அத்தியாயம் – 14

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 14

வெளியே கல்யாணி பாட்டி ஆரத்தி எடுக்க, வீட்டிற்குள் நின்றிருந்த கற்பகம் அம்மா புன்னகையுடன் அவர்களை வரவேற்றார்.

“வலது காலை எடுத்து வெச்சு உள்ள வாங்க கண்ணுங்களா. ” என்றவர் வார்த்தைக்கு மதிப்பளித்து, கிருஷ்ணவேணியும் மணிமாறனும் அந்த வீட்டிற்குள் தங்கள் முதல் அடியை எடுத்து வைக்க, நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தபடியே மலர் மாரி பொழிந்து அவர்களை வரவேற்றது.

தலை நிமிர்ந்து பார்த்த க்ரிஷின் முகத்தில் புன்னகை அரும்பியது. அந்தப் புன்னகையில் தன்னை மறந்தான் மாறன். தன் இரு கரங்களை நீட்டி மலர்களைப் பிடித்தவள், அதை நுகர்ந்து இன்புற, கற்பகம் அம்மா அவளிடம், “அம்மாடி, வா வந்து விளக்கேத்து.” என்று அறிவுருத்தினார்.

தனி வீடு என்பதே அவளுக்கு ஆச்சரிய அதிர்ச்சி தான் என்றால், அந்த வீட்டில் வீட்டு உபயோக பொருட்கள் அத்தனையும் இருந்து அவளை மேலும் ஆச்சரியப்படுத்தியது. பூஜை அறை நோக்கி அவளை அழைத்துச் சென்றான் மணிமாறன்.

“விளக்கேத்தும்மா… ” என்றவர் மீண்டும் வலியுறுத்த, சற்றே யோசித்தவள், “குளிச்சிட்டு வந்திடறேனே ? ” என்றாள்.

“காலையில் வந்ததும் குளிச்சிட்டியே க்ரிஷ். ” என்றாள் சிநேகா.

“இல்ல.. மிதுளாவை கூட்டிக்கிட்டு வந்திருக்கோம். ” என்றாள் தயக்கத்துடன்.

“அவ காருல தானே இருக்கா. நீ விளக்கேத்தினதும், அவளை உள்ள கூட்டிக்கிட்டு வந்திடலாம். “

அவள் தயக்கதுடன் நிற்க, “உனக்குக் கட்டாயம் குளிக்கனும்னா… குளிச்சிட்டு வந்தே விளக்கேத்து வேணி. ” என்றான் மாறன்.

“டிரஸ்….” என்றவள் இழுக்க,

“நீ வா… ” என்றவன் அவள் கைப்பிடித்து அறையுள்ளே அழைத்துச் சென்றான்.

படுக்கை அறை நன்கு விசாலமாக இருந்தது. அனைத்து பொருட்களும் அடங்கிய சௌகரியமான அறையாக இருந்தது. அதை அவள் வியப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கப்போர்டை திறந்தான் மணிமாறன்.

“வேணிம்மா… இதுல உனக்குத் தேவையான டிரஸ் கொஞ்சம் இருக்கு. எல்லாமே புதுசு தான். எது பிடிச்சிருக்கோ அதைப் போட்டுக்கோ… ” என்றிட,

கப்போர்ட் அருகே சென்றாள் கிருஷ்ணவேணி. ஒரு ரேக் முழுவதும் புடவைகள் மற்றொன்று முழுவதும் சுடிதார் மற்றும் வேறு சில மாடர்ன் உடைகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்க,

“இதை எல்லாம் பார்த்தா… ரொம்ப வருஷம் பிளான் பண்ணி என்னைத் தூக்கின மாதிரி இல்ல தெரியுது. ” என்றாள் சந்தேகக் குரலில்.

அவள் நுனி மூக்கை தன் விரலால் தடவியவன், “இதைப் பத்தி கொஞ்சம் நேரம் கழிச்சி பேசலாம். மிது காரில் வெய்ட் பண்றா. அவ பாவமில்ல. ” என்று கிறக்கமான குரலில் கேட்க,

அவன் விரலை தட்டிவிட்டவள், “உங்களையும், உங்க மாமாவையும் அப்புறம் பேசிக்கறேன். ” என்றபடியே அதிலிருந்து தனக்குப் பிடித்த நிறத்தில் உள்ள உடை ஒன்றை எடுத்தாள். அவள் குளியலறைக்குள் தன்னைப் புகுத்திக் கொள்ள, மாறன் மென்னகையுடன் அறைவிட்டு வெளியே வந்தான்.

