அதிகாரா 62

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 62

திருமணம் முடிந்ததும் தம்பதி சமேதராக வந்து பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர் நேத்ராவும், வசீகரனும்.

நீரூபன் இரண்டாம் வரிசையில் இருந்த தன் தாய் மாமனையும் அத்தை அர்ச்சனாவையும் அழைத்து வந்து தன் தங்கையையும் மாப்பிள்ளையையும் வாழ்த்துமாறு கேட்டுக் கொள்ள, அதைப் பார்த்துக் கொண்டிருந்த திருமூர்த்தி மகனை ஊன்றி கவனித்தார்.

அவன் அவரிடம் காட்டும் மரியாதையில் பாசமும் பெருமையும் தெரிந்தது.

ரமணி திருமூர்த்தியை நெருங்கவே இல்லை. மணமக்களை வாழ்த்தியவர் தன் கையில் இருந்த பையைத் திறந்தார்.

அதில் இருந்த நகைப் பெட்டியை எடுத்து நேத்ராவிடம் கொடுத்தார்.

அதில் இருந்த வைர மாலையை அர்ச்சனா எடுத்து நேத்ராவின் கழுத்தில் போட்டு விட்டார். நேத்ரா நன்றி கூறியதும்,

“நீயும் எங்க மருமக தான் டா நேத்ரா. கண்டிப்பா நம்ம வீட்டுக்கு அடிக்கடி வரணும்.” என்று வசீகரனையும் நோக்கி அழைப்பு விடுத்தார்.

ரமணி மீண்டும் இருக்கைக்கு திரும்ப நினைக்க, அவர் வலக்கரத்தை பற்றிக் கொண்ட அர்ச்சனா,

“அண்ணா” என்று திருமூர்த்தியை அழைத்தவர்,

திருமூர்த்தி அவர் பக்கம் திரும்பியதும், “உங்களைப் பார்த்தே பல வருஷம் ஆகுது. நானே உங்களை பார்த்து ஒரு விஷயம் பேசணும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் அதுக்கு இதை விட சரியான சந்தர்ப்பம் அமையுமான்னு எனக்கு தெரியல. இப்ப நான் கேட்கலாமா அண்ணா?” என்று மிகவும் அன்பும் பணிவுமாக வேண்டிக் கொள்ள,

திருமூர்த்தி தலையசைத்ததும், நீரூபனின் கைபற்றி, “என் மகளுக்கு என் மருமகனை கல்யாணம் பண்ணி வைக்க சம்மதம் சொல்லுங்க அண்ணா. இது என் ஆசை மட்டும் இல்ல. சரஸ்வதி ஆசையும் இது தான் அண்ணா. எனக்கு மக பிறந்தா அவ மருமகளா அவளை நான் கொடுக்கணும்னு கேட்டா. என் மருமகனை இத்தனை வருஷம் தள்ளி நின்னு பார்த்து சந்தோஷப்பட்டேன். இனிமே பக்கத்தில் இருந்து பார்க்கணும் அண்ணா.” என்று அனுமதியாகவும் இல்லாமல் ஆசையாகவும் காட்டிக்கொள்ளாமல் கேட்டார்.

திருமூர்த்தி சின்ன அமைதிக்குப் பின், “என் மகன் கல்யாணம் பத்தி எதுவும் யோசிக்கல.” என்று தயங்க,

“அவனுக்கும் கல்யாணம் வயசு தாண்டப் போகுது அண்ணா.” என்று அர்ச்சனா மெல்லிய சிரிப்பை உதிர்க்க,

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஏன் பா தயங்கிட்டு இருக்கீங்க? என்னைக் கேட்டா தாராளமா அத்தை கேட்பது போல தம்பிக்கு அந்த பொண்ணு பூமிகாவை கல்யாணம் பண்ணிக்கலாம் பா.” என்று இடையில் வந்து பேசினாள் அஞ்சனா.

அவளை அங்கே சட்டென்று எதிர்பாராத மற்றவர்கள் அவளது கூற்றைக் கேட்டு திகைக்க,

திருமூர்த்தி மகளை ஆழமாக நோக்கினார். பின் அர்ச்சனாவின் அருகில் வந்தவர்,

“உன் மகளை எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க கூடாதுன்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லம்மா. ஆனா உடனே முடிவு சொல்ல முடியல. நான் யோசிச்சுட்டு, இந்த கல்யாண களேபரம் எல்லாம் முடிஞ்சதும் வீட்டுக்கே வந்து பேசுறேன்.” என்று கைகூப்பி கூறியதும் அனைவருக்கும் நிறைவாக இருந்தது.

