அடங்காத அதிகாரா 57

Copyright ©️ 2019 - 2025 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
- legal team, Ezhilanbu Novels

அதிகாரம் 57

மகளுக்கு நிச்சயம் முடிந்ததை எண்ணி பூரித்துப் போனார் நாகரத்தினம்.

இரண்டாம் தாரமாக வந்த தனக்கு இந்த அரசியல்வாதியின் வாழ்க்கையில் கிடைக்கும் மனைவி என்ற எந்த உரிமையும் வேண்டாம் என்று ஆரம்பத்தில் இருந்தே திட்டவட்டமாக இருந்தார். அவருக்கு அந்த இடத்தை அஞ்சனா அளிக்கவும் இல்லை. விழா, விருந்து, திருமணம் என்றாலும் திருமூர்த்தியுடன் அஞ்சனாவே சென்று விடுவாள் என்பதால் நாகரத்தினமும் பகட்டான வாழ்வு, லேடீஸ் கிளப், தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று எதற்கும் முயற்சித்தது இல்லை. அவரின் உலகம் நீரூபனும் நேத்ராவுமே.

ஆரம்பத்தில் அவரை அழைத்துப் பார்த்து சலித்த திருமூர்த்தி அப்படியே விட்டு விட்டார். சாதாரண வாழ்க்கை மேல் அவருக்கு இருந்த பிடிப்பு பகட்டு வாழ்க்கை மேல் ஏற்படவில்லை.

மகளின் திருமண உறுதியை எண்ணி மகிழ்ந்து எப்பொழுதும் வரும் கோவிலுக்கு வந்து நன்றி தெரிவிக்க எண்ணி பிரார்த்தனை செய்தபடி உள்ளே நுழைய கோவில் மணி அடித்தது. மனமெல்லாம் நிறைந்து போனது அவருக்கு.

கடவுளை தரிசனம் செய்து நன்றி கூறி பிரகாரத்தை சுற்றி வரும்போது “நாகு” என்று குரல் கேட்டு அப்படியே நின்றார்.

திருமணத்திற்கு முன்னும் அதன் பின் சில நாட்களும் அவரை அனைவரும் விளித்த விதமல்லவா அது?  சட்டென்று அழைத்தது யாரென்று நோக்க கையில் பூஜைத் தட்டுடன் நின்றிருந்தார் அர்ச்சனா.

“அண்ணி” என்று பாசமாக அருகே வந்தார் நாகரத்தினம்.

“என்ன நாகு மகளுக்கு கல்யாணம் முடிவான சந்தோஷத்தில் கோவிலுக்கு வந்தியா?” என்று மென்மையாக அவரை அணைத்து விடுவித்தார் அர்ச்சனா.

“ஆமா அண்ணி. நேத்து பூமி கூட வந்திருந்தா.” என்று உற்சாகமாக கூறியவர் குரலில் இருந்த சுருதி உடனே இறங்கியது.

“உங்களை கூப்பிடலன்னு கோவமா அண்ணி?” என்று உள்ளே போன குரலில் கேட்க,

“அவரோட சொந்த தங்கச்சி மக அந்த அஞ்சனா. அவ கல்யாணத்துக்கே எங்களை யாரும் கூப்பிடல நாகு. உன் மக கல்யாணத்துக்கு கூப்பிடலன்னு சண்டை போட எனக்கு என்ன உரிமை இருக்கு சொல்லு?” என்று விளையாட்டு போல கேட்டாலும் அர்ச்சனாவிடம் வருத்தம் அப்பட்டமாக தென்பட்டது.

“என்ன அண்ணி இப்படி பிரிச்சு பேசிட்டிங்க? அப்ப நான் யாரோவா? என் மக கல்யாணத்துக்கு நான் கூப்பிட்டா வர மாட்டீங்களா?” என்று பாவமாக வினவ,

“நீ கூப்பிட்டு நான் வர்றது அப்பறம் நாகு. உன் வீட்டுக்காரர் ஒத்துக்கணுமே! அதை விட என் புருஷன் வரணுமே!” என்றார் வருத்தமாய்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

என்னவோ மனசுல வச்சுகிட்டு அவங்க பேசிக்காம இருக்கற போதாம நம்ம உறவையும் இப்படி அந்தரத்தில் நிற்க வச்சுட்டாங்களே! என்று பெருமூச்சு விட்டார் நாகரத்தினம்.

“நான் பூமிகாவுக்கு சீக்கிரம் ஒரு நல்லது நடக்கணும்னு சாமிக்கு விளக்கு போட வந்தேன். போட்டுட்டேன். உன்னை பார்த்தது ரொம்ப சந்தோஷம். நான் வரட்டுமா நாகு?” என்று நகர இருந்தவரது கையைப் பற்றி நிறுத்தினார்.

