அத்தியாயம் – 1

மயிலாஞ்சி ! மயிலாஞ்சி !

அத்தியாயம் – 1

அதிகாலை உதித்த சூரியன் தன் உஸ்னத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டி உச்சி வேளை வந்துவிட்டதைப் புவி மகளுக்கு உணர்த்த… அப்புவி மகள் மேல் வசிக்கும் மானுடமெல்லாம் “அப்ப்பா… என்ன வெயில்… ” என்று புலம்பிக் கொண்டே தன் பணியைச் செய்து கொண்டிருந்தது.

அகண்ட புவி தனில், வானம் பார்த்த பூமியாக இருக்கும் அக்கிராமத்து நிலங்களில் எல்லாம் நிலத்தடி நீரின் துணையுடன் தென்னை மரங்களும், மாமரங்களும், பருத்தி செடிகளும் பெரும்பாலும் பயிரிடப்பட்டிருக்க…. அதன் ஊடே நுழைந்து சென்றால் அக்கிராமத்தின் மையத்தில் அமைந்திருக்கும் பெரிய வீட்டை அடையலாம்.

இன்று அந்த வீட்டில் அநேகர் கூடியிருந்தனர். அவர்களில் சிலர் பேசிக் கொள்வது காதில் விழுகிறது.

“என்ன இருந்தாலும் பெரிய மனுசி பெரிய மனுசி தான். யாருக்கும் பாரம் கொடுக்காம படுத்த இரண்டே நாளுல… போயிடும் போல. ” என்றொருவர் கூற,

“அது சரி… இரண்டு நாளுக்கே இங்க மூஞ்சை காட்டறவங்க இருக்கும் போது… அது நல்லபடியா போறது தான் நல்லது. ” என்றார் மற்றொருவர்.

“இந்த இரண்டு நாளு கூட, மூத்த பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சி கொடுக்கனுமேங்கற கவலையால தான் இழுத்துக்கிட்டு இருக்கு. தாயில்லா புள்ளையைக் கரை சேர்க்காம போயிட்டா… அந்தப் புள்ள காலத்துக்கும் தனி மரமா நின்னுடுமோங்கற தவிப்பும் பயமும் தான் உயிரை பிடிச்சி வைச்சிருக்கக் காரணம். “

“நீ சொல்றதும் சரிதான்… தாயில்லா புள்ளைக்குத் தாயா இருக்க வந்தேன்னு சொல்லிட்டு அப்பன் கிட்ட இருந்தே பிரிச்சவங்க இருக்கும் போது… அந்தப் பெரிய மனுசி எப்படி நிம்மதியா போகும். “

“ஆனா… ஏன் இந்தப் புள்ளையை அவன் கையில பிடிச்சி கொடுக்கச் சொல்லிச்சுன்னு தெரியல. அக்கா கூடச் சேர்ந்துக்கிட்டு இவன் நாளைக்கு இந்தப் புள்ளையைத் தவிக்க விட்டுட மாட்டான்னு என்ன நிச்சயம் இருக்கும் ? “

“அந்தப் பையன் அவன் அக்கா மாதிரி இல்லங்க… கொஞ்சம் நல்ல மனசு உள்ளவன். அதனால தான் பெரிய மனுசி இப்படி ஏற்பாடு பண்ணியிருக்கனும். ஏன்னா… நாளைக்குத் தம்பி பொண்டாட்டிங்கற முறைக்கு இந்தப் புள்ள தானே அவ புள்ளைக்கு எல்லாம் செய்ய வேண்டி இருக்கும். அப்ப மதிச்சி மரியாதை கொடுத்து தானே ஆகனும். அதுக்குத் தான் பெரிய மனுசி இப்படி ஒரு முடிச்சி போட பார்க்குது. “

என்று அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் முணுமுணுப்பாகப் பேசிக் கொள்ள அதைக் கேட்டபடியே கூடத்தின் மையத்தில் அமர்ந்திருந்தாள் விசாலம். அவளுக்குச் சற்று தள்ளி சுவரில் ஒட்டியபடி நின்றிருந்தான் அவளின் தம்பி மணி.