இதற்குள்ளாக பாதுகாப்புக்கு இருந்த அதிகாரிகள் கூட்டம் அதிகமாவதால் விவிஐபிக்களை பத்திரமாக அனுப்பி வைக்க உணவறை நோக்கி அனைவரையும் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

மணமக்கள் மீண்டும் மேடையில் ஏறி சம்பிரதாயங்கள் அனைத்தையும் முடித்து விட, மேடை அலங்காரம் துரித கதியில் மாற்றப்பட்டு, அதற்குள் மணமக்களும் திருமண உடையை களைந்து வரவேற்பு உடைக்கு மாறி இருந்தனர்.

திரை பிரபலங்கள், அரசியல் வட்டத்தில் இருந்த முக்கியஸ்தர்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என்று ஒருபுறம் பரிசு கொடுக்க நின்றிருக்க, உறவினர்கள் நண்பர்கள், ஊழியர்கள் என்று மிகப்பெரிய வரிசை  தயாராகி கொண்டிருந்தது.

நீரூபன் அங்கும் இங்கும் அலைந்தபடி இருக்க, அவனை நிறுத்திய முருகப்பன்,

“நேத்து ஒரு முக்கியமான விஷயம் நடந்தது நீரூபா. உனக்கு கூப்பிட்டு பேச நினைச்சேன். ஆனா கல்யாண வேளையில் எப்படி சொல்றதுன்னு தயக்கமா இருந்தது.” என்று இப்பொழுதுமே தயக்கத்தைக் காட்டினார்.

“என்ன பெரியப்பா என்கிட்ட சொல்றதுக்கு என்ன? சொல்லுங்க.” என்று தனியே அவருடன் வந்து விட,

“உன் அக்காவும் மாமாவும் ஏதோ தகிடு தத்தம் பண்ணி இருக்காங்க. மதுரை போனப்ப அங்க கட்சி ஆபிஸ்ல வச்சு இவங்க யாரையோ கூப்பிட்டு பேசி இருக்காங்க. அங்க நமக்கு வேண்டப்பட்ட பையன் தான் கால் பண்ணி சொன்னான். வந்தவனைப் பார்த்தா நல்ல மாதிரியா இல்லையாம். சிசிடிவி புட்டேஜ் எடுத்து வச்சிருக்கானாம். நேத்தே கூரியர்ல போடுறேன்னு சொன்னான். நான் தான் இன்னிக்கு கல்யாணத்துக்கு அவனையும் கிளம்பி வர சொன்னேன். காலைல சென்னை வந்துட்டேனு மெசேஜ் அனுப்பி இருந்தான். ஆனா இப்ப கூப்பிட்டா செல் சிவிட்ச் ஆப்ன்னு வருது.” என்று பதற்றமாகக் கூறினார்.

“நான் என்னன்னு விசாரிக்கிறேன் பெரியப்பா. நீங்க டென்ஷன் ஆகாதீங்க.” என்று அவரை சமாதானம் செய்து சாப்பிட அனுப்பிவிட்டு தங்களின் மதுரை கிளை அலுவலகத்துக்கு அழைத்து கட்சி அலுவலகத்துக்கு அருகில் இருக்கும் அனைத்து சிசிடிவி பதிவுகளையும் சேகரிக்குமாறு கூறினான்.

என்னவென்று தெரியாத ஒன்றை எப்படித் தேடுவது என்று நினைக்கவே மலைப்பாக இருக்க, சென்னை அலுவலக ஊழியரை அழைத்து முருகப்பன் ஐயாவுடன் பேசி, மதுரையிலிருந்து வந்த நபரின் தற்போதைய நிலையை அறிந்து கூற கட்டளையிட்டான்.

வேலைகளை முடித்து நிமிர்ந்தபோது காலையிலிருந்து திருமண வேலையில் ஒன்றும் சாப்பிடாத வயிறு அவனை வாட்டியதில் தலை லேசாக சுற்று கண்கள் இருட்டிக் கொண்டு வர, சுவரில் சாய்ந்தவனை தன்னோடு சேர்த்துக் கொண்டன இரு கரங்கள்.

லேசான தடுமாற்றத்தில் இருந்த நீருபன் நிலையாக நின்றதும் தன்னைப் பிடித்த கரங்களுக்கு சொந்தக்காரரைத் தேட,

இப்பொழுது அக்கரம் பழச்சாரை ஏந்திக் கொண்டிருந்தது.

நிமிர்ந்தவன் விழிகளில் நிறைந்தவள் அவனது பூமிகா தான்.

மெல்லிய புன்னகை இழையோட, அதே நேரம் கண்டிப்பான குரலில், வேலை வேலைன்னு ஓடினா பத்தாது மாமா, உங்களையும் கொஞ்சம் கவனிங்க என்று உரிமையாக பேச, அதனை வாங்கிப் பருகியபடி கண்களால் பிங்க் வண்ண லெஹெங்கா அணிந்திருந்த அவளையும் பருகினான்.

