அத்தியாயம் – 10

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 10

அடுத்த நாள் மாலை வேளை, மின் இணைப்பில் இருந்த சிநேகாவின் கைப்பேசி ஒலிக்க அதை எடுத்தாள் கிருஷ்ணவேணி. கைப்பேசியின் தொடுத்திரையில் ‘மை லவ்’ என்று ஒளிரவும்… கிருஷ்ணவேணி சிநேகாவை அழைத்தாள்.

“சிநேக்… உன் ஹப்பித் தான் கூப்பிடறாரு… “

“இதோ வரேன். ” என்றபடியே ஓடி வந்த சிநேகா அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க,

அவளைப் பார்த்தபடியே படுக்கை அறைக்குச் சென்றுவிட்டாள் க்ரிஷ். ஊருக்குப் புறப்படத் தேவையான அனைத்துப் பொருட்களும்‌ எடுத்து வைக்கப்பட்டிருக்க, அதை ஒரு பார்வை பார்த்த படியே மெத்தையில் சென்று அமர்ந்தாள்.

அவள் உள்ளமோ, “நாம ஊருக்கு வந்ததிலிருந்து ஒருமுறை கூட மணி மாமா போன் பண்ணவே இல்லையே ? ஏன் ? அவரு நம்பரை தான் நாம வாங்க மறந்து வந்துட்டோம். அவரு ஊருல தானே இருக்காரு. அப்பா கிட்ட நம்பர் வாங்கிப் பேசி இருக்கலாமே ? ஒருவேளை நாம கூப்பிட்டா பேசுவோம்னு இருப்பாரோ ? நாமளும் இங்க வந்ததிலிருந்து இந்த விளம்பர பட வேலையில் மூழ்கி அவரை மறந்துட்டோமே ? ஒருவேளை நம்மைத் தப்பா நினைச்சிருப்பாரோ ? அவரை நமக்குப் பிடிக்கலன்னு நினைச்சு தான் போன் பண்ணாம இருக்காரோ ? ” என நினைத்து குழம்பியது.

“இருந்தாலும் இருக்கும். எதுக்கும் நாமளே நம்பர் வாங்கிப் போன் பண்ணி பேசி பார்த்திடுவோம். இப்ப வேற ஊருக்கு போறோம். அப்பா தான் ஊரில் இல்லன்னு மிது சொன்னா… ஆனா மணி மாமா ஊருல தான் இருப்பாரு. நேரில் பார்த்து பேசினா… நமக்கும் க்ளாரிட்டி கிடைச்சிடும். அவரும் நம்மோட முயற்சியைப் பார்த்துச் சந்தோஷப்படலாம். ” என்று முணுமுணுத்தவள் நேரத்தை பார்க்க, ஆறு என்று காட்டியது.

“நேத்து இதே நேரத்துக்குத் தானே மிது கூப்பிட்டா ? இப்ப கூப்பிட்டு பார்க்கலாம்… போனை எடுத்தா மணி மாமா நம்பர் தரச்சொல்லி கேட்கலாம். ” என்று முடிவெடுத்து மிதுளாவின் எண்ணை தொடுத்திரையில் ஒளிரவிட்டு அதைத் தன் விரல்களால் அழுத்த தேய்த்து அழைப்பு விடுத்தாள்.

எதிர்புறம் ரிங் போக அழைப்பை அவள் ஏற்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் நகங்களைக் கடிக்கத் தொடங்கினாள் கிருஷ்ணவேணி. முதல் அழைப்போசை முடியப் போகும் தருவாய்… அழைப்பு ஏற்கப்பட்டது.

“ஹலோ அக்கா… ” என்றாள் மிதுளா துள்ளலுடன்.

“ஹாய் மிது ? எப்படி இருக்க ? சாப்பிட்டியா ? “

“ம்… மதியம் சாப்பிட்டேன். நைட் இனிமே தான் சாப்பிடனும். “

“சரி… ” என்ற க்ரிஷ் மௌனம் காக்க,

“சொல்லுங்க அக்கா… “

“மிது… அது வந்து… “

“ம்…”

“என்னைத் தப்பா நினைக்காதே. “

“உங்களை நான் ஏன் தப்பா நினைக்கனும் ? “

“அது… நேத்துப் பேசும்போது நான் ஊருக்கு வரதா சொன்னேன் இல்ல… “

“ஆமாம், அதுக்கென்ன ? ஓ… ஒருவேளை வர முடியலையா அக்கா ? அதுக்கெல்லாம் நான் உங்களைத் தப்பா நினைக்க மாட்டேன். “

