தி உங்களைத் தான் கேட்கறேன். அப்பாவுக்குச் சுகர் இருக்கா ? ” என்று மீண்டும் வேணி கேட்க,

“அதெல்லாம் எதுவும் இல்ல. “

“இல்லையா ? செக் பண்ணினதில்லையா ? “

“ஏன் டி என் புருஷனை பார்த்தா வியாதிக்காரன் மாதிரியா இருக்கு ? “

“ச்சே… ” என்ற வேணி… “உங்களுக்கு என்ன வயசாகுது ? இன்னும் கல்யாணமான புதுசில் பேசின சின்னப் பொண்ணு மாதிரியே பேசறீங்க ? அப்பாவுக்கு வயசாகுது. சுகர் வரது நார்மல்… அதைப் பத்தி எல்லாம் யோசிக்காம அவரைக் கொடைக்கானல் கூட்டிக்கிட்டு போயிருக்கீங்க. இப்ப அங்க பனி அதிகமா வேற இருக்கும். மூச்சுப் பிரச்சனை இருந்தா… என்ன பண்றது ? எதைப் பத்தியும் யோசிக்காம உங்க இஷ்டத்துக்கு இழுப்பீங்களா ? எங்க அப்பாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்… இந்த வேணியோட இன்னொரு முகத்தைப் பார்ப்பீங்க. “

“…”

“என் கூடப் படிச்ச பையன் இப்ப அங்க வருவான். அவன் கிட்ட தயவு செஞ்சு வாக்கு வாதம் பண்ணாதீங்க. அவன் டாக்டருக்கு தான் படிச்சிக்கிட்டு இருக்கான். அவன் சொல்றதை கேட்டு அமைதியா இருங்க.” என்றவள் கைப்பேசியை மாறன் கைகளில் திணித்துவிட்டு தன் கைப்பேசியை எடுத்தாள்.

அதே நேரம் அவள் கைப்பேசியும் சரியாக ஒலித்தது. அவள் நண்பன் தான் அழைத்திருந்தான். போனை ஒலிப்பெருக்கியில் போட்டு ஆன் செய்தாள் கிருஷ்ணவேணி.

“சொல்லுடா… உள்ள போயிட்டியா ? “

“போயிக்கிட்டு இருக்கேன் க்ரிஷ். “

“கொஞ்சம் சீக்கிரம் போடா… எனக்குப் பதற்றமா இருக்கு. “

“பதற்றப்படாதே க்ரிஷ். அப்பாவுக்கு எதுவும் ஆகாது. “

“சித்தி வேற கொஞ்சம் லொட லொடன்னு பேசுவாங்க டா. “

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். ” என்ற எதிர்புறம், “நான் எஸ்டேட்டை நெருங்கிட்டேன். நீ லைனில் இரு. ” என்றுவிட்டு அமைதியானது.

அவன் பேசியதை கேட்ட மாறன் தன் கைப்பேசியில் காத்திருந்த அக்காவிடம், ” அக்கா, ஆளுங்க வராங்க. கூடவே டாக்டரும் வராரு. நீ அவங்களுக்குக் கேவாப்ரேட் பண்ணு. ” என்றிட,

“ம்… மணி யாரோ வந்திருக்காங்க டா. ” என்றுவிட்டு அவர்களைப் பார்த்தார் விசாலம்.

“நீங்க க்ரிஷோட அம்மா தானே ? ” என்று கேட்க விசாலம் திருதிருவென முழித்தார்.

லைனில் இருந்த மாறனோ, “அக்கா ஆமாம்னு சொல்லு. ” என்று அறிவுருத்த விசாலமும் ‘ஆம்’ என மண்டையை அசைத்தார்.

கிருஷ்ணவேணியின் நண்பன் இருவருடன் உள்ளே நுழைந்து கீழே விழுந்து கிடந்த ஆதிசேஷனை நெருங்கினான்.

