அத்தியாயம் – 12

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 12

சிநேகா தன் அத்தை கற்பகத்துடன் சமையலறையில் நின்று பேசிக் கொண்டிருக்க, புருஷோத்தமன் இருவருக்கும் இடையில் நின்று அவர்களின் செல்ல சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஏன் டி… சீக்கிரம் என் புள்ளையைக் கட்டிக்கிட்டு இங்க வருவன்னு பார்த்தா, நீயும் அவனோட சேர்த்துக் கிட்டு வேலை பார்க்கப்போறேன்னு சொல்ற ? அப்ப கடைசி வரை நான் மட்டும் தனியாவே இந்த வீட்டில் இருந்து சாகனுமா ? “

“ஏன் அத்த இப்படி எல்லாம் பேசற ? படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வெச்சிக்கலான்னு அப்பா தான் சொல்லிட்டாறே ? கல்யாணம் முடிஞ்சதும் உனக்குத் துணையா ஒரு பேரனையோ பேத்தியையோ பெத்து கொடுத்திடறேன், நீ அவங்களைப் பார்த்துக்கோ… நான் என் வேலையைப் பார்க்கறேன். சரிதானே ? “

“ஆமாம், உங்க அம்மா இதுக்குச் சம்மதிச்சிட்டு தான் மறுவேலை பார்ப்பாங்க. “

“உங்க நாத்தனார் அண்ணி சண்டையை நீங்க கன்ட்டினியூ பண்ணிக்கோங்க. எனக்கு என் அப்பா சப்போர்ட் போதும். “

“ம்.. ” என்றவர் பெருமூச்சு விட வாசலில் காலிங் பெல் அடிக்கும் ஓசை கேட்டது.

“இவ்வளவு காலையில் யாரு வந்திருக்கா ? ஏன் டி நீ இங்க வந்ததை உன் அம்மா கிட்ட சொல்லிட்டியா ? உங்க அம்மா தான் சண்டைக்கு வந்திருப்பான்னு நினைக்கறேன். ” என்று கற்பகம் கூற,

“அட ஏன் அத்த… நான் வேலையா போறேன்னு தான் சொல்லிட்டு வந்திருக்கேன். அம்மா இங்க வர வாய்ப்பே இல்ல. “

“அப்ப யாரு ? ‘

“அம்மா நான் போய்ப் பார்க்கறேன். ” என்றபடியே புருஷ் சமையலறையிலிருந்து ஹாலுக்கு வர… வாசலில் மாறன் நின்றிருந்தான்.

“மாறா… நீயா ? உள்ள வாடா… ” என்று அழைப்பு விடுத்தான்.

“அம்மா… மாறன் வந்திருக்கான். ” என்று அவன் சமையலறை நோக்கி கூறி முடிக்கும் முன் புன்னகை பூத்த முகத்துடன் அவனை வரவேற்க ஹாலுக்கு வந்தார் கற்பகம்.

“மாறா…. வாப்பா. “

“மாறன் அண்ணா வாங்க.. “

அழைப்பு விடுத்த அனைவருக்கும் புன்னகையால் நன்றி கூறியவன் முகத்தில் சிறிய பதற்றம் தெரிந்தது.

அதைக் கவனித்த புருஷ், “என்னடா ஏதாவது பிரச்சனையா ? இவ்வளவு காலையில் நீயே வந்திருக்க ? ” என்று கேட்க,

வீட்டை ஒரு முழுப் பார்வை பார்த்தபடியே சோபாவில் அமர்ந்தான் மாறன்.

“காலையில் எத்தனை மணிக்கு வந்தீங்க ? ” என்று கேட்ட மாறனின் குரலில் ஏதோ ஒரு தேவை தெரிந்தது.

“நாலு மணி இருக்கும். ஏன் கேட்கற ? “

“சும்மா தான். ஆமாம் க்ரிஷ் எங்க ? தூங்கறாளா ? “

“இல்ல மாடியில் தான் இருக்கா. ” என்று பதில் தந்தாள் சிநேகா.