“என்னப்பா மாறா… இந்தப் பொண்ணு பயங்கர ஆச்சாரம் பார்ப்பா போலையே ? ” என்று கேலியாகக் கற்பகம் அம்மா கேட்க,

“அவ எங்க வைரம் அத்தை வளர்த்த பிள்ளை கற்பகம் அம்மா. அவங்களை மாதிரியே பொறுப்பாவும் இருப்பா, அதே நேரம் இந்த மாதிரி சில விசயங்களில் ஆச்சாரமும் பார்ப்பா. “

“அது… சரி, படிச்ச பொண்ணுங்க மாடர்னா இருப்பாங்கன்னு நினைச்சு நாம தான் அவங்களுக்கு நல்ல விசயங்களைச் சொல்லி தரதில்ல போல. ” என்றார் கல்யாணி பாட்டி.

“ம்… “

“நான் போய் மிதுவை பார்த்திட்டு வரேன். ” என்று மாறன் கூற,

“புருஷும், சிநேகாவும் அவளோட தான் இருக்காங்க மாறன். நீயும் போய்க் குளிச்சிட்டு வந்திடு. இரண்டு பேரும் சேர்ந்தே சாமி கும்பிடுவீங்களாம். ” எனக்கூறி அவனைத் தடுத்தார் கற்பகம்.

வாசல் வரை சென்றவன், கதவருகே நின்று காரை எட்டிப் பார்க்க, காரின் ஜன்னல் வழியாகத் தன் முகத்தைக் காட்டிய மிதுளா, “மாமா, நான் வெய்ட் பண்றேன். நீங்க என்னை நினைச்சு கவலைப்படாதீங்க. ” என்றாள்.

அவளைப் பார்த்து புன்னகையால் நன்றி கூறியவன், “பத்து நிமிஷம்… அக்கா விளக்கேத்தினதும் உன்னை உள்ள கூட்டிக்கிட்டு போறோம். ” என்றான்.

“எனக்குத் தெரியும் மாமா, இது உங்களுக்கும் அக்காவுக்கும் ரொம்ப ஸ்பெஷல் டே’ன்னு நான் வெய்ட் பண்றேன். நீங்க வொரி பண்ணிக்காதீங்க. “

“தேங்க்யூ டா மிது. ” என்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குள் சென்றான். அதற்குள் குளித்துத் தயாராகி இருந்தாள் கிருஷ்ணவேணி.

வாசலில் நின்றிருந்த மாறன் வீட்டிற்குள் வர, ஈரத்த தலையைத் துண்டைக் கொண்டு முடிந்த படியே அறைவிட்டு வெளியே வந்தாள் கிருஷ்ணவேணி.

வெளிர் மஞ்சள் நிறத்தில் காட்டன் புடவை அணிந்து, ஒப்பனை இல்லா முகத்தில் சிறிய வட்டவடிவ பொட்டை ஒட்டிக்கொண்டு கார்குழலை துண்டில் முடிந்து, முன் நெற்றியில் நீர் வடிய, நடந்து வந்தளை கண்டு சிலையென நின்றுவிட்டான் மாறன்.

“பரவாயில்லையே டக்குன்னு ரெடியாகிடுச்சே இந்தப் பொண்ணு. ” என்று கற்பகம் அம்மாவும் கல்யாணி பாட்டியும் தங்களுக்குள் பேசிக்கொள்ள, மாறனின் நண்பர்களோ வாய்பிளந்து அவளைப் பார்த்தனர்.

எப்போதும் சுடிதார் கொண்டு தன் அங்கங்களை அழகாக மறந்திருப்பாள். இன்றோ சேலை அவளின் வளைவுகளை எடுத்துக்காட்டி… மற்றவர்களை வியப்படைய வைத்தது.

மாறனின் நண்பிகள் அவளின் அழகை கண்டு, “இப்படி ஒரு அழகான மாமா பொண்ணு இருக்கறதால தான் இந்தப் பைய நம்மை எல்லாம் திரும்பி கூடப் பார்க்க மாட்டேங்கறான். ” என்று மனதிற்குள் முணுமுணுக்க,

நண்பர்களோ, “ம்… நமக்கு இப்படி ஒரு மாமா பொண்ணு இல்லையே ? ” என நினைத்து மனம் வெதுப்பினர்.

