அதிகாரா 61

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 61

முன்னாள் முதல்வர் வீட்டுத் திருமணம். கேட்கவும் வேண்டுமோ எனும்படி ஆடம்பரமும் அலங்காரமும் மாநிலத்தையே அவர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருந்தது.

வாசலில் வரையப்பட்ட ரங்கோலி முதல் திருமண மண்டபத்தின் அலங்காரம், மேடை அலங்காரம், நேத்ராவுக்காக அழைக்கப்பட்ட பியூட்டிஷியனில் ஆரம்பித்து அனைத்திலும் பிரம்மாண்டம்! பிரம்மாண்டம்! பிரம்மாண்டம் மட்டுமே!

நீரூபன் தன் தங்கையின் திருமணத்தை இந்த அளவு விமரிசையாக ஏற்பாடு செய்து விடுவான் என்று அஞ்சனா கூட எண்ணிப் பார்க்கவில்லை.

அவளை பத்திரிகை வைத்து அழைக்க அனுப்பிவிட்டு ஒவ்வொன்றிலும் அவன் எந்த அளவுக்கு ஆர்வமும் அக்கறையும் காட்டி இருக்கிறான் என்று தெரிந்ததும் அஞ்சனாவுக்கு காதில் புகை வராத குறைதான்.

தன் திருமணத்தின் போது அவன் இளையவன். தந்தை தான் தனக்காக திருமணத்தை ஏற்பாடு செய்தார். அப்போது அவர் மந்திரியாக மட்டுமே இருந்தார் என்பதால் ஓரளவுக்கு செய்திருந்தார். ஆனால் இன்றைய நிலையில் நேத்ராவுக்கு தம்பி செய்திருக்கும் ஏற்பாடுகளைப் பார்த்து அஞ்சனாவுக்கு பொறாமை வந்தது.

திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே சம்பிரதாயங்கள் ஆரம்பிக்கப்பட்டு வீட்டில் மருதாணி வைப்பது, பந்தல்கால் நடுவது, பெண்ணுக்கு நலங்கிடுவது என்று வீடு விழாக்கோலம் பூண்டு மகிழ்ச்சி நிறைந்து இருந்தது.

பூமிகாவும் நேத்ராவின் தோழி என்ற முறையில் அனைத்திலும் கலந்து கொண்டாள். ஆனால் நாகரத்தினத்தையோ நீரூபனையோ அதிகம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் அவள் நேத்ராவுடனே நேரத்தை செலவு செய்தாள்.

நேத்ரா இங்கே நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் வசீகரனுடன் கைபேசியில் வீடியோவாக பகிர்ந்து கொண்டிருக்க, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அதை தகவலாக தன் மாமியாருக்கும் தெரியப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அவளுக்கும் அவளது மாமியார் அருந்ததிக்குமான பந்தம் மிகவும் அழகாக துவங்கியிருந்தது. அதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது நீரூபன் தான்.

திருமணம் முடிவான பின் அவரையும் நேத்ராவையும் ஒரு அழைப்பில் இணைத்து தன் தங்கையை தான் எவ்வாறெல்லாம் பார்த்துக் கொண்டோம் என்பதை அவருக்கு தெரிவித்து, முடிந்தவரை அவள் செய்யும் தவறுகளை நிதானமாக சுட்டிக் காட்டும் படியும், அப்படி அவள் கேட்காமல் போனால் தன்னிடம் கூறினால் தானே கண்டித்து விடுவதாகவும், அவர் மனம் கோணாத மருமகளாக நடந்து கொள்வாள் என்றும் அண்ணனாக அவன் வாக்களிக்க, தன் அண்ணனின் வாழ்க்கை மூச்சாக காப்பாற்றுவேன் என்று மாமியாருக்கு அவளும் வாக்களித்தாள்.

வீட்டில் நடைபெற்ற விழாவுக்கே கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பலரும் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள துவங்கியிருந்தனர்.

