அதிகாரா 60

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 60

நீரூபன் அமைதியாக கால் மேல் கால் போட்டு தன் கையில் இருந்த கோப்பை பார்த்துக் கொண்டிருக்க, திருமூர்த்தியிடம் கட்சியின் முக்கிய எம்.எல்.ஏக்கள் ஏதோ ஒரு விஷயத்தை தீவிரமான குரலில் பேசிக்கொண்டு இருந்தனர்.

திருமூர்த்தி அவர்களுக்கு பதில் சொல்லும் முன் அஞ்சனாவே பதில் கொடுத்துக் கொண்டிருக்க, திருமூர்த்தி மகளை அவர்களையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

இந்த பேச்சு வார்த்தை நடைபெறும் மேஜைக்கு ஒரு அடி தள்ளி இருந்த சோஃபாவில் தான் நீரூபன் அமர்ந்திருந்தாலும் இங்கு நடப்பதற்கும் அவனுக்கும் சம்பந்தம் இல்லாதது போலவே வீற்றிருந்தான்.

அஞ்சனாவின் அவசர முடிவுகள் கேட்டு அதிருப்தியான முக பாவனையில் அனைவரும் அமர்ந்திருக்க,

திருமூர்த்தி நெடு நேரத்துக்குப் பின் தன் திருவாய் மலர, அவர் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவலாக காத்திருந்தார்கள் நெஞ்சில் தேனை வார்த்தார் அவர்.

“நீரூபா நீ என்ன சொல்ற?” என்று நான்கு வார்த்தையில் அஞ்சனாவின் முகத்தில் வெந்நீரை தெளித்து விட்டார்.

“மலைச்சாமி மாமா சொல்றதுல எந்த தப்பும் இல்ல. சில மாவட்டங்கள்ல இன்னுமே போன ஆட்சியில் நாம செய்ய தவறிய திட்டங்கள் பத்தி அதிருப்தி இருக்கு. இப்ப போய் அங்க புது திட்டங்கள் அறிவிச்சு அசிங்கப்பட முடியாது. கூடவும் கூடாது. அதே நேரம் அவர் சொல்றது போல அதே திட்டத்தோட போய் நின்னாலும் நம்மை மதிக்க மாட்டாங்க.” என்றான் அழுத்தமாக.

“என்ன தான் தம்பி சொல்ல வர்றீங்க? புது திட்டம் வேண்டாம். பழைய திட்டம் அசிங்கப்படுத்தும். வேற என்ன தான் வழி?” என்று ஆலந்தூர் ஆறுமுகம் வினவ,

“போன தடவை அந்த திட்டம் எல்லாம் ஏன் மாமா அங்க முடியல?” என்று அவன் கேள்வி எழுப்ப அவர்கள் விழித்தனர்.

“காண்ட்ராக்ட் விட்டு இருந்தோம் பா. ஆனா ஏதோ காலதாமதம் ஆச்சு. அதுக்குள்ள ஆட்சி முடிஞ்சு பேச்சு.” என்று விளக்கம் கொடுக்க,

“இதை சொன்னா அடிக்க வருவாங்க.” என்று சற்று சாய்ந்து அமர்ந்தபடி அவன் சொல்ல அனைவர் முகமும் விழுந்து விட்டது.

“மக்களுக்கு செய்யறேன்னு சொன்ன திட்டங்கள்ல கொஞ்சமாவது ஏதாவது செய்திருந்தா தானே மாமா அதை வச்சு ஓட்டு கேட்க முடியும்? கொடுக்குற எல்லா பணத்தையும் கட்சிக்கும், உங்க பாக்கெட்டுக்கும் நகர்த்திட்டு இப்ப மக்கள் முன்னாடி போய் நிக்க முடியலன்னு சொல்றது எப்படி நியாயம்?” என்று கேட்டு அவன் புருவம் உயர்த்த,

“இவனுக்கு என்ன தெரியும் பா? இப்ப தான் அரசியலுக்கு உள்ளேயே வர்றான். விடுங்க நான் சொன்னது போல எல்லாருக்கும் இன்னொரு ஆயிரம் ரூபாய் சேர்த்து கொடுத்து ஓட்டு வாங்கிக்கலாம்.” என்று சாதாரணமாக கூறினாள் அஞ்சனா.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஒரு ஆளுக்கு ஆயிரம்ன்னா அந்த தொகுதியில் மட்டும் லட்சக்கணக்குல ஓட்டு வேணும்ன்னா எவ்வளவு மா கொடுக்க முடியும்?” என்று மலைச்சாமி அதிருப்தி தெரிவிக்க,