அவரைப் பரிசோதித்தவன், உடன் வந்தவர்களைப் பார்த்து, “இவரைத் தூக்குங்க, காருக்குப் போகலாம். அம்மா நீங்களும் வாங்க. ” எனக்கூற விசாலம் லைனில் இருந்த மாறனிடம், “மணி, என்னையும் இந்தத் தம்பி கூப்பிடுது. ” என்றிட,

“அக்கா, மாமாவோட போனை எடுத்துக்கிட்டு அவரோட கிளம்பு. “

“மணி, இங்க துணிமணி, பணம் கொண்டு வந்த பெட்டி எல்லாம் இருக்கு டா. “

“உனக்குக் காசு முக்கியமா ? மாமா முக்கியமா ? “

“…”

“சீக்கிரம் அந்தப் பையனோட கிளம்பு. ராஜா மாமா ஆள் அனுப்பினா… நீங்க கொண்டு போனா பொருட்களை எல்லாம் எடுத்திட்டு வர சொல்லிடலாம். “

“சரி… ” என்ற விசாலம் அழுது கொண்டிருந்த வர்ஷனை தூக்கி இடையில் வைத்துக் கொண்டு, ஆதியின் கைப்பேசியைத் தேடினார்.

“அம்மா… சீக்கிரம் வாங்க. ” என்று க்ரிஷின் நண்பன் குரல் கொடுக்க, படுக்கையறை மேஜை மேல் சார்ஜில் இருந்த ஆதியின் கைப்பேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தார்.

அங்கே காரில் அமர்ந்திருந்த க்ரிஷின் நண்பன், “சீக்கிரம் வாங்க. ” என்றிட ஓட்டமாக ஓடி காரில் ஏறினார் விசாலம்.

உடன் வந்தவர்களில் ஒருவன் காரை செலுத்த, மருத்துவம் படிக்கும் நண்பனோ ஆதிக்கு ஒரு ஊசியைப் போட்டான்‌. கார் எஸ்டேட்டை தாண்டுவதற்குள் ஆதிசேஷன் சுயநினைவுக்குத் திரும்பிவிட்டார்.

விசாலம் முகத்தில் ஆச்சரியம் கலந்த நன்றியுணர்வு தெரிந்தது. மயக்கம் கலைந்து எழுந்த ஆதி, சுற்றியும் இருந்தவர்களைக் கேள்வியாய் பார்க்க, க்ரிஷின் நண்பனோ, “அப்பா… நான் வினோத். கிருஷ்ணவேணியோட ஸ்கூல் பிரண்ட். உங்களுக்கு உடம்பு சரியில்லன்னு பார்க்க வந்தேன். டென்ஷனாகாதீங்க. க்ரிஷ் லைனில் இருக்கா… அவளோட பேசுங்க. ” எனக்கூறி ஆதியிடம் கைப்பேசியைக் கொடுக்க முன் வந்தான்.

அதற்கு முன் லைனிலிருந்த க்ரிஷிடம், “அப்பாவுக்கு லோ சுகர்னு நினைக்கறேன் க்ரிஷ். இப்ப எழுந்துட்டாரு. நீ பேசு… ” என்றுவிட்டு தான் அலைப்பேசியை ஆதியிடம் தந்தான்.

“ஹலோ… வேணிம்மா. ” என்று ஆதி பேச,

“அப்பா எப்படி இருக்கீங்க ? ஏன் இப்படி எங்களைப் பயமுறுத்தறீங்க ? ” என்று கேட்ட வேணியின் குரல் உடைந்திருந்தது.

“ஒன்னுமில்ல வேணிம்மா. பயப்படாதே. “

“நான் போன தடவை ஊருக்கு வந்திருந்தப்பவே ராஜா சித்தப்பா உங்களைச் சுகர் டெஸ்ட் எடுக்கச் சொல்லி சொன்னதா என்கிட்ட சொன்னாரு. நீங்க எடுக்கலையா ? “

“இல்லடா வேணி… உடம்பு நல்லா தான் இருக்கு. ஆஸ்பத்திரி போனா இல்லாததும் பொல்லாததும் சொல்லி நம்மைப் பயமுறுத்திடுவாங்கன்னு நினைச்சு அமைதியா இருந்திட்டேன். தப்பு தான். இனி கவனமா இருக்கேன். ” என்று திணறலாகப் பேசினார் ஆதி.