வெளியூர் வெளிமாநிலம் வெளிநாடுகளில் இருந்து வரும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கு சென்னையில் இருக்கும் அனைத்து ஸ்டார் ஹோட்டலிலும் அறைகள் முன் பதிவு செய்திருந்தான் நீரூபன்.

கையில் அழகாக சிவப்பும் கருப்பும் கலந்த அரபிக் மெஹந்தி வரையப்பட்டிருக்க அதை புகைப்படம் எடுத்து வசீகரனுக்கு அனுப்பிய போது நேத்ராவின் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

என் அண்ணன் திருமணத்திற்கு எந்த தடையும் சொல்ல மாட்டார் என்ற ஒரு நம்பிக்கையில் மட்டுமே அவள் தன் காதலை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருந்தாள்.

சாதாரண நடுத்தர வர்க்கத்து பையனான வசீகரனை நிரூபனுக்கு பிடிக்கும் என்றாலும் அவன் சமீப காலமாக எட்டிய உயரத்திற்கும், இந்த திருமணத்தை இத்தனை விமரிசையாக நடத்த தன் தந்தையை சம்மதிக்க வைத்து அனைத்து ஏற்பாடுகளையும் கவனித்துக் கொள்ளும் தன் அண்ணனை எண்ணும்போது நேத்ராவின் விழிகளில் கண்ணீர் ஊற்றெடுத்தது.

வேலை நிமித்தமாக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்த நிரூபனின் கைப்பேசி விடாமல் அடித்துக் கொண்டிருக்க சட்டென்று எடுத்து பார்த்தவன் விழிகள் கேள்வியாக தொக்கி நின்றது.

ஏனெனில் அழைத்திருந்தது அவனது உயிர் காதலியான பூமிகா. இந்த திருமண வீட்டில் இருவரும் அதிகம் பேசிக்கொள்ள முடியாது என்று ஏற்கனவே அவர்கள் முடிவு செய்திருந்ததால் இந்த அழைப்பை அவன் எதிர்பார்க்கவில்லை.

மிகுந்த யோசனையுடன் அழைப்பை ஏற்றதும், “மாமா எங்க இருக்கீங்க? உடனே நேத்ரா அண்ணியை வந்து பாருங்க.” என்று தலைப்புச் செய்தி போல ஒரு வரியில் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தாள் பூமிகா.

அவசர அவசரமாக நேத்ரா இருக்கும் இடத்தை கண்டறிந்து வந்து சேர்ந்தவன் தங்கையின் கண்களில் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீரைக் கண்டு பயந்து போனான்.

“என்னடா என்ன ஆச்சு ஏன் அழுகுற?” என்று அவளிடம் ஓடி கட்டி அணைத்து ஆறுதலாக தலையை கோதி விட,

அவன் மார்பில் சரிந்தவள் கண்ணீரில் மேலும் கரைந்தாளே அன்றி வாய் திறக்கவில்லை.

“என்னம்மா சொல்லு” என்று சமாதானமாக அவள் கலைந்திருந்த கேசத்தை சரி செய்து கொண்டே கன்னம் தடவி விசாரித்தான் நீரூபன்.

“அண்ணா கொஞ்ச நேரம் முன்னாடி தான் வசி மண்டபத்தோட போட்டோ எல்லாம் அனுப்பி விட்டான். பார்த்ததும் எனக்கு அப்படியே கண்ணலாம் கலங்கிருச்சு. நான் அப்பாவ கன்வின்ஸ் பண்ணி அட்லீஸ்ட் சிம்ப்ளா எங்க கல்யாணத்தையாவது நீ முடிச்சு கொடுத்திடுவேன் என்ற நம்பிக்கையில் தான் வசீகரனை லவ் பண்ணினேன்.

ஆனா இந்த அளவுக்கு கிராண்டா எல்லாத்தையும் பிளான் பண்ணுவேன்னு நான் நினைக்க கூட இல்ல. சிலர் ட்ரீம் வெட்டிங்னே இதை சொல்லலாம். ஆனா என் ட்ரீம்ல கூட இல்லாத வெட்டிங் அண்ணா இது.” என்று அவன் மார்பில் மீண்டும் முகம் புதைத்து குலுங்கி அழுதாள்.

