அத்தியாயம் – 11

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 11

கார் தெரு முனையைத் தொட, புருஷின் கைப்பேசி அலறியது. காரின் டாஷ்போர்டில் வைத்திருந்த கைப்பேசியை எடுக்கத் திணறிய புருஷுக்கு உதவிடும் நோக்கோடு அதை எடுத்தாள் சிநேகா.

“மாறன் தான்… ” என்றபடியே அழைப்பை ஏற்றுப் புருஷின் காதில் வைத்தாள்.

“ஹலோ… “

“…”

“கிளம்பிட்டோம் டா… “

“…”

“இல்லடா இப்பதான் கிளம்பினோம். “

“…”

“டேய்… அப்படி இல்லடா. “

“…”

“மாறா… ப்ளீஸ் டா…. கோவப்படாதே. “

“…”

“சாரி”

“…”

“சரி வெச்சிடறேன். “

“…”

“ம்… ரீச்சானதும் சொல்றேன். “

“…”

“இல்ல எங்க வீட்டுக்கு போயிடறேன். காலையில் நேரா ஷுட்டிங் ஸ்டாட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்திடறேன். “

“…”

“ம்….”

“…”

“ஓகே… வெச்சிடறேன். ” என்ற புருஷ் பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு, “நல்ல வேளை போனை காரில் கனைக்ட் பண்ணல. இல்லன்னா அவன் கழுவி கழுவி ஊத்துனதை… இவங்க ரெண்டு பேரும் கேட்டிருப்பாங்க. இவங்க கேட்டிருந்தா… நம்மை நல்லா வெச்சி செஞ்சிருப்பாங்க. ” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டான்.

“என்ன சொல்ற புருஷ் ? எனக்குக் கேட்கல, ” என்று சிநேகா கிண்டல் நிறைந்த குரலில் கேட்க,

“ம்… ஒன்னும் சொல்லலே… ” என்றவிட்டுப் போனை பிடுங்கி மீண்டும் டாஷ்போர்டில் வைத்தான்.

“என்ன ? மாறன் நல்லா டோஸ் விட்டாரா ? “

“ஏன்டி உன் புருஷை ஒருத்தன் திட்டறான். அவனைத் திட்டாம, நான் திட்டு வாங்கறதை நினைச்சு சந்தோஷப்படற ? நீயெல்லாம் என்ன லவ்வரோ ? “

“நான் நல்ல லவ்வர் தான்… நீதான் நான் இல்லாதப்ப வேற ஆள் தேடி அலையற. “

“இப்படி எல்லாம் பேசாதே சிநேக். எனக்கு நிஜமாவே சங்கடமா இருக்கு. ” என்ற புருஷின் குரலில் வருத்தம் தெரிய,

“ஆமாம், நான் ஏதாவது சொன்னா மட்டும் மூஞ்சை பாவமா வெச்சிக்கோ. ஆனா பண்றதெல்லாம் மன்மதன் வேலை. “

“ஏன் டி ? ” என்றவன் கிருஷ்ணவேணியை ஜாடையாய் காட்டி… அவள் முன் தன்னைப் பேசாதே என்று சன்னமான குரலில் கெஞ்சலாகக் கேட்டுக் கொள்ள… பெரிய மனது வைத்து அவனைத் தற்போதைக்கு மன்னித்துவிட்டாள் சிநேகா.

இருவரின் சம்பாஷனையைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்டு வந்த க்ரிஷ், மாறன் என்ற பெயர் அடிபடவும் தான் அவன் குறுஞ்செய்தி அனுப்ப சொல்லி கேட்டது நினைவு வந்தது.

“ஓ மை காட்… கிளம்பினதும் மெசேஜ் பண்ண மறந்துட்டேனே… நம்மால தான் இவரு திட்டு வாங்கிட்டாரு போலையே ? உடனே ஒரு மெசேஜ் பண்ணி சாரி கேட்டுடலாம். ” என்று எண்ணியபடியே தன் அலைப்பேசியைக் கைப்பையில் தேடினாள். ஆனால் அலைப்பேசியைக் கைப்பையில் காணவில்லை.

