அத்தியாயம்-1

கோடிடாத இடங்களை நிரப்புக…
கோடிட்ட இடங்களை நிரப்புக னு ஆரம்ப கால பள்ளித்தேர்விலிருந்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று. விடுபட்ட வார்த்தையினால் ஒரு வாக்கியமே முழுமையடையாமல் அர்த்தமற்று தொக்கி நிற்கும் அதுவே கோடிட்ட இடங்களை நிரப்புக. அப்போ கோடிடாத இடங்களை நிரப்புக என்றால் என்னவாக இருக்கும் என்பதே கேள்வி. என் கதையில் வரும் மாந்தர்களின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளில் சிக்கிக்கொள்ளுவர்களுக்கு எந்த விடுபட்ட இடமும் விதி அளிக்கவில்லை. அவர்களே அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து நிரப்பி அர்த்தமுள்ளதாக மாற்ற போராடுவதே இந்த கதையின் தலைப்பிற்கான விளக்கம்.

நிரப்புக 1:
மருதுபாண்டியர்கள் வாழ்ந்த வீரமிகுந்த இடமான சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஒன்று தான் மதகுப்பட்டி கிராமம்.

இந்த கிராமத்திற்கு எவ்வாறு மதகுப்பட்டி என்ற பெயர் வரலாறு தெளிவான விளக்கமில்லை. இவை ஒக்கூர், சோழப்புரம், தச்சான்பட்டி என்று சுற்றிலும் சிற்றுர்களைக்கொண்ட சிறு கிராமம். இப்பூமியை விவசாய பூமி என்பதைவிட விவசாயம் செழித்து வளர்ந்த பூமி என்றே சொல்லலாம்.
ஏனெனில் இன்று பலரும் தங்கள் நிலங்களை தரிசு பூமியாகவே ஆக்கிவிட்டு வாழ்வாதாரத்துக்கு வேறு வேலையை தேடிக்கொண்டனர். ஆனால் இன்றளவும் ஏர் பிடிக்கும் சில குடும்பங்கள் இருக்கின்றனர். அதனால் ஓரளவு பசுமையை அடையாளமாக கொண்டுள்ளது இவ்வூர். தற்கால இணைய நாகரிக வளர்ச்சி மக்களிடம் ஏற்பட்டாலும் மதகுப்பட்டி மட்டும் இன்னும் வளர்ச்சியடவில்லை.

இவ்வூர் கோடையில் தண்ணீர் பஞ்சத்தை சிறிது அளவேணும் அனுபவிக்கும் நிலையும் வரும் அதேசமயம் பெரு மழை கொட்டினாலும் ஊரே மூழ்கி போகும் நிலையும் ஏற்படும்.
இந்த கிராமத்தை சுற்றியே நமது பயணம் தொடங்க உள்ளது. முத்தமிழ், முக்கனி , மூவேந்தர் என்று மூன்று என்ற எண்ணிற்கு சிறப்பாக இவற்றை கூறுவதுபோல் நாமும் அதே எண்ணின் அடிப்படையில் மூன்று குடும்பங்களை சந்திப்போம்.

முதல் குடும்பம்:
இரவு பன்னிரெண்டை நெருங்கும் நேரம், மொட்டைமாடியில் படுத்தப்படியே தேய்பிறை நிலவோடு பேசிக்கொண்டிருந்தான் நவீன்.
“இன்னைக்கு எவ்வளவு பெட் வச்சேன். இந்த ஐபிஎல் ல சென்னை இப்படி மண்ணை கவ்வும்னு நினைக்கவே இல்லை. சா நாளைக்கு அந்த பரதேசி காசு கேட்டு நிப்பானே என்ன பண்ணலாம்” என்றவனின் சிந்தனையை கலைக்கும் விதமாக கொலுசு ஒலி கேட்டது.

“ஜல் ஜல் ஜல்”
முதலில் கண்டுக்காதவன் கொலுசு ஒலி மீண்டும் சத்தமாக கேட்டவுடன், தலையணை போர்வை என அனைத்தையும் அள்ளிக்கொண்டு தெறித்து கீழே ஓடினான்.

அரக்கபறக்க ஓடி வந்தவன் கீழ் வீட்டின் முகப்பு கதவருகில் நின்றபிறகு தான் மூச்சுவிட்டான். இவனை மேலும் சோதிக்கும் விதமாக தெருநாய்கள் எல்லாம் சேர்ந்தாற்போல ஊளையிட்டது.