“நான் பார்க்கனுமே ? “

“நான் போய்க் கூட்டிக்கிட்டு வரேன். “

“இல்ல… நானே போய்ப் பார்த்துக்கறேன். “

“வேணாம் மச்சி… அந்தப் பொண்ணு ஒரு மாதிரி. சின்னச் சின்ன விசயத்துக்குக் கூட வேற மாதிரி ரியாக்ட் பண்றா. ” என்று புருஷ் கூற மாறன் முகத்தில் சிறிய அதிர்ச்சி,

“வேற மாதிரியா ? என்னாச்சு ? ஏதாவது பிரச்சனையா ? “

“பிரச்சனை எல்லாம் இல்ல… அது காலையில் காரில் தூங்கிட்டு இருந்தாளா… கன்னத்தை லேசா தட்டி எழுப்பினேன். அதுக்கே கோவப்பட்டா. இப்ப அவ தனியா இருக்கும் போது நீ போனா… அதுக்கும் கோவப்படலாம். சிநேகா போய்க் கூட்டிக்கிட்டு வரட்டும். நாம ஹாலிலேயே பேசுவோம். “

“ஓ… இவ்வளவு தானா. நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். ” என்ற மாறன்… “அதெல்லாம் கோவப்பட்டாலும் நான் சமாளிச்சிக்கறேன். ” என்றபடியே மாடியறை நோக்கி சென்றான்.

“இவரு என்ன, நாம சொல்றதை புரிஞ்சிக்காம போறாரு ? தனியா இருக்கும் போது புது ஆள் சொல்லாம கொள்ளாம ரூமுக்குள்ள போனா அவ கத்துவா மாமா. ” என்றபடியே மாறனுக்கு முன் செல்ல நினைத்து மாடி படி நோக்கி ஓடினாள் சிநேகா.

புருஷோத்தமனும் நாலு எட்டில் மாறன் அருகே சென்று அவன் கைகளைப் பிடித்து நிறுத்தினான். “இரு மச்சி, சிநேகா போய் நீ அவளைப் பார்க்க வந்திருக்கறதா சொல்லட்டும். அப்புறம் நாம போவோம். ” என்றிட

அவனைப் பார்த்த மாறன், “எப்படின்னாலும் அவ அதிர்ச்சியாகத் தான் போறா. சமாளிச்சி தான் ஆகனும். பேசாம வா.. ” என்றபடியே அவனிடம் இருந்து தன் கைகளை விடுவித்துக் கொண்டு மாடி படி ஏறினான்.

மாறன் கூறியதன் பொருள் விளங்காமல் அவனைக் குழப்பத்துடன் தொடர்ந்தான் புருஷோத்தமன்.

அவர்கள் வருவதற்குள் அறைக்குச் சென்ற சிநேகா, க்ரிஷிடம்…. “மாறன் வந்திருக்காரு க்ரிஷ். உன் கிட்ட பேசனுமாம். ரூமுக்கு வரவான்னு கேட்டாரு. ” என்ற சேதியை கூறிவிட்டாள்.

“நானே கீழ வரேன். ” என்றபடியே எழுந்த க்ரிஷ், பெட்டியில் உடைகளுக்கு இடையே இருந்த துப்பட்டாவை உருவி தன் மேல் போட்டுக்கொண்டு திரும்ப, கதவருகே வந்து நின்ற மாறனை கண்டு அதிர்ந்தாள்.

அவள் அதிர்ந்ததைக் கண்டு சிநேகாவும் தன் பார்வையைக் கதவருகே திருப்ப புருஷும் மாறனும் நின்றிருப்பதைக் கண்டாள்.

“நான் தான் கூப்பிடறேன்னு சொன்னேன் இல்ல. ” என்று புருஷிடம் கடிந்தக்கொண்ட சிநேகா, க்ரிஷை பார்த்து… “க்ரிஷ், இவரு தான் மாறன். ” என்று அறிமுகப்படுத்தினாள்.

க்ரிஷ் வாய்பிளந்து அவனைப் பார்க்க அவனோ அவசரமாக அறை உள்ளே நுழைந்து கிருஷ்ணவேணியை நெருங்கினான்.

“ஒரு அவசரம்… மிதுளா ஸ்கூல் வர போகனும். கொஞ்சம் துணைக்கு வரியா ? ” என்றிட

“மிது… மிதுக்கு என்ன ? ” என்றாள் க்ரிஷ் படபடப்புடன்.

“ஒன்னுமில்ல… அவ… எஜ் அட்டன் பண்ணிட்டாளாம். நைட்டே பத்து மணிக்கு போன் வந்தது. அக்கா மாமா வேற ஊருல இல்ல. எனக்கு என்ன பண்றதுன்னு புரியல. காலையில் வந்து அவளை அழைச்சிக்கறேன்னு சொன்னேன். அவங்க துணைக்குப் பொண்ணுங்க யாரையாவது கூட்டிக்கிட்டு வரச்சொன்னாங்க. “

“உங்க அக்காவுக்கு அறிவு இருக்கா இல்லையா ? இப்ப அவளை ஹாஸ்டலில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு ? பாட்டி இருந்தா கூட விட்டுட்டு போகலாம்… இப்படிப் பெத்த பொண்ணு மேல கூடவா பாசம் இல்லாம இருப்பாங்க. இப்படி ஒரு அம்மாவை நான் பார்த்ததே இல்ல சாமி. ” என்று படபடவெனப் பொறிந்தவள், “வெய்ட் பண்ணுங்க… டிரஸ் மாத்திட்டு வரேன். ” என்றவிட்டு தன் பெட்டியில் இருந்த சுடிதார் ஒன்றை எடுத்துக் கொண்டு குளியைறை உள்ளே நுழைந்தாள்.

