அதிகாரா 63

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 63

வசீகரனும் நேத்ராவும் மறுக்க மறுக்க அவர்களை தேன்நிலவுக்கு ‘ பாலி ‘ அனுப்பி வைத்தான் நீரூபன்.

அவர்களை விமானத்தில் ஏற்றி வழியனுப்பி விட்டு வரும் வழியில் நேராக முருகப்பனை சென்று சந்தித்தான்.

“வா வா நீரூபா! உன்கிட்ட இருந்த எந்த தகவலும் வரலையேன்னு கவலையா இருந்தேன். அந்த மதுரைக்கார பையனைப் பத்தி ஏதாவது தகவல் கிடைச்சதா?” என்று வினவினார்.

“இல்ல பெரியப்பா. அந்த பையன் செல்போன் கோட்டூர்புரம் பஸ் ஸ்டாப் டவர்ல தான் கடைசியா இருந்திருக்கு. இப்ப வரைக்கும் அந்த போன் ஆன் ஆகவே இல்ல. எப்ப ஆன் ஆனாலும் உடனே கண்டுபிடிக்க நம்ம ஆளுங்களை ஏற்பாடு பண்ணி இருக்கேன்.” என்று கூறியவன்,

“அன்னைக்கு மதுரை கட்சி ஆபிஸ்ல இருந்த சிசிடிவி வீடியோ எல்லாமே கரப்ட் ஆகி இருக்கு பெரியப்பா. நான் அந்த தெருவில் உள்ள எல்லா வீடியோ புட்டேஜையும் வாங்கிட்டு வர சொல்லி இருந்தேன். இவங்க அங்க இருந்த நாலு மணி நேரத்தோட எல்லா புட்டேஜையும் தனியா எடுத்து வச்சாச்சு. ஆனா அதுல யாரை தேடுறது? என்னனு தேடுறது? ஒன்னும் புரியல பெரியப்பா.” என்று சோர்வாக அமர்ந்தான்.

“நீயே இப்படி சோர்வா பேசினா என்ன அர்த்தம்? அடுத்து என்ன பண்ணலாம்னு இருக்க? தேர்தல் வர ரொம்ப நாள் இல்ல. இன்னும் ஆறு மாசத்துல எலெக்ஷன் வச்சாகணும். எலெக்ஷன் அனன்வுன்ஸ் பண்ணினதுக்கு அப்பறம் நீ கட்சியில் பதவிக்கு வந்தா சரியா இருக்காது. நான் மூர்த்தி கிட்ட பேசுறேன்.” என்று அவர் கைபேசியை எடுக்க,

“இருங்க பெரியப்பா அவசரப் பட வேண்டாம். அப்பாவே என்னை கட்சிக்கு கூப்பிட்டா சரியா இருக்காது. பேசாம நான் என் என். ஜி. ஓ குரூப் கூட சேர்ந்து கட்சியில் இணைஞ்சா யாரும் எதுவும் கேட்க முடியாது. அதுவும் இல்லாம நான் எதுவுமே செய்யாம அப்பா எனக்கு கேண்டிடென்சி அனவுன்ஸ் பண்ணினாலும் வாரிசு அரசியல்னு பேச்சு வரும். நிறைய யோசிக்கணும் பெரியப்பா. அதுக்கு தான் நான் தனியா ஏதாவது செய்ய நினைச்சேன். நீங்க தான்…” என்று சற்று சலிப்பாக கூறினான்.

“ஆமா நான் தான். என் அப்பா அவர் வளர்த்த கட்சியை என்னை நம்பி கொடுக்காம உன் அப்பாவை நம்பி கொடுத்தப்போ எந்த மறுப்பும் சொல்லாத நான் தான், இப்ப உன் அக்கா அந்த இடத்துக்கு வரணும்னு நினைக்கிறதை பொறுக்க முடியாம நீ தான் வேணும்ன்னு சொல்றேன். புரியுதா? என் அப்பா கட்சி நீரூபா இது. உன் அக்கா பண்ணுற கேவல அரசியல்ல சிக்க நான் விட மாட்டேன்.” என்று சற்று காட்டமாக கூறினார்.