“அண்ணி நம்ம பூமி…” என்று இழுக்க,

“அவளுக்கு என்ன? நேத்ரா ஃப்ரெண்ட்னு சொல்லி உன் வீட்டு விஷேஷத்துக்கு வந்துட்டு போறா. அவர் அவளை தடுக்க மாட்டார். நீ கவலைப்படாத” என்று தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார்.

“இல்ல அண்ணி. நம்ம பூமியை தம்பிக்கு பிடிச்சிருக்கு.” என்று அதற்கு மேல் என்ன சொல்வது எப்படி சொல்வதென்று தெரியாமல் நிறுத்தினார் நாகரத்தினம்.

“புரிஞ்சு தான் பேசுறியா நாகு. சின்ன பிள்ளைங்க ஏதோ மாமா மக, அத்தை மகன்னு ஆசைப்படும். ஆனா வீட்டு ஆம்பளைங்க எப்படின்னு நமக்கு தெரியாதா?” என்று அர்ச்சனா பேசியதும் நாகரத்தினத்தின் முகம் சிறுத்துப் போனது.

“அவங்களுக்கு மட்டுமில்ல அண்ணி. எனக்குமே பூமியை ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம தம்பிக்கு அவளை கேட்கலாம்னு நினைச்சுட்டு தான் இருந்தேன். நேத்ரா கல்யாணம் முடியவும் பேச நினைச்சேன் அண்ணி.” என்று நாகரத்தினம் வருத்தம் கலந்த குரலில் பேச,

“நாம விரும்பி ஆகறது என்ன? என் புருஷன் கோபமெல்லாம் அண்ணன் மேல தான். நீரூபன் மேல இல்ல. ஒருவேளை நீ இந்த கல்யாண விஷயத்தை பேச்சு வார்த்தையா கொண்டு வந்தா அவரை சமாதானம் செய்ய வேண்டியது என் பொறுப்பு.” என்று அர்ச்சனா அவர் கையில் அழுத்தம் கொடுத்து கூறிவிட்டு,

“நேரமாச்சு அவர் எங்கேயோ போகணும்னு சொன்னார். நான் கிளம்பறேன் நாகு.” என்று விடைபெற்றார்.

போகும் வரை இயலாமையோடு பார்த்து நின்றார் நாகரத்தினம்.

கோவில் வாசல் வரை வந்த அர்ச்சனா வேகமாக தன் செல்போனை எடுத்து, “மருமகனே! நீங்க சொன்னது போலவே பேசிட்டேன். ஆனாலும் நாகு பாவம். நீங்க நேரா கேட்டாவே நாகு செய்யும். எதுக்கு இந்த நாடகம்?” என்று உரிமையாக கோபம் கொண்டார்.

“இல்ல அத்தை, இது நாடகம் இல்ல. அம்மா எனக்காக பேசுவாங்க. ஆனா என்னனு பேசுவாங்க? எனக்கு அவளை பிடிச்சிருக்கு, இல்ல அவங்களுக்கு பூமியை பிடிச்சிருக்கு இப்படி தான் பேசுவாங்க. அப்ப எங்கப்பா அதுக்கு மதிப்பு கொடுக்க மாட்டார். இதுவே எங்கம்மா உங்க உறவு இல்லாம போயிருமோன்னு உங்களை பார்த்து அப்பறம் போய் கேட்டா, அவங்க கேட்கும் விதமும் வேறயா இருக்கும். நாளைக்கு என் காதல் விஷயம் வெளில தெரியாது. உங்க எதார்த்தமான சந்திப்பு தான் இதுக்கெல்லாம் அடித்தளம் மாதிரி தெரியும்.

அம்மா வருந்துறது கஷ்டமா இருந்தாலும் என் அப்பா கிட்ட அவங்க உரிமையா பேசணும். எப்பவும் ஒதுங்கி போற மாதிரி இருந்தா இந்த தடவை அது என் கல்யாணத்துக்கு பிரச்சனை ஆகும்ன்னு தெரிஞ்சா தான் அவங்க உரிமையை அவங்க எடுத்துப்பாங்க. அஞ்சனாவுக்கு அவளோட இடம் புரியும்.” என்று நீண்ட விளக்கம் கொடுத்தான்.