“என்னடா நீ என் தங்கை டா. உனக்கு செய்யாம யாருக்கு செய்யப் போறேன்?” என்று அவளை இரு கன்னங்களிலும் கை கொண்டு ஏந்தி நெற்றியில் முத்தமிட்டான்.

இவர்களின் இந்த பேச்சுகளை சற்று தள்ளி நின்று கேட்டுக் கொண்டிருந்த பூமிகாவின் விழிகளில் மகிழ்ச்சி நிலை கொண்டிருப்பதை சற்று தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.

மகள் அழுவதாக மனைவி மூலமாக கேள்விப்பட்டு அவளை சமாதானம் செய்ய அவர் வருவதற்குள் நீரூபன் அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

பூமிகா யார் என்று அறிந்தது முதலே அவளை சற்று தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்தார் திருமூர்த்தி.

நேத்ராவுக்கு அரசியல் வட்டத்தில் திருமணம் செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தை அவளது காதல் பொய்யாகி விட்டதால், ஆரம்பத்தில் நீரூபனுக்கு அரசியல்வாதியின் மகளைத் திருமணம் செய்து விட வேண்டும் என்று சற்று ஆழமான எண்ணத்தில் இருந்தவர் அவர்.

ஆனால் மனைவி அன்று பேசிய விதத்தில் சற்று ஆடிப் போய்விட்டார். தன் முதல் மனைவியான பால சரஸ்வதி தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த பெண். அதனால்தான் அரசியலின் ஆரம்ப கட்டத்தில் அவருக்கு வீட்டிற்கே வர முடியாத சூழ்நிலை இருந்த போதும் குடும்பத்தை பத்திரமாக அவர் தயவு இன்றி நடத்திக் கொண்டிருந்தார்.

ஆனால் அவர்களே எதிர்பாராத வண்ணம் பால சரஸ்வதியின் இறப்பு அமைந்துவிட, மிகவும் சிந்தனைக்கு பின் தன் இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டுமே என்று தான் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

அதில் அவர் வைத்த மிக முக்கிய நிபந்தனையே அப்பாவியாகவும் எதிர்த்து பேசாதவராகவும் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கு அஞ்சலியின் குணமும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

முருகப்பன் நாகரத்தினத்தை அவருக்கு அறிமுகம் செய்து வைத்து திருமணத்திற்கு சம்மதம் கேட்க, அவரின் அமைதியும் ஏழ்மையான நிலையும் தன் குழந்தைகளை நன்றாக கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கை பிறந்ததால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதித்தார்.

கைக்குழந்தையாக இருந்த நீரூபனை தன் மகன் போலவே நாகரத்தினம் பாவித்து வளர்க்க, அவர் மேல் எழுந்த நல்ல எண்ணத்தினால் தான் முழுவதுமாக மனைவியாக ஏற்று நேத்ராவை பெற்றெடுத்தார்.

அப்போதிலிருந்தே நாகரத்தினத்தை மனைவியாக சரிசமமாக நடத்துவதாகவே அவர் எண்ணிக் கொண்டிருக்க ஆனால் அவ்வாறெல்லாம் இல்லை என்பதை தலையில் அடித்தது போல் புரிய வைத்திருந்தது அன்றைய நாகரத்தினத்தின் பேச்சு.

இப்பொழுதும் கூட நாகரத்தினம் தன்னுடைய ஆசைக்காக அல்லாமல் அவரின் முதல் மனைவியின் தோழியும் அதே நேரத்தில் சரஸ்வதியின் அண்ணன் மகளுமான பூமிகாவை தன் மருமகளாக கொண்டு வர வேண்டும் என்று ஆசைப்படுவதை வெளிப்படுத்தக் கூட மிகவும் தயங்கிய நிலையில் தான் வைத்திருக்கிறோம் என்பதிலிருந்து அவர் மனதில் அவர் ஆசைப்பட்டதை செய்து கொடுத்தால் என்ன என்று எண்ணம் முளைத்திருந்தது.