“இல்ல மிது. நான் ஊருக்கு வரேன். இன்னிக்கு நைட் கிளம்பிடுவேன். “

“ஹைய் ஜாலி.. “

“அதான் மிது, ஊருக்கு வரதால வீட்டுக்கு வரனுமில்ல… “

“வீட்டுல தான் யாரும் இல்லையே அக்கா. அப்பாவும் அம்மாவும் வர ஒரு வாரத்துக்கு மேல ஆகும். “

“ம்ச்…” என்றவள் “இவ கிட்ட எப்படிக் கேட்கறது ? ” என்று மனதிற்குள் புலம்பிய படியே, “மிது, எனக்கு மணி மாமா நம்பர் வேணும். நான் வரேன்னு அவர்கிட்ட சொல்லனும் இல்லையா ? என்ன இருந்தாலும் இப்ப அப்பாவை தாண்டி அவர் எனக்கு அதிக உரிமையானவர் இல்லையா ? அவர் நம்பரை அப்பா கிட்ட கேட்க மறந்துட்டேன். இப்ப கால் பண்ணி கேட்க ஒரு மாதிரியா இருக்கு… அதான். ” என்று மூச்சு விடாமல் கேட்க வேண்டியதை கேட்ட திருப்தியில் க்ரிஷ் மௌனமாக,

எதிர்புறமும் கனத்த மௌனம். “மிது… இருக்கியா ? ” என்று தவிப்புடன் கேட்ட க்ரிஷிடம்,

“அக்கா மாமா நம்பர் உங்களுக்கு அனுப்பிட்டேன். ” என்று பதில் தந்தாள் மிதுளா.க்ரிஷ் வேகமாகத் தன் செய்திகள் செயலியை திறந்து பார்க்க… அதில் மணியின் எண் வந்திருந்தது.

“தேங்க்யூ மிது. “

“தேங்க்ஸ் எல்லாம் எதுக்குக்கா… நீங்க மாமா கிட்ட பேசுங்க. நான் அப்புறம் கூப்பிடறேன். பை… ” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துக் கொண்டாள் மிதுளா.

“விவரமா தான் இருக்கா. ” என்று நினைத்த க்ரிஷ் செய்திகள் வரும் செயலியில் இருந்த மணியின் எண்ணை தொட, அது அழைப்பாகச் சென்றுவிட்டது.

“ஐயோ போன் போயிடுச்சே. ” என்று பதறிய படியே கைப்பேசியைக் காதில் வைத்தாள் க்ரிஷ்.

அழைப்பு ஏற்கப்பட… க்ரிஷ் ஒரு நொடி தாமதித்து… “ஹ…லோ… ” என்றிட,

எதிர்புறம், “சொல்லுங்க க்ரிஷ். புருஷ் வந்துட்டானா ? நீங்க கிளம்பியாச்சா ? ” என்ற கேள்விகள் வந்து விழுந்தது.

குழப்பமடைந்த க்ரிஷ் காதிலிருந்த கைப்பேசியை எடுத்து அழைப்பு சென்ற எண்ணை சரி பார்க்க, நேற்று சிநேகா பதித்துக் கொடுத்த மாறனின் பெயர் தொடுத்திரையில் ஒளிர்த்தது.

குழப்பத்துடன் க்ரிஷ் மௌனம் காக்க, எதிர்புறம் இருந்த மாறனோ, “க்ரிஷ் இருக்கீங்களா ? ” என்று கேட்டான்.

தன் குழப்பத்தைத் தன்னுள் மறைத்தவள், “ஆங்… இருக்கேன் மாறன். எல்லாம் ரெடியா தான் இருக்கு. புருஷ் வந்ததும் கிளம்ப வேண்டியது தான். ” என்று பதில் தந்தாள்.

“ஓகே… பார்த்து வாங்க. கிளம்பிட்டு ஒரு மெசேஜ் பண்ணிடுங்க. அந்தப் பையன் அவன் பியான்ஸியை பார்த்த மயக்கத்தில் கால் பண்ண மாட்டான். அதான் உங்க கிட்ட சொல்றேன். “

“ஆங்… சரி… மெசேஜ் பண்ணிடறேன். “

“ஓகே… பை. ” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தான் மாறன்.

க்ரிஷ் குழப்பத்துடன் மிதுளாவின் செய்தியை தொடப்போக… சிநேகா அறையுள்ளே நுழைந்தாள்.

“க்ரிஷ், புருஷ் வந்துட்டாரு. வா… ” என்றவள் கிருஷ்ணவேணியின் கைப்பிடித்து இழுத்துக் கொண்டு ஹாலுக்குச் செல்ல… க்ரிஷின் கைப்பேசி மெத்தையிலேயே விழுந்துவிட்டது.

சிநேகாவும் க்ரிஷும் ஹாலுக்கு வரவும், புருஷோத்தமன் அறை வாசலில் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

“ஹாய் சிநேக்… எல்லாம் ரெடியா ? கிளம்பலாமா ? ” என்று கேட்டபடியே அந்த வீட்டிற்குள் நுழைந்தான் புருஷோத்தமன்.