“நீங்க அன்னைக்கு காலைல வீட்டுக்கு வந்து சொன்னப்ப என்ன டா இப்படி சொல்றாரேன்னு கஷ்டமா இருந்தது. நேத்து வரைக்கும் யோசிச்சிட்டு இருந்தேன். ஆனா சொந்த மகளோட விசேஷம்ங்கும் போது கூட அவங்க விருப்பம் கேட்டு உங்க அப்பா செய்யாம, உன்னை மடக்கி செய்தது தப்பா தோணுச்சு மருமகனே! அதான் இந்த பிளானுக்கு நான் சரின்னு சொன்னேன். பார்த்து பண்ணுங்க. நாளைக்கே நான் பஞ்சர் ஆகாம இருந்தா சரி.” என்று கூறிக்கொண்டே காரில் ஏறிப் புறப்பட்டார் அர்ச்சனா.

ஆக தன் திருமணத்துக்கு முதல் தூண்டுகோலை தூண்டி விட்டு திரை மறைவில் நின்றிருந்தது நடப்பதை இயக்க இருக்கிறான் இந்த மாயக்கண்ணன் நீரூபன்.

வீட்டிற்கு வந்த நாகரத்தினத்தின் முகம் சோகம் ததும்பி இருக்கக் கண்ட திருமூர்த்தி மனைவியை அழைத்து என்னவென்று வினவினார்.

“என்னை எதுவும் கேட்காதீங்க.” என்று அவர் எழுந்து செல்ல,

“என்ன ரத்தினம் இப்படி போனா என்ன அர்த்தம்? பொண்ணுக்கு கல்யாணம்ன்னு சந்தோஷமா போன, இப்படி வாடிப்போய் சோகமா வர்ற? கேட்டா கேட்க வேண்டாம்னு சொல்றியே!” என்று நிற்க வைத்து பதில் சொல்லியாக வேண்டும் என்று தீர்க்கமான பார்வை பார்த்தபடி கூறினார் திருமூர்த்தி.

“நேத்து நேத்ரா நிச்சயத்துக்கு ஒரு பொண்ணு வந்தால்ல…”, என்று இழுக்க,

“ஆமா” என்றார் நிதானமாக,

“அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவளும் என்கிட்ட பிரியமா இருப்பா. நம்ம மகனுக்கு அவளை கேட்டு கட்டி வைக்கணும்னு ஆசையா இருந்தேன்.” என்று தயங்கித் கொண்டு கூற,

“அழகான பண்பான பொண்ணு கண்ணுல பட்டா எல்லாருக்கும் தோனுறது இயல்பு தான். நான் அவங்க யாரு என்னனு விசாரிச்சு பார்க்கிறேன். சரி வந்தா பேசி முடிச்சிட்டா போச்சு.” என்று இலகுவாக அவர் பதில் கூறினார்.

கண்கள் விரிய அதனைக் கேட்ட நாகரத்தினம், “நிஜமாவா? ஆனா அவங்க யாருன்னு எனக்கு காலைல கோவில்ல வச்சு தான் தெரிஞ்சுது. இனி நான் கேட்டாலும் நீங்க செய்ய மாட்டிங்க. நேத்ரா பாப்பா தான் நாம பார்த்து வைக்கிற இடத்தில கட்டாம தானே காதலிச்சிட்டு வந்துச்சு. ஆனா நம்ம தம்பி நாம சொல்ற பொண்ணை கட்டுவான். என் பிள்ளைன்னு ஆசையா இருந்தேன். எல்லாம் போச்சு.” என்று சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தார்

“ஏன் வசதி குறைவா? அதெல்லாம் பரவாயில்ல. எனக்கும் பொண்ணுங்க ரெண்டும் தானே மாப்பிள்ளை பார்த்ததால நீரூபனுக்கு நான் பார்த்து கட்டி வைக்க தான் ஆசைப்பட்டேன். நான் பார்த்தா என்ன நீ பார்த்த என்ன ரத்தினம்? அந்த பொண்ணு கண்ணுக்கு லட்சணமா பதவிசா தான் இருந்தது.” என்று கூறினார்.

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

நகரத்தினத்தின் இதயம் துடித்து வெளியே வந்துவிடும் போல இருந்தது. மெல்ல எச்சிலை கூட்டு விழுங்கியபடி,

“காலைல தான் அவளையும் அவங்க அம்மாவையும் கோவில்ல பார்த்தேன். அது வேற யாரும் இல்ல. நம்ம சரசு அக்கா அண்ணன் இருக்காருல்ல ரமணி அண்ணன். அவர் மக தான் அது.” என்று கூறிவிட்டு பயத்தை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.

திருமூர்த்தி எதுவும் பேசாமல் இருக்க,

“பார்த்தீங்களா? இதுக்கு தான் என்னை எதுவும் கேட்காதீங்கன்னு சொன்னேன். என் ஆசைக்கு சரின்னு சொன்ன நீங்க, யாருக்கு தெரியவும் எதுவும் பேசல பாருங்க.” என்று கண்ணீரை துடைக்க,

“அப்பா” என்று குரல் ஹாலின் மூலையில் நின்றிருந்த அஞ்சனாவிடமிருந்து வந்தது.