“அப்ப நின்னதும் இப்ப நிக்கிறதும் நீங்க தானே? அப்ப எடுத்து பணத்தை பையில் போட்டதை இப்ப செலவு பண்ணுங்க.” என்று இலகுவாக தோள் குலுக்கி கூறியவள், “முடியாதுன்னா செலவு பண்ண முடிஞ்சவங்க அங்க நின்னு ஜெய்க்கட்டும்.” என்று கூறிவிட்டாள்.

அதில் மலைச்சாமி முகம் வாட்டம் கொண்டதுடன் கோபமும் துளிர்க்க ஆரம்பித்ததை அப்பட்டமாகக் காட்டியது.

அதைக் கண்ட நீரூபன், “மாமா, ஒரு பிரச்சனையும் இல்ல. கொஞ்சம் பொறுங்க” என்று கைபேசியை எடுத்து அந்த தொகுதியில் இருக்கும் தன் அலுவலக கிளை மேலாளரை அழைத்தான்.

எழுந்து வெளியே சென்று பேசி விட்டு வந்தவன்,

“மாமா உங்களுக்கு நல்ல நேரம் தான் . போன தடவை அந்த திட்டம் நிறைவேறாம போனது இப்ப நல்லதுங்கற மாதிரி அந்த தொகுதியில் இப்ப நிலத்தடி நீர் வற்றி போயிருக்கு. அப்ப நீங்க சொன்னபடி போர் போட்டு இருந்தா இப்ப அதுல தண்ணி இருந்திருக்காது.” என்று கூறியவன்,

“எல்லா ஏரி குளத்தையும் தூர் வாரி அந்த தொகுதிக்கு நீர் வளத்தை அதிகப்படுத்தி தர்றதா பேசுங்க மாமா. ஆரம்பத்துல கோவிப்பாங்க. ஆனா நான் எங்க எக்ஸ்பர்ட் டீம்ல இருந்து ஹைட்ராலஜிஸ்ட் ஒருத்தரை அனுப்பி வைக்கிறேன். அவர் விளக்கம் கொடுத்தா மக்களுக்கு புரியும். உங்க மேலயும் நம்பிக்கை வரும்.” என்று முடித்தவன்,

“ஆனா ஜெயிச்சா கண்டிப்பா நீங்க அதை செய்து தரணும் மாமா. கொஞ்சமாவது மக்களுக்கு ஏதாவது செய்தா தானே நமக்கு அவங்களா ஓட்டு போடுவாங்க. நாம பதவிக்கு வந்ததும் எடுக்கறதும், மறுபடி பதவிக்கு வர கொடுக்கிறதும்ன்னு பணம் வர்றதும் போறதும் பயனில்லாம இருக்கு பாருங்க.” என்று கூறிவிட்டு, தந்தையிடமிருந்து விடைபெற்றுக் கிளம்பினான்.

“தலைவரே! தம்பி நல்ல முடிவா சொல்லி இருக்கு. இதுவே எங்களுக்கு சரின்னு படுது. அப்படியே செய்துக்குறோம்.” என்று அஞ்சனாவின் பக்கம் திரும்பாமல் அந்த கூட்டம் அப்படியே விடைபெற, அஞ்சனா மனதில் பகைத்தீ கொழுந்து விட்டது.

அதே கோபத்துடன் அவள் வீட்டிற்கு கிளம்ப, காத்திருந்த ராக்கேஷ் பூமிகாவை நீரூபன் காதலிப்பதாக அவளிடம் பற்ற வைத்தான்.

“நான் என் மாமா காதுல சில விஷயம் ஓதி விட்டுட்டு வந்திருக்கேன். அவர் மட்டும் நான் நினைச்சபடி பேசினா அவன் காதலிக்காக அரசியல் ஆசையை விட்டு தான் ஆகணும். அப்படியே இல்லைன்னாலும் இவனும் நேத்ராவும் ஆளுக்கு ஒரு பக்கம் கல்யாணம் பண்ணி ஹனிமூன் போகுற கேப்ல என் அப்பா மனசை கலைச்சு கட்சிக்கு தலைமையா நான் மாறணும்.” என்று வன்மத்துடன் கூறினாள் அஞ்சனா.

