அடங்காத அதிகாரா 66

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

மாலை நேரத்தில் புயல் போல வீட்டிற்குள் நுழைந்தாள் அஞ்சனா. அவளுக்கு இருந்த கோபத்தின் அளவை எண்ணினால் காலையே வீடு திரும்பி வீட்டை ஒரு வழி செய்திருப்பாள். ஆனால் இது வேகத்தை விட விவேகத்தை காட்ட வேண்டிய நேரம் என்று அவளை அவளே சமாதானம் செய்து கொண்டு மாலை வரை கட்சிப் பணிகளை பார்த்துவிட்டு வீடு திரும்பினாள்.

ஆனால் வீட்டின் வாயிலில் அவள் கண்ட காட்சி அவளது கனல் கொண்டிருந்த நெருப்புக் கங்கின் மேல் காற்று வீசுவது போல அமைந்து அவளை கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றிருந்தது.

வீட்டின் வரவேற்பறையில் அமர்ந்திருந்த திருமூர்த்தி முன் சென்று நின்றவள்,

“இங்க என்ன நடந்துட்டு இருக்குப்பா? என்னைப் பார்த்த கிறுக்கச்சி போல எதுவும் தெரியுதா?” என்று கூச்சலிட,

அவர், “என்னம்மா? என்னாச்சு? ஏன் இந்த அளவுக்கு கோபம்?” என்று புரியாமல் விசாரித்தாலும் அதில் கவலையை விட எரிச்சல் நிறைந்திருந்தது.

“வாசல்ல போஸ்டர் டிசைன் பண்ணி கொண்டு வந்திருக்கான் ஒருத்தன். அதுல ‘வருங்கால தமிழகமே!’ அப்படின்னு நீரு போட்டோ போட்டு இருக்கு.” என்றவள்,

“அவனை தான் உங்க அரசியல் வாரிசா அறிவிக்க போறீங்களா? என்னை என்ன நினைச்சீங்க? பார்த்திட்டு சும்மா இருப்பேன்னா?” என்று மூச்சு வாங்க கோபப்பட்டு பேசிக்கொண்டிருந்த மகளை இயலாமையும் எரிச்சலும் கலந்து நோக்கினார் திருமூர்த்தி.

“இங்க பாரு அஞ்சு! நான் யார் கிட்டயும் எந்த டிசைனும் ரெடி பண்ண சொல்லல. அரசியல் வாரிசை அறிவிக்கிற எண்ணமும் இப்ப எனக்கு இல்ல. நான் நல்லா தானே இருக்கேன். நான் தான் இந்த முறையும் முதலமைச்சர் வேட்பாளர். இப்ப எதுக்கு உனக்கு நீருவோட போட்டி போடுற எண்ணமெல்லாம் வருது? நீ எத்தனை வருஷமா கட்சியில் இருக்க? இப்ப வந்தவனை யாராவது முதலமைச்சர்னு சொன்னா ஒத்துப்பாங்களா? இது கூட  தெரியாதா உனக்கு?” என்றவர் எழுந்தபடி, 

“கட்சிக்கு மட்டும் நல்லதை நினைச்சு எல்லாரும் வேலை பார்த்தா ஆட்சி கண்டிப்பா நம்ம கைக்கு வந்து சேரும். இப்ப என் கவனம் ஆட்சியை பிடிக்கணும்னு தான் இருக்கு. யாரை எனக்கு அப்பறம் உட்கார வைக்கலாம்னு எல்லாம் தோணல.” என்று தன் அறைக்கு செல்லலானார்.

அவர் சொன்னவற்றை உள் வாங்கியபடி அதன் அர்த்தங்களை பகுத்தாய்ந்து கொண்டே தன்னுடைய அறையை அடைந்திருந்தாள் அஞ்சனா.

தந்தை சொல்வது போல அவனுடன் போட்டி என்று எண்ணாமல் துணை முதல்வர் பதவியை குறி வைத்து இனி பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டவள் கட்டிலில் தலை சாய்த்துக் கொள்ள வயிற்றில் மின்னலாக வலி ஒன்று வந்து போனது.