குழப்பமடைந்த க்ரிஷ், “சிநேக், என் போனை பார்த்தியா ? ” என்று கேட்க, அவளின் கேள்வியால் கார் சட்டென நின்றது.

“நான் பார்க்கல க்ரிஷ். உன் ஹேன்ட் பேக்கில் நல்லா தேடு. “

“இல்ல, பேக்கில் போன் இல்ல. ” என்றவள் யோசித்துப் பார்க்க, சிநேகா கையைப் பிடித்து இழுத்த போது அது மெத்தையில் விழுந்தது நினைவு வந்தது.

“நீ என்னை இழுத்துட்டு ஹாலுக்கு வந்தப்ப, போன் பெட்ல விழுந்துடுச்சு சிநேக். அதுக்கு அப்புறம் அதை நான் எடுக்கவே இல்ல. “

“நல்லவேளை இப்பவே கண்டுபிடிச்சோம். ” என்ற புருஷ் காரை திருப்பினான். மீண்டும் வீட்டை அடைந்த காரிலிருந்து இறங்கிய க்ரிஷ், சிநேகாவிடம் பெற்றுக் கொண்ட சாவியோடு மேல் தளத்தில் இருந்த தங்கள் அறையை நோக்கி சென்றாள்.

படுக்கையறையில் மெத்தை மேல் அமைதியாக உறங்கி கொண்டிருந்த கைப்பேசியை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள் க்ரிஷ். அவள் காரில் ஏறியதும் கார் மீண்டும் தன் பயணத்தைத் தொடங்கியது.

“சாரி அண்ணா… “

“எதுக்கும்மா சாரி எல்லாம். இத்தனை வேலை செஞ்சிருக்கீங்க… போனை மறந்தது யதார்த்தம் தானே. விடு… என்ன, ரொம்பத் தூரம் போயிருந்தா சிக்கலாகி இருக்கும். அதான் எடுத்தாச்சு இல்ல… ” என்று அவளுக்கு மறுமொழி கூறியபடியே காரை சாலையில் செலுத்தினான் புருஷோத்தமன்.

“எல்லாம் என்னால… கவனமா இருக்காம. ” என்று தன்னைத் தானே திட்டிக் கொண்ட க்ரிஷ் கைப்பேசியை இயக்கி பார்க்க… அது அணைந்து போய் இருந்தது.

“சார்ஜ் போயிடுச்சா… கடவுளே… ” என்று நொந்தவள் போனை கைப்பையில் போட்டுவிட்டு சாலையை வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.

மாநகரத்தை தாண்டுவதற்கு ஒரு மணிநேரம் பிடிக்க, ஒருவழியாக மாநகரை கடந்து தேசிய நெடுஞ்சாலையை அடைந்தனர்.

“புருஷ், சாப்பிட்டுக் கிளம்பலாம். பசிக்குது. ” என்றாள் சிநேகா.

“ம்… தமிழ்நாட்டு பாடரை தொட்டதும் வர ஹோட்டலில் நிறுத்தறேன் சிநேக். “

“ம்… “அவர்கள் இருவரும் பேசிய படியே பயணிக்க க்ரிஷ் மட்டும் மௌனமாக அவர்கள் பேசுவதைக் கவனித்து வந்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் அவ்வாறு கவனிப்பது தவறு என்றுணர்ந்த க்ரிஷ் தன் இமையை மூட, மூன்று நாட்களாக வேலையில் மூழ்கி நித்திரைக்கு விடுப்புக் கொடுத்திருந்த காரணத்தால் இப்போது அது அவளை முழுமையாக ஆட்கொண்டது.

***

விடியறை வேளை…. நான்கு மணி போலப் புருஷோத்தமனின் இல்லத்தை அடைந்து தன் பயணத்தை நிறைவு செய்தது அந்த வாகனம்.

ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த புருஷ் சிநேகாவை பார்க்க, அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். பின்புறம் திரும்பி கிருஷ்ணவேணியைப் பார்க்க, அவளும் ஆழ்நிலை உறக்கத்தில் இருந்தாள்.