அவளைக் கண்டதும் நாகரத்தினம் மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்,

“இதோ வந்துட்டா உங்க பொண்ணு. பத்து வயசுலேயே மாமா வேண்டாம்னு நீங்க சொன்னதும் முகத்தை திருப்பிட்டு வந்தா. இப்ப மட்டும் அவங்க மகளை என் மகனுக்கு கட்ட சம்மதம் சொல்லப் போறாளா என்ன? என்னைக்கு இந்த வீட்டுல எனக்கு உரிமை இருந்தது இப்ப வர்றதுக்கு. என் மகன் மட்டும் என்னை அம்மான்னு கூப்பிடாம போயிருந்தா சீமாறும் நானும் ஒண்ணா தான் இருந்திருப்போம் இந்த வீட்டுல. எனக்கு என் பையனுக்கு பொண்ணு பார்க்கற தகுதி இருக்கா என்ன?

அவனோட சொந்த தாய் மாமா மக. அவளை அவனுக்கு கட்டி வச்சு அழகு பார்க்க சரசு அக்கா ஆசைப்பட்டதா அடிக்கடி அர்ச்சனா அண்ணி அப்பவே சொல்லுவாங்க. காலம் வரும்போது நம்ம மகன் கிட்ட பேசலாம்ன்னு நினைச்சேன். இப்ப காலம் வந்துடுச்சு.” என்று அழுகையும் கண்ணீருமாக பேசிக்கொண்டிருந்தார்.

“இந்த பொண்ணை அம்மா பார்த்திருக்கேன்னு சொன்னா என் பிள்ளை சரின்னு சொல்லிடுவான். ஆனா நீங்க குறுக்க வருவீங்க. என் பிள்ளை மனசுல ஆசையை விதைச்சு அதை கலச்ச பாவம் எனக்கு வேண்டாம். நேத்து ரெண்டு பேரையும் ஜோடியா பார்த்து நான் அப்படியே சந்தோஷப்பட்டு போனேன். எல்லாம் ஒரு நாள் கூட நிலைக்கல.” என்று அழுதபடி தங்கள் அறைக்கு செண்டு விட்டார்.

மனைவி பேசியதில் பல விஷயங்கள் திருமூர்த்தியின் மனதை அறுத்தது. அதில் முக்கியமானது மகன் இல்லாவிட்டால் இந்த வீட்டில் அவரின் இடம் எதுவென்று அவர் உரைத்தது தான். தன் மனைவியை இப்படியா இத்தனை ஆண்டுகளில் உணர வைத்துள்ளோம் என்று வருத்தம் கொள்ள,

அஞ்சனா அவர் அருகில் வந்து,  “நேத்து அந்த பெண்ணை அங்க பார்க்கும் போதே முகஜாடை தெரிஞ்சது போல இருக்கேன்னு நினைச்சேன் பா. ரமணி மாமா பொண்ணா அது?” என்று அவர் அருகில் அமர்ந்தாள்.

‘இவள் என்ன சொல்லக் காத்திருக்கிறாளோ?’ என்ற ரீதியில் அவர் மகளை நோக்க,

“அம்மா இறந்ததும் மாமா உறவு விட்டுப் போச்சு, இப்ப சேர ஒரு வாய்ப்பு கிடைச்சா ஓகே தான். யூஸ் பண்ணிக்கோங்க பா. எலக்சன் வருது. நேத்ராவுக்கு கேம்பெயின் மேனேஜ்மென்ட் கம்பெனி சி. ஈ.ஓ கூட கல்யாணம் என்ற பேச்சு மட்டும் வந்தா எலக்ஷனுக்காக பொண்ணு கொடுத்துட்டோம்னு பேச்சு வரும். அதே நேரம் சொந்தத்துல தம்பிக்கும் பேசி ரெண்டு கல்யாணமும் நடந்தா நீரூபன் கல்யாணத்தை தான் அதிகம் பேசுவாங்க. வசீகரன் விஷயம் அமுங்கி போகும்.” என்று தந்திரமாக கூறினாள் .

மகளின் பேச்சில் இருந்த சில நியாயங்கள் அவருக்கும் சரியென்றே தோன்றியது. தன்னைப் போலவே அரசியல் தந்திரங்கள் இவளுக்கு தெரிந்திருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். பாலரமணியின் மகளை தங்கள் வீட்டு மருமகளாக கொண்டு வரலாமா? என்ற யோசனை விதை அவர் மனதில் விழுந்தது.