ஆனால் அரசியல்வாதியின் மகளாக இருந்தால் மகன் அரசியலுக்கு வர நூறு சதவிகித வாய்ப்பு இருக்குமே என்று அரசியல்வாதியாகவும் ஒரு எண்ணம் இரண்டாம் அலைவரிசையில் சென்று கொண்டிருந்தது.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

ஆனால் திருமண ஏற்பாடுகளில் நீரூபன் காட்டும் ஆர்வமும், அவன் நேத்ராவை உயிரினும் மேலாக எண்ணியிருக்கும் எண்ணம் வெளிப்பட்டதால் வேறு எந்த பெண் வந்தாலும் இதனை உடையாமல் காப்பார் என்பதற்கு எந்த உறுதியும் இல்லை என்று அவருக்குப் புரிந்திருந்தது.

தற்போது நேத்ரா நெகிழ்ந்து போய் அழும் நேரத்தில் அதனை நேத்ராவின் தோழியாக பூமிகா கண்களில் பெருமையுடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவருக்கு, அவள் நீரூபனுக்கு சரியான ஜோடியாக இருப்பாளோ என்ற எண்ணம் வலுப்பெற்றது.

நிகழ்வுகள் மள மளவென நிகழ்ந்துவிட, திருமண நாளும் அழகாக விடிந்தது.

மாப்பிள்ளையை அழைத்து வந்து மணப்பந்தலில் அமர்த்தினான் நீரூபன்.

அழகிய பட்டு வேட்டி சட்டையில் மிடுக்குடன் காட்சி அளித்த வசீகரனை அவர்கள் தகுதிக்கு குறைவானவன் என்று கூறும் அளவிற்கு யாருக்கும் எந்த காரணமும் கிட்டவில்லை.

மத்திய அரசிலிருந்தும் மாநில அரசிலிருந்தும் அமைச்சர்கள் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என்று சென்னையின் மிகப்பெரிய அந்த திருமண மண்டபம் விஐபிக்களால் நிரம்பி வழிந்தது.

பாலரமணி அர்ச்சனாவுடன் திருமணத்திற்கு வந்திருந்தார். மகள் நேத்ராவுடன் இருப்பதை அறிந்து இரண்டாம் வரிசையில் அவர்கள் அமர்ந்திருக்க, வேலைக்கு இடையில் அவர்களைக் கண்டு வந்து பேசிவிட்டு வாசுதேவனிடம் அவரைத் தன் தாய் மாமா என்று அறிமுகமும் செய்து வைத்தான் நீரூபன்.

சினிமா நட்சத்திரங்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள் என்று பலரும் பக்கவாட்டில் போடப்பட்ட சிறிய மேடையில் சின்ன சின்ன நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருந்தவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க, பிரபல பாடகர்களும் இசையமைப்பாளர்களும் அவர்களுக்கு துணைபுரிந்து கொண்டிருந்தனர்.

அரக்கு நேரத்தில் தங்கத்தை குழைத்து பூசியது போல இருந்த பட்டுப்புடவையில் கழுத்தில் இருந்து இடுப்பு வரை புடவையே தெரியாத அளவிற்கு தங்க நகைகளால் நிறைத்து, தலையலங்காரம் முதல் கால் நகத்தில் பூசப்பட்ட நகப்பூச்சு வரை தங்கமும் வைரமும் வைத்து தங்கையை இழைத்திருந்தான் நீரூபன்.

மேடையின் அலங்காரங்களைத் தாண்டி நடந்து வந்த நேத்ராவின் மீதிருந்து ஒளி வெள்ளம் வீசும் வகையில் அவள் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

ஐயர் கூறிய மந்திரங்களை கர்ம சிரத்தையாக சொல்லிக் கொண்டிருந்த வசீகரன் பக்கவாட்டில் நடந்து வந்து கொண்டிருந்த நேத்ராவை கண்டு ஸ்தம்பித்தான்.

