அடங்காத அதிகாரா 67
Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels
தன் முன்னே குழப்பமாக அமர்ந்திருக்கும் கட்சித் தலைவரைக் காண அவரது செயலாளரான குணாவுக்கு வருத்தமாக இருந்தது.
அவரே முடிவுகளை எடுத்து சீர்பட நடத்திக் கொண்டிருந்த கட்சியை முதலில் மகளும், பின் மருமகனும் வந்து குழப்பி அடித்த போதே அவருக்கு கவலை தான். இப்பொழுது அவரின் மகன் வந்து கவனிக்க ஆரம்பித்ததும் அவனிடம் தெரிந்த ஆளுமையும் நிமிர்வும் இனி எல்லாம் சரியாக நடக்கும் என்று எழுந்திருந்த எண்ணத்தில் மண்ணைக் கொட்டியது போல தான் இன்று வந்த செய்தி அமைந்து போனது.
“என்னய்யா அந்த பசங்க ஏதேதோ சொல்லிட்டு போறாங்க?” என்று கவலையோடு குணாவை நோக்கினார் திருமூர்த்தி.
“எனக்கும் அதான் புரியல ஐயா. அவங்க சொல்ற விஷயம் ரொம்ப பெருசா இருக்கு.” என்று குணாவும் தன் கவலையை வெளிப்படுத்த,
“அந்த பசங்க சொல்ற விஷயத்தை எவ்வளவு தூரம் நம்பலாம்?” என்று சந்தேகத்தோடு விசாரித்தார் திருமூர்த்தி.
“நல்ல பசங்க ஐயா. அவங்க அப்பா எல்லாம் நம்ம கட்சிக்கு நிறைய உழைச்சவங்க தான். பசங்களும் அப்படியே நம்ம கட்சியில் இளைஞர் அணியில் தீயா வேலை பண்றவங்க தான்.” என்று கூறியதும்,
“ஆனா அடிதடின்னு சொன்னா கூட நம்பிடலாம், இவங்க வெட்டு குத்துன்னு சொல்றாங்க. நாம தான் அந்த அளவுக்கு போக மாட்டோமே!” என்றார் தாடையை தேய்த்தபடி.
“உண்மை தான் ஐயா. சின்ன சின்ன விஷயமெல்லாம் போலீஸ் கேஸ் வச்சு சரி பண்ணிடுவோம். அதையும் மீறி பிரச்சனை வந்தா கவுன்சிலர், ஆர்.டி. ஓ, வி. ஏ. ஓ வச்சு சரி கட்டிடுவோம். எதுவும் சரி வரலன்னா மிரட்டி தான் சிலரை வழிக்கு கொண்டு வருவோம். இதுக்கு மீறி போக யாரும் இதுவரை துணிஞ்சதில்ல. நாமளும் போனதில்ல. இவனுங்க யாரையோ தூக்க ஆள் பார்க்க சொல்லி மேலிடம் சொன்னதா சிலர் கிட்ட யாரோ பேசினதா தகவல் சொல்றாங்க. யாருன்னும் தெரியலன்னு சொல்றத பார்த்தா எனக்கும் குழப்பமா தான் ஐயா இருக்கு. ஆனா…” என்று தயங்கினார்.
“என்ன ஆனா? எதுனாலும் சொல்லு குணா.” என்று கோபம் காட்டினார் திருமூர்த்தி.
“இல்லங்க ஐயா. நம்ம அம்மா எதுனாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுவாங்க. தம்பியை பத்தி நமக்கே நல்லா தெரியும். அவர் இதெல்லாம் யோசிக்க கூட மாட்டார். நம்ம சின்ன சாரை பார்த்தாலும் ஆளைப் போட சொல்ற ரகமா தெரியல…” என்று இழுக்க,
“என்ன தயங்கிட்டு இருக்க, முழுசா சொல்லு. ஆமா நீ யாரை சின்ன சாருன்னு சொல்ற?”
“நம்ம சின்ன பாப்பா வீட்டுக்காரர் தான் சின்ன சார். இப்பல்லாம் நம்ம பெரிய சார், அதான் அம்மா வீட்டுக்காரர் தான் கொஞ்சம் கோவமாவும் எரிச்சலாவும் தெரிகிறார். அதுக்காக அவர் தான் சொல்லி இருப்பார்ன்னு சொல்ல வரல…” என்று மென்று விழுங்கினார்.
“இங்க பாரு குணா நான் நலத்திட்டம் அறிவிச்சு மக்களுக்கு செய்வதை சுயநலமா செய்திருக்கலாம், காண்ட்ராக்ட் விடும்போது காசு பார்க்க சிலதை விட்டுக் கொடுத்திருக்கலாம். வெளிநாட்டு கம்பெனிக்காக சில இடங்களை மிரட்டி வாங்கித் தந்திருக்கலாம். ஆனா எவனையும் கொன்னு நான் மேல வரல.” என்று கலக்கமாகக் கூறினார் திருமூர்த்தி.