ஏறி இறங்கும் நெஞ்சின்மேல் தனது வலதுகையை வைத்தவன், “என்னது ஊரே சரியில்ல, ஆத்தி கொலுசு சத்தம் ரொம்ப அதிகமாவே கேக்குதே. சா இந்த நாய்க்கு நேத்து கூட எலும்புத்துண்டு போட்டேன், அதுகூட கத்தி நம்மள பயத்துல கொன்னுரும் போல” என்று வாய்விட்டு புலம்பியவன், கையில் வைத்திருந்த பாய் தலையணை ஓரமாக வைத்துவிட்டு வீட்டு சுற்றுசுவரின் அருகில் சென்றான்.

ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தபடியே, சுற்றுசுவர் அருகே சென்றவன், ‘ நவீன் நீ ரொம்ப தைரியமானவன். ஒன்னுமில்ல எட்டி பார்ப்போம்’ என மனதில் பேசியபடியே சுற்றுசுவருக்கு வெளியே பார்த்தவனுக்கு தெருவிளக்கு வழங்கிய ஒளியின் உதவியால் ஒன்றும் புலப்படவில்லை.

அதில் நிம்மதியடைந்தவன் பெரு மூச்சுவிட்டபடி திரும்ப, “ஜல் ஜல் ஜல்” என்று கொலுசு ஒலி அவனருகில் கேக்க அவனுக்கோ பயத்தில் வேர்த்துக்கொட்டியது.

‘நவீனு என்னடா உனக்கு வந்த சோதனை, நேத்து காத்தாயி கிழவி வேற செத்து போச்சு. அது உயிரோட இருக்கும்போது தொங்கடானை இழுத்து பிடிச்சு சீண்டுனத்துக்கு பழி வாங்க வந்திருக்கோ யார் கண்டா…இதுக்கெல்லாம் பேய் வந்திருக்கும்’ என எண்ணியவன்,

மெதுவாக தன் பின்னால் திரும்ப யாருமில்லாதது சிறிது தைரியம் வந்து நகர, அவனை கைபிடித்து ஒரு உருவம் தன்புறம் இழுத்தது.

“அம்மாஆஆஆஆஆஆ, மாரியத்தா என்னை காப்பாத்து” என்று அலறியவன் திமிறியபடியே தனது கையினை அந்த உருவத்திடமிருந்து மீட்டான்.

திரும்பிக்கூட பாராமல் வேகமாக கதவினை திறக்க, ஒரு கருப்பு உருவத்தின்மீது மோதி கீழே விழுந்தான்.
கீழே விழுந்தவன் கண்களைக்கூட திறக்காமல் அம்மாஆ என்று அலற தொடங்கினான்.

“அய்யோ என்னால சிரிக்க முடியல. வாயை மூடு” என்று தன்மேல் போத்திருந்த போர்வையை விலக்கிய பார்வதி சிரிக்க தொடங்கினாள்.
நவீன் சத்தத்தில் வீட்டினுள்ள எல்லாம் விளக்குகளை ஒளிரவிட்ட சுகந்தி, தனது கூந்தலை அள்ளி முடிந்தபடியே வரவேற்பு அறைக்கு வந்தாள்.

நடப்பது புரியாமல் சுகந்தி முழிக்க, விளக்கு வெளிச்சத்திலும் கண்களை திறக்காமல் கத்திக்கொண்டிருந்த நவீனை வீட்டினுள்ளே வந்த சுமதி அவனின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.

அதில் பயந்து எழுந்த நவீனுக்கு முதலில் புரியவில்லை என்றாலும்,அக்கா சுகந்தியின் பொய்யான முறைப்பில் அமைதியாக சிரித்த தாய் பார்வதியைக்கண்டதும் புரிந்தவன் தனது தங்கை சுமதியை அடிக்க துரத்தினான்.

“அடியே சாத்தான், இதுயெல்லாம் உன்னோட வேலை தான. அக்கா பாரு இவளை என்னை ரொம்ப பயம் காட்டிட்டா “ என்று தனது தங்கையின் மேல் குற்றம் சாட்டிக்கொண்டே நவீன் சுமதியை துரத்த, இருவரையும் சுகந்தி தான் அமைதிப்படுத்தினாள்.

“என்ன பண்ணிட்டேன் நானு, வீட்டுக்கு ஒரே ஆம்பளை பிள்ளை தான் பெயரு கொலுசு சத்ததுக்கே என்ன ஓட்டம்” என்று சுமதி தனது வயிற்றை பிடித்துக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்க, அவளை பிடித்த நவீன் தலையில் கொட்டியே பிறகே விட்டான்.

