அத்தியாயம் – 13

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 13

கார் சாலையில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருக்க, காரில் அமர்ந்திருந்த இருவரோ மௌனமாகப் பயணித்துக் கொண்டிருந்தனர்.

“என்னைப் பிடிச்சிருக்கா ? ” என்ற கேள்வி இருவரிடமிருந்தும் ஏக நேரத்தில் வெளிப்பட, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மாறன் முகம் புன்னகையால் மலர, வேணியின் முகம் நாணத்தில் சிவந்தது.

“எனக்கு உன்னை இப்ப இல்ல, சின்ன வயசிலிருந்தே பிடிக்கும் வேணி. ” என்ற மாறனை, விழிகள் விரிய பார்த்தாள் கிருஷ்ணவேணி.

“உனக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல. அக்கா மாமா கல்யாணம் நடந்த புதுசுல, நீ என்கிட்ட ரொம்ப நெருக்கமா பழகின. மாமா உனக்குச் சாப்பிட ஏதாவது வாங்கித் தந்தா அதை எனக்கும் கொடுத்திட்டு தான் சாப்பிடுவ. நீ சாப்பிடும் போது நான் வந்தா உன் தட்டில் இருக்கற சாப்பாட்டை எனக்குத் தருவ. அப்பொல்லாம் உன்னைப் பார்க்கும் போது என் அம்மாவே திரும்ப வந்த மாதிரி தெரிஞ்சுது. “

“…”

“அப்படிப் பாசமா இருந்த நீ… என் அக்கா உன்னை அடிச்ச பின்னாடி என்னை விட்டும் தள்ளிப்போக ஆரம்பிச்சிட்ட, அதை என்னால தாங்கிக்கவே முடியலங்கறது தான் உண்மை. “

“நிஜமாவே என்னை அந்தளவு பிடிக்குமா ? என்னால நம்ப முடியல மாமா. ஏன்னா உங்க அக்கா படற கஷ்டத்துக்கு நான் தானே காரணம். அதனால என்னை வெறுத்திருப்பீங்கன்னு நினைச்சேன். “

“என்ன அக்கா கஷ்டப்படறாளா ? ” எனக்கேட்டு சிரித்தவன்,

“உன்னால தான் என் அக்கா சுகபோகமா வாழறா ? அவ உனக்கு நல்ல அம்மாவா இருந்திருக்க வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு நல்ல தோழியா இருந்திருக்கலாம் இல்ல. இப்பவரை அவ உன்னை விரோதியா தான் பார்க்கறா. “

“அவங்களோட இயல்பு அது. “

“உன்னால எப்படி இப்படிப் பேச முடியுது வேணி. என் அக்கா மேல உனக்குக் கோபமே வரலையா ? “

“இதுவரை வந்ததில்ல மாமா. ஆனா இப்ப கோபம் வருது. நான் தான் யாரோ பெத்த பொண்ணு… அவங்களோட வாழ்க்கைக்குக் குறுக்க நின்ன பொண்ணு.‌.. ஆனா மிது அவங்க பெத்த பொண்ணு தானே‌ ? அவளை எதுக்கு ஹாஸ்டலில் விடனும். இப்ப எதுக்குக் கொடைக்கானல் போயிருக்காங்க ? எல்லாம் அப்பாவை சொல்லனும். இப்பவரை நான் அப்பாவை தப்பா நினைச்சதே இல்ல… ஆனா இப்ப நினைக்கத் தோணுது. “

“மாமாவை எதுவும் சொல்லாதே வேணி. “

“ஏன் ? ஏன் சொல்லக்கூடாது. என் அம்மா மேல உண்மையாவே காதல் இருந்திருந்தா அவரு உங்க அக்காவை கல்யாணம் பண்ணியிருக்க மாட்டாரு தானே ? “

“அவரு அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்காகத் தான் வேணி. “

“புரியல… “

“என் அக்காவும் என் அப்பா மாதிரி சுயநலவாதி தான். அவ சந்தோஷமா இருக்கனும்னு நினைப்பாளே தவிர அதுக்காக அவளைச் சேர்ந்தவங்க கஷ்டப்படறாங்களேன்னு யோசிக்க மாட்டா. இப்பவரை அப்படித் தான் இருக்கா. அம்மா இறந்ததும் நான் படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போனேன், வீட்டுக்கு வந்து மத்த வீட்டு வேலை எல்லாத்தையும் நான் தான் செய்வேன்‌‌. என்னையும் உன்னைப் பார்க்கற மாதிரி பார்த்த மாமா… எனக்கு உதவ நினைச்சி தான் அக்காவை கட்டிக்க முன் வந்தாரு. அவரே எதிர்பார்க்காத ஒன்னு எங்க அக்காவோட பிடிவாத குணம். அதைக் கட்டுப்படுத்தவும் மாத்தவும் மாமா நிறைய முயற்சி செஞ்சிட்டாரு. ஆனா இப்பவரை அவ அதை மாத்திக்க மாட்டேங்கற. “