“என் அப்பா மட்டும் ரொம்ப நல்லவரா பெரியப்பா?” என்று இன்னும் சலிப்பு விலகாத குரலில் அவன் கேட்க,

“உன் அப்பா ரொம்ப நல்லவன் இல்ல தான். ஆனா கொலை, கொள்ளை அளவுக்கு கெட்டவனும் இல்ல. ஆயிரம் ரூபாயில் ஒன்னு தனக்கும் ரெண்டு கட்சிக்கும் வந்தா தப்பில்லைன்னு சொல்றவன். மிரட்டி காரியம் சாதிச்சு இருக்கான் தான். ஆனா யாரையும் கொலை செய்தது இல்ல. சூழ்ச்சி கூட பண்ணுவான். ஆனா யாரையும் திக்கில்லாம நிற்க வச்சது இல்ல. ஆனா உன் அக்கா அப்படியா? யோசிச்சு பாரு. அந்த ரெண்டை கொலை கேஸ் நினைவு இருக்கா?’ என்று அவர் கோபமாக வினவியதும் நீரூபன் முகம் வாடியது.

“உன் அப்பா அவங்களை ஒத்துக்க வைக்க சொல்லி சொன்னான். அதுக்கு என்ன அர்த்தம்? மிரட்டணும், தேவைப்பட்டா ரெண்டு சாத்து சாத்தி காரியம் சாதிக்கணும். ஏன் நீ செய்ததே இல்லையா அப்படி? எல்லாரும் செய்வோம். எதுக்கு? அவன் நம்மளை நிமிர விடாம அடிக்கும்போது, நம்மளை சார்ந்தவங்களை வாழ விடாம செய்யும்போது அப்படி நடந்துப்போம். அதுக்கு நியாயமான காரணம் இருக்கும். அன்னைக்கும் அப்படி ஒரு காரணம் இருந்துச்சு. ஆனா உன் அக்காவும் மாமாவும் என்ன சொன்னாங்களோ தெரியாது. அந்த ரெண்டு பேரும் செத்து போனாங்களே! உன் அப்பா ஆட்சியில சில நல்லது செய்தும் அதுல பாதி கூட மக்களுக்கு போகலயே! ஏன்? யாரால? உன் அக்கா, அவளோட புருஷன். போதும் நீரூபா! என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது.” என்றவர் தன் கைபேசி எடுத்து சில அழைப்புகளை மேற்கொண்டார்.

அவனையும் சில அழைப்புகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். அவனும் அவைகளை செய்துவிட்டு, நீங்க சொன்னதை செய்துட்டேன் பெரியப்பா. ஆனா அப்பாவுக்கு தெரிஞ்சா வருத்தப்படுவார். என்றதும்

“படட்டும் தன் குடைக்கு கீழ தப்பு நடக்குது. அதை அவனுக்கு கவனிச்சு திருத்த முடியல. இப்ப அது வளர்ந்து இவ்வளவு தூரம் போயிருக்கு பாரு. அவங்களை பத்தி துப்பு சொல்ல வந்தவன் மாயமா போற அளவுக்கு வந்தாச்சு. போதும் நீரூபா. இதுக்கு மேல விட்டா, என் அப்பா கட்சி அசிங்கப்பட்டு போகும்.” என்று அழுத்தமாக கூறிவிட்டார்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

அவரிடம் விடைபெற்று வீட்டிற்கு சென்று வேட்டி சட்டையை களைந்து முழு சூட்டிற்கு மாறினான்.

அவன் இறங்கி வருவதைக் கண்டு அஞ்சனா அவன் எங்கே செல்லப் போகிறான் என்று நேரடியாக கேட்டாள்.

அவளைக் கண்டதும் எரிச்சல் வந்தாலும் மறைத்துக் கொண்டு அவன் பதில் சொல்ல வாய் திறக்க,

“நீ பேசாத தம்பி.” என்று அவனுக்கும் அவளுக்கும் இடையில் வந்தார் நாகரத்தினம்.

தன் அன்னையை அவன் விசித்திரமாக நோக்க,

“ஏம்மா உனக்கும் வயசாகுது தானே! கொஞ்சமாவது இங்கிதம் வேண்டாமா? வெளில போகும்போது எங்க போறன்னு கேட்கற?” என்று அஞ்சனாவிடம் திடமாக அவர் கேள்வி எழுப்ப, நீரூபன் அசந்து போனான்.

“அவன் எங்க போறான்னு தெரிஞ்சுக்க கேட்டேன். இதுல என்ன இருக்கு?” என்று அஞ்சனா அலட்சியமாக தோள் குலுக்க,

“படிச்ச பொண்ணு தானே? இப்ப உன் கேலெண்டர்ல என்ன பா வேலை இருக்கு? இன்னிக்கு டின்னர் எல்லாரும் ஒண்ணா சாப்பிடலாமா? போகும் வேலை அதுக்குள்ள முடிஞ்சிடுமா? இப்படி இங்கிதமா கேட்கத் தெரியாதா? இப்படி கேட்டாலே அவன் உன் கேள்விக்கான காரணம் புரிஞ்சு பதில் தருவான்ல? வெளில போகும்போது மூஞ்சில அடிச்சா மாதிரி எங்க போறன்னு கேட்டா நல்லாவா இருக்கு?” என்று நாகரத்தினம் அஞ்சனாவை கேள்விகளால் விளாசி விட்டார்.