மாறன் புருஷை பார்த்து, “இன்னிக்கு ஷுட்டிங் போக முடியுமான்னு தெரியலடா. மாமா போன் வேற நாட் ரீச்சபுளில் இருக்கு. மிதுளாவை அழைச்சிட்டு என் வீட்டுக்கு தான் போகனும். அவங்க வந்ததும் அவளை ஊருக்கு அனுப்பிட்டு ஷுட்டிங் ஸ்டாட் பண்ணிக்கலாம். எல்லோர் கிட்டையும் சொல்லிடு. ” என்றிட

“அதெல்லாம் இருக்கட்டும்.” என்ற புருஷ் மாறனை நெருங்கி, அவன் கண்களைப் பார்த்து, ” மிதுவை பத்தி க்ரிஷ் கிட்ட சொல்ற ? அவளைத் துணைக்குக் கூப்பிடற ? அவளும் வரேன்னு சொல்றா ? என்னடா நடக்குது இங்க ? ” என்று கேட்க,

“மச்சி… இவ தான் டா என் மாமாவோட பொண்ணு கிருஷ்ணவேணி. வீட்டில் வேணின்னு கூப்பிடுவோம். ” என்று பதில் தந்தான் மணிமாறன்.

“அடப்பாவி… அதான் அன்னிக்கு போட்டோ பார்த்து அந்த முழி முழிச்சியா ? என்கிட்ட கூடச் சொல்லாம மறைச்சிட்ட இல்ல. ” என்றபடியே மாறனை புருஷ் அடிக்க,

“டேய்… அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலான்னு நினைச்சேன். கடைசியில் இப்படிச் சர்ப்ரைஸ் பண்ண வேண்டியதா போச்சு. “

“போடாங்கு… ” என்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வந்துவிட்டாள் கிருஷ்ணவேணி.

“போகலாம்… “

“ம்… ” என்றவன் “புருஷ் பார்த்துக்கோ டா… நான் கால் பண்றேன். ” என்றிட,

சிநேகா க்ரிஷிடம், “ஏய், இவரா உன் ஹப்பி ? “என்று கேட்க,

அவளை முறைப்பாகப் பார்த்தபடியே ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.

“மாடலிங் வந்த பொண்ணுங்க சொன்னதுக்கும், நீ சொன்னதுக்கும் சம்மந்தமே இல்லையே க்ரிஷ். நீ சொன்ன உன் ஹப்பி வில்லேஜ் பார்ட்டி… ஆனா இவரு பெரிய ரோமியோடி. ” என்றாள் கிண்டலாக,

“பார்த்தாவே தெரியுது. இப்ப இதைப் பத்தி பேச நேரம் இல்ல. அப்புறம் பேசிக்கறேன். முதலில் மிதுளாவை போய்ப் பார்க்கனும். அதுதான் இப்ப முக்கியம். ” என்ற கிருஷ்ணவேணி கோபமாக மணிமாறனை பார்க்க,

ஒரு புன்னகையால் அவள் கோபத்தைக் குறைக்க முற்பட்டான். “இல்ல வேணிம்மா, உன்கிட்ட பேசலான்னு தான் வந்தேன். அதுக்குள்ள நிறைய வேலை… நீதான் பார்த்தியே டைமே இல்லாம… சுத்திக்கிட்டு இருந்தேன் தானே ? “

“அது சரி.. ஆனா நான் அன்னிக்குப் போனில் பேசும்போது பேசறது நான்தான்னு உங்களுக்குத் தெரியுமா ?”

“தெரியும். அது… காஸ்டியூம் டிசைனர் பத்தி நானும் புருஷும் பேசிக்கிட்டு இருந்தப்போ… சிநேகாவை பத்தியும் உன்னைப் பத்தியும் சொன்னான். சிநேகாவை நான் இதுக்கு முன்னாடி இரண்டு மூனு முறை பார்த்திருக்கேன். ஆனா உன்னைத் தெரியாது… உன் போட்டோ காட்டி உன்னோட அச்சீவ்மெண்ட்டை பத்தி எல்லாம் புருஷ் சொன்னான். எனக்கு அது சர்ப்ரைஸா தான் இருந்தது. ஊருக்கு நீ வந்தப்ப… உன்கிட்ட பேசலான்னு தான் நினைச்சேன்… ஆனா முடியல. போனில் பேசும்போது எப்படி நான்தான்னு சொல்றதுன்னு ஒரு தயக்கம். சரி எப்படியும் நேரில் பார்ப்போம் இல்ல… அப்ப பேசிக்கலான்னு அமைதியா இருந்துட்டேன். “