சற்று நேரத்தில் வலி அதிகரித்ததும் உடனடியாக மருத்துவமனை கிளம்பினாள்.

தந்தையும் மகளும் பேசிக்கொண்டதை கவனித்திருந்த நாகரத்தினம் கணவரின் நோக்கம் மகளை சமாதானம் செய்வதா? அல்லது மகனின் உதவியைப் பெற்று ஆட்சியில் அமர செய்யும் செயலா? என்று புரியவில்லை.

சில நாட்களாகத்தான் திருமூர்த்தி நாகரத்தினத்திடம் நல்ல முறையில் பேசிப் பழகி வருகிறார். அதனால் இதனை மாற்றம் என்று கருதுவதா அல்லது சந்தர்ப்பவாதம் என்று எண்ணுவதா என்று தெரியாமல் தவித்தார்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

மகனை அரசியலுக்குச் செல் என்று கூறாமல் இருந்திருக்கலாமோ? தன் மீதும் தவறு இருக்கிறதோ? என்று அவர் குழம்ப, அதனை தீர்க்கும் மருந்தாக எண்ணி தன் மருமகளை நாடினார் நாகரத்தினம்.

கோவில் பிரகாரத்தில் தன் எதிரில் கவலை படிந்த முகத்துடன் இருந்த வருங்கால மாமியாரைக் கண்டு எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் தவித்து, பின் வாய் விட்டு நகைக்கலானாள் பூமிகா.

“ஏன் அத்தை உங்களுக்கு மட்டும் தான் கவலைப்பட இப்படி டிசைன் டிசைனா ஏதாவது மாட்டுமா?”  என்று சிரிக்க,

“சிரிக்காதம்மா. நானே என்ன பண்றதுன்னு தெரியாம இருக்கேன். நீ ஏதாவது உதவி செய்வன்னு பார்த்தா, என்னை கேலி பண்றியே! போ நான் வீட்டுக்கு போறேன்.” என்று அவர் எழுந்து கொள்ள,

“அட உட்காருங்க அத்தை. மாமாவுக்கு அண்ணியை சமாளிக்க தெரியும். அதை தான் அவர் செய்திருப்பார். அதை விட உங்க பிள்ளைக்கு அவர் என்ன பண்ணனும்னு நல்லாவே தெரியும். அப்பாவோ அக்காவோ இல்ல நானோ, யாரா இருந்தாலும் e gha எண்ணத்தோட அவர் கிட்ட பேசுறோம்னு நொடியில கணிச்சு சரியா கையாளுவார். அதுனால உங்க மகனைப் பத்தி கவலைப்படுறத நிறுத்திட்டு வருங்கால முதல்வர் மனைவியா மக்களுக்கு என்ன செய்யலாம், இந்த தேர்தல்ல மாமாவுக்கு நீங்க எப்படி சப்போர்ட் பண்ணலாம்னு யோசிங்க சரியா?” என்று அவர் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டாள்.

“ஐயோ!” என்று வெட்கம் கொண்ட நாகரத்தினத்தை மேலும் கேலி செய்து அவர் மனதிலிருந்த கவலையைப் போக்கினாள்  பூமிகா.

திருமூர்த்தியின் செயலாளர் அவரை இடைவிடாது அழைத்துக்கொண்டிருக்க எரிச்சலானவர்,

“யோவ் நான் தான் வீட்டுக்கு வந்துட்டா என்னை தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொன்னேன்ல”  என்று காய்ந்தார்.

“ஐயா நீங்க விசாரிக்க சொன்னதை கட்சி ஆபிஸ்ல பசங்க கிட்ட சொல்லி வச்சிருந்தேன்ங்க. திடீர்னு அவங்க வந்து என்னென்னவோ சொல்றாங்க. நீங்க உடனே கட்சி ஆபீஸ் வாங்க ஐயா.” என்று பதற்றமாக பேசினார்.

என்ன தான் மருமகனின் கம்பெனி அவரது விளம்பரங்கள், பிரசார நடைமுறைகளை கண்காணித்தாலும் கட்சி ஆட்கள் தலைமைக்கு நன்மை செய்வதாக எண்ணி ஏதாவது பிரச்சனையை இழுத்துக் கொள்வார்கள். அதற்காகவே தன் உதவியாளரிடம் சிலரை அதற்கு மேற்பார்வை பார்க்க நியமிக்க சொல்லி இருந்தார். 