இவர்கள் எல்லாம் பேசி கொள்வது இந்த வீட்டின் உரிமையாளர் ஆதிசேஷனின் அன்னை வைரம் மற்றும் மூத்த மகள் வேணியைப் பற்றி. ஆதிசேஷனின் இரண்டாவது மனைவி தான் விசாலம். ஆதியின் மூத்த மகளான வேணியின் மேல் பாசமற்று இருக்கும் விசாலத்திற்கு அவளின் அத்தையான வைரம் இறுதி தருவாயில் வேணியைத் தன் தம்பி மணிக்கு மணம் முடித்து வைக்கும் படி கூறியது எரிச்சலாக இருந்தது. ஆதிசேஷன் தன் மகளின் விருப்பம் அறிய அவளைத் தனியறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அவரின் வரவை எதிர்நோக்கியே அனைவரும் காத்திருக்கின்றனர்.

அறையிலிருந்த ஆதிசேஷன் மகளின் கைப்பிடித்து… “பாட்டியோட கடைசி ஆசைடா…. ” என்று கெஞ்சும் குரலில் கேட்க, அப்பாவின் முகத்தைப் பார்த்தவள் ‘சரிப்பா’ என்று பொருள்படும் விதமாக மண்டையை அசைத்தாள். “என் செல்லம்… ” என்ற ஆதி மகளின் கரம் பற்றி அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்து சேர்ந்தார்.

இருவரின் வரவை எதிர்பார்த்துக் கூடத்தில் காத்திருந்தவர்களோ ஆதிசேஷனின் முகத்தையே பார்க்க… அவரோ முறுவலுடன், “பாப்பா சரின்னு சொல்லிட்டா. மணமாலையும் தாலியும் கொண்டு வாங்க. ” என்றார்.

அதுவரை கூடத்தில் அமைதியாக அமர்ந்திருந்த அவரின் இரண்டாம் மனைவி விசாலம் ஆவேசமாக எழுந்து அவரை நோக்கி வந்தார். “உங்க பொண்ணு சம்மதிச்சா போதுமா ? என் தம்பி சம்மதிக்க வேண்டாமா ? அவனைக் கேட்காமையே முடிவை எடுத்திடுவீங்களா ? ” என்று கடுங்குரலில் பேசிட,

“அவனை இப்பவே கூப்பிட்டு கேட்டுடறேன் விசாலம். ” என்றார் ஆதி.

ஆனால் விசாலமோ, “அவனை என்ன கேட்கறது… அவனுக்கு இதுல சம்மதம் இல்ல. ” என்றிட,

“அதை அவன் சொல்லட்டும் விசாலம். நீ சொல்ல வேண்டாம். ” என்றார் ஆதிசேஷன்.

“அவன் என்ன சொல்றது… உங்க பொண்ணு விசயத்தில் நீங்க முடிவெடுக்கற மாதிரி, என் தம்பி விசயத்தில் நான் தான் முடிவெடுப்பேன். இந்தக் கல்யாணத்தில் எனக்கு விருப்பமில்ல… ” என்று விசாலம் கூற உறவுகளில் சிலர் வெகுண்டெழுந்தனர்.

“ஏன்ம்மா விசாலம்… இப்படிப் பேசற ? ஆதசேஷன் உனக்கும் உன் தம்பிக்கும் எத்தனை செய்திருப்பான். அதை எல்லாம் மறந்துட்டு அண்ணி இப்பவோ அப்பவோன்னு படுத்திருக்கும் போது இப்படிப் பேசற ? உனக்கு அவங்க என்ன குறை வெச்சாங்க ? ” என்றார் ஆதியின் சித்தப்பா முறையில் உள்ள பெரியவர்.

“அதெல்லாம் செஞ்சதுக்கு இப்ப இவரு பிரதி பலனை எதிர்பார்க்கறாரா மாமா ? ” என்று விசாலம் எதிர் கேள்வி கேட்க,

“ஏன்ம்மா இது உனக்கும் பொண்ணு தானே ? “

“இவ ஒன்னும் என் பொண்ணு இல்ல… இவரோட பொண்ணு. “

“ஆதிக்கு ஒரு பொண்ணு இருக்குன்னு தெரிஞ்சி தானே கட்டிக்கிட்ட ? இப்ப இப்படிப் பிரிச்சி பேச உனக்கு வெட்கமா இல்ல ? “

“ஆமாம் தெரிஞ்சி தான் கட்டிக்கிட்டேன். ஆனா இவளுக்கு அம்மாவா இருக்கேன்னு நான் எப்பவும் சொன்னதில்ல. அதுவுமில்லாம இவரு தான் என்னை ஆசைப்பட்டுக் கட்டிக்கிட்டாரு… நான் ஒன்னும் இவருக்காக ஏக்கத்தோட காத்திருக்கல. எங்க அப்பாவும் இவரு கிட்ட வந்து என் மகளுக்கு வாழ்க்கை கொடுக்கச் சொல்லி கெஞ்சல. “

“விசாலம் போதும்… இதுக்கு மேல பேசாதே. அப்புறம் நானும் பேசுவேன். ” என்றார் ஆதிசேஷன் அடக்கி வைக்கப்பட்ட கோபக்குரலில்.