“…”

“இப்ப கொடைக்கானல் போயிருக்கறது கூட அவளோட தொல்லை தாங்காம தான். அங்க ஒரு எஸ்டேட் விலைக்கு வருதாம். அதை அவ மகன் பேருக்கு வாங்கித் தரச்சொல்லி… நாலு நாளா சண்டை போட்டு கூட்டிக்கிட்டு போயிருக்கா. ஏன்னா இப்ப இருக்கற சொத்தை எல்லாம் நானும் நீயும் பங்கு போட்டுக்குவோமாம். அவனுக்குன்னு கடைசியில் எதுவும் இருக்காதாம். “

“அவங்களுக்கு இன்னும் நம்பிக்கை வராம இருக்கறது எனக்குச் சரியா படல மாமா ? நான் தான் வேண்டாதவ, நீங்க அவளோட சொந்த தம்பி தானே… நீங்க அவங்க பிள்ளைகளை ஏமாத்திடுவீங்களா என்ன ? “

“நான் அப்பவே சொன்னேனே… அவ சுயநலம் பிடிச்சவன்னு. அவளோட நம்பிக்கை மனுசங்க மேல எப்பவும் இருக்காது. பணத்து மேல தான் இருக்கும். மாமா அவளுக்கு எத்தனை செஞ்சிருக்காரு தெரியுமா ? அவரையே இன்னும் நம்ப மாட்டேங்கறா ? இதுல நானும் நீயும் எம்மாத்திரம் ? “

“அது சரி… அவங்க நம்பிக்கை வெச்சா என்ன ? வெக்கலன்னா என்ன ? எனக்குத் தேவை உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கா இல்லையாங்கறது தான். “

“பிடிச்சிருக்கு ‘டி’… ” என்றவன் உரிமையோடு கூற, அவள் சற்றே நெழிந்தாள்.

“சாரி, ஒரு எமோஷ்னல்ல ‘டி’ போட்டுட்டேன் கோச்சிக்காதே வேணி. “

“சரி ‘டா’ மன்னிச்சிட்டேன். ” என்றவள் கூற, மாறனின் முகம் புன்னகையால் நிறைந்தது.

“ஆமாம், நான் கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்லையே ? என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா ? ” என்றான் மாறன்.

“பிடிக்கலன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க ? “

“பிடிக்க வைக்க டிரை பண்ணுவேன். “

“அப்பவும் பிடிக்கலன்னா… “

“கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுவேன். “

“அப்பவும்…”

“மாமா கிட்ட பேசி… உனக்குப் பிடிச்ச வாழ்க்கையைத் தேர்தெடுக்க உதவி செய்வேன். “

“ஓ… அப்ப விட்டுக்கொடுத்திடுவீங்களா ? “

“இதுக்குப் பேர் விட்டுக்கொடுக்கறது இல்ல வேணி. நமக்குப் பிடிச்ச பொண்ணு சந்தோஷமா இருக்கனும்னு நினைக்கறது. “

“…”

“ஏற்கனவே எங்க அக்காவால நீ உன் சந்தோஷத்தை இழந்திட்ட. உன்னைச் சந்தோஷமா பார்த்துக்க முடியலன்னா அப்புறம் உன்னோட நான் இருந்து என்ன பிரியோஜனம். “

“உங்க அக்கா வெறுக்கற என்னை.. உங்களால எப்படி நேசிக்க முடியுது. “

“வேணி, அக்கா தம்பியா இருந்தாலும்… நான் வேற, அவ வேற தானே ? “

“ம்… “

“சரி நழுவாதே… பதில் சொல்லு… என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா ? “

“தெரியல… “

“என்ன வேணி… பொசுக்குன்னு தெரியலன்னு சொல்ற ? “

“நிஜமாவே தெரியல மாமா. “

“…”

“நீங்க சொன்ன மாதிரி முதலில் உங்களைப் பாசமா பார்த்தேன் இல்லன்னு சொல்லல… ஆனா நாளாக நாளாகச் சித்தி மேல இருந்த பயம் உங்க மேலையும் வந்துடுச்சு. இப்ப கூட அப்பா சொன்னதால தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மனசுல இருந்த அந்தப் பயம் போகலங்கறது உண்மை. நான் யோசிச்சிருந்தது… வேற. இப்ப இருக்கற சூழ்நிலை வேற. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்ல கொஞ்சம் டைம் வேணும். “

“ம்… ” என்றவன் காரை நிறுத்த கிருஷ்ணவேணி கேள்வியோடு அவனைப் பார்த்தாள்.