அவர் திணறலை விரும்பாத வேணி, “போனை வினோத் கிட்ட கொடுங்க அப்பா. ” என்றிட,

அவரும் கைப்பேசியை வினோத்திடம் கொடுத்து… “தம்பி, பாப்பா பயப்படறா, பயப்பட வேண்டான்னு சொல்லுங்க. ” என்று அன்பு கட்டளை போட்டார். அவரை முறுவலுடன் பார்த்த படியே கைப்பேசியை வாங்கினான் வினோத்.

“ஹலோ க்ரிஷ்… “

“அப்பா ஓகே தானே ? “

“ஓகே தான் க்ரிஷ் பயப்படாதே. “

“இப்ப ஹாஸ்பிட்டல் போக வேண்டிய அவசியமில்லையா ? “

“போகனும் க்ரிஷ். செக்கப் பண்ணி ட்ரீட்மெண்ட் எடுக்கனும். இப்போதைக்கு மயக்கம் தான் தெளிஞ்சிருக்கு. “

“சரி… நீ ஹாஸ்பிட்டல் போயிட்டு கூப்பிடு. நாங்க அங்க கிளம்பி வரோம். “

“நீங்க கிளம்பி வர அளவுக்குச் சீரியஸ் இல்ல க்ரிஷ். நான் ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போய் ட்ரீட்மெண்ட் எடுக்க வெச்சிட்டு… சேப்பா என் காருலையே திருச்சி அழைச்சிட்டு வந்துவிட்டுடறேன். நீ டென்ஷனாக வேண்டாம். ” என்று வினோத் கூற,

“ரொம்பத் தேங்க்ஸ் டா. “

“நமக்குள்ள என்ன டி தேங்க்ஸ்… “

“சரி… நீ ஹாஸ்பிட்டல் ரீச்சாகிட்டு கூப்பிடு. “

“ம்… ஓகே. பை. ” என்ற வினோத் தன் அழைப்பை துண்டிக்க, அதுவரை பதற்றத்துடன் இருந்த வேணியின் முகத்தில் சிறிய நிம்மதி பரவியது. அவர்கள் பேசுவதை ஒலிபெருக்கி மூலம் கேட்டுக் கொண்டிருந்த மாறனும் புருஷும் கூட நிம்மதி பெருமூச்சை வெளியேற்றி தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.

“ஹப்பா… இனி பயமில்ல. ” என்றான் புருஷ்.

“ஆமாம், நான் கூட ரொம்பப் பயந்துட்டேன். தெரியாத ஊருல… எப்படி உதவிக்கு ஆள் தேடறதுன்னு ரொம்ப டென்ஷனாகிட்டேன். ” என்ற மாறன் படிகட்டில் அமர்ந்தான்.

“நீங்க ஏன் அப்பாவை ஃபுல் ஹேல்த் செக்கப்புக்கு கூட்டிக்கிட்டு போகல ? ” என்றாள் வேணி மாறனை பார்த்து.

“நான் என்ன பண்ணிட்டேன்னு என் மேல கோவப்படற வேணி ? “

“இதுவே உங்க அப்பாவா இருந்தா… இப்படி விட்டிருப்பீங்களா ? “

“வேணி… “

“பேசாதீங்க… ” என்றவள் வீட்டிற்குள் ஓடிவிட,

“என்னடா இவ நம்மகிட்ட கோச்சிக்கிட்டு போறா ? ” என்றபடியே மாறன் அவளைத் தொடர்ந்தான்.

வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே அதிக ஆட்கள் இருப்பதை உணர்ந்து மாடி படிகளில் ஏறினாள். அவளைத் தொடர்ந்து வந்த மாறனும் படிகளில் ஏற, மற்றவர்கள் என்ன நடக்கிறது என்று புரியாமல் விழித்துப் பார்த்தனர்.

அப்போது அங்கே புருஷை, அவர்கள் சூழ்ந்துக்கொண்டனர். நடந்ததை அவர்களுக்கு அவன் விவரிக்க, மாடியில் மாறன் வேணியைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தான்.

“வேணிம்மா… என்ன ம்மா ? என் மேல ஏன் கோவப்படற ? நான் என்ன தப்பு செஞ்சேன். “

“அப்பா மேல அக்கறை இருந்திருந்தா நீங்க அவரைத் தனியா விட்டிருக்க மாட்டீங்க. ஊருல இருக்கற உங்க பிரண்ட்ஸ் யாரையாவது கூட அனுப்பியிருப்பீங்க. அதுவுமில்லாம, நான் போன தடவை ஊருக்கு வந்தப்பவே ஒருமுறை அப்பா மயங்கி விழுந்தாரு. அவரை அப்பவே ஹாஸ்பிட்டல் கூட்டிக்கிட்டு போய் முழு உடல் பரிசோதனை செய்யச் சொல்லி ராஜா சித்தப்பா கூட உங்க கிட்ட சொன்னாரு. அதை நான் பார்த்தேன், கேட்டேன். நீங்க… நீங்க தான் கேர் லெஸ்ஸா இருந்திருக்கீங்க. “

“வேணிம்மா… நான் அப்பவே மாமாவை பக்கத்தில் இருக்கற டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டுப் போய்க் காட்டினேன். வைரம் அத்தை இறந்த துக்கம், அதான் மயக்கம் வந்திருக்கும்னு டாக்டர் சொன்னாரு. அதுபோக மாமா தன்னோட ஆரோக்கியத்தில் ரொம்பவே அக்கறையோட தான் இருப்பாரு. அதனால… “

“அதனால அப்படியே விட்டுடுவீங்களா ? “

“ஏன் வேணி… எனக்கும் இது அதிர்ச்சியா தான் இருந்தது. நீ பேசறது என்னை ரொம்பக் கஷ்டப்படுத்துது. ” என்றான் குரல் தழுதழுக்க,

அவன் குரல் தழுதழுக்கவும், கண்களில் கசிந்த நீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “எனக்கு இருக்கற ஒரே சொந்தம் என் அப்பா தான். என்னதான் உங்க அக்கா உங்களை மதிக்கலன்னாலும், நீங்க அவங்களோட இரத்தம். அவங்க பிள்ளைகளுக்குத் தாய்மாமா. யாரையும் விட்டுக் கொடுத்திட மாட்டீங்க. ஆனா எனக்கு ? என் அப்பா மட்டும் தான். அவருக்கு ஏதாவது ஆனா… நான் எங்க போவேன் மாறன். ” என்றவள் அவனைக் கேள்வியாய் பார்க்க,

“இப்படி எல்லாம் கேட்காதே வேணி. உனக்கு உறவா உயிரா நான் எப்பவும் இருப்பேன். உன்னை என் கண்ணுக்குள்ள வெச்சி பார்த்துப்பேன். என்னை நம்பு. ” எனக்கூறி தன் இருகரங்களையும் நீட்டி அவளை அழைத்தான்.

அவனை விசும்பலோடு பார்த்த வேணி, “உங்க அக்கா என் வாழ்க்கையில் வரும் போது அவங்களை என் சொந்தமா தான் பார்த்தேன். ஆனா அவங்க… என்னை ஒதுக்கிட்டாங்க. நாளைக்கு என் அப்பா இல்லாம போனா… நீங்களும் என்னை ஒதுக்கிடுவீங்க தானே ? “