முன் நெற்றிக் கூந்தல் முகத்தில் விழ அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் கன்னங்கள் நாணத்தால் சிவந்து போனது.

முருகப்பனுடன் பேசவும், அழைப்புகளை மேற்கொள்ளவும் தனியான இடத்தில் இருந்த நீரூபனுக்கு வசதியாகப் போய்விட, பிங்க் வண்ண லெஹெங்காவுக்கு இடையில் வெண்ணெய்க் கட்டி போலத் தெரிந்த பூமிகாவின் இடுப்பில் கைகோர்த்து அவளை தன்னோடு இழுத்து இறுக்கிக் கொண்டான்.

“மாமா என்ன பண்றீங்க?” என்று அவள் கீச்சுக் குரலில் கேட்டபடி துள்ள,

“ச்சு. அமைதியா இரு. கொஞ்ச நாள் தான் இப்படி துள்ள முடியும். அப்பறம் நான் சொல்றத கேட்டு தானே ஆகணும்?” என்று சற்று வில்லன் போல குரலை மாற்றி அவளிடம் அவன் பேசியதும்,

“நம்பிட்டேன். விளையாட்டுக்கு கூட உங்களுக்கு மிரட்ட தெரியல மாமா.” என்று கேலி செய்து, தன்னை விடுவிக்குமாறு கெஞ்ச, அவன் மிஞ்ச,

இந்த காதலர் போராட்டம் முடிவுக்கு வராது என்று அறிந்து கொண்ட பூமிகா அவளே மனமிறங்கி நீரூபனின் இரு கன்னங்களிலும் தன் முத்தத்தைப் பதித்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஆசையாக வாங்கிக் கொண்டவன் பதில் அன்பு காட்டாமல் செல்வது தவறென்று நெறிகள் பல பேசி நைச்சியமாக அவளது மலரிதழ்களை கொய்து விட்டான்.

இருவரும் காதல் கடலிலிருந்து மீண்டு வந்து மக்கள் கடலில் கலந்து திருமண வரவேற்பு வேலைகளை கவனித்தனர். ஆனாலும் அந்த இதழொற்றல் அவர்கள் இருவருக்கும் குறுகுறுப்பு ஏற்படுத்தி வெட்கச் சிவப்புடன் நடமாட வைத்தது.

வந்தவர்கள் விடைபெற்றுக் கிளம்பி செல்லும் வரை யாருக்கும் ஓய்விருக்கவில்லை.

திருமணம், வரவேற்பு அனைத்திலும் அருந்ததி வாசுதேவன் இருவரையும் தகுந்த மரியாதையோடு நடத்துவதை உறுதி செய்தபடி இருந்தான் நீரூபன்.

அவனின் இந்த பாங்கே அவர்களை மேலும் மேலும் அவனுக்கு நேயர்களாக மாற்றிக் கொண்டிருந்தது.

நேத்ரா-வசீகரன் முதல் இரவை சென்னையின் மிகப்பெரிய நட்சத்திர விடுதியில் நடத்த வேண்டும் என்று திருமூர்த்தி கூற, அதில் வசீகரனுக்கும் உடன்பாடில்லை, நீரூபனுக்கும் உடன்பாடில்லை.

“அப்பா அவளை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சு. அவங்க தான் இனிமே சம்பிரதாயம் எல்லாமே முடிவு பண்ணுவாங்க.” என்று அருந்ததியை கைகாட்டி விட்டான்.

“முதல்ல மருமகளை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால் பழம் கொடுத்துட்டு, அங்கேயே நாங்க சாங்கியம் பண்ணிக்கிறோம்.” என்று மென்மையாக உரைத்தார் அருந்ததி.

“சரிங்க அத்தை. உங்க விருப்பப்படி செய்ங்க” என்று நீரூபன் ஒப்புதல் கொடுத்துவிட, திருமூர்த்தி அவனை சற்று எரிச்சலுடன் நோக்கினார்.

அவர்கள் அனைவரும் வசீகரனின் வீட்டிற்கு கிளம்பிச் செல்ல,

மகனை பிடித்துக் கொண்டவர், “மாப்பிள்ளை தான் அவ விருப்பம் போல. சம்பிரதாயம் கூட நம்ம விருப்பத்துக்கு இல்லையா நீரூபா? நீயே இப்படி பண்ணலாமா?” என்றார்.