“ஸ்கூல் வந்துடுச்சு வேணிம்மா. “

“ஓ… ” என்றவள் காரிலிருந்து இறங்க, அவனும் இறங்கினான். நுழைவாயிலில் இருந்த காவலாளிடம் விசயத்தைக் கூறி பள்ளி வளாகத்தில் நுழைய அனுமதி கேட்க, அவரும் அலைப்பேசியில் அனுமதி வாங்கி இருவரையும் பள்ளி வளாகத்திற்குள் நுழைய அனுமதித்தார்.

“காருலையே உள்ள போயிடலாமா ? ” என்று மாறன் கேட்க,

“ம்… ” என்று யோசித்த காவலர், “சரி போங்க… ” என்று அனுமதித்துப் பள்ளி வளாகத்தின் ஒற்றைக் கதவை திறந்து விட்டார். வாகனம் உள்ளே நுழைந்து பெண்கள் விடுதி இருந்த பகுதியை அடைந்தது.

“வேணி, என்னை ஹாஸ்டலுக்குள்ள விடமாட்டாங்க. அன்னிக்கு மிதுவை சேர்த்துவிட வந்தப்பவே என்னை உள்ள விடல. நீ போய் அவளை அழைச்சிட்டு வந்திடறியா ? நேரா போய் வலது பக்கம் திரும்பினா ஒரு ரூம் இருக்கும். அதான் வார்டன் ரூம். அங்கே போய்க் கேளு… “

“ஓகே… ” என்றபடியே காரிலிருந்து இறங்கியவள் ஹாஸ்டல் உள்ளே நுழைய, அவளுக்கு அவளின் பழைய நினைவுகள் வந்து போனது.

பதின் வயதில் பள்ளியின் கழிவறையில் அவள் சந்தித்த முதல் அனுபவம், உடல் நடுங்க, உள்ளம் குழம்ப, யாரிடம் கூறுவது என்று புரியாமல் தவித்த சில நொடிகள் அவள் கண்முன் வந்து போய், அவள் கண்களில் இப்போது கண்ணீரை துளிர்க்க வைத்தது. அதைத் தன் துப்பட்டாவால் துடைத்துக் கொண்டு வார்டன் ரூமை அடைந்தாள்.

“மேம்… “

“எஸ்…”

“மிதுளா… “

“நீங்க ? “

“அவளோட சிஸ்டர். “

“வாங்க… ” என்றவர் மிதுளாவின் அறைக்கு அவளை அழைத்துச் சென்றார்.

அறை உள்ளே மிதுளா ஓரமாக அமர்ந்திருக்க, அவள் தோழிகள் அவளைச் சுற்றி அமர்ந்திருந்தனர்.

“மிதுளா… ” என்ற வேணியின் அழைப்பு குரல் கேட்டு நிமிர்ந்தவள் “அக்கா…” என்றழைப்புடன் அவளை நெருங்கினாள்.

“டிரஸ் மாத்தி கூட்டிக்கிட்டு போங்க. ” என்று கூறிய வார்டன் வேறு வேலையைப் பார்க்க சென்றுவிட, வேணி மிதுளாவுக்கு உடை மாற்ற உதவி செய்து காருக்கு அழைத்துச் சென்றாள்.

இருவரும் வந்ததைக் கண்டதும் கார் கதவுகளைத் திறந்துவிட்டான் மணிமாறன். மிதுளாவை பின்புறம் ஏற்றிவிட்ட வேணி, “நல்லா படுத்துக்கோ மிது. நான் முன்னாடி உட்கார்ந்துக்கறேன்.” என்றுவிட்டு முன்னிருக்கையில் அமர்ந்தாள்.

கார் கிளம்பியது. மாறனை பார்த்தவள், “அப்பாவுக்குப் போன் செஞ்சிட்டீங்களா ? ” என்று கேட்க,

“போன் இன்னும் நாட் ரீச்சபுள்ன்னு தான் வருது. “

“ம்ச்… என்ன மாமா ? ஒரு அவசரம்னா கூட அவங்களைக் கான்டாக்ட் பண்ண வேற நம்பர் இல்லையா ? “

“எனக்குத் தெரியாது வேணி. மாமா கிளம்பு போது தான் போன் பண்ணினாரு. நானும் விளம்பர படம் எடுக்கற வேலையில் பிஸியா இருந்ததால வேற எதுவும் கேட்கல. “

“எந்த எஸ்டேட்டுன்னு தெரியுமா ? “

“எஸ்டேட் பேரா ? “

“ம்… “

சற்று நேரம் யோசித்தவன், “ஒருநிமிஷம் இரு… ராஜா மாமா கிட்ட கேட்டு சொல்றேன். ” என்ற மாறன் கைப்பேசியை எடுத்து ராஜாவிற்கு அழைத்தான்.