“ஐயா நீங்க இதெல்லாம் சொல்லணுங்களா? எனக்கு தெரியாதா என்ன? இந்த மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து எல்லாமே நம்ம பெரிய சார் வந்த பின்னாடி தான் ஐயா அதிகமாச்சு. நம்ம கட்சில சில பெரிய ஆளுங்க அவங்க சொந்த காரியங்களுக்கு பெரிய பெரிய வேலை செய்வாங்க. ஆனா கட்சி விஷயத்துல அப்படி நடக்க மாட்டாங்க. உங்க மேல அவங்களுக்கு நிறையவே பயமும் மரியாதையும் இருக்கு.” என்றவர்,
“அது மட்டுமில்ல, இப்ப நம்ம தம்பியும் சின்ன சாரும் வந்த பின்னாடி கட்சிக்கு பெரிய வரவேற்பு இருக்கு. யாரையும் அடிச்சு, கொன்னு மேல் வர வேண்டிய தேவையும் இல்ல. வேட்பாளர் விருப்ப விண்ணப்பம் கூட நாம இன்னும் கொடுக்க ஆரம்பிக்கல. அப்படி இருக்கும்போது யாரை போட ஆள் தேடுறாங்க? யார் தேடுறது? ஒண்ணும் புரியல ஐயா.” என்றார் குழப்பமாக.
“இப்போதைக்கு இது நமக்குள்ளையே இருக்கட்டும் குணா. நீயும் எல்லார் மேலேயும் ஒரு கண்ணு வை. என்ன பண்றதுன்னு யோசிப்போம்.” என்றவர் எழுந்து கிளம்பினார்.
போகும் அவரையே பார்த்திருந்த குணாவுக்கு அவரிடம் சொல்லாமல் மறைத்த விபரங்களை நினைக்க நெஞ்சில் பயப்பந்து வேகமாக உருண்டது.
—-
கண்களை மெல்லத் திறந்த அஞ்சனா தன் அருகில் அமர்ந்திருந்த தம்பியின் கவலையும் கரிசனமும் கலந்த முகத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்தாள்.
“என்னக்கா? உடம்புக்கு முடியலனா எங்க யார் கிட்டயாவது சொல்லி இருக்கலாமே! இப்படியா தனியா கார் எடுத்துக்கிட்டு வருவ?” என்று அவள் தலை கோதினான் நீரூபன்.
நாவைக் கொண்டு காய்ந்திருந்த உதடுகளை ஈரப்படுத்திக் கொண்ட அஞ்சனா மெல்ல எழுந்து கொள்ள முயன்றாள்.
சாய்வாய் தலையணை வைத்து அவள் அமர உதவினான் நீரூபன்.
“வயிறு வலி பொறுக்காம தான் கிளம்பி வந்தேன் டா. நேரமாக ஆக உடம்பெல்லாம் என்னென்னவோ பண்ணிடுச்சு.” என்றவள், “டாக்டர் என்ன சொல்றார்?” என்று கணவனை நோக்க,
“இப்ப குழந்தை ரொம்ப அவசியமா? எதுக்கு இப்படி உடம்பை நாசம் பண்ணிட்டு இருக்க நீ?” என்று கோபத்தை அடக்கிக் கொண்டு ராக்கேஷ் அவளை முறைக்க,
மெல்லிய பதற்றம் ஏறியவளாக, “என்னாச்சு? ” என்று வயிற்றில் கை வைத்து தவித்தாள்.
“இன்னும் என்ன ஆகணும்? ஐ. வி. எஃப் பண்ண மருந்து சாப்பிட்டுட்டு இருக்கியா? எதுக்கு உனக்கு இந்த வேண்டாத வேலை?” என்று ராக்கேஷ் உஷ்ணமாக வினவ,
அதுவரை தவிப்புடன் இருந்த அஞ்சனா பொங்கிவிட்டாள்.
“எது வேண்டாத வேலை? எனக்குன்னு ஒரு பிள்ளை வேணும்ன்னு நான் நினைக்கிறதா? ஆயிரம் தான் அரசியல்வாதின்னு பயந்து பணிஞ்சு பேசினாலும் முதுக்குப் பின்னாடி பிள்ளை இல்ல, மலடின்னு பேசுறது எனக்கு கேட்கமாலா போகும்? எனக்கும் ஆட்சி அதிகாரம்னு அரசியல்வாதியா ஆசை இருக்கிற மாதிரி பிள்ளை வேணும்ன்னு ஒரு பொம்பளையா ஆசை இருக்காதா? நீ எப்படி ராக்கி அதை வேண்டாத வேலைன்னு சொல்லுவ?” என்று பாய்ந்தாள்.