அன்னையின் தோளை இறுக்கமாக அணைத்துக் கொண்ட நீரூபன், “இன்னிக்கு எங்க ‘பாதை ‘ நிறுவனத்திற்காக ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கு போறேன்.” என்று அக்காவுக்கு பதில் தந்துவிட்டு அன்னையின் கன்னத்தில் முத்தமொன்றைப் பதித்து விட்டு வெளியேறினான்.

நேராக அவன் சென்று சேர்ந்த இடம் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா. உடனடியாக பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்வதென்றால் இங்கே செய்துவிடுவது சாலச் சிறந்தது என்று முருகப்பன் ஏற்பாடு செய்திருந்தார்.

அவன் உள்ளே நுழையும்போது முருகப்பனும் முழு சூட்டில் வந்திருக்க, பத்திரிகையாளர்களுக்கு என்ன விஷயம் என்று புரியவில்லை என்றாலும் ஏதோ ஒரு முக்கிய நிகழ்வு என்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இருவரும் மேடையில் இருக்கும் இருக்கைகளில் அமர்ந்து எதிரே இருந்த டேபிளில் தாங்கள் பேசப் போவதை பதிவு செய்யக் காத்திருந்த ஒலிவாங்கிகளைக் கண்டதும் மென்மையாக புன்னகைத்துக் கொண்டனர்.

நீரூபன் அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு தான் கொண்டு வந்திருந்த கோப்பினை திறந்து வைத்தான்.

“ஏற்கனவே சிலமுறை நான் உங்களை சந்திச்சு இருக்கேன். இருந்தாலும் அறிமுகம் செய்துக்கறேன். நான் தான் நீரூபன். பாதைன்னு ஒரு அமைப்பை ஏற்படுத்தி படித்த பட்டதாரி இளைஞர்கள் தொழில் துவங்க உதவி செய்வதா சொல்லி இருந்தேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்க அலுவலக கிளை திறந்து அங்க வந்த எல்லாருக்கும் எங்களால முடிஞ்ச உதவிகளை நாங்க செய்திருக்கோம்.” என்று கையிலிருந்த பென் டிரைவை கொடுக்க, அது புரொஜெக்டரில் திரையிடப்பட,

அலுவலகங்களுக்கு வந்த இளைஞர்கள் கூட்டம் முதல், அவர்களுக்கு வங்கி விண்ணப்பம் பதிவு செய்வது, அவர்கள் தொழிலுக்கு இடம் பார்த்து முடிவு செய்வது, தொழில் துவங்கியது, முதல் ஆர்டர்களை அனுப்புவது என்று பல இளைஞர்களில் கனவுகள் நனவாகும் நெகிழ்ச்சியான காட்சிகள் பதிவாகி இருந்தது.

“ஒரு விஷயத்தை உங்க கிட்ட கூப்பிட்டு சொன்னதும் என்னை நம்பி ஒளிபரப்பி பலர் இப்படி உயர நீங்களும் முக்கியமான காரணம். அதுக்கு உங்களுக்கு நன்றி சொல்ல தான் இன்னிக்கு கூப்பிட்டேன்.” என்று கூறி முடித்தான்.

“ரொம்ப சந்தோஷம் சார். ஒரு தனி மனிதனா, ஒரு அமைப்பை ஏற்படுத்தி படித்த பலருக்கு உதவி இருக்கீங்க. வாழ்த்துகள் சார்.” என்று ஒருவர் பாராட்ட,

“எல்லாம் ஓகே சார். ஆனா முருகப்பன் ஐயா வந்திருக்கிற காரணம் எங்களுக்கு தெரியலயே! அதே மாதிரி அவரை நாங்க இப்படி பார்த்ததே இல்ல.” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார்.

“அதுக்கு பதிலை நான் சொன்னா சரியா இருக்கும்.” என்று முருகப்பன் அவர்களின் பாதை நிறுவனத்துக்கு கௌரவ ஆலோசகராக தான் நியமிக்கப் பட்டதாகவும் தனது ஆலோசனைகளுக்கு பல இடங்களில் செவி சாய்த்து இந்த பெரிய மாற்றத்தை கொண்டு வந்த நீரூபன் ஒரு நல்ல தலைவன் என்று அவர் பாராட்டினார்.