அவரிடம் விபரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டவன், வேணியிடம்… “அவங்க இருக்கற இடம் தெரிஞ்சிடுச்சு வேணிம்மா. லேண்ட்லைன் நம்பர் அனுப்பறேன்னு ராஜா மாமா சொல்லியிருக்காரு. கொஞ்ச நேரத்தில் வந்திடும். “

“ம்… ” என்றவள் பின்புறம் திரும்பி பார்க்க, மிதுளா சுருண்டு படுத்திருந்தாள்.

“இப்ப நாம ஊருக்கு தான் போகனுமா மாமா. அவளால ரொம்ப முடியலன்னு நினைக்கறேன். “

“பக்கத்தில் நம்ம வீடு இருக்கு வேணிம்மா. “

“நம்ம வீடுன்னா ? “

“ம்… நான் தங்கியிருக்கற வீடு. “

“ஓ… நம்ம வீடா ? ஓகே… ஓகே.. ” என்றவள்,

“அதான், புருஷ் அண்ணன் ஆரத்தி எடுக்கனும்னு சொன்னாரா ? “

“ம்… ” “நீ முதல் முறை வரும்போது உன்னைச் சர்ப்ரைஸ் பண்ணி வரவேற்கனும்னு ஆசைப்பட்டேன்… ஆனா இப்படி ஒரு சூழ்நிலை வந்துடுச்சு. “

“அது பரவாயில்லை… நமக்குன்னு ஒரு வீடு இருக்கில்ல ? அதுவே எனக்குச் சந்தோஷம் தான். இல்லன்னா தினமும் உங்க அக்காவோட மூஞ்சை பார்த்துக்கிட்டே இருக்கனும். தேவையில்லாத சண்டை சச்சரவுகளைச் சந்திகாகனும். அவங்களுக்கும் சங்கடம் எனக்கும் அது அவமானம். என் புருஷன் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கறதில் எனக்கு இஷ்டமில்ல. இதை எப்படி உங்க கிட்டையும் அப்பா கிட்டையும் எப்படிச் சொல்றதுன்னு தெரியாம கொஞ்சம் யோசனையா இருந்தது. பரவாயில்லை… என்ன தான் அப்பாவுக்கு உதவியா இருந்தாலும்… உங்க சொந்தக்காலில் நிக்கறது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. “

“ம்… அப்ப என்னைப் பிடிச்சிருக்கு அப்படித் தானே ? “

“அப்படி முழுசா சொல்ல முடியாது. முதல் எதிர்பார்ப்பு ஓகே. “

“ம்… ரொம்பப் பண்ற. பேசிக்கறேன். ” என்று மனதில் நினைத்தவன் வெளியே, “முதலில் வரது ஓகேன்னா அடுத்தடுத்து வரது ஓகேயாகிடும். நம்பிக்கை இருக்கு. “

“ம்… ” என்றவள் “வீட்டுக்கு போக இன்னும் எத்தனை நேரம் ஆகும். “

“பத்து நிமிஷம். “

“சரி… ” என்றவள் மௌனமாக, அவள் மௌனத்தை ரசித்த படியே காரை செலுத்தினான் மணிமாறன்.

அவர்கள் கார் வீட்டை அடைய, அங்கே இருவரையும் வரவேற்க கையில் ஆரத்தி தட்டோடு நின்றிருந்தனர் மாறனின் நண்பர்களும் நண்பிகளும்.

இருவரும் காரிலிருந்து இறங்க, கிருஷ்ணவேணி அடையாளம் கண்டு கொண்ட மாடலிங் நபர்கள் , “இந்தப் பொண்ணா ? ” எனக்கேட்டு வாய் பிளந்தனர்.

புருஷ் மாறனிடம், “இரண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க. ஆரத்தி எடுத்திடுவோம். ” என்றுவிட்டு பக்கத்து வீட்டில் இருந்த கல்யாணி பாட்டியை அழைத்து வந்தான்.

“வேணி, இவங்க கல்யாணி பாட்டி. ரொம்ப ராசியான கை இவங்களோடது. ” என்று மாறன் கூற

“இதுதான் உன் சம்சாரமா ? ” நல்லா லட்சணமா இருக்கா. ” எனக்கூறி ஆரத்தி எடுத்தார் கல்யாணி பாட்டி.

இருவரும் வலது கால் எடுத்து வைத்து வீட்டிற்குள் நுழைய, மலர் மாரி பொழிந்து அவர்களை வரவேற்றது.

தொடரும்…