“என்ன பேசுவீங்க ? நான் ஒன்னும் பொய் சொல்லலையே… “

“நடந்ததைப் பத்தி பேசாதே. இப்ப நடக்கறதுக்குத் தடை போடாதே. “

“அதெல்லாம் முடியாது. இவளை என் தம்பி கட்டிக்க நான் சம்மதிக்க மாட்டேன். “

“ஏன் ? ஏன் ? சம்மதிக்க மாட்ட. காரணம் சொல்லு‌. “

“என்ன பொல்லாத காரணம்…. என் தம்பிக்கு உங்க மூத்த பொண்ணைக் கட்டி வெச்சி இவளை இந்த வீட்டோட வெச்சிக்க நினைக்கறீங்க. அதுதான் காரணம். எல்லாச் சொத்தும் இவளுக்கே கொடுத்திட்டு… உன் தம்பிக்கு தானே கொடுத்திருக்கேன்னு எனக்கே வேப்பிலை அடிப்பீங்க. அதுக்குத் தானே… இந்தத் திட்டம். எனக்கு அதுல விருப்பமில்ல. இவ இந்த வீட்டோட இருந்தா நாளைக்கு என் பொண்ணும் பையனும் இவளுக்கு அடிமையா இருக்கனும். அதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன்.”

“ம்… ” என்ற ஆதிசேஷன் “உன் பயம் புரியுது விசாலம். ஆனா அந்தப் பயம் உனக்குத் தேவையில்ல. என் சொத்தை என் பிள்ளைகள் மூனு பேருக்கும் சமமா தான் பிரிச்சி தருவேன். என் மூத்த பொண்ணுங்கறதுக்காக இவளுக்கு ஒரு பங்கு அதிகமா எல்லாம் கொடுத்திட மாட்டேன். வேணும்னா… நாளைக்கே உயில் எழுதி வெச்சிடறேன். “

“…”

“உன் சந்தேகம் தீர்த்ததா ? உன் தம்பியை கூப்பிடு… அவன் கிட்ட கேட்டுக்கறேன். “

“நீங்களே கூப்பிட்டுக் கேட்டுக்கோங்க… ஆனா ஒன்னு இப்ப சொன்னதை மாத்தி என் பிள்ளைகளுக்குத் துரோகம் செஞ்சீங்கன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். சுத்தி நிக்கற நீங்க எல்லாரும் இதுக்குச் சாட்சி… நாளைக்கு யாராவது மாத்தி பேசுனீங்க… அவ்வளவு தான். ” என்று மிரட்டல் விடுத்துவிட்டு மீண்டும் தான் அமர்ந்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார் விசாலம்.

“நல்லா தான் திட்டம் போடறா… ” என்று முணுமுணுத்த உறவுகள்‌ ஆதிசேஷன் முகம் பார்க்க… அவரோ, “மணி… ” என்றழைத்தார்.

அதுவரை ஓரமாக நின்றிருந்தவன் ஆதி அழைத்தும் அவர் முன் வந்து பணிவுடன் நிற்க, அவன் முகம் பார்த்த ஆதி… “மணி, என் பெரிய பொண்ணை உனக்குக் கட்டி வைக்கனும்னு என் அம்மா ஆசைப்படுது. உன் விருப்பம் என்னன்னு சொல்லுப்பா ? வேணியைக் கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டமா ? ” என்று தவிப்புடன் கேட்டார்.

“உங்க விருப்பம் எதுவா இருந்தாலும் அதை நான் மனசார ஏத்துப்பேன் மாமா. என்கிட்ட நீங்க அனுமதி கேட்க வேண்டாம்..‌. உங்க விருப்பத்தைச் சொன்னா போதும் அதை நான் என் மனசாரச் செய்வேன். ” என்றிட, அவனை ஆரத்தழுவி கொண்டார் ஆதிசேஷன்.

மகளையும் மருமகனாய் வரப்போகும் மைத்துனனையும் இருகரங்களில் பிடித்த படி தன் அன்னை வைரம் படுத்திருக்கும் அறைக்குச் சென்றார்.