சிலையென நின்றிருந்தவனைக் கலைத்தார் கற்பகம். “மாறா, போப்பா… போய்ச் சீக்கிரம் குளிச்சிட்டு வா. ” என்றவர் குரலில் கலைத்தவன், அறை கதவின் அருகே நின்றிருந்த வேணியின் இடையைத் தன் விரல் கொண்டு வருடியபடியே, உள்ளே நுழைந்தான்.

அவன் செயலால் சற்றே அதிர்ந்தாலும், அதை மறைத்துக் கொண்டு அவனைத் திரும்பி பார்த்து முறைத்தாள் கிருஷ்ணவேணி. அவள் பார்வைக்குச் சளைக்காமல் பதில் பார்வை பார்த்த மாறன், அவள் துடைத்துவிட்டு வைத்திருந்த பூத்துவலை துண்டை எடுத்து, அதை நுகர்ந்து வாசம் பிடித்தான்.

அவள் நாணத்தில் நெழிய, முறுவலுடன் அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணடித்தவன், அதே பூத்துவளை துண்டை தன் தோளில் போட்டுக் கொண்டு குளியலறை உள்ளே நுழைத்து தாழிட்டான்.

“ஐயோ, ஊருல பார்க்கவே பாவமா இருந்தவரு இந்தப் போடு போடறாரே ? அன்னிக்கு மாடலிங் வந்த பொண்ணுங்க சொன்னது உண்மை தான் போல. இவரைப் பார்த்தா… பார்த்ததும் பத்திக்கும் போலையே. இனிமே கண்ணை நேருக்கு நேரா பார்க்கவே கூடாது. பார்த்த நமக்குத் தான் டேஞ்சர். ” என்று வாய்க்குள் முணுமுணுத்த படியே பூஜையறை இருந்த இடத்திற்குச் சென்றாள் க்ரிஷ்.

அவன் வருவதற்குள் விளக்கிற்குத் திரிபோட்டு எண்ணை ஊற்றி தயாராக வைத்தாள்‌. சில நிமிடங்களில் அவனும் வந்துவிட, விளக்கேற்றினாள் கிருஷ்ணவேணி.

இமை மூடி இறைவனைத் தியானித்தவள் கண்முன் பாட்டி வைரத்தின் முகம் வந்து போக, கண்கள் லேசாகக் கசிந்தது. மனமோ, “பாட்டி, நான் கூடப் பயந்தேன். இவரு சித்தி மாதிரியே என்னை வெறுத்திட்டா என்ன பண்றதுன்னு. ஆனா, உனக்குத் தெரிஞ்சிருக்கு இல்ல… மாமா என்னை நல்லா பார்த்துப்பாருன்னு. நீங்க இருக்கும் போதும் எனக்குச் சரியான வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுத்து கொடுத்தீங்க. போகும் போதும் சரியான இடத்தில் என்னைச் சேர்த்திட்டு போயிட்டீங்க. எப்பவும் எங்க கூட இருந்து எங்களைப் பார்த்துக்கோங்க. ” என வேண்டிக் கொண்டாள்.

அவள் கண்கள் கசிந்ததைக் கவனித்த மாறன், “வேணிம்மா, அழாதே. ” என்றான் சன்னமான குரலில்.

அவன் குரல் கேட்டதும் கண்ணீரை உள்ளிழுத்தவள், தீபதூப ஆராதனை செய்து தன் வழிப்பாட்டை நிறைவு செய்தாள்.

“அம்மாடி, நீ போய்ப் பால் காய்ச்சு. நாங்க மிதுளாவை உள்ள கூட்டிக்கிட்டு போறோம். ” என்றார் கற்பகம்.

அவரின் வார்த்தைக்குச் சரியெனத் தலையசைத்தவள் அடுக்களை உள்ளே நுழைந்தாள். அங்கும் சமையலுக்குத் தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. கற்பகம் அம்மா பாலை பாத்திரத்தில் ஊற்றி வைத்திருக்க, அந்தப் பாத்திரத்தை எடுத்து அடுப்பின் மேல் வைத்து அதைப் பற்ற வைத்தாள்.