“நான் அப்படி சொல்லல. மருந்து எடுத்தா, அதுக்கு தகுந்த மாதிரி ரெஸ்ட் எடுக்கணும். அமைதியா இருக்கணும். நீ தான் அதெல்லாம் பண்ண மாட்டியே! அப்பறம் அதை வேண்டாத வேலையா தானே எனக்கு நினைக்க தோணும்?” என்று ராக்கேஷ் பதிலளிக்க அமைதியானாள் அஞ்சனா.
“அஞ்சு ஃபெர்ட்டிலிட்டி ட்ரீட்மென்ட் வர்ற மாதிரி இருந்தா அம்மாவையோ, என்னையோ, மாமாவையோ துணைக்கு கூட்டிட்டு வந்திருக்கலாம். மருந்து சாப்பிட்டு, சரியா சாப்பாடு சாப்பிடாம, வேலை,டென்ஷன்னு உடம்பை இன்னும் மோசமா தான் அக்கா ஆக்கி வச்சிருக்க. அதுக்கு தான் அவர் அப்படி பேசுறார். விடு கோபப்பாடாத.” என்று சமாதானம் செய்தவன் நேத்ராவையும் வசீகரனையும் கிளம்பச் சொல்லிவிட்டு ராக்கேஷ் அஞ்சனாவை பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னதால் அவனும் வீட்டிற்கு கிளம்பினான்.
அவன் கிளம்பவே காத்திருந்தவன் போல ராக்கேஷ் வேகமாக அஞ்சனாவை நெருங்கி, “ஏன் இப்படி பண்ற? இப்ப பிள்ளை இல்லன்னா என்ன? உடம்பை ஏன் இப்படி பாடுபடுத்துற?” என்று கோபம் கொள்ள,
“ஏன்? என் உடம்பு தானே? உனக்கென்ன பிரச்சனை?” என்று அஞ்சனாவும் தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.
“ஐயோ அஞ்சு உனக்கு ஏன் புரியல? உடம்பு கெட்டுப் போனா எப்படி எலெக்ஷன் வேலை செஞ்சு ஆட்சிக்கு வந்ததும் நீ பெரிய பதவிக்கு வர முடியும்? உன் உடம்பு சரியில்லன்னு சொல்லி வீட்ல உட்கார வச்சிடுவான் அந்த நீரூபன்.” என்று கோபத்தில் கொந்தளித்தான் ராக்கேஷ்.
“இங்க பார் எனக்கு பின்னாடி பிறந்தது அந்த நேத்ரா. கல்யாணம் பண்ணி எப்படி புருஷனை இழுத்துட்டு போறா பாரு. ரெண்டு மாசம் போச்சுன்னா முழுகாம இருக்கேன்னு வந்து நிற்பா. எங்க அப்பா நீரூபனுக்கு பூமிகாவை கல்யாணம் பண்ணி வைக்கிறதுல முடிவா தான் இருக்காரு. ஆட்சிக்கு வந்ததும் அவங்க கல்யாணம் தான். அடுத்து அவளும் வயித்தை தள்ளிக்கிட்டு வந்து நிற்பா. நீ என்னமோ ஆட்சி, அதிகாரம்னு பேசுறியே, எங்க அப்பாவுக்கு நான் வாரிசாகி ஆட்சி என் கைக்கு வந்தாலும் எனக்கு ஒரு வாரிசு இருந்தா தானே நாளைக்கு நல்லா இருக்கும். இன்னிக்கு தம்பி தங்கை கூட சண்டை போட்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து அதை எல்லாம் அதுங்க பிள்ளைங்க கிட்ட கொடுத்துட்டு போகச் சொல்றியா?” என்று சீறினாள் அஞ்சனா.
“நீ சொல்றதெல்லாம் சரிதான் அஞ்சு. ஆனா இதெல்லாம் நாம ஆறு ஏழு வருஷத்துக்கு முன்னாடி செய்து இருக்கணும். இப்ப உனக்கும் வயசு ஆகுது. இதெல்லாம் தாங்க உனக்கு தெம்பு இல்லையே! உன்னை இப்படி பார்க்க கஷ்டமா இருக்கு.” என்று அவள் கரத்தைப் பற்றினான் ராக்கேஷ்.
“என்னால பெத்துக்க முடியாதுன்னா, யாரையாவது வச்சாவது பிள்ளை பெத்துப்பேன். இனியும் லேட் பண்ண முடியாது. என் அரசியலுக்கு ஒரு வாரிசு எனக்கு வேணும்.” அழுத்தமாக அவள் பேசியதை அறை வாயிலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த நாகரத்தினத்தின் மனம் செய்வதறியாது தவித்தது.