ஆனால் அவர் பதறும் அளவைக் கண்டால் ஏதோ பெரிய தலைவலியாக இருக்குமோ என்று எண்ணிக்கொண்டு தன் ஓட்டுநரை காரை கட்சி அலுவலகத்துக்கு செலுத்துமாறு பணித்தார்.

முழுமையான தகவல் தெரியாமல் மகளிடமோ மகனிடமோ பகிரும் எண்ணம் இல்லாததால் அவர்களிடம் எதையும் கூறாமல் சென்றவருக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

தற்போது ஆளும் கட்சியும் அவர்களின் எதிரி கட்சியுமான நமது தமிழக முன்னேற்ற கழக அலுவலகத்தில் நடக்கும் விஷயங்களை உளவு பார்க்க சிலரை வேலைக்கு நியமித்திருந்தது வசீகரனின் நிறுவனம்.

அவர்கள் கொடுத்த சில தகவல்களை வைத்து அவர்களின் தேர்தல் யுக்திகளை உடைக்கும் விதமான மீம்கள் மற்றும் புகைப்படங்களை தயார் செய்து கொண்டிருந்தனர் ஊழியர்கள்.

நேத்ரா இருள் கவிழத் துவங்கும் முன் கிளம்பி விடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்ததால் வசீகரனும் உத்தரவுகளை பிறப்பித்து விட்டு வீடு நோக்கி தன் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான்.

அவனது கல்லூரி நண்பன் காயமடைந்து மருத்துவமனையில் இருப்பதை அறிந்ததால் வீடு செல்லும் வழியில்  அவனை சந்திக்க முடிவு செய்தான்.

காரை அதன் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு சாவியை விரலில் சுற்றிக் கொண்டே வந்தவன் அஞ்சனாவின் கார் அங்கே நிற்பதைக் கண்டு நெற்றி சுருக்கினான்.

வேகமாக அதனருகில் செல்ல ஓட்டுனர் இருக்கையில் தலை கவிழ்ந்து கிடந்த அஞ்சனாவைக் கண்டு பதறினான்.

அண்ணி, அண்ணி என்று அவன் கதவின் கண்ணாடியைத் தட்டி அவளை எழுப்ப முயல, அவளோ அசைவற்றுக் கிடந்தாள்.

சற்றும் தாமதிக்காமல் சட்டையைக் கழற்றி கையில் சுற்றிக்கொண்டு பின் கதவின்  கண்ணாடியை ஓங்கி அடித்து உடைத்து கதவின் லாக்கை விடுவித்தான்.

முன் கதவைத் திறந்து அஞ்சனாவை தொட, அவள் உடல் கொதித்தது. நினைவின்றி அவன் பக்கவாட்டில் அவள் சரியப் போக, தாங்கிக் பிடித்து, கைகளில் அவளை ஏந்திக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவை நோக்கி ஓடினான் வசீகரன்.

ஸ்டெச்சசர் ஒன்று தென்பட அவளை அதில் கிடத்தியதும் மருத்துவமனை ஊழியர்கள்  உதவிக்கு வந்தனர்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

சிகிச்சை அறைக்குள் அஞ்சனாவை கொண்டு சென்ற பின் தான் உணர்வுக்கே வந்தான் வசீகரன்.

உடனடியாக நீருபனை அழைக்கத் துவங்க அவனது நேரமோ என்னவோ நீரூபன் அழைப்பை ஏற்கவில்லை.

நேத்ராவுக்கு அழைத்து தகவலைப் பகிர்ந்தவன் விடாமல் நீருபனுக்கு முயன்று கொண்டிருந்தான்.

நீரூபன் ஆனந்த் இருவரும் அவர்கள் திரை தயாரிப்பு நிறுவனம் மூலமாக  வெளியான திரைப்படத்தை காண திரையரங்கம் சென்றிருந்ததால் கைபேசி அமைதி நிலையில் இருந்தது.