பின்புறம் நிழலாட திரும்பி பார்த்தவள் முன் புன்முறுவலுடன் நின்றிருந்தான் மணிமாறன்.

“கற்பகம் அம்மா தான் உனக்கு உதவச் சொல்லி அனுப்பினாங்க. ” என்றபடியே அவளருகே வந்து நின்றான். அவன் கண்களைப் பார்க்க கூடாது, என நினைத்த வேணி தன் பார்வையைப் பால் பாத்திரத்தின் மேல் வைக்க, அவனோ தன் பேச்சை தொடர்ந்தான்.

“ம்ஹூம்…” என்று தொண்டையைச் செருமியவன், ” வேணிம்மா வீடு பிடிச்சிருக்கா ? ” என்று கேட்க,

“…” அவளோ மௌனத்தையே பதிலாகத் தந்தாள்.

“தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன். உனக்கு இதுல ஏதாவது மாத்தனும்னா சொல்லு மாத்திக்கலாம். இல்ல வேற ஏதாவது வேணும்னாலும் வாங்கிக்கலாம். “

“இது ஓன் ஹவுஸா ? ” என்று கேட்டாள் க்ரிஷ்.

“ம்… இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னாடி வாங்கினேன். நான் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்து சம்பாதிச்ச பணம் எல்லாத்தையும் மாமாவுக்கு அனுப்பிக்கிட்டு இருந்தேன். அவரு அதை என் பேருலையே போட்டு வெச்சிருக்காரு. நானும் ஒருபக்கம் பிஸினஸ் தொடங்க பணம் சேர்த்து வெச்சிக்கிட்டு வந்தேன். பிஸினஸ் தொடங்கறதா மாமாகிட்ட சொன்னதும் அவரு அந்தப் பணத்தை எடுத்துக்கோன்னு சொல்ல, இல்ல மாமா என்கிட்ட பிஸினஸ் தொடங்க பணம் இருக்குன்னு சொன்னேன். அப்ப இந்தப் பணத்தை வெச்சி வீடு வாங்கிக்கோன்னு சொல்லி, இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தாரு. “

“…”

“வீடு பிடிச்சிருக்கா வேணி ? “

“ம்… “

“சந்தோஷம். ” என்றவன் குரலை தாழ்த்தி, “அப்ப என்னை ? என்று கேட்க,

“பால் பொங்குது. ” எனக்கூறி அவன் கேள்வியைத் தவிர்த்தாள் வேணி.

“பதில் சொல்ல மாட்ட இல்ல ? ” என்றபடியே டம்ளர்களை எடுத்துத் தட்டில் வைத்தான்.

பாலில் சக்கரை போட்டு கரைத்து, அதை அந்த டம்ளர்களில் ஊற்றினாள் கிருஷ்ணவேணி. துண்டில் முடிந்து வைத்திருந்த கார்குழலிருந்து ஒரு சில முடிகற்றைகள் விலகி, அவள் கன்னத்தில் வந்து விழுந்தது. அதைத் தன் தோள்பட்டையில் உரசி விலக்கி வைக்க முயன்றாள். அதுவோ விடாமல் அவள் கன்னத்தில் கிச்சுகிச்சு மூட்ட, அவள் முகத்தில் ஒரு அசூயை தோன்றியது.

அதைக் கவனித்த மாறன், தன் விரலால் முடிகற்றைகளை விலக்கி அவள் காது மடல் அருகே செருகிவிட்டு அவளின் அசூயைக்கு விடைகொடுத்தவன், அதே விரல் கொண்டு அவள் கன்னம் வருடிட,

அதைக் கவனியாததைப் போன்ற பாவனையுடன், “இதைக் கொண்டு போய் எல்லோருக்கும் கொடுங்க மாமா. ” எனக்கூறி அவனைச் சமையலறையிலிருந்து கிளம்பிவிட்டாள் கிருஷ்ணவேணி.

அவனும் அவளைப் பார்த்து சிணுங்கிய படியே தட்டிலிருந்த டம்ளர்களோடு ஹாலுக்குச் செல்ல, அவன் தீண்டலோ அவள் இதயத்தின் படபடப்பை கூட்டியிருந்தது.