“நமக்கே இப்படி இருக்கு. அப்ப அவங்க மகன் கல்யாணத்தில் அவங்க விருப்பம் எதுவுமே இல்லனு அவங்களுக்கு தோணாதாப்பா? நம்ம இப்ப ஆசைக்கு கேட்டா கூட அதிகாரத்தில் கேட்பதா அவங்களுக்கு தோணும். இன்னிக்கு இல்லனாலும் இன்னொரு நாள் நம்ம நேத்ரா தானே அதுக்கு பேச்சு வாங்கணும்? பணம் இருக்குற வீட்டில் மட்டும் மருமகளை எதுவும் சொல்ல மாட்டாங்களா என்ன?” என்று சிரித்தான்.

“என் பொண்ணை சொல்லிடுவாங்களா?” என்று திருமூர்த்தி ஆவேசம் கொள்ள,

“அப்படி ஒரு சூழலே வரக் கூடாதுன்னு சொல்றேன். என் தங்கைக்கும் வீட்டுக்கு போக தான் விருப்பம்.” என்று கூறி அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் நீரூபன்.

அங்கே வீடு சென்ற தம்பதிகளை வரவேற்று உபசரித்து இரவுக்கு தயார் செய்து அனுப்பி வைத்தனர் பெற்றவர்கள்.

நேத்ரா அறையில் நுழைந்ததும் வசீகரனை அன்போடு கட்டிக்கொண்டு, “ஹலோ புருஷா!” என்று குதிக்க,

அவனோ “வாடி என் பொண்டாட்டி.” என்று இழுத்து அணைத்துக் கொண்டான்.

ஒரு காதல் கைகூடுவது என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு செய்தி, அல்லது நிகழ்வு. ஆனால் அந்த காதலர்களுக்கு அது தான் வாழ்க்கை.

தங்கள் வாழ்க்கை ஒன்றிணையுமா என்று ஒவ்வொரு நிலையிலும் அவர்கள் மனம் தவித்த தவிப்புக்கு விடையாக இன்றைய திருமண நிகழ்வு அமைந்து விட,

சிறுபிள்ளை போல சற்று நேரம் குதித்து ஆடி, மகிழ்ந்து விட்டு மெல்ல காதலர் நிலையை அடைந்தனர்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு தங்கள் காதல் கால ஆசைகளை பகிர்ந்து கொள்ள, மெல்ல பேச்சு முதலிரவு பற்றி திரும்பியது.

“நான் அப்படி நினைச்சேன்.” என்று எதையோ வசி காதில் நேத்ரா கூற,

“அடிப்பாவி” என்று அவள் தோளில் தட்டி விளையாட, மெல்ல விளையாட்டு மோன நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றது.

காதல் காலத்தில் கண்ணியமாக இருந்த இருவரும் கணவன் மனைவியாக தங்கள் இல்லற வாழ்கையில் இணைய சின்னச் சின்ன தயக்கம், மனதோரம் துளி பயமெல்லாம் வெளிக்காட்டி, ஒருவருக்கு ஒருவர் சமாதானம் சொல்லி சம்சாரக் கடலில் சங்கமிக்கத் துவங்கினர்.

யார் முதல் வரி எழுதியது, யார் அதனை காற்புள்ளி போட்டு நீட்டித்தது என்று கண்டறிய இயலாதபடி காதலைத் தாண்டி தங்கள் தேடலில் தொலைந்து போனார்கள்.

இங்கே நீரூபன் வீட்டில், மகளை திருமணம் முடித்து அனுப்பிய நாகரத்தினம் மிகவும் இயல்பாக உறவினர்களை கவனித்து வழியனுப்பிக் கொண்டிருக்க,

நீரூபன் அன்னையிடம் வந்து, “என்னம்மா பொண்ணை கல்யாணம் பண்ணி அனுப்பும் அம்மா எல்லாம் அழுது வருந்தி என்னென்னவோ பண்றாங்களாம். நீங்க என்ன இப்படி ஜாலியா இருக்கீங்க?” என்று அருகில் இருந்த மேஜையில் ஏறி அமர்ந்து கேள்வி கேட்டான்.

“வெளியூர் வெளிநாடுன்னு பாப்பா தனியா போகாத இடமில்லை. இப்ப கல்யாணம் பண்ணி மாப்பிள்ளை கூட தானே போயிருக்கா. எதுக்கு அழணும்? என் மகளை அந்த பையன் நல்லா பார்த்துப்பான். எனக்கு நம்பிக்கை இருக்கு. இல்லன்னாலும் என் மகன் அதை என்னன்னு பார்த்து சரி பண்ணிடுவான்.” என்று நீரூனின் தாடையில் தடவி அவர் கூறியதும், தாவி இறங்கி அன்னையை அணைத்துக் கொண்டான் நீரூபன்.

இவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டு அந்த அறையைக் கடந்த அஞ்சனாவுக்கு பொறாமையுடன் சேர்த்து எரிச்சலும் பொங்கிக் கொண்டு வந்தது.