“எல்லாம் ரெடியா இருக்கு மாமா’ஸ். உடனே கிளம்ப வேண்டியது தான். ” என்று கூறிய படியே அவனை ஆரத்தழுவி கொண்டாள் சிநேகா. இரண்டு நொடி அணைப்பிற்குப் பிறகு அவனை விடுவித்தவள் தனித்து நிற்க,

புருஷ் க்ரிஷை பார்த்து, “ஹாய் க்ரிஷ்… ” என்றான்.

பதிலுக்கு க்ரிஷும் ‘ஹாய்’ என்றிட, சம்பிரதாயப் பேச்சுக்கள் சில நிமிடம் தொடர்ந்தது.

“புருஷ்… வா… வீட்டை சுத்தி காட்டறேன். ” என்றழைத்த சிநேகா, அவனை இழுத்துக் கொண்டு ஒவ்வொரு இடமாகச் சென்றாள்.

நாலு எட்டு நடந்தால் முடிந்துவிடும் அந்த வீட்டை அவள் அரண்மனையைச் சுற்றி காட்டுவதைப் போன்ற பாவத்துடன் சுற்றிக்காட்டுவதைக் கண்டு மனதிற்குள் சிரித்த கிருஷ்ணவேணி புதிதாக வந்தவனுக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் சமையலறை சென்றாள்.

அவள் மூன்று கோப்பைகளில் காபி தயாரித்து வர, சிநேகா இன்னும் தன் அரண்மனை சுற்றுலாவை முடித்தபாடில்லை. அதைக் கண்டு புன்னகையுடன் அவர்களை நெருங்கினாள்.

“காபி எடுத்துக்கோங்க அண்ணா. ” என்ற குரலில் கலைந்த புருஷ்,

“தேங்க்யூ க்ரிஷ். ” என்றுவிட்டு சிநேகாவை பார்த்து, “கத்துகோ வீட்டுக்கு வந்தவங்களை முதலில் உபசரிக்கனும். அதை விட்டுட்டு இப்படி நிக்க வெச்சே அறுக்கக் கூடாது. ” என்று கிண்டலாகக் கூற, சிநேகா செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.

“போடா… நானே ரொம்ப நாள் கழிச்சி உன்னை நேரில் பார்த்த சந்தோஷத்தில் இருக்கேன். நீ என்னடான்னா… என்னைக் கலாய்க்கற. “

“சரி.. சரி.. கோச்சிக்காதே. நம்ம லவ்வை அப்புறம் வெச்சிக்கலாம். இப்ப கிளம்பலாம். இல்லன்னா மாறன் பேய் ஆட்டம் ஆடிடுவான். “

“ம்… ஆனா ஊனா மாறன் பேரை சொல்லி தப்பிச்சிக்கோ. நேரில் வரேன் இல்ல… நானே மாறன் கிட்ட கேட்கறேன். ஏன் ? என் புருஷை லவ் பண்ணவே விட மாட்டேங்கறீங்கன்னு ? “

“வேற வினையே வேண்டாம். அவன் என்னைக் கழுவி கழுவி ஊத்திடுவான். பேசாம கிளம்பு ராசாத்தி. “

“என்ன கழுவி ஊத்துவாரு ? அப்ப நீ வேற என்னவோ தப்பு பண்ற ? “

“இல்லடி… நான் மத்த பொண்ணுங்க கிட்ட சும்மா பேசறதை கூட உன்கிட்ட போட்டுக்கொடுத்து… அவன் நல்ல பேர் வாங்கிப்பான். அப்புறம் நீயும் நானும் தான் சண்டை போடனும். “

“ஓஹோ…‌கத அப்படிப் போகுதா ? ” என்று கேட்டு அவனை முறைத்தாள் சிநேகா.

“பார்த்தியா… பார்த்தியா… இப்பவே இப்படிக் கோவப்படற. நான் சும்மா சிநேகமா தான் பேசறேன் பட்டுக்குட்டி. “

“ச்சீ… போடா. என்னைத் தொடாதே. நீ ஒன்னும் என்னைக் கொஞ்ச வேண்டாம். உன் இலட்சணத்தை மாறன் கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா உன்னை என்ன பண்ணலாங்கற முடிவுக்கு வரேன். ” என்று அவனிடம் கூறியவள் கிருஷ்ணவேணியைப் பார்த்து…

“க்ரிஷ் நீ வா நாம திங்க்ஸை எடுத்து வந்து வெளிய வைப்போம். இந்தத் தடிமாடு காருக்கு தூக்கிக்கிட்டு போகட்டும். ” என்றழைக்க,

க்ரிஷ் புருஷோத்தமனை பார்த்து புன்னகையுடன், “உங்களுக்கு இது தேவையா அண்ணா. நீங்களே பேசி நீங்களே மாட்டிக்கிட்டீங்க. உங்க நண்பர் போட்டுக் கொடுத்திருந்தா கூட இவ்வளவு கச்சிதமா போட்டுக் கொடுத்திருக்க மாட்டாருன்னு நினைக்கறேன். ” என்றுவிட்டு சிநேகாவுடன் படுக்கை அறைக்குள் சென்றாள்.