திரைப்படத்தை பல வருடங்களுக்குப் பின் மகிழ்வுடனும் ஆர்வமாகவும் பார்த்துக் கொண்டிருந்தான் நீரூபன்.

வெளியே சென்றதும் கண்டிப்பாக அவனை பத்திரிகையாளர்கள் சுற்றிக்கொண்டு பல கேள்விகளை முன் வைப்பார்கள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதிலும் திரைப்பட தயாரிப்பு நிறுவன வேலைகளை ஆனந்தும் பூமிகாவும் எவ்வளவு திறம்பட செய்திருந்தனர் என்று அவனறிந்தது அல்லவா! பூமிகாவுடன் இணைந்து திரைப்படத்தைக் காணவேண்டும் என்று தான் எண்ணி இருந்தான்.

ஆனால் திருமண பேச்சை மாமனும் தகப்பனும் தள்ளி வைத்திருப்பதால் பொது வெளியில் இருவரும் இணைந்து செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது என்று எண்ணி ஆனந்த்தை மட்டும் அழைத்துக் கொண்டு வந்திருந்தான் நீரூபன்.

திரைப்படம் நல்ல கதைக்கருவுடன் முகம் சுழிக்காத நகைச்சுவை காட்சிகளுடன் எளிமையும் அழுத்தமுமாக அட்டகாசமாக இருந்தது.

பெருமையுடன் ஆனந்திடம் அவனது நண்பனான இயக்குநரை அறிமுகம் செய்து வைக்க கோரியும், அடுத்த படத்தை ஆனந்த்தே  இயக்க வேண்டும் என்றும் பேசிக்கொண்டே வெளியே வந்தான்.

அவன் எண்ணியது போலவே பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்து கொண்டு விசாரிக்க, இயக்குநரின் திறமை, நடிகர்களின் நேர்த்தியான நடிப்பு, திரைப்படம் செய்திருந்த வசூல் சாதனை அனைத்தையும் பேசி விட்டு அவன் விடைபெற முயல,

“உங்க கட்சிக்குள்ளயே பதவிக்கு அடிச்சிட்டு இருக்கீங்களாமே நீங்களும் உங்க அக்காவும்? உண்மையா சார்.” என்று ஒருவர் அரசியல் சார்ந்த கேள்வியை எழுப்ப,

“உங்களுக்கு உளவு சொன்னவங்க சரியா சொல்லல சார், பதவிக்கு அடிச்சிக்கல நாங்க. பதவிக்கு வந்தா என்னென்ன நலத்திட்டம் கொண்டு வரணும்னு பேசி எங்க யார் திட்டம் பெஸ்ட்ன்னு அடிச்சிக்கிட்டோம்.” என்று சிரித்தான்.

சுற்றி இருந்தவர்களும்  அவனது சிரிப்பில் இணைந்து கொண்டனர்.

அப்பொழுது தான் தன் கைபேசி ஒளிர்வதை கவனித்தான் நீரூபன்.

எடுத்தவன் அனைவரிடமும் தான் அவசரமாக கிளம்ப வேண்டும் என்றும் மீண்டும் வேறு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம் என்றும் கூறிவிட்டு வேகமாக தன் ஜீப்பை நோக்கி விரைந்தான்.

அவன் நடையின் வேகமே ஏதோ சரியில்லை என்று ஆனந்துக்கு உணர்த்தி விட, அண்ணா நான் வண்டி ஓட்டுறேன். என்று சாவியை வாங்கிக்கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான்.

மருத்துவமனை அடைந்து அந்த அறைக்குள் அவன் நுழைந்த போது அஞ்சனா துவண்டு போய் படுக்கையில் படுத்திருக்க, இறுகிய முகத்துடன் அருகில் நின்றிருந்தான் ராக்கேஷ்.

நேத்ராவும் வசீகரனும் கவலை படிந்த முகத்துடன் இருக்கையில் அமர்ந்திருக்க, நீரூபன் அஞ்சனாவின் அருகில் சென்று அவள் கலைந்திருந்த கேசத்தை தடவிக் கொடுக்க, அவன் கண்களை கண்ணீர் நிறைத்திருந்தது.