அப்பொழுது ஒரு மூத்த நிருபர்,” ஐயா உங்க அப்பா கட்சியை இவங்க அப்பா கிட்ட ஒப்படைச்சு அதை அவர் நடத்த ஆரம்பிச்சப்போ நீங்க தீவிர அரசியலுக்கு வர விருப்பம் இல்லன்னு சொல்லி இருந்தீங்க. இப்ப அவர் மகன் கட்சிக்கு போகாம ஊருக்கு உழைக்கும் போது அவர் உங்களை சேர்த்துகிட்டு செய்யறாரு. இதை எப்படி எடுத்துக்கறது?” என்று கேட்க,

“மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு தான் வரணும்னு இல்ல. அதுல எனக்கு அவ்வளவு விருப்பம் இல்லாததால தான் திருமூர்த்தி கிட்ட எங்கப்பா கட்சியோட தலைமைப் பொறுப்பை கொடுத்தப்ப நான் குறுக்க நிக்கல. இப்பவும் மக்களுக்கு உதவ நீரூபன் என்கிட்ட ஆலோசனை கேட்டப்ப நான் அதை செய்ய தயங்கல. நீரூபனுக்கு அரசியல் வேண்டாம்னு எந்த எண்ணமும் இல்ல. அவன் அப்பப்ப அவங்க அப்பாவோட சேர்ந்து கட்சியில் சில பணிகள் செய்துட்டு தான் இருக்கேன். உள்ளாட்சி தேர்தல் வந்தப்ப இருந்து அவனோட பங்கு கட்சிக்கு கிடைச்சுக்கிட்டு தான் இருக்கு. இந்த முறை சட்டமன்ற தேர்தல் வந்தா அவனை போட்டியிட சொல்லி இருக்கேன். அந்த ஆலோசனையை மட்டும் அவன் இன்னும் பரிசீலனை பண்ணல.” என்று கூறினார்.

“ஏன் நீரூபன் சார் அதை மட்டும் நீங்க பரிசீலிக்கல?” என்று பலரும் கேள்வி எழுப்ப,

“அச்சோ! அதெல்லாம் பெரிய விஷயம்ங்க. நான் ஏதோ இயற்கை விவசாயம், ஸ்கூல், டிரெய்னிங் அகாடமி, சாப்ட்வேர் கம்பெனின்னு தொழில் பண்ணிட்டு இருக்கேன். அப்ப தான் பாதை அமைப்பை தொடங்கும் எண்ணமே வந்தது. இப்ப அரசியலுக்கு வந்தா அதெல்லாம் ஏதோ உள்நோக்கத்துல செய்தது போல மாறிடும். எனக்கு இப்படி இருந்துட்டு போறதுல எந்த பிரச்சனையும் இல்லங்க. ஆனா தப்பா பேசிட்டா. அப்பறம் சரி பண்ண முடியாது. நன்றி!” என்று கூறி விடைபெற்றுக் கொண்டான்.

முருகப்பனும் விடைபெற, சிலர் நேத்ரா திருமணம் பற்றி பின்தொடர்ந்து வந்து கேள்விகள் எழுப்ப, உரிய பதில் தந்துவிட்டு, அவர்களுக்கு உபசரிப்பு மற்றும் பரிசுகள் ஏற்பாடு செய்திருப்பதை தெரிவித்து மீண்டும் நன்றியுரைத்து ஜீப்பில் ஏறிக் கொண்டான். அவனோடு வந்த முருகப்பன்,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“நான் நினைச்சபடியே எல்லாம் நடந்திருக்கு. இப்ப கட்சி ஆளுங்க நீ தேர்தல்ல போட்டியிடணும்னு கேட்பாங்க. அதை அஞ்சனாவால் தடுக்க முடியாது. உன் அப்பா மூலமா நீ அரசியலுக்கு வந்ததா இல்லாம, நான் சொல்லி நீ வந்ததா இது மாறும்.” என்று கூறி சாய்ந்து அமர்ந்தார்.

“பார்ப்போம் பெரியப்பா. நம்ம சோர்ஸ் என்ன சொல்றாங்கன்னா அடுத்த வாரம் எப்படியும் தேர்தல் ஆணையராக புது அதிகாரி நியமிக்கப்பட்டு மளமளன்னு தேர்தல் வேலை நடக்கும்ன்னு தெரியுது.” என்று கூறி அவரை அவர் வீட்டில் இறக்கி விடச் சென்றான்.

“பார்ப்போம் நீருபா! அந்த பையன் கண்டுபிடிக்க முயற்சி பண்ணு.” என்று கூறி விடைபெற்றார்.

இவர்கள் வலை வீசித் தேடும் அந்த மனிதனின் சடலம் சில நாட்களில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் வலையில் சிக்கியது.