“சரிதான், இரண்டும் நல்ல தூக்கத்தில் இருக்கே எப்படி எழுப்பறது ? ” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டவன் காரிலிருந்து இறங்கினான். பின்னிருக்கை கதவை திறந்தவன், “முதலில் இந்தப் பொண்ணை எழுப்பிடுவோம். சாப்பிட எழுப்பினப்ப கூட எழுந்திரிக்கல. இப்ப எழுப்பினா எழுந்திடுவான்னு நினைக்கறேன். ” என்று முணுமுணுத்த படியே ‘க்ரிஷ்’ என அழைத்து அவள் நித்திரையைக் கலைக்க முனைந்தான்.

அவள் உறக்கம் கலையாமல் இருக்கவே, அவள் கன்னத்தை மெல்லமாகத் தட்டி, ‘க்ரிஷ் எழுந்திரிம்மா… வீடு வந்துடுச்சு. ‘ என்றிட, தன் உடல் மேல் பிறர் கைப்பட்டதும் திடுக்கிட்டு எழுந்தமர்ந்தாள் கிருஷ்ணவேணி.

“யார்… என்னைத் தொட்டது ? ” என்று கடுமையாக ஒலித்தது அவள் குரல்.அவள் குரலின் கடுமையைக் கண்டு அதிர்ந்த புருஷ்,

“அம்மா, இங்க பாரு நான் தான் புருஷ்… உன் பிரண்டோட ஹப்பி. “

அவனை வினோதமாகப் பார்த்த க்ரிஷ், “ஹப்பின்னா ? தொடுவீங்களா ? “

“இல்லம்மா உன்னைக் கூப்பிட்டேன் நீ எழுந்திரிக்கல. அதான் கன்னத்தை லேசா தட்டி எழுப்பினேன். “

“ச்சே… ஒரு பொண்ணு தூங்கும் போது அவளைத் தொடக்கூடாதுங்கற மேனர்ஸ் கூட இல்ல. நீங்க எல்லாம்… ” என்றவள் குரலில் வெறுப்பு மேலோங்க,

அவர்களின் வாக்குவாதம் தந்த சத்தத்தில் சிநேகா எழுந்துவிட்டாள். எழுந்ததும் தன் தோழியின் கடுமை நிறைந்த முகத்தையும் நடுங்கும் உடலை கண்டு நடந்ததைக் கணித்தவள்,

“மாமா… நீ முதலில் என்னை எழுப்பி இருக்கலாம் இல்ல ? ” என்று கேட்டுவிட்டு க்ரிஷின் கைகளைப் பிடித்தாள்.

“க்ரிஷ், இங்க பாரு… நான்தான். ” என்றாள்,

“…”

“மாமா, நீ இப்படி வா. ” என்றவள் காரின் முன்னிருக்கையில் இருந்து இறங்கி க்ரிஷ் அமர்ந்திருந்த இருக்கைக்கு வந்தாள். அவள் தோள் பற்றி அழைத்துக் கொண்டு புருஷோத்தமனின் வீட்டின் தலைவாசலை நோக்கி நடந்தவளை தொடர்ந்தான் புருஷோத்தமன்.

கதவருகே சென்றதும் அழைப்பு மணியை அடித்து வீட்டில் இருப்போரை அழைத்தான் புருஷ். சில நிமிடங்கள் கழித்துப் புருஷோத்தமனின் தாய் கற்பகம் வந்து கதவை திறந்தார்.

“வந்துட்டியாப்பா ? ” என்றவர் மருமகள் சிநேகாவை பார்த்து… “வாடி மருமகளே… வேலையிருந்தா தான் இந்த அத்தையைப் பார்க்கவே வர. ” எனக்கூறி அவர்களை உள்ளே அழைத்தார்.

மூவரும் வீட்டிற்குள் நுழைய, ஹாலில் இருந்த சோபாவில் க்ரிஷை அமர வைத்து அவளருகே தானும் அமர்ந்து கொண்டாள் சிநேகா.

அவர்கள் இருவரையும் குழப்பத்துடன் பார்த்த படியே தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தான் புருஷோத்தமன். சில நிமிட ஆசுவாசத்திற்குப் பிறகு இயல்பு நிலையை அடைந்த க்ரிஷ், “சாரி அண்ணா… தூக்கத்தில் இருக்கும் போது, யாராவது தொட்டா எனக்குப் பயங்கரக் கோவம் வந்திடும். அதான் கோபமா பேசிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க.” என்றிட.