கட்சி ஆட்களுக்கு திருமூர்த்தி மகனிடம் கலந்து பேசியது பெருமகிழ்ச்சியைக் கொடுத்திருக்க, விஷயம் மெல்ல முருகப்பன் ஐயாவின் காதுகளை சென்றடைந்தது.

அவர் திருமூர்த்தியை அழைத்து நலம் விசாரித்துவிட்டு, கட்சி ஆட்கள் மனதில் நீரூபன் மேல் ஏற்பட்டிருக்கும் நல்ல எண்ணம் பற்றி எடுத்துரைத்தார்.

“புரிஞ்சுது அண்ணே! ஆனா அஞ்சனா பக்கத்திலேயே இருக்கா. ஒரு அளவுக்கு மேல அவளை அவாய்ட் பண்ண முடியல.” என்று வருத்தமாக கூறியதும்,

“அப்ப அவளை கல்யாண வேலையை பார்க்க சொல்லு. இன்னும் கொஞ்ச நாள் தானே இருக்கு.” என்று அவர் யோசனை கூறியதும் திருமூர்த்தி சற்று நிம்மதி அடைந்தார்.

நீரூபனிடம் அஞ்சனாவுக்கு திருமண வேலைகளை பகிர்ந்து கொடுக்குமாறு கூற அவனும் மறுபேச்சின்றி வசீகரன் குடும்பம் பக்கம் அவள் செல்லாத விதமான வேலைகளை பிரித்துக் கொடுத்தான்.

அதில் திருமண அழைப்பு முழுவதும் அவளும் ராக்கேஷும் சென்று வருமாறு அரசியல் வட்டத்தினர் அனைவரையும் அழைக்க ஏற்பாடு செய்ய அந்த சந்திப்பை தன் அரசியல் பிரவேசத்துக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டாள் அஞ்சனா.

நாகரத்தினம் தன் கணவர் முகத்தை கூர்ந்து பார்ப்பதோடு நீரூபனின் திருமண ஆசையை அவரிடம் கூறுவதை நிறுத்திக் கொண்டார்.

திருமூர்த்திக்குமே ரமணியுடன் தங்கள் உறவை புதுப்பிக்க சற்று தயக்கமாக இருந்தது.

அரசியலில் ஆரம்ப கட்ட கவன ஈர்ப்புக்காக தன் மனைவியின் மரணத்தை வைத்து அவர் காய் நகர்த்தி இருக்க, ரமணி அதில் பல முறை குறுக்கிட்டார்.

ஆனால் அஞ்சனா விஷயத்தில் அவர் குறுக்கிட்ட போது அவளே பதிலடி கொடுக்க அவருக்கு அந்த நிலையில் பெருமையாக இருந்தது. ஏற்கனவே ரமணி மேல் இருந்த கோபம், எரிச்சல் என்று எல்லாம் சேர்ந்து அவரது தனிப்பட்ட விஷயங்களில் கூட திருமூர்த்தி கைவைத்து தன் அரசியல் விளையாட்டை நிகழ்த்தினார். ஆனால் அதைப்பற்றி இதுவரை ரமணி யாரிடமும் எதுவும் கூறவில்லை.

இன்றைய நிலையில் மகன் இப்பொழுது தான் அரசியலுக்கு வர சம்மதம் தெரிவித்திருக்கும் போது ரமணியுடன் ஏற்படும் உறவு, மகனை தன்னிடமிருந்து பிரித்து விடும் என்ற எண்ணம் வர, அந்த பேச்சை எடுக்க தயக்கம் காட்டி ஒத்திப் போட்டார்.

வசீகரன் தன் சொந்த தொழிலில் சற்று கவனமாக இருக்க ஆரம்பித்திருந்தான். தேர்தல் நாள் அறிவித்து விட்டால் இதை கவனிக்க முடியாது என்று கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டிருக்க,

நேத்ரா அவனை சந்திக்க அவனது அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

“ஹே ஐஸ். என்ன டி சொல்லாம வந்திருக்க?” என்று எழுந்து அவளை அவன் வரவேற்க,

“அண்ணா சொன்னது போல ஏற்கனவே இருக்குற சில மீடியா எல்லாம் விலைக்கு வாங்கிட்டேன். அதுல சில விஷயம் எல்லாம் உன்கிட்ட கேட்டுட்டு அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க நினைச்சேன்.” என்றவள் அவனுக்கு மிக அருகில் வந்து நிற்க, அவளைக் கண்டு மென்னகை புரிந்தான் வசீகரன்.