அவன் பதிலில் திருப்தி ஏற்படவில்லை என்றாலும் மௌனம் காத்தாள். அதே நேரம் அவள் கைப்பேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவள் அழைத்தது மிதுளா என்பதை அறிந்து அவசரமாக அதை அட்டன் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ… மிது… “

“அக்கா… உங்க போனுக்கு என்னாச்சு ? “

“அது சார்ஜ் இல்லாம ஆப்ஃபாகிடுச்சு மிது. இப்பதான் ஆன் பண்ணினேன். “

“ம்… “

“மிது… பயப்படாதே. நான் இப்ப அங்க வரேன். “

“உங்களுக்கு.. உங்களுக்கு.. தெரியுமா அக்கா. “

“ஆங்… இப்பதான் உன் மாமா சொன்னாரு.

“அக்கா கொஞ்சம் சீக்கிரம் வாங்க. எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது. “

“சீக்கிரம் வந்திடறேன் மிது. நீ பயப்படாதே. இதெல்லாம் காமன் தான். “

“ம்… சரி அக்கா… “

“வெச்சிடறேன். “

“ம்… “

அழைப்பை துண்டித்த கிருஷ்ணவேணி, “கிளம்பலாம்… அவ ரொம்பப் பயந்து போய் இருக்கா. ” என்றிட, மாறன் புருஷை பார்த்தான்.

“உன் வீட்டு சாவியைக் கொடுத்திட்டு போ, நானும் சிநேகாவும் வீட்டை சுத்தம் செஞ்சி வைக்கறோம். “

“இல்ல வேணாம். ” என்று மாறன் மறுக்க,

“டேய்… என்ன தான் நீங்க மிதுவை கூட்டிக்கிட்டு வந்தாலும், பர்ஸ்ட் டைம் உன் மனைவியோட உன் வீட்டுக்கு வரப்போற… நீ நினைச்ச அளவு பெருசா இல்லன்னாலும்…. ஆரத்தியாவது எடுக்க வேண்டாமா ? சாவியைக் கொடு. “

அவன் கூறியதை கேட்டு தயக்கத்தோடு சாவியைப் புருஷிடம் கொடுத்தான் மாறன். அவர்கள் பேசிக்கொண்டதை கவனித்தாலும் கவனியாததைப் போல நின்றிருந்தாள் க்ரிஷ்.

சாவியைப் பெற்றுக்கொண்ட புருஷின் காதில் ஏதோ ரகசியம் கூறினான் மாறன்.

“ம்.. நான் பார்த்துக்கறேன். ” என்று அதற்குப் பதில் தந்தான் புருஷ்.

“வேணிம்மா, வா போகலாம். ” என்ற மாறன் முன்னே நடக்க அவனைத் தொடர்ந்தாள் கிருஷ்ணவேணி.

நால்வரும் ஹாலுக்கு வர, அங்கே கற்பகம் நின்றிருந்தார். அவரை நெருங்கிய புருஷ், “அம்மா, இந்த மாறன் பையன் நம்மக்கிட்டே எவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சிட்டான் தெரியுமா ? ” எனக்கூற,

“என்ன விசயம் ? “

“இந்தப் பொண்ணு தான் இவன் பொண்டாட்டியாம். நம்மைக் கூடக் கூப்பிடாம ரகசியமா தாலிகட்டிட்டான்னு சொன்னேன் இல்ல… “

“என்ன ? இந்தப் பொண்ணா ? ” என்று கேட்டவர் கிருஷ்ணவேணியை நெருங்கி, “ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு. ” எனக்கூறி இருவருக்கும் நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்தார்.

“அம்மா… மிதுவை கூப்பிட போகனும். நான் திரும்பவும் வரேன்… தெளிவா பேசிக்கலாம். இப்ப கொஞ்சம் அவசரம். ” என்றான் மாறன்.

“மிதுக்கு என்ன ? “

“அம்மா அதை நான் சொல்றேன். ” என்ற புருஷ் “நீ கிளம்பு மாறா… ” எனக்கூறி அவர்களை அனுப்பி வைத்தான்.

காருக்கு சென்றவள் பின்னிருக்கையின் கதவை திறக்க, “முன்னாடி உட்காரலாமே ? ” என்று கேட்டான் மாறன்.

அவன் கேட்டதற்கு இணங்கி, முன்னிருக்கையில் அமர்ந்தாள் க்ரிஷ். கார் பள்ளி நோக்கி பறந்தது.

தொடரும்….