இந்த அழகுப் பெட்டகம் சில நிமிடங்களில் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற உணர்வே அவன் மனதிற்கு தித்திப்பைக் கொடுத்தது.

நேத்ரா கனவில் நடப்பவள் போல கால் தரையில் பாவாதவாறு நடந்து வந்து வசீகரனுக்கு பின்னால் நின்றிருந்த தன் அண்ணனின் பாதங்களில் பணிந்து எழுந்தாள். இதை சற்றும் எதிர்பார்க்காத நீரூபன் பதறி அவளின் தோள் தொட,

வசீகரனின் முகத்தில் புன்னகை அரும்பியது. தங்கையின் தலையில் ஆசீர்வாதமாக கையை பதித்த நீரூபன் அவள் கை பிடித்து வசீகரனுக்கு அருகில் அமர்த்தினான்.

இதையெல்லாம் முதல் வரிசையில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒவ்வொருவரையும் நேரில் சென்று அழைத்ததால் தன்னை பெரியவள் போல எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததில் இருந்து அனைவரும் நீரூபனை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பதை காணக்காண, வயிற்றில் இருக்கும் தீயின் அளவு கூடிக்கொண்டே போனது.

‘பொறாமை தீ எதிரில் இருப்பவனை விட பொறாமை கொண்டவனையே அழிக்கும்.’ என்ற உண்மை தெரியாத அவள் அந்த பொறாமை தீனுள் பொசுங்கிக் கொண்டிருந்தாள்.

ஆனால் அதற்கு எதிர்மறையான நன்றியுணர்வில் திளைத்தாள் நேத்ரா.

மகளுக்குப் பக்கவாட்டில் நாகரத்தினமும் திருமூர்த்தியும் நின்றிருக்க,

வசீகரனுக்கு பக்கவாட்டில் வாசுதேவனும் அருந்ததியும் நின்றிருந்தனர்.

மணமக்கள் இருவருக்கும் பின்னால் நீரூபன் நின்றிருக்க,

திருமாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து ஐயரிடம் கொடுத்துவிட்டு நீரூபன் அருகில் நின்றுகொண்டாள் பூமிகா.

தொலைவில் இருந்து பார்க்கும்போது அது இயல்பாகத் தெரிந்தாலும் தங்கை திருமணத்தை அவளுடன் இணைந்து நடத்தி வைக்க வேண்டும் என்ற தன் எண்ணத்தை அவளிடம் கூறி அவ்வாறு அமையுமாறு பார்த்துக் கொண்டான் நீரூபன்.

ஐயர் “கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று சத்தமாக கூறிவிட்டு திருமாங்கல்யத்தை வசீகரன் கையில் கொடுக்க,

அதைப் பெற்றுக் கொண்டவன் விழிகள் தன் காதலியின் விழிகளை நேராக சந்தித்து மகிழ்வுடன் சிரித்தது.

நெகிழ்ந்த அந்த நொடிகளை இருவரும் தங்கள் இதயப் பெட்டகத்தில் சேமித்துக் கொள்ள, மங்கல நாணை நேத்ராவின் கழுத்தில் கட்டி தன் வாழ்வின் உயிர்நாடியாக அவளை மாற்றிக் கொண்டான் வசீகரன்.

தன் நடுநெஞ்சைத் தாண்டி மின்னும் பொன் மஞ்சள் மாங்கல்யத்தை கண்களில் சேர்ந்து கொண்ட ஆனந்தக் கண்ணீரோடு பார்த்தாள் நேத்ரா.

கை நிறைய இருந்த அட்சதையை தான் தங்கை மற்றும் வசீகரன் தலையில் தூவி நெஞ்சம் நெகிழ வாழ்த்தினான் நீரூபன்.