‘தனக்கு பிள்ளை இல்ல, அதுனால பிள்ளை வேணும்ன்னு இவ ஆசைப்பட்டிருந்தா கூட எனக்கு சந்தோஷமா இருந்திருக்கும்.எப்படி சின்னதுல இருந்து நீருவையும் நேத்ராவையும் தனக்கு போட்டியா பார்த்தாளோ, அதே போல இப்ப இன்னும் பிறக்காத அவங்க பிள்ளைகளை இப்படி போட்டியா பார்த்துட்டு இருக்காளே!” என்று மனம் நொந்தவர், வந்த சுவடு தெரியாமல் தான் அழைத்து வந்த ஓட்டுநருடன் காரில் வீடு திரும்பினார்.
ஏனோ மனம் நேத்ராவைத் தேட, அவளுக்கு அழைப்பு விடுத்தார்.
இரண்டாம் முறை தான் அழைப்பை ஏற்றாள் நேத்ரா.
“சொல்லும்மா. நாங்க இப்ப தான் வீட்டுக்கு வந்து ரெப்ரெஷ் பண்ணினோம். நீ அக்காவை பார்க்க போனியா?” என்றாள் இயல்பாக.
“நேத்ரா அம்மா ஒண்ணு சொல்லுவேன். என்னை தப்பா நினைக்காம இருப்பியா?” என்று தாழ்ந்த குரலில் தயக்கமாக வினவினார் நாகரத்தினம்.
“என்னம்மா?” என்றதும்,
“நாளைப்பின்ன உனக்கு நாள் தள்ளிப் போனாலும், டாக்டர் கிட்ட போய் கன்பார்ம் பண்ணிட்டு வந்தாலும் அம்மா சொல்லாம வேற யாருக்கும் நீ சொல்லக் கூடாது.” என்று தயங்கித் தயங்கிக் கூறினார்.
“என்னம்மா சொல்ற? அத்தை மாமாவுக்கு, இவருக்கு, அப்பா, அக்கா எல்லாருக்கும் சொல்லுவோம் தானே?” என்று அப்பாவியாக வினவிய ‘இந்த வீட்டின் மூத்த மகள் வாரிசு ஆசையில் அலைகிறாள், அதனால் குழந்தை நன்கு கருதங்கிய பிறகு சொல்லிக் கொள்ளலாம், இல்லாவிட்டால் திருஷ்டி பட்டு விடும்’ என்று எப்படி இவளுக்கு புரியவைப்பது என்று தெரியாமல் தவித்தார்.
அவர் மட்டும் அப்படியெல்லாம் சிந்தித்தவரா என்ன? ஆனால் இன்று அஞ்சனாவின் குரலில் இருந்த தீவிரம், ஏற்கனவே கணவனும் மனைவியும் ஆட்சிக்காக எதையும் செய்யத்தான் வேண்டும் என்று பேசிக் கொண்டதைக் கேட்டதன் விளைவாக பெற்ற மகளின் வயிற்றில் இன்னும் உதிக்காத பேரப் பிள்ளை மேல் கொண்ட அதீத அன்பினால் அல்லவா பயந்து போய் பேசிக்கொண்டிருக்கிறார்.
“அது அப்படித்தான். அம்மா எப்ப வெளில சொல்லலாம்னு சொல்றேனோ அப்ப சொன்னா போதும்.” என்று சற்று அழுத்தமாக பதில் கொடுத்தார்.
“அண்ணா கிட்டயுமா?” என்று சந்தேகமாக வினவிய மகளிடம் முதல் முறையாக,
“தம்பி கிட்டயும் நான் சொன்ன பின்னாடி சொன்னா போதும். அம்மா உன் நல்லதுக்கு தான் சொல்வேன்.” என்று கட்டளையாகக் கூறினார் நாகரத்தினம்.
அவர் வாழ்க்கையில் முதல் முறையாக என் பிள்ளை என்று நேத்ராவை மட்டும் எண்ணிய தருணமும் வந்து சேர்ந்து விட்டது. எத்தனை அன்புள்ளம் கொண்டவர்களையும் ஏதோ ஒரு நேரத்தில் பயத்தில் ஆழ்த்தி, ஒரு சதவிகிதமாவது சுயநலமாக சிந்திக்க வைக்க முடியுமென்றால் அது வெறுப்பும், கள்ளமும் வன்மமும் நிறைந்த நெருங்கிய உறவால் மட்டுமே சாத்தியம். நாகரத்தினத்தின் மனதில் கண்ணில் உறுத்தும் தூசி போல இந்த ஒன்று உறுத்த ஆரம்பித்தது.