“பரவாயில்லை விடும்மா… ” என்ற புருஷ், “சிநேகா, இவங்களை மாடி ரூமுக்கு கூட்டிட்டு போ. நான் உங்க திங்க்ஸை எடுத்திட்டு வரேன். ” என்றபடியே கார் இருந்த இடம் நோக்கி போனான்.

“வா… ” என்று க்ரிஷை அழைத்த சிநேகா… “அத்தை கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க… இவளுக்கு ரூமை காட்டிட்டு வந்து உங்களோட பேசறேன். அப்புறம் நம்ம சண்டையைக் கன்ட்டினியூ பண்ணலாம். ” என்றுவிட்டு கிருஷ்ணவேணியுடன் மாடியறைக்குச் சென்றாள்.

“சிநேகா, காபி போடவா ? ” என்றார் அவளின் அத்தை கற்பகம்.

சிநேகா க்ரிஷை பார்க்க, அவளும் சரியெனத் தலையை அசைத்தாள். “ஓகே அத்தை… ” என்றபடியே அறை நோக்கி நகர்ந்தாள்.

புருஷோத்தமன் அவர்களின் உடைகள் அடங்கிய பெட்டியை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் குழம்பிய படியே மாடி அறைக்கு வந்து கதவை தட்டினான். லேசாக சாத்தியிருந்த கதவை முழுவதுமாகத் திறந்த சிநேகா, நின்றிருந்தவனைக் கேள்வியோடு பார்க்க, “உங்க டிரஸ் எந்தப் பெட்டியில் இருக்குன்னு தெரியல டி. நீ வந்து கொஞ்சம் சொல்லேன். மத்த பெட்டியை எல்லாம் காரிலிருந்து இறக்காம… காலையில் ஷுட்டிங் ஸ்பாட்டுக்குக் கொண்டு போயிடலாம். ” என்றவன் தயக்கத்துடன் கேட்க,

“தோ… வரேன்.” என்றுவிட்டு அவனோடு சென்றாள் சிநேகா.

“க்ரிஷ், ஏன் அப்படி ரியாக்ட் பண்ணினான்னு தெரியல சிநேக். நான் அவ கன்னத்தைத் தான் தட்டினேன். அதுவும் லேசா தான் தட்டினேன். “

“இல்ல மாமா… அவ சின்ன வயசில் இருந்து ஹாஸ்டலில் படிக்கறதால… பயத்தோடவே இருந்திருக்கா‌. அதனால தூக்கத்தில் யாராவது அவளைத் தொட்டா இப்படித் தான் கத்துவா. வேற ஒன்னுமில்ல… நீ எதுவும் தப்பா நினைக்காதே. “

“அதுசரி… கல்யாணமானதும் புருஷன் வந்து தொட்டா கூட இப்படித் தான் கத்துவாளா ? ” என்று கேட்டவன் குரலில் கிண்டல் தெறிக்க,

“தெரியல… ஆனா அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு. “

“பாரு டா… அப்ப அவ புருஷன் பாடு ரொம்பக் கஷ்டம் தான். ” என்று கேலி செய்தபடியே காரின் டிக்கியை திறந்தான். அதிலிருந்த பெட்டிகளில் இரண்டை அடையாளம் காட்டிய சிநேகா ஒன்றை எடுத்துக் கொள்ள மற்றொன்றை புருஷ் எடுத்துக் கொண்டான். இருவரும் மாடியறை நோக்கி நடக்க, மாடியின் பால்கனியில் நின்று அவர்களை அழைத்தாள் க்ரிஷ்.

“சிநேக்… என் ஹேன்ட் பேக் காரில் இருக்கு அதை எடுத்திட்டு வந்திடு டி. ” என்றிட,

“ஓகே… ” என்ற சிநேகா காரின் பின்புற இருக்கையில் இருந்த கைப்பையையும் எடுத்துக் கொண்டாள்.

“அந்தப் பெட்டியை கொடு டி. நானே எடுத்திட்டு வரேன். நீ ஹேன்ட் பேக்கை மட்டும் எடுத்துக்கோ… ” என்ற புருஷ் அவளிடமிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டான். சிநேகா அவனின் கன்னம் கிள்ளி… “தேங்க்யூ டா புருஷா… ” என்றுவிட்டு முத்தம் ஒன்றை பரிசா கொடுத்தாள்.