“ஏன் டி இப்படி எல்லாம் பேசி என் உயிரை உருவி எடுக்கற ? ” என்ற மாறன், அவளைத் தன்னருகே இழுத்து, “அன்னிக்கு ஒருநாள் நீ உன் அப்பா நெஞ்சில் சாய்ஞ்சி படுத்திருக்கும் போது… என் அக்கா வந்து உன்னைத் தள்ளி விட்டாளே… அன்னிக்கே முடிவு பண்ணினேன். உன் வாழ்க்கையில் உனக்குத் துணையா நான் எந்த விதத்திலாவது இருக்கனும்னு. “

“…”

“உன் பாட்டி… என் கிட்ட அடிக்கடி சொல்லும்… ‘என் பேத்தியை நீ கட்டிக்க, அப்பதான் அவ தனி மனுசியா இருக்க மாட்டா. என்ன இருந்தாலும் நீ விசாலத்தோட தம்பி, உன்னை விட்டுக்கொடுக்க அவளால முடியாது. என் பேத்தி உன் மனைவியா இருந்தா… அவளும் இந்தக் குடும்பத்தை விட்டுத் தனிச்சி போயிட்டதா நினைக்காம இருப்பா’ன்னு.’ உனக்காகத் தான் உயிரை கொடுத்துப் படிச்சேன். நல்ல வேலை, நல்ல சம்பளம், இப்ப இந்தப் பிஸினஸ், இந்த வீடு எல்லாமே உன்னை நல்லா பார்த்துக்கனும்னு தான். என் வாழ்க்கையில் என் அம்மா, அக்காவுக்கு அடுத்து நான் உயிரா பார்க்கற பொண்ணு நீதான் வேணி. என் அன்பை நீ உணர நாளாகும்னு எனக்குத் தெரியும். ஆனா… என் மேல நம்பிக்கை இல்லாம மட்டும் இருக்காதே. ” என்றிட,

அவன் முதுகை கட்டிக்கொண்டு கேவினாள். அவள் முதுகை தடவி சமாதானம் செய்ய முயன்றான் மாறன். அந்த நேரம் கிருஷ்ணவேணியின் கைப்பேசி அடிக்க இருவரும் கலைந்தனர்.

அழைத்தது வினோத். அவன் பெயரை பார்த்ததும் கண்ணீரை துடைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள் வேணி.

“சொல்லு வினோத். “

“அப்பா நல்லா இருக்காரு க்ரிஷ். பயப்பட ஒன்னுமில்லன்னு டாக்டர் சொல்லிட்டாரு. மதியத்துக்கு மேல டிஸ்சார்ஜ் பண்ணி நானே கூட்டிக்கிட்டு வந்திடறேன். நீ பயப்படாதே. “

“ஓகே வினோ… “

“சரி… நான் இப்ப அப்பா தங்கியிருந்த எஸ்டேட் வீட்டுக்கு போறேன். அங்க ஏதோ திங்க்ஸ் இருக்காம். அப்பா எடுத்திட்டு வரச்சொல்லி சொன்னாரு. உங்க அம்மா கையில போன் இருக்கு. அப்பா போனுன்னு நினைக்கறேன். நீ அதுல அவங்களோட பேசலாம். நான் மதியம் கிளம்பிட்டு திரும்ப உனக்குக் கூப்பிடறேன். “

“ஓகே டா… அப்பா கூட நம்ம பிரண்ட்ஸ் யாராவது இருக்காங்களா ? உதவிக்கு ? “

“நம்ம கிரிஜா அக்கா இருக்கு. அது போதும் இல்ல… “

“ஓகே வினோ… “

“சரி… வெச்சிடறேன் க்ரிஷ். “

“ம்… ” என்று கிருஷ்ணவேணி கூற அழைப்புத் துண்டிக்கப்பட்டது. மாறன் முகம் பார்த்தவள், “சாரி, டென்ஷனில் கொஞ்சம் படபடன்னு பேசிட்டேன். ” என்று தயக்கத்துடன் கூற,

அவளைத் தன் நெஞ்சோடு அணைத்துச் சமாதானம் செய்தான் மணிமாறன்.

தொடரும்…