“அம்மா… உன் இஷ்டப்படி உன் பேத்திக்குக் கல்யாணம் நடக்கப் போகுது. அதைக் கண்ணார பார்த்திட்டு நிம்மதியா போ… ” என்று கண்ணீருடன் கூறினார் ஆதி.

சில நிமிடங்களில் இரு மாலையும் மஞ்சள் கயிற்றில் பூட்ட பட்ட பொன் தாலியும் அங்கே கொண்டு வரப்பட்டது. பாட்டி வைரத்தின் முன்நிலையில் அவரின் பேத்தியின் கழுத்தில் மண மாலை அணிவித்தான் மணி. வேணி கைகளில் மண மாலை தரப்பட அதை நடுங்கும் கைகளால் வாங்கிக் கொண்டு தன் பாட்டியை பார்த்தாள்.

உடல் முழுவதும் செயலாற்ற முடியாமல் கிடந்த வேளையிலும் தன் இமைகளை மூடி திறந்து பேத்திக்குத் தைரியம் தந்தார் வைரம். அவர் மேலிருக்கும் மாறா நம்பிக்கை மற்றும் பாசத்தால் மணியின் கழுத்தில் மணமாலையை அணிவித்தாள் வேணி.

மணியிடம் மங்கல நாண் தரப்பட்டது… அதைப் பெற்றுக் கொண்டவன் வேணியின் கழுத்தில் அதைக் கட்டிட… அவர்களின் திருமணம் எளிமையாக முக்கிய உறவுகளின் முன் நடத்தப்பட்டு நிறைவை பெற்றது. இருவரும் படுத்திருந்த பாட்டி வைரத்தின் கால்களைத் தொட்டு வணங்கி ஆசி வாங்கிட… அவரும்‌ தன் விழிகளில் நிறைந்த அன்பால் இருவருக்கும் ஆசி வழங்கினார்.

அதன் பின் ஆதிசேஷவனிடம் ஆசி வாங்கியவர்கள்… மற்ற உறவு முறை பெரியவர்களிடமும்‌ ஆசி வாங்கிக் கொண்டு நிற்க, மணியைத் தன் பார்வையால் அருகே வரும்படி அழைத்தார் வைரம். அவர் பார்வைக்கு இசைந்த மணி அவர் அருகே சென்று செயலற்று கிடந்த அவரின் கரத்தை தன் கரத்தால் தாங்கிப் பிடித்து… வைரத்தின் காதுகளில் தான் பேசுவது கேட்கும் படி குனிந்து, “நான் பத்திரமா பார்த்துக்கறேன் அத்தை… ” என்று நா தழுதழுக்கக் கூறினான்.

அவன் கூறியதை கேட்டவர் நிம்மதியாகத் தன் இமைகளை மூட அது வரை பிடித்து வைக்கப்பட்டிருந்த வைரத்தின் உயிர் காற்று அவரின் தேகம் விட்டுப் பிரிந்தது.

“பாட்டி… ” என்ற அலறலுடன் அவரின் உயிற்ற தேகத்தின் மேல் விழுந்து கதறி அழ ஆரம்பித்தாள் வேணி.

தன் அன்னையின் பிரிவை ஏற்க முடியாத மனோநிலையில் ஆதிசேஷவனும் சிக்கி கொள்ள… அங்கே சில மணிநேரம் உணர்வு போராட்டம் நடந்தது. அழுது ஓய்த பின் வைரத்தின் இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு… உறவினர் புடை சூழ அவரை நிறைவாக வழியனுப்பி வைத்தனர்.

பாட்டியின் உடல் எடுத்து செல்லப்படுவதைக் காண முடியாமல் தன் அறையில் முடங்கினாள் வேணி. அவள் இதயம் கணத்து போயிருக்க… அவளுக்கு ஆறுதல் வழங்க யாரும் அவ்விடம் இல்லை.

பாட்டியோடு அவள் இருந்த புகைப்படங்களை எடுத்து மடி மீது வைத்துக் கொண்டவள்… “அம்மா போன மாதிரியே நீயும் போயிட்டியே பாட்டி. இனி எனக்கு யார் இருக்கா ? என்னோட கஷ்ட நஷ்டத்தை நான் யார் கிட்ட சொல்லுவேன். ? ” என்று கேட்டவள் புகைப்படத்தைக் கட்டிப்பிடித்த படியே கட்டிலில் சாய்ந்தாள். அவள் நினைவுகள் சில வருடங்களுக்கு முன் நடந்த நிகழ்வுகளை அசைப்போட ஆரம்பித்தது.

தொடரும்…