“அய்யோ போதும் பா, அம்மா என்ன மா நீ. அவளோட சேர்ந்து நீயும் இப்படி பண்ணிட்டு இருக்க”

“எனக்கு ஒன்னு தெரியாது சுகந்தி, எல்லாம் சின்னது வேலை தான்” என கூறிவிட்டு, தாகம் எடுக்கிறது என பார்வதி சமையலறைக்குள் செல்ல, சுமதி தான் இருவரிடமும் தனியாக சிக்கினாள்.

சுகந்தி பார்வையில் இளித்த சுமதி, “சும்மா அக்கா, தூக்கம் வரல அதான் ஜொள்ளுக்கு சீ ஜாலிக்கு” என நாக்கை கடித்தப்படி கூற, அவளை மூச்சு வாங்க நவீன் முறைத்தான்.

“உன்னோட சேட்டை தாங்க முடியல, நவீன் போ கதவை சாத்திட்டு படு” என சுகந்தி பேசிக்கொண்டிருக்கும் போதே அவளின் கண்களை தன் கரத்தினால் மூடிய சுமதி,

“அக்கா சும்மா இரேன்” என்றவளுக்கு, தனது சிரிப்பினை சம்மதமாக கூறிய சுகந்தி அமைதியானாள்.

நவீனோ முழித்துக்கொண்டிருக்க, பார்வதி தனது கையில் பிறந்தநாள் கேக் ஒன்றை எந்தியபடியே அங்கு வந்தாள்.
சுமதி தனது கையினை சுகந்தி கண்களிருந்து பிரித்து எடுத்தாள்.

“பிறந்தநாள் வாழ்த்துகள் அக்கா” என வாழ்த்து கூறிய சுமதி தனது அக்காவின் கன்னத்தில் முத்தமிட, நவீனுக்கு தனது மறதியை நினைத்து முகம் சுணங்கியது.

“ஏண்டி கத்திரிக்காய் என்கிட்ட முன்னவே சொல்லலை நீ” என நவீன் சுமதியிடம் ஆதங்கப்பட,

“இல்ல டா அண்ணா, நீ அக்கா கூட வேலைன்னு கிளம்பிட்ட. உன்கிட்ட சொன்னா அக்காக்கு தெரியும் தான் சொல்லலை கோச்சுக்காத” என சுமதி சமாதானம் கூறினாலும் நவீனால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவனின் முகத்திலே தெரிந்தது.

நவீனை தன்புறம் நிறுத்திய சுகந்தி, “டேய் கண்ணா என்ன இதுயெல்லாம். பிறந்தநாளை மறந்தா அன்பில்லனு அர்த்தமில்லை புரியுதா. வா கேக் வெட்டலாம்”என அழைத்தவள் தனது தம்பி கையையும் தங்கை கையையும் சேர்த்து பிடித்தபடியே சந்தோஷமாக கேக்கை வெட்டினாள்.

இந்த காட்சியை பார்வதி தனது தொலைபேசியில் போட்டோ எடுத்தாள்.
பின்னர் நால்வரும் சிறிதுநேரம் சிரித்து பேசிவிட்டு தங்கள் அறைக்கு உறங்கச்சென்றனர்.

நவீனிடம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று சுமதி ஓட, அவனோ இருடி நாளைக்கு வச்சுருக்குறேன் என்று கத்தியவன் இப்பொழுது வீட்டினுள்ளே பாயை விரித்து உறங்கினான்.

“அதையும் பார்ப்போம்”

“என்ன எல்லாரும் எங்களை தெரியாம முழிக்குறிங்க னு தெரியுது. இருங்க இந்த வீட்டின் கடைக்குட்டியாகிய சுமதி நானே சொல்லுறேன்”

“எங்க அப்பா ஈஸ்வர், ஒரு சமூக சேவகர். சேவை எந்தளவுக்கு சொல்ல முடியாதளவுக்கு. எனக்கு பத்து வயசு ஆகும்போதே ஒரு விபத்துல இறந்துட்டார். அவர் இருக்கும்போதே கஷ்டம் தெரியாம இருந்த எங்க வாழ்க்கை, அவர் போனதுக்கு அப்புறம் அதள பாதாளக்கு போச்சு.

காரணம் சமூக சேவைக்கு எங்க வீடு, வயல், துணி கடை என எல்லாத்தையும் அடகு வச்சுட்டார். எங்க அம்மா பார்வதி படிப்பறிவே இல்லாமல் வளர்ந்தவங்க, புருஷனை நம்பி வாழ்ந்தவங்களுக்கு பெரிய அடி விழுந்துருச்சு. அவங்கனால முடங்கி போக மட்டும் தான் தெரிஞ்சது.