“உணர்ச்சிவசப்படாதே க்ரிஷ். மிதுளா இருக்கா…அப்பாவும், சித்தியும் இங்க வர வரைக்கும் அவளைப் பாத்திரமா பார்த்துக்கற பொறுப்பு நமக்கு இருக்கு. கொஞ்சம் அமைதியா இரு. ” எனக்கூறி தன் மனதின் படபடப்பிற்குத் தற்காலிகமாக அணைப்போட்டாள்.

பெருமூச்சொன்றை வெளியேற்றி தன் மனநிலையைச் சமன் செய்தவள், மிதுளாவை காண பாலுடன் அறைக்குச் சென்றாள்.

மிதுளா அங்கே மாறனின் நண்பிகளுடன் கலகலப்பாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் தான் வேணியின் மனதில் சிறிய நிம்மதி பிறந்தது.

“மிது நார்மலா தான் இருக்கா. ” என மனதில் நினைத்தபடியே கையிலிருந்த பால் டம்ளரை அவளிடம் நீட்டினாள்.

“மிது, இந்தா பாலை குடி. “

“இப்ப தான் குடிச்சேன் அக்கா. ” என்றாள் மிதுளா.

“அப்படியா ? சரி… என்ன சாப்பிடற ? ” எனக்கேட்டாள்.

“ம்… கொஞ்சம் நேரம் கழிச்சி சொல்லவா ? ” என்றாள் மிது.

“ம்…” என்ற க்ரிஷ் “உன் மாமா எங்க ? அப்பாவுக்குப் போன் செஞ்சாரா ? இல்லையான்னு தெரியல ? “

“மாமா வெளிய போனாரு அக்கா. போன் பேச தான் போனாருன்னு நினைக்கறேன். “

“அப்படியா ? சரி நான் போய்ப் பார்க்கறேன். ” என்ற வேணி மாறனை தேடி வெளியே வர, மாறன் படபடப்புடன் தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். அவன் முகத்தில் தெரிந்த பதற்றம் கண்டு அதிர்ந்த வேணி, அவனை நெருங்கி செல்ல, அவளைக் கண்டவன் தவிப்புடன் அவள் விழி பார்த்தான்.

“என்னாச்சு மாமா ? ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ? ” என்று வினவினாள்.

“வேணி அது…” என்று தயங்கிய மாறன், “ராஜா மாமா அனுப்பின நம்பருக்குக் கூப்பிட்டேன். அக்கா தான் போனை எடுத்தா. மாமா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாராம். பக்கத்தில் துணைக்குக் கூட யாருமில்லையாம்… நல்ல வேலையா நான் போன் பண்ணினேன்னு சொன்னா. இப்ப தான் ராஜா மாமாவுக்குப் போன் பண்ணினேன். அவரு அங்க இருக்கற ஆளுங்க கிட்ட பேசி… எஸ்டேட்க்குள்ள போய்ப் பார்க்க சொல்றேன்னு சொல்லியிருக்காரு. நானும் புருஷும் அங்க கிளம்பி போறோம். நீ மிதுளாவை பார்த்துக்கோ.” என்று படபடத்தான்.

அவன் கூறியதை கேட்டு முதலில் அதிர்ந்த கிருஷ்ணவேணி, பின் நிதானித்து… “மாமா, நீங்க அங்க போய் அவங்களை அழைச்சிட்டு வரதுக்குள்ள லேட்டாகிடும். அவங்க இருக்கற இடத்தைச் சொல்லுங்க… என் பிரண்ட்ஸ் நிறையப் பேர் கொடைக்கானலில் இருக்காங்க அவங்களை அனுப்பி அப்பாவை கூட்டிக்கிட்டு வந்திடலாம். ” என்றிட,

அவளின் யோசனைக்குச் சம்மதித்து ஆதிசேஷன் மற்றும் விசாலம் இருந்த எஸ்டேட்டின் முகவரியை தந்தான்.

“என் பிரண்ட்டோட வீடு இதுக்குப் பக்கத்தில் தான் இருக்கு. நான் அவன்கிட்ட பேசறேன். ” என்ற வேணி அலைப்பேசியோடு தனியாகச் சென்றாள்.

“க்ரிஷுக்கு அங்க பிரண்ட்ஸ் எப்படி ? ” என்று புருஷ் கேட்க,

“அவ பிளஸ் டூ வரை அங்க தான் படிச்சா. ” என்று பதில் தந்தான் மாறன்.

தொடரும்…