“முன்னாடி நீ என் பின்னாடி வருவ டா வசீ. இப்ப நான் தான் உன் பின்னாடி அலைய வேண்டியதா இருக்கு.” என்று சலுகையாக கோபம் கொண்டு அவன் மார்பில் முட்ட,

“ஆபிஸ் டி இது.”என்று அவள் தலையில் கைவைத்து அவன் தள்ள,

“போடா” என்று பொய்க் கோபம் கொண்டு திரும்பிய அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“நீ எனக்குத்தான்னு தெரிஞ்சதும் நான் உன்னை கண்டுக்காம போனது போல உனக்கு ஃபீல் ஆகுதா?” என்று அவள் காதருகில் கிசுகிசுப்பான குரலில் அவன் வினவ,

அவள் ஆமென்று தலையசைத்தாள்.

“அது அப்படி இல்ல டி. நீ எனக்குத் தான் அப்படிற நிம்மதி என்னை அடுத்த கட்டத்தை நோக்கி ஓட வைக்குது. மாமா கேட்ட சில விஷயங்கள் செய்ய இந்த கம்பெனி மூலமா தான் முயற்சி எடுக்கணும். அதான் டி இங்க கொஞ்சம் பிஸியா இருக்கேன்.” என்று அவள் கழுத்தில் முகம் புதைக்க,

“காரணம் நல்லா தான் இருக்கு. ஆனா எனக்காக கொஞ்ச நேரம் கூட இல்லாத மாதிரி இருக்குறது நல்லா இல்ல.” என்று அவன் மூக்கில் முட்டி விட்டாள்.

“ஐயோ அம்மா” என்று அவன் அலற,

“என்ன டா இதுக்கே கத்துற?” என்று மூக்கை அவள் அழுத்தமாக தேய்த்து விட,

“வலிக்குது டி” என்று அவள் கைகளுக்கு முத்தமிட்டான்.

“வலிச்சா திட்டுவாங்க, யாராவது முத்தம் தருவாங்களா?” என்று அவனுடன் செல்ல சண்டை போட்டு சில நாட்கள் சந்திக்காத தங்கள் வருத்தத்தைப் போக்கிக் கொண்டனர்.

வசீகரன் நினைத்தது போலவே அவர்கள் திருமணத்திற்கு பத்து நாட்கள் இருந்த நிலையில் விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

இதனை நீரூபனின் அலுவலகத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த வசீகரன், நேத்ரா, பூமிகா, நீரூபன், ஆனந்த் ஐவரும் அவர்களது அடுத்த கட்ட நகர்வை தீர்மானிக்க ஆரம்பித்தனர்.

இரண்டு மாதங்களாக ஐ.டி விங் மக்கள் மனதில் தற்போதைய ஆட்சியை விட இந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தை விதைத்து, நீரூற்றி சற்று வளர்த்து வைத்திருக்க, பி.ஆர் டீம் தனியாக திறப்பு விழா, பாராட்டு விழா, கல்லூரி விழா என்று மக்களை நேரடியாக சந்திக்கும் சந்தர்ப்பங்களையும் ஏற்படுத்தி இருந்தது.

அந்த சந்திப்புகளில் சுவாரஸ்யமான நிகழ்வுகளை தாங்களே வர வைப்பது, அதுவாக வந்த நிகழ்வுகளை எடுத்து ஐடி விங்கிடம் கொடுத்து வைரல் ஆக்குவது என்ற செயல்பாடுகளில் மீடியா டீம் வேலை செய்ய மக்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே சோசியல் மீடியா எனும் சிலந்தி வலையில் மின்னும் நட்சத்திரங்களை தேடி ஆங்காங்கே மாட்டிக் கொள்ள ஆரம்பித்து இருந்தனர்.

இது இவர்கள் கட்சி என்று இல்லாமல் அனைத்து கட்சிகளும் இதே வேலையில் இருக்க, மக்களின் நிலையில் விழும் குழியில் சின்ன குழி எது என்று கணக்கிடுவதாகவே இருந்தது.