உடைகள் அடங்கிய பெட்டிகளை எடுத்து வரிசையாக ஹாலில் வைத்தவர்கள் அதைப் புருஷிடம் காட்டி காருக்குக் கொண்டு செல்லும் படி கூறினர்.

அவனும் தன்னைத் தானே நொந்தபடி, பெட்டிகளை எடுத்துக் கொண்டு கீழே சென்றான். பத்து முறைக்கு மேல் ஏறி ஏறி இறங்கியவன் நாக்கு தள்ள… காருக்குள் அமர்ந்து அதில் வைத்திருந்த தண்ணீர் குடுவையை எடுத்தான். அவன் நேரமோ என்னவோ அதில் தண்ணீர் காலியாகி இருந்தது.

“ஸ்சப்பா… ” என்று முனுகிய படியே குடுவையை எடுத்துக் கொண்டு தள்ளாடிய படியே படி ஏறினான் புருஷ். அவனைக் கோபத்தோடு பார்த்தாலும் அவன் படும்பாட்டைக் கண்டு மனம் இறங்கிய சிநேகா படிகளில் வேகமாக இறங்கி வந்து அவன் கைகளிலிருந்த குடுவையைப் பிடுங்கிக் கொண்டு மேலேறினாள். அவன் ‘ஹப்பாடா’ என்ற பெருமூச்சுடன் படியின் கைப்பிடி சுவரில் தன் முதுகை சாய்த்து நிற்க, அதற்குள் அவனுக்குத் தண்ணீர் பிடித்து வந்து கொடுத்துவிட்டாள் சிநேகா.

இருவரின் அன்பும் அந்யோன்யமும் கண்டு வியந்தாள் கிருஷ்ணவேணி. அதே நேரம் அவள் மனதின் ஓரத்தில், ‘தன் மாமா தன் மேல் இத்தனை அன்பு வைப்பாரா ?’ என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. அந்தக் கேள்வி மலர்ந்திருந்த அவள் முக மலரை குவிய செய்துவிட்டது.

“அன்பையும் அந்யோன்யத்தையும் விடு. அவருக்கு நம்மை முதலில் பிடிக்குமான்னே தெரியலையே ? ஒருவேளை அவங்க அக்கா வாழ்க்கையே என்னால தான் கெட்டுப்போச்சுன்னு நினைச்சு… கோவப்பட்டாருன்னா ? எப்படிச் சமாளிக்கறது ? கடவுளே… என் வாழ்க்கையில் இதுவரை நண்பர்களோட அன்பு மட்டும் தான் கிடைச்சிருக்கு. என் அம்மாவுக்கு அப்புறம் என்னை அணுஅணுவா பார்த்துக்கற உறவுகள் கிடைக்கவே இல்ல. அது பரவாயில்லை வருங்காலக் கணவர் அன்பானவரா கிடைப்பாருன்னு பாட்டி எப்பவோ சொன்ன சொல்லை வேதமா நினைச்சு இத்தனை வருஷத்தை தள்ளிட்டேன். இப்ப ஒருவேளை மாமாவுக்கு என்னைப் பிடிக்கலன்னா ? அப்பா வேற எப்பவும் சித்தியை திட்டிக்கிட்டே தான் இருக்காரு. அவரைப் பழிவாங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருந்தா ? என் வாழ்க்கை ? ” என்ற கேள்வியோடு பயமும் எழுந்து அவள் தொண்டையை அடைத்தது.

அதற்குள் புருஷோத்தமனும் சிநேகாவும் கொஞ்சம் சமாதானமாகி இருக்க, சிநேகா புன்னகையுடன் க்ரிஷை உலுக்கினாள்.

“க்ரிஷ், கிளம்பலாம். “

“ம்… ” என்றவள் அறை உள்ளே சென்று எல்லாப் பொருட்களும் எடுக்கப்பட்டுவிட்டதா என்று உறுதிபடுத்திக் கொண்டு வெளியே வந்தாள். கதவை பூட்டிவிட்டு மூவரும் காருக்கு சென்றனர்.

புருஷ் ஓட்டுநர் இருக்கையில் அமர சிநேகா அவனுக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்துக் கொண்டாள். கிருஷ்ணவேணி பின்புற இருக்கையில் அமர, காரை இயக்கி பயணத்தைத் தொடங்கினான் புருஷ்.

தொடரும்….