எங்க மூத்த அக்காவுக்கு அப்ப 20 வயது, கல்யாணம் ஏற்பட்டாகி இருந்தது. இந்த காரணத்தினால நின்னு போச்சு, ஆனால் அவள் தளராமல் எழுந்து எங்களுக்கு அரணா நின்னாள்

எங்க அப்பா சிவகங்கையில் வச்சிருந்த துணிகடையை எடுத்து நடத்தி, கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தாள். பல நாள் அவளும் என் அம்மாவும் சாப்பிடாம எங்க பசியை போக்கி இருக்காங்க. தையல் வேலை, எம்பாராய்டிரி வேலைனு இராபகலா பார்த்து

கடனிலிருந்து எல்லாத்தையும் மீட்டாள்.
இப்போ பார்வதி துணிகடைனு சின்னதா இருந்ததா இரண்டு மாடி வச்சு பெரிய கடையா கொண்டு வந்திருக்கா. இதுயெல்லாம் அவளோட உழைப்புக்கு கிடைச்ச வெற்றி. எங்க அக்கா ரொம்ப திறமையானவங்க, சைக்கிளே ஓட்ட தெரியாம வளர்ந்தவள யாரோ கேலி பண்ணாங்கன்னு வெறியா கார் கத்துகிட்டாள்.

முப்பது வயது ஆனாலும் தன்னோட வாழ்க்கைன்னு பார்க்காமல் இன்னும் எங்களுக்காக உழைக்கும் எங்கவீட்டு குலசாமி தான் என் அக்கா சுகந்தி.
அப்புறம் என் அம்மாவை சொல்லலையே, மத்த அம்மா போல எதுக்கு புலம்புற ஆளா இருந்தவங்களை என் அக்கா நிறைய மாத்திட்டா.

எங்களோட சேர்ந்துட்டு அவங்களும் ஜாலியா பேசிட்டு சிரிச்சிட்டே இருப்பாங்க. அவங்க சிரிப்பை எப்பவும் குறையாம பார்த்துக்கணும் அதான் எங்களோட ஆசை.

என் அண்ணா நவீன் 22, இப்போ ஐஏஎஸ் எக்ஸாம்க்கு வெறியா படிச்சுட்டு இருக்கான். ரொம்ப நல்லவன், எங்கக்கிட்ட வெகுளி போல இருப்பான், ஆனால் தைரியசாலி. அவன் என்னைவிட இரண்டு வயது பெரியவன், அவனுக்கும் மூன்று வயது மூத்தவ இருக்கா, அவளை அக்கா எல்லாம் சொல்லமாட்டேன். எங்களை பொறுத்தவரை அவள் செத்துபோயிட்டா.

சிவகங்கையிலிருந்து எங்க ஊருக்கு வர அரைமணி ஆகும். எங்க ஊர்ல ஸ்கூல், காலேஜ் எல்லாம் இல்லை. நாங்க எல்லாத்துக்கும் சிவகங்கைக்கு தான் போகணும். நாங்க வர கொஞ்சம் தாமதம் ஆனாலும் எங்களை தேடி சைக்கிள் எடுத்துட்டு வந்துருவான். எங்களை கூட்டிக்கிட்டு சைக்கிள் எடுத்தா எங்கையும் நிறுத்தாம வீட்டுல நிப்பாட்டிட்டு தான் மூச்சே விடுவான். அவ்வளவு அன்பானவன், எங்களுக்கு சில நேரம் அப்பாவா மாறி இருக்கான். ஆனாலும் நான் கிண்டல் பண்ணுவேன் அதான் என் முழுநேர வேலை.

அடுத்து நான் கடைக்குட்டி சுமதி 20, இப்போ சிவகங்கை அரசு கல்லூரியில் பி.ஏ தமிழ் படிச்சு முடிச்சுருக்கேன். கொஞ்சம் வாயாடி தான், ரொம்ப நல்ல பொண்ணுங்க நம்பனும். என் சுகந்தி அக்காக்கு கல்யாணம் பண்ணி அவளை அந்த கோலத்துல பார்க்கணும் அதான் என்னோட லட்சியம்.
இது என்னோட குடும்பம்.
(கொஞ்சம் பெரிசா சொல்லிட்டோமோ இருக்கட்டும் யார் நம்மள என்ன சொல்லுவா..ஏன்னா என் அண்ணன் இருக்கான் ஜாக்கிரதை)