“பாரு டா… என் பொண்டாட்டிக்கு என் மேல லவ்வு பொங்குது. ” எனக்கூறி புன்னகை சிந்தியபடியே இரண்டு பெட்டியை இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டு நடந்தான்.

அவர்களைப் பார்த்த படியே அறை உள்ளே நுழைந்தவள் சோர்வுடன் படுக்கையில் அமர்ந்தாள். சிநேகா பெட்டியோடு வரவும், கற்பகம் காபியோடு வரவும் சரியாக இருக்க, காபியை வாங்கிப் பருகிவிட்டு குளியலறைக்குள் தன்னை நுழைத்து கொண்டாள் க்ரிஷ்.

குளித்து விட்டு இரவு உடையில் வந்தவள், தன் கைப்பையைத் திறந்து கைப்பேசியை எடுத்தாள். பெட்டியில் இருந்த மின் ஏற்றியின் உதவியுடன் அதை மின் இணைப்பில் பொருத்திவிட்டுப் படுக்கையில் சாய்ந்தாள். அவளைப் பார்த்த படியே குளியலறைக்குள் நுழைந்த சிநேகா குளித்துவிட்டு வர, க்ரிஷ் பால்கனியில் நின்று விடியல் வேளையை ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.

“க்ரிஷ், ஆர் யூ ஓகே. ” என்ற கேள்வியோடு அவளை நெருங்கினாள் சிநேகா.

“யா, ஐ ஏம் குட். ” என்றவள் “நான் சின்ன வயசில் அப்பா அம்மாவோட தான் தூங்குவேன். அம்மா என்னைக் கண்ணுக்குள்ள வெச்சி வளர்த்தாங்க. அவங்களோட இழப்புக்கு அப்புறம் ஒரு சின்னப் பயம் எனக்குள் வந்திடுச்சு. பாதுகாப்புமின்மையை உணர ஆரம்பிச்சேன். அப்பாவோட ரொம்ப நெருங்கமா இருந்து அந்தப் பயத்தை விரட்ட ஆரம்பிச்ச சமயத்தில்… சித்தி வந்தாங்க. அப்பாவோடையும் பிரிவு வந்துடுச்சு.அதுக்கு அப்புறம் ஹாஸ்டல், வேத்து ஆளுங்கன்னு பார்த்ததும் தூங்கவே பயமா இருக்கும். தூங்கும் போது நம்மை யாராவது கடத்திட்டு போயிடுவாங்களோன்னு தோணும். பாதி நாள் தூங்கவே மாட்டேன். அப்புறம் மெல்ல பழகிட்டேன். அப்படிப் பழகினாலும் தூக்கத்தில் யாராவது தொட்டா உடனே தூக்கம் கலைஞ்சிடும். அந்தப் பயம் எட்டி பார்க்கும். மனசு படபடப்பாகிடும். “

“எனக்குப் புரியுது க்ரிஷ். இதெல்லாம் நீ சொல்லனும்னு அவசியம் இல்ல. இரண்டு வருஷமா நாம ஒன்னா தானே இருக்கோம். எனக்குத் தெரியாதா ? “

“ம்ச்… இல்ல… பாவம் அண்ணன் தான் ஒருமாதிரி ஆகிட்டாரு. அதான். “

“அதெல்லாம் ஒன்னுமில்ல. அவரு ஜாலி டைப் தான். இதை எல்லாம் சீரியஸா எடுத்துக்க மாட்டாரு. கவலைப்படாதே. “

“ம்… “

“சரி… நான் கீழ போய் அத்தையைப் பார்த்து பேசிட்டு இருக்கேன். “

“ம்… “

“நீ வரியா ? “

“இல்ல… கொஞ்ச நேரம் கழிச்சு வரேன். “

“சரி… ” என்றவள் கீழே செல்ல… க்ரிஷ் தன் கைப்பேசியைத் தேடி அறை உள்ளே சென்றாள்.

அதே நேரம் அந்த வீட்டிற்குள் நுழைந்தது மாறனின் கார்.

தொடரும்….